தரிசனம்

பாவண்ணன்

”இந்த ரெண்டு மாசமா நீ செஞ்ச சர்வீச விட இனிமே நீ செய்யப் போற சர்வீஸ்தான் ரொம்ப முக்கியமானது சிவகாமி. நல்லபடியா பாத்துக்கணும், என்ன?” என்றார் டாக்டர். “டியூபெல்லாம் எடுத்துட்டதால இனிமேல் சாப்பாடு, மருந்து எல்லாத்தயும் நேரிடையாவே மேடத்துக்கு கொடுக்கலாம்” 

டாக்டர் புறப்படும் நேரத்தில் மேடம் படுக்கையில் சாய்ந்து படுத்திருந்தார். அடிக்கடி படபடத்த அவர் கண்களில் சோர்வும் திகைப்பும் கலந்திருந்தன. இரண்டு மாதங்களாக சுயநினைவில்லாமல் படுத்திருந்தவருக்கு நேற்றுதான் விழிப்பு வந்தது. “நான் கெளம்பறேன் மேடம். ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வந்து பாக்கறேன். இடையில தேவைப்பட்டா எனக்கு ஒரு ஃபோன் பண்ணச் சொல்லுங்க. அர மணி நேரத்துல வந்துருவன்,” என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

டாக்டரோடு சேர்ந்து பெரிய ஐயாவும் சின்ன ஐயாவும் வெளியே சென்றார்கள். 

மேடத்தின் கண்கள் நான்கு புறங்களிலும் சுழன்று அறையிலிருந்த ஒவ்வொரு பொருளின் மீதும் ஒருகணம் படிந்து திரும்பின. அலமாரிகள். மேசைகள். நாற்காலிகள். ஜன்னல்கள். குளியலறை. ஒப்பனைக்கண்ணாடி மேசை, தொலைக்காட்சிப்பெட்டி. இசைத்தட்டு அடுக்குகள். ம்யூசிக் செட். கரிய உருளையான ஸ்பீக்கர்ஸ். சுவரோடு ஒட்டியிருந்த ரோஜாநிற ஸ்டிக்கர் ஹாங்கர்களில் தொங்கும் எண்ணற்ற சந்தனமாலைகள். மையத்தில் லேமினேஷன் செய்து மாட்டப்பட்ட மேடத்தின் வண்ணப்படம். அப்படத்தில் மெஜந்தா நிற பட்டுப்புடவையில் மேடம் அழகாகச் சிரித்துக்கொண்டிருந்தார். 

“முகம் பார்க்கிற கண்ணாடி கொண்டு வரயா?” என்றார் மேடம். இசைத்தட்டு ஒலிப்பதுபோல அவர் குரல் இனிமையாக இருந்தது.  அந்த இனிமையை ரசித்துக்கொண்டே எழுந்தேன்.

ஒப்பனைக் கண்ணாடி மேசையின் இழுப்பறையைத் திறந்து முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து வந்து அவர் முன்னிலையில் பிடித்துக்கொண்டு நின்றேன். அவர் கைகள் அவரையறியாமல் எழத் துடித்து நடுங்கி நெளிந்து அடங்குவதைப் பார்த்தேன். கண்ணாடியில் தன் முகத்தைக் கண்டு ஒருகணம் வியந்து பிறகு மலர்ந்தார்.

“யாரு டை அடிச்சிவிட்டா?”

‘பார்லரிலிருந்து வந்தாங்க மேடம்”

“புருவத்த கூட ட்ரிம் செஞ்சி ஃபேஸியல் பண்ணமாதிரி இருக்கு”

“ஆமாம் மேடம். போன வாரம் எல்லாத்தயும் அவுங்கதான் செஞ்சாங்க”

மேடம் என்னைப் பார்த்து கண்ணாலேயே அருகில் வந்து நிற்கும்படி சொன்னார். 

“ஒன் பேரென்ன?”

“சிவகாமி.”

“எங்கிருந்து வரே?”

“டாக்டர் முத்துராமன் ஆஸ்பத்திரில நர்சா இருக்கேன் மேடம். ஆக்சிடென்ட்டுக்குப் பிறகு உங்கள அங்கதான் அட்மிட் செஞ்சிருந்தாங்க.  தோள்பட்டையில, கால்ல, கையில எல்லாம் ஆபரேஷன் செஞ்சாங்க. அதுக்கப்புறம் ஒரே ஒரு தரம்தான் நீங்க கண்ண தெறந்து பாத்திங்க. அதுக்குப் பிறகு திடீர்னு கோமாவுல போய்ட்டீங்க. கண்ணே தெறக்கலை. பத்து நாள் வரைக்கும் ஆஸ்பத்திரிலயே வச்சிருந்தாங்க. பிறகு டாக்டரும் பெரிய ஐயாவும் கலந்து பேசி வீட்டுக்கே கொண்டு வந்திட்டாங்க. எனக்கு பகல் டூட்டி. சாயங்காலமா சாவித்திரி. சிக்ஸ் டு சிக்ஸ்.”

நான் குளியலறைக்குச் சென்று ஹீட்டரை ஆன் செய்துவிட்டு வந்தேன். வாசல் கதவைத் தாளிட்டுவிட்டு அவர் மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கி உதறி அவரைத் தொட்டு சிகிச்சையளிக்க வழி ஏற்படுத்திக்கொண்டேன். அவரைத் தொட்டதுமே “நீ என்ன செய்யப் போற?” என்று பதறினார். அவர் குரலில் ஒருவித இயலாமை தெரிந்தது.

“ரெண்டு காலுக்கும் கைக்கும் பிசியோதெரபி செய்யணும் மேடம்.”

மார்புப்பகுதியில் இருந்த ஜிப்பை இழுத்து தளர்த்திவிட்டு படுக்கையிலேயே அவரை வலதுபுறம் ஒருக்களிக்க வைத்து அவர் அணிந்திருந்த நைட்டியை உயர்த்தி  தலை வழியாக வெளியே எடுத்தேன்.

“துணிய எடுக்காம செய்யமுடியாதா?”

“அது எப்படி முடியும் மேடம். உடம்பு முழுக்க எண்ணெய வச்சி உருவிவிடணுமே”

“எவ்ளோ நாளா நடக்குது இந்த பிசியோதெரபி?”

“ஆப்பரேஷன் கட்டு பிரிச்சதிலிருந்தே செய்றேன் மேடம். இத செய்யலைன்னா தசைகள் இறுகி உறைஞ்சிடும்”

“தெனமும் நீதான் செய்வியா?”

“ஆமாம் மேடம்.”

மேடம் சில நொடிகள் எதுவும் பேசவில்லை. என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து பக்கவாட்டு ஜன்னலுக்கு மேல் பொருத்தப்பட்டிருந்த ஏசி எந்திரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் திறந்துமூடும் கத்தித்தகடுகளின் மீது பார்வையைப் பதித்திருந்தார். நான் மேசையில் இருந்த ப்ரான்ச் ஆயிலை உள்ளங்கையில் ஊற்றிக்கொண்டு அவர் தொடையிலிருந்து குதிகால் வரைக்கும் தடவிவிட்டேன். வலது கால் முட்டியை அழுத்திக்கொண்டு சற்றே பாதத்தை உயர்த்திப் பிடித்து ஐந்தாறு முறை நன்றாக அழுத்தி உருவினேன். பிறகு பாதத்தை மட்டும் கையிலேந்தி வைத்துக்கொண்டு ஒவ்வொரு விரலாகப் பற்றி மெதுவாக இழுத்தேன். நரம்புமுடிச்சுகள் சட்சட்டென்ற ஒலியுடன் விடுபட்டன. இடது காலை மெதுவாக கீழே இறக்கிவிட்டு வலது காலுக்கும் அதே பயிற்சியை அளித்தேன். 

“எங்கயாச்சும் வலி இருந்தா சொல்லுங்க மேடம்”

மேடம் அப்போதுதான் திரும்பி என்னைப் பார்த்தார். இல்லை என்பதுபோல தலையசைத்தார். “இங்க பாருங்க, இதுதான் தையல் போட்டிருந்த எடம்” என்று மெதுவாக காலை உயர்த்திக் காட்டினேன்.

”ரெண்டு கால்லயும் இருக்குது” 

அவர் பார்வையை பக்கவாட்டில் தாழ்த்திப் பார்த்தார்.

“கால் எலும்பு ஓரளவு கூடி வந்துட்டுது மேடம். இனிமே இடுப்பும் கைகளும் மட்டும்தான் பாக்கி. ஒன்னும் பிரச்சின இல்ல மேடம். சீக்கிரம் சரியாய்டும். அதுக்கப்புறம் நீங்க அழகா கார் ஓட்டிகினு போவலாம்”

”காரா? இனிமே அத நான் எப்பிடி தொடமுடியும்? எங்க வீட்டுக்காரர் விடமாட்டார்” அவர் உதடுகளில் மெல்லிய புன்னகை படர்ந்தது.

“தொட்டுப் பாருங்க மேடம். அப்பதான உங்க கையில இருந்த பயம் ஓடிப் போச்சுனு உங்க மனசுக்கு தெரியும். அதுக்கப்பறம் நீங்க கப்பல்ல போவறமாதிரி போவலாம்”

நான் அவரைப் புரட்டி படுக்கவைத்துவிட்டு இடுப்பிலும் முதுகிலும் தோளிலும் எண்ணெயைத் தடவி கட்டைவிரல்களை அழுத்தி சீராக நீவிவிட்டு பயிற்சி கொடுத்தேன்.

“ஒன் வயசு என்ன?”

“இருபத்தெட்டு”

“கல்யாணமாய்ட்டுதா?”

“இல்ல மேடம்”

”எவ்ளோ காலமா நீ நர்சா இருக்கற?”

“ஆறேழு வருஷமாச்சி மேடம்”

”ஆரம்பத்திலிருந்தே முத்துராமன் ஆஸ்பத்திரிலதான் இருக்கியா?”

“ஆமா மேடம்”

“நர்ஸ் வேலைக்கு எப்பிடி வந்த? வேற வேலைக்கு ட்ரை பண்ணலயா?”

“ப்ளஸ் டூ படிப்புக்கு வேற எந்த வேலை கெடைக்கும் மேடம்? எங்க தெரு புள்ளைங்கள்ளாம் மேட்டுப்பாளையத்துல ரெடிமேட் கார்மெண்ட்ஸ்ல டைலரிங் வேலைக்கு போனாங்க. ஆரம்பத்துல நானும் அவுங்களோடு சேர்ந்து போனேன். ஒரு ரெண்டு வருஷம் அங்கதான் கஷ்டப்பட்டேன். எங்க கார்மெண்ட்ஸ் பக்கத்துல ஒரு நர்சிங் காலேஜ் இருந்திச்சி. தெனமும் போவும்போதும் வரும்போதும் அத ஏக்கத்தோடு பாத்துட்டு போவன். எங்க அம்மாகிட்ட சொல்லி அழுது கெஞ்சி அடுத்த வருஷமே எப்படியோ அங்க சேந்து படிச்சேன். முத்துராமன் டாக்டர் வீட்டுலதான் அம்மா சமையல் வேல செய்றாங்க. ஐயாதான் பெரிய மனசு பண்ணி என்ன ஆஸ்பத்திரியில சேத்துகிட்டாரு.”

“அப்பா என்ன பண்றாரு?”

“அப்பா இல்லைங்க மேடம்”

“உயிரோட இல்லயா?”

ஒரு கணம் தயங்கி “எங்களோடு இல்ல மேடம். எனக்கு எட்டு வயசு இருக்கும்போதே அவர் அம்மாவ விட்டுட்டு வேற ஒரு பொண்ணு கூட ஊரவிட்டே போயிட்டாரு.”

“கூடப் பொறந்தவங்க?”

“ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க”

“படிக்கறாங்களா?”

“பெரிய தங்கச்சி சரஸ்வதி. கடைசி வருஷம் இஞ்சினீரிங் படிக்கறா. சின்ன தங்கச்சி லட்சுமி. பாரதிதாசன்ல பிகாம் படிக்கறா”

“நீதான் படிக்க வைக்கறியா?”

“ஆமாம் மேடம். ரெண்டு பேரும் சூப்பரா படிப்பாங்க. இங்க்லீஷ்ல நல்லா வெளுத்துக் கட்டுவாங்க” என்று சொல்லி நிறுத்தி ”தலய தூக்கிடாதீங்க மேடம்” என்றபடி பின்கழுத்தில் தலைமுடியை ஒதுக்கிவிட்டு மெதுவாக கட்டைவிரலால் அழுத்தி மெதுவாக நீவினேன்.

“வலிச்சா சொல்லுங்க மேடம்” என்றபடி ஒவ்வொரு புள்ளியாக முதுகுத்தண்டை ஒட்டி அழுத்தி நீவியபடி சென்று சற்றே குழிந்து மேடாக எழும் இடுப்புப் புள்ளியில் முடித்தேன். ஒருகணம் மூச்சு வாங்கி விரல்களை உதறிக்கொண்டு மீண்டும் கழுத்திலிருந்து இடுப்புவரை மேலும் இருமுறை நீவி முடித்தேன். 

”நல்லா மூச்ச இழுத்து வாங்குங்க மேடம். இப்ப உங்களத் திருப்பிவிடறன்” 

அவர் உடலைப் புரட்டி படுக்கவைத்து கைகளை இருபுறமும் சீராக படிய வைத்தேன். 

“ஒரு அஞ்சி நிமிஷம் போவட்டும் மேடம். தண்ணிய ரெடி பண்ணிட்டு வரேன். குளிச்சிடலாம்”

குளியலறைக்குள் சென்று ஹீட்டரை நிறுத்திவிட்டு வாளிகளில் வெந்நீரை நிறைத்து இளஞ்சூட்டு பதத்துக்கு தண்ணீரைக் கலந்தேன். 

வெளியே வந்து சுவரோரமாக நிறுத்தப்பட்டிருந்த சக்கர நாற்காலியை படுக்கைக்கு அருகில் தள்ளிவந்து நிறுத்தினேன்.

“குளிச்சிடறீங்களா மேடம்?”

“எப்படி?”

அவர் கழுத்துக்கு அடியில் ஒரு கையையும் தொடைக்கு அடியில் ஒரு கையையும் கொடுத்து ஒரே மூச்சில் தூக்கி நாற்காலியில் அமரவைத்தேன். அவர் ஆச்சரியம் மின்னும் கண்களோடு என்னைப் பார்த்தாள்.

“வெரி ஸ்ட்ராங் கேர்ள்”

மேடம் புன்னகைக்கும்போது அவர் முகம் அழகாக இருந்தது.

“ஒன் வெய்ட் என்ன?”

“நாப்பத்தஞ்சி”

“அவ்ளோதானா? நான் அம்பத்தெட்டு. என்ன அப்படியே அசால்ட்டா தூக்கிட்டியே? இதுக்கு கூட நர்சிங்ல ட்ரெய்னிங் குடுக்கறாங்களா?”

என் நெஞ்சில் எழுந்த வெட்கத்தை என்னால் மறைக்கமுடியவில்லை. உதடுகளைக் கடித்துக்கொண்டு நாற்காலியை குளியலறைக்குள் தள்ளிக்கொண்டு சென்றேன்.

“இந்த சூடு போதுமா மேடம்?”

வாளியிலிருந்து ஒரு கை அள்ளி அவர் கால் மீது ஊற்றினேன். “போதும்” என்று தலையசைத்தார் அவர். எண்ணெய்க்கறை போக அவர் உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டி துவட்டி புதுத்துணி உடுத்தி மீண்டும் நாற்காலியில் அமரவைத்து படுக்கைக்கு அழைத்துவந்தேன். ட்ரையர் போட்டு தலைமுடியை நன்கு உலரவைத்து முதுகின் மீது படர்ந்திருக்கும்படி தலைமுடியை விரித்துவிட்டேன். 

”சாப்படறீங்களா மேடம்?”

“சாப்படறேன். அதுக்கு முன்னால நீ என்ன அந்த அலமாரிகிட்ட அழச்சிட்டு போ”

நான் சக்கர நாற்காலியை வளைத்து உருட்டிச் சென்று அலமாரிக்கு அருகில் நிறுத்தினேன்.

“அங்க ம்யூசிக் சிஸ்டத்துக்குப் பக்கத்துல காப்பி கலர் ஹேண்ட் பேக் இருக்குது பாரு. அதுக்குள்ள சாவிக்கொத்து இருக்கும், எடு”

நான் எடுத்துச் சென்று “இதுவா மேடம்?” என்று கேட்டேன்.

“இதேதான். அலமாரிய தெற”

“எதுக்கு மேடம்?” எனக்கு சற்றே தயக்கமாக இருந்தது.

“தெற, சொல்றேன்”

திறந்ததும் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டேன். மேல்தட்டிலும் இரண்டு அடித்தட்டுகளிலும் ஏராளமான பட்டுப்புடவைகள் இருந்தன. நடுத்தட்டில் மையமான இடத்தில் ஒரு அடி சதுரத்தில் அம்மன் படம் இருந்தது. மகுடமும் மாலைகளும் எண்ணற்ற ஆபரணங்களும் அணிந்த கோலம். அபயமளிக்கும் வளைசெறிந்த வலது கை. ஒயிலாக சரிந்திருக்கும் இடது கை. பின்னால் ஒளிவட்டம். தங்கத்தகடென மின்னும் மேகங்கள். குன்றுகள். 

“அத எடுத்து என் நெத்திகிட்ட புடி”

அவர் தன் நெற்றியை அம்மனின் பாதங்களுக்கு நேராக வைத்தபடி சில கணங்கள் கண்களை மூடியிருந்தார். உதடுகள் மட்டும் எதையோ முணுமுணுப்பதைப் பார்த்தேன். என்னைப் பார்த்து படத்தை  எடுத்த இடத்திலேயே வைத்துவிடும்படி சொன்னார். 

“அந்த அடுக்கு ஓரமா குங்குமச்சிமிழ் இருக்கும் பாரு. கொஞ்சம் எடுத்து என் நெத்தியில வச்சி விடறியா?”

என் கண்களில் ஒரு வெள்ளிச்சிமிழ் தென்பட்டது.  எடுத்து அவர் சொன்னபடி செய்தேன். 

அடுத்த கணம் அவர் ’தாயே திரிபுர சுந்தரி, உமா மகேஸ்வரி, சாமள செளந்தரி தாளிணை மலரே சரணம்’ என்று பாடத் தொடங்கினார். நான் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தபடி நின்றேன். சொந்தமாகப் பாடுகிறாரா அல்லது ஏதேனும் புத்தகத்தில் ஏற்கனவே படித்து மனப்பாடம் செய்த  பாட்டா என எதுவுமே எனக்குப் புரியவில்லை. ஏற்கனவே படித்த பாட்டாக இருந்தாலும் அவர் மயங்கியிருந்த இரு மாத காலங்களில் ஒரு வரி கூட மறக்காமல் அவர் மனத்திலேயே பதிந்திருப்பதைப் பார்த்து திகைத்து நின்றிருந்தேன். மேடம் முதல் வரியைத் தொடர்ந்து பல வரிகளை ராகத்தோடு பாடினார். ‘காமதேனு வணங்கும் கருணாரூபிணி கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி’ என்று அடுத்தடுத்த வரிகளுக்குள் இறங்கிச் சென்றார்.

பாடி முடித்த பிறகு தளும்பும் கண்களுடன் அவர் என் பக்கம் திரும்பி சிரித்தார். அப்போது அவர் முகம் மிகவும் வசீகரமாக இருந்தது.  நான் ஒரு துண்டை எடுத்துச் சென்று அவர் கன்னங்களைத் துடைத்துவிட்டேன். 

“ஏன் அப்படி விழிக்கற? இதுக்கு முன்னால பாட்டு கேட்டதில்லயா?”

”கேட்டிருக்கேன் மேடம். ஆனா இந்த மாதிரி பாட்டு இல்ல. எல்லாம் சினிமா பாட்டு. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே, நான் காற்றிலே அலைகிற காகிதம் கடவுளின் கைகளில் காவியம் அந்த மாதிரி பாட்டுங்கதான் கேட்டிருக்கேன்.”

“அது சினிமாப்பாட்டு,  இது பக்திப்பாட்டு”

“அப்படியா மேடம்?” என்றபடி அவருக்கு தட்டில் சிற்றுண்டி வைத்து எடுத்துச் சென்று கரண்டியால் எடுத்து ஊட்டினேன். அவர் ஒவ்வொரு துண்டாக வாங்கி மெதுவாக சுவைத்துச் சாப்பிட்டார்.

தட்டைக் கழுவி வைத்த பிறகு அவருக்கு கொடுக்கவேண்டிய காலை மாத்திரைகளைக் கொடுத்தேன். 

“படுத்துக்கறீங்களா? உக்காந்திட்டிருக்கிங்களா மேடம்?”

“சித்த நேரம் உக்காந்திட்டிருக்கேன்”

“சரி. இடுப்பு வலிக்கும்போது சொல்லுங்க. படுக்கைக்கு மாத்திவிடறேன்”

என் பையிலிருந்து இரு சிறிய பந்துகளை எடுத்து மேடமுடைய இரு கைகளிலும் வைத்தேன். 

”மெதுவா வெரலுங்கள மடக்கி பந்த அழுத்தி அழுத்தி விடுங்க மேடம். அப்பதான் உள்ள இருக்கிற நரம்புக்கோணல் சரியாவும்”

“எத்தன தரம் செய்யணும்?”

“அதுக்கெல்லாம் கணக்கே இல்லை மேடம். கொஞ்ச நேரம் செய்ங்க. வலிச்சா நிறுத்துங்க. அப்பறம் செய்ங்க. செஞ்சிகினே இருந்தாதான் நரம்பு சீக்கிரமா நெகிழ்வாகும். நெகிழ்வானாதான் உங்க கை செயல்பாடும் சாத்தியமாகும்”

அவர் செய்து பழகும் வரை பக்கத்திலேயே நின்று பார்த்தேன். “இந்த வேகம் போதும் மேடம். நாலஞ்சி வாரத்துல சரியாய்டும்” என்றபடி படுக்கையில் இருந்த போர்வைகளையும் ஆடைகளையும் அகற்றி துணிக்கூடைக்குள் போட்டுவிட்டுத் திரும்பி புதிய விரிப்புகளை எடுத்து படுக்கை மீது விரித்தேன். 

“பாடறதுக்கு நீங்க எப்படி கத்துகிட்டிங்க மேடம்?”

மேடம் என்னைப் பார்த்து புன்னகைத்தார். 

“நீ நர்சிங் எப்படி கத்துகிட்டியோ அதே மாதிரிதான் நானும் பாட்டு கத்துகிட்டேன்”

“கிண்டல் செய்றீங்களா மேடம்?”

“இல்லயே. நீ காலேஜ்ல சேர்ந்து கத்துகிட்டமாதிரி, நானும் ஒரு குருகிட்ட சேர்ந்து கத்துகிட்டேன்.”

“இதுக்கு கூட குரு இருக்காங்களா?”

“குரு மட்டுமில்ல. காலேஜ்ல இதுக்குனு ஒரு படிப்பே வந்திட்டுது. பிஏ ம்யூசிக், எம்ஏ ம்யூசிக்னு.”

“ஓ”

“எங்களுக்கு தஞ்சாவூரு பக்கம். எங்க அப்பாவுக்கு இசை மேல ஆர்வம் இருந்தது. அதனால என்ன பாட்டு கத்துக்க அனுப்பினாரு.  கல்யாணத்துக்கு அப்பறமாதான் இங்க பாண்டிச்சேரிக்கு வந்தேன்.”

“சினிமாவுல பாட மாட்டீங்களா?”

“கூப்ட்டா பாடலாம். ஆனா அதெல்லாம் மெனக்கிடற வேல. எனக்கு அதுல விருப்பமில்லை. எனக்கு பராசக்திய பத்தி பாடிட்டே இருக்கணும். அதுதான் என்னுடைய ஆசை. கனவு. எல்லாம். பாடிப்பாடி உருகி எப்படியாவது என் கண்முன்னால பராசக்திய வரவழைச்சி அவள் விஸ்வரூபத்த என் கண்ணால பாக்கணும். அவ தரிசனம் ஒன்னு போதும் எனக்கு. இந்த வாழ்க்கையே நெறஞ்சி போய்டும்” 

அவர் கண்களையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவை உண்மையிலேயே ஒரு தெய்வத்தின் முன்னால் நிற்பதுபோல உருகிக் கனிந்திருந்தன. 

”அந்த சிஸ்டத்த ஆன் செஞ்சி விடேன். அதுல நல்ல நல்ல பாட்டுங்க இருக்குது”

நான் பெட்டிபெட்டியாக இருந்த சிஸ்டத்துக்கு அருகில் சென்று ஸ்விட்சை ஆன் செய்தேன். மஞ்சளாக சுடர்விட்டு மெல்ல மெல்ல அதன் திரை விரிந்தது. 

“எந்த பாட்டு வைக்கட்டும் மேடம். பெரிய பட்டியலா இருக்குது”

“ஏதாவது ஒன்ன வை”

நான் குருட்டாம்போக்கில் ஒன்றைத் தொட்டு ஆன் செய்தேன். சில கணங்களில் வீணையின் நரம்பு மீட்டப்படும் இனிய நாதம் கேட்டது. மீட்டலின் வேகம் கூடும்போதும் குறையும்போதும் அலையலையாக தனித்தனி இசைக்கோவைகள் பிறந்தன. சட்டென ஒரு கிளைநதி பொங்கி வந்து தாய்நதியுடன் சேர்வதுபோல ஒரு குரல் பொங்கி அந்த இசையுடன் இணைந்துகொண்டது. ’எப்போ வருவாரோ எந்தன் கலிதீர எப்போ வருவாரோ’ என்று குரல் மன்றாடியது.

நான் திரும்பி மேடமின் முகத்தைப் பார்த்தேன். இருக்கட்டும் இருக்கட்டும் விடு என்பதுபோல கண்ணிமைகளையே அசைத்துவிட்டு இசையில் லயித்துவிட்டார். 

இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர் குறிப்பிட்ட நேரம் கடந்த பிறகும் வரவில்லை, அவர் ஏன் வரவில்லை என்கிற காரணம் புரியவில்லை என்று தமக்குள் நினைத்து மருகுவதுபோலவும் கண்ணீர் விட்டு கலங்குவதுபோலவும் இருந்தது அக்குரல். அந்தப் பொருள் சரியா தவறா என்று எனக்குப் புரியவில்லை. அந்தக் குரலை வைத்து அந்தப் பாட்டின் பொருளை நானே ஊகித்தேன். 

பாட்டு முடிந்து சில கணங்களுக்குப் பிறகே மேடம் கண் திறந்தார். 

“பாட்டுன்னா இப்படி இருக்கணும். அப்படியே அருவி கொட்டறமாதிரி. கடல் பொங்கறமாதிரி. அடிச்சி மழ பொழியறமாதிரி. மானம் பாத்த பூமியில சுத்திசுத்தி அடிக்குமே அந்த காத்து மாதிரி”

“நீங்க இப்படித்தான் பாடுவிங்களா மேடம்?”

மேடம் ஒரு கணம் என்னைப் பார்த்துவிட்டு பிறகு புன்னகைத்தார்.

”ம்” என்று தலையசைத்தார். “ஆனந்தவல்லிங்கற பேர நீ கேட்டதே இல்லையா? தமிழிசை ஆனந்தவல்லி”

“ஆஸ்பத்திரில பேஷண்ட் நேம் ஃபைல்லதான் ஒங்க பேர முதமுதலா பாத்தேன் மேடம். அதுக்கு முன்னால கேள்விப்பட்டதில்லை. சாரி மேடம்.”

மேடம் புன்னகைக்கும்போது அவர் அழகு பல மடங்காகப் பெருகுவதைப் பார்த்தேன்.

“பேப்பர்ல கூட பாத்ததில்லயா?”

“இல்லைங்க மேடம்.”

“டி.வி.யில?”

“எங்க வீட்டுல டி.வி. இல்லை மேடம்”

”தமிழிசைப் பாடல்கள் பாடணும்னே என் குரு என்னை உருவாக்கினார். அதுதான் என் அடையாளம். ஆறேழு வருஷமா பாண்டிச்சேரியில, கடலூருல, விழுப்புரத்துலனு சின்னச்சின்ன நிகழ்ச்சிகள்ல பாடிட்டிருந்தேன். முதமுதலா திருவான்மியூர்ல ஒரு கோயில் நிகழ்ச்சிக்கு அழச்சாங்க. அதுக்கு போய்ட்டு திரும்பி வரும்போதுதான் ஆக்சிடென்ட்டாய்ட்டுது”

மேடம் மெளனத்தில் மூழ்கினார். கதவு திறந்துவிட்டது, பாதை தெரிந்துவிட்டது, இனி போய்க்கொண்டே இருக்கலாம் என்று நினைத்த நேரத்தில் பாதையின் குறுக்கில் ஒரு மரம் விழுந்து காலை உடைந்துவிட்டால் எப்படி இருக்கும் என்பதை அவர் முகத்தில் படிந்திருந்த துயரத்தைக் கொண்டு புரிந்துகொள்ள முடிந்தது. 

“அதுக்கு ஏன் கவலைப்படறீங்க மேடம். நடந்தது எல்லாமே ஏதோ ஒரு வகையில நல்லதுக்குனு நெனச்சிக்குங்க. இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல, ஏன் ஒரே மாசத்துல உங்கள சரிபண்ணி காட்டறேன் நான். அடிபட்ட அடையாளமே இல்லாமல் உங்கள நடமாட வைக்கறன். அதுக்கப்புறம் உலகத்துல எங்க வேணும்னாலும் பறந்துபோய் பாடிட்டு வரலாம்”  

நான் சொன்னதைக் கேட்டு மேடம் திகைத்துவிட்டார். அத்துடன் ஒரு நம்பிக்கை அவருடைய கண்களில் ஒரு மின்னல் போல சுடர்விட்டதை என்னால் பார்க்க முடிந்தது. “உண்மையிலயே முடியுமா?” என்று தயக்கத்துடன் கேட்டார்.

“முடியும் மேடம், நான் முடிச்சி காட்டறன்”

சிஸ்டத்துக்கு அருகில் சென்று அடுத்த பாட்டை ஆன் செய்தேன். 

“போதும் மேடம். முதல் நாள். இடுப்புக்கு அதிகம் சுமை கொடுக்கவேணாம். படுத்துக்குங்க”

நாற்காலியிலிருந்து அவரைத் தூக்கி படுக்கையில் கிடத்தி உடலை நேராக்கினேன். 

“முடியும்னு உனக்கு நம்பிக்கை இருக்குதா?”

“எனக்கு இருக்குது மேடம். அந்த நம்பிக்கை உங்களுக்கும் இருக்கணும்”

நான் அவர் கால்களுக்கு அருகில் நின்று அவர் வலதுகால் பாதத்தைப் பற்றி அரையடி உயரத்துக்கு உயர்த்தி பிறகு மெதுவாகத் தாழ்த்தினேன். ஐந்து முறை அப்படி செய்த பிறகு இடதுபாதத்துக்கும் அதே பயிற்சியைக் கொடுத்தேன். 

“இதுதான் முக்கியமான பயிற்சி மேடம். என்னுடைய புடிமானம் இல்லாம இத நீங்களே செய்யணும். எத்தன முறை முடியுதோ அத்தனை முறை செய்யலாம். அதுல கணக்கே இல்லை”

நான் ஒவ்வொரு பாதத்துக்கும் ஐந்தாறு முறை செய்த பிறகு, மேடம் தன் முயற்சியால் ஒருமுறை உயர்த்தினார் அரைநொடி நிறுத்தி இறக்கினார். 

“இதுதான் தொடக்கம் மேடம். இன்னைலேர்ந்து ஒரு மாசம். கணக்கு பண்ணிக்குங்க. நீங்க எழுந்து நடக்க ஆரம்பிச்சிடுவிங்க”

“நீ சொல்றத கேக்கும்போது எனக்கு என்னமோ சின்னப்பொண்ணாவே மாறிட்டமாதிரி இருக்குது” என்று மேடம் மலர்ந்து சிரித்தார். 

“காலுக்கு என்ன செய்றீங்களோ, அதே கணக்குதான் கைக்கும் மேடம். இருங்க. ஒருதரம் நான் செஞ்சி காட்டறன்.”

அவர் கைகளைப்பற்றி மிகமிக மெதுவாக உயர்த்தித் தாழ்த்தினேன். அவருக்கு அக்கணமே அந்தப் பயிற்சியின் நுட்பம் பிடிபட்டுவிட்டது.

மதிய உணவு நேரம் வரைக்கும் அவர் கைகளுக்கும் கால்களுக்கும் பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்துகொண்டே இருந்தார். உணவுத்தட்டை அருகில் எடுத்துச் சென்ற பிறகே அவர் அதை நிறுத்தினார். கரண்டியால் உணவையும் காய்கறிகளையும் எடுத்து அவருக்குக் கொடுத்தேன். அவர் ஒவ்வொரு வாயாக சுவைத்து சாப்பிட்டார். அதற்குப் பிறகு அட்டையிலிருந்து பிரித்து மதிய மாத்திரைகளை அவருக்குக் கொடுத்தேன்.

சிஸ்டத்தைத் தொட்டு அவருக்காக ஒரு பாட்டை இசைக்கவிட்டு நான் சாப்பிட உட்கார்ந்தேன். வீட்டிலிருந்தே ஒரு பாக்ஸில் நான் தக்காளி சாதமும் நாரத்தை ஊறுகாயும் கொண்டுவந்திருந்தேன். சாப்பிட்டுக்கொண்டே அந்தப் பாட்டை ஊன்றிக் கேட்க பலமுறை முயற்சி செய்தேன். ஒரு வரியை மனம் பின்தொடர்ந்து செல்லும்போதே வேறு எண்ணம் எழுந்து அதை துண்டித்தது. 

பாத்திரத்தைக் கழுவி பைக்குள் வைத்துவிட்டு மேடம் அருகில் வந்து நின்றேன். 

“தூங்கறதுன்னா தூங்குங்க மேடம். ரெஸ்ட் எடுத்தா உடம்புக்கு நல்லது. நாலு மணிக்கு நம்ம பிசியோதெரபியை ஆரம்பிக்கலாம்”

“அதான் ரெண்டு மாசத்துக்கு ஒரேடியா தூங்கிட்டனே. அதுக்கு மேல என்ன தூக்கம் வேணும்?” என்று சிரித்தார் அவர். 

“நான் சுயநினைவில்லாம இருந்த சமயத்துல நீதான இங்க பக்கத்துல இருந்த?”

”ஆமா மேடம்.”

“யார் யார் என்ன பாக்க வந்தாங்க?”

“எனக்கு எப்படி மேடம் அவுங்களயெல்லாம் தெரியும்? பெரிய ஐயா, சின்ன ஐயா ரெண்டு பேர மட்டும்தான் தெரியும். தெனம் ஒரு பத்து தரமாச்சிம் இங்க வந்து போவாங்க.”

“நான் பொழைப்பேன்னு நெனச்சாங்களா, இல்ல செத்துருவேன்னு நெனச்சாங்களா?”

“ஐயையோ, ஏன் மேடம் அப்படி கேக்கறீங்க? நீங்க பொழைக்கணும்னுதான எல்லாரும் பாடுபட்டாங்க?”

“சரி விடு. நீ சின்ன பொண்ணு. நான் கேக்கறது உனக்கு புரியலை. உனக்கு நம்பிக்கை இருந்ததா, நான் பொழைப்பேன்னு?”

“எரநூறு பர்சன்ட் எனக்கு நம்பிக்கை இருந்திச்சி மேடம். உங்கள மாதிரி எத்தன பேர நான் நல்லபடியாக்கி நடமாட வச்சிருக்கேன் தெரியுங்களா?”

மேடம் என்னைப் பார்த்து கண்களைச் சிமிட்டி புன்னகைத்தார். மூச்சை ஆழமாக இழுத்து விட்டார். “நான் இப்ப உனக்கு ஒரு பாட்டு சொல்லித் தரப்போறேன்” என்றார்.

அதைக் கேட்டதுமே எனக்குள் பதற்றம் பிறந்தது. ”மேடம், பாட்டுலாம் எனக்கு சரிப்பட்டு வராது மேடம். எனக்கு அதெல்லாம் வேணாம் மேடம்” என்று கைகளை அசைத்து சிணுங்கினேன்.

என் சிணுங்கலைப் பார்த்து அவர் சிரித்துவிட்டார். “அடி அசடே. இது நீ ராகம் போட்டு பாடறதுக்கு இல்ல. நீ ஒன்னும் மேடையேறி கச்சேரியில பாட வேணாம். மனசுக்குள்ளயே பாடிக்கவேண்டிய ஒரு பாட்டு” என்றார். அதைக் கேட்டு எனக்குக் குழப்பமாக இருந்தது.

“அப்படின்னா?”

“தெனம் நீ காலையில குளிச்சி முடிச்சி சாமி முன்னால நிப்ப இல்ல?”

“ஆமா”

“அப்ப சாமிய நெனச்சி மனசுக்குள்ள இந்த பாட்ட பாடு. பாடக் கூட வேணாம்,. சொல்லு. அது போதும்”

‘சொன்னா போதுமா?

“ஆமா, சொன்னா போதும்”

“அப்படின்னா சரி” 

மிகுந்த தயக்கத்துடன் அவர் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டேன்.

அவர் குரலைச் செருமியபடியே ”நல்லா காது குடுத்துக் கேட்டுக்கோ. நான் ஒவ்வொரு வரியா சொல்றேன். அத நீ திருப்பி சொல்லு. சரியா?” என்று கேட்டார். 

நான் தலையசைத்தேன். அவர் ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி நிறுத்தி என்னைப் பார்த்துச் சொன்னார்.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே

மேடம் சொல்லச்சொல்ல ஒவ்வொரு வரியையும் நானும் திருப்பித்திருப்பிச் சொன்னேன். ஒரு பிழையும் இல்லாமல் சொன்னதை நினைத்து எனக்கே மகிழ்ச்சியாக இருந்தது. 

“ஒரு பேப்பர்ல எழுதி வச்சிக்கோ. படிச்சி படிச்சி மனப்பாடம் பண்ணு. சரியா?”

நான் தலையசைத்தபடி ஒரு தாளை எடுத்து எழுதி மற்றொரு முறை மேடம் முன்னால் படித்துக்காட்டினேன். முடியும்போது விழுத்துணையே என்பதை வழித்துணையே என்று சொல்லிவிட்டேன். அதைக் கேட்டு அவர் சிரித்துவிட்டார்.

“வழித்துணை இல்லை. விழுத்துணை”

அவர் சொன்னபிறகு உதட்டைக் கடித்துக்கொண்டு எழுதி வைத்த தாளைப் பார்த்தேன். தாளில் சரியாகத்தான் எழுதிவைத்திருந்தேன். பிறகெப்படி தவறாக உச்சரித்தேன் என்பது எனக்குப் புரியவில்லை.

“சரி மேடம், ஒரு சின்ன சந்தேகம்.”

”என்ன சந்தேகம்?”

“எதுக்குப் பாடணும் இந்தப் பாட்ட?”

‘நல்லா கேட்ட, போ” என்று சிரித்தார். பிறகு ”இது அபிராமி பாட்டு. இத பாடறவங்களுக்கு பராசக்தி கருணை கிடைக்கும். நல்லது நடக்கும். புரியுதா?”

“நல்லதுன்னா?”

“அசடே, வயசு இருபத்தெட்டுன்னு சொல்றியே, ஒனக்கு ஒரு கல்யாணம் காட்சி நடக்கவேணாமா?”

“ஐயோ, அது இப்ப வேணாம் மேடம். தங்கச்சிங்க நல்லபடியா ஒரு வேலைக்கு போய் செட்டிலான பிறகுதான் நான் செஞ்சிக்குவேன்”

மேடம் ஒருகணம் என்னைப் பார்த்தார். “ஒனக்கும் நல்லது நடக்கும். ஒன் தங்கச்சிங்களுக்கும் நல்லது நடக்கும். போதுமா?. தெனம் தவறாம சொல்லு. முடிஞ்சா ஒன் தங்கச்சிங்களயும் சொல்லச் சொல்லு”

‘சரிங்க மேடம். நாம பிசியோதெரபி ஆரம்பிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவருடைய வலது பாதத்திலிருந்து தொடங்கினேன் நான். ப்ராஞ்ச் ஆயிலை தாராளமாக எடுத்து கால் முழுதும் தடவி உருவிவிட்டேன். காலையில் உயர்த்திய உயரத்தைவிட ஒரு அரை அங்குலம் கூடுதலாக உயர்த்தினேன். அவர் உடனே ஸ்ஸ்ஸ் என்று மூச்சை இழுக்கத் தொடங்கினார்.

“கொஞ்சம் வலி இருக்கும் மேடம். பல்ல கடிச்சிகிட்டு பொறுத்துக்குங்க. சரியா?”

”சரி”

இரு கால்களுக்கும் கைகளுக்கும் செய்துமுடித்து குளிக்கவைத்து உடைமாற்றி சக்கர நாற்காலியில் அமரவைத்து குங்குமம் வைத்துவிடும்போது மணி ஆறாகிவிட்டது. சாவித்திரி அறைக்குள் வந்து “வணக்கம்மா” என்றாள். 

நான் புறப்பட்டேன். மேடம் “ஒரு பாட்டு வச்சிட்டு போ” என்றாள். நான் சாவித்திரியை அழைத்து பாட்டு வைக்கும் வழிமுறையை சொல்லிக்கொடுத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

மறுநாள் சென்றபோது மேடம் முகம் மலர்ந்திருந்தது. ஒவ்வொரு பயிற்சியையும் ஆர்வத்துடன் செய்தார். குளித்து உடைமாற்றி நாற்காலியில் அமரவைத்ததும் அலமாரியிலிருந்து பார்வதி தேவியின் படத்தை எடுத்துக் காட்டும்படி கேட்டுக்கொண்டார். பிறகு சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த பிறகு ‘தாமரர் கொன்றையும் செண்பக மாலையும்’ என்று அடங்கிய குரலில் பாடத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ’உதிக்கின்ற செங்கதிர்’ என்ற வரிகளைப் பாடினார். இதைத்தானே நேற்று எனக்கு அவர் சொல்லிக்கொடுத்தார் என நினைத்துக்கொண்டேன். ஏறத்தாழ ஒரு பத்து பாட்டு பாடியபிறகு நிறுத்திவிட்டு என்னிடம் “இது என்ன பாட்டு தெரியுமா?” என்று கேட்டார்.

”சாமி பாட்டு” என்றேன் நான்.

அவர் உடனே சிரித்துக்கொண்டார். “இது அபிராமி அந்தாதி. எனக்காக இத நான் எத்தனயோ முறை பாடியிருக்கேன். இப்ப உனக்காக பாடறன்” என்றார். நான் அவசரமாக “சரி” என்று சொல்லிவிட்டு அவருக்கு சிற்றுண்டி எடுக்கச் சென்றேன். 

“சரி, நான் உனக்கு நேத்து ஒரு பாட்டு கத்துகுடுத்தனே, அத பாடனியா?”

“பாட வரலை மேடம். படிச்சேன்.”

அவர் என் கண்களையே பார்த்தார். 

”எங்க, ஒரு தரம் இப்போ படி”

“ஐயோ, இப்ப எதுக்கு? மேடம்”

“எப்படி படிக்கறேன்னு கேக்க வேணாமா? படி”

தப்பிக்க முடியாது என்று புரிந்ததும் பைக்குள் இருந்த தாளை எடுத்து அவசரமாக மடிப்பைப் பிரித்துப் படித்தேன். உதிக்கின்ற செங்கதிர் என்று தொடங்கி ஒவ்வொரு சொல்லாக  நிறுத்தி நிறுத்திப் படித்தேன். முடிக்கும் அவசரத்தில் இறுதிச் சொல்லாக ‘வழித்துணையே’ என்று சொல்லிமுடித்தேன்.

மேடம் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். “ஒரே ஒரு வார்த்த, உனக்கு வரவே மாட்டுதே. அபிராமி பட்டர் இதக் கேட்டார்னு வச்சிக்கோ, என்ன கீழ எறக்காதிங்க, நான் நெருப்புலயே நிக்கறேன்னு நின்னுடுவார்”

“நாளைக்கு சரியா சொல்றன் மேடம். இப்ப இத சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு சிற்றுண்டியைக் கொடுத்தேன். பிறகு மாத்திரைகளையும் கொடுத்தேன்.

ஒவ்வொரு நாளும் மேடம் பயிற்சிகளை ஆர்வத்துடன் செய்தார். உயர்த்திய கைகளையும் கால்களையும் ஒரே கணத்தில் இறக்கும்படி கேட்கும் மேடம் ஒரு நிமிட அளவுக்குக் கூட மூச்சடக்கி ஒரே நிலையில் நிறுத்தும் அளவுக்கு மெல்ல மெல்ல முன்னேறினார். பத்தே நாட்களில் அவர் கைகள் செயல்பாட்டுக்கு வந்தன. இருபது நாட்களில் கால்களை அவரால் அசைக்க முடிந்தது. அதற்குப் பிறகு தன் ஆடையை தானே கழற்றவும் அணிந்துகொள்ளவும் முடிந்தது. அதற்கு அடுத்த நாலைந்து நாட்களில் படுக்கையிலிருந்து கீழே இறக்கிவிட்டால் வாக்கர் உதவியுடன் குளியலறைக்கும் செல்ல முடிந்தது. மாத இறுதிக்குள் படுக்கையில் தானே சரிந்து உட்காரும் அளவுக்கு அவருடைய உடல்நிலை முன்னேறியது.

அடுத்த நாள் அவருக்கு பயிற்சிகளை முடித்துவிட்டு குளிக்க வைத்து உடைமாற்றி சிற்றுண்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போது டாக்டர் முத்துராமன் வந்துவிட்டார். அப்போது அவருடன் பெரிய ஐயாவும் சின்ன ஐயாவும் இருந்தார்கள். டாக்டர் அவரை நிற்கவைத்தும் அமரவைத்தும் கைகளை நீட்டவைத்தும் பல சோதனைகளைச் செய்து பார்த்தார். 

“எங்க ட்ரீட்மெண்ட் இனிமே தேவையில்ல மேடம். சொல்லிக்கொடுத்த பயிற்சிகள் மட்டும் போதும். அத மட்டும் நிறுத்தாதிங்க. தேவைப்பட்டா ஆஸ்பத்திரிக்கு வாங்க. போதும்”

சோதனைக்கருவிகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு அவர் கிளம்பினார். அனைவரும் அவருக்கு நன்றி சொன்னார்கள். இரண்டு ஐயாக்களும் வாசல் வரை சென்று அவரை வழியனுப்பிவிட்டு வந்தனர்.

வாக்கர் துணையுடன் அறைக்குள்ளேயே மாலைப் பயிற்சியைச் செய்யவைத்தேன்.  முடித்துவிட்டு விடைபெறும்போது மேடம் எனக்கு ஒரு படத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவருடைய அலமாரியில் வைத்திருப்பதைப்போலவே இருக்கும் அம்மனின் படம்.

“ரொம்ப தேங்க்ஸ் மேடம்”

“தெனம் படத்துக்கு விளக்கேத்தி வச்சிட்டு எழுதி வச்சிருக்கயே அந்தப் பாட்ட பாடு. புரியுதா?” என்று கேட்டார்.

”சரிங்க மேடம்” என்று தலையாட்டினேன்.

“விழுத்துணையேன்னு சொல்வியா, வழித்துணையேன்னு சொல்வியா?”

“சரியா வழித்துணையேன்னு சொல்வேன் மேடம்’ என்று சொல்லிவிட்டு, அக்கணமே தவற்றை உணர்ந்தபடி ”ஐயோ சாரி சாரி மேடம். விழுத்துணையேன்னு சொல்வேன் மேடம்” என்றேன்.

“ஒரு நிமிஷம் இரு” என்று சொல்லிவிட்டு படுக்கை விரிப்புக்குக் கீழே வைத்திருந்த ஒரு உறையை எடுத்து என் பைக்குள் வைத்தார். அதைப் பார்க்கும்போதே ரூபாய் நோட்டுகள் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. “ஐயோ, வேணாம் மேடம். டாக்டருக்கு தெரிஞ்சா திட்டுவாரு” என்று பதறினேன். ‘ச்ச்ச். உனக்கு இத நான் சம்பளமா கொடுக்கல. என் அன்பளிப்பா கொடுக்கறேன். உனக்கு ஆசப்பட்டத நீ வாங்கிக்கோ. உன் தங்கச்சிங்களுக்கும் வாங்கிக்கொடு. சரியா?” என்று சொல்லிவிட்டு என் தோளில் தட்டினார். 

***

2 Replies to “தரிசனம்”

  1. தரிசனம் அற்புதமான கதை. சிவகாமி மற்றும் மேடம் என்று இரு பாத்திரங்கள் மட்டுமே, பெரிய ஐயாவும் சின்ன ஐயாவும் முத்துராமனும்இமைப்பொழுதில் வந்து போகிறார்கள். சிவகாமியில் மேடம் அபிராமியையே தரிசனம் செய்கிறார்.
    உரையாடல்கள் வழியே கதை அற்புதமாகச் சலிப்பின்றிச் செல்கிறது

  2. மனுஷ்ய தெய்வ ரூபேண என்று சொல்வார்கள்.சிவகாமியின் தன்னலமற்ற சமர்ப்பணத்துடன் கூடிய சேவை மேடம் வணங்கும் பரமேஸ்வரியே நேரில் வந்து செய்வது போன்றது.தாயுமானவன் கதையில் ஈசனே பிரசவம் பார்த்தது போல.இறை நம்பிக்கையும், தளர்வுற்றோருக்கு சக மனிதர்கள் கொடுக்கும் நம்பிக்கை இரண்டும் மனித வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடிகிறது?அபிராமியின் ஒரு பாடல் அல்லது படம் எல்லாம் வாழ்க்கையில் துவண்டிருக்கும் வேளையின் பிடிமானம். சக மனிதர்களின் அன்பும் ஆதரவும் கனிவும் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளும் உதவியும் இவை எல்லாம்தான் தெய்வத்தின் தரிசனம்.எளிமையான உரையாடல் மூலம் ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லும் கதை.பாவண்ணனுக்கு வாழ்த்துகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.