தமிழே துணை

சக்திவேல் கொளஞ்சிநாதன்

“என்ன அஸ்வின்… கார் எங்க நிக்குது?”

பிரவீண் கேட்ட கேள்வியைக் காதில் வாங்கியபடி கைபேசியில் பேசிக்கொண்டிருந்த நான், மகிழுந்து இருக்கும் திசையை நோக்கிக் கைகாட்டிக்கொண்டே முன்னோக்கி நடந்து கொண்டிருந்தேன். நியூ ஜெர்சியின் எடிசன் ரயில் நிலையத்திற்கு அருகில் மெட்ரோப்ளெக்ஸ் ட்ரைவ் என்ற சாலையில் இருக்கும் ஒரு இந்திய சார்பு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தான் இருவருக்கும் வேலை. எனக்கு பிரவீண் அமெரிக்கா வந்ததில் இருந்து பேசிப் பழக்கம் தான் என்றாலும், அவன் நியூ யார்க் கிளையில் இருந்து மாற்றலாகி இந்தக் கிளைக்கு வந்த இன்றுதான் முதன்முறை நேரில் பார்க்கிறேன். என் அணியில் பணியாற்றும் ஒரே தமிழ்ப் பையன். வெறும் தொலைப்பேசி உரையாடல்கள் மூலமே ஒருவருக்கொருவர் போதுமான அளவுக்கு ஒரு புரிதலுக்குள் வந்திருந்த வகையில் நல்ல நட்பொன்று உருப்பெற்றிருந்தது எங்களுக்குள். அதன் காரணமாக நாங்கள் இருவரும் இங்கே  அறையை பகிர்ந்துக் கொள்வதென்று முன்னமே முடிவாகி இருந்தது. விமான நிலையத்தில் இருந்து நேரே அலுவலகம் வந்திருந்த அவனை, இப்போதுதான் அவன் இனிமேல் என்னோடு தங்கவிருக்கும் என் அறைநோக்கி அழைத்துச் செல்ல இருக்கிறேன். வாகன நிறுத்துமிடத்தில் எனது மகிழுந்துக்கு அருகில் வந்ததும் சாவியை அழுத்தி பின்னால் உடமைப் பெட்டியை திறந்து அவனது பொருட்களை ஏற்றிவைக்க சைகை செய்தபடி அழைப்பை தொடர்ந்து கொண்டிருந்தேன். பொருட்களை உள்வைத்துவிட்டு பெட்டியை மூடிய அவன், வண்டியை சுற்றுமுற்றி வந்து புருவத்தை உயர்த்தி வண்டியையே ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

வாங்கி ஆறு மாதமே ஆன புத்தம்புதிய நீலநிற ஃபோர்ட் மஸ்டாங் என்னுடையது. உள்ளே இரண்டே இரண்டு இருக்கைகள் மட்டுமே கொண்ட, அதிக இயந்திர திறன் வாய்த்த பந்தய ரக மகிழுந்து. பக்கத்துக்கு ஒன்றென இரண்டு கதவுகளும், முன்னால் நீண்ட முகப்பு மூடியும், மற்ற மகிழுந்துக்களை விட குறைவான உயரமும் கொண்டு பார்ப்பவர் கண்கவர் வகையில் வடிவமைக்கப்பட்ட வண்டி இது. ஃபெர்ராரி, லாம்போர்கினி போன்ற மிக உயர்ரக பந்தய வாகனங்கள் கடந்து, என்னைப்போன்ற ஒரு சாதாரண மாதச் சம்பளக்காரனும் வாங்கக்கூடிய வண்டி இது இந்த ஊரில். வாங்கும் திறன், வண்டியின் இயந்திரத் திறன் என இரண்டும் ஒருங்கே பெற்ற வகையில், உலகில் வண்டி ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்ட நபர்கள் பலரின் கனவு வரப்பிரசாதம் இந்த வண்டி. இந்த ஊர் சாலையில் மிகச் சாதாரணமாக காணப்படும் வாகனம்தான் இது என்றாலும், நிச்சயம் இந்த வண்டி அவனுக்கு அர்ச்சர்யமானதாக இருந்திருக்காது. வண்டியை சுற்றி நான் செய்திருந்த வேலைப்பாடுகளே அவனுக்கு அப்படியொரு பிரமிப்பை தந்திருக்கும். 

பின்னால் இருந்த வாகன இலக்கத்தகடைப் பார்த்த அவன், அதில் ‘TAMIL’ என்று குறிப்பிட்டு இருந்த வண்டியின் அடையாள எண்ணை கவனித்திருக்க வேண்டும். இந்த ஊரில் ஐந்து முதல் ஏழு இலக்கம் கொண்ட ஆங்கில எழுத்துக்களில், யாரும் பெற்றிடாத ஏதோவொரு பெயரில் வாகனக் குறியீட்டு எண் வாங்க முடியும் என்பது அவன் அறிந்திருந்தாலும் அதில் ‘தமிழ்’ என்று பார்த்தது அவனுக்கு முதல் வியப்பாய் இருந்திருக்கும். மேலும் வண்டியை சுற்றிவந்த அவன், வண்டியின் வலதுபுறக் கதவில் பெரிய அளவில் சாய்க்கோண வடிவில் ஒரு ‘த’வும், இடதுபுறக் கதவில் அதேபோல் ‘மி’யும், முன்பக்க முகப்பு மூடியில் ஒரு பெரிய ‘ழ்’ழும் ஒட்டப்பட்டு இருப்பது நிச்சயம் ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும். நீல வண்ண வாகனத்திற்கு எடுப்பாகச் சாம்பல் நிறத்தில், எழுத்துக்கள் சற்று வெட்டப்பட்ட நிலையில் ஒட்டப்பட்டிருந்தது வண்டியின் அழகுக்கு மேலும் மெருகேற்றுவதாய் அமைத்துள்ளதென இதற்குமுன் பலரும்கூட கூறியுள்ளனர்.

நான் என் அழைப்பை துண்டித்துவிட்டு “போலாமா?” என்று கேட்டுக்கொண்டே வண்டிக்குள் ஏறினேன். ‘த’ பக்க கதவு வழியாக அவனும், ‘மி’ பக்க கதவு வழியாக நானும் ஏறி உள்ளே அமர்ந்தோம். பயணியர் இருக்கையில் வந்தமர்ந்த அவன் முன்பக்கக் கண்ணாடியின் நடுநாயகமாய் ஒட்டியிருந்த ‘தமிழே துணை’ என்ற வாசகத்தை உள்ளிருந்தவாறே கவனித்திருக்க வேண்டும். சற்றும் தாமதிக்காமல்,

“யார்றா அது தமிழ்”, என்று ஆரம்பித்தான்.

இந்த வடிவமைப்பை இதற்குமுன் கண்ட யாரும் இப்படி கேட்டதேயில்லை. இப்படியொரு கேள்வியை சற்றும் எதிர்க்கபார்க்காதால் நானும் அவன் கேள்வியில் சற்று திகைப்படைந்தேன் என்பதே உண்மை. இருந்தாலும் லேசாய் சிரித்து மழுப்பியபடியே,

“ஏன்.. தமிழ் மொழி மேல உள்ள ஆர்வமா தெரியலையா உனக்கு”, என்று கேட்டுக்கொண்டே வண்டியைப் பின்னோக்கி நகர்த்தி, பின்னர் முதல் கியருக்கு மாற்றி வண்டியை முன்னால் நகர்த்திக் கொண்டிருந்தேன்.

“டேய் சும்மா சமாளிக்காத, உன் தமிழ் ஆர்வத்த பத்தி எனக்குத் தெரியாதா. பெருஞ்சித்திரனார்’னு பேப்பர்ல எழுதச் சொன்னா உனக்கு அதுல எவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்னு எனக்கு தெரியும். இதுல உனக்குத் தமிழ் ஆர்வமா?”

வண்டி அந்த சிறிய சாலை சாலையின் சமிக்ஞை விளக்கைக் கடந்து ஷெல்டன் சாலையில் திரும்பிக்கொண்டிருந்ததால், அவன் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத அந்த இடைவெளியை அவனே மீண்டும் நிரப்பினான்.

“இங்க ஸ்டிக்கர் ஷாப்ல தமிழ் ஃபாண்ட் எல்லாம் கெடச்சிருக்காதே. ரொம்ப செலவு வேற ஆகியிருக்குமே இவ்ளோ ஸ்டிக்கருக்கும்”

“ஆல்ஃபா கிராஃபிக்ஸ் போயி கிட்டவே இருந்து ஃபாண்ட் டவுன்லோட் பண்ணசொல்லி எப்படி எல்லாம் டிசைன் வேணும்னு சொல்க்ச் செஞ்சது. என்ன செலவு கொஞ்சம் கூடதான். அதனால என்ன வண்டி நல்லா இருக்கா அவ்ளோதான்”

“வண்டி நல்லாத்தான் இருக்கு. அதனாலதான் கேக்குறேன், இவ்ளோ மெனக்கெட அவசியம் ஏதோ இருக்கணுமே’ன்னு”, என்று சொல்லிக்கொண்டே எதிரில் வந்த மெக் டொனால்ட் துரித உணவகக் கிளையை பார்த்து அவசரமாய்,

“டேய்.. அப்படியே அந்த மெக்-டி’யோட டிரைவ் த்ரூ போ, ஹாட்டா ரெண்டு கேரமல் மோக்கா வாங்கிட்டு போவோம்” என்றதும் வண்டியை கடைக்குள் விட்டேன். வண்டியில் இருந்தவாறே வரிசையில் காத்திருந்தபோது,

“நீ இன்னும் தமிழ் யாருன்னே சொல்லல. ஒழுங்கா ஆர்டர் சொல்லி முடிச்சிட்டு கதைய ஆரம்பி”, என்று உத்தரவிடும் தொனியில் அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனது கைபேசி ரீங்காரமிட்டது..

அழைப்பு நியூ யார்க்கில் இருக்கும் அவன் காதலி சோனாலியிடமிருந்து என்பதை அவன் கைபேசி தொடுதிரையை என்னிடம் காட்டி கண்ணடித்துவிட்டு அழைப்பை ஏற்கும்போது கவனித்தேன். அவனையும் சோனாலியையும் பற்றியும், அவர்களுக்கு இடையேயான அரசல்புரசலான உறவு பற்றியும், எங்கள் அணியில் உள்ள எல்லோருக்கும் முன்பே தெரியும். எங்கள் அணியின் அதே நியூ யார்க் கிளையில் ஓராண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஹிந்திக்கார பெண் அவள். இவனுக்கும் ஹிந்தி கொஞ்சம் சரளமாக பேச வரும் என்பதால் அந்தப் பெண்ணிடம் ஹிந்தியிலேயே  ஏதோ குழைந்துகொண்டு வந்தான். எனக்கு சுத்தமாக ஹிந்தி தெரியாது என்ற கூடுதல் தைரியம் வேறு அவனுக்கு. வாங்கிய அவனது குளம்பியை அவன் கையில் திணித்துவிட்டு வண்டியை அங்கிருந்து கிளப்பினேன்.

என் வண்டியை முதல் நொடி பார்த்த அவன், எல்லோரும்போல் ‘தமிழ் மேல் அவ்வளவு ஆர்வமா’ என்று கேட்காமல் ‘யார்றா அது தமிழ்’, என்று கேட்டது நினைவுக்கு வந்தது. அவன் நினைத்தது போல் ‘தமிழ்’ ஒரு நபர்தான். நிச்சயம் அது ஒரு பெண் என்றே யோசித்திருப்பான் இவன். ஆனால் அந்த ‘தமிழ்’ எனக்கு எல்லாமுமான எங்கள் பக்கத்துக்கு வீட்டு அண்ணன் ‘டாக்சி டிரைவர் தமிழ்ச்செல்வன்’

ஒருகையில் இயக்காழிச் சக்கரத்தை பற்றிக்கொண்டு, ஒருகையில் சூடான குளம்பியை பருகியபடி வண்டி ஓட்டிக்கொண்டே தமிழ் அண்ணனைப்பற்றி நினைக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி நினைக்க எவ்வளவோ சுவையான நிகழ்வுகள் இருந்தாலும், அமெரிக்கா கிளம்பிய அந்த நாளில் என்னை விமான நிலையம் இறக்கிவிட வந்த அந்த கடைசிப் பயணத்தைப் பற்றி நினைக்கத் தொடங்கினேன். அன்றைய தினத்தில் சில அறிய தகவல்களும், நிறைய கிண்டல் பேச்சுக்களுமாக தொடர்ந்தது எங்களின் அப்போதைய பயணம். பயணத்தின் ஊடே இன்னொரு பயணத்திற்கு பயணப்பட்டேன்.

“உம்.. எப்படியும் அமெரிக்கா போய் ஒரு சூப்பர் காரா வாங்கிடுவ..”, இது தமிழ் அண்ணன்.

“அதுதான்ணா பயமா இருக்கு. அங்கபோய் எப்படி கார் எடுத்து ஓட்டுவானோன்னு”

“ஒன்னு சொல்லவா.. நீதான் கொஞ்சம் மூடநம்பிக்கையெல்லாம் நம்புவல்ல. என்னதான் புது காராவே இருந்தாலும் இங்க நம்மூர்ல எடதுகால வச்சுதான் உள்ள ஏறணும். ஆனா அங்க.. மொதல்ல வலது கால உள்ள வச்சுதான் ஏறணும். எல்லாம் நல்லா போகும் போ”

கேட்க கொஞ்சம் நகைப்பாக தோன்றினாலும் அதுதான் நிதர்சனமும் கூட என்றெண்ணிக்கொண்டே,

“நான் அத சொல்லலண்ணா. இங்க ரைட் ஹாண்ட் டிரைவ் நல்லா பழகிட்டேன், அங்க போயி மொத தடவையா லெஃப்ட் ஹாண்ட் டிரைவ் ஓட்டப் போறேன். எப்படி இருக்குமோன்னு பயமா இருக்குண்ணா”

“அதெல்லாம் சாதாரணாம்டா. ஒன்னு மட்டும் நெனச்சிக்கோ. லெஃப்ட் ஹாண்ட் ட்ரைவோ ரைட் ஹாண்ட் ட்ரைவோ, டிரைவர் நாம ரோட்டோட சென்டர் லைன் பக்கத்துல இருப்போம். அதுக்கேத்த மாதிரிதான் சைடு எடுத்து போவோம். டிரைவர் சீட்டு, சென்டர் லைன், அத மட்டும் ஞாபகம் வச்சிக்கிட்ட போதும். அப்பறம் உன் ட்ரிவிங் தெறமைக்கு ரெண்டு மூணு நாளுல செட் ஆயிடும்”

இப்படித்தான் வண்டி பற்றிய எதையும் இலகுவாக்கி புரியும்படி தந்துவிடுவார் இவர். அதனாலேயே அமெரிக்கா வந்ததும் என்ன வாகனம் வாங்கலாம் என்பது குறித்தும் இவரிடமே கேட்கத் தோன்றியது அன்று. அதிலும் தானியங்கி வாகனம் வாங்குவதா, கையாளு இயந்திரமுறை வாகனம் வாங்குவதா என்ற பெருங்குழப்பம் வேறு.. எதற்கும் இவரிடமே ஒரு கருத்து கேட்டு வைப்போம் என்றொரு எண்ணத்தில், 

“அமெரிக்கால ஆட்டோமேட்டிக் வண்டிதான அதிகமாம். என்ன வண்டி வாங்கலாம்ண்ணா. ஆட்டோமேடிக்கா? மேனுவலா?”

“அங்கெல்லாம் நூத்துக்கு தொன்னுத்தியேழு வண்டி ஆட்டோமேட்டிக் தானாம். ஆனா இங்க நூத்துக்கு பதினஞ்சு வண்டி வரைதான் ஆட்டோமேட்டிக். அதுவும் பெரும்பாலும் அமெரிக்கா துபாய்ல இருந்து வர்றவங்க இங்க வந்து வாங்குறது. உனக்குதான் மேனுவல் நல்லா ஓட்ட வருமே. போயி உனக்கு எது பிடிச்சிருக்கோ அத வாங்கு”

பேசிக்கொண்டே பரணூர் சுங்கச்சாடியை கடக்கும்பொழுது சாலையின் நடுவில் இரண்டு கைகளையும் நீட்டியபடி ஒரு போக்குவரத்துக் காவலர் வண்டிகளை ஓரங்கட்டிக் கொண்டிருந்தார். தமிழ் அண்ணனும் வண்டியை சாலையோரம் ஒதுக்கி நிறுத்தி வண்டியை விட்டு இறங்கினார். வண்டிக்கு அருகே வந்த காவலர்,

“வண்டி எங்க போகுது?”

“ஏர்போர்ட் போறேன் சார்”

“குடிச்சிருக்கியா? ஊது பாக்கலாம்”

“இல்ல சார். சவாரி வந்துக்கிட்டு இருக்கேன் சார்”, என்று சொல்லி இரண்டு முறை ஊதவும் செய்தார். சொந்த வேளையாக வந்தாலும் ஓட்டுநர்கள் காவலரிடம் எப்போதும் சொல்வது சவாரிதான். குனிந்து வண்டியின் உள்ளே ஒருமுறை நோட்டமிட்ட காவலர்,

“சரி சரி கிளம்பலாம் போ”, என்று கையசைத்துவிட்டு பின்னால் வந்த அடுத்த வண்டியை நோக்கி நகர்ந்தார்.

உள்ளே வந்தமர்ந்து வண்டியை கிளப்பி ஜன்னலை உயர்த்திக்கொண்டே அண்ணன் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

“அமெரிக்கால எல்லாம் இனி இந்தமாதிரி போலீஸ்காரங்கள பாக்கமாட்ட நீ. உன் வண்டிய நிறுத்தினா கூட உன்கிட்ட வந்து ரொம்ப மரியாதையா பேசுவாங்கலாம். நீயும் வண்டியில உக்காந்தபடியே பேசலாமாம் அங்கெல்லாம்”, என்று அவர் அன்று சொன்னது இங்கு வந்த பிறகே உண்மையென புரிந்தது. சொல்லிவிட்டு பேச்சை மேலும் அவரே தொடர்ந்தார்,

“அங்கெல்லாம் போலீஸ் கார் உன் காருக்கு பின்னால வந்து லைட் போட்டு காமிச்சா நீ உன் வண்டிய ரோட்ல ஓரமா நிறுத்தி ஜன்னல இறக்கிட்டு ரெண்டு கையையும் ஸ்டேரிங்ல வச்சு சீட்லயே உட்காந்து இருக்கணுமாம். அவன் உன் வண்டிகிட்ட வந்து உன் டைல் லேம்ப தொட்டுட்டு, பின்னாடி கதவுக்கிட்ட நின்னு தலைய மட்டும் நீட்டி உள்ள எட்டி பார்த்துட்டு நீ சரியான பொசிசன்ல உட்கார்ந்து இருந்த மட்டும்தான் உன் கிட்ட வந்து பேசுவாங்களாம்”

அன்று அவை கேட்க வினோதமாக இருந்தாலும், அவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்றெண்ணி, 

“சும்மா நீங்க பாட்டுக்கும் ஏதாவது அடிச்சி விடாதீங்கண்ணா. நான் அங்க போயி இதெல்லாம் பொய்ன்னா போன் போட்டு கலாய்ச்சிடுவேன்”, என்றேன் நக்கலாக.

“டேய்.. நீயெல்லாம் உங்க ஆபீஸ்ல யாரவது அமெரிக்கால இருந்து வந்தா அங்க போய் எங்க சுத்திபாக்கலாம், என்ன சாப்பிடலாம், என்ன வாங்கலாம்னு பேசுவ. நான் அப்படி யாரையாவது பாத்தா அங்க இருக்குற வண்டிகள பத்தி, ரோடு பத்தி, ட்ராபிக் போலீஸ் பத்திதான் பேசுவேன். போன மாசம் வந்தான்ல நம்ம பிரான்சிஸ் வாத்தியார் மவன், அவன ஏர்போர்ட் பிக்கப் பண்ணி வரும்போது பேசுனதுதான் இதெல்லாம்.”

“சரி, எதுக்கு போலீஸ் காரங்க அங்க டெயில் லேம்ப தொட்டுட்டு அப்புறம் கிட்ட வருவார்களாம்?”

“அது ரொம்பநாள் பழக்கமாம் டா. காலர் கேமரா, டேஷ் கேம்லாம் இல்லாத காலத்துல எங்கையாவது ஆள் இல்லாத ரோட்ல வண்டிய நிறுத்தி, வண்டியில வந்தவன் கேஸ் வாங்கிக்காம போலீஸ்காரர தள்ளிவிட்டு போயிட்டு, நான் அப்படி ஒரு போலீஸ்காரர வழியில பாக்கவே இல்லனு சொல்லிடான்னா. அதுக்காக தான் புடிச்ச வண்டியில கைரேக பதிய வைக்குற பழக்கமாம் போலீஸ்காரங்களுக்கு. அத இன்னும் தொடருறாங்களாம்”

“அப்போ பின்னாடி கதவுகிட்ட நின்னு எட்டிப் பார்த்துட்டு அப்புறம் கிட்ட வர்றது?”

“உள்ள இருக்கிறவன் கையில துப்பாக்கி ஏதும் வச்சிருந்து டப்புனு சுட்டுட்டா? அதான் அவங்க பாதுகாப்புக்கு உள்ள எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துகிட்டு அப்புறம் கிட்ட வர்றாங்களாம்”, என்று சொல்லி வண்டி குலுங்க சிரித்தார்.

தன் வாழ்க்கையில் இரண்டற கலந்த வண்டிகளை பற்றிய மேலும் சுவாரஸ்ய பேச்சுக்களினூடே விமான நிலையம் கொண்டுவந்து இறக்கிவிட்டார். பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கும் வேலையில்,

“சரிடா பாத்துப்போ. என்ஜாய் பண்ணு. அப்பப்போ போன் பண்ணு. கார் வாங்குனதும் போட்டோ அணுப்பு”

“சரிண்ணா. கார்லா பக்கத்துல ஒரு வெள்ளைக்காரியோட இருக்குற மாதிரி போட்டோ அனுப்புறேன், வீட்டுல காமிச்சிடாதீங்க”, என்று சொல்லி புன்னகைத்தேன்.

அவரும் சிரித்தபடி கையசைத்து வழியனுப்பியது இன்றும் நினைவில் நிழலாடியது. நினைவு அமெரிக்காவில் இறங்கவும், நான் மகிழுந்தை பிஸ்காட்டவே டவுன்ஷிப்பில் உள்ள எனது அடுக்குமாடியக வண்டி நிறுத்துமிடத்தில் நிறுத்தவும், பிரவீண் அவன் ஹிந்திகார காதலியிடம் பேசி முடிக்கவும், எல்லாம் சரியாக இருந்தது. கதவுகளை திறந்துகொண்டு இறங்கும் தருவாயில் பிரவீண் மீண்டும் விட்ட இடத்தில இருந்து தொடர்ந்தான்,

“சரி சொல்லு, யார் அது தமிழ்?”

“தமிழ் எங்க ஊர்ல பக்கத்துக்கு வீட்டு அண்ணன். எனக்கு எல்லாமும் அவர்தான். நான் படிக்குறதுக்கு, வேலைக்கு சேர்றதுக்கு, உலக விஷயம் கொஞ்சம் தெரிஞ்சுக்குறதுக்கு, முக்கியமா அமெரிக்கா வந்து இந்தமாதிரி ஒரு ஸ்போர்ட்ஸ் டைப் மேனுவல் கார் ஒட்டுறதுக்கு எல்லாத்துக்கும் அவர்தான் காரணம். சிம்பிளா சொல்லனும்னா, என்னோட ஒரு ரோல் மாடல்”, என்றதும் அவன் அந்த பதிலில் சுத்தமும் திருப்தி அடையாதவனாய், 

“அதுக்கு?”, என்றான் அலட்சியமாக.

“அதுக்கு ஒன்னும் இல்ல. இந்த கார வாங்கிட்டு ‘வலது கால’ உள்ள வச்சி ஏறி உட்காந்து கிளம்புனதும் என் வீட்ல இருந்து போன். தமிழ் அண்ணன் திடீர்னு ஹார்ட் அட்டாக்ல எறந்துட்டார்னு. என்னவோ அன்னைக்கு தோணுச்சு, எனக்கு எல்லாமுமா இருந்த தமிழ் அண்ணன் இப்போ என் கார் வடிவுல என் கூடவே இருக்கார்னு. அதான் கார சுத்தி அவர் இருக்குற மாதிரி வச்சிக்கிட்டேன்”, என்று நான் மெல்லிய குரலில் கூறிமுடிக்க, அவன் சற்றும் தாமதிக்காமல் சத்தமாய் சிரித்தபடி,

“கத என்னமோ நல்லாதான் இருக்கு, ஆனா அடுத்ததடவ நம்புற மாதிரி ஏதாவது ட்ரை பண்ணு”, என்று சொல்லி பெட்டியை இறக்கிக்கொண்டிருந்தான்.

“நான் வர்ற வழியெல்லாம் தமிழோட பெருமைய பேசிக்கிட்டுதான் வந்தேன். நீ தான் ஹிந்தி மேல இருந்த மோகத்துல எதையும் காதுல வாங்க ரெடியா இல்ல”, என்று சொல்லிப் புன்னகைத்தேன். அவன் ஏதும் புரியாதவனாய் என் இடக்கரம் பற்றி இழுத்து,

“என்னது?”, என்றான்.

நான் திரும்பி வண்டியை பூட்டும் தோரணையில் சாவியின் பொத்தானை அழுத்த, பக்க விளக்குகளில் மிளிரலில் முன் கண்ணாடி மீதிருந்த ‘தமிழே துணை’ ஒரு நட்சத்திரம் போல மின்னிற்று.

***

2 Replies to “தமிழே துணை”

  1. வாழ்த்துக்கள் சக்திவேல் கொளஞ்சிநாதன், அருமையான எழுத்து நடை. ரசித்தேன். தொடர்ந்து எழுதவும்.
    முடியும் போது இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.
    —————–
    “நான் வர்ற வழியெல்லாம் தமிழோட பெருமைய பேசிக்கிட்டுதான் வந்தேன். நீ தான் ஹிந்தி மேல இருந்த மோகத்துல எதையும் காதுல வாங்க ரெடியா இல்ல”, என்று சொல்லிப் புன்னகைத்தேன். அவன் ஏதும் புரியாதவனாய் என் இடக்கரம் பற்றி இழுத்து,
    —————–

  2. சக்திவேல்:
    அமெரிக்க இந்திய மகிழுந்துகள், ஓட்டும் முறை, அமெரிக்காவில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டால் செய்யக் கூடாதவை போன்றவற்றைக் கதையோடு இழைந்து வரும்படி அழகுதமிழில் எளிமையாக, ஆர்வமூட்டும் வகையில் விளக்கியுள்ளீர்கள்!

    “அமெரிக்கால எல்லாம் இனி இந்தமாதிரி போலீஸ்காரங்களப் பாக்கமாட்ட நீ. உன் வண்டிய நிறுத்தினாக் கூட உன்கிட்ட வந்து ரொம்ப மரியாதையாப் பேசுவாங்களாம். நீயும் வண்டியில உக்காந்தபடியே பேசலாமாம் அங்கெல்லாம்” – இதைப் படிக்கையில் நான் என் மகிழுந்தின் எண்குறித் தகடைப் புதுப்பிக்க மறந்ததற்காகப் பிடிபட்ட போது, நம் ஊர் வழக்கத்தில் காவல்துறை அதிகாரிக்கு மரியாதையளிக்கும் விதமாகக் கீழே இறங்க முயற்சித்த போது, அவர் என்னை வண்டிக்குள்ளேயே உட்காரச் சொல்லிக் கோபமாகக் கத்தியது நினைவுக்கு வந்தது. “நல்லதுக்கே காலமில்லை, என்ன ஊருடா இது” என்று அப்போது அலுத்துக் கொண்டேன்.

    “த”, “மி”, “ழ்” என்ற எழுத்துகளை ஒட்டிய விதத்தை அழகாக வர்ணித்திருக்கிறீர்கள், சாய்கோண வடிவில் ஒரு “த” என்பது போல்!

    இந்தியாவில் இடது காலையும், இங்கே வலது காலையும் வைத்து ஏற வேண்டும் – ஆஹா! நான் இதை நினைத்தே பார்த்ததில்லை. கரோனா காலத்தில் மகிழுந்து ஓட்டும் பழக்கம் விட்டுப் போனதால் இதன் உண்மைத் தன்மையை நிச்சயப்படுத்த எனக்குச் சற்று நேரம் எடுத்துக் கொண்டது!

    குளம்பி, இயக்காழிச் சக்கரம், கையாளு இயந்திரமுறை எனப் பல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்திய விதம் பாராட்டுகுரியது!

    – ராஜி ராமச்சந்திரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.