முனைவர் ப. சரவணன்

சிற்பிகளின் குடும்பங்கள் சோழ நாட்டைவிட்டுத் தப்பியோடி, தலைமறைவாகிப் பத்து நாள்கள் முடியப் போகின்றன. தப்பிவரும் வழியில் இதுவரை 68 சிற்பிகளும் அவர்களின் குடும்பத்தினரும் உயிரிழந்துவிட்டனர்.
‘இளவரசரின் காலாட்படை இனியும் நம்மைப் பின்தொடராது’ என்றுதான் ‘தலைமைச் சிற்பி’ சிவதட்சிராயர் நினைத்தார். உயிர்பிழைத்த சிற்பிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு சிவதட்சிராயர் முன்னே நடக்க, அவரைப் பின்தொடர்ந்து மற்றவர்கள் நடந்தனர். ஒரு யானைக் கூட்டம் போல அவர்கள் மெல்ல நடந்து கொண்டிருந்தனர்.
‘இன்னும் இரண்டு நாள் பயணத்தில் ‘இரட்டபாடி நாட்டு’க்குச் சென்று விடலாம். அதன் பின்னர் நாம் ஒருபோதும் இளவரசரின் படைகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை’ என்று அவருடன் வந்தவர்கள் அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர்களின் கணிப்பு தவறிவிட்டது.
அவர்கள் அனைவருக்கும் ஒன்று மட்டுமே லட்சியமாக இருந்தது. ‘சோழ மாமன்னர் உடையாரின் கனவுக் கற்றளியை உருவாக்கிய நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அதுபோன்றதொரு கற்றளியை யாருக்காகவும் உருவாக்கிவிடக் கூடாது. உயிரே போனாலும் சரி, இந்த லட்சியத்தை நிறைவேற்றியே தீரவேண்டும்’ இதுதான் அனைவரின் மனத்திலும் தீயெனச் சுடர்ந்து கொண்டிருந்தது.
ஒருவேளை இந்தச் செயலுக்காக அவர்கள் அனைவரும் மனஒற்றுமையோடு தற்கொலைசெய்து கொள்ளவும்கூட முனைப்புடன் இருந்தனர். ‘ஆனால், தப்பிவந்த அனைவரும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்’ என்பதே தலைமைச் சிற்பியின் விருப்பம். அதற்கு ஆழமான காரணமும் இருந்தது.
‘நாம் உயிருடன் இருந்தால்தான் இளவரசரின் கனவுக்கற்றளி வெறுங்கனவாகவே இருக்கும். வேறு எந்தச் சிற்பியைக் கொண்டு தன் கனவுக் கற்றளியை அவர் உருவாக்கினாலும் அது சோழ மாமன்னரின் கனவுக் கற்றளியைவிடத் தரத்தில் சற்றுத் தாழ்ந்ததாகத்தான் இருக்கும். அதனாலேயே இளவரசர் தன் வாழ்நாள் முழுவதுமே தன் தந்தையை விஞ்ச முடியாதவனாகவே இருப்பான். அதுவே, நம் உளித் திறமையின் மாபெரும் வெற்றி’ என்று திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருந்தார் தலைமைச் சிற்பி.
அந்த மாபெரும் வெற்றியைப் பெறுவதற்காகவே தலைமைச் சிற்பி சிவதட்சிராயாரோடு, இந்தப் பத்துநாட்களும் தங்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கிறார்கள் இவர்கள். இவர்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்காக ‘இடைக் காட்டு’க்குள் நுழைந்தார் சிவதட்சிராயர்.
வெகுதூரத்தில் புதர்களுக்கு இடையிலிருந்து ஓர் உருவம் இவர்களைக் கண்காணித்துக் கொண்டே பின்தொடர்ந்தது. அதை இவர்களுள் ஒருவரும் அறிந்திருக்கவில்லை.
பொழுது இறங்கத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்தினரோடு பெரிய மரத்தின் மீது ஏறிக் கொண்டனர். தங்களின் உடைமைகளையும் மரத்தின் கிளைகளில் கட்டித் தொங்கவிட்டனர்.
சிவதட்சிராயர் தன் பேரன் சிவக்கொழுந்தினை அழைத்தார். ‘எதற்கு இப்போது என் மகனை இவர் அழைக்கிறார்?’ என்று வியப்புடன் பார்த்தார் பர்வததேவி. இருந்தாலும், ‘தன் மாமனார் எதைச் செய்தாலும் அதற்குப் பின்னால் பெரியதொரு காரணம் இருக்கத்தான் செய்யும்’ என்பதை அறிந்திருந்ததால், காரணம் கேட்காமல் தன் மகனை அவரோடு அனுப்பினார் பர்வததேவி.
சிவதட்சிராயருக்கு அடுத்த நேரடிவாரிசு சிவக்கொழுந்துதான். ஏழாம் நாள் இளவரசரின் படைகளிடமிருந்து தப்பியோடி வரும்போதுதான் தன் மகன் சிற்பி லிங்கேஸ்வரனை இழந்தார் சிவதட்சிராயர். லிங்கேஸ்வரன் தான் இறப்பதற்கு முன் இரண்டு வீரர்களைத் தன் இடுப்பில் வைத்திருந்த சிற்றுளியால் குத்திக் கொன்றான். ‘லிங்கேஸ்வரன் சிறந்த சிற்பி மட்டுமல்ல சிறந்த வீரனும்கூட’ என்று தன்னுள் நினைத்து நினைத்துப் பெருமைகொண்டார் சிவதட்சிராயர்.
சிவதட்சிராயரின் குலத்தில் இப்போது எஞ்சியது சிவக்கொழுந்து மட்டுமே. சிவக்கொழுந்து தன் அருகில் வந்ததும், தன் மருமகளையும் தன் மனைவியையும் ஒரு மரத்தின் மீது அமர வைத்தார் சிவதட்சிராயர்.
பத்து வயதுடைய சிவக்கொழுந்தினை அழைத்துக்கொண்டு, அருகில் இருந்த நீரோடைக்குச் சென்றார் சிவதட்சிராயர். கைகளையும் முகத்தையும் கழுவினார். தன் பேரனையும் அவ்வாறே செய்யுமாறு கூறினார். அருகில் இருந்த பெரிய மரத்தைப் பார்த்தார். அது மருதமரம். அதன் அருகே இருவரும் சென்றனர்.
தன் மடியில் இருந்த சிவமணலை இந்த மரத்தடியில் ஒளித்து வைக்க நினைத்தார் சிவதட்சிராயர். பகல்முழுவதும் இடுப்பில் சுமந்த இந்தச் சிவமணலை மாலையில் ஏதாவது ஒரு மரத்தில் மறைத்து வைப்பதும் விடியலில் மீண்டும் அதை எடுத்துத் தன் இடுப்பில் சுமப்பதும் இவரின் வழக்கம்.
சிவதட்சிராயர் கடந்த ஒன்பது நாட்களாக மாலைநேரத்தில் இந்தச் சிவமணலை யாருக்கும் தெரியாமல் தானேதான் ஏதாவது ஒரு மரத்தில் ஒளித்து வைப்பார். ஆனால், இன்றுதான் இதை ஒளித்துவைக்கும் போது தன்னுடன் தன் பேரனையும் அழைத்து வந்துள்ளார்.
அதற்குக் காரணம் அவரின் மகன் லிங்கேஸ்வரன்தான். ‘தனக்கு அடுத்து லிங்கேஸ்வரன்தான் வாரிசு’ என்ற எண்ணத்தில் இருந்த அவருக்கு, அவனின் மரணம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. ‘இனி, தனக்கும் எந்த நேரத்திலும் மரணம் ஏற்பட்டுவிடும்’ என்று உணர்ந்தார் சிவதட்சிராயர். அதனால்தான் தன்னுடைய வழக்கத்தைத் தன் குலத்தின் இறுதி வாரிசான சிவக்கொழுந்திடம் கூறிவிட நினைத்தார்.
சிவதட்சிராயர் மருத மரத்தின் அடிமரத்தைத் தன் சிற்றுளியால் குடைந்தார். அதன் பட்டைகளையும் தாண்டி சிறிய பள்ளம் பறித்தார். ஈரமரத்துகள்கள் தெறித்து விழுந்தன. அந்தப் பள்ளத்தைக் கீழிருந்து மேல்நோக்கி உருவாக்கினார். மழைநீர் மரத்தின் வழியாக வடிந்தாலும் அது அந்தப் பள்ளத்துக்குள் நுழையாதவாறு இருந்தது.
“சிவக்கொழுந்து! பார்த்தியா?. இப்படித்தான் பள்ளம் குடைய வேண்டும். இப்படிப்பட்ட பள்ளத்தில் நாம் எதை வேண்டுமானாலும் மறைத்து வைக்கலாம். ஈரம் படாது” என்றார் சிவதட்சிராயர்.
சிவக்கொழுந்து ‘சரி’ என்பதுபோலத் தலையை ஆட்டிக்கொண்டே, “தாத்தா இது எதுக்கு? இப்ப இந்தப் பள்ளத்துல நாம எதை மறைச்சு வைக்கப் போறோம்?” என்று கேட்டான்.
“நம்ம குலச்சொத்தை மறைச்சு வைக்கப் போறோம். அதுதான் சிவமணல்” என்று கூறிவிட்டு, தன் இடுப்பு வேட்டியின் மடிப்பில் இருந்த மிகச் சிறிய துணியுருண்டையை எடுத்தார் சிவதட்சிராயர்.
அந்த உருண்டையைத் தன் பேரன் கையில் கொடுத்தார். அதைத் தொட்டு வணங்கினார். “சிவ சிவ, சிவ சிவ” என்று உச்சரித்தார். அவன் கையாலேயே அதை அந்தப் பள்ளத்துக்குள் வைக்குமாறு கூறினார். சிவக்கொழுந்து வைத்தான். பின்னர் இருவரும் அந்தப் பள்ளத்தைத் தொட்டு வணங்கினர். மீண்டும் “சிவ சிவ, சிவ சிவ” என்று உச்சரித்தார்.
“சிவக்கொழுந்து! பாரு, இதுதான் மருதமரம். அருகே நீரோடை. மரத்தின் அடிப்பகுதியில் பள்ளம். இதுதான் அடையாளம். யாருக்கு விதி எப்போது முடியும் என்று யாராலும் தெரிஞ்சுக்க முடியாது. அதை அந்தச் சிவனே அறிவார். ஒவ்வொரு நாளும் சூரிய மறைவுக்கு முன் இந்தச் சிறிய துணியுருண்டையைப் பாதுகாப்பா, இப்ப நான் செய்தேனே, அதுபோலவே செய்து இறக்கி வைக்கணும். விடிஞ்சதும் எடுத்து இடுப்புல சுமக்கணும். புரியுதா?” என்று கேட்டார் சிவதட்சிராயர்.
சிவக்கொழுந்து ‘சரி’ என்பது போலத் தலையை ஆட்டினான்.
“சிவக்கொழுந்து! இதை நான் எனக்குப் பிறகு உன்னோட தந்தைக்கிட்டத்தான் ஒப்படைக்க நினைச்சேன். அவன்தான் இப்ப வீரமரணம் அடைஞ்சுட்டானே! அதனால இதை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நான் உயிரோட இருக்குறவரை இதை நான் சுமக்குறேன். நான் சிவலோகம் போயிட்டா, அப்புறம் இதை நீதான் சுமக்கணும்” என்றார் சிவதட்சிராயர்.
சிவக்கொழுந்து அமைதியாக இருந்தான். “இதுக்குள்ல என்ன இருக்குதுன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார் சிவதட்சிராயர்.
“தெரியாது தாத்தா” என்றான் சிவக்கொழுந்து.
“இதுல மணல் இருக்குது. ஆத்து மணல்தானேன்னு நினைச்சுடாதேடா! இது சிவமணல். கனவுக்கற்றளியைக் கட்ட ஆரம்பிச்சது முதல் குடமுழுக்கு வரை தொடர்ந்து நாலுவருஷமா நம்ம தென்னாடுடைய சிவலிங்கத்தை மூடிப் பாதுகாத்தது ‘மணல்’தான். அதுல ஒரு கைப்பிடிதான் இந்த மணல். இதை நான் சோழ மாமன்னர் உடையாரோட பொற்கையால வாங்கினேன். இதுதான் நம்மளோட குலச்சொத்து. நமக்கு இருக்குற ஒரே சொத்து. திரும்பவும் நாம குடிசை கட்டி வாழறப்ப இந்தத் துணியுருண்டைய நம்மளோட திருவிளக்குமாடத்துல வைச்சுடலாம். அதுவரையும் இப்படி இடுப்புலதான் சுமக்கணும்” என்றார் சிவதட்சிராயர்.
இருவரும் மீண்டும் தங்களின் கூட்டத்தினரை நோக்கி நடந்து வந்தனர். இருளத் தொடங்கிவிட்டது. இவர்களைப் பின்தொடர்ந்து வந்த அந்த உருவம், இவர்கள் அனைவரும் மரங்களில் அமர்ந்து ஓய்வெடுப்பதைப் பார்த்தது. ‘இனி, இவர்கள் இங்கிருந்து விடியலில்தான் நகர்வார்கள்’ என்பதைத் தனக்குள் உறுதிப்படுத்திக் கொண்டு, புதர்களுக்குள் பதுங்கியபடியே ஓடி, மறைந்தது.
தாத்தாவும் பேரனும் ஒரு மரத்தில் ஏறி, பெரிய கிளையில் அமர்ந்தனர். யாருக்கும் பசிக்கவில்லை. அவர்களுக்குப் பசிக்காது. அவர்களுக்குப் பசிக்கக் கூடாது. உயிரைக் காத்துக்கொள்வதே பெரிய வேலையாக இருப்பதால், யாருக்கும் பசி என்பதே தெரியவில்லை. எப்படியாவது இரட்டபாடி நாட்டுக்குச் சென்று, அங்குத் தஞ்சம் புகுந்து நிம்மதியாக வாழ வேண்டும்’ என்பதே எல்லோரின் விருப்பமாகவும் இலட்சியமாகவும் இருந்தது.
தாத்தாவின் மடியில் தலையை வைத்துக்கொண்டு, பக்கவாட்டிலிருந்த சிறிய கிளையில் தன் கால்களை நீட்டிக்கொண்டான் சிவக்கொழுந்து. தன் தாத்தாவின் முகத்தைப் பார்த்தான். இருளில் ஏதும் தெரியவில்லை. கூட்டுக்குத் திரும்பியிருந்த பறவைகள் தங்களின் குரலொலிகளைக் குறைத்துக்கொண்டன. அவை துயிலத் தொடங்கின. சிவக்கொழுந்துக்குத் தூக்கம் வரவில்லை.
“தாத்தா!” என்று அழைத்தான் சிவக்கொழுந்து.
“என்ன?” என்று கேட்டார் தாத்தா.
“தாத்தா! நம்மளை ஏன் அரச படைகள் துரத்தி வருது?” என்று கேட்டான் சிவக்கொழுந்து. சிவதட்சிராயர் அமைதியாக இருந்தார்.
“சொல்லுங்க தாத்தா? ஏன் துரத்தி வருது?” என்று கேட்டான் சிவக்கொழுந்து.
“சொல்றேன்” என்று கூறிவிட்டு, “எப்பவுமே இரண்டு பெரிய ஆளுமைகள் ஒன்ணா இருக்கக் கூடாது” என்றார் தாத்தா.
உடனே சிவக்கொழுந்து அவரை இடைமறித்து, “ஆளுமையின்னா என்ன?” என்று கேட்டான்.
“ஆளுமையின்னா, பெரிய சக்தி. வல்லமை. பெருங்கனவு உடையவர். தீராத வெறி. தணியாத திமிர். அழியாத ஆணவம். அடங்காத இறுமாப்பு. நம்ம சோழ மாமன்னர் தனிப்பெரிய ஆளுமை. அவரோட மகன் அவருக்கு இணையான அடுத்த பெரிய ஆளுமை. இரண்டும் அருகருகே இருந்தால், அது அந்த ரெண்டு பேருக்குமே நல்லதில்லைதான்” என்றார் தாத்தா.
“ஏன் நல்லதில்லை?” என்று கேட்டான் சிவக்கொழுந்து.
“ஒரு பெரிய ஆளுமை எப்பவுமே தன்னை உலகறியச் செய்ய ஒரு புது உத்தியைக் கையாளும். உடனே, அடுத்த பெரிய ஆளுமையும் ‘தன்னைத்தான் இந்த உலகம் பெரியவனாக ஏத்துக்கிட்டுக் கொண்டாட வேண்டும்ணு’ நினைக்கத் தொடங்கிடும். அங்கதான் பெரிய சிக்கலே தொடங்குது” என்றார்.
“என்ன சிக்கல்?” என்று கேட்டான் சிவக்கொழுந்து.
“ஒரு பெரிய விஷயம் செஞ்சு முடிச்ச அந்தப் பெரிய ஆளுமையைவிட விஞ்சி நிற்குறதுக்காக அடுத்த ஆளுமை அந்தப் பெரிய விஷயத்தை அழிச்சுட்டு வேறு ஒன்றை அதைவிடப் பெரியதாகச் செய்ய நினைக்கும். அல்லது அந்தப் பெரிய விஷயத்தை அழிக்காமலேயே அதைவிடப் பல மடங்கு பெரிசா செய்யத் தொடங்கும். அதனால இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் இடையே ‘நீயா? நானா?’ போட்டி ஆரம்பமாகும்” என்றார் தாத்தா.
“தாத்தா! இருக்குறத அழிக்குறது தப்புத்தான். ஆனால், அதைவிடப் பெரிசா ஒன்றை உருவாக்க நினைக்குறது தப்பா?” என்று கேட்டான் சிவக்கொழுந்து.
இந்தக் கேள்விக்குத் தாத்தாவால் பதில் கூற முடியவில்லை. ஆனாலும் தன்னுடைய மனநிலையையும் தன்னுடைய உறுதிப்பாட்டையும் தன் பேரனுக்குக் கூறினார்.
“சிவக்கொழுந்து! நாம யாரோட சேர்ந்து நிற்குறோமோ அவரோட வெற்றிக்கும் தோல்விக்கும் நாமதான் பொறுப்பேற்கணும். நானும் என்னைச் சேர்ந்தவங்களும் சோழ மாமன்னர் உடையாரோட கனவுக்கோவிலை உருவாக்கத் துணையா நின்றோம். வெற்றி பெற்றோம். ஆனால், உடையாரோட மகன் தன் காலத்துல அந்தக் கனவுக்கோவிலைவிடச் சிறப்பாக ஒன்றை உருவாக்க விரும்பினாரு. அதுக்கு எங்களையே பயன்படுத்த நினைச்சாரு. அதுதான் தவறு. அவரு வேற யாரையாவது வச்சு அதை நிறைவேற்றிக்கணும். இதுதான் என்னோட, நம்மோட கோரிக்கை. ஆனால், இளவரசர் அதிகாரத்தைப் பயன்படுத்தி நம்மைப் பணிய வைக்க நினைச்சாரு. நாம பணியலை. அப்புறமா படையை அனுப்பி நமக்குச் சிக்கல்களை ஏற்படுத்தினாரு. அதனாலத்தான் இப்ப நாம தப்பியோடிக்கிட்டு இருக்கோம். அவரு நம்மளைக் கொன்னாலும் சரிடா பேரா, நாம ஒருபோதும் சோழ மாமன்னர் உடையாரோட கனவுக்கோவிலுக்குப் போட்டியா, நம்ம கையில இருக்குற இந்தச் சிற்றுளியால ஒரு கற்துகளைக் கூடச் செதுக்கிடக் கூடாது. அதுக்குப் பதிலா அந்தச் சிற்றுளியாலேயே நம்ம நெஞ்சில குத்திக்கிட்டுத் தற்கொலை செஞ்சுக்கலாம்” என்றார் தாத்தா வீரத்துடன்.
தாத்தா வானத்தைப் பார்த்தபடியே படுத்திருந்தார். பேரன் தூங்கத் தொடங்கினான்.
ஒற்றன் கொடுத்த தகவலின்படி இளவரசரின் காலாட்படைத் தளபதி ஒரு திட்டத்தைத் தீட்டினார். அதன்படி ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவினர் வைக்கோல் பொதிகளையும் எண்ணெய்யையும் எடுத்துக்கொண்டு, அந்த இடைக் காட்டுக்குள் சென்றனர். அவர்களுக்கு அந்த ஒற்றன் வழிகாட்டினான்.
இடத்தை அடைந்ததும் அவன் சற்று தொலைவிலேயே நின்றுகொண்டு, “அதோ, அந்த மரவரிசைகள்ல மூணாவது மரத்துல இருந்து வரிசையா எட்டு மரங்கள்” என்று அடையாளம் காட்டினான். பின்னர் அவன் திரும்பிச் சென்றான்.
ஐவர் குழுவினர் ஓசையே இல்லாமல் அந்த மரங்களை நெருங்கினர். தாங்கள் சுமந்துவந்த வைக்கோல் பொதிகளை மரத்திற்கு இரண்டாக இறக்கி வைத்தனர். அவற்றின் மீது எண்ணெய்யை ஊற்றிவிட்டு, மீண்டும் ஓசையே இல்லாமல் நகர்ந்து, சற்றுத் தொலைவில் சென்று அமர்ந்து கொண்டனர்.
தாத்தாவும் தூங்கினார். அந்த மரங்களில் இருந்த பறவைகளும் மனிதர்களும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். பேரன் விழித்தான். அவனுக்குச் சிறுநீரைக் கழிக்க வேண்டும் போல இருந்தது. மெல்ல இறங்கினான். தாத்தா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்.
மரத்தை விட்டு இறங்கியதும் சிவக்கொழுந்தின் கால்கள் மண்ணில் படியவில்லை. தான் ஒரு பூமெத்தையில் கால்வைத்தது போலவே உணர்ந்தான். கால்களில் பிசுபிசுவென ஏதோ ஒட்டியது. இருளில் ஒன்றும் தெரியவில்லை. அவன் ஓடையை நோக்கி நடந்தான்.
அப்போது காலாட்படையினர் ஆயுதங்களுடன் ஓசையின்றி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தன. அவர்களைப் பார்த்ததும் ஐவர்குழுவினர் எழுந்து நின்றனர். அவர்கள் அந்தப் படைவீரர்களுக்கு மரங்களை அடையாளம் காட்டினர். படைவீரர்கள் ஓசையின்றி அந்த மரங்களுக்கு அருகில் சென்றனர்.
பேரன் சிறுநீரைக் கழித்தான். அப்போது அவனுக்கு முன்னால் இருந்த ஓடையில் தீயின் வெளிச்சம் படரத் தொடங்கியது. திரும்பிப் பார்த்தான். சில மரங்களின் அடிப்பகுதியில் தீப்பற்றி எரிவதைக் கண்டான். அந்தத் தீயொளியில் சில படைவீரர்களின் உருவத்தையும் பார்த்துவிட்டான். மரங்களில் அடைந்திருந்த பறவைகள் அனைத்தும் சிறகடித்து, கீச்சிட்டபடியே பறந்தன.
அடுத்த விநாடியே அங்கிருந்து ஓட முற்பட்டான் சிவக்கொழுந்து. ஆனால், சிவமணல் நினைவுக்கு வந்தது. விரைந்து அந்த மருதமரத்துக்கு வந்தான். தன் இரண்டு கைகளாலும் அந்த மரத்தின் அடிப்பகுதியைத் தடவி, தாத்தா தோண்டிய பள்ளத்தைத் தேடினான். அதனுள் இருந்த சிவமணலை எடுத்து, “சிவ சிவ, சிவ சிவ” என உச்சரித்துக்கொண்டே இருளுக்குள் வேகமாக நடந்து, ஓடையைத் தாண்டி, பின்னர் ஓடத் தொடங்கினான்.
தங்களின் உடலில் வெப்பக் காற்றுப்படுவதையும் மரத்திற்குக் கீழே தீப்பற்றி எரிவதை உணர்ந்த மக்கள் கூக்குரல் எழுப்பினர். மரத்திலிருந்து குதித்தனர். தரைக்கு வந்த மக்களைப் படைவீரர்கள் வெட்டிக் கொன்றனர். சிலர் தரையில் குதிக்காமல் மரக்கிளைகளிலேயே தொங்கினர். அவர்களைப் படைவீரர்கள் தங்களின் வேல்கம்பினால் குத்தி, கீழே தள்ளினர். சில படைவீரர்களுள் சிலர் கீழே விழுந்தவர்களைத் தங்களின் வாளால் வெட்டி, கொன்றனர்.
வெட்டுப்படும் மக்களின் அலறல் சப்தம்கேட்டுத் திடுக்கிட்டு விழித்தார் சிவதட்சிராயர். அங்கு நிகழ்வதை சில விநாடிகள் பார்த்தார். மரத்தின் அடிப்பகுதி மட்டும் தீப்பற்றி எரிவதைப் பார்த்தார். கீழே விழுந்த மக்களைப் படைவீரர்கள் வெட்டுவதைக் கண்டார்.
உடனே, அவர் அந்த மரத்தின் உச்சிக்கிளையை நோக்கி ஊர்ந்து ஊர்ந்து ஏறினார். தீப்பொறிகளின் வெளிச்சம் அந்தப் பகுதி முழுக்க மிகுதியாக இருந்தாலும் கிளைகளும் இலைகளும் அடர்ந்த அந்த மரத்தின் உச்சியை நோக்கி இவர் ஏறுவதைப் படைவீரர்களால் காணமுடியவில்லை.
‘மரங்களில் தங்கியிருந்த அனைவரையும் கொன்றுவிட்டோம்’ என்ற மனநிறைவில் படைவீரர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் யாரையும் கைதுசெய்து அழைத்துச் செல்லவில்லை என்பதை மரத்திருந்தபடியே கவனித்தார் சிவதட்சிராயர். அது அவருக்குப் பெரிய மனநிறைவாக இருந்தது. மரத்தின் உச்சியிலிருந்து மெல்ல இறங்கினார் சிவதட்சிராயர்.
அடி மரத்தை ஒட்டியிருந்த கிளைகளில் வெப்பம் மிகுந்திருந்தது. அதனால், அவர் அங்கிருந்தபடியே கீழே குதித்தார். மரங்களுக்கு அருகில் சிதறிக்கிடந்த உடல்களை எண்ணினார். மூன்று பேர் குறைவாக இருந்தனர். அதில் ஓர் உடல் தன் பேரன் போல இருப்பதைக் கண்டார். ஆனால், அவரால் ‘அது தன் பேரன்தான்’ என்று சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
மீண்டும் உடல்களைப் பார்வையிட்டார். ‘அங்குக் கிடந்த உடல்களில் தம்பி ஈஸ்வரகோடியின் உடலும் தன் மருமகளின் உடலும் இல்லையே’ என்று சிந்தித்தார். ‘அப்படியென்றால், தம்பி சிவக்கொழுந்தையும் பர்வததேவியையும் காப்பாற்றி, தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கலாம். சிவக்கொழுந்துக்குப் பதிலாக வேறு ஒரு சிறுவனைக் காப்பாற்றியும் அழைத்துச் சென்றிருக்கலாம். அல்லது மூவரும் தனித்தனியாகவும் தப்பிச் சென்றிருக்கலாம்’ என்றும் அவரின் மனத்தில் சிந்தனைகள் ஓடின.
வேகமாக மருதமரத்திற்கு அருகில் சென்றார். அதனடியில் தான் தோண்டிய பள்ளத்திற்குள் விரல்களை நுழைத்துச் சிவமணலை எடுக்க முயன்றார். அது அங்கு இல்லை. உடனே அவர் ‘சிவக்கொழுந்து உயிருடன்தான் இருக்கிறான்’ என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
மகிழ்ச்சியோடு ஓடையைத் தாண்டி, வேகமாக ஓடத் தொடங்கினார். அவருக்குப் பின்னால், அடிமரம் மட்டும் கருகிய நிலையில் எட்டு மரங்கள் பழைய கற்றளியின் முதன்மைத் தூண்கள்போல நின்றிருந்தன.
***
Nice story sir keep going sir……
ஐயா! வணக்கம். தாங்கள் மற்றொரு களத்திலும் சிறுகதை எழுதியுள்ளீர்கள் .மனமார்ந்த வாழ்த்துகள். வரலாற்று சிறுகதை எழுதியமைக்குப் பாராட்டுகள். பெயரிட்ட முறையையும் அருமை. இந்தக் கதையை வாசிக்கும் போது இளையவனின் கதாப்பாத்திரமாக என்னை எண்ண வைத்து விட்டீர்கள். வாசகர்கள் கதைக்குள் பயணிக்க வேண்டுமே தவிர அவர்களைப் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லக் கூடாது. தாங்கள் எவ்விடத்திலும் வாசகர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும். அதற்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இணையத்தின் வழி தாங்கள் பல புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர் என்பதையும் அறிந்து கொண்டேன். தங்களுடைய வாசகி என்பதில் பெருமை அடைகிறேன்.
An entirely different story Sir… It’s really very interesting to read… whenever I read your story, I learn lot of life lessons Sir…
எம். சுகீதா அவர்களுக்கு, வணக்கம். தங்களைப் போன்ற உற்சாகமளிக்கும் வாசகர்களால்தான் என்னால் தொடர்ந்து எழுத இயலுகிறது. மிக்க நன்றி.
– எழுத்தாளர் முனைவர் ப். சரவணன், மதுரை.
சுஷ்மிதா அவர்களுக்கு, வணக்கம்.
வாழ்க்கையிலிருந்தே கதைக்கருக்களை நான் தேர்ந்தெடுத்து எழுதுவதால்தான் அவை பிறருக்குப் பயனளிக்கும் வாழ்க்கைப் பாடமாகின்றன. நான் ஒவ்வொரு கதையையும் புதிய கதைக்களத்தோடு உருவாக்குவதால்தான் ‘தொடர்ந்து எழுத வேண்டும்’ என்ற எண்ணம் எனக்குள் நிறைந்தபடியே இருக்கிறது. மிக்க நன்றி.
– எழுத்தாளர் முனைவர் ப். சரவணன், மதுரை.
Thank you sir… Waiting to learn more👍😀
பிரியா நடராஜன் அவர்களுக்கு, வணக்கம். இதனை ‘வரலாற்றுச் சிறுகதை’ என்று கூறவியலாது. ‘புனைவில் எழுதப்படும் வரலாறு’ என்று கூறலாம். புனைவில் அறிவியலை ஓர் ஊடகத்தின் அடிப்படையில் உருவாக்கி எதிர்காலத்தில் இருத்த இயலும் எனில், புனைவில் வரலாற்றையும் எழுதி இறந்தகாலத்தில் இருத்திவிட இயலும்தானே! தங்களின் விரிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
– எழுத்தாளர் முனைவர் ப். சரவணன், மதுரை.
Very nice story …..with lot of informations
அருமை.நண்பரே. நடை விறுவிறுப்பு
மன்னிக்கவும் ஐயா! தாங்கள் எவ்விடத்திலும் வாசகர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லவில்லை என்பதற்குப் பதிலாக கட்டாயப்படுத்த வேண்டும் என்று தவறுதலாகத் தட்டச்சு செய்து விட்டேன்.
மிக அருமை.நடை விறுவிறுப்பு செம. வாழ்த்துகள் நண்பரே.
‘கற்றளி’ சிறுகதை சிறப்பாக இருந்தது. கதையின் முடிவு மிக அருமை. பேரரசுகள் எப்போதுமே இப்படித்தான் நடந்துகொள்ளும். அவற்றை எதிர்த்து நிற்கும் எளியவர்களின் நிலையும் பொதுவாக இப்படித்தானே ஆகிவிடுகிறது!
நந்தினி விக்னேஷ் அவர்களுக்கு வணக்கம். புனைவெழுத்தில் தகவல்கள் வலையில் அகப்பட்ட மீன்களைப் போலச் சிக்கிக் கிடக்கும். தங்களைப் போன்ற சிறந்த வாசகர்கள் அந்த வலையிலிருந்து தமக்குத் தேவையான தகவல்மீன்களை மட்டும் பக்குவமாகப் பிரித்தெடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், சிலரோ அவசரப்பட்டு வலையை அறுத்து விடுகிறார்கள். நன்றி.
– எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.
பவானி அவர்களுக்கு வணக்கம்.
பொதுவாகக் கதையை வாசிப்பவர்களுள் 90 விழுக்காட்டினர் பின்னூட்டம் எழுதுவதே இல்லை. ‘ஒரு கதைக்கு ஒரு வாசகர் அளிக்கும் ஒரு பின்னூட்டம் அந்த எழுத்தாளரை இன்னும் பல கதைகளை எழுத செய்யும்’ என்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள். எதிர்மறையான பின்னூட்டங்கள்கூட எழுத்தாளரை ஊக்கப்படுத்தத்தான் செய்யும். தங்களின் பின்னூட்டத்தைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி.
– எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.
ஆளுமைகளைப் பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் போட்டிகள் பற்றியும் அழகாக எடுத்துச் சொல்லும் தாத்தா தெளிவான உரையாடல். சிறுவனின் கேள்விக்கு நம்மில் பலரால் பதில் சொல்ல முடியாது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக் கொண்டிருப்பவர்களின் மன ஓட்டத்தை மிகச் சரியாக பதிவு செய்துள்ளீர்கள். இறுதிக் காட்சிகள் செம சுவாரஸ்யம்…… தொடர்ந்து எங்களை உங்கள் எழுத்தோடு பயணம் செய்ய வையுங்கள் ஐயா💐💐💐💐
அனுசுயா தேவி அவர்களுக்கு வணக்கம். பேரரசுகள் மட்டுமல்ல அதிகார மையங்களின் பொதுப் பண்பே எளியவர்களைத் தமக்கு ஏற்ப வளைத்துக் கொள்வதுதான். அவ்வாறு வளைய மறுப்போரை ஒடித்து விடுவார்கள். நன்றி.
– எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.
வினு மணிகண்டன் அவர்களுக்கு வணக்கம். போட்டி இன்றி எந்த ஓர் ஆளுமையும் உருவெடுக்க இயலாது. ஓர் ஆளுமை தன்னைக் கூர் தீட்டிக்கொள்ள அதற்கு இணையான அல்லது அதனைவிட மேலான ஓர் ஆளுமை தேவை. ஆனால், அவற்றுக்கிடையிலான போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். விதிவசமாகப்பெரும்பாலும் அவ்வாறு இருப்பதில்லை.
நன்றி.
– எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.
சார், வணக்கம். தாங்கள் எழுதிய கற்றளி சிறுகதையை வாசித்தேன். இதை வாசிக்கும் பொழுது ஒரு நாவலை வாசித்த எண்ணம்தான் எனக்குள் எழுந்தது. அக்காலத்திற்குள்ளேயே சென்றது போன்ற உணர்வைப் பெற்றேன். கதை ஓட்டத்தின் பின்னே நானும் சென்றேன். சிவதட்சிராயர் சிவக்கொழுந்திற்கு நுணுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் முறை அருமை. ஆளுமையைப் பற்றிக் கூறிய செய்தி அருமையோ அருமை. அதன் இலக்கணத்தைக் குறுகிய பத்திகளில் தெளிவாகக் கூறி விட்டீர்கள். அதன் பிறகு சிவக்கொழுந்து தாத்தாவிடம் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் அறிவார்ந்தது. அறிவார்ந்த கேள்விகளுக்குப் பெரியவர் கூறும் விளக்கம் பாராட்டுதலுக்குரியது. தேர்ந்த சிறுகதையை எழுதிய தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். தாங்கள் சிறுகதையை மட்டும் எழுதவில்லை. வாழ்க்கைக்கான பாடத்தையும் கூறி உள்ளீர்கள்.
சபாபதி அவர்களுக்கு வணக்கம். இந்தச் சிறுகதை தங்களுக்கு நாவலை வாசித்த மனநிறைவை அளித்ததாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். தங்களின் பின்னூட்டத்தைப் படித்த பின்னர், தொடர்ந்து அது பற்றியே சிந்தித்தேன். என் மனத்தில் ‘இந்தச் சிறுகதையை நாவலாக விரித்து எழுதலாமே!’ என்று தோன்றியது. அதற்குரிய பெருங்களம் எனக்குள் விரியத் தொடங்கிவிட்டது. சிற்பக்கலை சார்ந்த நாவலாக அது உருப்பெறும். ஒரு சிறுகதையை நாவலாக எழுதத் தூண்டிய உங்களின் பின்னூட்டத்திற்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். எப்போதுமே பின்னூட்டங்கள் நெம்புகோலாகவே செயல்படுகின்றன. ஒரு படைப்பாளிக்குப் பின்னூட்டங்களே உந்துசக்தி. மிக்க நன்றி.
– எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.
இனிய வணக்கங்கள் நண்பரே! நல்ல எண்ணங்களும் எழுத்துக்களுமே நம்மை நிலை நிறுத்தும். பெயரன் தாத்தாவின் பெயரைக் காப்பாற்றியதும் ஆளுமைகளின் ஆட்சியும் சரியான பயன்பாடு.வசனங்களில் கூர்மையும் உத்திகளில் புதுமையும் தங்களை மேலும் வளப்படுத்தும் என நினைக்கிறேன். பன்முகத் திறனாளியான தாங்கள் படைப்புகளின் சிகரம் என்று தொட வாழ்த்துக்கள்
கோ. சுஜாதா அவர்களுக்கு வணக்கம். உண்மையில் நல்ல எண்ணங்களே அனைத்துக்கும் அடித்தளம். முன்னோரின் லட்சியத்தைக் காத்து, அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பதும் அல்லது தன் காலத்திலேயே அதை நிறைவேற்றுவதுமே பின்னவர்களின் பெரும்பணி. அதையே பெயரன் செய்கிறான். தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.
– எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.
அருமை, நிகழ்வுகளை கற்பனையில் நினைத்து பார்க்கையில் மிகுந்த பிரம்மாண்டம்.
தங்கள் அருமையான எழுத்துக்களால் சிற்பியை போன்று எங்கள் மனதை செதுக்கி வருகிறீர்கள் .
க. ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு வணக்கம். உண்மையில் இந்தச் சிறுகதையை எழுதும்போது, நானும் அந்தச் சிற்பிக்கூட்டத்தாருள் ஒருவனாகவே இருந்தேன். அவர்களின் மனநிலையிலேயே தொடர்ந்து இருந்தேன். கதையை எழுதி முடித்த பின்பும் எனக்குள் மரங்கள் பற்றி எரிவதை உணர்ந்தேன். அதனால்தான் என்னால் இந்தக் கதையை இவ்வளவு உயிரோட்டத்துடன் எழுத முடிந்தது. கதையைச் ‘சொல்வனம்’ இணைய இதழுக்கு அனுப்பிய பின்னரே அதன் பிரம்மாண்டத்தை உணரத் தொடங்கினேன். இந்தக் கதைக்கு வந்துள்ள பின்னூட்டங்களே இந்தக் கதையின் பிரம்மாண்டத்துக்கும் வாசகர் மனத்தில் இந்தக் கதை பதிந்து விட்டமைக்கும் சாட்சிகள். நன்றி. – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.