இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி

This entry is part 22 of 48 in the series நூறு நூல்கள்

பீட்டர் துரைராஜ்

நூல் விமர்சனம் 

இமையம் எழுதிய ‘ எங் கதெ’ நாவல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. உடனே படித்தும் விட்டேன். ஆனால் இந்த நாவல் குறித்து எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. ‘சீதக்காதி’ பட உதவி இயக்குநர் சாரு.மண வில்லன், இந்தக் கதையின் நாயகன் இறுதி பக்கத்தில் எப்படி ‘மேன்மை’ அடைகிறான் என்பதை சிலாகித்து தனது முகநூலில் எழுதியிருந்தார். எனவே இதை மீண்டும் படித்தேன்.

இதனைப் பெரிய குறுநாவல் என்று சொல்ல வேண்டும். கதை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. அந்த வட்டார மொழியில் இக்கதையின் நாயகன்  விநாயகத்தின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. “இது எங் கதெ.பத்து வருசத்துக் கதெ.என் ரத்தம்.என் கண்ணீர்.கதெ ஆரம்பிக்கறப்போ எனக்கு வயசு முப்பத்திமூணு.கதெ முடியறப்போ நாப்பத்திமூணு. இது என்னோடது மட்டுமில்ல. கமலாவோட கதெயும்தான்.”என்று கதை தொடங்குகிறது.

“பக்கத்து அறையில் வயசுக்கு வந்த இரண்டு புள்ளைங்க படுத்திருக்கு.நான் அவுங்க அப்பன் இல்லெ.அவங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு ஆளு அவங்கம்மாகூடப் படுத்திருக்கான்.அதெ அந்தப் புள்ளங்க தாங்கல ? எவ்வளவு பெரிய மனசு” என்று கடைசி அத்தியாயத்தில் முடிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் சம்பவங்களின் நினைவுத் தொகுப்புதான்  இந்தக் கதை.

கணவன் இறந்ததினால் கிடைத்த பள்ளி எழுத்தர் வேலையைச்  செய்ய விநாயகத்தின் ஊருக்கு கமலா வருகிறாள்.அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தன் இருமகள்களோடு  தங்குகிறாள். வேலைதேடும் இளைஞனான விநாயகத்தோடு பழகுகிறாள். இருவரும் பரஸ்பரம் தனது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுகிறார்கள். ஒன்பது ஆண்டுகள் வாழ்க்கை இவ்வாறு நகர்கிறது.பிறகு பதவி உயர்வு பெற்று கடலூருக்கு அவள் மாற்றலாகிறாள். அங்கு சிஇஓ வோடு அவளுக்கு ஏற்படும் பழக்கம் ஏற்படுகிறது. அதனால் விநாயகத்திற்கு பொறாமை(?) ஏற்படுகிறது. அவர்களுக்குள் பிணக்கு ஏற்படுகிறது. (’நானூறு ஐநூறு மிஸ்டுகால் போட்டிருப்பேன்’)

அதுவரை’கமலாப் பைத்தியமாக’ அலைந்த விநாயகம் ஒரு இறுதி முடிவு எடுக்கிறான். அவளை கடைசியாகச்  சந்திக்க கடலூருக்கு  ‘தயாரிப்புகளோடு’ செல்கிறான். இந்த நேரத்தில் அவன் தன் கடந்த காலத்தை (பத்து ஆண்டுகள்தான்) பின்னோக்கிப் பார்க்கிறான். வார்தைகள் அப்படியே கொட்டுகின்றன. இவர்கள் ஊடாக இருந்த பாத்திரங்கள் ஒவ்வொருவராக வந்து இறங்குகின்றனர். ஒவ்வொரும் அவர்கள் பங்குக்கு விநாயகத்திற்கு ஆலோசனை கூறுகிறார்கள். இவனுக்கு கமலாவைத் தவிர வேறு கடவுள் இல்லை.

கமலாவின் எண்ணவோட்டம், மனநிலை எதுவும் அவள் பார்வையில் சொல்லப்படவில்லை. கதையின் இறுதிவரை அவளாக கதையில் வரவில்லை. விநாயகத்தின் மொழிவழியாகத்தான் நமக்கு காட்சி தருகிறாள். அவன் மூலமாகத்தான் கமலா பற்றி நாம் அனுமானிக்கிறோம். விநாயகம் பொய் சொல்ல வாய்ப்பில்லை; கடைசி நாளில்தான் ஒரே பொய் சொல்லுகிறான்.(‘இல்லேன்னு'(இரத்தம்) முதன் முதலா பொய் சொன்னேன்.’)

கமலா அரசியல் பேசவில்லை. அவளுக்கு பெண் விடுதலை, சமத்துவம் போன்ற சொல்லாடல்கள் தெரியாது. ஆனால் தனித்துவம் ஆனவள். இதுதான் இந்தக் கதையின் வெற்றி. இமையம் உண்மையிலேயே வெற்றி பெற்றுவிட்டார்; மிகச் சிறந்த கதை சொல்லிதான்.

கமலாவுக்கு அவளுடைய சம்பளம், கணவனின் ஓய்வூதியம், மாமனார் நிலம், அப்பா மூலம் வரவு என பலவழிகளிலும் வரவு உண்டு. தீபாவளி,பொங்கலுக்கு தன் குழந்தைகளோடு மாமனார் வீடு போய்விடுவாள். இவள் விநாயகத்திற்கு ஒரு சட்டை எடுத்துக் கொடுத்ததில்லை.

விநாயகம் தன் மூன்று தங்கச்சிகளை மறக்கிறான். வயல் வேலைக்கு  போவதில்லை. உரிமையோடு அம்மாவிடம் சோறு கேட்பதில்லை. ஊரில் நடக்கும் நல்லது கெட்டதற்கு போவதில்லை. பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளவில்லை. உருப்படாமல்தான் இருக்கிறான். இவன் ஒன்றுக்கும் விளங்காதவன்தான்,வீணாப் போனவன்தான். முடிவெடுக்கத் தைரியமில்லாதவன் என்பதை நுட்பமாக, மிக துட்பமாக காட்டுகிறார்  இமையம்.’ வந்து எனக்கு தாலியகட்டு புருசனா இரு.சம்பாரிச்சுப் போடு,’ என்று கமலா சொல்லுவதாக சொல்லும் வார்த்தைகள் மூலம் இமையம் நமக்கு ஏதோ சொல்ல வருவது போல தெரிகிறது. விநாயகத்தின் தங்கச்சிகள் மூவரும்  கடலூர் சென்று கமலாவிடம் போட்ட சண்டையைக் கேட்டு விநாயகம் திட்டுகிறான். அதற்கு கமலா”அவளுங்க கழுதைங்க இல்லெ. நீதான் அது. ஒனக்குத் துப்பு இல்லெ,” என்கிறாள். ஒருவேளை விநாயகத்திற்குத்தான் துப்பில்லையோ என்னவோ? யார் கண்டது. எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை.

ஆனால் ஒன்று. இதுபோன்ற உறவுகளை நாம் எத்தனையோ கண்டிருக்கிறோம். ஆனால் கமலாவிற்கு தான் செய்வது குறித்து ஒரு தெளிவு இருக்கிறது. தன் தேவைகளை தான் விதிக்கும் விதிகளுக்கு உட்பட்டு தீர்த்துக் கொள்கிறாள். விநாயகத்தின் ஏமாளித்தனத்திற்கு அவளா  பொறுப்பு. அல்லது முடிவெடுக்க இயலாதவனை அவள் என்ன செய்ய முடியும்.

விநாயகம் வேண்டுமானால் கதை சொல்லலாம், ஆனால் இது கமலாவின் கதை. படிப்பவர்களுடைய அரசியலுக்கு ஏற்ப, பார்வைக்கு ஏற்ப ஆளுக்கு ஆள் பொருள் மாறுபடலாம். இந்த கதை நல்லொழுக்கம் தரும் நூலா என்று தெரியாது; ஆனால்  இதில் பல எண்ணவோட்டங்களை பார்க்க முடியும். இமையம் தீர்ப்பு சொல்ல முடியாத ஒரு பட்டிமன்றத்தை நடத்தி இருக்கிறார். மீதியை வெண்திரையில் காண்க.

க்ரியா/மே 2015/110 பக்கம்/ரூ110

Series Navigation<< புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்துஆகாரசமிதை >>

One Reply to “இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.