
மூன்று புரட்சிகளின் வாயிலாக மனிதர்களின் வரலாற்றை அறிவியல் முறையில் அறிவுசார் மனிதர்கள் (‘ஹோமோ சேபியன்ஸ்’) பார்க்கிறது. யுவால் நொவா ஹராரி (Yuval Noah Harari) எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அறிவாற்றல் புரட்சியிடமிருந்து (Cognitive Revolution) தன் நூலைத் தொடங்குகிறார். பிறகு 12,000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த விவசாயப் புரட்சி பற்றிச் சொல்கிறார். இறுதியாக 500 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விஞ்ஞானப் புரட்சியை, உருவரைக் கோடுகளின் மூலம் காட்டுகிறார். இன்றைய மனிதர்களையும், நம்முடைய கோளையும், இன்றைய நிலையில் உருவாக்கியவை இந்த மூன்று புரட்சிகள்.
புத்தகத்தைப் பற்றி
ஆங்கிலத்தில் 2014-லில் வெளியான போதே “ஹோமோ சேபியன்கள்” (Homo Sapiens) வெகுவாகப் பரந்த வரவேற்பைப் பெற்றது. ஜெருசலம், ஹீப்ரூ பல்கலையில் ஹராரி முன்னம் கற்பித்த உரைகளின் தொகுப்பு இது. விற்பனையில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்ற புத்தகம் இது என நியூயார்க் டைம்ஸ் இதழ் பட்டியல் வெளியிட்டது. 2014-லில் வெளியான மிகச் சிறந்த புத்தகம் என்று ‘வெஞ்சின் விருதை’ (Wenjin Book) சீனாவின் தேசிய நூலகம் வழங்கியது. தனக்கு மிகவும் விருப்பமான 10 புத்தகங்களில் இதுவும் ஒன்று என்று பில் கேட்ஸ் சொல்லியிருக்கிறார். 45 மொழிகளில் இது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
யுவால் நொவா ஹராரியைப் பற்றி
இஸ்ரேல் நாட்டின் பரவலாக அறியப் பெற்ற அறிவுஜீவியான இவர் ஒரு வரலாற்றாளர். ஜெருசலத்தில், ஹீப்ரு பல்கலையில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக தற்சமயம் பணியாற்றுகிறார். ஆக்ஸ்ஃபோர்ட் ஜீஸஸ் கல்லூரியில் வரலாற்றில் ஆய்வுப் பட்டம் பெற்றவர். ஹோமோ ஸேப்பியன்ஸ் இவரது முதல் படைப்பு. ஹோமோ டேயஸ் (Homo Deus) மற்றும் 21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் இவரது அடுத்த படைப்புகள்.
முதல் அமைப்பில் மனிதர்கள் எவ்வாறு இருந்தார்கள்?

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் உருவானார்கள். இன்றைய மனிதர்களுக்கு ஒப்புமை சொல்லும் வகையில் ஒத்த, உடல் எழும்பி நேராக நிற்கும் (Homo Erectus) விரைப்பானத் தன்மை கொண்ட வகையினர் அவர்கள். தொன்மையான மனிதர்களின் அழிந்து பட்ட உயிரினம் இந்த ‘ஹோமோ எரெக்டக்ஸ்.’ கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்து அவர்கள் பல்வேறு வகையில் ஒத்த இனங்களாக, ஆசியாவில் நியண்டர்தால்களைப் போல் பரிணாம வளர்ச்சி பெற்றார்கள். இன்றைக்கு மூன்று இலட்சம் வருடங்களுக்கு முன் வரை ஹோமோ சேபியன்ஸ் அல்லது இன்றைய நவீன மனிதன் தோன்றியிருக்கவில்லை.
விலங்கு தாவரம் உள்ளிட்ட ஒத்த பேரினங்களிலிருந்து இந்த இருகால் பாலூட்டிகளை மாறுபடுத்திக் காட்டுவது அவர்களது பெரும் மூளைதான். ஹோமோ சேபியன்ஸ் மூளை அதிக சக்தி கோரும் ஒன்றாகும். ஓய்வாக இருக்கையில் ஹோமோ சேபியன்களின் மூளை 25% சக்தியைச் செலவழிக்கும்; இது குரங்கினங்களுக்கு 8% தான்.
கூர்மையான கருவிகளையும், சிக்கலான சமூக வலைப் பின்னல்களையும் உண்டாக்குவதில் நாம் நம் சக்தியைப் பயன்படுத்தினோம். குழந்தையைச் சூல் கொள்ளும் அதிக நாட்களின் அடிப்படையில் ஒரு சமூக மனிதர்களாக உருவானோம். ஒரு குழந்தை வளர்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் வலிமையான சமூக இணக்கங்களை, இந்த இருகால் பாலூட்டிகள், தழுவிக் கொண்டதைச் சொல்கிறது.
நெருப்பைப் பயன்படுத்தும் ஆற்றல் தான் இந்த அறிவு சார் உயிரினம் இன்று வரை நிலைத்திருப்பத்தின் அடிப்படை. கவனத்துடன் கையாளப்பட்ட தீ காடுகளை அழிக்க மட்டுமல்ல, உணவைச் சமைக்கவும் உதவியது. தீயில் சமைக்கப்பட்ட உணவு எளிதில் செரிமானமானது. எளிதில் செரிமானமான உணவு ஹோமோ சேபியன் இன்றுவரை தப்பிப் பிழைத்து நிலை நிற்பதன் முக்கிய அங்கமாகும். ஜீரணிக்கக் கடினமான உணவு வகைகளுக்கு நீள் குடல்கள் வேண்டும். ஆனால், நீள் குடலும், பெரும் மூளையும் அதிக சக்தி கோருபவை. சமைத்த உணவுகள், குடலின் நீளத்தைக் குறைத்து, அதன் மூலம் மிஞ்சும் சக்தியைக் கொண்டு மூளையை மேலும் வளர்க்க ஹோமோ ஸேப்பியன்ஸுக்கு உதவின.
ஹோமோ சேபியன்களுக்கு முன்னரே நியண்டர்தால் இனம் நெருப்பின் பயன்பாட்டை அறிந்திருந்தது; ஆனாலும், அந்த இனம் அழிவுற்றது. மற்ற ஹோமோ வகைமைகள் அழிவுற்றதற்கும், ஹோமோ ஸேப்பியன்ஸ் வளம் பெற்றதற்கும் இரு முக்கிய கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. உள்ளினப்பெருக்கக் கோட்பாடு (Interbreeding Theory)
மற்றைய ஹோமோ உயிரினங்களை, ஹோமோ நியண்டர்தால் போன்ற வகைகளைச் சந்தித்த ஹோமோ சேபியன்ஸ், படிப்படியாக இணைந்து ஒன்றாகப் பரிணமித்தது. இது டி.என்.ஏ காட்டும் சான்று. இன்றைய நவீன ஐரோப்பியர்கள் நியண்டர்தாலின் டி.என்.ஏவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
2.மாற்றுத் தேற்றம் (The Repalcement Theory)
“சகிப்புத்தன்மை என்பது சேபியன்ஸ்களின் வரையுரு அல்ல. இக்காலத்திலும் கூட, தோல் நிறம், மொழி, மதம் ஆகியவற்றின் வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு ஒரு குழுவைச் சேர்ந்த சேபியன்ஸ், மாறுபடும் இனத்தவரை வேரோடு அழிக்க முற்படுகிறார்கள். அப்படியிருக்க, முன்னர் இருந்தவர்கள், முற்றிலும் மாறுபட்ட மனிதர்களிடத்தில் அதிக சகிப்புத் தன்மையுடன் இருந்திருப்பார்களா? வரலாற்றில், முதலாவதாவதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான பழங்குடி அழிப்பு என்பது ஹோமோ சேபியன்ஸ், நியண்டர்தால்களை எதிர் கொண்ட போது நிகழ்ந்தது.”
– யுவால் நொவா ஹராரி
ஹோமோ சேபியன்ஸ் மற்ற ஹோமோக்களை அழிவிற்குச் செலுத்தியது என்பது இந்தக் கோட்பாட்டின் கருத்து. ஹோமோ சேபியன்ஸ்களிடம் மேம்பட்ட திறனும், கருவிகளும் இருந்ததால், மற்ற ஹோமோ வகைகளை அவர்களால் இல்லாமல் செய்ய முடிந்தது. மிகுந்த வன்முறையாலோ அல்லது அவர்களது உணவுகளைக் களவாடியோ இது நடந்திருக்கக்கூடும்.
இரண்டுமே சரியாக இருக்கலாம்
இவையிரண்டும் நடைபெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்கின்றன என்று யுவால் விளக்குகிறார். இனப்பெருக்க முறைகளும், மாற்றங்களும் இணைந்து தொடர்பினை மேம்படுத்தி உலகை வெற்றி கொள்வதற்கு ஹோமோ சேபியன்ஸ்க்கு உதவியிருக்கலாம்.

அறிவாற்றல் புரட்சி
முன்னர் குறிப்பிட்டதைப் போல, ஹோமோ சேபியன்ஸ்களின் தனித்துவம் அவர்களது மூளை அமைப்பே. மூளையின் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பாய்ச்சல் நிகழ்ந்த கால கட்டத்தை யுவால், அறிவுத் திறன் புரட்சி என அழைக்கிறார். அது கிட்டத்தட்ட 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கும் என அனுமானிக்கப்படுகிறது. அதி நவீனக் குழுக்கள் இந்த அறிவாற்றலால் வளர்ந்தன. இத்துடன் கூட வேட்டையாடுவதில் இடம் பெற்ற மேம்படுத்தப்பட்ட நுட்பங்களும், கருவிகளும் வளர்ச்சிக்குத் துணை நின்றன.
குழுக்களின் வளர்ச்சியும், மேம்பட்ட வேட்டையாடுதலும், முதலில் அடையாளம் காணும் வகையில், வாணிபப் பின்னல்களை, எதிர்பார்த்தது போல் ஏற்படுத்தின. இந்த வாணிபப் பின்னல்கள் மிகப் பழமையானவை என்ற போதிலும் அவை ஹோமோ சேபியன்ஸ்களுக்கு உணவு மற்றும் வளங்கள் கிடைக்கும் வழிவகையாயிற்று.
இந்த அறிவாற்றல் புரட்சி பல முக்கிய செயல்பாடுகளை மேன்மேலும் ஏற்படுத்தியது. தங்களுடைய அபரிமிதமான மூளைத் திறன் கொண்டு அவர்கள், முடியாலும், தோலினாலும், குளிருக்கான கதகதப்பு ஆடைகளையும், பனிக்காலணிகளையும் செய்து கொண்டார்கள். அமெரிக்கா, ஆர்க்டிக் போன்ற உலகின் குளிர் பகுதிகளைத் தங்கள் வாழ்விடம் எனக் கொள்வதற்கு இத்தகைய ஆடைகள் அவர்களுக்கு உதவின. மற்ற ஹோமோ வகையினரைப் போலல்லாமல், மிகக் கடுமையான சூழல்களிலும் இவர்களால் தங்களுக்குத் தேவையான உணவையும், வளத்தையும் பெற முடிந்தது. அவர்களின் இத்தகைய திறன் பற்றி யுவால் ஒரு உதாரணம் தருகிறார். சைபீரியாவின் மிகக் கடுமையான பனியைத் தாங்கி அதனூடே பயணித்து அவர்கள் அமெரிக்காவைத் தங்கள் வசிப்பிடம் என மாற்றிக்கொண்டார்கள். உணவிற்காக, மிகப் பெரியவற்றை ஒரு குழுவாக இணைந்து வேட்டையாடும் திறனை வளர்த்துச் செயல்பட்டார்கள். குளிரில் உறைந்து இறந்து போகா வண்ணம் தாக்குப்பிடிக்கும் ஆடைகளையும் அவர்கள் வடிவமைத்தார்கள்.

ஹோமோ சேபியன்ஸ் எப்போதுமே முற்றழிவை ஊக்கப்படுத்தினார்கள்
“‘இயற்கையை அழிக்கும் நவீன தொழிற்சாலைகளுக்கும்’, ‘இயற்கையோடு இணந்து வாழ்ந்த நம் முன்னோர்களுக்கும்’ இடையே சொல்லப்படும் கவித்துவமான, முரண்படும் கூற்றுக்கு அடிப்படையே இல்லை. தொழிற்புரட்சிக்கு முன்னரே, தாவரம் மற்றும் விலங்கினத்தை மற்ற எந்த உயிரியையும் விட அழித்த கீழ்மை, ஹோமோ சேபியன்ஸ்களுக்கு உண்டு. வரிசைக்கிரமமான வரலாற்றுப் பதிவுகளில் நாம் ஒரு பயங்கர இனமாகவே இடம் பெறுவோம்.”
-யுவால் நொவா ஹராரி.
இன்றைய நவீன உலகில் அழிப்பது என்பது மிகப்பரவலாக்கப்பட்ட ஒரு விஷயம். ஆனால், இது இந்தக் காலத்தின் தனிப்பட்ட ஒன்றல்ல. வேட்டையாடும் திறன் கைவரப்பட்ட சேபியன்ஸ் அழிப்பதில் அடிச்சுவடு பதித்தவர்கள். கார்களின் அளவைக் கொண்ட நல்லங்கு (ஆர்மடில்லோ – Armadillos : உடல் முழுதும் கூரான முள் தோலைக் கவசம் எனக் கொண்ட விலங்கு – முள்ளம்பன்றியை ஒத்த மிருகம்) மற்றும் 20 அடி உயரமுள்ள தேவாங்கு எனப்பட்டும் அசமந்தி (Sloths – மிக மெதுவாக நகரும், தலை கீழாய்த் தொங்கும் முண்டிதை எனப்படும் குரங்கின வகையைச் சேர்ந்த விலங்கு) போன்றவை வசித்த நிலங்களில் சுமார் 50,000 வருடங்களுக்கு முன் இவர்கள் குடிபுகுந்திருக்கின்றனர். ஆயினும், ஒரு ஈராயிரம் வருடங்களில், இந்த விலங்கினங்களில் பெரும் பகுதி இவர்களால் அழிவுற்றது. ஆஸ்திரேலியாவிற்கு இவர்கள் பயணித்த சில ஆயிரம் ஆண்டுகளுக்குள், 50 கிலோ எடை கொண்ட 24 வகை விலங்கினங்களில் 23 அழிக்கப்பட்டது. வயிற்றில் பை கொண்ட பாலூட்டிகளும், மற்ற பாலூட்டிகளும் மனிதர்கள் கொண்டு வரும் இந்தப் பேரழிவில் தங்களைத் தக்க வைப்பதில் தோல்வியுற்றன. அமெரிக்காவிலும், பாலூட்டிகளும், குட்டைப் பருத்திகளும் (Mastodon – யானையை ஒத்த பாலூட்டி இனம்) நாட்டு விலங்கினங்களும், இவர்களின் அழுத்தத்தை எதிர் கொள்ள இயலாமல் தங்களைத் தக்க வைக்கும் போராட்டத்தில் தோல்வியுற்றன. ஹோமோ சேபியன்ஸ் சென்ற இடமெல்லாம் இதே கதைதான்.
ஹோமோ சேபியன்ஸ் வளர்ச்சியில் மூன்று முக்கிய அழித்தல்களின் பங்கிருப்பதைப் பற்றி இந்த புத்தகத்தில் யுவால் விவரிக்கிறார். முதல் ‘அழித்தல் அலை’, வேட்டையாடி- உணவு சேகரிக்கத் தொடங்குகையிலும், புதுச் சூழலில் இவர்கள் முதன்முதலாகப் புகுந்த போதும் உருவானது. இந்த இருகால் பாலூட்டிகள் விவசாயம் செய்யத் தலைப்பட்டபோது இரண்டாம் ‘அழித்தல் அலை’ ஏற்பட்டது. பயிர்த்தொழில் என்பது காடுகளையும், புல்வெளிகளையும் எரித்து அழிப்பதுடன் தொடர்புடையது. இறுதியாக மூன்றாம் அழித்தல் அலை இயந்திரப் புரட்சியுடன் சம்பந்தப்பட்டது.

18-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இயந்திரப் புரட்சி இன்றும் தொடர்கிறது. நீராவி இயந்திரமும், மின்சாரமும் நம்மை இரவு-பகல், குளிர்- கோடை என்ற சுழற்சியிலிருந்து விடுவித்தன. நம்மால் விரும்பும் நேரத்தில் பணியாற்றவும், உற்பத்தி செய்யவும் இயல்கிறது. மின்சாரத்தால், உற்பத்தியை பன்மடங்கு பெருக்க முடிந்துள்ளது. மின்சாரத்தைக் கண்டுபிடித்ததின் விளைவாக நுகர்வோர் பெருகியுள்ளனர். அபரிமிதமான உற்பத்தி, வாங்கும் மன நிலையை ஏற்படுத்தக் கோருகிறது. பொதுவாக, வரலாற்றுரீதியாக, மதம் எளிமையையும், சிக்கனத்தையும் வலியுறுத்துகின்றது. ‘நுகர்வு நுகர்தலின் பொருட்டே’ என்று இந்த நவீன உலகில் நாம் நுகர்வு கலாசாரத்தைப் போற்றுகிறோம். அதிக நுகர்வினால், முதலாளித்துவம் இரு முறை வெற்றி பெறுகிறது. உணவு, மது, புகைப் பொருட்கள் ஆகியவற்றை ஒரு சமூகமாக நாம் அதிக அளவில் எடுத்துக் கொள்கிறோம். நமது அதிகப்படியான நுகர்வினை குணப்படுத்தும் மாற்றெனச் சொல்லி, தனிப்பட்ட உடல் நலம், உணவு ஒழுக்கம், ஆகியவற்றை முன் நிறுத்தும் முதலாளிகளின் மருந்துக் குழுமங்களையும் பார்க்கிறோம்!
“இரு கட்டளைகள் இணைந்த ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது முதலாளிகள் மற்றும் நுகர்வோர்களின் நெறிமுறைகள். பணக்காரர்களுக்கு மிக உயர்ந்த கட்டளை ‘முதலீடு’ என்பது. நம்மைப் போன்ற மற்றவர்களுக்கான கட்டளை ‘வாங்கு’ என்பது. ஒரு விதத்தில் பார்த்தால், இந்த ‘முதலாளி- நுகர்வோர்’ நெறிமுறையே புரட்சிகரமானதுதான். முன்பிருந்த நன்னெறிக் கோட்பாடுகள் மனிதர்களுக்குக் கடினமான தெரிவினைக் கொடுத்தன- இச்சைகளையும் கோபங்களையும் வென்று, சுய நலத்தைக் குறைத்துக் கருணையுடனும், சகிப்புத் தன்மையுடனும், இருந்தால் சொர்க்கம் உங்களுக்கு உண்டு என்று உறுதி கூறின. பலருக்கு இது கடினமான ஒன்றாகும். யாராலும் முழுதும் கடைபிடிக்க இயலாத சிறந்த நன்னெறிக் கோட்பாடுகளின் வரலாறு மிக முழுமை பெற்ற நல் நெறிகளின் சோகக்கதைகளால் எழுதப்பட்டுள்ளது. ஏசு நாதரை பல கிருத்துவர்கள் நகலிப்பதில்லை; புத்தரைப் பின்பற்றுவதில் பௌத்த நடைமுறையினர் தவறிவிட்டனர்; பல கன்ஃபூசியர்கள், கன்ஃபூசியஸிற்குக் கோபத்தை ஏற்படுத்தக்கூடும். எதிரிடையாக, ‘முதலாளி- நுகர்வோர்’ என்ற கருதுகோளில் பலர் வெற்றிகரமாக வாழ்கிறார்கள். இந்தப் புது நீதி, முதலாளிகளுக்கு சொர்க்கத்தை ஒன்றின் பேரில் தருகிறது- அது, அவர்கள் பேராசை மிக்கவர்களாகவும், தங்கள் நேரத்தை மேலும் பணம் பெருக்குவதற்கு செலவிடுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே; பொது மக்களுக்குத், தங்கள் இச்சைகளை, விருப்பங்களை கட்டுக்குள் வைக்காமல், மேலும் மேலும் ‘வாங்கி அனுபவித்தல்’ என்பதே. வரலாற்றில், இந்த மதத்தில் தான் அதைப் பின்பற்றுவோர் அதன் கட்டளைகளைக் கேட்டு நடக்கிறார்கள். நமக்கு சொர்க்கம் நிச்சயமாக உண்டு என்பதை எப்படி நம்புவது? நாம் அதைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டோம்.”
-யுவால் நொவா ஹராரி

ஹோமோ சேபியன்ஸ் நிலைத்துப் பெருக சிக்கலான மொழி உதவியது
“இப்போது ஒரு வாழைப் பழம் எனக்குக் கொடுத்தால், இறந்த பிறகு நீ செல்லப் போகும் குரங்குகளுக்கான சொர்க்கத்தில் வரம்பற்ற எண்ணிக்கையில் வாழைப் பழங்கள் உனக்குக் கிடைக்கும் என்று சொல்லி குரங்கினை வசியப்படுத்த முடியாது. இந்தப் புனைவுகளை அறிவு சார் இரு காலினம்தான் நம்பும். இது எதனால் முக்கியத்துவம் பெறுகிறது? (…) நாம் கூட்டாகக் கற்பனை செய்வதற்கு புனைவு மிக இன்றியமையாதது. பைபிள் சொல்லும் உலக உருவாக்கம், ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் உறக்க நேரக் கதைகள், தேசியம் எனக் கதைக்கும் நவீன நாடுகள் போன்றவை பொதுவான நம் புனைவுகள். ஆயிரக்கணக்கான, ஏன் இலட்சக்கணக்கான, முற்றிலும் புதியவர்களுடன் நெகிழ்ந்து இணைந்து கொள்ள இந்தக் கற்பனைக் கதைகள் ஹோமோ சேபியன்சுக்கு உதவின.”
-யுவால் நொவா ஹராரி
நம்முடைய சிக்கலான மொழி மனித இனம் மேம்பட்டதற்குக் காரணியாகச் சொல்லப்படுகிறது. இந்த மொழிதான், வளரவும், தக்கவைத்துக் கொள்ளவும் ஹோமோ சேபியன்ஸ்க்கு உதவியது. பல பாகங்கள் அமைந்த மொழி, தகவல்களைப் பரப்ப கை கொடுத்தது. ஹோமோ சேபியன்ஸ்கள் தம்மிடையே வேட்டை நுணுக்கங்களையும், உணவுப் பகிர்தலைப் பற்றியும் அறிவுரை வழங்கிக் கொண்டார்கள். வேட்டையாடக்கூடியவற்றால் தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைச் சமாளிக்க சிக்கலான எதிர்வினையாற்றும் தன்மையும் மொழியால் இவர்களுக்குக் கிடைத்தது. வதந்திகள் மொழி வளர்ச்சியின் ஆழமானப் பதிவுகள்! ஹோமோ சேபியன்ஸ்க்கு பழங்கதைகளை உருவாக்குவதற்கும், அதை நம்புவதற்கும் மொழி நன்றாக உதவியது. பொதுப் புரிதலை ஏற்படுத்தி அதிக எண்ணிக்கையிலான ஹோமோ சேபியன்ஸ் ஒத்துழைத்து ஒன்றுபட்டு இணைய இந்தக் கதைகள் உதவின. இன்றளவும் இவை நம்மை இணைக்கின்றன.
- மதம் ஒரு புராணம்.
- தேசியம்- நாடு என்பது பழங்கதை.
- வரையறுக்கப்பட்ட கூட்டுத்தாபனம் (Limited-liability corporation – LLC) என்பது கட்டுக்கதை.
- அமெரிக்காவின் விடுதலைப் பிரகடனம் ஒரு நம்பவியலாக் கூற்று.
இவையெல்லாம் நம் கற்பனையின் உருவங்களே. முந்தைய ஹோமோ சேபியன்களின் பழமையான கதைகள் நம்மிடம் நகைப்பைக் கொண்டுவருகின்றன என யுவால் சொல்கிறார். ஆனாலும், அத்தகைய பொருண்மையற்ற ஆக்கங்களே இன்றளவும் நம்மைப் பிணைத்து தொடர்பில் வைத்துள்ளன.
‘பல நம்பிக்கையாளர்கள் உள்ள கிருத்துவம், முதலாளித்துவம், மக்களாட்சி போன்றவை கற்பனை வடிவங்களே.’
– யுவால் நொவா ஹராரி

ஹோமோ சேபியன்களின் ஆதிக்கத்திற்கு இவ்வகையான பயன்கள் மிக முக்கியமானவை. கணிசமான குழுக்களின் மூலம் இந்த ஆதிக்கம் வென்றிருக்கலாம். ஒருவருக்கொருவர் மோதும் போர் முறையில் நியண்டர்தால் மனிதன் சேபியனை வெற்றி கொண்டிருக்க முடியும். ஆனால், சிக்கலானத் தகவல் தொடர்பு ஆற்றல் என்னும் கொடை ஏற்படுத்திய குழு மனப்பான்மை, ஹோமோ சேபியன்களுக்கு உதவியது. ஒரு குழுவின் அங்கத்தினரிடையே ‘பகிர்ந்து-புரிதல்’ என்பது தனித்துவமானது. பொதுவான குறிக்கோளுக்காக இணைந்து செயல்படும் தேனீக்கள் இடையே உள்ள ‘புரிதல்’ என்பதைப் பற்றி அதிக விவரங்கள் இல்லை எனத் தோன்றுகிறது (அல்லது அது ஒற்றை நோக்கப் புரிதல்). மற்ற விலங்கினங்களைக் காட்டிலும், ஹோமோ சேபியன்கள் தம்மிடையே, ஒத்த புரிந்து கொள்ளும் நெகிழ்த் தன்மை கொண்டிருந்தார்கள்; அதனால், மாறுகிற சூழலுக்குத் தக்கவாறு தங்கள் சமூகக் கட்டமைப்பை வகுத்துக்கொள்ள அவர்களால் முடிந்தது.

விவசாயப் புரட்சி
மொழி சிறு சமூகங்களின் உருவாக்கத்தின் பெரும் உந்து சக்தியாய் இருந்தது. இன்று நாம் காணும் உலகச் சமுதாயம், விவசாயத்தினால் ஏற்பட்டது. உலகச் சமுதாயமாக எழுவதற்கு ஹோமோ சேபியன்கள் புல் போன்ற தீவனப் பயிர்களிலிருந்து விவசாயத்திற்கு மாற நேர்ந்தது.
பெரும்பான்மை ஹோமோ சேபியன்கள் நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். தங்களது இரையையும், தீவனத்தையும் தேடிய அவர்கள் ஓரிடத்தில் நிலைக்கவில்லை. உணவு நிறைந்திருக்கும் இடத்திற்கு அவர்கள் பயணப்பட்டார்கள்; அதிக உணவுத் தேவை ஏற்படும் வரை அங்கே இருந்தார்கள். 12,000 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் வாழ்க்கை முறை மாறியது. உணவைத் தேடுதல் என்பதிலிருந்து அதை உற்பத்தி செய்தல் என்பதை நோக்கிய நகர்வு விவசாயப் புரட்சியின் தொடக்கமாகும்.
தீவன நார்ப் பயிரிடுதல், வேட்டையாடுதல் இரண்டிலும் விவசாயத்தைக் காட்டிலும் நற்பயன்கள் மிகுதி. தேவையான உணவைச் சேகரிப்பதற்கு ஒரு வேட்டைக்காரர்-சேகரிப்பவர் ஒரு நாளின் சில மணி நேரங்களைச் செலவிட்டாலே போதும்; ஆனால், ஒரு உழவர், அபரிமிதமான அறுவடைக்காக நாள் முழுதும் உழைக்க வேண்டும். அந்தக் காலத்தில் அவர் அறுவடை செய்தது கோதுமையாக இருக்கலாம். செரிக்க கடினமானதாகவும், சத்துக்கள் குறைவானதாகவும் கோதுமை இருந்தது. இருந்தும் கூட, அறியாத பயிரிலிருந்து உலகம் முழுதும் பயிரிடப்படும் ஒன்றாக அது ஆனது.
பயிரிடுவதற்கும், விவசாயத்திற்கும் ஏற்ற வகையில் ஹோமோ சேபியன்கள் உருவாக்கப்படவில்லை. பூச்சிகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் கோதுமையைப் பாதுகாக்க நேரிட்டது. முதலில் இவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. ‘ஏன் பயிர் செய்யத் தொடங்கினார்கள்?’ என்ற கேள்வியை இது எழுப்புகிறது. விவசாயத்திற்கு மாறியதே மிக மெதுவான, படிப்படியான ஒன்று என்று வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள். சமூகத்தில் இந்த வழிமுறை தலைமுறை தோறும் வேரூன்றியது. விவசாயிகளின் எண்ணிக்கைப் பெருகப் பெருக, முன்னர் இருந்த புல்வெளிகள், நார்த்தாவரங்கள் அழிக்கப்பட்டு, அதிக விளைச்சல் வேண்டி நிலம் கைப்படுத்தப்பட்டது. விவசாயம் ஒரு அவசியத் தேவை எனவும், மற்ற தீவனப்பயிர்கள் அத்தனை சாத்தியங்கள் அற்றவை எனவும் ஆயின.
பயிர்த் தொழிலின் சிறப்பான அம்சமே, அது ஆற்றலை வளரச் செய்ததுதான். சத்து நிறைந்த, உண்ணக்கூடியத் தாவரங்களை உற்பத்தி செய்யும் முறையை அறிந்த பிறகு ஹோமோ சேபியன்களால் உணவுப் பொருட்களின் வினியோகத்தை சிறப்பாக அதிகரிக்க முடிந்தது. குறைந்த இடம், அதிக உணவு உற்பத்தி என்பது இயல்வதாயிற்று. இதைச் சீர்ப்படுத்திய பின், அவர்கள் விலங்குகளை வீட்டு விலங்காக்க பயிற்சி கொடுக்கத் துவங்கினர். வலிமையான முரட்டு விலங்குகளையும், எளிதானவற்றையும் முதலில் கொல்லத் தொடங்கினர். விலங்குகள் மேலும் வீட்டு விலங்குகளானபோது பொருளாதார ரீதியில் சாத்தியப்பாடுள்ள உணவுகளாகவுமானது.
“வீட்டுக் கால் நடைகளும்,கோழியும் நம் பரிணாம வளர்ச்சியில் ஒரு வெற்றிக்கதை; அவைதான் எப்போதுமே பரிதாபத்திற்குரிய இனங்களிலும் இடம் பிடிக்கின்றன. மிக வன்முறையான வழிகளில்தான் அவை வீட்டு விலங்காயின; நூற்றாண்டுகளாக இந்த வன்முறை மேலும் கொடூரமாகிக் கொண்டிருக்கிறது.”
– யுவால் நொவா ஹராரி
அதிக உணவுக் குறியீடு, ஹோமோ சேபியன்களின் எண்ணிக்கைப் பெருக்கம் எனச் சொல்லலாம். விவசாயப் புரட்சியினால் நிரந்தர இருப்பிடம்- அதனால் இனப்பெருக்கம்; மேலும், விவசாயப் புரட்சி பல்வேறு துறைகளில் சிறப்படையும் சாதகத்தையும் இருகால் பாலூட்டிகளுக்கு ஏற்படுத்தியது. தனிப்பட்ட ஹோமோ சேபியன் தன் உணவைத் தானே தேடும் அவசியமின்றி, ஒரு கருங்கொல்லன் ஆகவோ, நெசவாளராகவோ, தன் பொருளைப் பண்டமாற்றி உணவினைப் பெற முடிந்தது.
உற்பத்தியும், பொருட்களும் அதிகமாகையில் அதுவே சில சிக்கல்களைக் கொண்டு வந்தது. ஒருங்கிணைத்தது உணவென்றாலும், ஒரு உழவரிடம் தேவையான கத்தியும், குளிராடையும் இருக்கையில், சிறப்புத் தகுதியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்காக, உணவைப் பண்ட மாற்றுதல் அதிகப் பயனற்றதாக உணரப்பட்டது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக பணம் வந்தது.
அபரிமிதம் கொண்டுவந்த சிக்கலுக்கானத் தீர்வைக் காண்பதில் பணம் உதவிற்று

“உலகளாவியதும், ஆற்றல் மிக்கதும் பரஸ்பர நம்பிக்கைக்கான காரணியானதுமான பணம் இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகச் சிறந்தது.”
– யுவால் நொவா ஹராரி
சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர், உபரிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பணமும், எழுத்தும் உருவாயின. மெசொப்பொத்தேமியாவின்(மெசபடோமியா) சுமேரிய நாகரிகம் பணத்தை முதலில் பயன்படுத்திய சமுதாயம் என்று யுவால் சொல்கிறார். இன்று மெசொப்பொத்தேமியா என்பது பகுதி இராக், சிரியா, துருக்கி, குவைத் ஆகியவை. எளிய பொருளாதாரக் குறியீடுகளின் மூலம், வணிகத்தை களிமண் பலகைகளில் பதிந்தவர்களும் இவர்களே. நாணயங்களும், தங்கமும், கரன்சியாகப் பயன்பட்டன; அதே நேரம் ஊழலைத் தவிர்ப்பதற்கு உட்துணையாக எழுத்தின் வளர்ச்சி அமைந்தது. விற்பவர், ஒரு கரன்சியில் ஒரு பொருளின் விலையை அறிய உதவும் மையமாக பணமிருந்தது. நிலையான பொருளாதாரத்திற்கு இந்த அணுகுமுறை சில காலம், உதவியது. மதத்தைப் போலவே, நாம் உருவாக்கிய பணமும் ஒரு மாயை என்றும் அவற்றை இன்றளவும் நாம் பயன்படுத்துகிறோம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். பரவலாக ஏற்கப்படுதல், எளிமையாகக் கையாள இயல்வது மற்றும் சேமிக்கும் எளிய கிடங்குகள் ஆகியவை இருந்தால் எதையுமே கரன்ஸி எனப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக நாஜிக்களின் வதை முகாம்களில் சிகரெட்டுகள் நாணயமாகப் பயன்படுத்தப்பட்டதை அவர் சொல்கிறார்.
இவர்களின் குறைந்த நினைவுத் திறனும் எழுத்தின் வளர்ச்சிக்கு ஒரு காரணம். அன்றும் இன்றும் அறிவு சார் மனிதர்கள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தகவல்களை நினைவில் நிறுத்த முடியும்.
சமூகங்கள் மேலும் வளரத் தொடங்கியதும், சிக்கல்கள் இன்னும் அதிகமாயின.

பணத்தை ஒழுங்குபடுத்தச் சட்டங்கள் உதவின
பல்வேறு தன்மைகளுடன் பெரிதாக வளர்ந்து வந்த சமுதாயத்திற்கு, பொருளாதாரச் சட்டங்கள் அவசியமாயின. இந்தச் சட்டங்களைச் செயல்படுத்த அரசர், பேரரசர் போன்ற ஆளுமைகள் தேவையாக இருந்தனர். இன்றைய கால கட்டத்தில், இத்தகைய ஆளுமைகளை நாம் கொடுங்கோலர்களெனப் பார்த்தாலும், ஹோமோ சேபியன்களுக்கு அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்றவை நிலை பெற்று நிற்க இது உதவியது என்று யுவால் சொல்கிறார்.
அக்காலத்தில், ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை மதங்களின் மூலம் பெற்றார்கள். கடவுள் அவர்களை அத்தகைய இடத்தில் அமர்த்தியிருக்கிறார் என்று நம்புவதை மனிதர்கள் விரும்பினால், ஆள்பவரின் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில் அதை விடவும் அதிக ஆர்வம் கொண்டார்கள். கடவுள் தன்னை அரசராக நியமித்தார் என்று அறுதியிட்டுக் கூறி தன்னுடைய சட்டங்களுக்கு அங்கீகாரம் பெற்ற மெசொப்பொத்தேமியா அரசரான ஹமுராபியை எடுத்துக்காட்டாக யுவால் குறிப்பிடுகிறார். பின்னர் ஏகாதிபத்தியங்கள், பண்பாடுகளை மேலும் பெரிதாக்கின. ஏகாதிபத்தியங்களின் பிரச்சாரத்தினால் பல்வேறு பழங்குடிகளும், மதக் குழுக்களும் சமுதாயத்தில் இணைந்தன.
அறிவியல் புரட்சி
“இந்த விஞ்ஞானப் புரட்சி என்பது அறிவுப் புரட்சியாகக் கொள்ளத்தக்கதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக அது அறியாமையின் புரட்சி. மனிதர்களுக்குத், தங்களது முக்கியக் கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை என்ற அறிதலே அறிவியல் புரட்சிக்கு வித்திட்டது எனலாம். இஸ்லாம், கிருத்துவம், பௌத்தம், கன்ஃபூசியம் போன்ற முன் நவீனச் சிந்தனைகள், இந்த உலகைப் பற்றி முக்கியமாக என்ன அறிய வேண்டுமோ அதை அறிந்துவிட்டோம் என்று உறுதியாகச் சொன்னார்கள். அந்தப் பெரிய கடவுள்கள், அல்லது அனைத்துமான தேவன், அல்லது அனைத்து ஞானமும் கைகூடிய அன்றைய மதியூகிகள், தங்கள் வாய் மொழி மூலமும், வேதாகமங்கள் மூலமும் இவற்றை எடுத்துரைத்தார்கள். இந்தப் பழைய நூல்களையும், மரபுகளையும் ஊன்றிப் படித்து, புரிந்து கொண்டு சாதாரண மாந்தர்கள் அறிவு பெற்றனர். அகிலத்தின் முக்கிய இரகசியத்தை, பைபிளோ, குரானோ, வேதங்களோ சொல்லாமல், சதையும் குருதியுமான மனித இனம் கண்டு பிடித்துச் சொல்லும் என்பது நினைத்துப் பார்க்கவே இயலாத ஒன்றல்லவா!”
– யுவால் நொவா ஹராரி

அறிவியல் புரட்சி இருகால் பாலூட்டிகளின் சமூகத்தை நவீனமயமாக்கியது. ஹோமோ சேபியன்களின் கடந்த காலத்தில் கடவுள் நம்பிக்கை இருந்தது. அந்தக் கடவுள்கள் இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை; இதற்குப் பொருள் ஹோமோ சேபியன்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றினர் என்பதே. சாதாரண மனிதர்கள் கூட இந்த உலகைப் புரிந்து கொள்ள அறிவியல் புரட்சி வழிவகுத்தது. பிரார்த்திப்பதைக் காட்டிலும், விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி இந்த உலகை எவ்வாறு முன்னேற்றலாம் என்று ஹோமோ சேபியன்கள் எண்ணத் தொடங்கினர்.
மருத்துவம், வானியல், இயற்பியல் ஆகிய துறைகளை அறிந்து கொள்ளும் பெரும் பாய்ச்சலை அறிவியல் புரட்சி நிகழ்த்தியது. சராசரி சமூக மனிதர்களின் நலனுக்காக பரீட்சித்துப்பார்ப்பதிலும், கவனித்தலிலும் குவிகம் கொண்டோம். எடுத்துக்காட்டாக, குழந்தைகளின் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், பணக்காரக் குடும்பங்களிலே கூட 2 அல்லது 3 குழந்தைகள் இறந்து கொண்டிருந்தன. இன்று உலகளவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரத்தில் ஒன்று தான்.
உடல் நலனில் அக்கறை காட்டிய அறிவியல் புரட்சி, அத்துடன் பொருளாதாரத்தை நாம் பார்க்கும் கோணத்தையும் மேம்படுத்தியது. கொலம்பஸ் போன்ற சாகச ஆய்வாளர்கள் மூலம் ஐரோப்பிய அரசு புது நிலங்களைத் தேடியது. இந்தக் கடற்பயணங்களின் ஊக்குவிப்பு ,காலனி ஆதிக்கத்திற்கும், உலக நாடுகளிடையே தொடர்பை ஏற்படுத்தவும் அடிகோலியது. இந்தச் செயல்பாடுகள், தங்கம், வெள்ளி போன்றவற்றிற்கு மாற்றாக சிக்கலான கரன்சியைக் கொண்டு வந்தன. ஆனால், இது தொல்குடியினரின் வாழ்வைக் காவு கொண்டது.

இன்று நாம் வாழும் முதலாளித்துவ சமூகத்திற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியமும், அறிவியல் புரட்சியும் அடிப்படையாக அமைந்தன. தங்கள் இலாபங்களை அதிகரித்துக் கொள்ளவும், தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவாக்கவும் அறிவியல் முறைகளையும், புதுக் கண்டுபிடிப்புகளையும் ஐரோப்பிய அரசுகள் பயன்படுத்தின. ஒற்றைச் சமுதாயத்தை ஏற்படுத்துவதில் அவர்கள் காட்டிய முனைப்பு இதன் எதிர்மறை பாதிப்பு. ஒரு காலத்தில் உலக நாடுகளில் பாதிக்கும் மேலானவை ஐக்கிய அரசின் காலனிகளாக இருந்தது. எனவே அந்தந்த நாடுகளின் மரபுகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு, சட்டங்கள் புறம் தள்ளப்பட்டன. அந்தத் தொல்குடி நாட்டினரிடையே ஐரோப்பிய முறைகளும், அறிவியலும் வன்மையாகப் புகுத்தப்பட்டன. ஐரோப்பிய அரசு இன்றில்லை என்ற போதிலும் காலனியாதிக்கத்தில் இருந்த தேசங்கள் அது ஏற்படுத்திய கலாசாரத் தாக்குதலை எதிர் கொள்ளும் நிலையில் தான் இன்னமும் உள்ளன.
உலகமயமாக்கலின் காலம் இது
தொழில் நுட்பத்தாலும், நம்முடைய வரலாற்றாலும், நாம் தொடர்புறுத்தப்பட்டிருக்கிறோம். இதன் பின்விளைவாக முன்னெப்போதையும்விட நாம் அமைதியாக இருக்கிறோம். வளங்கள் அபரிமிதமாக இருப்பதால் அவற்றிற்கான போர்களில்லை.
சிலர் உலகமயமாக்கலை எதிர்க்கிறார்கள்; அதனால் ஏற்படும் பன்முகப் பண்பாடு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இருந்த போதிலும், உலகமயமாக்கல் நிறைய நன்மைகளைச் செய்துள்ளது. நவீன அரசுகள் தங்கள் செழிப்பிற்கு ஒருவரையொருவர் சார்ந்து இருக்கின்றனர்; அனேகமாக அனைத்து நாடுகளும் வர்த்தகத் தொடர்ப்பில் இருக்கின்றன. ஒன்றையொன்று சார்ந்திருப்பது போர்களின் சாத்தியக்கூறுகளைக் குறைத்திருக்கிறது. தங்கள் நாட்டின் செழிப்பு ஓரளவிற்காவது அயல் நாடுகளின் செழிப்பைச் சார்ந்திருப்பதால், தங்களின் நலத்திற்காகவாவது ஒவ்வொரு நாடும் அமைதி காக்க வேண்டும். 1945-ன் இரண்டாம் உலகப்போருக்குப்பின் எந்த ஒரு சுதந்திர நாடும் அழிக்கப்படவுமில்லை, வெல்லப்படவுமில்லை என்பதை யுவால் சுட்டுகிறார்.
20-ஆம் நூற்றாண்டு இதுவரையான மற்ற நூற்றாண்டுகளைவிட அமைதியான ஒன்று என்று அவர் விளக்குகிறார். இரு உலகப் போர்கள் நடந்ததை நினைக்கும் போது இது சிலருக்கு வினோதமாக இருக்கலாம். வேட்டையாடி உணவு சேகரித்த கால கட்டத்தில் வயது வந்த ஆண்களில் 30% கொல்லப்பட்டனர். இது இப்போது கிட்டத்தட்ட 7%. வன்முறைகளையும், கொலைகளையும் தடுக்கும் சட்டங்களை மதித்து நடக்க, அறிவியல், மக்களைத் தூண்டியது; நிலைத்த சமுதாயமும், பொருளாதரமும் இதனால் ஊக்குவிக்கப்பட்டன. இந்தச் சமூகங்கள், உலகளாவியதாக மேலும் இணைந்து அமைதியை ஏற்படுத்தலாம்.
நாம் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது
மிக அமைதியான ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், மோதலை உருவாக்கக்கூடியவற்றையும் நாம் சிந்திக்க வேண்டும். சூழலியல் மாறுபாடுகளும், ஏற்படும் சாத்தியமுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையும் வன்முறையைக் கொண்டு வரலாம். இத்தகைய பேரழிவுகள் நிகழா வண்ணம் நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும்.
உடல் நலம், செல்வ வளம், அறிவு ஆகியவற்றில் நாம் அடைந்துள்ள வளர்ச்சியும், மேம்பாடும் நம்மை மகிழ்வாக வைத்திருக்கின்றனவா என்று யுவால் சிந்திக்கிறார். இல்லை என்றுதான் நினைக்கிறார். இந்த நவீன உலகில், சிறு நேர மகிழ்ச்சிகளும், சோகங்களும் எண்ணிக்கையில் அதிகரித்திருந்தாலும், எப்போதுமிருந்த அதே நிலையில் தான் நம் மகிழ்ச்சி வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

அனைத்திற்கும் மேலாக, வரலாற்றுச் சமூகத்தைவிட இன்று சற்று அதிக மகிழ்ச்சியில் சமூகம் இருந்தாலும், செல்வம் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கிறது. இன்றைய வளர்ச்சியின் பங்குகளைப் பெறுவதற்கு, பழங்குடியினர், பெண்கள் மற்றும் வெள்ளைத் தோல் இல்லாதவர்களுக்குச் சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை. மகிழ்ச்சி என்பது, கூட்டான, மாயையான எதிர்பார்ப்புகளுடன், வாழ்வின் அர்த்தம் பற்றிய நம் மாயைகளும் ஒத்துப் போகையில் உண்டாவது என அவர் வரையறை செய்கிறார். அதனால், இந்த நவீன காலத்தில், விளம்பரங்கள் நம் அக எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதால், நாம் மகிழ்ச்சியற்று இருக்கிறோம்.
எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது?
ஹோமோ சேபியன்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனையுடன் இந்த நூலை யுவால் நிறைவு செய்கிறார். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்களால், ஒரு இனமாக, நம் உடல் சார்ந்த எல்லைகளை நாம் பரிசோதித்துக்கொண்டிருக்கிறோம். உயிர்த்தொழில் நுட்பமும், உயிர் மின்னணுவியலும் நாம் வெவ்வேறு திறன்களுடன் நீண்ட காலம் வாழ முடியும் என்பதைக் காட்டுகின்றன. உதாரணமாக, ஜெஸ்ஸி சல்லிவன் (Jesse Sullivan) தன் இரு கைகளையும் இழந்தவர். மின்னணுவியலின் துணை கொண்டு மின்னணுக் கரங்கள் பொருத்தப்பட்டு தன் சிந்தனையால் அவற்றை இயக்குகிறார். பல வருடங்களுக்கு முன்னர், இன்றைய வாழ்வை விட மோசமான ஒன்றைத்தான் அவர் வாழும்படி நேரிட்டிருக்கும். மரபணுப் பொறியியல் மூலம் கடல்சார் உயிரிகளின் வாழுங்காலத்தை இரட்டிப்பாக்கும் வழிவகைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து அதன் மூலம் வயதாவதையும் ஒத்திப்போட்டிருக்கிறார்கள். தொழில் நுட்பத்தின் அதி வேக வளர்ச்சியினால், வயதாவது மிக மெதுவாகி, ஆயுள் கூடி, வாழும் மனிதர்களை நாம் பார்க்க முடியலாம்.
எப்போதுமே வாழலாம் என்ற ஒன்றை ஹோமோ சேபியன்கள் அறிந்தால், நாம் அதைப் பற்றிக்கொள்வோம் என்பதில் ஐயமேயில்லை. இந்தக் கூற்றின் மூலம் நம்மை ஹோமோ சேபியன் என்று விளக்க முடியாது என்று அவர் சொல்கிறார். நாம் முற்றிலும் ஒரு புதிய இனமாகலாம். தன்னுடைய அடுத்த புத்தகமான ஹோமோ டேயஸ்-இல் அவர் இதை எழுதுகிறார். எதிர்கால இனம் மனிதன் பாதி, கடவுள் பாதியாக இருக்கலாம்.
ஹோமோ டேயஸ் (Homo Deus)
ஹோமோ டேயஸ் யுவாலின் இரண்டாவது புத்தகம். அது பற்றிய ஒரு சுருக்கம்.
இந்தப் புத்தகத்தில் 11 அத்தியாயங்கள் இருக்கின்றன.
மனித இனத்தின் நிலைகளையும், அதன் போக்குகளைப் பற்றியும், மனிதன் இருப்பது உலகின் இருத்தலியலுக்கு எவ்வாறு பொருள் படுகிறதென்பதைப் பற்றியும் யுவாலின் எண்ணங்களின் பிரதிபலிப்பு என இதைச் சொல்லலாம். தற்சமயம் மனிதர்களை ஹோமோ சேபியன் என்று சொல்வதிலிருந்து இந்த நூலிற்கான பெயர் வந்திருக்கலாம்- அறிவின் துணை கொண்டு நாம் வளர்ச்சியில் அடைந்த உன்னதங்கள், கடவுளின் சக்தி நிலையைப் பெற உதவக்கூடும். இந்த எதிர்காலச் சிந்தனை ஆர்வமூட்டுகிற, நம் பெரிய விருப்பங்களால் அமைந்துள்ளது. ‘டேயஸ்’ என்பது லத்தீனில் கடவுள் எனப் பொருள் படும். மரணமில்லாப் பெரு வாழ்வும், துல்லியமான மகிழ்ச்சியும், தெய்வீகத் தன்மையைக் கிரகிக்கும் ஆற்றலும் பெற்று, தம்மை நிறைவு செய்து கொள்ளுமாறு, மனித இனம் மேம்பாடடையும் சாத்தியங்களுள்ளது என நம்பத் தக்கவாறு இந்தக் கருத்து முன்மொழிகிறது.
மனிதர்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான உயிரினங்களின் வெற்றிப் பரிணாம வளர்ச்சியே, மனித ஆதிக்கத்தின் தாக்கம் என்பதைத் தகுந்தத் தரவுகளோடுத் தந்து படிப்பவர்களைச் சிந்திக்கச் செய்கிறார் இவர். உதாரணமாக, வீட்டுப் பூனைகள், காட்டுச் சிங்கங்களை விட எண்ணிக்கையில் பலமடங்கு அதிகம். மனிதத்தை மூன்று அடிப்படைக் கருத்துக்களில் அவர் சொல்கிறார்:
சமூகவாதி, சுதந்திரமானவன், வளர்பவன்
– மனித இனத்தின் பொதுவான வெற்றிக்கு ஒவ்வொன்றும் பாதை அமைத்தன.

இவரது மூன்றாவது நூல் 21 Lessons for 21 st Century (2018)
இதன் தலைப்புகளே இதன் செய்திகளைச் சொல்கின்றன. தலைப்புகளையும் அவை சொல்வதையும் மட்டும் பார்ப்போம்.
- ஏமாற்றம்-வரலாற்றின் முடிவு தள்ளிப் போடப் பட்டுள்ளது.
- வேலை- நீங்கள் வளர்கையில், வேலை இல்லாமல் போகலாம்.
- விடுதலை –பெரும் தரவுகள் உங்களைக் கண்காணிக்கின்றன.
- சமத்துவம்-யாரிடம் தகவல்கள் இருக்கிறதோ அவர்களிடம் எதிர்காலமுள்ளது.
- சமூகம்- மனிதர்களுக்கு உடல் இருக்கிறது.
- நாகரிகம்- ஒரே ஒரு கலாசாரம்தான் உலகில் உள்ளது.
- தேசியம்- உலகளாவிய பிரச்சனைகளுக்கு உலகளாவியத் தீர்வு தேவை.
- மதம்-இப்போது கடவுள் நாடுகளுக்குச் சேவை செய்கிறார்.
- புலம் பெயர்தல்- சில பண்பாடுகள் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பாக இருக்கலாம்.
- பயங்கரவாதம்- கலவரப்படாதீர்கள்
- போர்- மனிதர்களின் முட்டாள்தனத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
- பணிவு- நீங்கள் உலகின் மையமல்ல.
- கடவுள்- வீணாக அவர் பெயரை எடுக்காதீர்கள்.
- மதம் சாராத் தன்மை- உங்கள் நிழலை அங்கீகரியுங்கள்
- அறிவின்மை- நீங்கள் நினைத்திருப்பதைக் காட்டிலும் குறைவாகத்தான் உங்களுக்குத் தெரியும்.
- நீதி- நம்முடைய நீதியுணர்வு காலாவதி ஆகியிருக்கலாம்.
- பின்-உண்மை- சில பொய்ச் செய்திகள் எப்போதும் நிலைத்திருக்கும்.
- அறிவியல் புனைவு- எதிர்காலம் என்பது நீங்கள் திரைப்படங்களில் பார்ப்பவை அல்ல.
- கல்வி- மாற்றம் ஒன்றே நிலையானது.
- வாழ்வதன் பொருள்- வாழ்வென்பது கதையல்ல.
- தியானம்- சும்மா கவனியுங்கள்.
இந்த அகிலத்தில் உயிரினங்கள் வேறு எங்கும் இருக்கலாம் என்பதை அறிவியல் ஊகித்துச் சொல்கிறதே தவிர சரியானத் தரவுகள் இன்றுவரை இல்லை.ஆனால், மனித குலம் இன்றடைந்துள்ள பெரு வளர்ச்சியை வரலாறு, சமூகவியல், நாகரிகங்கள், அறிவியல் முன்னேற்றங்கள் போன்ற பல துறைகளின் மூலம் தானுமறிந்து நமக்கும் கொடுத்திருக்கிறார் யுவால்.
One Reply to “அறிவுசார் மனிதர்கள்: மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு”