அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020

அதிபர் தேர்தலுக்கு முன் ஆயத்தங்கள்

லதா குப்பா


அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதிபர் தேர்தல் என்பது ஒரு பெருங்கொண்டாட்ட நிகழ்வு. நூற்றாண்டுகளாய்த் தொடரும் தனித்துவமான தேர்தல் சடங்குகள், அதன் சம்பிரதாயங்கள், நிகழ்வுகள் என ஒவ்வொரு முறையும் சுவாரசியத்துக்கும், பரபரப்பிற்கும் பஞ்சமிருக்காது. ஆனால் இம்முறை கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பினால் அவை அத்தனையும் மிஸ்ஸிங்.

ஐம்பது மாநிலங்களில் நடந்து முடிந்த காக்கஸ் ப்ரைமரி தேர்தல் முடிவுகள், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை அடையாளம் காட்டிவிட்டாலும், அதனை முறைப்படி தேசிய மாநாட்டில் பிரதிநிதிகள் அறிவிப்பதும் அதனை வேட்பாளர் ஏற்றுக்கொண்டு உரை நிகழ்த்துவதும் மரபு. நான்கு நாள்கள் நடக்கும் இந்தத் தேசிய மாநாடு இதுவரை இல்லாதவாறு, இன்னும் சொல்லப்போனால் வரலாற்றில் முதல்முறையாக அவரவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே நேரலையில் மொத்த மாநாட்டு நிகழ்வினையும் மெய்நிகர் (virtual) மாநாடாக நடத்தி முடித்திருக்கின்றனர்.

இந்த மெய்நிகர் மாநாட்டில் ஜனநாயக கட்சியின் மூத்த, முன்னணித் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பேச்சாளர்கள் என பலரும் இன்று நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் பற்றியும், அதற்காக தங்கள் கட்சி முன் வைக்கும் தீர்வுகளை, திட்டங்களைப் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசினர்.

மாநாட்டின் முதல் நாளில், எதிர்கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், ஒஹையோவின் முன்னாள் கவர்னருமான ஜான் கேய்ஷ்க்கு பேச வாய்ப்பளித்தது பலரது கவனத்தையும் கவர்ந்தது. 

முதல் நாளின் ஸ்டார் பேச்சாளர் என்றால் அது மிஷெல் ஒபாமாதான். தற்போது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையிலிருந்து மாற, பொறுப்பான, மக்களைப் புரிந்து கொண்ட அதிபரை அனைவரும் ஒன்று கூடி தேர்ந்தெடுப்பதன் அவசியத்தை மிக அமைதியாக , மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் பேசியது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தேர்தல்களில் ஆர்வமில்லாதவர்களைக் கூட வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துவரும் வகையில் இருந்தது மிஷெலின் உணர்வு பூர்வமான பேச்சு.

ஒபாமா, ஹிலாரியின் கொள்கைகளுடன் ஒத்துச் செல்லும் பைடன், சாண்டர்ஸின் “Green New Deal,” “Medicare for All,” “Defunding the Police” கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர். தங்கள் கொள்கைகளுக்குள் பேதம் இருந்தாலும் ட்ரம்ப் அரசை நீக்குவதில் இருவருடைய குறிக்கோளும் ஒத்துச் செல்வதால் பைடனை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என தன்னுடைய ஆதரவாளர்களின் வாக்குகளையும் வேண்டி சாண்டர்ஸ் பேசியது அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. சாண்டர்ஸின் கொள்கைகளுக்காக அவருக்கு ஆதரவளித்தவர்கள் அதிலிருந்து முரண்படும் ஜோ பைடனுக்கு வாக்களிப்பார்களா என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த கொரோனா பேரிடரின்போது, ட்ரம்ப் அரசு, நியூயார்க் மாநிலத்துக்கு தேவையான உதவிகளையோ, போதிய ஒத்துழைப்பையோ வழங்காத நிலையில், அந்த மாநில கவர்னர் ஆண்ட்ரூ க்வோமோ, திறமையாகச் செயலாற்றி நோய்த் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவந்தவர். எதிர்வரும் 2024ம் வருட அதிபர் தேர்தலில் வேட்பாளராகும் வாய்ப்பிருப்பதாக கருதப்படும் க்வோமோவின் பேச்சு நேர்த்தியானதாகவும், கவனம் பெறுவதாகவும் இருந்தது. நாட்டை வழிநடத்திச் செல்லும் ஒரு அதிபர் என்பவர் அனைத்து தரப்பினருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். அத்தகைய தகுதிகள், திறமைகள் அனைத்தும் ஜோ பைடனுக்கு மட்டுமே இருக்கின்றன என பேசியது குறிப்பிடத்தக்கது.

இப்படி நடந்தேறிய முதல்நாள் மாநாட்டிற்கு எதிர்பார்த்த அளவில் மக்கள் ஆதரவோ கவனமோ கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

இரண்டாம் நாள் மாநாட்டில், முன்னாள் அதிபர் கிளிண்ட்டன், முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி, நியூயார்க் செனட்டர் சக் ஷூமர் போன்ற சீனியர்களின் ஆதிக்கமே தொடர்ந்தது. கட்சியில் இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் தங்களுடைய தரப்பினைச் சொல்ல போதிய வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டை உறுதிசெய்யும் வகையில் இதுபோன்ற மாநாடுகளில் சீனியர்களின் ஆதிக்கம் தொடர்வதை கட்சியில் ஒரு தரப்பினர் ரசிக்கவில்லை. குறிப்பாக இளம் காங்கிரஸ் உறுப்பினரான அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியா கோர்ட்டஸ் போன்றவர்கள் ஓன்றரை நிமிடங்கள் மட்டுமே பேசியதைக் குறிப்பிடலாம். கடந்த தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற, ஜனநாயக கட்சியின் இது போன்ற அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

மூன்றாம் நாள் மாநாட்டில் முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளிண்டன், சபாநாயகர் நான்சி பெலோசி, செனட்டர் எலிசபெத் வாரன், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் கேபி கிப்பர்ட்ஸ், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் என பெண்களின் குரலே ஓங்கி ஒலித்தது.

அன்றைய தினம் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சுதான். ஏனெனில் ஜோ பைடன் வயது முதிர்ந்தவர் என்பதால், அவர் அதிபர் வேட்பாளராவதை ஒபாமா விரும்பவில்லை என்பதைப் போல ட்ரம்ப் ட்விட்டியிருந்தார். இந்த சந்தேகங்களை எல்லாம் தூள் தூளாக்கும் வகையில் இருந்தது ஒபாமாவின் பேச்சு.

கடந்த நான்கு வருடங்களில் அதிபர் ட்ரம்ப் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதோடு, தன்னுடைய முதிர்ச்சியற்ற, அடாவடித்தனமான பல அரசியல் நிர்வாக முடிவுகளினால் நாடு பலவகையிலும் தன் மதிப்பை இழந்து எல்லாதரப்பிலும் பாதிக்கப்பட்ட, அமைதியற்ற ஒரு தேசமாக மாறியிருப்பதாக குற்றம் சாட்டினார். இந்த அவலத்தில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டை மீட்டெடுக்க, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பண்பான, மனிதநேயம் கொண்ட பைடனே பொறுத்தமான நபராக இருப்பார். எனவே அனைவரும் அமெரிக்காவின் சிறப்பான எதிர்காலம் கருதி ஜோ- கமலா கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கடந்த தேர்தலில் கட்சியில் இருந்த அதிருப்தியாளர்களின் வாக்குகள் ஹில்லரிக்கு கிடைக்காமல் போனதைப்போல இம்முறையும் நடந்துவிடக்கூடாது என்பதில் ஜனநாயகக் கட்சியினர் மிகக் கவனமாக இருப்பதை பலருடைய பேச்சினூடே காண முடிந்தது. ஹில்லரி க்ளிண்டன் ஒரு படி மேலே போய் “this can’t be another woulda coulda shoulda election” என பேசியதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் நாளின் முத்தாய்ப்பாய் அமைந்தது, துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸின் உரை. எந்த நாட்டில் ஒரு காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்ததோ, எந்த நாட்டில் கருப்பின மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்பட்டனரோ அந்த நாட்டில் அவர்களின் பிரதிநிதியாக தான் துணை அதிபர் வேட்பாளரான பெருமிதம் அவர் பேச்சின் நெடுகே வெளிப்பட்டது. தன் பெற்றோர் பற்றியும், இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் நினைவு கூர்ந்தவர், புலம் பெயர்ந்தவர்களின் வலியுணர்ந்தவராக, கைவிடப்பட்ட பெண்களின் குரலாக, ஆதரவற்றவர்களின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். கல்வி, வேலைவாய்ப்புகள், பொது சுகாதாரம் போன்றவற்றில் நிலவும் சமத்துவமின்மைக்கு எதிரான தனது நிலைப்பாடுகளை, தான் முன்வைக்கப் போகும் தீர்வுகளைப் பற்றி பேசினார். சிறந்த பேச்சாளரான கமலா தன் பேச்சில் அதிபர் ட்ரம்ப் மீதான தனது குற்றச்சாட்டுகளை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தார். மக்கள் கூடியிருக்கும் மாநாடாக இருந்திருந்தால் இந்த பேச்சுக்கு அரங்கு நிரம்பிய கரவொலியும் பாராட்டுக்களும் கிடைத்திருக்கும்.

மாநாட்டின் கடைசிநாளில், அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், ஜனநாயக கட்சியின் நியமனத்தை ஏற்றுக்கொண்டு பேசினார். நாட்டின் ஆன்மாவுக்கான யுத்தகளம் இந்த தேர்தல் என குறிப்பிட்டார். தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ட்ரம்ப் நாட்டையும் மக்களையும் காக்கத் தவறிவிட்டார். எனவே அந்த நிலையை மாற்றி அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம் என வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜனநாயகக் கட்சியின் இந்த மெய்நிகர் தேசிய மாநாடு தேர்தல் களத்தில் எதிர்பார்த்த அளவிற்கு உற்சாகத்தையோ, அதிர்வலைகளையோ ஏற்படுத்த தவறிவிட்டதாக பெரும்பான்மையான அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்றவராக ஜோ பைடன் இல்லை என்கிற விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை. அதே போல துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலரியைப் போலவே மேல் தட்டு மக்களிடம் மட்டுமே அணுக்கமாக இருப்பவர் என்கிற குற்றச்சாட்டும் ஜனநாயக கட்சியினருக்கு பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

இதனால் ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பம் முதலே, பைடனின் குணாதிசயங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பேசிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் பேசிய அனைவருமே பைடன் மிகவும் கண்ணியமான, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சாமானியனாக, அதிபர் பதவிக்குப் பொருத்தமானவராக, எதிர்க்கட்சியினருடனும் நட்பு பாராட்டி இணைந்து செயலாற்றும் ஆற்றல் மிக்க, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பான தலைவராக இருப்பார் என்கிற பிம்பத்தை உருவாக்குவதில் கவனமாய் இருந்தனர். இதைத்தவிர, தனிப்பட்ட வாழ்வில் ஜோ ஒரு நல்ல கணவர், குடும்பத் தலைவர், உண்மையான கிருஸ்துவர் போன்ற குறிப்பிடல்களும் பேசப்பட்டன. 

குழந்தை பராமரிப்பில் துவங்கி மக்களைப் பாதிக்கும் துப்பாக்கி கலாச்சாரம், பருவநிலை மாற்றம், நிறவெறிக்கு எதிரான போராட்டம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என ஒவ்வொன்றிலும் ட்ரம்ப்பின் நிலைப்பாடுகளில் இருந்து ஜோ-கமலா கூட்டணி எந்த வகையில் மாறுபடுகிறார்கள் அது எந்தெந்த வகையில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றியும் மிகத் தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பேச்சாளர்கள் ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பேரிடர் அபாயத்திற்கு அஞ்சி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வரத் தவறினால் அது ட்ரம்ப்புக்கு சாதகமாய் அமைந்துவிடக்கூடும் என்பதால் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் வழியே அனுப்பும் வழிமுறைகளை அதற்கான வாய்ப்புகளைப் பற்றி ஒபாமா துவங்கி அனைவரும் வலியுறுத்திப் பேசியதும் கவனத்தில் கொள்ளக்கூடியது. கடந்தமுறை தேர்தல் முடிவுகளில் முன்னணியில் இருந்தாலும், எலக்டோரல் வாக்குகளில் கோட்டை விட்டதைப் போல இம்முறை நடந்துவிடக்க் கூடாது என்பதில் ஜனநாயகக் கட்சியினர் தீவிரமாய் இருப்பதை பலரது பேச்சுக்களின் ஊடே உணரமுடிந்தது.

மாநாட்டின் முடிவில் நடைபெற்ற பல்வேறு கருத்துக் கணிப்புகளின் படி இப்போதைக்கு பைடன், ட்ரம்ப்பை விட முன்னிலையில் இருக்கிறார். இந்த நிலமை வரும் நாட்களில் எப்படியும் மாறலாம். இதுவரை நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் இருந்து இந்த அதிபர் தேர்தல் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் நடைபெறுகிறது. 
அமெரிக்காவிற்குத் தேவை ட்ரம்ப்பின் ஆரவாரமான அலட்டல்களா அல்லது ஜோ பைடனின் அமைதியான ஆனால் அழுத்தம் திருத்தமான திட்டங்களா என்பதை அடுத்த அறுபது நாள் அனல் பறக்கும் பிரச்சாரங்களும், இரண்டு கட்சியினரின் தேர்தல் வியூகங்களும் தீர்மானிக்கும். ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.