வ.அதியமான் கவிதைகள்

பெருவாழ்வு

உண்டு
கழித்து
உழன்று
உறங்கி
பெற்று
பெருகி
வற்றி
ஒடுங்கி

ஒரு முழு வாழ்க்கையை
இந்த வரவேற்பு அறையிலேயே
சாகும் வரை
வாழ்ந்து முடித்துவிட
சபிக்கப்பட்டிருக்கிறேன்
அல்லது
அருளப்பட்டிருக்கிறேன்

தூண்டிலிட்டு
காத்திருக்கவும்
பழகிவிட்டேன்
விழிகளும்
மொழிகளும்
செவிகளும்
முற்றிலும் அற்ற
தூய கொழுத்த கணங்கள்
எப்போதாவது
அரிதாக
மாட்டிக் கொள்வதுண்டு

அத்தனை
அலைகளோடும் சேர்ந்து
ஒரு முழுக்கடலையே
ஒரு சில மிடறில்
உறிஞ்சிவிடுவதைப் போலத்தான்
மொத்த வாழ்விற்கான
இத்தனை இசையையும்
இந்த சில கணங்களுக்குள்
பாடிக்கொள்கிறேன்

மாமழை

கோடி வேர்களில்
அந்தரத்தில்
பூத்து நிற்கிறது
ஒரு மழைக்காடு

கோடி கால்களில்
விரைந்து
மண்ணிறங்குகிறது
ஒரு மழைக் குதிரை

கோடி விழிகளில்
நிலம் நோக்கி
நகுகிறாள்
ஒரு மழைக் குமரி

கோடி கள்ளச்சாவிகளில்
யாருமறியாது
வான் திறக்கிறான்
ஒரு மழைத் திருடன்

கோடி இதழ்களில்
திகட்ட திகட்ட
முத்தமிடுகிறாள்
ஒரு மழைக் காதலி

கோடி சிறகினில்
பறந்தபடி
வானளக்கிறது
ஒரு மழைப் பறவை

கோடி ஸ்வரங்களில்
இசையூறி
புவனம் நிறைக்கிறது
ஒரு மழைப் பாடல்

இன்னும்
எவர் பாதங்களும்
படாத
வாழ்வின்
தாழ்வாரமெங்கும்
வழிய வழிய
பொழிந்து கொண்டுதான்
இருக்கிறது
அந்த வான் கனிந்த
மாமழை

கானகம்

நம் வீட்டு
படுக்கையறையின்
நிசிப்பொழுதில்
ஒரு பாயும் புலியை
வரைந்தெடுக்கும்
உன் குறட்டையின்
உறுமலை
கொஞ்சம்
நிறுத்திக்கொள்ள மாட்டாயா?

எழுந்து விரையும்
அந்தப் புலியின்
மஞ்சள் நுனிவால்
அசைந்து அசைந்து
இங்கொரு கானகத்தை
வரைந்தெழுப்பி
நிறைக்கிறது

தாங்கொனாத
இச்சின்னஞ்சிறு அறை
செறிந்தடர்ந்த
அப்பெருவனத்தால்
பிதுங்கி வழிகிறது

இரண்டாய்
பிளக்கப் போகும்
ஒரு பாறையின்
வெடிகணத்திற்கு
முந்தைய கணத்தின்
கள்ள மௌனத்தோடு
மூச்சு முட்ட
விம்மி உறைகிறது

இரவெல்லாம்
நான் அந்த
விழிகளற்ற புலியின்
முதுகில் ஏறியமர்ந்து
அலைவது கூட
பரவாயில்லை
சகித்துக் கொள்கிறேன்

ஆனால்
ஒவ்வொரு புலரியிலும்
ஒவ்வொரு பெருவனம்
கரைந்தழிவதைத்தான்
என்னால்
தாங்கிக் கொள்ளவே
இயலவில்லை
கண்மணி

மாயா

தாளாது ததும்பியிருந்த
குமிழி ஒன்று
தடமிலாது வெடித்து
காற்றோடு கரைந்து போகும்
கணம்
வெறும் மாமிச தேகமாகி
என்மீது சரிவது
இவள் தானா?

அப்படி எனில்
இத்தனை பொழுதும்

எழுந்து நின்றிருந்த
வானவில்லும்
எரிந்து ஒளிர்ந்திருந்த
மின்மினியும்
வண்ணம் நுரைத்திருந்த
புஞ்சிறகும்
வானுக்கெழுந்திருந்த
பாயும் அருவியும்
கள் நொதித்திருந்த
விரிகடலும்
மணி செழித்திருந்த
பொன் வயலும்
ஸ்ருதி கூடியிருந்த
மகர யாழும்

இவள் இல்லையா?

கடவுளே
இத்தனையும்
அந்த வெறும்
குமிழியின்
சிறு நடனம்
மட்டுமே தானா?

வேய்குழல்

இன்னும்
உனக்கு போதவில்லையா?
சலிக்க சலிக்க
என் செங்குருதியில்
புனலாடியது?

இனித்திருக்கும்
என் மாமிசங்களை
சிறுகச் சிறுக
துளையிட்டு
வெளியே வா

ஒளியின் வாசமறிந்த
உன் குட்டிச் சிறகோடு
அதோ அந்த வானையும்
சேர்த்திழுத்துக் கொண்டு
பற பற
மேலும் மேலும்
பற பற

என் மாமிசத்தில் நுழைந்த
கடுங்குளிர் காற்று
நீ சுவைத்துவிட்டுச் சென்ற
அத்தனை துளைகளிலும்
தேனாய் பீறிட்டு
வழிகிறது இப்போது

நீ அருந்திச் சென்ற
அத்தனை
செங்குருதியும் தான்
இப்படி
இசையென ஆயிற்றா?
இதோ
எனக்கும் முன்பாகவே
என் மாமிசங்கள்
முக்தி எய்தின

மூங்கிலென
நானெழுந்ததும்
வண்டென
நீ நுழைந்ததும்
இவ்வனத்தில்
இதற்கெனத்தானா?

மெய்ஞானம்

நாணத்தின்
கொழுத்த சரடறுத்து
கட்டக் கடைசியில்
என்னை
களைந்தெறிந்துவிட்டேன்

எஞ்சியிருக்கும்
இந்த நிர்வாணத்தை
எங்கும் எவருக்கும்
பங்கு வைப்பேன்

நெகிழ்ந்துருகிய சுவர்கள்
மறைந்தொழிந்து போன
இந்த நொடி
இந்த உலகம்
ஒரு குளியலறையாகிவிட்டது

வான் நீலம்
பொலிய பொலிய
அத்தனையும்
களைகிறேன்
அத்தனையும்
கரைகிறேன்

கடவுளே
இறுதியாக
நான்
ஞானமெய்திவிட்டேன்

***

4 Replies to “வ.அதியமான் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.