பொம்மை

லாவண்யா சத்யநாதன்

அம்மா… 

துணியைப் பிழிகிறாற்போல் வலி என் உடலைப் பிழிகிறது.. படுக்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. நிற்க பயமாயிருக்கிறது. வலி என் உயிரைப் பிழிகிறது.. மனம் நடுங்குகிறது.. உடலெல்லாம் வேர்க்கிறது.

என்ன சோதனை! இந்த நேரம் பார்த்து செந்தில் ஊரிலில்லை.. டாக்டர் கணித்த தேதிக்கு முன்பே இப்படி எதிர்பாராமல் வலியெடுக்குமென்று யாருக்குத் தெரியும்?

எனக்கே தெரியாதபோது செந்திலுக்கு எப்படித் தெரியும்? ‘ ‘இன்னும் எட்டு நாள் இருக்கு. ரெண்டு நாளைல ஓடியாந்துருவேன்’ என்று சொல்லித்தான் சென்றான்.    

நாலைந்து முறை போன் செய்தேன் .தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஏதேனும் ஆபீஸ் மீட்டிங்கில் இருக்கிறானோ? ரீ சார்ஜ் செய்ய மறந்துவிட்டானோ? தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறானோ? செல்போனில் பேட்டரி தீர்ந்துவிட்டதோ? கைப்பேசியைத் தொலைத்துவிட்டானோ? வலியின் நடுவில் அதற்கு மேல் யோசிக்க என்னால் முடியவில்லை…

அம்மா உடனே அடுத்த வீட்டுக்கார எலக்ட்ரீசியன் அண்ணனிடம் போய் சொன்னாள். அவர் உடனே ஆட்டோவை அழைத்து வரச் சென்றிருந்தார். ..வலி தாங்கமுடியாமல் அழுதேன்.

 ‘பொம்பளையாப் பொறந்துட்டோம்.! என்ன செய்யறது? தாயி, கொஞ்சம் பொறுத்துக்க. ஆட்டோ வந்துரும்.’’

ஆட்டோவில் அம்மாவும் நானும் ஏறிக்கொண்டோம். ஆட்டோவின் குலுக்கலில்வலி அதிகமானது. ஏய்! செந்தில்! இன்னொருமுறை பசப்பிக்கொண்டு என் பக்கத்தில் வந்தால் உன்னை என்ன செய்கிறேன் பார்! கடவுளே, அந்தப் பாவி செய்த அட்டகாசத்துக்கு நான் எப்படி அவஸ்தைப்படுகிறேன்!?

மருத்துவமனையில் உடனடியாக லேபர் வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள். என் உடல் இரண்டாகப்  பிளந்துவிடுவது போல் வலித்தது. அப்போது என் உடலில் நிகழ்ந்தவைகளை உணரும்போது எனக்கே அருவருப்பாயிருந்தது. எந்த சாதியானாலும் எந்த தேசமானாலும் எந்த ஜீவராசியானாலும் பெண்ணாய் பிறப்பது ஒரு சாபமென்ற எண்ணம்தான் வந்தது… இந்த நிலையில் என்னைப் பார்த்தால் ‘நீ எனக்கு வேணும்’ என்று செந்தில் சொல்வானா?

அசதியில் உறங்கிப் போனேன். விழித்தெழுந்தபோது அம்மா முகமெல்லாம் பல்லாய் நின்றிருந்தாள். “ஆம்பளைப்புள்ளை”

நானும் சிரித்தேன்…இருப்போமா செத்துப்போவோமா என்று நினக்குமளவுக்கு வலியில் துடித்த எனக்கு எப்படி சிரிப்பு வந்தது? எனக்கேத் தெரியவில்லை..

உடம்பு வெலவெலத்துப் போயிருந்தது. உரக்கப் பேசக்கூடத் தெம்பில்லை.

நர்சிடம் ஜாடையில் கேட்டேன். ‘பாப்பா எங்கே?’

‘மொத பிரசவமா? நர்ஸ் கேட்டாள். ஆமாமென்று தலையாட்டினேன்.

 ‘பேபியை க்ளீன் பண்ணிகிட்டிருக்காங்க. முடியட்டும். கொண்டுவரேன்’ என்றாள். .

அதற்குள் நான் என் மகனைக் கற்பனை செய்தேன். செந்தில்போல இருப்பானா? என்னைப் போல இருப்பானா? இருவர் போலவும் இருக்கவேண்டும். என் கதுப்புக் கன்னங்கள் என் சுருட்டைமுடி, செந்திலின் அகன்ற கண்கள் இருக்கவேண்டும். நோஞ்சானாய் இருக்கக்கூடாது.

செந்தில்போல் பயில்வானாட்டமிருக்கவேண்டும். மனசு பரபரத்துக் கொண்டிருந்தது.

“மூணு கிலோ இருக்கறான் உன் புள்ளை”’ என்றபடியே நர்ஸ் குழந்தையைக் கொண்டு வந்தாள்.

 ‘எச்சா, கொறவா?’ அம்மா கேட்டாள்.

 ‘ரெண்டரை கிலோ நார்மல். இது அமுல் பேபி’ என்றவாறே குழந்தையை என்னருகில் கிடத்தினாள். செந்தில் என்மேல் கொண்ட காதலின் சாட்சியைப் பார்த்து நான்பரவசப்பட்டேன்.  முத்தமிட்டேன்.

விழித்துக்கொண்ட பாப்பா அழுதது.

”அம்மா வேலையை ஆரம்பி” என்று குழந்தையை  நர்ஸ் என்னிடம் தந்தாள். ஆடைகளைச் சரிசெய்துகொண்டு குழந்தையை என் மார்பிலணைத்துக் கொண்டேன்.

கடவுள் தன் படைப்புத் தொழிலை பெண்ணின் வயிற்றில் நிகழ்த்துகிறான். காத்தல் தொழிலை பெண்ணின் மார்பில் ஆரம்பிக்கிறான்…பெண்ணாகப் பிறந்தது பெருமையாக இருந்தது..

குழந்தை வீறிட்டு அழுதான். அம்மாடி! எத்தனை கோபம்! ‘ஏன் பேபி அழுவுது?’ அமுல் பேபி க்ரை பேபி என்றவாறே நர்ஸ் அருகில் வந்தாள். குழந்தையின் உதடுகளைப் பிரித்துப் பார்த்தாள்.

‘மக்குப் பொண்ணே’ என்று செல்லமாய் கடிந்துகொண்டாள்.

‘அம்மா, நீங்க கொஞ்சம் அந்தாண்டை போயிருங்க’ என்று அம்மாவை அனுப்பினாள். என்னைச்  சுற்றி திரையைப் போட்டாள்.

 ‘இப்படி, தெரியுதா?’ என்று குறும்புச் சிரிப்பு சிரித்தாள். வெட்கத்துடன் நானும் சிரித்தேன். ‘பேபி பால் குடிக்கும் போது யாரும் பாக்க கூடாது. உங்கவீட்டுக்காரருக்கும் அதே ரூல்தான்’ என்றபடியே நகர்ந்தாள்.

செந்திலுக்கு வீட்டுக்காரரென்ற பதவி எனக்கு வேடிக்கையாகவிருந்தது. ஒரே ஊரில் பள்ளி நாட்களிலிருந்து பழகியவர்களென்பதாலோ என்னவோ, புருசன் பொண்டாட்டி முறைமைகள் எதுவும் எங்களுக்குள் இருக்கவில்லை. நான் செந்திலைப் பெயரிட்டுத்தான் அழைத்தேன். செந்திலும் கணவனாய் நினைத்து என்னை அதிகாரம் செய்ததுமில்லை. நாங்கள் சிநேகிதர்களாகவே இருந்தோம்.

சில நிமிடங்களில் குழந்தை தூங்கிப்போனான். மீண்டும் செந்திலுக்குப் போன் செய்தேன். மறுபுறம் ரிங்டோன் கேட்கவில்லை.

சோர்வு கண்களைச் சொருகியது. தூங்கினேனா விழித்திருந்தானே தெரியவில்லை. செந்திலை நினைத்துக் கொண்டேன்.. கடுவன் பூனை போல் என்னை எப்படி துரத்தினான்? கிராமத்தில் அவர்கள் வயலைத் தாண்டி நான் போகும்போதும் வரும்போதும் எப்படி என்னை வழிமறிப்பான்?. எப்போதும் கேலியும் கிண்டலும் நகைச்சுவையுமாய் என்னிடம் எப்படியெல்லாம் பேச்சுக் கொடுப்பான்?

 ‘ ஏ பானு, பாம்பைக் கடிச்சுட்டியாமே?’

 ‘பாம்பு வந்து உங்கிட்டே சொல்லிச்சாக்கும்’’

 ‘சொல்லிச்சாவா? ஓன்னு அழுதுச்சு. மருந்துகட்டு போட்டு உங்க தோட்டத்துல வுட்டுட்டு இப்பத்தான் வாரேன்.’

எங்கள் வெற்றிலைக் கொடிக்காலில் வெற்றிலை பறிக்கும்போது என்னைப் பச்சைப் பாம்பு கையில் கொத்திவிட்டது. நான் பயத்தில் கையை உதறியபோது தூரப்போய் விழுந்துவிட்டது.

‘பல்லு மட்டும்தான் பட்டிருக்குது. எதுக்கும் இருக்கட்டும்’ என்று பச்சிலைக் கட்டு போட்டிருந்தார். பண்டிதர். அதற்குத்தான் இத்தனை கிண்டல்.

நானும் செந்திலின் கண்ணில் படக்கூடாதென்று எத்தனையோ எச்சரிக்கையாகத்தான் வருவேன். ஆனால் அந்த தடித்தாண்டவராயன் எப்படியும் என்னைப் பார்த்துவிடுவான்.

 ‘ஏ பானு, முந்திரிப்பழம் பறிச்சு வெச்சுருக்கறேன்.. ருசியாருக்கு ரெண்டு சாப்டுட்டுப் போ’ என்றான் ஒரு நாள்.

 ‘முந்திரிப் பழமும் வேண்டாம். உன் சங்காத்தமும் வேண்டாம்’ என்று துடுக்காகச் சொன்னேன்.. அன்று ஏனோ எனக்கு மனசு சரியில்லை

 ‘அப்படி என்ன எம்மேல குத்தம் கண்டுட்டே? நான் எங்கனாச்சும் திருடினேனா? எவனையாவது கொலை செஞ்சேனா?  உன் சங்காத்தம் வேண்டாம்னு எடுத்தெறிஞ்சு சொல்லிப்புட்டே?’

 ‘பொறவென்ன? போக வர என்னை சீண்டிகிட்டிருந்தா எரிச்சல் வருதில்லே”

 ‘ஒரு மனுசன் பிரியமாப் பேசினா எதுக்கு எரிச்சல் வரணும்?”

‘நீ பிரியமாப் பேசறதுக்கு, நான் உனக்கு மொறப்பொண்ணா? ஏ, பானு, ஏ,பானுன்னு வயக்காட்டுலே பொண்டாட்டியைப் பாத்து புருசன் கூவற மாதிரி கூவறே? உனக்கு கிறுக்கு பிடிச்சுப் போச்சா?”

தூரத்திலிருந்து செந்தில் எழுந்து வந்தான். அவனுடைய முகம் சுருங்கிப்போனது.

‘ஆமா, எனக்கு கிறுக்கு பிடிச்சு போச்சு..ஏன் நான் உன்னையே நெனச்கிட்டிருக்கேன்னு எனக்கே புரியலே.. எந்த வேலையும் ஓடமாட்டேங்குது. எனக்கு நீ வேணும்னுமட்டும்தான் எனக்குத் தோணுது. வெக்காளியம்மன் சத்தியமா சொல்றேன், பானு. எனக்கு வேணும்.. என் மனசில காயம் பண்ணிட்டேன். பொண்ணு கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்’’

செந்திலின் குரல் விம்மியது. கண்களில் நீர் தளும்பியது. .அந்த ஒரு விரல்சொடுக்கு நேரத்தில் இருபத்து நாலு வயது செந்தில் எனக்கு பொம்மைக்காக அழும் குழந்தையைப் போல் தெரிந்தான். குழந்தையாய் இருந்தால் தோளில் சாய்த்துக் கொண்டு சமாதானம் செய்யலாம். இவனைத் தோளில் சாய்த்துக் கொள்வது ஆபத்து என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனாலும் அவனுடைய மென்மையான மனதை நோகடித்திருக்க வேண்டாமென்று நினைத்தேன்.

‘‘கோவத்துல ஏசிட்டேன். மன்னிச்சிரு’  என்று வருத்தம் தெரிவித்தேன்.

 ‘நீ எனக்கு வேணும்’ என்ற செந்திலின் வார்த்தைகள் என் மனதில் ஒட்டிக் கொண்டது. இருபது வயது பெண்ணைப் பார்த்து இருபத்து நாலு வயது ஆள் ‘நீ எனக்கு வேணும்’ என்று சொன்னால் இனந்தெரியாத மகிழ்ச்சி ஏற்படத்தானே செய்கிறது.? அதிலும் அவளைவிட படிப்பு, சாதி, சொத்துசுகம் அத்தனையிலும் உயரமான இடத்தில் இருக்கும் ஒருவன் ‘நீ எனக்கு வேணும்’ என்று விம்மும் குரலில் சொன்னால் அவன்மீது ஈர்ப்பு ஏற்படாமலிருக்குமா? எப்படியும் இன்னும் ஒரு வருசத்திலோ அல்லது இரண்டு வருசத்திலோ இன்னொரு வீட்டுக்கு நான் போகத்தான் வேண்டும். முன்பின் தெரியாத ஒருவனின் அன்பை சம்பாதிக்கவேண்டும்.

அதைவிட என்மீது பிரியப்படும் ஒருவனை நான் ஏற்றுக் கொண்டாலென்ன?

கொடிக்காலில் வெற்றிலை பறித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.. களத்துமேட்டில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தவாறே ‘ஏ பானு வெத்தலை பறிச்சுட்டுப் போறியா? இங்கே மணக்குது’ என்றான்…

 ‘துளிர் வெத்தலை மணக்காம என்ன செய்யும்?’ என்றவாறே கைகளில் ஜாடை காட்டி செந்திலை அழைத்தேன்.. அருகில் வந்தபோது வெற்றிலைக்கூடையை எடுத்து அவன் முகத்துக்கு நேராக வைத்தேன். ‘நான் நாளைக்கு பொழுது சாய வருவேன்.. எனக்கு முந்திரிப் பழம் தரணும்’ என்றவாறே என் முகத்தை முந்தானையால் மறைத்துக் கொண்டு செந்திலின் முகத்தைப் பார்த்தேன்.. அவன் முகம் மாலைச் சூரியனாய் பிரகாசித்தது.   

‘‘சோறும் கட்டுத்துணியும் வாங்கித் தர அப்பன் வேணும். படிக்க வெக்க அப்பன் வேணும். பொண்ணு கட்டணும்னா அப்பன் வேணாம். உங்க நோக்கத்துக்கு எவளை வேணா இளுத்துகிட்டு வருவீங்க. நாங்க ஒத்துக்கணும். நல்லா இருக்குடா உன் நாயம்…. குடும்பங்கறது ஒரு கோட்டை மாதிரி. அதுல யாரை வேணும்னாலும் உள்ளே விட முடியாது… அந்தக் கொசவன் பொண்ணைத் தான் கட்டிக்குவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கறதானா ஒரு வேலையைத் தேடிக்கிட்டு கண்மறைவாப் போயிரு.. எனக்குப் புள்ளையே பொறக்கலேன்னு நெனச்சுக்கறேன்.’ என்றார் செந்திலின் அப்பா.

 ‘சீர் செனத்தி இல்லாம ஒரு பஞ்சைப் பொண்ணை மருமவளா கொண்டுவந்தா பொன்னம்மான்னு சாதி சனம் காரித் துப்பும்’ என்றாள் செந்திலின் அம்மா.

“அந்தப் புள்ளையாண்டான் உன்னை வசியம் பண்ணிட்டான்.. நீ தலகாலு புரியாம குதிக்கறே பானு.. வயசுக் கோளாறு.. அப்படி பேசவெக்குது. சேலை முள்ளுல விளுந்தாலும் முள்ளு சேலைல விளுந்தாலும் சேதாரம் சேலைக்குத்தான்.. புரிஞ்சுக்க. அதெல்லாம் இல்லை. நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு வாசப்படி தாண்டிப் போறியா, போ. ஆனா அப்பறம் கண்ணைக்  கசக்கிகிட்டு வராதே.’ என்றார் அப்பா. ..

“ஆத்தா அப்பன் சொன்னபடி இந்தக் கொசவனைக் கட்டிகிட்டேன். ஒசத்தியா சொல்லிக்க எதுனாச்சும் உண்டா? அத்தங்காட்டியும் சிறுசுங்களை சேத்து வெச்சா என் பொண்ணாவது சொகப்படும்’’ எங்கள் காதலை ஆதரித்தவள் அம்மா மட்டும்தான்.

செந்தில் பாலிடெக்னிக் படித்திருந்தான் .எங்கள் அதிருஷ்டம் செந்திலுக்கு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டிருந்த கம்பெனியின் சென்னைக் கிளையில் வேலை கிடைத்தது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டும் கம்பெனி. செந்தில் வேலைக்குச் சேர்ந்து ஆறுமாதங்கள் கழித்து சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். பதிவு செய்துகொண்டோம். சென்னை வந்தோம்.

சட்டி குண்டானிலிருந்து எல்லாம் வாங்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாய். செந்தில் வீட்டில் சாமான்களை நிரப்பினான். எனக்கு விலை அதிகமான சேலைகள் வாங்கித் தந்தான்..’’ மாசத்துல பாதிநாள் வெளியூர் டூட்டி வருது. ஒண்டியா இருப்பே.. ராவில கட்டிலிலே பேசமுடியாது. போன்லே பேசுவோம்’’ என்று ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்திருந்தான். எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை.

‘நெறய செலவு பண்றியே? கடன் வாங்கறியா?’ என ஆதங்கத்துடன் கேட்டேன்.

 ‘கஞ்சப் பிசுநாரி தங்கவேல் உடையார் பையன் நானு. கடன் வாங்குவேனா?

வெளியூர் போனா கம்பெனில ஓட்டல், சாப்பாட்டுச் செலவுக்கு பேட்டா தருவானுங்க. அதுல மிச்சம் பிடிப்பேன். பேட்டாவுக்கு ஆசைப்பட்டுத்தான் வெளியூர் போறத்துக்கு ஒத்துக்கறேன்.. காசு தரானுங்க. ஆனா கசக்கிப் பிழியறானுங்க’’

குழந்தை அழுதான். அம்மா வேலை செய்தேன். சில நிமிடங்களில் தூங்கிப் போனான். செந்திலுக்குப் போன் செய்தேன். மறுபுறம் ஒலிக்கவில்லை..முன்பெல்லாம் நான் மிஸ்டு கால் தருவேன். அடுத்த நிமிஷம் செந்திலிடமிருந்து போன் வரும். இரண்டு வருடங்களில் செந்திலிடம் கேலிப் பேச்சும் உற்சாகமும் குறைந்துபோயிவிட்டது.

வேலைப்பளுவா தெரியவில்லை. ஆனால் செந்தில் இரண்டு வருடங்களில் மிகவும் மாறிப்போய்விட்டான்.

‘என்ன ஊர் இது? எந்நேரமும் வெக்கை.. எங்கே போனாலும் நெரிசல். எதற்கெடுத்தாலும் அடாவடி.பிடிக்கவேயில்லை’ என்று சலித்துக் கொள்வான்.

 ‘வேலையை விட்டுடலாம்னு யோசிக்கறேன்’ செந்தில் அதிர்ச்சியைத் தந்தான், ஒருநாள்.

 ‘ஏன்?’

 ‘ஒரு ஆள் சம்பளத்துக்கு மூணு ஆள் வேலை வாங்கறானுங்க. மனுசனை மனுசனாவே மதிக்கமாட்டேன்றானுவ. ஒருத்தன் கிட்டே கைகட்டி வேலை செய்யக் கூடாது பானு. நாய் பொழப்பு. வெள்ளாமை பண்றதுதான் கௌரவம்”

“வேலைய விட்டியின்னா ரெண்டு பேரும் சேந்து பிச்சையெடுக்கிறதா? இன்னும் நாலு மாசம் ஓடிச்சுன்னா கொளந்தை வேற பொறக்கப்போவுது. ’

 “ஏன் பிச்சையெடுக்கணும். எங்க பாட்டன் சொத்துல எனக்கு பங்கு உண்டுன்னு கம்பெனி வக்கீல் சொல்றாரு. அதனாலே எங்கப்பாரை எனக்குச் சேரவேண்டிய சொத்தைக் கொடுன்னு கேக்கப் போறேன்’’

அதன்பிறகு செந்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகச் சொன்னான்.

செந்திலின் அப்பா ஓரிருமுறை  அவனை ஆபீசில் பார்த்திருக்கிறார்.. செந்தில் சொல்லித்தான் எனக்கும் தெரியும். எதற்காக வந்தார் எனக் கேட்டேன். ‘எல்லாம் சொத்துப் பிரச்சினைதான்’ என்றான் செந்தில். ஒருமுறை வீட்டுக்கும் வந்தார்..சாப்பிடச் சொன்னேன். ‘‘கருவேப்பிலைக் கன்னு மாதிரி எனக்கிருக்கற ஒரே மவனை எனக்குத் தூரமாக்கிட்டியே பொண்ணே, உங் கையால எப்படி சாப்புடறது?’ தோளிலிருந்த துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

 ‘ஐயா., நான் செந்திலுக்கு களுத்தை நீட்டினது நெசந்தான். ஆனா உங்களுக்கு எந்தத் துரோகமும் கனவுலே கூட நெனக்கலே.. உங்க சொத்து சுகத்துக்கு ஆசைப்படலே..எனக்கு வேணவும் வேணாம்’ என்றேன்.

எனக்கு ஒன்றுமட்டும் புரிந்தது. செந்திலின் அப்பாவுடைய மேல்சாதி மனசு என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதால் அவருடைய காசு பணம் என்னை ஏற்கவில்லை.

செந்திலுக்கு மீண்டும் போன் செய்தேன்..இணைப்பு கிடைக்கவில்லை. சற்று நேரம் கழித்துப் போன் ஒலித்தது. செந்திலாகத்தானிருக்கும்.

”செந்தில்,.நமக்கு ஆம்பளைப்புள்ளை பொறந்திருக்குறான்.! உன் மகன் உன்னை மாதிரியே தாட்டியாயிருக்கிறான். உன்னைப் போலவே யானைக் காது .நர்ஸ் அக்கா அமுல்பேபின்னு பேர் வெச்சுருக்காங்க. அப்பாவைப் பாக்கணும்னு அழுவறான்….’

”அப்படியா? இதோ ஓடியாந்துடறேன்.. சட்டை காப்பு எல்லாம் வாங்கிட்டு வரேன். நீ சொஸ்தமா இருக்கறியா பானு?”

கைப்பேசியின் ஒலியை நிறுத்தி பேசத் துவங்குமுன்பே என் மனசு ஒரு கற்பனைப் பேச்சையல்லவா தயாரிக்கிறது!

”அலோ. கொசத்தெரு பெருமாளு பொண்ணு பானுதானே பேசறது?”

”ஆமா, நீங்க யாரு பேசறது?”

”நா தியாகதுர்கத்திலேருந்து சோலை நாயக்கர் பேசறேன்”

சோலை நாயக்கர் அப்பாவின் உடன் பிறவாச் சகோதரர்.. பேங்க் மூலமாக ஆடு, மாடு வாங்கித் தந்து அப்பாவுக்கு உதவியவர். வெற்றிலைக் கொடிக்காலை அப்பாவுக்கு விற்று மெதுவாகப் பணம் வாங்கிக் கொண்டவர்.. பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தவர்.

”பானுதான் பேசறேன், பெரியப்பா? நல்லா இருக்கீங்களா? அப்பா நல்லாருக்காரா?”

”பிள்ளைப்பேறு நல்லபடியா ஆவணுமேன்னு உங்கப்பா வெசனப்பட்டுக் கொண்டிருந்தாரு’

  ”உங்களுக்குப் பேரன் பொறந்திருக்கான் பெரியப்பா”

  ”எப்ப?”

”இன்னிக்கு காலைல”

”ரொம்ப சந்தோசம்.. சின்னப்புள்ளைக்கு ஒரு சின்னப்புள்ளே” கடகடவெனச் சிரித்தார்.

”உங்கம்மா அன்னம் பக்கத்துல இருக்குதா? போனை அம்மாகிட்டேகொடு தாயி”

போனை அம்மாவிடம் கொடுத்தேன். அம்மாவின் கண்கள் கலங்கின. சேலையால் வாயை மூடிக்கொண்டாள்.. குமுறி அழுதாள். ”மூத்தாரே, எனக்கு நெஞ்சடைக்குது, பானுகிட்டே பேசுங்க,”  அம்மா போனை என்னிடம் தந்தாள்.

“பானு பேசறேன். சொல்லுங்க பெரியப்பா”

“என்னத்தைச் சொல்றது தாயி. மனசைத் தேத்திக்க..உங்க மாமனார் தங்கவேலு மவனுக்கு சொத்தை பிரிச்சு கொடுத்துட்டாரு..அத்தோட ஒரு வில்லங்கம் பண்ணிட்டாரு. உன் புருசனுக்கு ராசீபுரத்துலே வேற பொண்ணைக் கட்டிவெச்சுட்டாருன்னு பேசிக்கறாங்க. ஒரே பொண்ணாம். ராசிபுரத்துலே, ஒரு சினிமாக் கொட்டாயி, மல்லிகரைலே ஒரு சினிமாக் கொட்டாயி இருக்குதாம்.  எல்லாம் கமுக்கமா நடந்து போச்சு”

கைப்பேசி கைநழுவிப் போனது. என் உடல் நடுங்கியது. என் உயிர் பல்லியின் அறுந்தவால் போலத் துடித்தது.. சோலை நாயக்கரின் வார்த்தைகள் தீப்பந்தங்களாய் என்னை எரித்துக் கொண்டிருந்தன.

ஒரு கடுவன்பூனையைப் போல என்னை சுற்றிச் சுற்றி வந்த செந்திலா இப்படிச்  செய்தான்? ஒரு பொம்மை வேண்டுமென்று அழும் குழந்தைபோல் தெரிந்த செந்திலா இப்படிச் செய்தான்? ஆஸ்தி வேண்டாம். ஆசைப்பட்ட பானுதான் வேண்டுமென்று அடம் பிடித்து என்னை மணந்த செந்திலா இப்படிச் செய்தான்?

கடவுளே! சோலை நாயக்கர் சொன்ன செய்தி உண்மையாயிருக்ககூடாது. அது உண்மையானால் எந்தப் பெண்ணுக்கும் என் கதி நேரக்கூடாது…

மீண்டும் செந்திலின் கைப்பேசிக்கு தோடர்பு கொண்டேன்.

“நீங்கள் அழைத்த எண் உபயோகத்தில் இல்லை,” என்றது கைப்பேசி. ***

5 Replies to “பொம்மை”

  1. காதலிக்கும் போது அன்பும் காதலும் பொங்கும் ஆண் மனம் திருமணத்துக்கு பிறகு தடம்புரண்டு போவதை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

    குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கலாம் என்றாலும் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தையை ஏன் எழுத்தாளர் படைத்தார் என்ற கேள்வி எனக்கு பிறந்தது!

    // உலகத்தை வயிற்றில் பிறப்பித்து அவளது மார்பில் காக்க தொடங்குகிறாள் பெண்// எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தது.

    எதிர்பாராத திருப்பத்தை தந்து மனதில் சாதிய ஆணாதிக்க கீரலிட்டு கொஞ்சம் கசிய வைக்கத்தான் செய்கிறது இந்த சிறுகதை.

    வாழ்த்துகள்.

  2. இன்றைய எதார்த்ததைச் சொல்லும் கதை. சாதியத்திலிருந்து விடுதலைப் பெற்றால் தான் காதல் வாழும். இந்த படைப்பாளி சாதிப் பெயர்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் குறைகளுக்கு அப்பால் இளம்படைப்பாளிகள் ஊக்குவிக்கப் படவேண்டும். வாழ்த்துகள் லாவண்யா .எழுத எழுத க்குறைகள் குறையும் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.