
பாழ் வட்டம்
இன்மையின் நுண்மையில் உழலும்
அணுத் தூள் கோர்க்கும் ஊசியின் கண்
உறக்கம் கெட்டுக் கனன்று தரித்த சொப்பனம்
பரிதியின் சுவீகாரம் என்றாகிறது
அனர்த்தம் தன் ஜோதி கொண்டு விளக்கிய
அதிரூபத்தின் அர்த்த க்ஷேத்திரம்
திங்கள் இருள் அருள் சரித்த பாதையில் புலர்கிறது
வார்த்தைச் சைனியத்தின் வழித் தோன்றலாக
சோதனை ஓட்டத்தின் போலிப் போரில்
தேடிக் கூடிய சௌஜன்யக் களிப்பு
தன் பரவசத்தின் படர்-சுகத்தில்
தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொள்கிறது
வசியம் தன் ருத்திராட்சத்திலிருந்து
வெளியேற்றிய ஒரு முகம்
தனித்து விடப்பட்ட சிலையின்
உறைந்த ஒற்றை உடல்மொழிப் பாவனையாகிறது
வருங்கால அருங்காட்சியகத்தின்
பொருட்குவியலில் ஒன்றாக
முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட மழை
தன் பாலிமர் பதம் காய்ந்த காலத்தின்
சின்னம் பின்னமாகப் பதிவாகிறது