தீராத விளையாட்டுப் பிள்ளை

பார்வதி விஸ்வநாதன்

கடைசி கிருஷ்ணன் பாதம் போட்டுவிட்டு எழுந்தேன் . வாசலில் இருந்து கிருஷ்ணன் நடந்து வரும் அடிகள் இந்த வருடம் அழ்காக வந்திருந்தது திருப்தியாக இருந்தது.  மிலிடரி மார்ச் பாஸ்ட் போல , ஒரே சீராக , பாதங்களுக்கு நடுவில் இடைவெளி ஓரே அளவாய் .. பாதச்சுவடும் வளைந்து , ஒரு சின்ன கொழு கொழு குழந்தையுடையது போல .. 

வழக்கமாக முதல் நாலைந்து பாதம் ஒரு குட்டி பாப்பாவுடையது போல் அமையும். பொறுமையும் எனர்ஜியும் சரசர-வென்று குறைந்து கிருஷ்ணன் திடீரென்று 10 வயது பையன் ஆகிவிடுவான்! சட்டென்று நினைவு வந்ததும் மறுபடியும் குழந்தை பாதம் போட ஆரம்பிப்பேன். 

கிருஷ்ண ஜயந்தி அன்று கிருஷ்ணர் வீட்டுக்குள் வருவது போல் மாக்கோலம் போடுவது நிறைய வீடுகளில் வழக்கம். அரிசியை ஊற வைத்து நைசாக அரைத்து , வேட்டி துணியாலோ , சின்ன பஞ்சு உருண்டையாலோ போடுவோம். நாங்கள் இருந்த பழைய அபார்ட்மெண்டில் எதிர் வீட்டம்மா ஆர்ட் டீச்சர்.  ப்ரஷ்ஷால் போடுவார்! அவர்கள் வீட்டில் அரிசி மாவு கரைசலில் கொஞ்சம் மஞ்சள் பொடி போடுவார்கள். குட்டி குட்டி தங்கப்பாதம் வீடெங்கும் ஓடுவது போல் இருக்கும். 

ஒரோரு வீட்டுக்கும் விதவிதமான பழக்கம் கிருஷ்ணன் பாதம் போடுவதில் .  அம்மா வீட்டு பழக்கம், மாமியார் வீட்டு பழக்கம் , அதைத்தவிர வாட்சப்பிலும் இன்ஸ்டாகிராமிலும் பார்த்த புது டெக்னிக்குகள் வேறு! நான் எப்போதும் எட்டு போட்டு ஐந்து போடுவேன்.  நடிகர் விவேக்குடைய எட்டு இல்லை..  ஒரு சின்ன எட்டு வரைந்து அதன் மேல் ஐந்து குட்டி புள்ளி வைத்தால் போதும், கிருஷ்ணன் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்துவிடுவான்!

இந்த வருஷம் யூட்யூபில் பார்த்த முறையில் போட்டேன் . என் போலவே ஒரு சோம்பேறி ஃப்ரண்ட் , கை முஷ்டியை மாவில் முக்கி போஸ்ட்மாஸ்டர் சீல் வைப்பது போல் மடமட வென்று வேலையை முடிப்பாள். நான் ஒரு முறை என் மகள் ஒரு வயது குழந்தையாக இருக்கும் போது அவள் காலை மாவில் தோய்த்து வரிசையாக  பதித்தேன் . அவ்வளவாக அவள் இந்த ஆராய்ச்சியை ரசிக்கவில்லை என்று தெரிந்தது!. 

என்னுடையது ரொம்ப சம்பிரதாயமான, ஆசாரமான கிருஷ்ண ஜயந்தி  கொண்டாட்டம் கிடையாது. குழந்தைக் குறும்பையும் குழந்தைப் பருவத்தையும் கொண்டாடுவதே சாரம் என்பது என் கருத்து. மகளோடு பாதச்சுவடு போடுவது ஒரு சந்தோஷம். அதற்கு எற்றார்போல் சில வருஷம் கிருஷ்ணன் பாதச்சுவடுகள் , வாசலில் இருந்து சின்னக் குழந்தை கையை வைத்துக் கொண்டு ஒரு கற்பனை மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்தது போல் இருக்கும்.  வளைந்து வளைந்து .. வ்ரூம் வ்ரூம் , பீப் பீப் என்று ஓடியது மாதிரி ..  சில வீட்டில் இரண்டு பாதத்தையும் பக்கத்தில் பக்கத்தில் போட்டிருப்பார்கள்.  கிருஷ்ணன் வாசலில் இருந்து ஸ்கிப்பிங்க் செய்து கொண்டு வந்தது போல்.. எப்படி போட்டாலும் வந்திருப்பான், அதுதானே முக்கியம். 

நாங்கள் பெங்களூரில் நாலைந்து வீடு மாறியிருக்கிறோம் , எல்லா வீட்டிற்கும் கிருஷ்ணன் வந்தான். ஒரு வீட்டில் நல்ல கருப்பு மார்பிள் தரை.  கிருஷ்ணன் வந்த வழி பளிச்சென்று தெரியும் .  பண்டிகை முடிந்து இரண்டு நாள் ஆனாலும் அழிக்க மனசு வராது. பாதச்சுவடை சுற்றி பெருக்கி துடைப்போம். 

இப்பொழுது இருக்கும் வீட்டில் , வீடு முழுக்க வெள்ளை டைல்ஸ். பாதம் போட்ட சுவடே தெரியாது .  ஒரு குத்து மதிப்பாக கண்ணை இடுக்கி சுருக்கி மாவு ஈரப் பளபளப்பை வைத்து கொண்டு  போட்டேன்.   கண்ணன் வந்த சுவடை பார்க்க முடியாது , ஆனால் வந்தான் என்று எனக்கு தெரியும்.  அடுத்த வருஷம் , மாவில் மஞ்சள் பொடி சேர்க்கலாம் , நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த வீட்டில் கிருஷ்ணன் வரும் வழி நீளம். வாசலில் இருந்து ஒரு 20 அடி நடை, பிறகு ஃபர்ஸ்ட் லெஃப்ட் எடுத்து , டைனிங் டேபிள் பக்கம் ஒரு 15 அடி நடக்க வேண்டும். அங்கேதான் பூஜை அலமாரி. கிருஷ்ணனை அடி மேல் அடி வைத்து கூட்டிக்கொண்டு போவதற்குள் எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. லாக்டௌன் போது ஏறிய வெய்ட் வேறு! பாதம் போடப் போட நீளம் குறைந்த பாடில்லை.  ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து கொண்டேன்.  பக்தி படமாய் இருந்தால் , இந்த சீனில் தான் பரம பக்தையான ஹீரோயின் கோவில் தூணை பிடித்துக் கொண்டு நெஞ்சை கையால் பிடித்துக் கொண்டு பாடுவாள்.  மணிகள் இடதும் வலதுமாய் அடிக்கும் .  கிருஷ்ண்ன் பாதம் கிடுகிடு வென்று மீதி இடத்தில் காட்சியளிக்கும்.  நல்ல காலம் , எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. 

நாங்கள் இருந்த இன்னும் ஒரு பழைய வீட்டில், வாசல் கதவை திறந்தால் , நேர் எதிரே பூஜை அறை. நாலு பாதம் போட்டால் போதும் , கிருஷ்ணன் அங்கேயும் சந்தோஷமாக வந்து சேர்ந்து விடுவான். 

பாதம் போட்டு முடித்து அது உலரும் வரையில் வீட்டில் எல்லாரும் ஃபுல் அலர்ட்டாக் இருக்க வேண்டும் .  எல்லா ஃபேன்-களும் ட்யூடடியில் இறக்கப்படும். “பாத்து பாத்து .. கால் கால் .. கிருஷ்ணன் கால்” என்ற எச்சரிக்கையையும் மீறி யாராவது கோலத்தை மிதிப்பார்கள்.  ஓற்றை கால் காளிங்க நர்த்தனம் பண்ணி சேதம் தவிர்க்க முயற்சித்தாலும் , கோலம் கலைந்திருக்கும். இருந்தாலும் கிருஷ்ணன் “நோ ப்ராப்ளம்” என்று வந்து சேர்ந்து விடுவான். 

ஜன்மாஷ்டமி பட்சணங்களும் அப்படித்தான்.  அப்பம், வெல்ல சீடை, உப்பு சீடை, முறுக்கு, தட்டை , அதிரசம், திரட்டுப்பால், வெள்ளை தேங்குழல் , முள்ளு தேங்குழல்.. நிற்க.– இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு ஐட்டம் தான் பண்ணுவேன். பட்சணம் செய்வதில் பலே கெட்டிக்காரியான என் அம்மாவே மாவால் குட்டி பிள்ளையார் பிடித்து வைத்து  “உப்பு சீடை வெடிக்காமல் வரணும் பிள்ளையாரப்பா” என்று வேண்டிக் கொண்டுதான் ஆரம்பிப்பாள். நானெல்லாம் ட்ரை பண்ணுவதே குற்றம் என்று விட்டுவிட்டேன்!

கணவர் அதிரசத்தை தண்ணீரில்  செய்ய முடியாதா , எண்ணெயில் தான் வேக வைக்க வேண்டுமா என்று கேட்கும் அளவுக்கு ஹெல்த் கான்சியஸ்.  எங்களை மாதிரி ஆசாமிகள் யாராவது இருப்பார்கள் என்பதால்தான்  எல்லா பண்டிகைக்கும் அந்தந்த சீசனுக்கு உண்டான பழங்களும் நெய்வேத்ய சம்பிரதாயத்தில் சேர்த்தி.  நான் கொய்யா , நாவல் பழம் , மாதுளை என்று நெய்வேத்தியத்தை மாற்றினால் , கிருஷ்ணன் கோபித்துக் கொண்டதில்லை . 

ஒரு வருஷம் , வேலையில் பயங்கர கெடுபிடி. கிருஷ்ணன் பாதம் , காந்தி படத்தில் பென் கிங்க்ஸ்லி தண்டி யாத்திரையில் காலை எட்டி வைத்து நடப்பாரே, அந்த  மாதிரி லாங்க் ஜம்ப் பாணியில் இருந்தது.  (கிருஷ்ணன் பாண்டவருக்காக தூது செல்லும்போது இப்படித்தான் வேக வேகமாக நடந்திருப்பானோ என்னமோ!). அமெரிக்கா கஸ்டமருடன் கான்ஃபெரென்ஸ் காலுக்கு முன்னால், அமுல் பட்டர் கட்டியும் , பாலில் ஊற வைத்த அவல் சர்க்கரையும் கிருஷ்ணனுக்கு அவசரம் அவசரமாக வைத்துவிட்டு ஓடினேன் .  கடமையை பற்றி கீதை சொன்ன கிருஷ்ணன் கண்டிப்பாக புரிந்து கொண்டிருப்பான்.  வேலையை முடித்து விட்டு , ப்ரெட் ஸ்லைசில் நெய்வேத்திய வெண்ணெய் தடவி சாப்பிடும் போது ஆரத்தி தட்டிலிருந்து கற்பூர வாசம் அறையில் கம்மென்று இன்னும் நிறைந்திருந்தது. பக்க்த்து வீட்டு வடநாட்டு குடும்பத்தின் பூஜை சங்கு ஓசை கேட்டது . கணவரிடம் சொன்னேன் – “இந்த வருஷம் ஜன்மாஷ்டமி ரொம்ப திருப்தியா இருந்தது இல்லே?”

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.