சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)

This entry is part 6 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

அரசியல் மற்றும் வியாபாரப் பார்வை

போர்க் காலத்தில், விஞ்ஞானிகள் சொல்வதை, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், உலகம் எங்கும் ஓரளவிற்குப் பின்பற்றியுள்ளார்கள். 1986 –ல், பெளதிக விஞ்ஞானி ஃபைன்மேன், சாலஞ்சர் ராக்கெட் வெடித்தபோது, செனட் விசாரணையில் விபத்து எப்படி நேர்ந்தது என்று விளக்கியபோது, நாசா மழுப்பி, வேறு வழியில்லாமல் வடிவமைப்புக் குறைகளை ஒப்புக்கொண்டது. மற்றபடி, வியாபார லாபத்தில் தாக்கம் இருக்கும் பட்சத்தில், விஞ்ஞான உண்மைகள் திரித்தே பயன்படுத்தப்பட்டுள்ளன. அமில மழை விஷயமும் இப்படித்தான். பல்வேறு குழுக்கள் கால்பந்து விளையாடி, ஒருவாறு நாற்பது வருடங்களில், சில விஷயங்களில் மேற்குலகு முன்னேறி உள்ளது. இதை இங்கு விவரமாக விளக்கக் காரணம், இன்றைய புவி சூடேற்ற விஷயத்தில், இதே அணுகுமுறை மற்றும் இழுபறி நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இன்றைய இழுபறி நிகழ்வுகளை, ஓரளவு புரிந்துகொள்ள, இந்த அமில மழைத் திரித்தல் சரித்திரம் உதவும்.

அட, ஆரம்பத்திலேயே முழு விஷயத்தையும் போட்டு உடைத்து விட்டதாகத் தோன்றலாம் – இது ஒன்று மர்ம நாவலன்று, கடைசிவரை இழுப்பதற்கு.

 1970 –களில், அமெரிக்காவில், சுத்தக் காற்று ஆணை (Clean Air Act), இங்கிலாந்தைப்போல விஞ்ஞானிகளின் வாயை மூட உருவாக்கப்பட்டது. இதை நடைமுறையாக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவிடம்  (EPA – Environment Protection Agency)  ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்தைப்போல, அமெரிக்காவிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியாமல் இ.பி.ஏ. தவித்தது. அமெரிக்க செனட், அரசாங்கத்தைக் கிழித்துத் தொங்கப்போட்டது. அமெரிக்காவின் இரு கட்சி அரசாங்கங்களும், இந்த விஷயத்தில் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருந்தன:

https://news.illinois.edu/files/6367/205194/41308.jpg

  1. குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக, காற்றை மாசுபடுத்தும் அனல் மின் நிலையங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது, சில இ.பி.ஏ. ஊழியர்களிடம் விடப்பட்டது (EPA field agents) 
  2. சில மாநிலங்கள், மற்றவற்றைவிட நடைமுறை விஷயத்தில் கராறாக இருந்தன
  3. காற்று மாசுக் கட்டுப்பாடு என்பது, இ.பி.ஏ. ஊழியர்களின் பயிற்சி மற்றும் அறிவுக்குத் தகுந்த மாதிரி வேறுபட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு சட்டம் இருப்பதைப்போல இது காட்சியளித்தது. இதில் ஒரு தரநிலை (standard) இல்லாதது, பல மின் உற்பத்தியாளர்களைப் பாதித்தது
  4. மாசுக் கட்டுப்பாட்டு எல்லையை மீறியதற்கான அபராதங்களும் வெகுவாக மாறுபட்டன. அத்துடன், பல நீதிமன்ற வழக்குகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கின

அமில மழை விஷயத்தை விஞ்ஞானிகள், தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்ததால், அவசர நடவடிக்கைகள் ஏற்கெனவே சிக்கலான நிலமையை மேலும் மோசமாகிவிடும் என்று அரசாங்கமும் வியாபாரமும் சிந்திக்கத் தொடங்கின. பல்வேறு குழுக்கள் தடிமனான ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் சிபாரிசுகளை அரசாங்கத்தின் முன்னால் வைத்தன. இதில், அமெரிக்காவிற்கே உரித்தான விசேஷ ஆர்வக் குழுக்களும் அடக்கம். (Special Interest Groups.)  வியாபாரங்களின் ஊக்கத் தொகையில் இயங்கும் இவ்வகைக் குழுக்கள், விஞ்ஞானத்தைத் திரிப்பதில் கில்லாடிகள். அத்துடன், அவை சார்ந்திருக்கும் வியாபாரங்களால் உருவாகும் வேலை வாய்ப்பு, வரிப்பணம் மற்றும் கட்சி நிதி, இவ்வகைக் குழுக்களுக்கு மிகப் பெரிய நிழல் சக்தியைக் கொடுக்கின்றன.

Picture

வியாபாரங்களின் நோக்கம், இந்த விஷயத்தில் எப்படியாவது இரண்டு சிக்கல்களைச் சரிக்கட்டுவது – இ.பி.ஏ. –வின் சிக்கலான முறைகள் ஒருபுறம், விஞ்ஞானிகள் உடனே ஏதாவது செய்தாக வேண்டும் என்ற கூக்குரல் மறுபுறம். அத்துடன், இரண்டு ரசாயனங்களை உடனே குறைக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் சொல்லிவந்தார்கள். ஒன்று கந்தக ஆக்ஸைடு மற்றொன்று, நைட்ரஸ் ஆக்ஸைடு. இதில் பெரும்பாலும் குறைக்கவேண்டியது கந்தக ஆக்ஸைடை. (sulfur dioxide.) அதனால், இவர்கள் செய்த முதல் வேலை, நைட்ரஸ் ஆக்ஸைடு (nitrous oxide) கட்டுப்பாட்டைக் கைவிட்டார்கள். இன்றுவரை, இது தொடர்கிறது! இதில் பெரும் வெற்றி, கார் நிறுவனங்களுக்கே. சும்மாவா சொன்னர்கள் அமெரிக்காவை GM country என்று! 

இப்படி பல்வேறு சிபாரிசுகளை ஆராய்ந்து, அமெரிக்க அரசாங்கம் மூத்த புஷ் அரசுக் காலத்தில், அமில மழை அளவைக் குறைக்க 1990 –ல் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டப்படி, அமெரிக்கா தன்னுடைய வருடாந்திர கந்தக ஆக்ஸைடு உமிழ் அளவில், ஓர் உச்ச அளவுக்குமேல் செல்லக்கூடாது. அத்துடன், 1999 –க்குள் இதை வெகுவாகக் குறைக்கவேண்டும் என்று முடிவானது. அரசாங்கங்கள் இப்படி முடிவெடுப்பது ஒன்றும் புதிதன்று. இதில் புதிது என்னவென்றால், அரசாங்கத்தின் குறிக்கோள் தேசிய அளவில் உமிழ் கந்தக ஆக்ஸைடின் அளவைக் குறைக்கவேண்டும். ஆனால், மின் உற்பத்தியாளர்கள் சந்தைப் பொருளாதார அடிப்படையில் இதற்கான உமிழ் வரவு (emission credits), செலவுகளைக் காசாக்கலாம், அல்லது இன்னொரு மின் உற்பத்தியாளருக்கு விற்கலாம். இது பங்குச் சந்தை ரீதியில் உருவாக்கப்பட்ட ஒரு சட்டம். அரசியல் மற்றும் வியாபாரங்களின் வாதம், ஒரு இ.பி.ஏ. –வால் செய்ய முடியாததை, வர்த்தகச் சந்தை செய்து காட்டமுடியும்.

உதாரணத்திற்கு, ஒரு மின் உற்பத்தியாளர் 4 மாநிலங்களில் பல்வேறு அனல் மின் நிலையங்களை இயக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த உற்பத்தியாளர், வருடத்திற்கு 60,000 டன் கந்தக ஆக்ஸைடை உமிழும் ஓர் அமைப்பு என்றும் வைத்துக்கொள்வோம். இவர்களது குறிக்கோள், முதல் வருடத்தில் உமிழ்வின் அளவை 55,000 டன்னாகக் குறைத்தல் என்று வைத்துக்கொள்வோம். இந்த அமைப்பிற்குப் பல்வேறு சந்தை வழிகள் உள்ளன.

https://politicalclimate.files.wordpress.com/2010/07/capandtrade1.jpeg?w=460

  1. முதல் வழி: ஒரு மாநில, அனல் மின் நிலையத்தில் உமிழ்வைக் குறைக்கும் தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டுவர இரண்டு ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிடப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். வேறு எந்த மாற்றமும் செய்யமுடியவில்லை என்றால், 5,000 டன் (60,000 – 55000) அளவிற்கு உமிழ் வரவுகளை இன்னொரு மின் உற்பத்தியாளரிடம் வாங்கவேண்டும். இதற்குக் காசு கொடுக்கவேண்டும்
  2. இரண்டாம் வழி: ஒரு மாநிலத்தில் உள்ள அனல் மின் நிலையம், கந்தகம் குறைந்த கரிச் சுரங்கத்தின் அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். குறைந்த கந்தகக் கரியை (இது விலை அதிகம்) வழக்கமான கரியுடன் கலந்தால், ஒரு 3,000 டன் உமிழ்வைக் குறைக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். இப்படி, அனல் மின் நிலையத்தின் பட்ஜட்டைக் கூட்டிக் கழித்தால், இந்த உற்பத்தியாளர், சந்தையில், 5,000 – 3,000 = 2,000 டன் அளவிற்கு உமிழ் வரவுகளை இன்னொரு மின் உற்பத்தியாளரிடம் வாங்கவேண்டும். இது முதல் வழியைக் காட்டிலும் நல்ல அமைப்பு. ஆனால், இந்த முறைக்கு அளவில் கந்தகம் குறைந்த கரிச் சுரங்கம் அருகில் இருக்க வேண்டும்
  3. மூன்றாம் வழி: அனல் மின் நிலையத்தில், பல கொதிகலன்கள் (boilers) இருக்கும். இவற்றுள் ஒரு சில கொதிகலன்களைப் புதுப்பித்தால் ஒரு வருடத்திற்கு 2,500 டன் உமிழ் கந்தக ஆக்ஸைடைக் குறைக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். இந்த உற்பத்தியாளர், சந்தையில், 5,000 – 2,500 = 2,500 டன் அளவிற்கு உமிழ் வரவுகளை இன்னொரு மின் உற்பத்தியாளரிடம் வாங்கவேண்டும்
  4. நான்காம் வழி: ஒரு மாநிலத்தில், ஓர் அனல் மின் நிலையத்தில் வாங்கும் கரியைக் கழுவிப் பொடி செய்து, இரும்பை வெளியேற்றியபிறகு, கொதிகலனுக்கு அனுப்பினால் 7,000 டன் உமிழ் கந்தக ஆக்ஸைடைக் குறைக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். இந்த பிராஜக்ட்டுக்கான வேலை, முடியும் தருவாயில் இருக்கும் பட்சத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த மின் உற்பத்தியாளர், குறிப்பிட்ட அளவைவிட 2,000 டன் (7,000 – 5,000 = 2,000), உமிழ் கந்தக ஆக்ஸைடைக் குறைக்க முடியும். இப்படி கைவசம் இருக்கும் 2,000 டன் உமிழ் வரவை, மற்றொரு மின் உற்பத்தியாளருக்கு விற்கலாம். இல்லையேல், அடுத்த சில ஆண்டுகளில், இதே உற்பத்தியாளருக்குத் தேவைப்படும் என்று தங்கள் கணக்கில் வைத்துக்கொள்ளலாம்

இன்னும் பல சிக்கலான விஷயங்கள் இதில் அடங்கினாலும், இந்த உமிழ் வியாபார முறை இவ்வாறு உருவானது. இ.பி.ஏ., ஓர் அபராதம் விதிக்கும் அமைப்பு என்பதிலிருந்து, ஒரு கணக்கு வைக்கும் அமைப்பாக மாறியது. அத்துடன், இந்தக் கணக்கிற்குத் தகுந்த கண்காணிப்பு அமைப்பை, ஒவ்வொரு மின் உற்பத்தியாளரும் உருவாக்கவேண்டும் என்று இந்தச் சட்டம் சொன்னது.

இந்த முறையை ஒரு வெற்றியாக நினைக்கும் மின் உற்பத்தியாளர்கள், அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்காமல், நாங்கள் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளோம் என்று பறை சாற்றுகிறார்கள். அத்துடன், சட்டத்தின் இலக்கு உமிழ் அளவைவிட, 30% குறைவாகவே இன்று உமிழ்கிறோம் என்றார்கள். மின் உற்பத்தியாளரின் பொருளாதார வசதிக்கேற்ப, படிப்படியாக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தச் சாதனையைப் புரிந்துள்ளோம் என்று மார்தட்டிக் கொண்டார்கள். இ.பி.ஏ. செய்ய முடியாததை, இந்தப் பங்குச் சந்தை செய்து சாதித்துள்ளது. இனிமேல் எந்த ஒரு சுற்றுச்சூழல் விஷயத்திலும், அரசாங்கம் போலீஸ் வேலை பார்க்காமல், அளவை மட்டும் நிர்ணயித்து, மற்றவற்றைப் பங்குச் சந்தையிடம் விட்டுவிடுங்கள். எல்லாம் தானாகவே நடக்கும் என்று அறிவுரையும் வழங்குகிறார்கள். இதே அறிவுரையை, இன்று மேற்குலகில் பல மாசுபடுத்தும் தொழில்கள் புவி சூடேற்ற விஷயத்திலும் வழங்கி வருகின்றன.

Fig. 2

இதை மேலோட்டமாகப் பார்த்தால், இவர்கள் சொல்வது உண்மையோ என்று தோன்றும். சற்று ஆழமாக ஆராய்ந்தால், இதில் உள்ள தில்லாலங்கடிகள் வெளிவரும். ஓரளவிற்கு இது ஆட்டிற்கு, ஓநாயைப் பாதுகாப்பாக வைப்பதைப் போன்றது. 

  1. எந்த விஷயத்தைக் கண்காணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே, லாபத்தில் குறியாக இருக்கும் மின் உற்பத்தியாளர்கள்
  2. விஞ்ஞானம் சொல்லும் உண்மைகளைத் திரித்து, தங்களுக்கு எது இலகுவாகப் படுகிறதோ, அந்த விஷயத்தை மட்டுமே கண்காணிக்க ஒரு மாற்று விஞ்ஞானத்தையே உருவாக்குவது, விசேஷ ஆர்வக் குழுக்களின் தனித் திறமை
  3. கட்டுப்பாட்டின் அளவை முடிவு செய்வது, மின் உற்பத்தியாளர்கள்
  4. கார் நிறுவனங்கள், தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, நைட்ரஸ் ஆக்ஸைடை இந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் பார்த்துக்கொண்டார்கள்
  5. அரசாங்கம், கணக்கு பார்க்கும் வேலை மட்டுமே செய்யும்படி செய்துவிட்டார்கள் இந்த விசேஷ ஆர்வக் குழுக்கள். இது, வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு வெளியே பணத்தால் தீர்வு காண்பதைப் போன்றது
  6. விஞ்ஞானிகளும், ‘ஒன்றுமே செய்யாததற்கு ஏதாவது செய்கிறார்களே’, என்று தங்களை ஆறுதல்படுத்திக் கொண்டார்கள்

இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, அனல் மின் உற்பத்தியாளர்கள் ஏதோ சதிகாரர்கள் போலத் தோன்றலாம் – என் நோக்கம் அதுவன்று. இவர்கள் விஞ்ஞானிகள் பார்க்காத சில கோணங்களில், இந்தப் பிரச்சினையை ஆராய்ந்தார்கள் என்பது உண்மை. உதாரணத்திற்கு, ஓர் அனல் மின் அமைப்பில் பல கொதிகலன்கள் இருக்கும். ஒவ்வொரு கொதிகலனையும், ஒரு தொழில்நுட்ப முன்னேற்ற மையமாக மாற்றினார்கள். சின்னச் சின்ன முதலீட்டில், எப்படி மாற்றங்களைக் கொண்டுவருவது என்பதும் இவர்களது வெற்றிச் சிந்தனை.

இது போன்ற அமைப்புகள், வளர்ந்த நாடுகளில் மட்டுமே சாத்தியம். ஏனென்றால்:

  1. இந்த முயற்சிகளுக்கு முன்னமே, இ.பி.ஏ. போன்ற அமைப்புகள் ஒவ்வொரு அனல் மின் நிலையத்தின் அனைத்து உற்பத்தி எந்திரங்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தார்கள்
  2. மின் உற்பத்தியாளர்கள், இ.பி.ஏ. –வின் கணக்கெடுப்பிற்குப் பெரும்பாலும் ஒழுங்கான ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை நேர்மையாகக் காட்டினார்கள்
  3. கடைசியாக, ஓரளவிற்கு இந்தத் திட்டம் பயனளிக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்தவுடன், இதை ஒரு தொழில் முயற்சியாக (அரசாங்கம் அன்று) மாற்றினார்கள்
  4. உமிழ்வைக் குறைப்பதற்கான பல வகைத் தொழில்நுட்பங்கள், இந்த மின் உற்பத்தியாளர்களுக்கு அவர்களது முதலீட்டு அளவிற்குள் கிடைத்தன. மற்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளில்  இது சாத்தியமா என்பது ஒரு கேள்விக்குறி

இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட உமிழ் கந்தகத்தைவிட 7.3 மில்லியன் டன் அளவிற்குக் குறைக்கமுடிந்தது. அத்துடன், புதிய தொழில்நுட்ப முயற்சிகளால் பொருளாதார வளர்ச்சிக்காகக் கூடுதல் மின்சக்தியையும் உற்பத்தி செய்ய முடிந்தது.

இதன் தீய முகம் என்னவென்றால், இழந்த உயிரினங்கள்  மற்றும் மண்வளம் ஆகியவற்றை மீண்டும் நம் வாழ்நாளில் பெறமுடியாது. மேலும், இவர்கள் விட்டுவைத்த நைட்ரஸ் ஆக்ஸைட் இன்று பூதாகாரப் பிரச்னையாக உருவாகிவிட்டது. கார்கள் மற்றும் பெட்ரோலில் இயங்கும் ஊர்த்திகள் ஏராளமாகப் பெருகி, இன்று காற்று மாசுபடுதல் மிக அதிகமாகிவிட்டது. இதற்குப் பனிப்புகை அல்லது Smog என்று பெயர் சூட்டியுள்ளார்கள். அடுத்த பகுதியில் இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

***

Series Navigation<< சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.