குடும்ப வரலாறு
இங்கிலிஷ் மூலம்: ஆண்ட்ரியா கானோப்பியோ
தமிழாக்கம்: கோரா

முன்பெல்லாம் பழைய சாதனங்களைப் புதிய சாதனங்களுடன் இணைக்கும் மின் இணைப்பான்களைத் தேடி எடுக்க சான்டா ரீட்டா சர்ச்க்கு அருகிலுள்ள எலக்ட்ரானிக் கடைக்குப் போவேன். VHS VCR -களை டிஜிட்டல் டிவி-க்களுடனோ அல்லது , ஒரு தலைமுறை DVD பிளேயரை மற்றொரு தலைமுறை கணினிகளுடனோ இணைக்கக்கூடிய மின் இணைப்பான்கள் அவை. இதுவரை தீப்பற்றிப் புகைந்துபோகாமலும் , இறுதி மூச்சு இன்னும் விட்டுவிடாமலும் இருக்கின்ற எதையும் தூக்கி எறிய மனம் வராத எங்களைப் போன்றவர்களை, அண்மைக்கால தொழில்நுட்பவியல்சார் வளர்ச்சி களைப்படையச் செய்துவிடுகிறது. வழக்கமாக உதவாக்கரையாக இருப்பவரானாலும், என் தந்தை ஒரு பொறியியலாளர்; ஒன்றிரண்டு தெரிந்தவர்தான்; யுத்தத்தின்போது ராணுவத்தில் ரேடியோ ஆபரேட்டராகவும் பணியாற்றி இருந்தார். அவர் உதவி வேண்டாமென்று நான் இந்த கடைக்குச் சென்று, அங்குள்ள உதவியாளர் என்னை வெறுப்பாகவோ அல்லது கனிவாகவோ அல்லது இரண்டும் கலந்தோ பார்ப்பதை உணர்ந்திருப்பேன். ஆய்வுக்கூடச் சாம்பல் நிற மேலணி உடுத்தியிருக்கும் ஊழியர்கள் எரிச்சல்பட்டும், சகித்துக்கொண்டும், கவனத்தை சிதறவிட்டுக் கொண்டுமிருந்தாலும், நான் அவர்களுடன் நீளமான உரையாடல்களில் ஈடுபட்டிருந்தேன். ஆனால் பெரும்பாலும் எதைப்பற்றிப் பேசினோம் என்றே எனக்குத் தெரியாது. இரு தூர தசாப்தங்களை, வெவ்வேறு உலகங்களை, இணைப்பது போன்ற ஒரு கடினமான ஆனால் சாத்தியமுள்ள இணைப்பைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம் என நினைக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, “முன்னுணர்வு” (Premonition ) எனத் தலைப்பிட்டிருந்த கட்டுரையில் (சாய்வெழுத்தில் இருப்பவை ) ரத்தினச் சுருக்கமாக நான் எழுதியிருந்த ஒரு சொற்றொடர் (phrase) பொய்யானது என்பதாலேயே அது ஒருவேளை என் எல்லா ரத்தினச் சுருக்கச் சொற்றொடர்களின் “தாய்” என நான் கருதுகிறேன். (உண்மையில் எந்த ரத்தினச் சுருக்க அல்லது எளிய தன்முனைப்பான சொற்றொடரும் பொய்யாகவோ அல்லது திருத்தத்துக்கு உட்பட்டதாகவோதான் இருக்கும் என எப்போதும் எனக்குத் தோன்றி விடுகிறது):என் குடும்ப வரலாற்றைச் சொல்லும் உத்தேசம் எனக்கில்லை. ஆனால் இப்படி எழுதிய நாள் முதலாக குடும்ப சரித்திரத்தை எழுதுவது என் மகத்தான அபிலாஷை ஆகிவிட்டது. அப்போதும் அது என் மகத்தான அபிலாஷைகளுள் ஒன்றாக அது இருந்தது எனவே தோன்றுகிறது, ஆனால் நான் அதை உணரவில்லை அல்லது ஏற்க விரும்பவில்லை அல்லது ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. எதிர்மறையாக எழுதிய அதே கணத்தில் நான் அதை மறுக்க இயலாதவனாகி விட்டேன். உண்மைக்கு மிக நெருக்கமாக தோராயப்படுத்தி நான் இப்படி எழுதியிருக்க வேண்டும்-“என் குடும்ப சரித்திரக் கதையை சொல்வது மிகவும் சிக்கலானது; என்னால் தாக்குப் பிடிக்க முடியாதென அஞ்சுகிறேன். எனவேதான் நான் அதைச் செய்ய விரும்பவில்லை என்று பெரிதாகப் பாசாங்கு செய்கிறேன், எழுத ஆரம்பித்த நாளிலிருந்து என் குடும்பம் என்ற பேசுபொருளைச் சுற்றியே வந்துகொண்டிருக்கிறேன் என்பது எல்லோருக்கும், என்னை அறியாதவர்களுக்குங்கூடத் தெளிவாகிவிட்ட பின்னருங்கூட.” இந்த ரத்தினச் சுருக்க சொற்றொடர் வேறொரு சிந்தனைக்கு (அதுவும் ரத்தினச் சுருக்கமே) முன்னுரையாக இருந்தது. அது:
நான் சுருக்கமாக எழுத முயற்சிப்பேன். (எத்தனையோ பேர் கஷ்டமான குழந்தைப் பருவத்தை அனுபவித்திருக்கிறார்கள். மேலும் இவர்களில் ஏறக்குறைய அனைவருமே என்னுடையதை விட அதிகக் கஷ்டமான ஒன்றையே அனுபவித்தவர்களாய் இருப்பார்கள். பிறரின் கஷ்டமான குழந்தைப் பருவக் கதையைப்போல் சோர்வூட்டுகின்றவை வேறேதுமில்லை. பிறரின் வயிற்றுவலி வர்ணனை போல் தாங்க முடியாதது வேறொன்றுமில்லை).
என் குடும்பக் கதை சொல்லும் தகுதியுள்ளதல்ல என்றே கருதினேன், (எனினும் ஆரம்ப நாட்களில் இருந்து புனைவு என்னும் திரை மறைவில் நான் செய்திருந்தது இதுவேயன்றி வேறல்ல என்றிருந்த போதிலும் ) அது போதிய நாடகத் தன்மையும் சாகசமும் கொண்டதாக இருந்ததில்லை என்பதால்.
இது ஓர் இத்தாலியத் தம்பதியினரின் போருக்குப் பிந்தியகாலக் கதை, அவர்களுடைய ஆரம்பகால வாழ்வின் மகிழ்ச்சியையும் பிந்திய கால வாழ்வின் சோகத்தையும் பற்றியது. இதில் அசாதாரணமானது எது? எதுவுமில்லை, நான் பிறந்த உடனேயே அவர்களின் மகிழ்ச்சியின்மை தொடங்கியது; அது என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது என்பதைத் தவிர. அத்துடன் அது என் மனதில் வன்மத்தை நிரப்பியது, ஆனால் சில சமயங்களில் வருத்தமுற்றிருக்க எனக்கு நானே இசைவளித்து கொண்டிருந்தேன் என்றாலும், என்னிடம் அநியாயமாக நடந்து கொண்டவர்கள் மீது மிக அரிதாகவே நலமான நியாயமான வன்மம் கொள்ள என்னை அனுமதித்து வந்துள்ளேன், மற்றும் எவ்வித உள்நோக்கமுமின்றி என்னை நோகடித்தவர்கள் மீது ஒருபோதும் நலமான, நியாயமற்ற வன்மம் கொள்ள என்னை அனுமதித்துக் கொண்டதில்லை, இவ்வாறாக வன்மத்தைக் கையாளுவது பெரும்பாலும் எனக்கு மிகவும் சிக்கலானதாகப் போய்விடுவதைக் காண்கிறேன், அநேகமாக எப்போதுமே என்னுள் இது ஒரு நலமற்ற வன்மமாகவே (நியாயமான அல்லது நியாயமற்ற) உறைவதின் காரணம், நான் அதை எப்போதும் ரகசியமாய் மென் கொதிநிலையில் இருத்தி எதிர்பாராத வழிகளில் வெளிப்பட விட்டிருப்பதாலேயே.
பிறகு “முன்னுணர்வு”-கட்டுரையில் இறுதியாக மையக்கருத்துக்கு வந்தேன்:
என் தந்தை 30 ஆண்டுகளாக மன அழுத்த நோயால் அவதிப்பட்டார் . (என் தந்தையின் கதையைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை, ஏனெனில் நான் எழுத ஆரம்பித்ததில் இருந்து அதைத்தான் செய்து வருகிறேன் ). என்னால் அறிந்துகொள்ள முடிந்த வரை, அவர் மனஅழுத்தம் கொள்ள நிஜமான காரணம் எதுவுமே இல்லை என்பதே குடும்பத்தின் அதிகார பூர்வமான கருத்து. எங்கள் குடும்பத்தில், நாங்கள் இந்த வேற்றுமைகளை(distinctions) உருவாக்குவது வழக்கம் (என்று நினைக்கிறேன் ), அதாவது எது மனதில் நடந்ததோ அது நிஜமல்ல; எது மூளையில் நடந்ததோ அதுவே நிஜம்: ஆம், நாங்கள் முழுமையான அறிவியலாளர்கள்.
குடும்பம் என்று நான் எழுதினேன், ஆனால் அப்படி என் தாயாரைத்தான் குறிப்பிட்டேன். எங்கள் வழக்கம் என்று எழுதினேன், ஆனால் என் தாயாரின் வழக்கம் என்றே குறிப்பிட்டேன். என் தாயாரின் அதிகாரம் எங்களை ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் அவர் சொற்படி நடக்க வைக்கும் அளவுக்கு கடுமையாக இருந்தது. மேலும் ஒரு நோயின் உடல் சார்ந்த காரணங்களும் நிஜமே. நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, நாங்கள் (தாயார்) நிஜக் காரணங்கள் பற்றிப் பேசியபோது, நாங்கள் (தாயார் ) குறிப்பிட்டவை இருத்தலியல் (existential) காரணங்கள்: குடும்பம் அல்லது வேலையுடன் சம்பந்தமுள்ளவை. மேலும் என் தந்தை இருத்தலியல் காரணங்களால் விசனமுற்றிருந்தார் என்பதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? இருத்தலியல் காரணங்கள் எங்களையும் சம்பந்தப் படுத்தியிருக்கும். எந்த இருத்தலிய காரணமும் எங்கள் மீது குற்றம் சுமத்துவதாகவே இருக்கும். (துயரார்ந்தோர் -melancholics பற்றி பிராய்ட் இப்படிச் சொல்கிறார்- “அவர்களின் முறையீடுகள் அனைத்துமே புலம்பல்கள்தான்.” ) வேதியியலை முழுதாக நம்பியது எங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்க உதவியது; அந்த விளக்கம் எங்களை முழுதாக நம்பவைத்தது. எங்கள் செரோடோனின் அழிவைத் தடுத்து நன்றாயிருக்கிற உணர்வைத் தந்தது. நலந்தரு விளைவுகள் அதிக நேரம் நீடிக்காமல் போனாலும், அது ஒரு மிகச் சிறந்த மனோவியல் மருந்தாகவே பயன்பட்டது. கறாரான அறிவியல் வாதத்தின் வழிகாட்டலில் கதவைக் கடந்து வெளியேறிய குற்ற உணர்ச்சி, ஜன்னல் வழியாக அதிகாரப்பூர்வமாக உள்ளே வந்து எங்களை மாய எண்ணங்களுக்கு மாற்றியது. எங்கள் தந்தை வேதிப்பொருள் துரதிர்ஷ்டம் தாக்குண்டிருந்தாரெனில் ஒருவேளை நாங்கள் அதற்கான தகுதி பெற்றிருந்துள்ளோம். நாங்கள் தீங்கான எதையோ செய்திருக்கவேண்டும்.
எனவே நாங்கள் முற்றிலும் ஆராய்ந்து தெரிவு செய்தே காரண-காரியத் தொடர்பு (causality) மீது நம்பிக்கை வைத்தோம். நியூரான்கள், நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள், என்சைம்கள் மற்றும் ப்ரோடீன்கள் என்ற வரிசையில் வந்தால் எல்லாமே சரிதான். ஆனால் மகிழ்ச்சியின்மைக்கான மனிதக் காரணங்கள் அனைத்தும் எங்களுக்கு சந்தேகத்துக்கு உரியனவாகத் தெரிந்தன. அதனாலேயேதான் என் தந்தை எந்த காரணமும் பெற்றிராதிருந்தார். எந்த காரணியும் போதிய தீவிரமானதாக இருந்திருக்க முடியாது, எந்த காரணியாலும் அதை நியாயப் படுத்தவும் முடியாது. மேலும் ரத்னச் சுருக்கமாக சொல்வதென்றால், என் தந்தை எந்த மகிழ்ச்சியின்மை காரணங்களுக்கு இடமளித்திருந்தார் என்பதை ஊகிக்கும் எண்ணம் எனக்கில்லை. காரண-காரிய சம்பந்தமும் இல்லை. காலவரிசை நிகழ்வுகளுமில்லை. குறிப்பாக காலவரிசைகள் மிகவும் தவறாக வழி நடத்துகின்றன. அதை நான் வீட்டிலேயே அறிந்து கொண்டேன். நிகழ்வுகளின் எளிய வரிசைக் கிரமம் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள் : வார்த்தைகள் ஒரு பக்கத்தின் வரிகள் நெடுகிலும் ஒன்றின் பின் ஒன்றாக ஓடுகின்றன. ஒன்றுடன் மற்றொன்று கூடி அணுக்கத்தாலோ அல்லது தொற்றாகவோ ஒரு மாயம் எழக் காரணமாகின்றன. எந்தக் கதையும் நடுநிலை வகிப்பதில்லை.
ஆனால் இதில் சிறிது அர்த்தம் கண்டுபிடிப்பதே மீட்சிக்குரிய திறன்மிகு ஆதாரமெனும் போது, நான் ஏன் நிறுத்திக்கொள்ள வேண்டும்? நாளாக நாளாக, என் அனைத்து அவநம்பிக்கைகளுக்கும் முற்றிலும் மாறாக, ஒரு காலவரிசையைக் கட்டமைக்க ஆரம்பித்தேன், அதுவும் ஒரு காரணகாரிய சங்கிலியாக இருந்தது எனப் பாவித்துக் கொண்டு. என் தந்தையின் சிட்டாவைப் (journal) பின்னோக்கிப் பார்த்து வந்தபோது அவருடைய மனச் சோர்வுக்கும் என் குழந்தைப் பருவ இளைப்பு நோய்க்கும் (asthma) காலத் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தேன் அல்லது கண்டு பிடித்து விட்டதாக நினைத்திருந்தேன். ஒரு கற்றுக் குட்டியின் கற்பனையுடனும் பொறுமையுடனும் நான் உருவாக்கிய இணைப்பான்கள் இவை.
- பிப்ரவரி 1968, முதலாவது மருந்து சீட்டு மனோவியல் மருந்துக்காக
- மார்ச், முதலாவது மருத்துவ மனை சேர்க்கை
- ஏப்ரல், அவருடைய வீடு திரும்பல்
- மே, எனது முதல் இளைப்பு நோய் தாக்கம்
- டிசம்பர், அவர் தாயின் மரணம்,என் பாட்டி
- ஜனவரி, 1969 என் ஒவ்வாமை சிகிச்சை ஆரம்பம்
- ஜூலை, என் இரண்டாவது இளைப்பு நோய்த் தாக்கம் ( இதன்பின் ஒருபோதும் இளவேனில் மற்றும் கோடையில் அவர்கள் என்னை நாட்டுப்புறத்திற்கு அழைத்துப் போகப் போவதில்லையென முடிவு)
- செப்டம்பர், அவரின் இரண்டாவது மருத்துவமனை சேர்க்கை
- நவம்பர், அவருடைய வீடு திரும்பல்
ஒவ்வாமைகள் சிந்தையும் உடலும் சார்ந்த துவக்கங்களைக் கொண்டிருக்கக் கூடுமெனக் கேள்விப் பட்டிருக்கிறேன். என் தந்தையோடு போட்டியிட்டு தாயின் கவனிப்புகளை முழுதாக என்பக்கம் திருப்ப நானே என்மேல் இளைப்பு நோய்த் தாக்கத்தை தருவித்துக் கொண்டேன் என்று நம்பவே ஆசைப்பட்டேன் என்றாலும் அதன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடியவில்லை . ஏனெனில் இவ்விரு நிகழ்வுகளும், வெவ்வேறு தூர சகாப்தங்களுக்கு உரியவை போன்றும், அறிமுகமில்லாத இரு அந்நியர் கதைகளுக்கு உரியவை போன்றும், என் நினைவில் முற்றிலும் பிரித்து வெவ்வேறாக்கப் பட்டு இருந்தன என்றே எனக்குத் தோன்றியது. என் தந்தை நோயுற்றிருந்த காலத்துக்குப் பின் பல ஆண்டுகள் கடந்த பின்னரே நான் நோயுற்றிருந்தேன் என்பதில் நிச்சயமாக இருந்தேன், ஏனெனில் அவர் நோய் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தேதியிட்டது என்று அபத்தமாக நினைத்திருந்தேன். மேலும் எனக்கு இவ்வாறு தோன்றியது (முழுமையின் பொருட்டு நான் இதையும் சொல்லியாக வேண்டும்) அதாவது யாரோ ஒருவர் என் நினைவுகளை சூழ்ச்சித் திறனுடன் கையாண்டிருக்கலாம் (முதல் முறை அல்ல இந்த எண்ணம் தலைக்குள் வெடிப்பது), என் தந்தையின் நோய் வரலாறு என்னுடையதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஸ்பஷ்டமாக தெரியும்படி எனக்காக யாரோ ஒருவர் என் கடந்த காலத்தை கவனமாக மாற்றி எழுதியிருக்கலாம். மேலும் ( நினைவுகள்) மாற்றியமைப்பைச் செய்தவர் என் தாயாகக் கூட இருக்கலாம். எனவே, சில ஆண்டுகளுக்கு முந்திய ஒரு முன் இளவேனில் காலத்திய பரிகாசத்துக்குரிய, நியாயமற்ற, அந்த வன்மத்தின் இம்சையுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துப்போக ஆரம்பித்தேன்.
இந்த காட்சி காருக்குள் நடக்கிறது: என் தாயும் நானும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம், Tangenziale என்னும் சுற்றுச் சாலையில் (ring road) கார் சென்று கொண்டிருக்கிறது. Orbassano-விலுள்ள மருத்துவ மனையில் என் தந்தை அனுமதிக்கப் பட்டிருக்கிறார். (என் நண்பன் அந்த மருத்துவமனையில் பணிபுரிவதாலேயே அவரை அங்கே கொண்டு வந்தோம்’). அவர் தோட்டத்தில் விழுந்து தொடை எலும்பை முறித்துக் கொண்டார், எனவே அது 1995 ஜூலை மாதத்தின் ஏதோ ஒரு நாளாகத் தான் இருக்க வேண்டும் . அவர் படுக்கையின் பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்து இரவைக் கழித்தேன்; அவர் கால் இழுவையில்(traction) இருந்தது. அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. முந்திய நாள் அவர் மிகவும் அமைதியற்று இருந்ததால் எங்களை ஒரு இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால் அந்த இரவில் அவர் அமைதியாகத் தூங்கினார். நானும் கூட அமர்ந்தபடி அரைத் தூக்கத்தை சமாளித்தேன், ஏதோ ஒரு கணப் பொழுதில் அவரது காயம் படாத கால் இருக்கும் பக்கத்தில் தலையை வைத்து சற்றே கண்ணயர்ந்த பிற்பாடு வெகு விரைவில் கண் விழித்தேன், என் தந்தை என்னைப் பார்த்து களங்கமற்ற புன்சிரிப்பை சிந்தியதைக் கண்டேன், ஒரு இதமான, கனிவான, புன்சிரிப்பு, இந்த வகையான ஒன்றை இத்தருணத்தில் அவரிடமிருந்து அவருடைய பேரக் குழந்தைகளால் மட்டுமே பறித்துக் கொள்ள முடியும். எப்படி உணர்கிறீர்கள் என்று நான் கேட்டேன் அவர் பதில் சொல்லவில்லை. அவர் கண்கள் மூடியிருந்தன.அவர் விழித்திருந்திருக்க வில்லை. அந்த புன்சிரிப்பை நான் கனவில் கண்டிருந்தேன். ஒரு நாள் முன்பு, அதாவது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நாளில் தான், நான் முதன்முதலாக அவர் ஜன்னி வந்ததுபோல் பிதற்றக் கேட்டிருந்தேன். அவரை உலகத்தின் தலை சிறந்த தெளிவான மனிதர் என்று சொல்ல முடியாது என்றாலும் அவர் ஒருபோதும் அபத்தமாகப் பேசமாட்டார், அவர் பேச்சில் மறதி நோய் அறிகுறிகள் ஏதும் புலப்படாது. ஆனாலும் இங்கே நேற்று வீட்டின் மாடிக்குப் போக வேண்டுமென அடம் பிடித்தார், மேலும் இந்த அறையில் அந்நியர்களுடன் அவரை ஏன் வைத்திருந்தோம் என்பது அவருக்குப் புரியவில்லை, தன் சொந்த படுக்கையே வேண்டுமென்றார். உடற்காயமுற்ற முதியவர்கள் தாம் மருத்துவமனையில் படுத்துக் கிடப்பதை திடீரென உணரும்போது தன்னிலை இழந்து குழப்பம் அடைந்து பிதற்ற ஆரம்பிக்கிறார்கள். ஒரு அமைதிப்படுத்தும் மருந்தும் (tranquilizer) ஒரு ஒய்வு நிறைந்த இரவும் மட்டுமே வேண்டி இருந்தது, இந்த காலையில் மனச்சோர்வடைந்திருக்கும் நிலைக்குத் திரும்பி விட்டார் வழக்கம் போல் – மூர்க்கமான, எரிச்சல் மூட்டும் சுய நலவிரும்பியாக. மேலும் நாங்கள் குறைவாகவே கவலையுற்றோம், ஏனெனில் பழகிய நிலைமைகள் என்றாலே நம்பிக்கை மீண்டதெனப் பொருள்படுகிறது.
நான் தாயாருடன் காரில் பயணிக்கும் சூழல் விநோதமானதாய் இருக்கும் எப்போதும் போல், என் தந்தை நிஜமான உடல்நல பிரச்னை அனுபவிக்கையில். அது துயர் துடைத்த சூழல் – அவர் அங்கீகாரம் பெற்று விட்டார் எனவும் , இந்த நன்றிகெட்ட உலகம் இறுதியாக கைமாறு செய்து விட்டது எனவும், நாங்கள் அவருக்காக மகிழ்ச்சி அடைகிறோம். துயர் துடைப்புகள் பெருகும்போது எங்கள் மகிழ்ச்சிக்கான வரம்பு குறைந்து விடுகிறது. “நாங்கள் சிறியோராய் இருந்தபோது இவரை மருத்துவமனையில் சேர்த்தது ஒர்பாஸ்னோ-வில் தான் அல்லவா?”-இப்படிக் கேட்க ஏன் என் மனதில் தோன்றுகிறதென்று எனக்கே தெரியவில்லை. தற்செயலாக அப்படிக் கேட்கிறேன், நாங்கள் எங்களுக்குள் ஒரு சிலவற்றைப் பேசிக்கொள்வதில்லை, அதுவும் மனச்சோர்வு வெகுவாகக் குறைந்து போன கொடுமையாக இருக்கின்ற இப்போது. அவருடைய ஐய உணர்வுகளைத் தூண்டிவிட விரும்பாதவன் போல் இந்த கேள்வியை அவர் முன்வைக்க ஒரு கவனம் சிதறிய தொனியைக் கையாள வேண்டியதின் அவசியத்தையும் உணர்கிறேன்; இது பேசக் கூடாத பிரச்னை அல்ல என்பது போல் நான் பாவனை செய்ய வேண்டும். தனக்கு நினைவில்லை என்று கூறுகிறார், அங்கே இரண்டு மருத்துவமனைகள் இருந்தன, மேலும் அவை ஓர்பஸ்ஸானோ-வில் இருந்தன என்று அவர் நினைக்கவில்லை. நகரத்தின் வெளியிலுள்ள சிற்றூர்களை அவர் நன்கு தெரிந்திருக்கவில்லை, அவர் ஒருபோதும் அவற்றின் பெயர்களை அறிந்திருக்க வில்லை. ஒரு பிற்பகலில் நாம் அவரைப் (தந்தையை) பார்க்கப் போயிருந்தது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது என்று அவரிடம் சொன்னேன். “அது உனக்கு வேதனை அளித்ததா?” என்று கேட்கிறார் திடுக்கிட்டு. “ இல்லையே, ஏன்?” என்கிறேன். புதிதாக உழுதிருந்த வயலின் விளிம்பை ஒட்டி நான் நடந்து சென்றது என் நினைவுக்கு வருகிறது. மேலும் அப்போது எனக்கு என் தந்தை நோயுற்றவராக தெரியவில்லை; அவர் வரவில்லை என்பது என் நினைவு. (எனக்கு மற்றொரு நினைவு இருக்கிறது என்று அவரிடம் சொல்லவில்லை, அது இதற்கு முந்தியதா அல்லது பிந்தியதா என்று எனக்குத் தெரியவில்லை, மேலும் அதில் என் தந்தை மிகவும் நோயுற்றிருந்தார். அதைப் பற்றி ஒருபோதும் நான் யாரிடமும் பேசியதில்லை. இப்போதும் நான் அதைச் செய்ய உத்தேசிக்கவில்லை .) “உன் தந்தையின் உடல் நலக்கேடு,” என்று ஆரம்பித்துக் கொஞ்சம் நிறுத்திச் சொல்கிறார், “துக்கம் (melancholy) தான் .” அவர் தலையை ஆட்டி, உதடுகளை இறுக்கி வைத்துக் கொண்டு, பெருமூச்சு விடுகிறார் இதைச் சொல்வது போல்: அது அப்படித்தான். மேலும் அவர் கடின காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை என்னால் உணர முடிகிறது என்பதால், மற்றும் நானும் கூட கடின காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன், அத்துடன் நாங்கள் இருவருமே இந்த இரண்டு நாட்களாக கடின காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், எனவே அவரை அமைதிகொள்ள விடுவிக்கிறேன், அத்துடன் வேறு பேசுபொருளுக்கு மாறுகிறேன்.
பத்தாண்டுகள் கழித்து “முன்னுணர்வு” கட்டுரையில், என் தாயார் துக்கம் என்ற வார்த்தையைப் பயன் படுத்தியிருந்த அந்த சமயத்தில் நான் மகிழ்ந்தேன் என்று எழுதினேன்–அது மனச்சோர்வு என்பதைக் காட்டிலும் துல்லியமானதாகவும் உணர்வுகளை எழுப்புவதாகவும் இருக்கக் கண்டேன். மற்றும் என் தாயார் உண்மையிலேயே நுட்பமானவர், மேலும் வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நன்கறிந்தவர், தன் வாழ்நாள் துணைவர் மனச்சோர்வுற்றிருக்க காரணங்கள் இருந்தன என்பதை ஒரேயடியாக மறுத்ததிலும், அத்துடன் (தற்போதைய கோட்பாட்டின் படி ) செரோடோனின் போன்ற நரம்புத் தூண்டல் கடத்தி இல்லாமையால் (இதுவும் சர்ச்சைக்குரிய கோட்பாடே) ஏற்படும் அகவழி (endogenous) மனச்சோர்வு என்ற பெயரால் அறியப்படுகிற நோயால் அவதிப்பட்டார் என்பதை மறுத்ததிலும், மனச்சோர்வு என்ற பதத்தைப் பயன்படுத்த மறுத்திருப்பதால், தன் வாழ் நாள் துணைவர் இயல்பாகவே துக்க மனப்போக்கு கொண்டவராகப் பிறந்தவர் என்பதை உறுதிப்படுத்தி இருந்தார், எனவே ஹிப்போகிரேட்ஸ்(Hippocrates ) தொடங்கி கேலன்(Galen ) வரைக்குமான பண்டைய மருத்துவர்களின் போதனைகளின் படி, அவர் உடலில் கரும் பித்தம் (black bile) பிற உடல் பாய்மங்களை (humors ) விட (அதாவது மஞ்சள் பித்தம், சளி, ரத்தம் ஆகியவற்றை விட ) மேலோங்கி இருந்தது. எனவே அவர் கட்டாயமாக அந்த குணம் கொண்டவராய்த்தான் இருக்க முடியும். அப்படித்தான் அவர் இருந்தார்.
அந்த பழம் பெரும் மருத்துவமனைகள் எங்கிருந்தன, எத்தனை தடவைகள் அவற்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார், மற்றும் எவ்வளவு காலம் என்பனவற்றை நான் விசாரிக்க முடிவு செய்வதற்குள், ஏறத்தாழ பத்து ஆண்டுகள் கடந்து போயிருந்தது. குடும்பத்தில் யாருக்கும் இதைப் பற்றிய ஞாபகம் இல்லை, ஆனாலும் என் தந்தை தனக்கே உரிய வழியில் தடயங்களை விட்டு வைத்திருந்தார். சிட்டாக்கள் மூலமாக முதல் மருத்துவமனை vivarone -ல் இருந்தது என்றும் இரண்டாவது piossasco -வில் இருந்தது என்றும் கண்டுபிடித்தேன்.(பல ஆண்டுகள் கழிந்த பின்னர் சேர்த்த மூன்றாவது மருத்துவமனை Switzerland-ல் இருந்தது, அதை நான் நன்றாக ஞாபகத்தில் வைத்திருந்தேன்). மேலும் Piossasco எங்கே இருந்ததென தேடிப் பார்க்கப்போயிருந்த போது, (நகரத்திற்கு வெளியில் இருந்த சிற்றூர்களை நான் நன்றாக அறிந்திருக்கவில்லை) 1995-ன் அந்த பிற்பகலில் நானும் என் தாயாரும் வெளிச்சுற்று சாலையில் கடந்து கொண்டிருந்த அந்த இடம் நேர்க்கோட்டில் (காகம் பறக்கும் தடம்) piossasco-க்கு மிக அருகில் இருந்தது என்று உணர்ந்தேன். ஆனால் அது அவருடைய (என் தாயாரின்) ஞாபகத்தைப் புதுப்பிக்கப் போதுமானதாக இருக்கவில்லை. ( அவர் கடினமான காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்.)
1969-ன் இலையுதிர்காலத்தின்போது, Piossasco மருத்துவமனையில் அவர் நிலை முன்னிலும் மோசமாகியது. முன்னேற்றம் எதுவும் இல்லாமலும் மேலும் மேலும் மோசமாகிக் கொண்டு வந்தது. எனினும் அந்த இடத்தை விட்டு அகலவோ அல்லது வீடு திரும்பவோ அவர் விரும்பவில்லை. Piossasco அவருடைய மேஜிக் மௌண்டைன் (கேளிக்கைப் பூங்கா )- ஆகி இருந்தது. ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அவர்கள் அவரை வெளியேற்ற என் தாயார் அவரை வற்புறுத்தி இணங்க வைத்தாரென என் பெரிய தமக்கையார் நினைவுகூர்கிறார்.
ஒரு நாள் என் தாயார் என்னையும் (எனக்கு 7 வயது) என்னுடைய வேறொரு தமக்கையையும் (வயது 10) அவரைப் பார்க்க அழைத்துச் சென்றார். புதிதாக உழுது போடப்பட்டிருந்த வயலின் பக்கலில் நடந்து சென்றோம். அது இலையுதிர் காலத்து ஆழமாகப் புரட்டி உழுதல் வகை, வயல்தரையைக் கோரி வாரும் பெரிய அடிமண் கட்டிகள் மெதுவாக நொறுங்கி பொடியாக உதிர்ந்து உழுசால் நெடுகிலும் பரவுவதற்காக செய்யப்படுவது. அவை மண் சீவல்கள் என்றழைக்கப் படுகின்றன; மற்றும் அவை கிட்டத்தட்ட மிகச்சரியான வடிவ கணிதத் திண்மங்கள் போல் தோற்றமளிக்கின்றன: வெட்டிக் குறைக்கப்பட்ட சாய்சதுர அறுமுகத் திண்ம வடிவங்கள் (truncated rhombohedron)எனக் கருதுங்கள். கலப்பைக் கொழு முனை வெட்டிய சீவலின் செங்குத்துப் பக்கம் பளபளப்பான மெருகூட்டப்பட்ட பளிங்குப் பரப்புப் போல் சூரிய ஒளியில் மினுங்கியது, நான் என் வாழ்நாளில் முதல் தடவையாகத் தெளிவாகக் கண்டிருந்த அந்த தாதுக்கள் நிறைந்த ஈர மண்ணின் பிரகாசம் தான் இப்போது எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. (யாராவது நான் சொல்வதில் கவனம் செலுத்தி இருந்தால், அவர் எனக்கு விளக்கிச் சொல்ல வேண்டுகிறேன். மண் ஏன் இப்படிப் புரட்டிப் போடப் படுகிறது? இது ராட்சத எலியின் வேலையா அல்லது குண்டு வீச்சா?). இரண்டாவதாக நினைவுக்கு வருவது என் தந்தையின் உணர்ச்சியின்மை மற்றும் மந்தமான புறத் தோற்றம். நான் பின்னாலிருந்து (எதிர் மற்றும் பக்கவாட்டுத் தோற்றங்களுக்கு இடைப்பட்ட) முக்கால் தோற்றக் காட்சியில் முன்பக்கமாகத் தலை குனிந்தபடி செல்லும் அவரைப் பார்க்கிறேன், மேலும் இருவரும் இவ்வாறு நடந்து செல்கையில் ஒருபோதும் அவரை எட்டிப்பிடித்துக் கடந்து முன்னால் நின்று அவர் முகத்தைப் பார்க்க முடியாது என நினைக்கிறேன். குறுக்கு வழியில் செல்ல வேண்டி, அது ஆழ் உழவு என்பதையறியாமல் புதிதாக உழப்பட்ட வயலை ஒட்டிய குறுகிய பாதையில் சிரமப்பட்டு நடந்து செல்கிறேன். அவர் கவனத்தை ஈர்க்கும் வெறிகொண்ட முயற்சியில் ஜுவென்டஸ் (Juventus ) வென்று விட்டார்கள் என்று அவரிடம் சொல்கிறேன். நான் அவருடன் பேசி இருப்பதை அவர் உணரவில்லை. ஓரசைச் சொல்லால் என் தாய்க்கு பதிலிருக்கிறார். ஆனால் அவர்கள் பேசிக் கொள்வது எனக்குக் கேட்க வில்லை. அவர் பேய் போலவும் தூக்கத்தில் நடப்பவர் போலவும் தோற்றமளிக்கிறார், அவர் இனி இந்த உலகத்தவர் அல்ல. பின்னர் எங்களை அவருடைய அறைக்கு அழைத்துச் செல்கிறார். அது ஒரு ஆடை அலமாரி, ஒரு படுக்கை மற்றும் ஒரு சிறு படுக்கையோர மேஜையையும் உள்ளடக்கி இருக்கிறது. காலியாக உள்ள அவருடைய கைப்பெட்டி ஆடை அலமாரியின் மேல் இருக்கிறது. அவர் நோயுற்று இருப்பவர் அல்ல என்பதே அங்குள்ளோரின் பொதுவான கருத்து..அவர் சிகிச்சை பெறுகிறார் என நினைத்தேன். பைஜாமா அணிந்து படுக்கையில் படுத்தபடி இருப்பார் என நினைத்தேன். மாறாக முழு உடையணிந்து (டை அணியவில்லை என்றாலும்கூட ) அவர் நடமாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அங்கே மருத்துவர் இல்லை, மருந்துகள் இல்லை, அது மருத்துவமனையும் அல்ல,. தங்கும் விடுதியைப்போல் தான் காணப்படுகிறது. அவர் இனி எங்களைப்பற்றி எந்த அக்கறையும் கொள்ளமாட்டார் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது, அது துல்லியமான நினைவாக அல்ல, வெறும் உணர்வாக மட்டுமே இருக்கிறது. எங்கள் வீடு இதைவிட சுகமானதாக இருந்த போதிலும், புதிரான காரணங்களுக்காக அவர் இந்த இடத்தில் , தங்கியிருக்க விரும்புகிறார், அதுவும் என் தாயாரின் விருப்பங்களை மீறி . விஷயம் அவ்வளவுதான்.
கைச்சிட்டாவில் குறிப்பு : “நவம்பர் 11-பிற்பகல் 3 மணி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார் — குணப்படுத்த இயலாது”. ஒரு முடிவுரையாக, ஒரு இறுதித் தீர்ப்பாகத், தன் வாழ்வின் எஞ்சியிருக்கும் நாள்களுக்கும் பொருந்துவதாக எண்ணி ஏற்றுக்கொண்டுவிட்டார்.
இருந்த போதிலும் அவர் மறுபடியும் வேலைக்குப் போனார். சில மாதங்கள் வரை கைச்சிட்டாக் குறிப்புகளில் கையெழுத்துகள் குறுகிக் கொண்டு வந்து இறுதியில் படிக்க முடியாத கிறுக்கல்களாகிவிட்டன.
என் நினைவுகளின் கதைக்களன்களாக இருந்த தேதிகளையும் அமைவிடங்களையும் முழுதாய் அறிந்து கொண்டதற்குப் பிந்திய சில மாதங்களில் ஏதோ ஒரு கணத்தில் அவை ஆதாரமில்லாத மேலடுக்குகளாக, கண்டுபிடிப்புகளாக இருக்கலாம் என்று அச்சமடைந்தேன். 1969-ன் இலையுதிர் காலத்தில் செப்டம்பர் 29 -லிருந்து நவம்பர் 11 வரை ஜுவென்டஸ் குழு விளையாடி இருந்த ஐந்து ஆட்டங்களில் ஒன்றில் சமநிலையும், மூன்றில் தோல்வியும், பயிற்றுநர்களை மாற்றிய பின்னர் கடைசி ஆட்டத்தில் வெற்றியும் பெற்றிருந்தார்கள் என்று பின்னர் கண்டு பிடித்தேன் . அக்டோபர் 29-ல் தான் கிடைத்தது தான் அந்த ஒரே வெற்றி, இன்டர்-ல் 2-1, கோல் போட்டவர்கள் அனஸ்டாஸி,போனின்-செக்னா, மற்றும் ஒரு சொந்த கோல் போட்டவர் பேடின். அவரைப்(என் தந்தையை) பார்க்க நாங்கள் அக்டோபர் 26-ல் போயிருந்திருக்க முடியாது, ஏனெனில் அன்று எனக்கு ஆட்ட முடிவுகள் தெரிந்திருக்காது. அந்த நாள், நவம்பர் 1,சனிக்கிழமை, அனைத்து துறவிகள் நாள் அல்லது நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை, இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் ஆக இருந்திருக்கவேண்டும். ( சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக் கிழமைகளைத் தவிர்த்து விடும் ). பெரும்பாலும் அங்கிருப்பவர்கள் வானொலி கேட்க மாட்டார்கள் என்று நினைத்திருந்ததால், அவருக்கு ஒரு நற்செய்தி கூற விரும்பினேன். அதுவும் புரிந்துகொள்ளக் கூடியதே, ஏனெனில் அந்த பரிதாபகரமான பருவத்தில் ஜுவென்டஸ்-க்கு வெற்றி என்பது இயல்புக்கு மீறியதாக இருந்தது. நான் அவருக்கு ஏதாவது நல்ல சங்கதி தர விரும்பினேன், ஆனால் தவறான விஷயத்தைத் தேர்ந்தெடுத்தேன்; அவர் கால்பந்து விளையாட்டில் அதிக அக்கறை கொண்டதில்லை. பரிதாபத்துக்குரிய முட்டாள் பையன் நான், அவர் கவனத்தைப் பெற மேலும் சிறந்த உபாயத்தை யோசித்திருக்க வேண்டும். நான் முன்பே தயாராக்கி வைத்திருந்தேன்என்றாலும், அந்த சங்கதியை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு வெளிக்கொணரக் காத்திருந்திருக்க வேண்டும்.
ஆயினும் அந்த நினைவு உண்மையே’. நிஜமாகவே அங்கே நான் இருந்தேன். அவர்களுடன் இருந்தேன். நான் இட்டு நிரப்பிவிட வில்லை. எப்போதும் கதைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருக்கும் எனக்கு, இவை அனைத்தும் நிச்சயமாக இட்டு நிரப்பப் பட்டவை அல்ல என்று அறிந்திருப்பது, ஏதோ காரணமாக மாபெரும் ஆறுதலாக இருந்தது. ஒரு மாதமாகத் தான் மட்டும் தனியாகப் போய் அவரைப் பார்த்து தவறை உணரச் செய்து வீடு திரும்ப வைக்க முயன்றபின்னர், அந்த தடவை தாயார் எங்கள் அனைவரையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார். அவருக்கு அதிர்ச்சி (jolt ) கொடுக்க, அநேகமாக நரம்பியலாளரின் ஒப்புதலுடன் ( jolt -எங்கள் வீட்டில் பயன்படுத்தப் படும் ஒரு கொடூரமான படிமம்). தனக்கு ஒரு குடும்பமும் பொறுப்புகளும் உள்ளன என்று அவர் ஞாபகப்படுத்திக் கொள்வார் என்பதற்காகவே என் தாயார் அவரைப் பார்க்க எங்களை அழைத்து வந்திருந்தார்; நாங்கள் ஒரு கடிந்துரை அல்லது நினைவுக்குறியீடு.
இதுவரை தழைந்திருந்த என் தாயார் தன் ஒளிவு மறைவு கொள்கை, உண்மையை மறைத்து பொய்யை சிருஷ்டிக்கும் நிகழ்ச்சிநிரல் மற்றும் கட்டுப்பாடு, தன்னல மறுப்பு போன்ற எல்லா குணநலன்களையும் தற்காலிகமாக விலக்கிக் கொண்டார். அவநம்பிக்கை மிகுந்த தருணங்களே ஆபத்தை அறிந்தும் பொருட்படுத்தாத நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் தருணங்கள். அதனுள்ளே எங்களையும் இழுத்திருந்தார்- எவ்வளவு கோபம்கொண்டவராகவும், புத்தி புகட்டுவருமாக அவர் இருந்திருப்பார் (கோபமோ , கண்டிப்போ அணுவளவும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்) குழந்தைகளுடன் வந்து அவரை எதிர் கொண்டபோது:
இவர்களைப் பாருங்கள். பார்க்கிறீர்களா? எவ்வளவு சின்னஞ்சிறுசுகள் இவர்களெல்லாம், உங்கள் அண்மையை எவ்வளவு விரும்புகிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.
மேலும், அந்த இடத்திலேயே மகிழ்ச்சியாகத் தன் எஞ்சிய நாள்களைக் கழித்திருக்கக்கூடிய என் தந்தை துருவிப் பார்த்திருந்த எங்கள் கண்களைத் தவிர்த்துவிட்டு, உள்ளுக்குள் தன் செய்கைக்காக வருந்தி ஒரு வாரத்துக்குள் வீடுபோக விடுவிப்புக் கேட்டார். நாங்கள்தான் இறுதிப் புகலிடமாகி இருந்தோம், அத்துடன் இறுதிப் புகலிடமாகவே செயல்பட்டோம். குணமடைய இயலாதவராக இருந்தபோதிலும்.
(இக்கட்டுரையை இத்தாலிய மொழியிலிருந்து இங்கிலிஷில் மொழிபெயர்த்தவர் Anne Milano Appel.)
ஆசிரியர் குறிப்பு : ஆண்ட்ரியா கானோப்பியோ 1962-ல் இத்தாலியின் டுரின் நகரில் பிறந்தவர். 1986-ல் எழுதுலகில் பிரவேசித்தார். இத்தாலிய மொழியில் இவர் எழுதிய புதினத்தின் இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு Three light years என்ற பெயரில் வெளியிடப்பட்டு வெளிநாடுகளில் பிரபலம் ஆகியது. இவர் இலக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தவர். ரூஸ்ஸோ, Jean Echenoz ஆகியோரின் படைப்புகளை பிரெஞ்சு மொழியிலிருந்து இத்தாலிய மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார்.
[மூலம்: த்ரீ பென்னி ரிவ்யூ பத்திரிகையில் வெளி வந்த கட்டுரை- No Cure]
சுட்டி :https://www.threepennyreview.com/samples/canobbio_sp17.html
சொல்லடைவு :
1.முன்னுணர்வு (Premonition ): 2005-ல் ஆசிரியர் எழுதிய கட்டுரை; மேலே மொழி பெயர்க்கப்பட்டுள்ள குடும்பக் கதையில், ஆசிரியர் தன் நுண்ணுணர்வு என்னும் கட்டுரையில் இருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளார் . இக்கட்டுரை த்ரீ பென்னி ரெவியூ #142 சம்மர் 2015 இதழின் காட்சி (perspective) பகுதியிலும் வெளியிடப்பட்டுள்ளது.
2. இருத்தலியம் (Existentialism): இது மனித இருத்தலின் சாரமென்ன என்று ஆராய்ந்த இருபதாம் நூற்றாண்டு சிந்தனை முறை. இதன் வாதம்: மனிதன் இயற்கைச் சக்திகளிடமிருந்து அந்நியப்பட்டுத் தன்னைத்தானே உணரும்போது துயரும் தனிமையும் கொண்டவனாகிறான். அவன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமலாகிறது. அதிலிருந்து அவனுக்கு மீட்பு இல்லை.
3. காரண காரியத் தொடர்பு (Causality) : ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு என்கிற கோட்பாடு
4. ஹிப்போக்ரெடீஸ் (Hippocrates ) தொடங்கி கேலன்(Galen ) வரை:
ஹிப்போக்ரெடீஸ் (460-370கி.மு) – பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த மருத்துவர் மற்றும் தத்துவ ஞானி. தத்துவத்துக்கும் மருத்துவத்துக்கும் இடையே உள்ள தொடர்பு மிகப் பழைமையானது. இரண்டிலும் தேர்ந்தவர்களே தலைசிறந்த மருத்துவர்களாகப் பரிணமித்தார்கள். அந்தக் காலகட்டத்தில் நோய்களுக்குக் கடவுளின் கோபமும், செய்த பாவமும் பேய்-பிசாசுகளுமே காரணம் என்பது போன்ற மூடநம்பிக்கைகளில் மக்கள் ஊறிப்போயிருந்தனர். நோய்கள் வர உடல் சம்பந்தமான மற்றும் பகுத்தறிவுக்குட்பட்ட காரணங்கள் உள்ளன என்று தைரியமாகச் சொன்ன முதல் மருத்துவர் ஹிப்பொக்ரெடீஸ். எந்த உடலும் ஒரு முழுமை, அது வெறும் அங்கங்களின் கூட்டு அல்ல என்று கருதி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது இவரது நம்பிக்கை. இவர் மருத்துவ உலகின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
ஹிப்போக்ரெடீஸ் மனித உடல் மற்றும் அதன் நான்கு ரசங்களான (juices) ரத்தம், சளி, கருப்புப் பித்தம், மஞ்சள் பித்தம் ஆகியவற்றைப் பற்றி அறிவுலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இந்த நான்கு ரசங்களும் மிகச்சரியான இணக்கத்தோடு இருக்கையில் உடல் நலம் பேணப்படும்; இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுந்தாலோ, வலி அல்லது நோய் உண்டாகும் என்றார்.
கேலன் (130-201) கி.பி – இவர் துருக்கியில் பிறந்தவர். ரோமானியப் பேரரசின் மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தத்துவ ஞானி. “ மருத்துவத் தந்தை” ஹிப்போகிரேட்ஸ்-ன் கோட்பாடுகளால் கவரப்பட்டவர். ஹிப்போகிரேட்ஸ் தொடங்கிவைத்து அடுத்த எட்டு நாற்றாண்டுகளில் பெருவளர்ச்சியுற்றிருந்த அறிவியல், தத்துவ, மருத்துவப் புலமைகளைத் தொகுத்தளித்து உலகறியச் செய்தவர். பழங்கால ஆராய்ச்சியாளர் அனைவரையும்விட மிக அதிக தேர்ச்சியடைந்தவர். உடற்கூறியல், நோயியல், மருந்தியல், நரம்பியல், தத்துவவியல், தர்க்கவியல் போன்ற அறிவுத் துறைகளின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்தார்.
இப்படி ஒரு சிந்தனையும், அதை எழுத்தில் நயமாகக் கொண்டு வந்ததும்,அதை அற்புதமாக மொழி பெயர்த்துள்ளதும்…..அருமை. இரு முறை படித்தும் இன்னமும் படிக்க வேண்டும் போலிருக்கிறது.
Thank you Sir, I enjoyed translating the author’s non-linear writing to tell his family story. Often the writing appeared as a fiction similar to J.J.Sila kurippukal of Su.Ra. but I found that the book PREMONITION is available in Amazon which convinced me that it is not a fiction. Even though it is a tough task to translate this piece,I am happy that atleast one person has read through the entire family story and offered comments. Thank you once again….Gora