காளி பாதம்

ப. சரவணன்

தன் மகள் நாடகத்தில் நடிக்க உள்ளாள் என்பதை அறிந்ததும் உச்சிகுளிர்ந்துவிட்டார் கதிரேசன். 

தன் மகள் ரேஷ்மாவிடம், “செல்லக்குட்டி என்ன வேஷம் போடப்போறீங்க?” என்று மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் கேட்டார்.

“அப்பா! நான் காளி” என்றாள் மகள் தன் கருவிழிகளை உருட்டியபடி.

“ஆ! என்ன, காளியா? என் மகள் அந்த மகாகாளியா!” என்று வியப்பில் உருகி நின்றார் கதிரேசன்.

“இல்லை. மகாகாளி இல்லை. நான் காளி” என்றாள் மகள் அழுத்தமாக. 

“ஆமாம்மா, காளிக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா? வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளதோ அத்தனை பெயர்கள். நீ காளிதான். அந்த மகாகாளிதான்” என்றார் கதிரேசன்.

அப்போது தன் கணவருக்குக் காபியைக் கொண்டுவந்த ரம்யா, அவளுக்கு டிரெஸ், மேக்கப் எல்லாம் நாம தான் போட்டுவிடணுமாம்” என்றார்.

“அதனால என்ன, டிரெஸ்களை வாடகைக்கு எடுப்போம். டிராமா மேக்கப் மேனை வைச்சு மேக்கப்பும் போட்டுடுவோம்” என்றார் கதிரேசன்.

“அதெல்லாம் சரிதான். ஆனா, டிராம நடக்குற நாள் 18 ஆம் தேதி. நீங்க அப்ப வெளியூர் ‘கேப்’புல இருப்பீங்க. நான் மட்டுந்தான் இவளுக்கு டிரெஸ் வாங்கவும் மேக்கப் போடவும் தனியாவே அழையணும்” என்றார் ரம்யா.

“கவலையே படாதே! எல்லாத்துக்கும் நான் முன்கூட்டியே ஏற்பாடு பண்ணீடுறேன். நீ பதினெட்டாந்தேதி ரேஷ்மாவுக்குத் துணைக்குப் போனா மட்டும் போது” என்றார் கதிரேசன். 

மறுநாளிலிருந்தே தன் மகளின் உயரத்துக் ஏற்ப எந்தக் கடையில் காளிவேஷத்துக்குரிய உடைகள் கிடைக்கும் என்று தேடத் தொடங்கினார். நாடக நடிகர்களுக்கு வாடகைக்கு உடைகளை வழங்கும் ஒரு கடையினைத் தேடிப் பிடித்து, அங்குத் தன் மகளை  அழைத்துச் சென்றார் கதிரேசன்.

அங்குக் காளிக்கு உரிய உடைகள் இருந்தன. ஆனால், அவை தன் மகளின் உயரத்தைவிட சற்றுக் கூடுதலாக இருந்தது. அதனால், அதை வாடகைக்கு எடுக்காமல், அந்த உடையைத் தன் அலைபேசியால் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டார். 

வழக்கமாகத் தனக்குச் சட்டை தைக்கும் கடைக்குத் தன் மகளை அழைத்துச் சென்றார். தையற்காரரிடம் அந்தப் புகைப்படத்தைக் காட்டி, “இதுபோலவே என் மகளுக்கு டிரெஸ் தைக்கணும்” என்றார்.

அவர் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, “சார்! இது நாளு விதமான துணிகளை இணைச்சு தைச்சிருக்காங்க. ஒவ்வொரு விதமான துணியையும் தனித்தனியாக் கொஞ்சம்போல வாங்கணும்” என்றார்.

“துணியை நீங்களே வாங்கி, எம் மகளுக்கு ஏத்தமாதிரி தைச்சுக் கொடுங்க. எவ்வளவு ஆகும்?” என்று கேட்டார் கதிரேசன். 

அவர் கேட்ட தொகையில் பாதித் தொகையை முன்பணமாகக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்தார். 

“ரம்யா! டிரெஸ் பதினாறாந்தேதி தயாராகிடும். அது வந்ததும் ஒருதடவை அதை ரேஷ்மாவுக்குப் போட்டுப்பார்த்துடு” என்றார் கதிரேசன்.

“சரிங்க! மேக்கப்?” என்று கேட்டார்.

“அதுக்கு ஆள்பிடிக்கணும். பார்க்குறேன்” என்றார் கதிரேசன்.

மறுநாள் அவர் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது சாலையேரத்தில் சுவரில் பெரிய பெரிய எழுத்துக்களை விளம்பரமாக எழுதிக்கொண்டிருந்த முதியவரைப் பார்த்தார் கதிரேசன்.

அவருக்கு எண்பது வயதிருக்கும். அவர் வழக்கமாகத் தேர்தல் சமயங்களிலும் திருவிழாக்களின் போதும் சுவர் விளம்பரங்களை எழுதுபவர். இந்த இரண்டும் இல்லாத நேரங்களில் செருப்புத் தைக்கச் சென்று விடுவார். ஆண்டின் பெரும்பகுதியை அவர் செருப்புத் தைத்துத்தான் கழித்துவருகிறார்.

அவரை நெருங்கிச் சென்ற கதிரேசன், “ஐயா! வணக்கம்” என்றார்.

அந்த முதியவர் நடுங்கும் கைகளுடன் தன் தலையைத் திருப்பி, “யாரு? என்ன வேணும்?” என்று கேட்டார் அந்த முதியவர்.

“ஐயா! எம் மகள் பள்ளிக்கூட நாடகத்துல நடிக்கப்போறா. அவளுக்கு நீங்க மேக்கப் போட்டு விடணும்” என்று கேட்டார்.

“என்னைக்கு?” என்று கேட்டார் முதியவர்

“வர்ற 18” என்றார் கதிரேசன். 

“தமிழ்ப் பதினெட்டா? இங்கிலீஸ் பதினெட்டா?” என்று கேட்டார் முதியவர்.

“இங்கிலீஸ் தேதிதாணுங்க” என்றார் கதிரேசன்.

“உங்க பொண்ணு எந்த வகுப்பு படிக்குது?” என்று கேட்டார் முதியவர்.

“அஞ்சாங்கிளாஸ்” என்றார் கதிரேசன்.

“என் வேஷம்?”

“காளி வேஷம்”

“காளியா!” என்று அதிர்ந்து கேட்டார் அந்த முதியவர்.

“ஆமாங்கையா. காளிவேஷம்.

“சரி, இன்னையிலேர்ந்து நாடகம் முடியுற வரைக்கும் உங்க மகளுக்குக் கறி, மீன் கொடுக்காதீங்க. வீட்டுலையும் சைவச் சாப்பாடு சாப்பிடுங்க. வீட்டுல சாய்தரம் தவறாம அகல்விளக்கேத்துங்க” என்றார் அந்த முதியவர்.

“ஐயா! இது சின்னப்பிள்ளை நடிக்குற நாடகம்தானே! இதுக்கு எதுக்கு இத்தனை சம்பிரதாயம்?”

“சின்னப்பிள்ளை நடிக்குற நாடகம்தாணுங்க. ஆனா, போடுற வேஷம் என்ன சாதார்ண வேஷமா? காளியில்ல!” என்று தன் இமைகளை உயர்த்திபடியே கேட்டார் அந்த முதியவர், தொடர்ந்து பேசினார், “நானும் இன்னையிலேர்ந்து பீடியையும் சாராயத்தையும் ஒதுக்கிவைக்கணும், உங்க மகள் நடிச்சு முடிக்குற வரைக்குமாவது” என்று.

“சரிங்க ஐயா! உங்களுக்கு நான் எவ்வளவு தரணும்?”

“நீங்க பார்த்துக் கொடுங்க. நான் என்ன உங்க சொத்தை எழுதியாக் கேட்கப் போறேன்” என்றார் அந்த முதியவர்.

தன் மகள் படிக்கும் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டு, “ஐயா! சாய்ந்தரம் நாலுமணிக்கு அந்த ஸ்கூலுக்கு முன்னாடி இருக்குற சலூன்கடைக்குப் பக்கத்துல எம்மகளும் மனைவியும் கார்ல உட்கார்ந்திருப்பாங்க. நீங்க வந்து மேக்கப் போட்டதும் அவங்க உங்களுக்குப் பணத்தைக் கொடுத்துடுவாங்க” என்றார்.

“எத்தனை மணிக்கு?” என்று கேட்டார் அந்த முதியவர்.

“நாலுமணி” என்றார் கதிரேசன்.

தன் கைகளில் இருக்கும் பிரஷ்யையும் பெயிண்ட் டப்பாவையும் கதிரேசனிடம் காட்டி, “உங்க மகளுக்கு மேக்கப் போட இந்த பிரஷ்சும் பெயிண்ட்டும் ஆகாது. வேற வாங்கணும்” என்றார் முதியவர்.

உடனே, கதிரேசன் தன் சட்டைப் பையில் இருந்து 300 ரூபாயை எடுத்து அந்த முதியவரிடம் கொடுத்தார். அதை அந்த முதியவர் வாங்கி, தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, தன்னுடைய கிழிந்த சட்டையின் பையில் வைத்துத் திணித்துக் கொண்டார். 

கதிரேசன் புறப்படும்போது, “அப்படியே காளியாத்தாளுக்கு மண்டையோட்டு மாலையும் வாங்கிடுங்க” என்றார் அந்த முதியவர்.

“சரி! விசாரிக்குறேன்” என்று கூறிவிட்டு வந்தார் கதிரேசன்.

ரம்யாவிடம், “ரேஷ்மாவ காளியா மாத்துறதுக்கு ஒரு சரியான ஆளைப் பிடிச்சுட்டேன்” என்று கூறி, அந்த முதியவர் தன்னிடம் கூறியவற்றையும் ஒப்பித்தார் கதிரேசன்.

“ஏங்க, இது ஒரு ஸ்கூல் டிராமா. இதுல நம்ம மகளுக்கு ஒரு சின்ன வேஷம். ஒரு நிமிஷம்தான் அவள் மேடையில நிற்கப் போறா. வசனங்கூடக் கிடையாது. இதுக்குப்போயி அந்தாளு மீன்சாப்பிடாதே, கறிசாப்பிடாதே, விளக்குப்போடு, தோப்புக்கர்ணம் போடுண்ணு ஏதேதோ சொல்லிருக்காரு?” என்று எரிச்சலோடு கேட்டார் ரம்யா.

மறுநாள் நாடகத்துக்கான பொருட்கள் விற்கும் கடையைத் தேடிச் சென்றார் கதிரேசன். “என் மகளுக்குக் காளிவேஷம். மண்டையோட்டு மாலை வாடகைக்குக் கிடைக்குமா?” என்று கடைக்காரரிடம் கேட்டார் கதிரேசன்.

உங்க மகள் எவ்வளவு உயரம்” என்று கேட்டார் கடைக்காரர்.

கதிரேசன் தன் வலது கையைக் காற்றில் நிறுத்தி, “இவ்வளவு உயரம்” என்றார். உடனே, அந்த உயரத்துக்குச் சற்றுக் குறைவான உயரத்தில் மண்டையோட்டு மாலையைத் தேடி, எடுத்துக்கொடுத்தார் கடைக்காரர். வெட்டருவா வேணுமா?” என்று கேட்டார் கடைக்காரர்.

காட்டுங்க பார்க்கலாம்” என்றார் கதிரேசன்.

கடைக்காரர் காளி ஏந்தியிருக்கும் கொடூரமான ஆயுதங்களின் மாதிரிகளை எடுத்துக் கொடுத்தார். ஒவ்வொன்றின் நுனியிலும் கூரிலும் சிவப்பு நிறத்தில் ரத்தக் கறை போலப் பூசப்பட்டிருந்தது. அதைப் பார்ப்பதற்கே கதிரேசனுக்கு அச்சமாகத்தான் இருந்தது. 

அவற்றில் இரண்டினை மட்டும் வாடகைக்கு வாங்கிக்கொண்டார். அவை பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருந்ததால் எடைகுறைந்து லேசாகத்தான் இருந்தன. வாடகைக்கு வாங்கிய பொருட்களைத் தன் மனைவியிடம் காட்டினார். 

“ஏங்க, ஒரு சின்ன வேஷத்துக்காக ரொம்ப செலவு பண்றீங்க” என்று கடிந்துகொண்டார் ரம்யா. 

“எம்மகள் மகாகாளியில்ல!” என்று பெருமையாகச் சொன்னார் கதிரேசன்.

உடனே ரேஷ்மா, “அப்ப மகாகாளியில்ல, நான் காளி” என்றாள்.

“சரிடாம்மா! நீ காளியாத்தாதான்” என்றார் கதிரேசன்.

அன்று மாலையில் கதிரேசன் வெளியூருக்குப் புறப்பட்டார். ஏங்க, அந்த மேக்கப் போடுறவருக்கு நான் எவ்வளவு கொடுக்கணும்?” என்று கேட்டார் ரம்யா.

“அவர் போடுற மேக்கப்ப பார்த்து நீயே ஒரு தொகையை அவர்கிட்ட கொடுத்துடு” என்றார் கதிரேசன்.

அப்போது ரேஷ்மா, “அப்பா! நாளைக்கு என்னோட டிராமாவைப் பார்க்க நீங்க வரமாட்டீங்களா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டாள்.

“நிச்சயமாக வருவேண்மா. நீ மேடையில நடிக்கும்போது, அப்பா ‘ஸ்டுடேஜ்’க்குக் கீழே இருந்து பார்த்துக்கிட்டுத்தான் இருப்பேன். உங்க அம்மா வீடியோ கால்ல எனக்குக் காட்டுவா” என்றார் கதிரேசன்.

மறுநாள் மூன்றே முக்காலுக்குக் கதிரேசன் குறிப்பிட்டிருந்த இடத்தில் கையில் பிரஷ்களும் சாயப்பொடிகளுமாக நின்றிருந்தார் அந்த முதியவர். கார் வந்தும் அவர் ரேஷ்மாவைப் பார்த்து வணங்கினார். ரேஷ்மா காளிக்கு உகந்த யானைக்கறுப்பு நிற உடையில் ‘சின்னக்காளி’ போலவே இருந்தாள். 

ரேஷ்மாவை காரின் பின் இருக்கையில் அமர வைத்து, முதியவர் காருக்கு வெளியே அமர்ந்து நிமிர்ந்தபடி வேஷம்போடத் தொடங்கினார். முதலில் அவர் ரேஷ்மாவின் இரண்டு கைகளையும் கறுப்பாக்கத் தொடங்கினார். 

உடனே, ரம்யா! கைக்கெல்லாம் எதுக்கு?” என்று கேட்டார்.

முதியவர் ரம்யாவை முறைத்துப் பார்த்தார். ரம்யா அமைதியாகிவிட்டார்.

முதியவர் ரேஷ்மாவின் கைகளை முழுவதுமாகக் கறுப்பாக்கினார். அவளின் இரண்டு உள்ளங்கைகளையும் அடர் சிவப்பாக்கினார். பின்னர் கழுத்துப் பகுதியையும் பின் கழுத்தையும் கருப்பாக்கினார். கழுத்துப் பகுதியில் தங்க நிறத்தில் சில ‘நெக்லஸ்’களை வரைந்தார். 

அவர் திரும்பி ரம்யாவைப் பார்த்து, “காளிக்கு மண்டையோட்டு மாலை வாங்கிருக்கா?” என்று அதிகாரத்தொனியில் கேட்டார். 

அவரின் அதிகாரத்தொனி ரம்யாவை உலுக்கிவிட்டது. வேகமாகக் கட்டைப்பையைத் திறந்து, மண்டையோட்டு மாலையை எடுத்துக் கொடுத்தார். முதியவர் அந்த மாலையை பயபக்தியுடன் ரேஷ்மாவுக்கு அணிவித்தார். 

முதியவர் ரேஷ்மாவின் கால்களுக்கும் கறுப்புச் சாயத்தைப் பூசினார். பின்னர் பாதத்துக்கும் பாதத்தின் கரைகளுக்கும் சிவப்புச் சாயத்தை அழுத்தமாகப் பூசினார். ரேஷ்மாவின் முகத்தைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் காளியின் உறுப்பாகவே மாறியிருந்தன. 

இந்தக் கோலத்தில் தன் மகளைப் பார்ப்பதற்கே சற்று அச்சமாகத்தான் இருந்தது ரம்யாவுக்கு. ஆனாலும், தன் மகள் காளியாக மாறிவருவதைப் பார்க்கும்போது அவரின் மனசுக்குள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. தன் மகளை இன்னும் கொஞ்சம் கூடுதலாக அலங்கரிக்க நினைத்த ரம்யா, பக்கத்துக் கடைக்குச் சென்று இரண்டு எலும்சைப் பழங்களை வாங்கி வந்தார். 

அவற்றைக் காளியின் ஆயுதங்களின் கூர்முனையில் குத்தி வைத்தார். அந்த இரண்டு ஆயுதங்களையும் தன் மகளின் கைகளில் கொடுத்தார். அவற்றை ரேஷ்மா ஏந்தியபோது, அந்த இடமே ஒரு போர்க்களம்போலத்தான் ரம்யாவுக்குத் தெரிந்தது. 

அந்த முதியவர் காளியாத்தா, கொஞ்சம் குனிஞ்சு உட்காரும்மா” என்றார். உடனே, ரேஷ்மா காரின் இருக்கையின் நுனிவரை நகர்ந்து வந்து, தன் கால்களை காருக்கு வெளியே தொங்கப்போட்டு அமர்ந்தாள். 

முதியவர் தன் கால்முட்டிகைளை மண்ணில் ஊன்றி, நிமிர்ந்து அமர்ந்து, ரேஷ்மாவின் முகத்துக்குச் சாயம் பூசத் தொடங்கினார். முகம் முழுவதும் கறுப்புச் சாயத்தைப் பூசினார்.

பின்னர், அவர் “காளியாத்தா, நான் இப்ப உன்னோட கண்ணுக்குச் சாயம்பூசப் போறேன் தாயி. ரெண்டு கண்ணையும் மூடிக்கோ தாயி. வேஷம் போட்டு முடிச்சதும் அப்படியே திரும்பி காருக்குள்ளேயே உட்கார்ந்துக்கோ தாயி. ஸ்கூலுக்குள்ள போனதும் கண்ணைத் திறந்து பார்த்தாபோதும் தாயி. அதுக்கு இடையில திரும்பி யாரையும் பார்த்துடாதே தாயி! நான் சொல்றது புரியுதா தாயி? வேஷம் போட்டவுடனேயே உன்னோட கண்ணைப் பார்க்குற துணிச்சல் எனக்கு இல்லை தாயி. அதான் சொல்றேன் தாயி. நீ உங்க அம்மாவையும் பார்த்துடாதே தாயி! அவங்க பயந்துடுவாங்க தாயி. புரியுதா தாயி? வேஷம் போட்டு கொஞ்சநேரம் கழிச்சு நீ கண்ணைத்திற போதும் தாயி” என்றார் கெஞ்சலான குரலில். 

ரேஷ்மா ‘சரி’ என்பதுபோலத் தன் தலையை மட்டும் ஆட்டினாள். முதியவர் ரேஷ்மாவின் புருவங்களுக்கு மேல் வெள்ளை நிறத்தில் புள்ளிகளை வைத்து, அவற்றுக்கு இடையில் சிவப்பு நிறத்தில் புள்ளிகளை வைத்தார். ரேஷ்மா சற்று அசைந்து அமர்ந்தாள். ஆனால், ‘தான் இன்னமும் சரியாக உட்காரவில்லையோ’ என்று அவளுக்குத் தோன்றியது.

உடனே, அவள் தன் வலது கால் முதியவரின் இடது தொடையின் மீது மெதுவாக வைத்தாள். அது அவளுக்கு வசதியாக அமர உதவியது. தன் வலதுகாலை அவரின் தொடைமீது வைத்து அழுத்தி ஊன்றி, நன்றாக அமர்ந்தாள் ரேஷ்மா. வேஷமிடும் ஆர்வத்தில் இருந்த முதியவர் இதை உணரவேயில்லை. இதை ரம்யாவும் கவனிக்க வில்லை. அவர் மணியை மணியைப் பார்த்துக் கொண்டிருந்தார். நாடகம் தொடங்க இன்னும் கால்மணிநேரமே இருந்தது.

முதியவர் ரேஷ்மாவின் உதடுகளுக்குச் சிவப்புச்சாயத்தைப் பூசினார். அவளின் விழிகளைச் சுற்றியும் இமைகளின் மீதும் அடர்ச்சிவப்பு நிறத்தைப் பூசினார். உதடுகளின் இரண்டு ஓரங்களிலும் வளைவாகவும் கூர்மையாகவும் சிங்கப்பற்களை வெள்ளை நிறத்தில் வரைந்தார். இறுதியாகக் காளியின் நெற்றியில் பொட்டிட நினைத்தார் அந்த முதியவர். 

‘போருக்குப் போகும் காளிக்கு வெற்றித்திலகமிட சாயப்பொட்டா வைப்பது?’ என்று சிந்தித்த அவர், அடுத்த விநாடியே தன் கையில் இருந்த பிரஷின் கூர்முனையால் தன் இடது உள்ளங்கையின் மையத்தை நோக்கி ஓங்கிக் குத்தினார். ரத்தம் கொப்புளித்தது. 

அதை பிரஷில் குழைத்து, “ஜெய் காளி!  ஜெய் காளி!” என்று உச்சரித்துக்கொண்டே, ரேஷ்மாவின் நெற்றியில் பெரிய அளவில் வட்ட வடிவில் வெற்றித் திலகமிட்டு அவளைக் காளியாகவே மாற்றினார் அந்த முதியவர். 

ரம்யா இருநூறு ரூபாயை எடுத்து முதியவரிடம் கொடுத்துவிட்டு, “ரேஷ்மா காலை காருக்குள் வை” என்றார் ரம்யா.

“நான் ரேஷ்மா இல்ல. காளி” என்றாள் அவள்.

“சரி சரி காளிதான் நீ, காலைத் தூக்கி காருக்குள்ள வை” என்று கூறிவிட்டு, தானும் காரில் ஏறிப் புறப்பட்டார் ரம்யா.

முதியவர் மெல்ல மெல்ல நிமிர்ந்து எழுந்தார். அவரின் வேட்டியின் இடது பக்கத்தில் காளியின் சிவந்த பாதத் தடம் பதிந்திருந்தது.

– – –

4 Replies to “காளி பாதம்”

  1. ‘காளிபாதம்’ சிறுகதையின் வழியாகக் காளியின் தரிசனம் கிடைத்தது‌. காளியாக வேடம் அணியும் சிறுமி தன்னைக் காளியாகவே உணர்வது அருமை. சிறுமிக்குக் காளி போல வேடமிடும் பெரியவர் தன் தொழிலை மிகவும் நேசித்ததால்தான் அவருக்குக் காளியின் தரிசனம் கிடைத்தது‌. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ – என்பது இந்தக் கதையின் வழியாக மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
    – அனுசுயா தேவி, மதுரை.

  2. வணக்கம். தங்களின் பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது. தாங்கள் கூறியுள்ளது உண்மையே. நாம் எந்தச் செயலில் ஆத்மார்த்தமாக ஈடுபடுகிறோமோ அந்தச் செயல் நமக்குப் பேரின்பத்தைத் தரும். பேரின்பத்தின் பாதைவழியாகவே ஆன்மா இறைவனைச் சென்றடைகிறது. நன்றி. – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன்.

  3. காளிபாதம் என்னும் சிறுகதையில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களும் என் மனதைக் கவர்ந்தன. அப்பா மகளை காளியின் வடிவமாகவே காண எண்ணினார். அதற்குத் தன்னை அர்ப்பணித்தவர் பெரியவர். பெரியவரின் கதாப்பாத்திரம் .போற்றுதலுக்குரியது. இறுதியில் காளியின் பாதம் எனும் கதை நிறைவுறும் இடமும் அருமை. நானும் இக் கதையில் பயணித்தேன் .

  4. வணக்கம். தங்களின் பின்னூட்டம் கண்டேன். மகிழ்ச்சி. ‘புனைவு’ என்பதே வாசகர் வாசித்து வாசித்து மகிழ்ந்தும் துக்கித்தும் முன்னகர்ந்து பயணிக்கும் நெடும்பாதைப் பயணம்தான். அதில் சக பயணியாக நீங்கள் இருந்தமை குறித்து எனக்கு மகிழ்ச்சியே. நன்றி. – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.