இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்

மாக்ஸிம் கோர்க்கி

[ரஷ்ய மூலம்: மாக்ஸிம் கோர்கி
ஆங்கில மொழியாக்கம்: பெர்னார்ட் ஐசக்ஸ்
ஆங்கிலத்திலிருந்து தெலுங்கு மொழிபெயர்ப்பு: காகானி சக்ரபாணி
தெலுங்கிலிருந்து தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்]

நாங்கள் இருபத்தாறு ஆண்களும் ஒரு பேஸ்மென்ட்டில் இருட்டுப் பொந்தில் திணிக்கப்பட்ட இருபத்தாறு உயிருள்ள இயந்திரங்கள். அங்கு காலை முதல் இரவு வரை மாவு பிசைந்து கொண்டும் பிஸ்கெட்டுகள் செய்து கொண்டுமிருப்போம். எங்கள் பேஸ்மெண்ட் ஜன்னல்கள் பாசி  படிந்து பச்சையாக இருக்கும். அவற்றை வெளிப்புறத்திலிருந்து அடைத்து மூடி விட்டார்கள். கண்ணாடியின் மேல் இரும்பு வலை போடப்பட்டிருக்கும். உள்ளே சூரிய ஒளி கூட நுழையாமல் அவற்றின் மீது மாவுப் படலம் படிந்திருக்கும். ரொட்டி பிஸ்கட் கேக் எதுவும் வெளியே போய் விடாமல் இருக்க எங்கள் உரிமையாளர் அவ்வாறு ஜன்னல்களுக்கு பாதுகாப்பு கவசங்களை அமைத்திருந்தார். எங்களில் சிலர் வேலை கிடைக்காமல் பட்டினி கிடப்பர். அந்த பிச்சைக்காரர்களுக்கு நாங்கள் தயை காட்டி ஏதாவது அளித்துவிட்டால்? அம்மாடியோ…! வேறு வினையே வேண்டாம்! நாங்கள் வெறும் திருட்டுப் பயல்கள் என்று எங்கள் எஜமானர் கூறுவது வழக்கம். அதனால்தான் அவர் எங்களுக்கு அளிக்கும் உணவில் ஊசிப்போன பதார்த்தங்களும் நாற்றமெடுக்கும் மாமிசமும் இருக்கும்.

அந்த ஒடுங்கிய பொந்தில் அடைத்து வைக்கப்பட்டது போல் இருந்தது எங்கள் வாழ்க்கை. அதோடுகூட ஒட்டடை, அழுக்குகள், சிலந்தி வலைகள். பாசி பிடித்து இருந்த அந்த கற்சுவர்களிடையே எங்கள் வாழ்க்கை கேவலமாகவும் அசிங்கமாகவும் இருந்தது. நாங்கள் காலை ஐந்து மணிக்கு தூங்கி எழுந்து விடுவோம். தேவையான தூக்கம் இல்லாததால் கண்கள் தாமாகவே மூடிக்கொள்ளும். சோம்பலோடும் உதாசீனமாகவும் ஆறு மணிக்கெல்லாம் பணிக்குக் கிளம்புவோம். நாங்கள் தூங்கும் நேரத்தில் எங்கள் நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய மாவைக் கொண்டு பிஸ்கெட்டுகள்   தயாரிக்கத் தொடங்குவோம். மேஜையின் எதிரில் அமர்ந்து பகல் முழுவதும் காலை முதல் இரவு பத்து  மணி வரை எங்களில் சிலர் கெட்டியாக பிசைந்த மாவைத் தேய்த்து மேலும் பிசைந்து ஒரு வடிவுக்கு  கொண்டு வருவார்கள். மற்றும் சிலர் மாவும் நீரும் கலந்த லப்பம் தயாரிப்பார்கள். தூக்கத்தைப் போக்குவதற்கு உடலை சோம்பல் முறித்தபடி இருப்போம். பகல் முழுவதும் கொதிக்கும் தேக்குசா நீரில் பிஸ்கெட்டுகள் தபதபவென்று வெந்து கொண்டே இருக்கும். அடுப்பிலிருந்து சாம்பலை மண்வெட்டி வெளியில் இழுத்தபடியே இருக்கும். எங்கள் கையிலிருந்து நழுவி விழும் மாவுத் துண்டுகள் கணகணவென்று சூடாக இருக்கும் செங்கற்களின் மேல் விழுந்து படீல் படீல் என்று வெடித்துக் கொண்டே இருக்கும். காலை முதல் இரவு வரை அடுப்பில் விறகுகள் எரிந்தபடி இருக்கும். தீயின் சிவந்த ஒளி பேக்கரி சுவர்களின் மீது நடனமாடி, தரையைப் பிளந்து கொண்டு வந்த பெரும் குண்டோதரனின் தலையை போல் தோற்றமளிக்கும். அந்தப் பெரிய அடுப்பில் கொழுந்து விட்டெரியும் தீ அந்த அசுரனின் திறந்த வாயைப் போலவும் அடுப்பின் மேல் உள்ள காற்றுத் துளைகள் அசுரனின் கண்களை போலவும் இருக்கும். எங்கள் மீது வெப்பத்தைக் கக்கியபடி எங்களுடைய நிரந்தர சிரமத்தை கவனித்துக் கொண்டே இருக்கும் அந்த கருணையற்ற உதாசீன நேத்திரங்கள். அவை  மந்தமான அவமதிப்போடு இந்த அடிமைகளைப் பார்த்த வண்ணம் இருக்கும்.

நாங்கள் வெளியில் இருந்து வரும்போது எங்கள் கால்களில் ஒட்டிக் கொண்டு வரும் தூசியும் புழுதியும் பிஸ்கெட் தயாரிக்க பயன்படுத்தும் மாவோடு சேர்ந்து நாற்றமெடுக்கும். அந்த நாற்றத்தோடு சூடாக இருக்கும் அந்த குறுகிய பேஸ்மெண்ட்டில் நாங்கள் மாவை இழுத்துப் பிசைந்து பிஸ்கட் வடிவில் வெட்டுவோம். எங்கள் வியர்வை கூட அதோடு சேர்ந்து வடிவமைக்கும். எங்களுக்கு அந்த வேலை மீது எத்தனை வெறுப்பு, அசிங்கம் என்றால், எங்கள் கையால் செய்த அந்த பிஸ்கட்டுகளை நாங்கள் ருசி பார்ப்பதற்காகக் கூட தின்ன மாட்டோம். அதைவிட காய்ந்த ரொட்டித் துண்டைத் தின்பதே எத்தனையோ மேல் என்று தோன்றும். நீண்ட மேஜைக்கு அந்தப் பக்கம் ஒன்பது பேர் இந்த பக்கம் ஒன்பது  பேர் அமர்ந்து கொள்வோம். மணிக்கணக்காக எங்கள் கைகளும் விரல்களும் இயந்திரத்தனமாக வேலை செய்தபடியே இருக்கும். அவை அந்த வேலைக்கு எத்தனை பழக்கப்பட்டு விட்டன என்றால், நாங்கள் அவற்றின் அசைவுகளை பொருட்படுத்துவதையே விட்டுவிட்டோம். எங்களிடையே பரிச்சயம் கூட மிக அதிகம். யார் முகத்தில் எந்த கோடுகள் எப்படி இருக்கும் என்பதெல்லாம் கூட எங்களுக்கு அத்துப்படி. அந்தப் பணி எந்த அளவுக்கு எங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாகிப் போனது என்றால் எங்களுக்கு புதிதாக பேசிக் கொள்வதற்கு எதுவுமே இருக்காது. எப்போதோ ஒரு முறை அரிதாக அடுத்தவரை திட்டுவதற்காகத் தவிர நாங்கள் சாதாரணமாக மௌனமாகவே இருப்போம். அவ்வப்போது நாங்கள் பாட்டு பாடுவோம். எங்கள் பாடல்கள் இவ்வாறு தொடங்கும்… பணியின் இடையில் எங்களில் யாராவது சோர்ந்துபோன குதிரை போல உடம்பை முறுக்கி சோம்பல் முறிப்பான். அதற்கு மேல் மெல்லிய குரலில் ஹம்மிங் செய்வான். அந்த நீண்ட பாடல், சோகமான குரலில் பாடுபவனின் இதய பாரத்தைக் குறைப்பது போலிருக்கும். எங்களில் யாரோ ஒருவன் பாடத்  தொடங்குவான். மீதி உள்ளவர்கள் மௌனமாக அந்த நீண்ட பாடலைக் கேட்போம். அப்போது இன்னொருவன் பாடுபவனோடு குரலை இணைத்து பாடத் தொடங்குவான். எங்கள் குறுகிய சந்து போன்ற அந்த அறையில் அவர்களின் குரல்கள் மென்மையாக அந்த வெப்பமான சூழ்நிலையில் மிதந்தபடி இருக்கும். சிறிது நேரம் கழித்து ஒரேயடியாக பல குரல்கள் இணையத் தொடங்கும். பாடலின் கனம் மேலெழுந்து எங்களின் பலமான சிறைச் சுவர்களை உடைத்து விடுபவை போல தோற்றமளிக்கும். 

அப்போது நாங்கள் இருபத்தாறு பேரும் ஒன்றாகச் சேர்ந்து பாடிக்  கொண்டிருப்போம். அந்தப் பாடல் அந்த தொழிற்சாலையை நிறைத்து விடும். இடம் போதாமல் உதைத்து கொள்ளும். முனகியபடி மறுபடியும் கற்சுவர்களோடு மோதும். மிருதுவாக முள் குத்தியது போல் பாடல் எங்கள் இதயத்தைத் துளைக்கும். பழைய காயங்களை எழுப்பியபடி சுய பரிதாபத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்து பாடகர்கள் நீண்ட பெருமூச்சு விடுவார்கள். ஒருவன் பாடுவதை நிறுத்திவிட்டு கேட்டபடி அமர்ந்திருப்பான். இன்னொருவன் பாடியபடியே நடுவில் வருத்தத்தோடு “ஐயோ!” என்பான். ஒருவேளை அவனுடைய மூளை, வெளியே சாலை  வெண்மையான வெயிலில் நனைந்தபடி விசாலமாக தொலைவாக ஓட்டமெடுத்தபடி இருக்கையில், அவன் அதில் நடந்து செல்வது போல் கனவு கண்டிருக்கலாம். 

அடுப்பில் தீ இன்னும் எழும்பியபடியே இருக்கும். அடுப்பின் செங்கற்களைச் சுரண்டும் மண்வெட்டி சாம்பலை வெளியில் இழுந்தபடியே இருக்கும். சுவர்களின் மேல் அடுப்புத் தீயின் வெளிச்சம் நிசப்தமாக எங்களைப் பார்த்து பரிகசித்தபடியே இருக்கும். நாங்கள் பாடிக் கொண்டே இருப்போம். அந்த பாடல்கள் எங்களுடையவை அல்ல. அவை எங்களிடம் படிந்து போன ஜீவச் சடலங்களின் இதயத் தீ. அடிமைகளின் கூக்குரல் அது. அந்த பெரிய கட்டிடத்தின் பேஸ்மென்ட்டில் நாங்கள் இருபத்தாறு  பேர் அவ்வாறு வாழ்ந்தோம். எங்கள் வாழ்க்கையின் பாரம் எத்தனை   கனமாக இருந்தது என்றால், அந்தக் கட்டடத்தின் மேல் மூன்று மாடிகளும் எங்கள் தோள்களின் மேல் எழும்பியது போல் பார்ப்பவர்களுக்கு தோற்றமளிக்கும்.

*******

பாட்டு மட்டுமே அல்ல. நாங்கள் காதலித்து விரும்பியது கூட இன்னொன்றுண்டு. சூரியன் இல்லாத குறையை எங்களுக்குத் தீர்த்தது அது. எங்கள் கட்டிடத்தின் முதல் மாடியில் ஒரு கோல்டன் எம்பிராய்டரி ஒர்க்ஷாப் உள்ளது. அங்கு பல பெண்கள் பணிபுரிந்தார்கள். பணிப்பெண் பதினாறு  வயது தான்யா அங்கேயே தங்கியிருந்தாள். தினமும் காலையில் எங்கள் தொழிற்சாலை கதவிலுள்ள ஜன்னல் கண்ணாடிக்கு நீலக் கண் கொண்ட சிவந்த முகம் வந்து ஒட்டிக்கொள்ளும். கலகலவென்று எங்களை வெளியிலிருந்து விசாரிக்கும். அந்த இனிமையான குரல், “ஹலோ…! சிறைப் பறவைகளே! எனக்கு பிஸ்கெட் ஏதாவது தருவீர்களா?” என்று கேட்கும் அந்த குரல். 

அவ்வாறு அந்த குரல் கேட்ட உடனே நாங்கள் திரும்பிப் பார்ப்போம். எங்களைப் பார்த்து இனிமையாக சிரிக்கும் அந்த பெண்ணின் முகத்தை அன்போடு மகிழ்ச்சியாக பார்ப்போம். கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு சப்பட்டையாகத் தெரியும் அந்த முகத்தைப் பார்ப்பது என்றால் எங்களுக்கு மிகவும் பிரியம். சிரித்தபடியே விரியும் ரோஜா இதழ்களின் நடுவிலிருந்து ஒளிவீசும் அந்த வெள்ளைப் பல்வரிசை என்றால் எங்களுக்கு மிகவும் விருப்பம். நாங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு அவளுக்காக கதவைத் திறப்பதற்கு ஓடுவோம். அங்கு அவள் தன் ஏப்ரனை     மேலே உயர்த்தி ஒளிரும் முகத்தோடு தலையை சாய்த்து மிக உல்லாசமாக மயக்கும் அழகோடு நின்றிருப்பாள். அடர்த்தியாக இருக்கும் அவளுடைய கருமை நிறக் கூந்தல்கற்றை தோளிலிருந்து வழிந்து மார்புவரை படர்ந்திருக்கும். அழுக்கும் முரடுமான அழகில்லாத நாங்கள் அவளைப் பார்த்தவண்ணம் இருப்போம். படிக்கட்டுகளில் உயரத்தில் வாயில் அருகில் நின்று இருப்பாள் அவள். தலையை நிமிர்த்தி அவளுக்கு வணக்கம் தெரிவிப்போம். அவளுக்கு நல்வாழ்த்து தெரிவிப்பதற்கு நாங்கள் பயன்படுத்தும் சொற்கள் பிரத்தியேகமானவை. அப்போது எங்கள் குரல்கள் மென்மையாக புன்னகையோடு மிருதுவாக இருக்கும். நாங்கள் அவளுக்கு அளிக்கக்கூடியவை அனைத்தும் சிறப்பானவையே! ரொட்டி சுடுபவன் ஓட்டைக் கரண்டி நிறைய நல்ல பிஸ்கெட்டுகள் எடுத்து வந்து அவருடைய ஏப்ரனில் போடுவான். 

“யஜமானர் உன்னை பிடித்து விடப் போகிறார்…!” என்று நாங்கள் அவளுக்கு எச்சரிக்கை செய்வோம். அவள் குறும்பாகச் சிரித்து உல்லாசமாக   “வருகிறேன்… சிறைக் கைதிகளே!” என்று கூறிக்கொண்டே சுண்டெலி போல கண நேரத்தில் மறைந்து விடுவாள்.

அதுதான் நடக்கும். ஆனால் அவள் சென்ற பின் நீண்ட நேரம் வரை நாங்கள் அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். முந்தா நாளும், நேற்றும் கூறியவற்றையே மீண்டும் இன்றும் கூறிக்கொள்வோம். ஏனென்றால் முந்தாநாள், நேற்று, நாங்கள், எங்கள் சூழல்…எல்லாம்  அதேபோல் எப்போதும் இருந்தது… இருக்கிறது. யாருடைய வாழ்வாவது மாற்றம் இன்றி இருந்தால் கடினமான வாழ்க்கையாகத்தான் இருக்கும். அது அவனுடைய ஆத்மாவைக் கொல்லாவிட்டாலும் அவன் உயிரோடு இருக்கும் காலத்தில் அவனைச் சுற்றிலும் உள்ள பொருட்களின் உயிரற்ற தன்மை அவனை ஒவ்வொரு கணமும் மேலும் வருத்திக்கொண்டே இருக்கும். நாங்கள் எப்போதும் பெண்களைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். ஓரோருமுறை அந்தப் பேச்சுக்களால் எங்கள் மேல் எங்களுக்கே அருவருப்பு ஏற்படும். வெட்கங்கெட்ட முரட்டு மனிதர்களின் பேச்சுக்கள் அவை. அதில் வியப்பு ஒன்றும் இல்லைதான். ஏனென்றால் எங்களுக்குத் தெரிந்த பெண்கள் எங்கள் கூற்றுகளுக்கு முற்றிலும் ஏற்றவர்களே!. வேறுவிதமாக பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். ஆனால் தான்யாவைப் பற்றி மட்டும் நாங்கள் ஒரு தீய சொல், ஒரு கீழான பரிகாசம் கூட செய்யமாட்டோம். எங்களில் யாரும் அவள் கையைக் கூட தொடும் சாகசம் செய்யவில்லை. அவள் சற்று நேரம்தான் தென்படுவாள். ஆகாயத்தில் இருந்து கீழே விழும் நட்சத்திரத்தைப் போல் தரிசனம் அளிப்பாள். அடுத்த கணம் மாயமாக மறைந்து விடுவாள். அவள் சிறுமியாகவும் அழகாகவும் இருப்பது கூட நாங்கள் அவள் மீது மதிப்பு வைத்திருப்பதற்கு மற்றும் ஒரு காரணமாக இருக்கலாம். அழகானது எதுவானாலும் முரட்டுக் கடுமையான மனிதர்களிடமிருந்து கூட மதிப்பைப் பெறுகிறது. அதற்கும் மேல், மாற்றமில்லாத நிரந்தரமான வேலை கூட எங்களை முட்டாள்களாக மாற்றி விட்டது. நாங்களும் மனிதர்கள்தானே! நாங்கள் யாரையாவது வழிபடாமல் வாழ இயலாது. அந்தச் சுற்றுப்புறத்தில் அவளை விட அழகானவர்கள் யாரும் இல்லை. மேலும் அந்த கட்டிடத்தில் டஜன் கணக்கில் பேஸ்மென்ட்டில் வாழும் இந்த ஆண் புழுக்களை கண்ணெடுத்துப் பார்க்கும் பெண் வேறு யாரும் இல்லை. அதுவே முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அவளை எங்களைச்  சேர்ந்தவளாக, எங்கள் பிஸ்கெட் காரணமாக உயிர்ப்பு கொண்டிருப்பவளாக  நாங்கள் எண்ணத் தொடங்கினோம். அவளுக்கு பிஸ்கெட் கொடுப்பது எங்கள் கடமை என்று நினைத்துக் கொள்வோம். அது நாங்கள் வழிபடும் தேவதைக்கு தினமும் படைக்கும் நிவேதனம். அது ஒரு பவித்ரமான யக்யம். அதனால் நாளுக்கு நாள் அவள் எங்களுக்கு மேலும் பிரியமானவளாக தோன்ற தொடங்கினாள். பிஸ்கெட் மட்டுமே அல்ல… நாங்கள் தான்யாவுக்கு பல அறிவுரைகள் கூட தருவோம். சூடான ஆடைகள் அணிந்து கொள் என்று கூறுவோம். ரொம்ப வேகமாக படியேற வேண்டாம் என்போம். கனமான விறகுக் கட்டைகளை தூக்க வேண்டாம் என்போம். இவ்வாறு பல அறிவுரைகளை அவள் எங்களிடமிருந்து பெறுவாள். ஆனால் சிரித்து அவற்றை தட்டிக் கழிப்பாள். கடைபிடிக்க மாட்டாள். ஆனாலும் நாங்கள் எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டோம். அவள் மேல் எங்கள் கரிசனத்தை வெளிப்படுத்துவதோடு திருப்தி அடைவோம்.

அவள் அடிக்கடி எங்களை ஏதாவது பணிபுரிந்து தரும்படி கேட்பாள். செல்லார் கதவு அடைத்துக் கொண்டு திறக்க முடியாமல் போய்விட்டால் திறந்து விடச் சொல்வாள். விறகு உடைத்து தரச் சொல்வாள். அவள்  கேட்கும் இந்த வேலைகளை மட்டுமே அல்ல… எது கேட்டாலும் மகிழ்ச்சியோடு செய்து தருவோம். அதில் எங்களுக்கு ஒரு கர்வம் கூட ஏற்படும். ஒரு முறை எங்களில் ஒருவனுடைய சட்டை கிழிந்த போது… அவனிடம் இருந்தது அது ஒன்றுதான்… அதனை தைத்துத் தரும்படி அவளிடம் கேட்டான். ஆனால் அவள் மறுத்து விட்டு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்து, “பெரிய வேலைதான் சொன்னாய்! என்னால் முடியாது” என்றாள். 

அந்த முட்டாள் அவளை அவ்வாறு கேட்டதற்கு நாங்கள் அவனைப் பார்த்து சிரித்தோம். அதன்பின் மீண்டும் யாரும் அவளை எந்த வேலையும் கோரவில்லை. நாங்கள் அவளைக் காதலித்தோம். விரும்புவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பொருள் வேண்டும். அந்த பொருளுக்கு அது பிடிக்காமல் போகலாம். அந்தப் பொருள் அதனால் சிறுமை அடையலாம். அந்த மனிதனின் காதல் அடுத்தவரின் வாழ்க்கையை விஷமயம் ஆக்கலாம். ஏனெனில் காதல் என்றால் மனிதனுக்கு அந்தப் பொருள் மீது விருப்பம் மட்டுமே! நாங்கள் காதலிப்பதற்கு அங்கு வேறு யாருமே இல்லை. அதனால் நாங்கள் தான்யாவை விரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.

ஓரொருமுறை எங்களில் ஒருவன் ஒரேடியாக வாக்குவாதத்தில் இறங்குவான். “நாம் ஏன் இப்படி நினைக்கிறோம்? அந்தப் பெண்ணைப் பார்த்து நமக்கு ஏன் இத்தனை பைத்தியம்? அத்தனை அற்புதமான விஷயம் அந்தப் பெண்ணிடம் என்னதான் உள்ளது?” என்பான்.

அவ்வாறு பேசியவனை நாங்கள் அடுத்த கணம் பதிலளிக்க இயலாதவனாக்குவோம். எங்களுக்கு காதலிப்பதற்கு ஏதாவது ஒன்று தேவை அல்லவா? அந்தப் பொருளை கண்டுபிடித்தோம். காதலித்தோம். நாங்கள் இருபத்தாறு பேரும் காதலித்தோம். அது புனிதமான ஒரு பொருளாக எங்கள் ஒவ்வொருவருக்கும் அசையாத வழிபாட்டுக்கு உரியதாக இருக்கவேண்டும். அதில் எங்களுக்கு எதிராக யாராவது கருத்து வெளியிட்டால் அவன் எங்கள் எதிரி. நாங்கள் காதலிப்பது என்பது சரியான பணி இல்லாமல் இருக்கலாம். நாங்கள் இருபத்தாறு  பேர் உள்ளோம். அதனால் எங்கள் வழிபாட்டு தேவதையை அனைவரும் புனிதமாக எண்ண வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் காதல் வெறுப்பை விட குறைந்த எடை கொண்டது ஒன்றுமல்ல. அதனால்தான் போலும் சில தலைக்கனம் கொண்டவர்கள் எங்கள் வெறுப்பு எங்கள் காதலை விட உயர்ந்தது என்பார்கள். அதுவே உண்மையானால் அவர்கள் எங்களை ஏன் பரிகசிக்க மாட்டார்கள்…?

******

பிஸ்கெட் ஃபேக்டரி மட்டுமே அல்ல. எங்கள் எஜமானருக்கு பன்   தயாரிக்கும் தொழிற்சாலை கூட உள்ளது. அதுவும் இதே கட்டிடத்திலேயே நாங்கள் இருக்கும் ஒடுங்கிய சுவரின் பின்னால் இருந்தது. பன்கள் தயாரிக்கும் நால்வரும் எங்களோடு பேச மாட்டார்கள். எங்கள் வேலையை விட அவர்களுடையது சுத்தமானது என்றும் உயர்ந்தது என்றும் அவர்கள் நினைப்பு. அதனால் எங்களை விட அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற கர்வம் அவர்களுக்கு. அவர்கள் எப்போதுமே எங்கள் தொழிற்சாலைக்கு வரமாட்டார்கள். முற்றத்தில் எப்போதாவது நாங்கள் எதிர்பட்டாலும் எங்களை பரிகாசமாக மறுதலித்து பார்ப்பார்கள். நாங்களும் அவர்களுடைய தொழிற்சாலைக்கு சென்றதில்லை. நாங்கள் பன்களை திருடி விடுவோம் என்ற அச்சத்தால் நாங்கள் அந்தப் பக்கம் செல்வதற்கு எங்கள் எஜமானர் தடை விதித்திருந்தார். எங்கள் பணியை விட அவர்களின் பணி எளியது. எங்களை விட சம்பளமும் அதிகம். சாப்பாட்டிற்கும் நல்ல பதார்த்தங்கள் அவர்களுக்குக் கிடைத்தன. அதனால்தான் அவர்களைக் கண்டாலே எங்களுக்குப் பொறாமை. நாங்கள் அவர்களை வெறுத்தோம். அவர்களுடைய தொழிற்சாலை விசாலமாக நல்ல காற்றோட்டமாக இருந்தது. எங்களை விட ஆரோக்கியமாக சுத்தமாக இருந்தார்கள். அதனால் அவர்கள் எங்கள் கண்களுக்கு அசிங்கமாகத் தெரிவார்கள். எங்கள் முகம் சாம்பல் நிறத்தில் வெளிறிப் போய் இருக்கும். எங்களில் மூவருக்கு சிபிலிஸ் என்ற கிரந்தி நோய் இருந்தது. சிலருக்கு சொறி, தாமரை. ஒருவனுக்கு மூட்டுவலியால் சரியாக நடக்க முடியாது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் அவர்கள் சூட், உயரமான பூட்ஸ் அணிவார்கள். இருவரிடம் அகார்டியன் இசைக்கருவிகள் இருந்தன. அவர்கள் இருவரும் நடந்து பூங்காவில் சுற்றி வருவார்கள். எங்கள் உடைகள் அழுக்காக கிழிந்து தொங்கும். ஒட்டுப் போட்ட சாக்கு ஷூக்கள் அணிந்திருப்போம். அவ்வாறு எங்களைப் பார்க்கும் போலீசார் எங்களை பூங்காவுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டார். நீங்களே கூறுங்கள்… பின், நாங்கள் அந்த பன் பேக்கரிக் காரர்களை எப்படி விரும்புவோம்?

ஒருநாள் எங்களுக்கு ஒரு செய்தி வந்தது. அவர்களுடைய தலைமை பேக்கர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டான் என்று எஜமானர் அவனைத் துரத்தி விட்டு அந்த இடத்தில் வேறு ஒரு புதியவனை அமர்த்தி விட்டாராம். அந்த புதிய மனிதன் முன்னாள் ராணுவ வீரனாம். அவன் ஷாட்டின் வெஸ்ட் கோட் அணிந்திருப்பானாம். தங்கச் சங்கிலியில் தொங்கும் கடிகாரம் கூட அவனிடம் உள்ளதாம். அதனால் அந்த சொகுசு மனிதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எங்கள் அனைவருக்கும் ஏற்பட்டது. அவனை பார்க்க முடியும் என்ற ஆசையால் ஒருவர் பின் ஒருவராக முற்றத்தில் சுற்றி வந்தோம். ஆனால் அவன் தானாகவே எங்கள் ஒர்க் ஷாப்புக்கு வந்தான். காலால் ஒரு உதை உதைத்து கதவைத் திறந்தான். வாசற்படியில் நின்று புன்னகையோடு, “ஹலோ! எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்?” என்று எங்களை விசாரித்தான். 

பனியின் புகைக் காற்று கதவு வழியாக உள்ளே அடித்துக் கொண்டு வந்தது. அவன் வாசற்படியிலேயே நின்றிருந்தான். முறுக்கிய மீசையின் கீழ் அவன் உடல் மஞ்சள் நிறத்தில் பிரகாசித்தது. அவனுடைய அழகான நீல நிறப் பூக்களால் எம்பிராய்டரி செய்த வெஸ்ட் கோட் அற்புதமாக இருந்தது. சிவப்புக் கற்களால் செய்த பொத்தான்கள். சங்கிலி  அணிந்திருந்தான். 

அந்த ராணுவ வீரன் அழகானவன்தான். உயரமாக திடசாலியாக இருந்தான். சிவந்த கன்னங்கள். ஒளிவீசும் கண்கள். அவன் பார்வை கூட அழகாக கருணையோடு இருந்தது. தலையில் கஞ்சி போட்டு விரைப்பாக இருந்த தொப்பி. பரிசுத்தமாக விளங்கிய ஏப்ரன். அதன் கீழ் அழகான பாலிஷ் போட்டு ஒளிர்ந்த ஷூக்கள். எங்கள் தலைமை பேக்கர் மரியாதையோடு அவனிடம் கதவை மூடச் சொன்னான். அவன் நிதானமாக அதன்படி செய்து எஜமானர் பற்றி எங்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினான். எஜமானர் கஞ்சக்கருமி என்றும் மகாபாவி என்றும்   மிகவும் கொடூரமானவர் என்றும் பிடுங்கித் என்பவர் என்றும் நாங்கள் அவனிடம் கூறுவதற்கு ஒருவரை முந்தி ஒருவர் போட்டியிட்டோம். நாங்கள் எஜமானர் குறித்து அவனிடம் கூறியவற்றை எழுத்தில் எழுதுவது சிரமம். மீசையை தடவிக் கொண்டு எங்களையே பார்த்தபடி நாங்கள் கூறியவற்றை கேட்டான் அந்த இராணுவ வீரன்.

“இங்கே நிறைய பெண்கள் உள்ளார்களே!” என்றான் திடீரென்று.

எங்களில் சிலர் மரியாதைக்காக சிரித்தார்கள். சிலர் சிரித்த முகம் காட்டினார்கள். இங்கே ஒன்பது பெண்கள் இருப்பதாக சிலர் அவனிடம் தெரிவித்தார்கள்.

“பின் அவர்களோடு நன்றாக பொழுது போகிறதா?” என்று கேட்டான் அவன் கண் சிமிட்டியபடி.

மீண்டும் நாங்கள் சிரித்தோம். குரல் வெளிவராத சங்கடமான சிரிப்பு அது. அவனைப் போல் நாமும் குஷால் பேர்வழிகளே என்ற எண்ணம் அவனிடம் ஏற்படுத்த வேண்டும் என்று எங்களில் பலர் நினைத்தார்கள். ஆனால் அது அவர்களால் இயலவில்லை. எங்களில் ஒருவன் அதை ஏற்பது போல், “எங்களால் எப்படி முடியும்?” என்றான்.

“உண்மைதான்! உங்களால் இயலாத செயல்” தானும் அதனை நம்புவது போல் கூறினான் வீரன். எங்கள் பக்கம் கண்ணைச் சுருக்கிப் பார்த்து, “உங்களால் முடியக்கூடிய வேலை இல்லை அது. அந்த குணங்கள் உங்களிடம் இல்லை. பெண்கள் ஆணிடம் விழ வேண்டுமென்றால் கண்ணைப் பறிக்கும் திடமான உடல் இருக்க வேண்டும். பெண்களுக்கு பலமான ஆண் என்றால்தான் பிடிக்கும். உருண்டு திரண்ட கைகள்… இப்படி இருக்கணும்…” அந்த வீரன் கோட் பாக்கெட்டில் இருந்து தன் வலது கையை வெளியே எடுத்து ஷர்ட் கையை முழங்கை வரை மடித்தான். நாங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தூக்கிக் காட்டினான். அது பலம் பொருந்திய வெள்ளைக் கைகள். “கால்கள்… இதயம்… அனைத்தும் உறுதியாக, திடமாக இருக்க வேண்டும். டிரஸ் கூட அழகாக மனதின் எண்ணத்தை வெளிப்படுத்துவது போல் இருக்க வேண்டும். என்னைப் பாருங்கள்…! என்னைப் பார்த்தால் பெண்கள் தானாகவே என் மேல் வந்து விழுவார்கள். நான் அவர்கள் பின்னால் போக மாட்டேன். அவர்களைக் கவருவதற்கு முயற்சிக்கவும் மாட்டேன். அவர்களாகவே என் பின்னால் வருவார்கள். ஒரே சமயத்தில் ஐந்து பெண்கள் கூட…”

அவன் அங்கிருந்த மாவு மூட்டை மீது அமர்ந்து கொண்டான். இன்னும், தன்னைப் பெண்கள் எவ்வாறு காதலித்தார்கள்… அவர்களோடு அவன் செய்த காதல் லீலைகள் பற்றி நீண்ட நேரம் எங்களிடம் விவரித்தான். அதன் பிறகு அவன் சென்று விட்டான். நாங்கள் அவனைப் பற்றியும் அவன் கூறிய கதைகளைப் பற்றியும் யோசித்தபடியே நீண்ட நேரம் மௌனமாக அமர்ந்திருந்தோம். அதன் பின் திடீரென்று எல்லோரும் ஒரே நேரத்தில் பேச முயற்சித்தோம். பேச்சில் எங்கள் அனைவருக்கும் அவனைப் பிடித்திருந்தது என்பது தெரிந்தது. எத்தனை நல்லவன்! டாம்பீகமே இல்லை. அவன் வந்த விதம், அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அழகு எத்தனை நன்றாக இருந்தது! எங்களைப்  பார்ப்பதற்கு இதுவரை யாருமே வந்ததில்லை. இவ்வாறு நட்போடு எங்களுடன் உரையாடியவர்களும் யாரும் இல்லை. நாங்கள் அவனைப் பற்றியும் அந்த தையற்காரப் பெண்களை வரப்போகும் நாட்களில் அவன் எவ்விதம் காதலில் வீழ்த்த போகிறான் என்பது பற்றியும் நீண்ட நேரம் விவாதித்தோம். அந்தப் பெண்கள் நாங்கள் எப்போதாவது முற்றத்தில் தென்பட்டால் விகாரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள். அல்லது நாங்கள் அங்கு இருப்பதையே கவனிக்காதது போல சென்று விடுவார்கள். நாங்கள் அவர்களை ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்போம். இன்னும் எங்களுக்குள் நாங்கள் அந்தப் பெண்கள் பற்றி எங்கள் வழக்கமான முறையில் பேசிக்கொண்டிருப்போம். ஒருவேளை தவறுதலாக அவர்கள் எங்களின் பேச்சுக்களைக் கேட்க நேர்ந்தால் அவர்களுக்கு வெட்கத்தாலும் ஆத்திரத்திலும் பைத்தியமே பிடித்துவிடும் என்பது உண்மை.

“நான் நினைக்கிறேன்..! அனைவரின் விஷயத்திலும் எப்படியோ… ஆனால் நம் தான்யாவிடம் அவனுடைய பருப்பு வேகாது என்று நினைக்கிறேன்” என்றான் தலைமை பேக்கர் மிகவும் தழுதழுத்த குரலில். அவனுடைய பேச்சைக் கேட்ட நாங்கள் திகைத்துப் போனோம்.

நாங்கள் தான்யாவைப் பற்றி மறந்தே போனோம். அந்த ராணுவ வீரன் தன் அழகால் எங்கள் மனதில் இருந்த அவளுடைய உருவத்தையே துடைத்துவிட்டான். நாங்கள் விவாதிக்க தொடங்கினோம். அவனை உண்மையில் தான்யா பொருட்படுத்தவே மாட்டாள் என்றனர் சிலர். அவனுடைய அழகை பொருட்படுத்தாமல் இருப்பது தான்யாவுக்கு சிரமம்தான் என்றனர் மற்றும் சிலர். தான்யாவின் பின்னால் அவன் செல்லத் தொடங்கினால் அவன் எலும்பை முறித்து விடுவோம் என்று சிலர் கூறினர். இறுதியில் அந்த ராணுவ வீரன் மீதும், தான்யா மீதும் ஒரு கண் வைத்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன்பின் அந்த மனிதன் விஷயத்தில் ஜாக்கிரதையாக இரு என்று அந்தப் பெண்ணை எச்சரிக்க வேண்டும் என்று கூட நிச்சயித்தோம். அதோடு அந்த விவாதங்கள் முடிவுக்கு வந்தன.

*****

ஒரு மாதம் கடந்தது. ராணுவவீரன் பன் தயாரிப்பதில் மேற்பார்வை  செய்து வந்தான். தையற்கார பெண்களோடு வெளியில் சுற்றி வந்தான். அடிக்கடி எங்களை பார்ப்பதற்குக் கூட வந்தான். ஆனால் பெண்களுடன் தன் சல்லாபம் குறித்து மட்டும் எங்களோடு பேசவில்லை.

தான்யா பிஸ்கட்டுகளுக்காக தினமும் காலையில் வருவாள். எப்போதும்போல் மகிழ்ச்சியாக இனிமையாக மென்மையாக நடந்து கொள்வாள். நாங்கள் ராணுவ வீரன் பற்றி பேச்சை எடுத்தால் அவள் அவனை, “முட்டைக் கண் மனிதன்” என்பாள். அதே போல் வேறு பல பெயர்களால் எக்கச்சக்கமாக அவனை கிண்டல் செய்வாள். அவள் நடந்து கொள்வதைப் பார்த்து எங்கள் மனதுக்கு ஆறுதல் கிடைத்தது. அந்த தையல் பெண்கள் எப்படி அந்த வீரனின் பின்னால் ஓடுகிறார்கள் என்பதைப் பார்த்த பின் எங்களுக்கு தான்யா மீது பெருமையாக இருந்தது. அவன் குறித்து தான்யாவின் நடத்தையைப் பார்த்த பிறகு எங்களுக்கு தைரியம் ஏற்பட்டது. அவளுடைய தாக்கத்தால் நாங்கள் அவனை அலட்சியமாக பார்க்கத் தொடங்கினோம். முன்பை விட அதிகமாக நாங்கள் அவளை காதலிக்கத் தொடங்கினோம். காலையில் அவள் வரும்போது மேலும் மகிழ்வாக அன்பாக வரவேற்றோம்.

ஒருநாள் ராணுவ வீரன் எங்களிடம் வந்த போது கொஞ்சம் அதிகமாகவே மது அருந்தி இருந்தான். அமர்ந்து கொண்டு தனக்குத் தானே சிரிக்க ஆரம்பித்தான். ஏன் சிரிக்கிறான் என்று நாங்கள் கேட்டபோது அவன் சொன்னான்… “இரு பெண்கள் லிசா, க்ரூஷா… என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அம்மாடியோ…! திட்டிக் கொள்வதும், அடித்துக் கொள்வதுமாக அவர்களுக்குள் ஒரே சண்டை. ஆஹாஹா…! ஒருத்தி இன்னொருத்தியின் சிண்டைப் பிடித்து இழுத்தாள். கீழே தள்ளி உருட்டினாள். மேலே ஏறி துவைத்தாள். கைகளால் முகத்தைக் கீறிக் கொண்டார்கள். ஆடையை கிழித்துக் கொண்டார்கள். சிரிப்பு வராமல் என்ன செய்யும்? இந்தப் பெண்கள் நேர்மையாக ஏன் சண்டையிடக் கூடாது? உடம்பையும் முகத்தையும் இப்படி கிழித்துக் கொள்வது எதற்காக? ஊ… ம்?” 

அவன் பெஞ்ச் மீது அமர்ந்திருந்தான். சுத்தமாக ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக காணப்பட்டான். நிறுத்தாமல் ஒரே சிரிப்பு. நாங்கள் எதுவும் பேசவில்லை. ஏனோ இந்த முறை அவனைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது.

“பெண்களின் விஷயத்தில் என் அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா? எனக்காக உயிரை விடுகிறார்கள். அதற்காக நான் பெரிதாக எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்களைப் பார்த்து சற்று கண்ணடித்தால் போதும். வந்து மேலே விழுவார்கள்”

பெண்கள் விஷயத்தில் தன் அதிர்ஷ்டத்தை நினைத்து வியப்பது போல் நடந்து கொண்டான். அவனுடைய உப்பிய கன்னமும் சிவந்த முகமும் ஆனந்தத்தால் ஒளி வீசியது. நாக்கினால் ஒவ்வொரு கணமும் உதடுகளை தடவிக்கொண்டான்.

எங்கள் ஹெட் பேக்கர் கோபத்தோடு அடுப்பில் தணலைக் கிளறிவிட்டு திடீரென்று கிண்டலாகக் கூறினான், “வாழை மரத்தை வெட்டுவதில் உயர்வு எதுவும் இல்லை. ஆலமரத்தை வெட்டி வீழ்த்து பார்க்கலாம்… அதுதான் உயர்வு!” என்றான்.

“ஆ… ங்…? என்ன…? நீ என்னைப் பார்த்தா கூறினாய்?” என்று கேட்டான் வீரன்.

“ஆமாம்… உனக்குத்தான் கூறினேன்”

“யாரைப் பற்றிச் சொன்னாய் அரச மரம் என்று? உன் உத்தேசம் என்ன?”

எங்கள் தலைமை பேக்கர் பதில் கூறவில்லை. அடுப்பில் நெருப்பு வேகமாக அசைந்தது. அதன் வேகத்தில் வெந்து கொண்டிருந்த பிஸ்கெட்டுகளும் அசைந்தன. அவை தரையில் எம்பிக் குதித்து விழுந்தன. அவற்றை நூலில் கோத்தனர் பணியாளர்கள். அவன் ராணுவ வீரனைப் பற்றியே மறந்தவனாக காணப்பட்டான். ஆனால் ராணுவ வீரன் திடீரென்று ஆவேசம் வந்தவனைப் போல எழுந்து நின்றான். அடுப்பருகில் சென்றான். கொஞ்சம் இருந்தால் நீண்ட தணல் கரண்டி அவன் நெஞ்சைக் குத்தியிருக்கும். எங்கள் பேக்கரின் கரங்களில் அசைந்து கொண்டிருந்தது கரண்டி.

“இதோ பார்…! உன் சொற்களின் பொருள் என்ன? உண்மையில் அது என்னை அவமதிப்பது போல் உள்ளது. என் கவர்ச்சியில் சிக்காத பெண்ணா? வாயில் வந்ததை பேசிவிட்டு சும்மா இருக்காதே! வீணாக கிண்டல் அடிக்க வேண்டாம்”

உண்மையாகவே அவனுக்குக் கோபம் வந்தது போலவும் வருத்தமடைந்தவன் போலவும் நடந்து கொண்டான். பெண்களை வசப்படுத்திக் கொள்ளும் திறமையே அவனுடைய சுய கௌரவத்திற்கு இருக்கும் ஒரே ஒரு பெருமை. அந்தத் திறமைதான் ஒருவேளை அவன் பெருமையாகக் கூறிக் கொள்ளும் குணமாக இருக்கவேண்டும். தன்னை அவன் உயர்ந்த மனிதனாக நினைப்பதற்கு அதுவே காரணமாக இருக்க வேண்டும்.

சிலருக்கு உடலோ மனமோ நோய்வாய்ப்படலாம். அதற்காகவே அவர்கள் வாழ்வார்கள். அதை சரி செய்து கொள்வதில் அவர்கள் திருப்தியடைவார்கள். அந்த நோயால் துன்பப்பட்டுக் கொண்டே அதிலிருந்து சக்தி பெற்று வாழ்வார்கள். தன் நோய் பற்றி பிறரிடம் பேசுவார்கள். அவர்கள் காட்டும் இரக்கத்தை சம்பாதிப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் கிடைப்பது அது ஒன்றுதான். அந்த நோய் குணமடைந்து விட்டால் அவர்களைப் போல வருத்தப்படுபவர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். தங்கள் வாழ்க்கையை நிறுத்தி வைக்கும் அது ஒன்றே போனபின் அவர்கள் தம்மை வெறும் தோலாக, உமியாக, பதராக எண்ணத்  தொடங்குவார்கள். சிலருடைய வாழ்க்கை எத்தனை தூரம் வெறுமையாகி விடுமென்றால், தாம் உயிர்வாழ்வதற்கு ஏதோவொரு தீய பழக்கத்திற்கு அடிமையானவர்கள். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தியால்தான் சிலர் தீய பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள்.

ராணுவ வீரனின் உள்ளம் மிகவும் காயமடைந்தது. எங்கள் அருகில் வந்து நின்றான். “இல்லை…! நீ சொல்லித்தான் தீர வேண்டும். யாரது?” என்று கேட்டான். 

பேக்கர் அவனைத் திரும்பிப் பார்த்து, “சொல்லணுமா?” என்றான்.

“ஆம்… சொல்லு!”

“தான்யா தெரியுமா உனக்கு? அவள்தான். அவளிடம் காட்டு உன் திறமையை”

“அவள்தானா? ஒரு கண நேர வேலை”

“பார்ப்போம்!”

“பாரு… ஆங்… ஒரு மாதம் கூட தேவையில்லை”

“சும்மா கதை விடாதே!”

“ஒரு பதினைந்து நாள் பொறுத்திரு. அவளை மடக்கிக் காட்டுகிறேன்.    தான்யா? உ..ஃப்…!”

“சரிதான்… போ! இங்கே குறுக்கே நிற்காதே!”

“ஒரு பதினைந்து நாள்…! என் பின்னால் சுற்ற வைக்கிறேனா இல்லையா பார்” என்றான்.

எங்கள் ஹெட் பேக்கருக்கு பெருங் கோபம் வந்தது. மண்வெட்டியை  தூக்கிப் பிடித்துக்கொண்டான். வீரன் பின்வாங்கினான். ஒரு கணம் மௌனமாக எங்கள் எல்லோரையும் திரும்பிப் பார்த்தான். அதன்பின், “போய் வருகிறேன்!” என்று கூறிச் சென்றுவிட்டான்.

நாங்கள் மௌனமாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். வீரன் திரும்பிச் சென்ற உடனே ஆவேசம் வந்தது போல் உரக்க விவாதத்தில் ஈடுபட்டோம்.

சிலர் ஹெட் பேக்கரைக் குறை கூறினர். “பாவெல்! நீ செய்த வேலை சரியில்லை” என்றனர்.

“வாயை மூடிக்கொண்டு வேலையை பாருங்க!” என்று அதட்டினான் ஹெட்  பேக்கர்.

ராணுவவீரனின் கர்வத்தில் அடி விழுந்து விட்டது என்பதும் தான்யா ஆபத்தில் சிக்கி உள்ளாள் என்பதும் எங்களுக்குப் புரிந்தது. அந்த விஷயம் புரிந்தாலும் என்ன நடக்கப்போகிறதோ என்ற பதற்றத்தோடு கூடிய ஆர்வத்தால் நாங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தோம். தான்யாவால் வீரனின் வலையில் விழாமல் தப்பிக்க முடியுமா? நாங்கள் ஒரு மனதாக எங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினோம்.

“தான்யா தோல்வி அடைய மாட்டாள். அவளை வெல்வது அத்தனை எளிதல்ல!”

நாங்கள் ஆராதனை செய்யும் விக்கிரகத்தை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆர்வமாக இருந்தோம். நாங்கள் ஒருவரிடம் ஒருவர் தீர்மானமாக கூறிக் கொண்டோம். நம் விக்கிரகம் திடமானது. தேர்வில் வென்று விடும் என்றும் வீரனின் அகம்பாவத்தைக் கிளறி விடுவதற்கு மேலும் சில அங்குச காயங்களை ஏற்படுத்த வேண்டி வரும் என்றும் பேசிக் கொண்டோம். அப்போதிலிருந்து அதற்கு முன் நாங்கள் அறிந்திராத பரபரப்பும் ஆர்வமும் எங்கள் வாழ்க்கையில் இடம் கொண்டன. நாங்கள் தினமும் வாதம் செய்தோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் புத்திகூர்மை வளர்ந்து விட்டது போல் தோன்றியது. எல்லோரும் மிக அதிகமாக பேசத் தொடங்கினோம். சைத்தானோடு சூதாட்டம் தொடங்கி விட்டது போல் எங்களுக்குத் தோன்றியது. அவன் அவளை வலையில் விழச் செய்யும் முயற்சியில் இருப்பதாக பன் தயாரிக்கும் இராணுவ வீரனின் உதவியாட்கள் எங்களிடம் கூறினார்கள். எங்களுக்கு பைத்தியம் பிடித்து விடுவது போல் ஆவேசம் வந்தது. எங்கள் வாழ்க்கை எத்தனை ஆனந்தப் பரவசத்தில் மிதந்தது என்றால்… அதைத் தெரிந்து கொண்டு எங்கள் எஜமானர் தினமும் ஐந்நூறு பவுண்டு அதிகப்படி மாவு சேர்த்து எங்களை பிஸ்கெட் செய்வித்தாலும் நாங்கள் அதை அறியாமலே போனோம். வேலை பளுவினால் எங்களுக்கு சோர்வு ஏற்படவில்லை. நாள் முழுவதும் நாங்கள் தான்யா பெயரை உச்சரிக்க தொடங்கினோம். அதிக ஆர்வத்தோடு அவளுடைய காலை தரிசனத்திற்காக எதிர்பார்த்திருந்தோம். ஓரொருமுறை அவள் எங்களைப் பார்ப்பதற்கு வந்தபோது எப்போதும் இருக்கும் வழக்கமான தான்யாவைப் போலின்றி வேறு ஒரு தான்யாவைப் பார்க்க நேரிடும் என்று நாங்கள் ஊகித்துக் கொண்டோம்.

ஆனால் நாங்கள் பந்தம் கட்டிய விஷயத்தை அவளிடம் கூறவில்லை. அவளிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. எப்போதும்போல் அன்போடும்  ஆதரவோடும் அவளை வரவேற்றோம். ஆனால் ஏதோ புது மாற்றம் அவள்  விஷயத்தில் எங்களிடம் ஏற்பட்டாற்போல் எங்களுக்கு தோன்றியது. அது கத்தி மீது நடப்பது போன்று ஆழ்ந்த ஆழமான குதூகலம்.

ஒருநாள் வேலை தொடங்கிய போது, “இன்றோடு அவன் வைத்த கெடு முடிந்து விட்டதடா, பசங்களா!” என்றான் எங்கள் ஹெட் பேக்கர். அந்த விஷயம் அவன் நினைவுபடுத்தாவிட்டால் எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் திடுக்கிட்டோம். “அவள் இப்போது வருவாள்… கவனியுங்கள்…!” என்று எங்களுக்கு குறிப்பு கொடுத்தான்.

எங்களில் ஒருவன் உதட்டை விரித்து, “அதை நாம் பார்வையால் கண்டுபிடிக்க முடியாது” என்றான்.

உடனே எங்களிடையே வாய்ச் சண்டை ஆரம்பித்தது. எங்களிடம் உள்ள நல்ல குணங்களை எல்லாம் ஒன்று குவித்து பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த சிலை எத்தனை பவித்திரமானதோ, கள்ளமற்றதோ இன்று     தெரிந்து போய் விடும். நாங்கள் மிகப்பெரிய பந்தயம் கட்டி உள்ளோம் என்று முதன்முறையாக அன்று காலை ஞானோதயமானது. இந்த பரீட்சையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த பொம்மை உடைந்து போகலாம். இத்தனை நாட்களாக நாங்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்தோம். அந்த வீரன் விடாமல் அவளை துரத்தி வருகிறான் என்றும் அவள் மேல் வலை வீசுகிறான் என்றும். ஆனால் அவள் அவனைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று என்றுமே நாங்கள் தான்யாவை அது குறித்து வினவவில்லை.

அன்றும் காலை நேரம் அவள் குரல் கேட்டது. “ஹலோ! சிறைபறவைகளே! நான் வந்து விட்டேன்” அவளை உள்ளே வரச் செய்தோம். வந்த பின் வழக்கத்திற்கு மாறாக நாங்கள் மௌனமாக அவளை ஆராய்வது போல் பார்த்தோம். அவளிடம் என்ன பேசுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. என்ன கேட்பது என்றும் புரிபடவில்லை. அவளுக்கு எதிரில் நாங்கள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு மௌனமாக நின்றிருந்தோம். வழக்கத்திற்கு மாறாக அவளிடம் நாங்கள் நடந்து கொள்வதைப் பார்த்து அவள் இயல்பாக ஆச்சரியமடைந்தாள். மறுகணம் அவள் முகம் வெளிறிப்போன.து அவள் மனம் வருந்தினாற்போல் தோன்றியது. தொண்டை அடைக்கக் கேட்டாள், “ஏன் நீங்கள் எல்லோரும் இவ்வளவு விந்தையாக பார்க்கிறீர்கள்?”

“உன் விஷயம் என்ன? அதைச் சொல்லு!” என்றான் ஹெட் பேக்கர். அவன் கண்கள் அவளை உற்றுப் பார்த்தன.

“என் விஷயம் என்ன இருக்கு? சரி சரி…! என் பிஸ்கெட்டை கொடுங்கள்! நான் போகணும்!”

அதற்குமுன் அவள் எப்போதும் இத்தனை அவசரப்பட்டதில்லை போவதற்கு. 

“என்ன அவசரம்? போகலாம் இரு!” என்றான் தலைமை பேக்கர் அழுத்தமாக. அவன் பார்வை அவளை தீர்க்கமாக பார்ப்பதை விட்டு விலகவில்லை.

அவள் சட்டென்று திரும்பி கதவைத் தாண்டி வெளியே சென்று விட்டாள். எங்கள் ஹெட் பேக்கர் மண்வெட்டியைக் கையில் பிடித்து அடுப்பை பார்க்க திரும்புகையில், “இவளுடைய வேலை முடிஞ்சு போச்சு! சொன்னபடி செய்து விட்டான் அவன்…! அந்த துஷ்டன்!” என்றான் மெதுவாக.

நாங்கள் ஒன்றை ஒன்று முந்தித் தள்ளும் ஆட்டு மந்தைகளைப் போல டேபுள் அருகில் வந்து அமர்ந்து கொண்டோம். மௌனமாக வேறு வழியின்றி எங்கள் பணியைத் தொடர்ந்தோம்.

அதற்குள் ஒருவன் கூறினான், “அவள் அவன் வலையில் விழவில்லையோ என்னவோ!”

“மூடு வாயை! இனிமேல் அவள் பேச்சை எடுக்காதே!” என்று உரக்கக் கத்தினான் ஹெட் பேக்கர். அவன் புத்திசாலி. எங்கள் எல்லோரையும் விட புத்திசாலி என்று எங்களுக்குத் தெரியும். ராணுவ வீரன் அந்தப் பெண்ணை வலையில் விழச் செய்த விஷயம் அவனுக்குத் தீர்மானமாக புரிந்து விட்டது என்பதையே அந்தக் கத்தல் எங்களுக்கு உணர்த்தியது. எங்கள் மனம் வருத்தத்தில் ஆழ்ந்தது. 

மதியம் பன்னிரெண்டு  மணிக்கு மதிய உணவின் பொழுது ராணுவ வீரன் உள்ளே வந்தான். அவன் எப்போதும் போல் சுத்தமாக, நீட்டாக இருந்தான். எப்போதும் போல் தீர்க்கமாக எங்கள் முகங்களைப் பார்த்தான். ஆனால் எங்களுக்கு அவன் பக்கம் பார்ப்பதற்கு சிரமமாக இருந்தது.

“இதோ பாருங்கப்பா! ஒரு ராணுவ வீரன் என்ன செய்ய முடியுமோ, அவனுடைய பலம் என்னவோ தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இடைக்கழிக்கு வந்து மரச் சுவரின் இடுக்கு வழியே ஒளிந்து நின்று பாருங்கள். புரிந்ததா?” என்றான் கர்வமாக.

ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு நாங்கள் இடைக்கழிக்கு ஓடினோம். முற்றத்தின் பக்கமிருந்த மரச் சுவரின் பிளவுகளில் எங்கள் முகங்களை அழுத்தி வைத்து பார்க்கத் தொடங்கினோம். எங்களுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. வேகமாக பரபரப்போடு முற்றத்திற்கு வந்த தான்யா பனியையும் சேறையும் உதறிக் கொண்டு  செல்லார் கதவைத் தாண்டி கண் பார்வையிலிருந்து மறைந்து போனாள். அதன் பின் சற்று நேரத்தில் ராணுவ வீரன் சீட்டி அடித்தபடியே நிதானமாக நடந்து அவனும் செல்லாருக்குள் சென்றான். அவன் கைகள் பாக்கெட்டிற்குள் இருந்தன. தனது முஷ்டியால் மீசையை மேலே தூக்கி விட்டுக் கொண்டான். 

மழை தாரையாகப் பெய்து கொண்டிருந்தது. ஆகாயத்தில் மேகம் மூண்டிருந்தது. வானிலை ஒளியிழந்து காணப்பட்டது. வீட்டுக் கூரை மீது பனி படிந்து போனது. பூமி மீது மழை நீர் சேறாக தபதபவென்று விழுந்தது. அந்த இடைக்கழியில் காத்து நிற்பது கொடுமையாக இருந்தது. குளிர் நடுக்கியது.

செல்லாரிலிருந்து முதலில் வெளியே வந்தது ராணுவ வீரன்தான். அவன் முற்றம் வழியே எப்போதும் போல் பாக்கெட்டில் கையை வைத்துக்கொண்டு மீசையை மேலே தூக்கியபடியே நிதானமாக நடந்து சென்றான். அதன் பின் தான்யா வந்தாள். அவள் கண்கள்….! அவள் கண்கள் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக ஒளி வீசின. உதடுகள் சிரித்தன. கலகலவென்று அசைந்தபடி தள்ளாடுவது போல அவள் நடந்து வந்தாள். 

அது எங்களுக்குப் பொறுக்க முடியாத சூழல். நாங்கள் அனைவரும் டக்கென்று ஒரே ஓட்டமாக கதவைப் பார்க்க நகர்ந்தோம். முற்றத்தில் நுழைந்து உரக்க பயங்கரமாக, கொடூரமாக அலறத் தொடங்கினோம். சீட்டி அடித்தோம்.

தான்யா திடுக்கிட்டு எங்களைப் பார்த்து தூண் போல் நின்று விட்டாள். நாங்கள் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு எங்கள் வாய்க்கு வந்த ஆபாச வார்த்தைகளை வீசினோம். அவளை அழ வைத்து மகிழ வேண்டும் என்ற ஆசை அது. 

தன்னைச் சுற்றிலும் ஏற்பட்ட அந்த வளையத்தைத்  தாண்டி அவளால் செல்ல இயலாது என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு திருப்தி ஏற்படும் வரை அவளை பரிகாசம் செய்வதற்கு அதுதான் சரியான நேரம். அதனால் அவளைத் திட்டுவதற்கு நாங்கள் அவசரப்படவில்லை. நிதானமாக அந்த வேலையைச் செய்தோம். உண்மையில் வியப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் எங்களுக்கு இருந்த கோபத்தில் நாங்கள் அவளை அடிக்கவில்லை. தலையை திருப்பித் திருப்பி ஆபாச வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு எங்கள் மத்தியில் நின்றிருந்தாள் தான்யா. நாங்கள் கட்டுக்கடங்காமல் போனோம். எங்கள் சினத்தின் விஷக்  குமுறல்களை அவளை நோக்கித் தெளித்தோம். அவள் முகம் வெளிறியது. ஒரு கணம் முன்பு ஆனந்தத்தில் நனைந்த அவள் கண்கள் இப்போது நிலைத்து நின்று விட்டன. அவளுக்கு மூச்சு விடுவது கூட சிரமமாக இருந்தது. அவளுடைய உதடுகள் நடுங்கின.

அவளைச் சூழ்ந்து நின்றிருந்த நாங்கள் அவள் மீது பகை தீர்த்துக் கொண்டோம். தீர்த்துக் கொள்ள மாட்டோமா, பின்னே? எங்களைக்  கொள்ளையடித்தால் சும்மா இருப்போமா? அவள் எங்களுடையவள். எங்களுக்குள்ள நல்ல குணங்களை எல்லாம் அவளிடமே செலவழித்தோம்.   அவள் ஒருத்தி. நாங்கள் இருபத்தாறு  பேர். அவள் செய்த குற்றத்திற்குத் தகுந்தபடி நாங்கள் விதிக்கும் தண்டனைக்கு அளவு இல்லை. தான்யா மிகவும் நடுங்கினாள். அச்சமடைந்தாள். வாயே திறக்கவில்லை. முழியை விரித்துப் பார்த்தபடி நின்று விட்டாள். நாங்கள் அவளை கொடூரமாக தீட்டினோம். நிந்தித்தோம். கத்தினோம். சிரித்தோம். எங்களை சுற்றி மக்கள் கூடத் தொடங்கினர். 

எங்களில் ஒருவன் தான்யாவுடைய சட்டையின் கையைப் பிடித்து இழுத்தான். உடனே அவள் கண்கள் நெருப்பைக் கக்கின. அவள் மெதுவாக கையை உயர்த்தி தலை முடியை சரி செய்து கொண்டாள். எங்கள் முகங்களை பார்த்து அமைதியாக ஆனால் உரத்த குரலில் கூறினாள், “உங்கள் வயிறு எரிய…! நகருங்கள்! சிறைப் பறவைகளே!” 

வழியை அடைத்தபடி நாங்கள் நின்றிருப்பதையே கவனிக்காமல் எங்கள் வளையத்தைத் தாண்டி அவள் வெளியே அடியெடுத்து வைத்தாள். அதனால் எங்களில் யாரும் அவளுடைய வழியை அடைத்தபடி நிற்கவில்லை என்பது தெரிந்து போனது. அவள் அவ்வாறு சென்று  உடனே கோபத்தோடும் வெறுப்போடும் திமிரோடும் தலையைத் திருப்பாமல் எங்களை உரத்த குரலில் திட்டினாள். “பன்றி முகங்கள்! மிருகங்கள்!”

சூரியனின்றி ஆகாயம் மப்பாக இருந்தது. மழை தூறிக் கொண்டிருந்தது. முற்றத்தின் நடுவில் சேற்றில் எங்களை அவ்வாறு விட்டுவிட்டு அவள் சென்றுவிட்டாள். அதன்பின் நாங்களும் காலை இழுத்து நடந்தபடி எங்கள் பாறாங்கல் இடுக்கு அறைக்குள் நுழைந்தோம். முன்புபோல் சூரியன் எப்போதும் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கவில்லை.

தான்யா அதன் பின் எங்களிடம் வரவே இல்லை. ***

தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

2 Replies to “இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்”

 1. [ரஷ்ய மூலம்: மாக்ஸிம் கோர்கி
  ஆங்கில மொழியாக்கம்: பெர்னார்ட் ஐசக்ஸ்
  ஆங்கிலத்திலிருந்து தெலுங்கு மொழிபெயர்ப்பு: காகானி சக்ரபாணி
  தெலுங்கிலிருந்து தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்]

  அன்புள்ள ராஜி ரகுநாதன்: தெலுங்கிலிருந்து தமிழுக்கு மாற்றிய கதையில் பல கரடு முரடுகளை எதிர்பார்த்தேன். ஆனால், இந்த மொழிபெயர்ப்பு அருமையாக இருந்தது.

  இந்த ‘சிறைப் பறவைகள்’ பழைய கால ஒண்டுக்குடித்தன வம்பு பேசும் கோஷ்டிகளை நினைவுக்கு கொண்டு வருவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.