இன்பா- கவிதைகள்

எழுந்துச் செல்லும் எலும்புகள்

மனிதர்களைப் போல்
கடைகளும் அதிகமாகிவிட்டன
மதியவேளை
சாப்பாட்டுக் கடைகளில்
அமர இடம் கிடைத்தால் நீங்கள்
அதிர்ஷ்டசாலி.
தட்டில்கிடக்கும் பிண்டங்கள்
எழுந்து பேசவா போகின்றன
அச்சமின்றி அத்தனையும்
அசைபோடப்பட்டிருக்கின்றன
தின்றுத் துப்பிய
எலும்புகளுக்குச் சதைமுளைத்து
எழுந்து நடந்துச் செல்வதுபோல்
என் கற்பனை விரிகையில்
கிழவியின் கூனிலிருந்து
முளைத்தக் கைகள்
மேசையைத் துடைத்துச் செல்கிறது
மிச்சம் வைக்காமல்
சாப்பிடுவதேயில்லையென
தனக்குத் தானே புலம்பியபடியே
அடுத்த மேசைக்கு நகர்கிறாள்
வீணாக்கப்படும் உணவோடு
கொட்டி கழுவப்படுகிறது
அவளின் கவலையும்

‘பரவாயில்லை நல்லாயிருக்கேன்’

மூன்றாம் நிலை
அறுவை சிகிச்சையைச் செய்தால்
சரியாகிவிடும்
கீமோவில் தொடங்கிய
வாந்தியும் மயக்கமும்
பார்க்கமுடியாத உருவச் சுழிப்புகள்
தூக்க மாத்திரை
கண்களின் காந்தத்தைக்
கழட்டிவீசியது
கசக்கிறது தேன்
புளிக்கிறது பால்
நோவுகிறது முதுகு
தோள்களைத் தட்டிக் கொடுத்துத்
தைரியமாயிருங்களென
கேள்விப்பட்டோரெல்லாம் தேற்றுகிறார்கள்
இவர்களுக்கெல்லாம் இது
ஆறுதல் வார்த்தைகள்
இவையெல்லாம் மனதைத் தொடுவதாக
நினைப்பு வேறு – இவற்றால்
உடலின் உபாதையை ஒன்றும்
கிழிக்கமுடியாது
இதையெல்லாம் மீறி
இல்லாமல் போய்விடுவேன் என்று தெரிந்தும்
இப்போ எப்படியிருக்க என்ற கேள்விக்கு
‘பரவாயில்லை நல்லாயிருக்கேன்’
என்று தான் சொல்லி சமாளிக்கிறேன்
அதைத்தானே எதிர்பார்க்கிறார்கள்!

அற்பமாய்த் தோன்றும் கனம்

முப்பது நாள்கள் கணக்கென்றாலும்
இருபத்தியாறிலே வந்து விடுகிறது
ஒரு வாரத்திற்கு முன்பாகவே
வெள்ளை ஆடைகள் தவிர்க்கப்படுகின்றன
அடிவயிற்றில் சுருக்கெனத் தைக்கும்
வலியோடு வந்துவிட்டதை
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்
நெஞ்சம் படபடக்கிறது
வயிற்றுப் பிணையலில்
இடுப்பில் உருளும் வலியின் நீட்சி
முழங்காலையும் குத்துவதோடு
குமட்டலும் பிரட்டலும் கூடவே
குழந்தைப் பிறந்தால் ச‌ரியா‌குமென்று
மலைவேம்பு குடித்தும் விட்டபாடில்லை
உடலெனும் பேராசானை மறக்காமல்
சபித்துவிடுகிறேன் ஒவ்வொரு மாதமும்
ஆதிமனித நிறம்
அற்பமாய்த் தோன்றும் கனம்
கடந்துச்செல்ல குமட்டுகிறது

கருப்பாய் மாறிய சோறு

மூன்றடிக் குதிரிலிருந்தப்
பொன்னியரிசியைக் கொட்டியளந்து
உலையில் கொதிக்கவிட
திடீரென மாறியது கருப்பாய்
வடித்தெடுக்கையில்
தசகூலியாய் வடிகஞ்சியும்
வடிந்தது கருப்பாய்.
வெள்ளைத் தட்டில்
பரிமாறப்பட்டது கருப்புச் சோறு
எந்தக் குழம்பும் ஒட்டவில்லை.
கவளஞ்சோற்றைக் கையிலெடுத்து
உருட்டி வாயினருகில் கொண்டுசெல்கையில்
எச்சில் தெறிக்க
மீண்டும் தட்டுக்கே மீண்டு வந்தது
காய்கறிகள் கூட்டம் போட்டன
தட்டுகள் உதைபட்டன
பருக்கைகள் சிதறடிக்கப்பட்டன
ரசம் கூட ரசவாதம் செய்தது
தயிர்சாதம் அழுதுகொண்டே
விவாகரத்துக் கேட்டது
எலுமிச்சை, புளியோதரைக்
கட்டுச்சோறுகளெல்லாம்
கதறத் தொடங்கின
வெள்ளைத் துணிகளில்
கருப்பு இட்லிகள் அவிக்கப்பட்டு
குழிகளை நிரப்பின
மதம் மாறுவதுபோல்
நிறம் மாறுவதும் குற்றமில்லை தானே
இப்’புழு’ங்கல் நெல்
வேதிக்கூறுகள் நிரம்பியதாகவும்
சர்க்கரையைக் கலக்கவிடாதெனவும் கோலோய்ச்சப்பட்டது
பட்டை தீட்டப்படாதக்
கருப்புச் சோறே நல்லதென
எழுபதாண்டுகளுக்குப்பின் அறிவிக்கப்பட்டது

காதலிக்க வேண்டும் எழுதியே

உன்னைப் பார்த்துப் புன்னகையை மட்டுமே
சிந்திக் கொண்டிருந்தேன்
கையளவு இதயத்தையும்
கடலளவு அன்பையும் நீயே
எடுத்துக் கொள்
தேன் குடிக்க விரும்பும் ஈயாய்
மனமதுவைத் தேடியலைந்தேன்
அன்பின் மதுக்குடத்தில்
என்னைத் தள்ளிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறாய்
நான் தேம்பி அழ தோள்கள் வேண்டும்
என் எழுத்துகளுக்கு விரல்கள் வேண்டும்
என் இதயப்பெருங்காடு பற்றி
எரிவது தெரிகிறதா
இப்போது
அதிதீவிர சிகிச்சைப்
பிரிவில் இருக்கின்றேன்
என் புத்தியில் எதையோ நீ
விதைத்துச் சென்று விட்டாய்
இல்லையெனில் இப்படி
கிறங்கியிருக்க மாட்டேன்
என் முதைச்சுவல் கலித்த
முற்றாத இளம்புல்லாய்க்
கிளர்ந்து நிற்கிறேன்
சிறகிழந்த பறவையாய்
அறுபட்டுக் கிடக்கின்றேன்
உன்னைத்
துரத்தித் துரத்தித்
துவண்டு கிடக்கவேண்டும்
ஆழ்மன ஆழத்திலிருந்து ஆதியிலிருந்து
வெறிப்பிடித்தபடிக்
காதலிக்க வேண்டும்
அன்பைக்கொட்டி
ஆசைதீரக் காதலிக்க வேண்டும்
மெய்தீண்டா உயிரேந்திக்
காதலிக்க வேண்டும் எழுதியே..
இப்போது நேரமில்லை
பிறகு வருகிறேன்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.