இந்தியா: பண்டைக்காலத்து நீதித்துறை அமைப்பு

கிருஷ்ணன் சுப்ரமணியன்

ஒரு நல்ல ஆட்சிமுறைக்கான முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக அந்த நாட்டில் நிலவும் நீதி பரிபாலன முறை சுட்டிக்காட்டப்படுகிறது. இன்றைய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்கும் நீதித்துறையின் முக்கியத்துவம் முடியாட்சிக் காலத்திலும் இதேபோல சிறப்புப் பெற்றே இருந்தது. நம்முடைய தர்மசாஸ்திரங்களில் நீதி வழங்குபவர்களுக்கும் அவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளுக்கும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு. முடியாட்சியில் நீதி வழங்கும் உச்சகட்ட அதிகாரம் அரசனுக்கே வழங்கப்பட்டிருந்தாலும் நாட்டில் உள்ள எல்லா வழக்குகளையும் அவன் ஒருவனே விசாரித்துத் தீர்ப்புச் சொல்வது முடியாத விஷயம் அல்லவா. எனவே அந்தக் காலத்திலும் பல்வேறு அடுக்கு முறைகளில் நீதி மன்றங்கள் செயல்பட்டு வந்தன. தமிழகத்தின் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்க்கும் போது, எந்த விதமான நீதி சபைகள் இருந்தன, அதற்கான உறுப்பினர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களுடைய அதிகார வரம்பு என்ன என்பது பற்றிப் பல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. 

தமிழகத்தின் நீதித்துறை அடுக்குகளில் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக இருப்பது கிராம அளவில் நடத்தப்படும் பஞ்சாயத்துகள்தான். ஆனால் அக்காலத்தைய கிராம நீதி மன்றங்கள் தற்போதைய திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல ஆலமரம், செம்பு, ஜமுக்காளம், பஞ்சாயத்து செய்து வைக்க நாட்டாமை உட்பட சில பெரும் தலைகள், இருதரப்பையும் விசாரித்து அவர்களுக்குள் கூடிப்பேசி எடுக்கும் தீர்ப்புகள் போன்று ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ கதையாக இருந்ததில்லை. அப்போதைய கிராம நீதி மன்றங்கள் ‘மன்றாடு’ என்ற பெயரில் இருந்தன. அங்கே நீதி வழங்கும் ‘மன்றாடுபவர், மன்றாடி’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட கிராம நீதிபதிக்கான தகுதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக, தமிழகத்தின் கிராம சபைகளைக் குறிக்கும் ஆகப் பழைய கல்வெட்டான பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் மானூர் அம்பலவாண சுவாமி கோவில் கல்வெட்டு (பொயு 898), 

‘மக்கள் சபையில் மன்றாடுகிறது ஒரு தர்மம் உட்பட மந்திரப் ப்ராம்மணம் வல்லார் சுவ்ருத்தராய் இருப்பாரே ஒரு பங்கினுக்கு ஒருத்தரே சபையில் மன்றாடுவதாகவும்’

என்று அந்தக் கிராமத்தின் நீதி சபையின் உறுப்பினர்களின் தகுதியை நிர்ணயம் செய்கிறது. அதாவது உறுப்பினராகக் கோருவோர் தர்ம சாஸ்திரங்களின் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். இன்றைய குடிமையியல், குற்றவியல் சட்டங்களைப் போல, பண்டைக்காலத்தில் வழக்குகள் இந்த தர்மசாஸ்திரங்களின் அடிப்படையிலேதான் விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட்டன. பல சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தர்ம சாஸ்திரங்களை ஆராய்ந்து தீர்ப்புகள் அளிக்கப்பட்டன.  எனவே பொதுவாக அறியப்படும் மனு தர்ம சாஸ்திரத்தைத் தவிர  யாக்ஞவல்கியர், ப்ருஹஸ்பதி, பராசரர் போன்றவர்களின் தர்ம சாஸ்திரங்களில் ஏதாவது ஒன்றில் அவர் வல்லுநராக இருக்கவேண்டும் என்பது முதல் தகுதி.  கிராம நீதிமன்றங்களிலும்  தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டதே தவிர தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்பினால் அல்ல என்பது இதன்மூலம் தெளிவாகிறது. தவிர நீதிசபை உறுப்பினர்களுக்கான மற்றொரு தகுதி அவர் நல்ல நடத்தை கொண்டவராக, சுவ்ருத்தராக, இருக்கவேண்டும் என்பது. அடுத்தது குடும்பத்தில் ஒருவருக்கே இந்த சபைகளில் பிரதிநிதித்துவம் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மானூர் ஒரு பிரம்மதேயமாக இருந்ததால், அந்த ஊர் நீதி சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் வேதங்களிலும் ப்ராம்மணங்களிலும் வல்லவராக இருக்கவேண்டும் என்றும் கூறுப்பட்டுள்ளது. இவ்வளவு தகுதிகள் ஒருவருக்கு இருக்கிறதா என்று காண தேர்வுகள் வைக்கப்படுவது உண்டு. அதில் தேர்ச்சி பெற்றவரே இது போன்று கிராம நீதி சபைகளில் உறுப்பினராக நியமிக்கப்படுவார். அந்த நீதி சபைக்கே வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக்கூறும் உரிமையும் உண்டு.  அக்காலத்தில் பெரும்பாலான வழக்குகள் கிராம நீதி சபை அளவிலேயே தீர்க்கப்பட்டு விடுவது வழக்கம். ஒரு சில வழக்குகள் மட்டுமே மண்டல நீதிமன்றங்களுக்கோ, அரசனுடைய நீதி சபைக்கோ சென்றன. இந்தக் காரணங்களினால் கிராம நீதி சபைகள் வலுவாக அமைக்கப்படுவது தேவையானதாக இருந்தது. பல இடங்களில் அரசனே நேரடியாகத் தலையிட்டு அந்த சபைகளை அமைக்கும் முறை பின்பற்றப்பட்டது. சில இடங்களில அந்தந்த கிராம சபைகளுக்கே இந்த நீதிமன்றங்களை அமைக்கும் அதிகாரம் இருந்தது 

குறிப்பாக புது கிராமங்கள் உருவாக்கப்படும் போது, அதோடு அந்த கிராமங்களுக்கான நீதி மன்றங்களும் அமைக்கப்பட்டன. போரூர் சிவன் கோவிலில உள்ள 13ம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று, அங்குள்ள அரசன் புது கிராமம் ஒன்றின் எல்லைகளை வகுத்து அதை உருவாக்கவும் அதோடு அந்த கிராமத்திற்கான நீதி சபையை அமைக்க உத்தரவளித்ததையும் குறிப்பிட்டுள்ளது. அந்த நீதி சபை ஏழு உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும்  அதற்கு உறுப்பினர்களாக பிராமணர்களையும் வேளாளர்களையும் நியமிக்கவேண்டும் என்ற அந்த ஆணை கூறுகிறது. எனவே சமூகத்தின் பல தரப்பினரைக் கொண்டதாக இந்த நீதி சபைகள் இருந்தன என்பது தெரிய வருகிறது. இந்த சபையின் நீதிபதிகள் ‘மன்றாடி’ என்றும் கிராம சபையின் உறுப்பினர்கள் ‘ஊராளி’ என்றும் அழைக்கப்பட்டனர். தவிர, அரசு அதிகாரிகள் எவரும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளிலோ, அங்கு வழங்கப்படும் தண்டனைகளிலோ மற்ற விவகாரங்களிலோ தலையிடக்கூடாது என்று அந்த ஆணை வலியுறுத்துகிறது.  எனவே தற்போது போல நீதித்துறை சுதந்தரமாக, தனித்தே இயங்கியிருக்கிறது. இப்படிச் செயல்படும் நீதி மன்ற உறுப்பினர்கள், கிராம சபைகளிலோ அதன் கிளை மன்றங்களிலோ உறுப்பினர்களாக இருக்க முடியாது என்ற விதியும் இருந்தது. இதனால் ஒரு பதவியைப் பயன்படுத்தி மற்றொன்றில் ஆதாயம் தேடும் வழிகள் தடுக்கப்பட்டன. அதே சமயம் நீதிபதிகள் ஊழல் புரிந்தாலோ அல்லது ஒரு சார்பாகத் தீர்ப்புகள் அளித்தாலோ அவர்களுக்கும் தண்டனை அளிக்கும் விதமாக சட்டங்கள் இருந்தன. மண்டல நீதி ஆணையங்களும் அதற்கு மேல் அரசர்களுடைய நீதி மன்றங்களும் இம்மாதிரிக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளித்தன. 

இவ்வாறு நியமிக்கப்பட்டும் நீதிமன்ற உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது என்பதை பொயு 930ஐச் சேர்ந்த பராந்தக சோழன் காலத்து திருநின்றவூர் கல்வெட்டு புலப்படுத்துகிறது. ஒருதடவை நீதிமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுபவர் ஒரு வருட காலம் அந்தப் பதவியில் இருக்கலாம். அதன்பின் அவர் ஐந்து வருட காலத்திற்கு அந்த மன்ற உறுப்பினராகவோ அல்லது அந்த கிராம சபையிலோ அது சார்ந்த குழுக்களிலோ பதவி வகிக்க இயலாது. அது மட்டுமல்லாமல் அவர்களுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர், சகோதரர்கள், மைந்தர்கள்) இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பதவிகள் எதையும் வகிக்க இயலாது. மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் எல்லாம் நீதித்துறையைப் பொருத்தவரை எந்த சமரசமும் செய்யாமல் நீதியை நிலைநாட்ட அரசன் உட்பட அனைவரும் முனைந்ததை தெளிவுபடுத்துகிறது. அந்தக் கல்வெட்டு கூறும் விவரங்கள்

“இவ்வாண்டு முதல் மன்றாட்டும் வாரியங்களும் எழுதும்பொழுது மஹாசபை குறைவற ப்ரஹ்மஸ்தாநத்தே கூடியிருந்து மஹாசபைக்கு ஒத்தாரையே அற்றைகு(ண்)டான

ஐய்யாட்டை நாள் மன்றாடியும் 

வாரியஞ் செய்யாதரையே மன்றாட்டும் வாரியமும் இடுவதாகவும்

வாரியமெழுது மாண்டின் முன் இரண்டாண்டு வாரியஞ் செய்தாருக்கும்

உடன்பிறந்தாருந் தமப்பனும் மக்களும் ஒழிய, பேர் எழுதுவதாகவும் இப்பரிசு 

எழுதப்பட்டாரை மஹாசபை நடுவேயிருந்த குடிமை ஏல்பாராகவும் ….

இப்பரிசன்றிக் குடிமை ஏன்றார் ஊருக்குப் பிழைத்தாராகவும்

(வாரிய பலங்) குன்றியே கொள்வாராகவு மன்றாடியும் வாரியுஞ் செய்து

விட்டார்கள் புக்க ஸபையார்க்கு கணக்குக் காட்டி ஒட்பித்து வ்யவஸ்தை செய்தோம்

இவ்யவஸ்தையில் (பிழைத்) தாரை நம்மூர் ச்ராவ (ணை) பாகிகரை வேண்டிநான்

தர்ம்மாஸநத்து நிசதி இருபத்தைஞ் கழஞ்சு பொன் தண்ட மிடப் பெறுவராகவும்”

நீதிமன்றத்தில் உறுப்பினராக தம்முடைய பதவிக்காலம் முடிந்தவுடன் ஊர்ச்சபையில் தகுந்த கணக்குக் காட்டி ஒப்படைத்த பிறகே அவர்கள் விடைபெற வேண்டும். இப்படிப் பட்ட விதிமுறைகளை ஏற்காதவர்கள் இருபத்தைஞ்சு கழஞ்சு பொன் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. 

தீர்ப்புகள்

இத்தகைய நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் சில ஆச்சரியப்படவைக்கின்றன. அற நூல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்பதால், அங்கே அறம் என்பது என்ன, எந்த சூழ்நிலையில் அந்தக் குற்றம் நிகழ்ந்தது என்பதைக் கருத்தில் கொண்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஒலக்கூரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கும் தகவலின்படி  அப்பன் சாத்தன், உதையன் பெருமாள் ஆகியோர் வேட்டைக்குச் சென்றிருந்தனர். உதையன் ஒரு பறவையின் மேல் விட்ட அம்பு தவறுதலாக அப்பன் சாத்தன் மேல் பட்டு அவன் இறந்துபோனான். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது வேண்டுமென்றே செய்த குற்றமல்ல என்ற காரணத்தால் இதன் பிராயச்சித்தமாக உதயனுக்கு திருவாகதீஸ்வரர் கோவிலில் உள்ள வாதாபி விநாயகர் கோவிலில் நுந்தா விளக்கை ஏற்றவும் அதற்காக முப்பத்திரண்டு பசுவும் ஒரு காளையும் அளிக்கவும் தீர்ப்பளித்தனர். அதைப்போலவே தாமரைப்பாக்கத்திலுள்ள ஒரு கல்வெட்டு, குடும்பத் தகராறு ஒன்று தீர்த்துவைக்கப்பட்ட விதத்தைப் பதிவு செய்கிறது. அண்ணன் தம்பி இருவருக்கும் நடந்த சண்டையில் தம்பி அண்ணனைக் கொன்றுவிட்டான். ஆனால் அவன் பெற்றோர்களுக்கு வேறு வாரிசுகள் இல்லாத காரணத்தாலும் அவர்களுக்கு வருமானம் அளிக்கும் சொத்துக்கள் இல்லாத காரணத்தாலும் அந்த வம்சத்தைக் காக்க தம்பிக்கு மரண தண்டனை அளிக்காமல் கோவிலில் நுந்தா விளக்கு ஏற்றுமாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. 

சில சிக்கலான வழக்குகளுக்கு அரசரே தீர்ப்புக் கொடுக்கவேண்டியிருந்ததாகவும் தெரிகிறது. நன்கு அறியப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடுகளின் வரலாறு தெரிவிப்பது நற்சிங்கன் என்ற அந்தணன் ஒரு நாள் பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையனின் அரண்மனை வாசலில் நின்று கூச்சலிட்டான். அதைக் கேட்ட அரசன் அவனை அழைத்து விசாரிக்க, தன்னுடைய முன்னோனான கொற்கைக் கிழான் என்பவனுக்கு  பாண்டியனின் முன்னோர்களில் ஒருவனும் சங்ககாலத்தைச் சேர்ந்த பாண்டியனுமான பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுவதி ஒரு யாகத்தின் போது பாகனூர்க் கூற்றம் என்ற கிராமத்தை தானம் செய்ததாகவும், களப்பிரர் மதுரையின் ஆட்சியை பிடித்தபோது அந்த தானத்தை ரத்து செய்து நிலத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும் அவன் தெரிவித்தான். நெடுஞ்சடையன் இதற்கான அத்தாட்சியாக அந்த ஆவணத்தைக் கேட்க, நற்சிங்கனும் அதை அளித்தான். அதை ஏற்று அரசன் அந்த கிராமத்தை மீண்டும் அவனுக்கே சாசனம் செய்து கொடுத்துவிட்டான் என்று இந்தச் செப்பேட்டின் வரலாறு தெரிவிக்கிறது. இது ஏன் கீழ் அடுக்கில் உள்ள நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப்படவில்லை (அல்லது கொண்டு செல்லப்பட்டதா), களப்பிரர் ஆட்சியை அகற்றிய கடுங்கோனில் தொடங்கி நெடுஞ்சடையனுக்கு முன் ஆட்சி செய்த ஆறு பாண்டிய அரசர்களின் முன் இந்தப் பிரச்சனை ஏன் எழுப்பப்படவில்லை என்பது தெரியவில்லை. ஆயினும், தகுந்த ஆவணம் இருந்ததால், அதன் அடிப்படையில் தன் முன்னோன் கொடுத்த தானத்தை நெடுஞ்சடையன் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறான்.

பாண்டியன் பராந்தக வீர நாராயணின் தளவாய்புரம் செப்பேடு இதற்கு மாறான வேறொரு வழக்கைப் பற்றித் தெரிவிக்கிறது. பாண்டியன் கடுங்கோன் ஶ்ரீமங்கலம் என்ற கிராமத்தை 12 பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினான். அதன்பின் கழுதூரில் சித்தியடைந்த மற்றொரு பாண்டியன் சோமாசிக்குறிச்சி என்ற ஊரை காடக சோமாசியார் என்பவருக்கு ஏகபோகமாக அளித்திருந்தான். இந்த ஊர்களின் செப்பேட்டுச் சாசனங்கள் ஏதோ கலவரம் நடந்த காலத்தில் தொலைந்துவிட்டன. இதற்கிடையில் கடற்றிருக்கைக் கிழவன் என்பவன் சோமாசிக்குறிச்சியின் எல்லையை வகுத்து தனக்கு எடுத்துக்கொண்டு மீதி உள்ள இடத்தை மதுரதரநல்லூர் என்ற பெயரில் குடிநிலமாக்கிவிட்டான். இந்த நிலையைச் சரிசெய்து இரண்டு ஊர்களையும் சேர்த்து தங்களுக்கே புதிதாகச் சாசனம் செய்து தரும்படி ஶ்ரீமங்கலத்துவாசியும் சோமாசிக்குறிச்சியின் பதிகாவலனுமான நாராயணன் கேசவன் என்பவன் அரசனிடம் வேண்டிக்கொண்டான். இங்கே ஆவணங்கள் தொலைந்துவிட்ட நிலையிலும் முறையிட்டவனின் பின்புலம், அவன் அரண்மனை அதிகாரியாகவும் இருந்ததால் அரசனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசனும் அந்த இரு கிராமங்களை நாராயணன் கேசவனுக்குப் புதிதாகச் சாசனம் செய்து கொடுத்தான் என்று செப்பேடு கூறுகிறது. இப்படி ஆவணங்கள் அழிந்துபோனாலோ அல்லது காணாமற்போனாலோ அதற்குப் பதிலாக வேறொரு ஆவணத்தை அரசன் தயார் செய்து சாசனமாக அளிக்கவேண்டும் என்று யாக்ஞவல்கியரின் தர்மசாஸ்திரம் வழிகாட்டுகிறது. இதற்கு சுத்தி செய்து தருவது என்று பெயர். அதன்படியே இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கவேண்டும். 

இப்படிச் செம்மையான முறையில் செயல்பட்டு தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில்  இயங்கிய நீதி பரிபாலன முறை அன்னியர்களின் படையெடுப்பாலும் பின்னர் பிரிட்டிஷார் கொண்டு வந்த மேற்கத்திய முறைகளாலும் அடியோடு மாறிப்போனது. ஏராளமான வழக்குகள் கீழ், மேல் ‘கோர்ட்டுகளில்’ தேங்கி நிற்கும் நிலையில், கிராம நீதிமன்றங்களுக்கான பங்கு இன்றும் இருக்கிறதா, தற்போதைய சட்டங்கள் நம் சமுதாயத்தில் தொன்று தொட்டு நிலவிய அறங்களின் அடிப்படையில் செயல்படுகிறதா என்றெல்லாம் மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியமான ஒன்று. ***

One Reply to “இந்தியா: பண்டைக்காலத்து நீதித்துறை அமைப்பு”

  1. நம் நீதி முறையை நாம் திரும்பிப் பார்க்கச் செய்த கட்டுரை. கிராமங்களில் பொதுவாக ஒருவரையொருவர் அறிந்திருப்பார்கள்; மேலும் பரம்பரையாகவும் அவ்விடத்தில் பெரும்பாலும் வசிப்பார்கள்.இப்போதோ அது கிராமங்களில் கூட அருகி வருகிறது.அறம், தர்மம் போன்ற சிந்தனைகளுக்கு இன்றைய சட்டத்தில் நேரடியான அனுமதி இல்லை. சாட்சிகளின் ஆட்சி வெல்லும் நிலை பெரும்பாலும்.நீதியும், நியாயமும் வேறு வேறானவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.