தஞ்சைக்கு அருகில் பிறந்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு, தஞ்சை பெரியகோயில் வாழ்வில் கடக்கமுடியாத அதிசயம்.
தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், மற்றும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் ஆகிய மூன்றுமே சோழர்காலக்கோயில்களின் சிற்பக்கலையின் உன்னதத்தை உரக்கச் சொல்பவை.
தஞ்சை மற்றும் கங்காபுரத்தின் கோயில்கள் இறைவன் மிகப்பெரியவன் என்பதை சொல்லாமல் சொல்லும் முயற்சியாக இருக்கிறது. இன்றும் பாங்காக் போன்ற நகரங்களில் தேரவாத பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள் கோயில்களில் புத்தர் மிகப்பெரிய கோலத்தில் சயனித்திருப்பார்.
திரு.கல்கியின் பொன்னியின் செல்வன் ஏன் இத்தனை பெரிய சிவலிங்கத்திருமேனி வேண்டும் என்று ராஜராஜசோழர் (அருண்மொழி) நினைத்திருப்பார் என்பதற்கு அவர் இலங்கையில் கண்ட பிரமாண்டமான புத்தர் சிலைகளைக்கொண்டு பதில் சொல்லியிருக்கும்.
இதற்கு முன்னால் வாசித்திருந்த பொன்னியின் செல்வன், உடையார், கங்கை கொண்ட சோழன் போன்றவற்றிலிருந்து, கங்காபுரம் மாறுபட்ட வாசிப்பு அனுபவமாக இருந்தது. சொல்லப்பட்ட கோணம் தந்தையை விஞ்ச நினைக்கும் மகனின் வாழ்க்கை.
ஒரு ஆலமரத்தின் நிழலில் இன்னொரு ஆலமரம் உருவாக முடியாது என்பதாக தனக்கான தலைநகராக நீர் வளத்தை ஏற்படுத்தி, கங்காபுரத்தை உருவாக்குகிறார் ராஜேந்திரர்.
காலத்தால் மிக மிக பழமையானவை ஆரூரும், சிதம்பரமும்.
ஆலமரத்தின் நீழலில் அமர்ந்த பெருமான் தான் சிவபெருமான்.
முதல் பகுதியில், சரியான இடத்தில் இந்தப் புதினத்தை துவங்க, திருமதி. வெண்ணிலா அதிகம் உழைத்திருக்கிறார். மார்கழி திருவாதிரை நாள், தில்லை, திருவாரூர், கிள்ளை, தஞ்சை என்று பல இடங்களில் எப்படி இருக்கிறது என்பதை சொல்லி, அரசியல் ரீதியாக எப்படி இருந்திருக்கும் என்ற பார்வையை முன்வைக்கிறார்.
ராஜேந்திரரின் போர் முயற்சிகள் உள்பட அனைத்துக்கும் தோள்கொடுக்கும் ஆன்மாவின் காதலியாக தெளிவும், பலமொழி அறிவும் கொண்டவராக வீரமாதேவி கதாபாத்திரம் அழகாகப் படைக்கப்பட்டிருக்கிறது.
தன் வாழ்நாளில் இருந்த அரசர்களை விட அதிக போர்களங்களையும், கப்பல் பயணங்களையும் மேற்கொண்டவர் ராஜேந்திர சோழர். பரந்துபட்ட பார்வை என்பது இயல்பாக இந்தப்பயணங்களின் வழி அமைந்திருக்கும்.
அவர் தந்தையின் நிழலில் வாழும் மனிதர் அல்ல என்பதை அவரது உள்மனம் சொல்லாமலா இருந்திருக்கும்!
கதையில் சொல்லப்பட்ட கிளைக்கதைகள்: கொல்லம் பக்கத்திலிருந்த பாண்டிய வம்சத்தினரைக்கண்டு, பொலனருவா ஆலயத்தில் மறைத்து வைக்கப்பட்ட பாண்டியர்களின் மணிமுடியை கண்டுபிடித்தது, கோதாவரி ஆற்றில் யானைகளைப் பாலமாக்கி, வெற்றி பெற்ற போர்படையை ராஜேந்திரன் எதிர்கொண்டது, கடாரம் படையெடுப்பின் போது போர்வீரர்கள் விவசாயம் செய்தார்கள் என்று பலவும் படிக்க நன்றாக இருந்தன.
ஒரு வளரும் தேசத்துக்கான அறிகுறி, புதியத்தலைநகரை தீர்மானிப்பதும் தான். நீர் வளம் இல்லாத பகுதியில் எப்படி நீர் வளத்தை உண்டாக்கினார் என்று விவரித்திருப்பதானகாட்சிகள் இன்றைய பாட்டில் தண்ணீர் குடிக்கும் நம்மில் பலருக்கு பிரமிப்பானவை.
கோயிலுக்கான மரங்களைத்தேர்வு செய்வது, கோயிலுக்கான திட்டமிடுதல் என்று பலவற்றுக்கானத் தரவுகளை சேகரித்து எழுதியிருக்கிறார். என்ன புத்தகங்கள், செப்பேடுகள், மற்ற வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களிலிருந்து குறிப்புகளை எடுத்துக்கொண்டார் என்பது பற்றிய தகவல்களைக் கொடுக்கவில்லை. ஓரிரு இடங்களில் மட்டுமே குறியிட்டு திருவாலங்காட்டு செப்பேடு என்று குறிப்பு இருக்கிறது.
இந்தப் படைப்பின் நோக்கம் என்ன?இத்தனை போராட்டத்திற்கு பின் நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை தமிழர்கள் கலை உணர்வோடும், பக்தி உணர்வோடும் அணுக வேண்டும் என்பதா? கோயில்களை கற்றளிகளாக அமைத்த அரசர்கள் தங்கள் அரண்மனைகளை நிலைத்திருக்க செய்யவில்லை என்பதிலிருந்து அவர்கள் கொண்டிருந்த பக்தி உணர்வை சொல்வதா?
வராலாற்றுப் புதினத்தை எழுதும்போது எத்தனை தரவுகள் சரியாக இருக்கின்றன; வரலாற்றை மாற்றிச்சொல்லாத பொறுப்புணர்வோடு எழுதப்படுகின்றன என்பது மிகமுக்கியமாகிறது.
திரு.பாலகுமாரனின் உடையார் ராஜராஜசோழனின் சிவபக்தி எப்படி எல்லாம் சோதிக்கப்படுகிறது என்பதாக அரசனின் மனஉணர்வுகளையும், இத்தனைப்பெரிய கோயிலை நிர்மாணிக்க அரசனோடு தோள்கொடுத்த அநிருத்த பிரம்மராயர், பஞ்சவன்மாதேவி, ராஜேந்திர சோழர், கருவூர் தேவர் என்று அனைவரின் கதாப்பாத்திரங்களையும் நயம்பட சொல்லியிருக்கும்.
உடையார் எழுதப்பட்ட பிறகு இன்னும் அதிகம் பேர், மாதந்தோறும் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் பயணமாக தஞ்சைக்கோயிலை ரசிக்க வருகின்றனர்.
திருமுறை என்பது தேவாரம் மட்டுமல்ல. திருமுறைக்கண்ட சோழன் எழுப்பிய தஞ்சை பெரியகோயிலுக்கு தேவாரப்பதிகங்கள் என்று ஒன்றும் இல்லை. காலத்தால் பின்தங்கியதால் மூவர்ப்பாடல்கள் இந்தத் தலங்களுக்கு அமையவில்லை. அந்தக்குறையைத்தீர்க்குமாறு, கருவூர்த்தேவர் ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடல்களில், பல சோழர்காலக்கோயில்களைப்பற்றிப்பாடியுள்ளார்.
பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்
பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப்
புகுந்ததோர் யோகினிற் பொலிந்து
நுண்ணியை யெனினும் நம்பநின் பெருமை
நுன்னிடை யொடுங்கநீ வந்தென்
கண்ணினுண் மணியிற் கலந்தனை கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
இம்மாதிரிப்பாடல்கள் பற்றிய நிகழ்வுகள் புனைவுகளை சேர்த்திருந்தால் கூட இன்னும் அழகாக இருந்திருக்கும்.
கவிஞரான வெண்ணிலா, கதையின் போக்கில் ராஜேந்திரனுக்கும் வீரமா தேவிக்குமுண்டான காதலானத் தருணங்களை, நார்த்தாமலை சுனைகள், கிள்ளைப்பகுதியின் படகு என்று, கவித்துமாகவே எழுதியிருக்கிறார்.
கருவூர் தேவர் வயதில் மூத்தவராக வயோதிகத்தை அடைந்ததவராக ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போகிறார். அது ஏன் என்று தெரியவில்லை. அவர் ராஜராஜனுக்கு மட்டும் அல்ல, அவர் மகன் எழுப்பிய ஆலயத்திற்கும் சேர்த்துதான் பதிகம் பாடியிருக்கிறார்.
கண்டராதித்தர் திருவிசைப்பா பாடிய புலவர். கருவூர் தேவரும் அப்படித்தானே. ஏன் ஒருவரை மட்டும் சொல்லி, ஒருவரை விட வேண்டும்?
துறவிகள் என்று வந்து போகும் கதாபாத்திரங்கள் யாருக்கும் சமநோக்கு பார்வை இல்லை- சதுரத்தடிகள், சர்வசிவபண்டிதர் என்று எல்லாருக்கும் அவரவர் கருத்தைப்பற்றிய பிடிப்பு இருக்கிறது. உதாரணம் :”கருவூர்த்தேவர் கம்மாளர் என்று சர்வசிவபண்டிதர் சொன்னாராம்”. அதனாலேயே அவர்கள் அழுத்தமான கதாபாத்திரங்களாக இல்லை.
அநிருத்த பிரம்மராயரின் மகன், ராஜேந்திரரரின் அமைச்சராக்கத்தொடர்ந்தார். அவர் கதாபாத்திரம் என்று ஒன்றும் பெரிதாகச் சொல்லப்படவில்லை.
அணுக்கி பரவை நாச்சியார் திருவாரூர் கோயிலுக்குக்கொடுத்த கொடைகள் மிக அதிகம். அவரை ஆழித்தேரில் ஏற்றி வலம் வந்தார் என்பது நிச்சயம் சொல்லப்படவேண்டிய வரலாற்று நிகழ்வு. பாராட்டுக்கள்!
பதிகங்கள் வேதங்களுக்கு மாற்றானவை என்று எங்கும் திருமுறையை எழுதிச் சென்றவர்கள் சொல்லவில்லை. அவர்கள் கருத்தில் குறுகிய எண்ணம் இல்லையோ என்னவோ, அதனால் தான் காலம் செல்லரித்தாலும் எத்தனையோ நூற்றாண்டுகளைத் தாண்டி இன்றும் நாம் தேவாரங்களைக் கேட்கிறோம்.
ஓரிரண்டு தேவாரப்பதிகங்களை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
- திருஞானசம்பந்தரின் காலம் ஏழாம் நூற்றாண்டு. அவரின் பதிகங்கள் தான் முதல் மூன்று திருமுறையில் இருக்கின்றன. “மறையுடையாய்” (திருநெடுங்களம் தேவாரம்), அங்கமும் நான்மறையும் அருள்செய்து (திருபாதாளீஸ்வரம் தேவாரம்) என்று பல இடங்களிலும்,மறைகளாக இருக்கிறார் சிவபெருமான் என்கிறார் திருஞானசம்பந்தர்.
- இது திருச்சிவபுரம் அப்பர் தேவாரத்தில் வரும் வரிகள்
- வடமொழியும் தென்தமிழும் ஆனவன் காண்.
- (வைத்தீஸ்வரன் கோயில்- புள்ளிருக்கு வேளூர் அப்பர் தேவாரம்)
- மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான்
- மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
- திருஞானசம்பந்தரின் “திருவிருக்குக்குறள்” என்று ஒரு விதமான பதிகங்கள் இருக்கின்றன. ரிக் வேதத்தில் இருப்பதைப்போன்ற கருத்திலும், ஒலியிலும் எழுதப்பட்டவை.
- தேர் போன்ற வடிவிலான செய்யுள் அமைப்பு, மாலைமாற்றுப்பதிகம்(Palindrome) போன்ற தமிழில் செய்யுள்களின் சிறப்பை எடுத்துக்காட்டும் பலவற்றுக்கும் நமக்கான நல்ல உதாரணம் சம்பந்தரின் பதிகங்கள்.அவற்றின் செறிவுக்கு ஒரு காரணம் அவர் சிறுவயதிலேயே கற்கவேண்டியவற்றைக்கற்று, தமிழோடு மற்ற மொழிகளிலும் நல்ல தேர்ச்சி அடைந்திருந்தார் என்பது தான்.
எனக்கு இன்னொரு ஏமாற்றம், பஞ்சவன் மாதேவி என்ற ஒரு கதாபாத்திரமே இல்லை. பஞ்சவன் மாதேவிக்கு பள்ளிப்படைக்கோயில் பட்டீஸ்வரத்தில் இருக்கிறது. , ராஜேந்திர சோழனை தன் மகனாய் பாவித்தவர். இவருடைய பள்ளிப்படைக்கோயில் ராஜேந்திர சோழனால் எழுப்பப்பட்டது.
https://veludharan.blogspot.com/2016/10/panchavan-maadevi-pallipadai-ponniyin.html
தனக்கு மகன் வேண்டாம் என்று ஏதோ மருந்தைக்குடித்தவர் என்று அவரைப் பற்றி சொல்கிறார்கள்.
ஹிரண்யகர்ப்பம் என்றால் என்ன?
இது சுந்தரகாண்டத்தில் (கம்பராமாயணத்தில்) வரும் பாடல்.
ஈன்றானை ஈன்ற சுவனத்தனி அண்டம்: ஹிரண்யகர்ப்பம்.
பிரளயக்காலம் வந்து எல்லா உயிர்களும் அழிந்தபிறகு உலகம் எப்படித்தொடங்கும்? தங்கநிறத்தினால் ஆன முட்டையிலிருந்து பிரம்மன் பிறக்கிறான் என்று ரிக் வேதம் சொல்கிறது. ஹிரண்யகர்ப்பர் என்ற சொல் பிரம்மனை குறிக்கும். இந்தியா மட்டுமல்ல, உலகின் பழைய நாகரிகங்கள் (எகிப்து உள்பட), எல்லாருக்கும் இந்த அண்டம் மாதிரியான கருத்துகள் உண்டு.
சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தாலும், ஹிரண்யகர்ப்பம் அந்தணர்களுக்கு எதிராக ஒரு வெறுப்பைக் கிளப்பும் முயற்சியாகத் தோன்றுகிறது.
வருணாசிரமம் சரி என்று வாதாடவில்லை.வெறுப்பை வளர்க்கும் முயற்சிகள் வேண்டாம். திருமுறையில் பாதிக்குப்பாதி பாடல்கள், அந்தணர்களாக வளர்ந்த, சம்பந்தரும் சுந்தரரும் எழுதியவை. நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்துக் கொடுத்தார். அவர் எழுதிய திருவிரட்டை மணிமாலை உள்பட பலவும் பதினோராம் திருமுறையில் அடங்கும்.
சரியான புரிதல் இல்லாமல் எழுதப்பட்ட வரிகள்
- அத்தியாயம் 5:
வடநாட்டுப்பார்ப்பனர்கள் வேதங்கள் சொல்லிப்பூசைகள் செய்யச்ச்சொல்கிறார்கள். நாங்கள் தேவாரமும், திருப்பதிகங்களை ஓதி பூசை செய்கிறோம். எங்களுடைய குரலைக்கேட்டுத்தான் இறைவன் கண் விழிப்பார்.
சிதம்பரம் கோயில்-திருப்பெற்றப்புலியூர், காலத்தால் மிகமிக பழமையானது. தேவாரம் பாடிய மூவரும், மணிவாசகப்பெருமானும் நான்கு வாசல்கள் வழியாக வந்துத்துதித்த பெருமை கொண்டது. தேவாரங்கள் காலத்துக்கு முன்பிருந்தே வழிபாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகம விதிப்படி கட்டப்பட்ட ஆலயம்.இந்தப்புதினத்தில் சொல்வது போல மனித உடலின் அமைப்போடு சம்பந்தம் உடையது.
நமக்கு உள்ள சிக்கல் இது தான். வேற்றுமையையும், பிரிவையும் வளர்க்கும் நோக்கத்தில் எழுதுவோம் என்றால், நமக்கு தேவாரத்திற்கு முன்னர் கோயில்களில் தமிழில் என்ன வழிபாடுகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் இல்லை.
வடநாட்டு பார்ப்பனர்கள் எட்டுகாலப்பூஜைகளையும் எடுத்துக்கொண்டார்கள் (பக்கம் 65):
கச்சிப்பேடு கடிகை காலத்தால் பழையது. வடமொழியை ஆதிநகர் அரசன் காஞ்சிபுரத்தில் படித்தான் என்று இந்தப்புதினம் குறிப்பிடுகிறது. அம்மன் கோயிலுக்கு காமக்கோட்டம் என்று பெயரிடுங்கள் என்று ராஜேந்திரர் சொன்னதாக ஒரு இடத்தில் வருகிறது. காஞ்சிபுரம் கோயில் தான் காமக்கோட்டம்.காஞ்சிபுரம் காமாட்சி சங்க இலக்கியகாலத்திலிருந்தே இருக்கிறார். வடமொழியும், வடமொழியில் பாண்டித்தியம் உள்ள அந்தணர்கள்/பார்ப்பான்கள் அப்போதிலிருந்தே இருந்திருக்கிறார்கள்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
இந்தத் திருக்குறளில் கூட பார்ப்பான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
- அத்தியாயம் 14:
“எதற்கு வேதம் ஓத வேண்டும்? இறைவனைத் துதிக்கத் தேவாரப்பாடல்கள் இருக்கையில் , வேதமும் மந்திரமும் எதற்கு?” சர்வசிவபண்டிதர்
வீரமாதேவி பாகூர் பள்ளியில் யஜுர் வேதம் மூன்றாண்டுகள் படித்துவிட்டு, தன் கல்வியை எண்ணாயிரத்தில் தொடரப்போராடுகிறாள். அவள் சொல்கிறாள் ” வேண்டுமென்றால், தேவாரப்பாடல்களைச் சொல்கிறேன்”.
யஜுர் வேதத்தில் அவளுக்கு உண்மையில் ஈடுபாடு இருக்கிறதா என்று அறிய அவள் அது வரை மூன்றாண்டுகள் படித்ததைதானே சோதிக்க வேண்டும். ஏன் அவள் தேவாரப்பாடல்களைச் சொல்ல வேண்டும்?
திருக்குறள் மற்றும் தேவாரத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று புரிந்துக்கொள்ளாமல் எழுதுவது எப்படிச் சரியாக இருக்கும்?
அந்த காலகட்டத்தில் பன்மொழிப்புலமை என்பது பரவலான ஒன்றாக இருந்திருக்கிறது.
இன்றைய தமிழ்ச்சமூகம், இணையவழி பின்னூட்டங்களைக் கவனிக்கும் கூட்டமாக இருக்கிறோம். எது அறம், எது மறம் என்ற தெளிவு இல்லை. பண்டிதசோழன் என்று பெருமை கொண்டாடினால் மட்டும் தமிழ் வளர்ந்துவிடுமா?
ஏனோ பக்தியாக இருந்தத்தொண்டர்களை முன்னிறுத்தி, எழுப்பிய தாராசுரம் கோயில் கண் முன்னர் வந்துபோனது. ராஜேந்திர சோழருக்குப்பின்னால் நூற்றி முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் வந்த அரசன். புறக்கணிப்பின் சாயலாக இல்லாமல், தொண்டர்களின் மேன்மையை சொல்லும் சிற்பங்களைப்படைத்து விட்டு போய்விட்டார்.
கங்காபுரத்தின் சிற்பம் சண்டேஸ்வர பிரமாணம் பலருக்கும் தெரியாதத்தகவல். பலரும் அறிந்த/பார்த்த சிற்பத்தைப் பற்றிய தெளிவைக்கொடுத்தார் வெண்ணிலா.
மொத்தத்தில் கங்காபுரம் நல்ல வாசிப்பு அனுபவம். பலவரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய புதினம். ஆனால் உண்மையைச் சரியாக உணர்ந்து கொள்ளாமல் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இனி வரும்காலங்களில் கங்காபுரம் போன்ற கோயில்கள் அமையுமா என்பது தெரியாது. தமிழர்களுக்கு நம் புராதனக் கோயில்களை நல்லபடியாக பராமரிக்க அவற்றின் மகத்துவத்தைச் சொல்வதே புனைவு எழுதுபவர்கள் செய்யும் சேவையாக அமையலாம். ***
வித்யா அருண் எழுதியுள்ள விமர்சனத்தில் எழுப்பியுள்ள கேள்விகளில் பதில் கூறத் தகுந்தவற்றுக்கு என் விளக்கங்கள் கீழே;
1.மரங்களைத் தேர்வு செய்தல், கோயிலுக்கான இடத்தைத் தேர்வு செய்வது போன்ற தகவல்கள், பல்வேறு சிற்ப சாஸ்திர நூல்கள், கோயில் கலை தொடர்பான நூல்கள் வாசிப்பின் தொகுப்பு. குறிப்பிட்ட செப்பேடு, தனித் தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் எனில் அதைக் குறிப்பிட்டு இருக்கிறேன்.
2.கருவூர்த் தேவர், சர்வசிவ பண்டிதர் போன்றவர்கள் அடியார்களாக இருந்தவர்கள்தானே தவிர துறவிகள் இல்லை. துறவிகள் எனில் அவர்களுக்கு அரசு அதிகாரத்தில் என்ன வேலை? தமிழகப் பேரரசுகளின் வரலாற்றிலும் வட இந்திய ஆட்சியாளர்களின் வரலாற்றிலும் சொல்லப்படுபவர்கள் ஆன்மீக நெறியைப் பின்பற்றிய அடியார்கள்தான். ராஜகுரு என்ற அடைமொழியுடன் அவர்கள் அரசாங்க நடைமுறைகளில் பெரிதும் தலையிட்டு இருக்கிறார்கள். அரசனைப் பாதுகாக்க வேண்டுமென்று நினைத்துச் செயல்படும்போது அவர்களுக்கு எப்படிச் சமநோக்குப் பார்வை இருக்க முடியும்? அதிகாரப்போட்டியை வீழ்த்தும் போரில் அவர்களும் சார்புகளோடுதான் இருந்தார்கள். சார்புகளற்ற அடியார்கள் நம் மரபில் இருந்த்தில்லை. சைவம் காக்க சமணத் துறவிகளைக் கழுவேற்றிய அடியார்கள், குலத்தில் புலையன் என்பதற்காக கோயிலுக்குள் நந்தனாரை மறுத்த அடியார்கள், சைவத்தை வீழ்த்த அரசியல் சூழ்ச்சி செய்த சமண அடியார்கள், பௌத்தம் காக்க, சமணத் துறவிகளை விரட்டிய பௌத்த அடியார்கள்… எனச் சார்பு கொண்ட மத அரசியலும், அரசாட்சியுமாகப் பிணைந்தே வந்திருக்கிறது நம் மரபு.
கங்காபுரத்தில் வரும் சதுரத்தடிகளுக்கும், சர்வசிவ பண்டிதருக்கும் சார்பு இருக்கிறது. ஒருவர் நேரடியாக ராஜேந்திரனின் நிழலையும் காக்க நேரடியாக களத்தில் நிற்பவர். மற்றொருவர், ராஜேந்திரனின் உள்ளுறையும் மனசாட்சிப்போல் இயங்குகிறவர். ராஜேந்திரனின் வெற்றிகளைக் கேள்வி கேட்டாலும், உண்மையான வெற்றி எதுவென வழிகாட்டுபவராகப் பின் தொடர்பவர். நீங்கள் குறிப்பிடும் கருவூர்த் தேவர், அநிருத்திய பிரம்மராயர் போன்றோர் கங்காபுரத்தின் காலகட்டத்தில் முதுமையின் காரணமாக அரசாட்சியில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். என் நாவலுக்குள் அவர்கள் வந்தே ஆக வேண்டும் என நான் தீர்மானிக்கவில்லை. ‘அநிருத்திய பிரம்மராயரை அருமையாகக் கடந்து சென்றிருக்கிறீர்கள்’ என்ற வாசகப் பாராட்டும் வந்திருக்கிறது.
3. சோழ சாம்ராஜ்யத்தின் பரந்து விரிந்த எல்லைப்போல், எண்ணற்ற நாயகர்களும் அதிகம். தன் பிரதிக்கு உகந்த கதாபாத்திரம் யாரென்று புனைவு எழுத்தாளரே தீர்மானிக்கிறார். வந்தியத் தேவன் பெயர் சோழ வரலாற்றில் ஒரே ஓரிடத்தில் மட்டுமே இருக்கிறது. கல்கி வந்தியத் தேவனை சோழ சாம்ராஜ்ஜியத்தின் நாயகத்தன்மை கொண்ட கதாபாத்திரமாக்கி இருப்பார். ஏன் வந்தியத் தேவனுக்கு தேவையற்ற முக்கியத்துவம் என்று கல்கியைக் கேட்க முடியாது. அப்படித்தான் கங்காபுரமும். என் பிரதிக்கு யார் முக்கியமோ அவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்திருக்கிறேன். ராஜேந்திரனுக்குப் பத்துக்கு மேற்பட்ட மனைவிகள். பட்டத்தரசி முக்கோக்கிழானடிகள்கூட என் நாவலில் கடந்து செல்கிற கதாபாத்திரம் மட்டுமே. என் கதைக்களன் அகப்போராட்டம். அந்த அகப்போராட்டத்தின் வலைப்பின்னலுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் நாவலில் வலுவாக இருக்கிறார்கள். லோகமாதேவி சிறந்த உதாரணம்.
4. பதிகங்களுக்கு வேதங்கள் மாற்று என்று எழுதியவர்கள் யாரும் சொல்லவில்லை. பதிகங்களின் இடத்தை வேதங்களும், வடமொழி மந்திரங்களும் எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது நாம் காணும் நிதர்சனம். அந்தணர், பார்ப்பனர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் இருப்பதற்கு ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன. என் நாவலில் அந்த வேறுபாட்டை தெளிவாகவே கையாண்டிருப்பேன், தமிழ் அந்தணர்கள் என்று தமிழக அந்தணர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். பல்லவர்கள், சோழர்களின் ஆட்சியில் வடநாட்டு பார்ப்பனர்கள் தமிழகத்தில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். சைவ வழிபாட்டு நெறிகள் தமிழகத்திற்கு அறிமுகமானதோடு, கோயில் ஆகம வழிபாட்டு நெறிகளும் வழக்கத்திற்கு வந்தன. வடநாட்டுக் கோயில்கள் ஆகம நெறிப்படி கட்டப்பட்டதில்லை. தென்னிந்தியாவில் மட்டுமே ஆகம நெறிப்படிக் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. எவ்வாறு இது நிகழ்ந்தது? பின்னணி என்ன? மிக நீண்ட ஆய்வு தேவைப்படும் இடமிது.
தில்லையின் ஆதித் தொன்மத்தைச் சரியாகவே கையாண்டுள்ளேன் நாவலில். நீங்கள் குறிப்பிடும் வரியில் என்ன பிழை? தேவாரம், பிற திருப்பதிகங்களும் ஏற்கெனவே பாடப்பட்டு வந்தன என்றுதானே இருக்கிறது?
4. எந்த ஒரு நடைமுறையும் தொடங்கப்பட்ட நிலையிலேயே இருக்கும் என்று சொல்ல முடியுமா? காலப்போக்கில் எத்தனையோ மாற்றங்கள், புதிய அர்த்தங்கள் அதில் வந்து சேரும். ராஜராஜன் தன் எழுபதாவது வயதில் ஹிரண்ய கர்ப்பம் செய்தார் என்றொரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. லோகமா தேவி, குழந்தை வரம் வேண்டியே அதில் பங்கேற்றிருக்கிறார். இதில் வெறுப்பை வளர்க்கும் முயற்சி என்ன இருக்கிறது என்று புரியவில்லை.
5. இறைவிகள் இருக்கும் ஆலயமெல்லாம் காமக்கோட்டம்தான். காமாட்சியும் மீனாட்சியும் நம் வழிபாட்டின் ஆதி தெய்வங்கள். சிறு தெய்வங்கள். அவர்கள் பிற்காலத்தில்தான் காமாட்சியம்மன் என்றும், மீனாட்சியம்மன் என்றும் மாற்றப்பட்டார்கள். காமாட்சியம்மனுக்குத் தனி ஆலயம் இருந்திருக்கிறது. இன்றைக்குள்ள அமைப்பில் அல்ல. இறைவனுக்காகக் கட்டப்பட்ட பெருங்கோயில்களுக்குள், இறைவிக்காகவும் தனி ஆலயம் எழுப்புவதை ராஜேந்திரனே தொடங்கினான். கங்கை கொண்ட சோழீச்சுவரத்தில்தான் இறைவிக்காகத் தனி ஆலயம் முதன்முதலில் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
6. பன்மொழி பயன்பாட்டில் இருந்தது என்பதை யாவரும் அறிவர். கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளில், சரிபாதி சமஸ்கிருத கல்வெட்டுகளும் உள்ளன. பல்லவர், சோழர் செப்பேடுகள் இருபகுதியாக உள்ளன. முதல் பகுதி சமஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டுள்ளது. பிறகு அதே செய்தி, தமிழில் எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் பத்தாம் நூற்றாண்டில்தான் தமிழகத்தில் நுழைந்தது என்று நாவலில் எங்குமே சொல்லப்படவில்லை. தமிழுக்கு மாற்றாக சமஸ்கிருதம் என்று வரும்போது மட்டுமே சிக்கல் எழுகிறது. அப்படியான ஒரு சிக்கலை நாவலில் முன்வைத்துள்ளேன்.
சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை, தேவரடியார் முறைக்குத் தவறாக வித்திட்டவர்கள், பார்ப்பனர்களுக்கு மட்டுமே நிலதானம் கொடுத்தவர்கள் முதலான சோழர்கள் காலம் குறித்து, இன்றைய பார்வையில் முன்வைக்கும் பல புரிதலற்ற கேள்விகளைப் புனைவின் மூலமாகத் தகர்த்துள்ளேன்.
7. கங்கை கொண்ட சோழபுரம் என்ற கலைப் பொக்கிஷம் பொலிவிழந்து கிடக்கிறதே என்ற மனத்துயரத்தில் இருந்துதான் கங்காபுரம் நாவல் கருக்கொண்டது. தமிழர்களின் மரபான கலையும், வாழ்வும் தொலைந்துபோய்விடக் கூடாது என்ற தவிப்பில், அதன் பெருமைகளை முன்னிறுத்தும் தேடலே நாவல் முழுக்கக் கோலோச்சுகிறது. கங்காபுரம் படித்துவிட்டும், நூற்றுக்கணக்கான தீவிர வாசகர்கள் கங்கைகொண்ட சோழபுரம் சென்று வருகிறார்கள். மாதத்திற்கு இரண்டொருவராவது அங்கிருந்து அலைபேசியில் என்னை அழைத்துப் பேசுகிறார்கள்.
ஒரு பிரதியின் மீதான எழுத்தாளர்-வாசகர் விவாதம் என்பது ஆரோக்கியமானது. நுட்பமானதும்கூட. எத்தனை முறை வேண்டுமானாலும், எங்கிருந்தும் ஒரு வரியை எடுத்து விவாதிக்கலாம், பேசலாம். தெளியும்முன் தீர்ப்பு எழுதிவிடக் கூடாது.
’ ‘சரியாக உணர்ந்துகொள்ளாமல் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை’ என்ற வார்த்தை அதிகபட்சம். சிற்பம், ஆகமம், கட்டடக்கலை, சைவ, வைணவ நெறிகள், கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்கள் எனப் பல்லாண்டு உழைப்பிற்குப்பின் எழுதிய ஒரு நாவலில், கருத்து, தகவல் பிழைகள் வராமல் இருப்பதற்காகவே ஓராண்டு உழைத்துள்ளேன்.
திருமதி வெண்ணிலாவின் பதிலுக்குப் பிறகு என் தரப்பில் எந்த மாற்றமும் இல்லை.
• “4. பதிகங்களுக்கு வேதங்கள் மாற்று என்று எழுதியவர்கள் யாரும் சொல்லவில்லை. பதிகங்களின் இடத்தை வேதங்களும், வடமொழி மந்திரங்களும் எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது நாம் காணும் நிதர்சனம். அந்தணர், பார்ப்பனர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் இருப்பதற்கு ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன. என் நாவலில் அந்த வேறுபாட்டை தெளிவாகவே கையாண்டிருப்பேன், தமிழ் அந்தணர்கள் என்று தமிழக அந்தணர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்.”
இது தான் புரிதலின்மையின் உச்சம். என் கட்டுரையில் இறைவன் தான் வேதங்கள் அல்லது மறைகள் என்று தேவாரப்பதிகங்கள் சொல்கின்றன என்று பல உதாரணங்களோடு சொல்லியிருக்கிறேன். பதிகங்கள் வேதங்களைத்துதிக்கத்தான்; அவை மாற்று அல்ல.
வடமொழியும் தென்தமிழுமாக இருக்கிறார் இறைவன் என்று ஒரே தட்டில் இரண்டையும் வைத்து சொல்கின்றன அப்பர் பெருமானின் பதிகங்கள். நமக்கு இருக்கும் சிக்கல் இது தான். தேவாரம் மற்றும் திருவாசகக்காலங்களுக்கு முன்னால் நம் ஆலயங்களில் தமிழில் இருந்த வழிபாட்டுமுறைகள் என்ன? இதற்கு பதில் கொடுக்கப்படவில்லை.
வடநாட்டுப்பார்ப்பனர்கள் தென் நாட்டு தமிழ் அந்தணர்கள்- இந்த வேறுபாட்டைத் தெளிவுபடுத்தியிருப்பதாக சொல்கிறார் வெண்ணிலா. இப்படி வேறுபடுத்துவதால்/யோசிக்க வைப்பதால் இப்போதுள்ள சமூகத்தில் யாருக்கு லாபம்?
புனைவின் மூலம் ஏன் சாதி அரசியல் செய்ய வேண்டும்? புனைவின் நோக்கம் அதுவா?
ஆகமவிதிப்படிக்கட்டப்பட்ட பல கோயில்கள் மொகலாயர்கள் படையெடுப்பில் மண்ணுக்குள் போய் விட்டன.
கருவூர் தேவர் இல்லாமல் தஞ்சை ஆலயம் இல்லை. இந்த ஒரு காரணத்திற்காகத்தான் அவருக்கென்று ஆலயத்தில் இன்றும் தனி சந்நிதி இருக்கிறது. துறவிகளுக்கு அரசாங்கத்தில் என்ன வேலை? என்று கேட்கிறார் வெண்ணிலா. துறவிகளுக்கு தவத்தின் பயனாக இருக்கும் நடுநிலைப்பார்வை அரசனை சரியானப்பாதையில் பயணிக்க உதவும்.
நமக்கே சமநோக்கு உள்ள நண்பர்கள் நம் வாழ்க்கை சிக்கல்கலைக்கடக்க உதவும் ஆலோசகர்களாக இருக்கிறார்கள். ஏன் அரசனுக்கு உதவக்கூடாது? கங்காபுரத்தில் அவர்கள் அப்படிப்பட்ட சமநோக்கு கதாபாத்திரங்கள் அல்ல.
உண்மையாக உழைத்தவர்களின் பங்கை விடுவது தான் புனைவா? பஞ்சவன்மாதேவி, கருவூர் தேவர், அநிருத்தரின் மகன் இப்படிப்பலரின் பங்களிப்பை விடுவது எழுத்தாளருக்கு உள்ள சுதந்திரம் என்கிறார். இதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது. இது சரித்திரம் சார்ந்த புனைவு என்றால் தரவுகளும் முக்கியம்.
அங்கங்கே இழையோடிய திருமுறைகள் பற்றிய புரிதல் இல்லாத எழுத்தும், சாதி சார்ந்த பிரிவினைகளும் தான் இந்த விமர்சனத்தை முன்வைக்க முக்கியக்காரணங்கள்.
வித்யா அருண்
திருமதி வெண்ணிலாவின் பதிலுக்கு பின்னால்
என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.
திருமதி வெண்ணிலாவின் பதிலில் (4)பதிகங்களுக்கு வேதங்கள் மாற்று என்று எழுதியவர்கள் யாரும் சொல்லவில்லை என்கிறார் . இது தான் புரிதலின்மையின் உச்சம்.வேதங்கள் தான் இறைவன் என்று பதிகங்கள் சொல்கின்றன.
எத்தனை பதிகங்களை இந்தக்கட்டுரையில் அடையாளமிட்டு காட்டியிருக்கிறேன்?
வடநாட்டு பார்ப்பனர்கள் பின்னர் தான் வந்தார்கள் என்றால் திருமுறைகளுக்கு முன்னால் இங்கே இருந்த வழிபாடு முறைகள் என்ன?
அதை விளக்க வேண்டுகிறேன். திரும்ப திரும்ப தேவாரமும் திருவாசகமும் கங்காபுரத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. வடமொழியும் தென்தமிழுமாக இறைவன் இருக்கிறார் என்கின்றன தேவாரங்கள்.
சாதி ரீதியாக, வடநாட்டு பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்று யோசிக்கவைப்பதில் யாருக்கு லாபம்?
ஆகம விதிப்படி கட்டப்பட்ட பல வடநாட்டு கோயில்கள் முகலாயர் படையெடுப்பில் அழிக்கப்பட்டுவிட்டன. அன்றைய இந்தியா பல அரசுகளைக்கொண்டிருந்தது. அதனால் தான் கோயில்களின் அமைப்பு வெவ்வேறு கலைஞர்களின் கற்பனையில் வேறாக இருக்கிறது.
2.இதுவரை கங்கை கொண்ட சோழனை பற்றி உயர்ந்த அபிப்ராயம் கொண்டவர்களுக்குக்கூட அவன் புறக்கணிப்பின் நிழல் என்ற எண்ணம் தான் இனித்தோன்றும். அதைக்கூட புனைவு என்று விட்டுவிடலாம்.
உண்மையாக உழைத்தவர்கள் சரித்திரம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பது என் தரப்பு. பஞ்சவன்மாதேவி, கருவூர் தேவர், அநிருத்தரின் மகன் இப்படிப்பலரை சொல்லலாம்.
இந்த இரண்டும் தான் இந்தப்புனைவில் இருக்கும் புரிதலின்மை. புனைவின் மூலம் செய்யும் சாதி அரசியல் .இது இப்போது யாருக்கும் எந்த நல்லதையும் செய்யாது.
நன்றி
வித்யா அருண்
பதிகங்களுக்கு முன்னால் தமிழகத்தில் இருந்த வழிபாட்டு முறைகளின் பரிமாணத்திற்குத் தொல்காப்பியக் காலம் தொட்டு உதாரணங்களைச் சொல்லலாம்.
வழிபாட்டிற்கு அடிப்படை பயம். இயற்கையைப் பற்றிய பயம். தன்னைச் சுற்றி நடக்கும் இயற்கையின் மாற்றங்களுக்குப் பொருள் புரியாமல் எழுந்த பயம். மனிதன் தன்னை அச்சுறுத்தும் எல்லாவற்றையும் வணங்கியிருக்கிறான். மரம், காற்று, மழை, நெருப்பு, பாம்பு என்று பட்டியல் பெரிது. பெண்ணின் மாதவிடாய் ரத்தம்கூட வணக்கத்திற்குரிய ஒன்றாகவும் இருந்திருக்கிறது, எவ்வாறு மாதவிடாய் நிகழ்கிறது என்ற புரியாத அச்சத்தினால்.
தன்னைக் காக்கும் பொறுப்பைத் தன்னைத் தவிர வேறொரு நபரிடம் கொடுக்கும் மன ஆறுதல் மனிதனுக்குத் தேவையாக இருந்தது. தன் உலகியல் அறிவுக்கு எட்டாத, ஐம்புலன்களுக்கும் அகப்படாத சில கேள்விகளுக்கு விடை தேட முற்பட்ட மனிதன்தான் கடவுளைக் கண்டறிந்தான். கடவுளைக் கண்டறிந்த நம்பிக்கையில்தான் அச்ச உணர்வில் இருந்து மீண்டான்.
கடவுளை வழிபடும் முறைகள் கடந்து வந்துள்ள பாதைகள் கூட சுவாரசியமானவை. உலகம் முழுக்க இருக்கும் பழங்குடிகள் இயற்கையைத்தான் வழிபடுகிறார்கள். கடவுளுக்கும் தனக்கும் இடையில் வேறொருவரை அனுமதிக்காத வழிபாடே ஆதி வழிபாடு. அதில் தன் விருப்பப்படி கடவுளிடம் பேசலாம். கோரிக்கை வைக்கலாம். நன்றி சொல்லலாம். கோபம் கொள்ளலாம். முழு சுதந்திரத்துடன் இருந்த வழிபாட்டுக் காலம். ‘திங்களைப் போற்றுதும்’ என்று இயற்கையை வணங்கி சிலப்பதிகாரம் தொடங்குவதில் இருந்து, தமிழக வழிபாட்டு நெறியை அறியலாம்.
அரசர்களின் கொண்டாட்டங்கள் கடவுளுக்கு என்று மாற்றப்பட்ட காலத்தில்தான் வழிபடுபவருக்கும் கடவுளுக்கும் இடையில் மூன்றாவது நபர் வந்தார். மூன்றாவது நபரின் வருகைக்குப் பின், வழிபாடு ஆத்மார்த்தம் என்ற இடத்தில் இருந்து, சடங்குகள், சம்பிரதாயங்கள் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டன.
பேரரசுகளின் எழுச்சியினால் தமிழகத்தில் கற்கோயில்கள் கட்டப்பட்டன. பெரிய பெரிய மூர்த்திகளை உருவாக்கிய பிறகு வழிபாடும் பிரம்மாண்டமாகத்தானே இருக்க வேண்டும்? பாணர்களும் விறலியரும் அரண்மனைகளைவிட்டு, இறைவனின் பெருங்கோயில்களுக்குள் இடம் பெயர்கிறார்கள். இயல், இசை, நடனம் எல்லாம் கடவுளுக்கானது. சமணமும் பௌத்தமும் கடுமையான விதிகளுடன் நின்றதால்தான் சைவ, வைணவ ஆர்ப்பாட்டமான வழிபாட்டு நெறிகளுக்கு முன்னால், நிலைக்க முடியாமல் போயின. மிக நீண்ட, இன்னும் நிறைய ஆய்வுகள் தேவைப்படும் இடமிது.
பதிகங்கள், வேதங்கள் எல்லாமே சடங்குகளின் வெவ்வேறு வடிவங்களே. கலைகள் அதனதன் பங்களிப்புடன் வழிபாட்டின் அங்கங்களாய் இன்று வரை தொடர்கின்றன.
வடநாட்டு பார்ப்பனர்கள் வருகைக்குப்பின் தமிழகத்தின் வழிபாட்டு நெறிகளில் மாற்றம் வந்தது என்பது வரலாறு. அதில் வித்யாவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தமிழர்கள் ஆதிக் காலம் தொட்டு பார்ப்பனர்களின் அடியொற்றிதான் வழிபட்டு வந்தார்கள் என்று நிறுவ விரும்புகிறாரா? இப்படிச் சந்தேகிக்க அவரே குறிப்பும் கொடுக்கிறார். சாதிரீதியாக வடநாட்டு பார்ப்பனர், அந்தணர் என்று யோசிக்க வைப்பதில் யாருக்கு லாபம் என்கிறார். லாபம், நட்டமெல்லாம் இரண்டாம்பட்சம். அதுதான் வரலாறு. வரலாற்றைச் சொல்லும்போது வலிக்கிறது என்றால், வலிப்பவரிடம்தான் பிரச்சனை இருக்கிறது.
சாதிரீதியாக இந்தப் பாகுபாட்டை நாவலில் அணுகாதபோது, நாவலையொட்டிய விவாதமாகக் கொண்டு செல்ல விரும்பினால், வாசகருக்கு அதனால் ஒரு பயனும் விளையப்போவதில்லை.
என் கேள்விகளை இரண்டாவது முறையாக கடந்து செல்கிறீர்கள்.
முதல் முறை பதிலக்கும்போதும் உங்கள் பதில் நீண்டதாய் இருந்ததே தவிர கேள்விக்கு நேரடியான பதில் அதில் இல்லை.
வடமொழியும் தென்தமிழுமாக இறைவன் இருக்கிறார் என்கிறார் அப்பர் பெருமான். அவர் தமிழ்நாட்டின் திருவதிகையில் பிறந்து வளர்ந்தவர். சிறந்த சைவநெறிப் பின்பற்றுபவர்களுக்கு முன்மாதிரி. உழவாரப்பணி அவர் அதிகம் செய்திருக்கிறார். அவருடைய காலமும் கங்காபுரம் உண்டாவதற்கு முன்பு தான். பதிகங்கள் இறைவனை மறைகளாகப் போற்றுகின்றன. நிறைய உதாரணங்களை என் கட்டுரையில் கொடுத்திருந்தேன். அத்தனையும் கடந்து சென்று உங்களுக்கான பதிலாக மட்டுமே விடையளிக்கிறீர்கள். இது எந்த விதத்தில் சரி?
வேதங்கள் பதிகங்களுக்கான இடத்தை எடுத்துக்கொண்டுவிட்டன என்று எனக்குப்பதில் சொல்லி இருந்தீர்கள். இதைத்தான் உங்கள் புதினமும் சொன்னது. பதிகங்கள் வேதங்களுக்கு மாற்று அல்ல என்பதை பல உதாரணங்களில் நிறுவிவிட்டேன். ஒப்புக்கொள்கிறீர்களா? (உங்கள் நீண்ட முதல் பதிலில் நான்காம் பத்தி)
யாமறிந்த மொழிகளிலே என்று ஆங்கிலத்தைத்தவிர, தமிழர்கள் வேறு மொழிகளைப்பற்றி இன்றைய நாளில் சொல்லிக்கொள்ள முடியாது.
ஒரு கவிஞராக நீங்கள் இருக்கிறீர்கள். திருமுறையில் கங்காபுரத்துக்கென பாடல் எழுதி சேர்த்த கருவூர்தேவரைக்கடந்து போய் விட்டீர்கள். உண்மையாக உழைத்தவர்கள் பங்கை இல்லாமல் ஆக்குவதில் உங்களுக்கு என்ன அக்கறை ?
சாதி ரீதியாக பகுத்துக்காட்டி பிரிவினையை உண்டாக்குகிறீர்கள் என்கிறேன். எனக்குப்படிக்கும் போது பல இடங்களில் உறுத்தியது. மனதளவில் உங்களிடம் இருக்கும் அந்தணர்கள் (எ) பார்ப்பனர்களுக்கு எதிரான வெறுப்பு உங்கள் புதினத்தில் தெரிகிறது.
அரைவயிற்றுக்குக்கூட கஞ்சி இல்லையென்றாலும் இறைவன் சேவையை கைவிடாமல், புலால் உண்ணாமலும், நல்ஒழுக்கத்தைப்பின்பற்றுபவர்களாகவும், நல்லதை எடுத்து சமூகத்துக்கு சொல்பவர்களாகவும் எனக்குத்தெரிந்து நிறைய வடநாட்டு/தென்னாட்டு (?) அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் -பெரியவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் உங்கள் வாதப்படி என்று வந்தார்களோ அன்றிலிருந்து அவர்கள் கடைப்பிடித்த பூஜைகளை இன்றளவும் விடமால், சூரியன், விநாயகர், முருகன், அம்பாள், சிவன் என்று உலகுக்காகத்தன்னலமின்றி பிரார்த்தனைகளை பலத்தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கிறார்கள்.
லட்சங்களில் பணம் புரளும் வேலையை உதறிவிட்டு, பெருநெறி பிடிப்பில் கிராமங்களில் உள்ள கற்கோயில்களில் பூஜை செய்யும் இளைஞர்களை நான் அறிவேன்.
உ.வே.சா வீடு வீடாகப்போய் ஓலைச்சுவடிகளை சேகரித்துக்கொண்டு வந்து சேர்த்தது தான் இன்று நம் கைகளில் இருக்கும் பல இலக்கியங்கள். அவர் வடநாட்டு அந்தணரா? தென்னாட்டு பார்ப்பனரா?
அந்தணர்களை குடிபெயர சொன்னால், அவர்கள் அதை அரசனின் ஆணையாக ஏற்று, எந்த ஊரிலிருந்தும், வேறு எங்கும் குடிபெயர வேண்டியக் கட்டாயத்தில் இருந்தார்கள். இன்றைய பன்னாட்டு நிறுவனங்களில் உபரியாக சலுகைகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு வேலைக்காக செல்பவர்களுக்குக்கிடைக்கும் (Expat). அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட நிலதானமும் அப்படித்தான். சேஷாத்திரி ஸ்வாமிகளின் குடும்பமும் அப்படிப்புலம் பெயர்ந்துவந்தவர்கள் தான். அவர்கள் மீது உங்களுக்கு என்ன வெறுப்பு?
என் வாதம் ராஜேந்திரர் காலத்தில் அந்தணர்களை வடநாட்டிலிருந்து குடியமர்த்தியிருக்கலாம். ஆனால் அதற்கு முன்னாலும் வடமொழியிலும் தமிழிலும் புலமையோடு அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள்.
எட்டுகாலப்பூஜையை எடுத்துக்கொண்டார்கள் என்று ஒரு கதாபாத்திரம் சொன்னதாக எழுதியிருந்தீர்கள்.
என் வீட்டில் திங்களை போற்றும் தமிழ்ப்பாடல், அதே பொருளில் உள்ள வடமொழிப்பாடலும், வான்மழை வழாது பெய்க என்னும் வாழ்த்துப்பாடலும் அன்றாடம் பாடப்பெறுகின்றன. எத்தனை தமிழ் வீடுகளில் தமிழில் பாடல்கள் (தொல்காப்பியம் உள்பட) பாடப்படுகின்றன?
இணையம் வந்துவிட்ட இந்த நாளிலும் தமிழர்களில் எத்தனை பேர் பண்டைய நூல்களைத்தேடி படிக்கிறார்கள்? நீங்கள் சொல்லும் தொல்காப்பியமாகட்டும்? மற்ற நீதி நெறி நூல்களாகட்டும்? பக்தி இலக்கியங்களாகட்டும்?
உங்கள் புதினம் தமிழில் உள்ள நல்ல பக்தி இலக்கியங்களை நோக்கி மக்களை நகர்த்தினால் அது சேவை. ஆனால் யார் வடநாட்டு அந்தணர்கள், தென்னாட்டு பார்ப்பான் என்ற ஆராய்ச்சியை உண்டாக்குமானால் பிரச்சனை எனக்கு அல்ல. நீங்கள் தமிழுக்கும் கங்காபுரத்தானுக்கும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உண்மை என்ன என்பதை உங்கள் உள்மனம் அறியும்.
நானும் உங்கள் நூல் விமர்சனத்திற்கென்று உழைத்து, எது சரியில்லை என்பதை கோடிட்டுக்காட்டிவிட்டேன். என் கடன் பணி செய்து கிடப்பதே.
உண்மையை உணராமல் வாதிடும் உங்களுக்கு இனி பதில் சொல்வது என் வேலை அல்ல. அது எனக்கு நேர விரயம் மட்டுமே.