ஒரு மாமரத்தின் கதை…
அகில் குட்டி
புதிதாகச் சேர்ந்த
பள்ளியிலிருந்து
வீடு திரும்பும்
ஒற்றையடி பாதையில்
பூத்துக் காய்க்கும்
அம்மாமரம்..
மாலை நேரங்களில்
அவளுக்கும்
மற்ற வாண்டுகளுக்கும்
வாஞ்சையாய்
மாங்கனிகளை
வாரியிறைத்து
பசியாற்றும்..
குழந்தைகளின்
குதூகலத்தில்
தானும் குழந்தையாகும்..
தாழப் படர்ந்த
கிளைகளை
ஊஞ்சலாக்கி
தாலாட்டும்..
இருள்கவியும் முன்னர்
தத்தம் கூடுசேர
எழுப்பியனுப்பும்..
மறுநாள் மாலைக்காக
இரவும் பகலும்
மரமாகக் காத்திருக்கும்..
ஒரு கரிய மாலையில்
அதன் மடியில்
மதுப்போத்தல்களை
மல்லாத்திக்கொண்ட
ஓநாய்களுக்கு
இரையானாள் அகில்..
வேடிக்கை மனிதராய்
நின்றுவிட்ட அம்மரம்
அதன் பிறகு
பூப்பதுமில்லை..
காய்ப்பதுமில்லை..

வனப்பட்சிக்கான விடியல்
கூண்டுக்குள்
அடைக்கும் முன்னர்
பிடுங்கப்பட்ட
இறக்கைகளை
பத்திரப்படுத்தி
பாதுகாத்து வந்தது
வனப்பட்சி
பிறிதொரு நாள்
பொருத்திக் கொண்டு
வானேகும் பொருட்டு..
நகரத்து நாட்கள் பல
நகர்ந்தனவேயன்றி
அப்பிறிதொரு நாள்
மட்டும் ஏனோ
விடிந்தபாடில்லை ..
யுகங்களாக சேர்ந்த
தூசிகளுக்கு அடியில்
மறைந்து
மறந்தே போனது
வனப்பட்சியின்
பறத்தலுக்கான
ஆயத்தங்கள்…
இரண்டுமே நல்ல முயற்சிகள். அதிலும் இரண்டாவது நன்றாக கனிந்து வந்திருக்கிறது.
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
நன்றாக உள்ளது.
நன்றிகள்