சொம்பு

ஆதவன் கந்தையா

‘டேய், ஆய் வந்தா சொல்லமாட்டியா?’

‘சொல்றதுக்குள்ள வந்துருச்சுப்பா.’

‘செரி, ஓரமா ஒக்காந்து இரு.’

வேலு கரையோரத்தில் அமர்ந்து ஆய் இருக்க அமர்ந்தான். ரெம்ப நேரம் வெறுமனே அமர்ந்திருந்தான்.

‘டேய், என்ன ஆச்சா?’

‘ வர்லப்பா.’

‘ சேரி, எந்திரி வா.’

மலம் ஒட்டியிருந்த டிரௌசரைத் தூக்கிக் கரையோரத்தில் எறிந்தான், சந்திரன். ஆறு தண்ணிர் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. வலதுபக்கம் செல்லும் சாலையில் வாசல் தெளித்த ஈரத்தில் கோலம் போட்டுக்கொண்டிருந்தனர். இந்த சாலை நேராகச் சென்று தேவர் சிலையில் முட்டி, பழமுதிர்சோலை சாலையில் கலக்கிறது. காலைக் குளிரில் நகரம் இன்னும் துயில் கலைய விருப்பமில்லாமல் கண்களை மூடிப் படுத்திருந்தது. அழகர் மண்டகப்படியில் அமர்ந்து நான்கைந்து பேர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்பம் சுடும் சத்தம் கேட்டது. நெருங்கிச் சென்றால் அதன் மணமும் வரும். மண்டகப்படியை அடுத்து முழுவதும் மூங்கில், சவுக்கு சாரம் விற்கும் கடைகள். இன்று விடுமுறை. 

‘ராஜா’ என்ற குரல் அவனுக்கு எதிரே வந்துகொண்டிருந்த பெண்ணிடம் இருந்து கேட்டது. மின்சாரம் பாய்ந்தது போன்ற பரவசத்தை உணர்ந்தான். ராணி வந்துகொண்டிருந்தாள். கையில் தூக்குவாளி இருந்தது. காலையில் மலரும் பூப்போன்ற சிரிப்புடன்.

‘காலங்காத்தால இங்கென்னடா பண்ற, எப்பிடி இருக்க?’

‘சுந்தரி, நல்லா இருக்கயா? எப்டி இருக்க? பையன ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு வந்தேன்.’

வேலு எழுந்து நின்றான். சிரமப்பட்டுக் சட்டையால் அம்மணத்தை மறைக்க முயற்சிசெய்தான். ராணி அவனைப் பாா்த்துச் சிரித்தாள்.

‘பையனுக்கு என்ன, ஒண்ணுதானா?’

‘அவனுக்கு ஏதாவது ஒரு சீக்கு வந்துட்டுதான் இருக்கும், எளப்பு மாறி வரும், வயித்தாலையும்கூட சேந்துக்குருச்சு.’

‘தண்ணி கெடைக்குமா?’

‘வீட்டுக்கு வாடா போவோம்.’

‘இங்கதான் இருக்கீங்களா?’

மூன்று பேரும் மண்டகப்படியை அடுத்திருந்த டீக்கடையை ஒட்டிச் செல்லும் சிறு சந்தில் சென்றார்கள். சந்தினுள் பெண்கள் தூற்றி வாசலை தெளித்துகொண்டிருந்தனர்.  சால்வையை போர்த்தியபடி கிழவனார் கையில் தூக்குடன் எதிரே வந்துகொணடிருந்தார்.

‘ராணி, முத்து இருக்கானா, கொட்டக ஒண்ணு போடனும்னு சொல்லியிருந்தேன். எந்துருச்சுட்டான்னா அவன்ட்ட கொஞ்சம் சொல்லி வையி.’

‘அவரு கடைக்குக் கிளம்புனாருய்யா கறி வாங்க, நான் சொல்றேன்.’

சந்திரனின் மனம் சொல்லமுடியாத உணர்வினால் விம்மியது. கொஞ்சம் பூசுனாப்போல இருக்கிறாள், மற்றபடி அதே சுந்தரிதான். எவ்வளவு நாள் ஆனது. அவள்மீது கோபமே தோன்றாதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளும் எவ்வளவு சகஜமாக நடந்துகொள்கிறாள். அடர்த்தியான தலைமுடியைக் கோடாலிக் கொண்டை போட்டிருந்தாள். சந்தன நிற சேலையில் பொடிப் பொடியாய் அரக்கு நிற வட்டங்கள் போட்ட சுங்கடி கட்டியிருந்தாள். முகத்தைக் கழவிய அவசரத்தில் பொட்டிடாமல் வந்திருந்தாள். கழுத்தில் மஞ்சள் கயிறு  கறுத்துக் கிடந்தது. அவள் சிறுவயதில் இருந்தே நகைகளை அணிவதில் விருப்பமில்லாமல்தான் இருந்தாள். இப்பொழுது வறுமை கூட சேர்ந்துகொண்டதினால், எப்பொழுதாவது மற்றவர்கள் நகை அணிவதைப் பார்க்க மனதில் ஆசை எழும். எழுந்தது போலவே அடங்கிவிடும். இது போன்று மனதினைப் பழக்கப்படுத்தியிருந்தாள். ஆனாலும் அழகாகத்தான் இருந்தாள். அவள் எப்படி இருந்தாலும் அழகாகத்தான் இருப்பாள்.

அந்த சந்தின் நடுவில் வலது பக்கத்தில் இருந்த வாசலில் நுழைந்தனர்.  காம்பவுண்ட் வீடு. நடுவில் கூடம், சுற்றி நான்கு பக்கமும் இரண்டு மாடியில் வரிசை வரிசையான வீடுகள். வீடுகள் எல்லாம் ஒரே கணக்கில். பொதுக் கக்கூஸ் மற்றும் குளிப்பதற்குக் கீழே முறி இருந்தது. இரண்டு கிணறு உண்டு. வாசலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் ஒன்று, மற்றது துளசி மாடம் இருந்த நடுக்கூடத்தை ஒட்டி. காம்பவுண்ட்க்காரர்கள் துணி காயப்போடுவதும் அங்குதான். அதுபோக வராண்டிவிலும் கொடி காயப்போடக் கம்பிகள் உண்டு. வரிசையாக துணி காயப்போடும் கொடிகள் தொங்கின. ஒரு நடுத்தர வயது அம்மாள், தலையில் ஈரமான துண்டைச் சுற்றிபடி துணியைக் காயப்போட்ட வாளியை எடுத்துக்கொண்டு மாடி ஏறிக் கொண்டிருந்தாள். சிவப்புச் சேலை கட்டியிருந்த அம்மாள் துளசி மாடத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தாள். மெல்லிய விடியலின் ஔி வெளியே பரவியிருந்தது, மேல் வானம் வழியாக வழிந்ததில் காம்பவுண்ட்டின் இரவு உறக்கத்தைக் கலைக்க முடியவில்லை. 

‘ஏண்டி ராணி, ஒன் வீட்டுக்காரன்ட்ட சொல்லுடி, வாடகைய எப்பதான் தருவீங்க, நானும் என் வீட்டுக்காரரும் கேட்டு ஓஞ்சுபோறோம், எனக்கே சங்கடமாத்தாம்மா இருக்கு, மாசாமாசம் இப்டி கேக்க. இவுக யாரு, அதென்னடாப்பய்யா, இப்படி வந்து நிக்கிற’ என்றாள். இப்பொழுதுதான் குளித்து வந்திருப்பாள்போல, மஞ்சள் பூசிய முகத்தில் காலையின் குளிரும் ஈரமும் படிந்து சாந்தமாக இருந்தது.

முடிந்தளவு வாசலை ஒட்டிய கிணற்றின் ஓரத்தில் இருந்த இருட்டுக்குள் தன்னை மறைத்து நின்றான் வேலு.

‘ரெண்டு நாளுல கொடுத்துறோம்மா’ என்றபடி மேலேறிச் சென்றாள் ராணி. அந்த அம்மாள் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துத் தலையைத் துவட்டினாள்.  முன்புறமாகக் குனிந்து துண்டைக்கொண்டு முடியில் காற்றைக்கொண்டு ஓங்கி ஓங்கி அடித்தாள். நிமிரும்பொழுது வலது கையால் தலைமுடியைத் தூக்கி முன்னால் போட்டுவிட்டு மார்பிலிருந்து விலகியிருந்த சேலையை வைத்து மார்பை மறைத்தாள். காதை ஒட்டிப் படிந்த முடிகளை ஒதுக்கிவிட்டபடி,

‘பையனுக்கு என்னா, மேலுக்கு முடியலையா?’ என்றாள்.

‘ஆமாம்மா, பெரியாஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு வந்தோம், வயித்தால வேற, தண்ணியில்ல.’

‘பித்தமா இருக்கும், தெனோ காலையில அஞ்சு மணிக்குத் தலையத் தேச்சு குளுச்சிட்டு, கொஞ்சம் வெந்தயங் கொடுங்க, வெறும் வயித்துல. நல்லா மென்னு சாப்ட்டோனே, நீராரத்தண்ணியக் கொடுங்க, பித்தமெல்லாம் பறந்துரும்.’

ராணி வாளியை எடுத்துவந்து கொடுத்தாள். சந்திரன் தண்ணீர் இறைத்துக் கொடுக்க வேலு கழுவி முடித்தான். ராணியின் வீடு இரண்டாவது மாடியில் இருந்தது. மாடிக்கு செல்வதற்கு இரண்டு பக்கமும் படி இருந்தது. வலதுபக்க மாடிப்படியில் ஏறிச்சென்றால், ராணியின் வீட்டை அடையலாம். மேலேயிருந்து துண்டைத் தூக்கிப் போட்டாள். துடைத்துவிட்டு, அதையே கட்டிக் கொண்டான். 

‘ராஜா, மேலே வாடா’ என்றாள்.

வெள்ளைப் பெயின்ட்டில் கோலம்போட்டு நடுவில் சிப்பியைப் பதித்திருந்தனர், அவர்கள் வீட்டு வாசலில். பொங்கலுக்குச் சொருகிய கூரைப்பூவும், வாசலில் கட்டியிருந்த மாவிலைத் தோரணமும் வதங்கிப் போயிருந்தன. அரக்கு நிற வண்ணம் அடித்திருந்த தரை குளிர்ச்சியாக இருந்தது. நுழைந்தவுடன் அடுப்படி. ஒரு திண்டு, அதில் மண்ணெண்ணெய் அடுப்பு இருந்தது. அதையொட்டிக் கழுவிய பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வலது பக்கத் திண்டில் பானைமேல் செம்புச் சொம்பிருந்தது. மிக ஒழுங்காக அடுக்கப்பட்டுச் சுத்தமாக இருந்தது அடுப்படி. அடுப்படித் திண்டுக்கு மேலே எறிந்து கொண்டிருந்த குண்டு பல்பை அணைத்தாள் ராணி. அடுப்படியில்  மூன்று சேர் போட்டு அமர்ந்து பேசலாம். இரண்டு சேர் போட்டால் ஒருவர் சமைத்துக்கொண்டு திண்டில் சாய்ந்தபடி பேச வசதியிருந்தது. கதவையொட்டிய சுவறோரம் அமருபவர் அடிக்கடி கொஞ்சம் அசைந்து கொடுத்தால் மட்டுமே உள்ளேயிருந்தும் வெளியே இருந்தும் ஆட்கள் சென்று வரமுடியும். அந்த சுவரின் வான் நீலநிறத்தில் கருப்புக் கறை படிந்திருந்த தடத்தை ஒட்டிச் சந்திரன் அமர்ந்தான். தலைக்கு மேலே மாட்டியிருந்த போட்டோவை முன்னால் சென்று எக்கிப் பாா்த்தான். ராணியின் அம்மாவும் அப்பாவும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் குங்குமம் வைத்து மரிக்கொழுந்து மாலை தொங்கியது. அதற்குப் பக்கத்தில் ராணியின் கல்யாணப் புகைப்படம். கொஞ்ச நேரம் அதையே பாா்த்தான். அதையொட்டிய அடுத்த அறையில் இருந்து ஃபேன் ஓடும் சத்தம் கேட்டது. படுக்கையறை. அதுவே விருந்தினர் அறையாகவும் இருந்தது. உள்ளே குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தனர். 

‘எத்தன கொழந்தங்க’

‘ரெண்டு, மூத்தவ எட்டாவது படிக்கிறா, சின்னவன் ஆறாவது’

‘எந்த ஸ்கூலு’

‘கிரவுன் ஸ்கூலுல’

‘கோரிப்பாளையம் தர்காக்கிட்ட இருக்கே, அதுவா’

‘ஆமா, அங்கதான், நீ எப்படி இருக்க, பைய்யேன் எங்க படிக்கிறான், டீ சாப்பிடுங்க,’ என்று இரண்டு கிளாஸில், தூக்கில் வாங்கிவந்த  டீயை ஊற்றிக் கொடுத்தாள். 

‘தண்ணீ’ என்றான் வேலு.

தண்ணீர் கொடுத்தாள். சொம்பு பளபளவெனனறு பெரியதாக இருந்தது. வேலு இதுபோன்ற சொம்பைக் கண்டதில்லை. நல்ல அரக்கு நிறத்தில். ஒரு பொத்தலும், நெளிவும் இல்லாமல் சொம்பு இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இதுவரை அவன் பாா்த்த சொம்பெல்லாம் ஏதேனும் வகையில் பங்கம் அடைந்திருக்கும். யார் வீட்டில் எந்தச் சண்டை வந்தாலும் முதலில் சொம்புதான் பறக்கும். அதில் குடிக்கத் தெரியாமல் மேலே சிந்திக்கொண்டான்.

‘சந்தோஷமா இருக்கியா சுந்தரி, பாத்து எவ்வளவு வருசம் இருக்கும், பத்து பதினைஞ்சுகூட இருக்கும், அப்படியேதான் இருக்க’ என்றான்.

‘எனக்கென்னத்த இருக்கு, அது பாட்டுக்க ஓடுது, நீ ஆளே மாறிட்ட, பொண்டாட்டி எந்த ஊரு?’

‘பெங்களூரு’

‘பெரிய்ய ஆளாயிட்டேய்டா, ஏன் இந்த ஊருக்காரிகள்ளா கெடைக்கலையா, தமிழா கன்னடமா?’

‘தமிழுதான், நமக்கு தெரிஞ்சவன்ங்கதான், ஒரு வகையில சொந்தம்தான்’

‘அத்த மாமால்லா எப்டி இருக்காங்க’

‘ஆத்தா நல்லாத்தான் இருக்கு, அப்பாவுக்குத்தான் கொஞ்சம் ஒடம்பு முடியல, ஒனக்குதான் தெரியுமே, அதே கததான்’ என்றபடி டீயைக் குடித்தான். 

‘என்னா பண்ற?’

‘டெய்லர் கட போட்டுருக்கேன், செல்லையா அண்ணன் கட தெரியுமா, அதுக்கு ரெண்டு கட தள்ளி.’

இருட்டாக இருந்த உள் அறைக்குள் சென்றாள். வேலு சுற்றிச் சுற்றி பாா்த்துக் கொண்டிருந்தான். சுத்தமாக இருந்தது. உள் அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்களைப் பாா்த்ததும் ஏக்கமாக இருந்தது. வந்துகொண்டிருந்தவள் போர்வையை எடுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது போா்த்திவிட்டு பெண்ணின் உடல் முழுதாக மறைத்துவிடும்படி விட்டுவந்தாள். வரும்பொழுது வேலுவையே பாா்த்தபடி,

‘இந்தா இதப் போட்டுக்க, பேரு என்ன?’

‘வேலு’

‘சரியா இருக்கா, சின்னவனோடது, ஒனக்குக் கொஞ்சம் தொளதொளன்னுதான் இருக்கும்.’

கொஞ்ச நேரம் சும்மாவே அமர்ந்திருந்தனர். இருவரும் மாறி மாறிப் பாா்த்துக்கொண்டு கண்களை உற்றுப் பார்க்கமுடியாமல் தலையை திருப்பிக் கொண்டனர். சந்திரன் மிடி பல்பையும், ராணி அறை இருளையும் பாா்த்துக்கொண்டனர். அதிகாலையில் மழைபெய்து ஒய்ந்த, விடிகின்ற நேர சாலை போன்று ராணியின் முகம் தண்ணென்று இருந்தது.

‘செரி, நாங் கெளம்புறேன், அவர்ட்ட சொல்லீரு’ என்றபடி வெளியே சென்றான். உள்ளே சத்தம் கேட்டது. குழந்தைகள் எழுந்துவிட்டன.

வீட்டிற்க்கு வந்தபின்னும் மனம் ராணியைச் சுற்றியே வந்தது. 

                      _______________

இரண்டு நாள் கழித்து கன்னையாக் கோனார் காம்பவுண்ட்டை வாங்கியிருந்த சேட்டு கட்டடங்களை இடித்தார். செல்லையா அண்ணன் தங்க பிரேம் போட்ட கண்ணாடியைக் கழட்டி, வேட்டியின் கரையைவைத்துத் துடைத்தபடி ‘ என்னடா, ஒங்க எடத்தச் சேட்டு வாங்கிட்டானே?’ என்றார். அவர்தான் புரோக்கராக கைமாற்றி விட்டார். அவன் சிறுவயதில், அந்தக் காம்பௌன்டில் எப்பொழுதும் போலீஸ் நடமாட்டமாக இருக்கும். பெரும்பான்மையானவர்கள் கம்யூனிஸ்ட். கன்னையாக் கோனாரே பழுத்த கம்யூனிஸ்டுதான், கோடீஸ்வரரும். அங்கு குடியிருந்தவர்கள் பெரும்பாலும் வந்தேறிகள். அதனால் எல்லோரும் உழைத்தனர். மாதச் சம்பளமோ, அன்றாடத்திற்குப் பிரச்சினை இல்லாத வாழ்வை வாழ்ந்தார்கள். அவர்களுக்குள் ஹார்வி மில்லில் வேலை பாா்த்தவர்களும் கணிசமானவர்கள் இருந்தார்கள். சந்திரனின் தந்தை தர்மராஜனும் மில்லில் வேலை பாா்த்தவர். ராணி குடும்பம் அவர்களுக்குப் பக்கத்தில் வீட்டில் குடியிருந்தனர். ராணியின் அப்பா பெருமாள், பீட்டராக மாறியிருந்தார். பழ மார்க்கெட்டில் பூ வையாபதி சேர்வை கடையில் வேலை பார்த்தார். 

வேட்டி சட்டையை நீவிவிட்டு ஜெய விலாஸ் கைப்பையை அக்குளில் வைத்துப் ‘ போவோமா?’ என்றார். செல்லையா அண்ணன் பழைய பொருட்களை வாங்கி வி்ற்பார். இடம் முடித்துக் கொடுப்பார். கல்யாணம் பாா்த்து முடிப்பார். எல்லா வேலைகளும் அவருக்குத் தெரியும். கல்யாணமோ கேதமோ அண்ணன் இருந்தால் வேலை அது பாட்டுக்கு நடந்துகொண்டிருக்கும். அதுபோக, தமிழ் தேசிய முன்னணிக் கட்சியில் வட்டப் பொறுப்பில் இருந்தார். அதைத்தவிர 60அடி ரோட்டில் நடக்கும் கட்சிக் கூட்டங்களை நடத்திக் கொடுப்பார். எங்கு சாரம் வாங்க வேண்டும், யார் வேய்ந்தால் பந்தல் நன்றாக வரும் என்று ஒரு கணக்கு அவரிடம் இருந்தது. லித்தோ போஸ்டர் அடிப்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் அண்ணனுக்கு நெருக்கமானவர்கள். அண்ணன் நிறைய ஆர்டர்களை அவர்களுக்குக் கொடுப்பார். அண்ணனுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு யாராலும் வளர முடியவில்லை. அண்ணனுடைய பழக்க வழக்கம் அப்படி. அதையும் தாண்டி வேலை காசு என்பதைக் கடந்து ஒரு கரிசனம் இருந்தது. அதனால் நிறைய ஏமாற்றவும்பட்டார்.  ***

வீடுகளை முதலில் இடித்தனர், அடுத்தது மிட்டாய் பாக்டெரி. அதையொட்டியிருந்த சிறு வீட்டையும் நவ்வாப்பழ மரத்தையும் வெட்டினர். மரத்தை வெட்டியவுடன் பெரும் வெக்கை சூழ்ந்தது. சந்திரனுக்கு பாா்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த இடம் தெரியாத புது இடமாக மாறிக்கொண்டிருந்தது. வேர்த்துக் கொட்டியது. ஆற்றாமை தாங்காமல் கேட்டான் ‘ இப்ப எதுக்கு மரத்த வெட்டுறாங்க? ஏண்னே, அந்த கிறுக்கு தாயளிட்டு சொல்லுங்க.’

‘டேய் அவன் காசு போட்டு வாங்கியிருக்கான், அவன் காடு அவன் வெட்டுறான், இந்த ஒரு மரத்துக்கே இப்டிச் சொல்ற, சேட்டு சாமில் போடப்போறான், பின்னாடி இருக்க எல்லா மரத்தையும் வெட்டி சாய்க்கப் போறான்.’ பின்னால் காடுபோல் மரங்கள் மண்டியிருந்தது. பின்னால் இருந்த கம்மாயும் காம்பவுண்டை அடுத்த ஓடிய ஆறும் நிலத்தைச் செழிக்க வைத்தது. அவற்றில் பல மரங்கள் வந்திருந்தவர்களால் ஆசைக்காக வைத்து வளர்க்கப்பட்டது. ராணியின் அம்மாகூட அவள் ஊரின் நினைவாக ஒரு பனை மரத்தை நட்டிருந்தாள். பெரும்பாலான மரங்களுக்கு அவனும் ராணியும் தனித்தனியே பெயர் வைத்திருக்கிறார்கள். இப்பொழுதுகூட உள்ளே சென்றால், அவற்றை நலம் விசாரித்துவிட்டு வருவான். அவையும் அசைத்துத் தலையாட்டும். அவன் ஆடி ஓடிய இடங்கள், தாவித் திரிந்த மரங்கள் எல்லாம் அழிந்து வேறொன்றாக மாறிக் கொண்டிருந்தன. 

‘இந்த மரங்கள நம்பியா அவன் சாமில்லு போடுறான், சும்மா சொல்லாதீங்கண்னே.’

‘இத மட்டும் நம்பிக் கட்ட அவன் என்ன லூசா, அங்குட்டு கம்மாய்க்கு அந்தப் பக்க நந்தவனம், அப்புறம் பள்ளத்து எறக்கத்துல உள்ள மரங்க, இத வச்சுத்தா போடுறான். ஏற்கனவே இவன் சித்தப்பன் போட்ட சாமில்லுல வெட்டி மீந்த தூளும் கட்டையுந்தான் பல பேரு வீட்டுல அடுப்பெரிக்குது, தெரியும்ல?’

என்ன சொன்னாலும் அவனால் தாங்கமுடியவில்லை. செல்லையாவுக்கும் சேட்டுக்கும் அதன் மதிப்பு தெரியாது. தெரிந்தவர்கள் யாருமில்லை என்று நினைக்கும் போதே ராணியின் ஞாபகம் வந்தது. நேராக  ராணியைப் பாா்க்கச் சென்றான். வேர்த்துச் சட்டை தொப்பலாக முதுகில் ஒட்டியிருந்தது. உச்சி வெயிலில் சைக்கிளை மிதித்த களைப்பில் மூச்சுவாங்க சைக்கிளை நிப்பாட்டிவிட்டு ராணியின் வீட்டுக்கு மேலேறிச் சென்றான். கதவு ஒருக்களித்துச் சாத்தியிருந்தது. கதவைத் தட்டினான். குளிர்ந்த காற்று வீசியது. கட்டடத்தின் குளிர்ச்சியை அப்பொழுதுதான் உடல் உணர்ந்தது. மெல்லப் பரபரப்பு அடங்கியது. மீண்டும் தட்டினான். தூக்கத்தில் இருந்து எழுந்த அவசரத்தில் வந்த ராணிக்கு முதலில் யாரென்றே புரியவில்லை. கொஞ்சம் நிதானித்ததும்தான் அவளால் கிரகிக்க முடிந்தது. தூக்கத்தின் கெஞ்சல் கண்களில் இருந்தது. 

‘என்ன ஆச்சு?’

‘நவ்வாப்பழ மரத்த வெட்டிட்டாங்க.’

நவ்வாப்பழ மரத்தை ஒட்டிய அறையில்தான் இருவரும் தங்கள் உடலை உணர்ந்தார்கள். நவ்வாப்பழக் கறை படிந்த ராணியின் மென்னுடலின் கறையைச் சுத்தம் செய்வான் சந்திரன். அவன் மனதின் கறையை அவள் துடைத்தெடுத்தாள்.

‘எந்த மரத்த, நவ்வாப்பழ மரமா?’

அவளுக்குப் புரியவில்லை. அவன் விளக்கிச் சொன்னான். எல்லா மரத்தையும் சேர்த்து வெட்டி எடுக்கப் போகிறார்கள் என்றான். தண்ணீர் மோந்து வந்து கொடுத்தாள். 

‘இந்தா தண்ணி குடி, ஒன்னப் பாத்த அதிர்ச்சில எனக்கு என்ன பண்றதுனே தெரியல.’

மரத்தை வெட்டியதை அவன் முழுவதுமாக விளக்கியபின் ‘ ஓ ‘ என்றபடி தலையை ஆட்டினாள். வேறெதுவும் சொல்லவில்லை. சந்திரன் மேலும் சங்கடமாக உணர்ந்தான். உட்கார்ந்திருக்க முடியவில்லை.

‘என்ன எதுவுமே சொல்ல மாட்ற?’

‘என்னத்த சொல்ல, அது அப்டிதான் நடக்கும்,’ என்றாள். 

தண்ணீரைக் குடித்தான். சில்லென்று இருந்தது.

இந்தச் சொம்பு ராணியின் அம்மாவுடைய சீதனம். அவள் அம்மா இங்கு ஓடிவந்தபொழுது கையுடன் கொண்டுவந்த பாத்திரம் இது ஒன்றுதான். ராணியின் அம்மாவுடைய கல்யாணச் சீர். அவள் கணவன் உள்ளூரில் நடந்த கலவரத்தில் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டு, அம்ப்ரோஸ் தலைமையில் இருந்த சில காவலர்களால் வன்புணரப்பட்டு ஒடி வரும்பொழுது ஞாபகமாகக் கொண்டுவந்தது. 

அவள் நினைவு வேறெங்கோ சுழன்று கொண்டிருந்தது.

‘நீ இன்னமும் என்னய நெனச்சுக்கிட்டுருக்கயா?’ என்றாள்.

‘உன்னப் பாத்ததுல இருந்து ஓன் நெனப்புதான், நீ, என்ன நெனச்சுருக்கயா?’

‘ இல்ல’ என்றாள்.

கொஞ்சம் நிதானித்ததும் கிளம்பிச் சென்றான்.

ரெண்டு வாரம் கழித்துக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சந்திரன் கடைக்கு வந்தாள் ராணி. செல்லையா அண்ணன்தான் ராணிக்கும் முத்துவுக்கும் கல்யாணம் செய்து வைத்தது. முத்து செல்லையா அண்ணனிடம்தான் வேலை பார்க்கிறான். கையிலிருந்த கட்டப் பையில் இருந்த, வெள்ளைத் துணியில் நீலக் கோடுபோட்ட துணியை கொடுத்தாள். அளவெடுத்தான். 

பெங்களூரிலிருந்து திரும்பி வந்த சந்திரன் ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டி வயிரச் செட்டியாருக்குச் சொந்தமான இடத்தில் கடை போட்டான். ஆரம்பத்தில் நண்பர்களின் ஆதரவு இருந்தது. பின்பு அவன் உழைப்பு வெளியே தெரியவர, அவன் கடையில் கூட்டம் வந்தது. அப்பொழுதுதான் ‘பெங்களூர் டெய்லர்ஸ்’ என்ற பலகையை மாட்டினான். உடலுக்குப் பொருத்தமான ஆடையைப் போடுவது பற்றிய கனவுகூட இல்லாத அவர்களின் உடலைக் கச்சிதமாகப் பிடித்தபடி அவன் தைத்த சட்டைகள் எல்லோருக்கும் மறைமுக களிப்பைக் கொடுத்தன. பேண்ட் மட்டிலும் அவன் பாணி பழையதுதான்.  எப்படித் துணி எடுத்தாலும் அதை அழகிய சட்டையாக மாற்றிவிடும் நுட்பம் இருந்தது அவனிடம். 

ராணி சந்திரனின் காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் மன வெறுமையுடன் கொஞ்ச காலம் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான். பின்பு அவளைப் பற்றி தவறான பேச்சு காம்பவுண்டில் பரவியது. பரமனையும் அவளையும் பற்றிப் பேசிக்கொண்டனர். தர்மராஜனும் பெருமாளும்கூட பேசிக்கொள்ளாமல் தவிர்த்தனர். அதிலிருந்து தப்புவதற்கு ஊரைவிட்டு ஓடிப்போனான். பெங்களூரில் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டில் தங்கினான். அவனுக்கு டெய்லரிங்கை கற்றுக் கொடுத்தவர் அவர்தான். மேலும் லெட்சுமியையும் கல்யாணம் செய்துகொடுத்தார்.

இப்போதுள்ள ‘ஏ1 டெய்லர்ஸ்’ என்ற பலகை பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது மாற்றியது.

தைத்த துணியை அவனே கொண்டுசென்றான். தைப்பதற்கு நிறைய ஆர்டர்கள் இருந்தும், எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மதியத்தில் செல்ல நினைத்தான். மத்தியானம் சென்றால் வியர்வையில் நனைந்து போய்விடுவோமே என சஞ்சலமாக இருந்தது. ஆனால் நல்ல வேளையாக, அன்று வெயில் இல்லை, ஆடி மாத வானம் மேக மூட்டத்துடன் திரண்டு வந்திருந்தது. காற்று பலமாக முகத்தில் அடித்தது. தூசியும் மண்ணும் கலந்து கண்களுக்குள் சிக்கிக்கொண்டு எரிச்சலைக் கொடுத்தது. கிணற்றில் முகத்தைக் கழுவிவிட்டு, தலையில் படிந்திருந்த தூசியைத் தண்ணீரில் அலசினான்.

வீட்டில் யாருமில்லை. நீலக் கதவில் பெரிய பூட்டு தொங்கியது. திரும்பிக் கீழே வரும்பொழுது மழை பெய்தது. மழை பெய்து பெய்து குளிரை விரட்டியிருந்ததால் நடுக்கம் இல்லை. மழையைப் பாா்த்துக்கொண்டிருந்தான். நிலத்தை குளிர்விக்கப் பெய்யும் மழை, அதனால் புனுபுனுவென்று பெய்தது. கையை வெளியே நீட்டிப் பார்த்தான். ஆனால், வெளியே செல்ல மனமில்லை. 

மீண்டும் மேலே சென்றான். அந்த தளத்தில் மொத்தம் நான்கு வீடுகள். இரண்டாவது வீடு ராணியுடையது. மாடிப்படியை அடுத்து இரண்டு வீடு. முதல் வீட்டில் ஆள் இருக்கும் அடையாளமில்லை. மூன்றாவது வீட்டின் கதவை தட்டினான். ராணி கதவைத் திறந்தாள்.

‘வாடா, எப்ப வந்த?, நீ வர்றேனு சொல்லியிருந்ததயே மறந்துட்டேன், டீவி பாக்கலான்னு வந்தேன்.’

கதவைத் திறந்ததும் ஔியின் வாசம் அடைபட்டுக் கிடந்தது வெளியே வந்தது. பையைக் கொடுத்தான். அவள் இதுபோன்ற தையலைக் கணடதில்லை. விளையாடியிருந்தது. சட்டையைப் பிரித்துப் பாா்த்தாள்.

‘பசங்க வந்தோனே பிரி, அப்பதான் புது டிரஸ்சு போட்ட மாறி இருக்கும் அவங்களுக்கு.’

தண்ணி மோந்து கொடுத்தாள். டீ வாங்கி வரவா எனக் கேட்டாள். வேண்டாம் என்றான். கிளம்பவேண்டும் என்று தோன்றியது. கிளம்பவும் மனமில்லை. அவள் கண்களைப் பாா்த்தான். அந்த பழைய ராணியை அவள் கண்களுக்குள் தேக்கி வைத்திருந்தாள்.

‘ராணி ஒன்ட்ட ஒண்ணு கேப்பேன், ஏன் என்ன வேணாம்ன?’

‘அது என்னத்துக்குப் பழய கதய, விடு.’

‘இல்ல, சொல்லு, அது தெரியாம மண்ட வெடுச்சுரும், என்னய ஒனக்கு பிடிக்காதா?’

‘இதென்னடா இது, ஒன்னய எனக்குப் பிடிக்காமலா ஒன்கூட இருந்தேன், எனக்கு பிடிக்கும்டா.’

‘அப்புறம் ஏன் வேணாம்ன?’

‘அது சரி வராதுன்னு ஏதோ உள்ள சொல்லுச்சு, அதுதான், என்னைய ஒங்க வீட்ல ஏத்துக்க மாட்டாங்க.’

‘அப்ப பரமன்கூட பழகுனது?’

‘இதுதான் ஓன் மண்டைய வெடிக்க வைக்கிதா?’

அவன் எதுவும் பேசவில்லை.

‘உண்மதான்.’

‘எனக்குப் புரியல.’

‘அது ஒனக்குப் புரியாது.’

நெருங்கிச் சென்று ராணியைக் கட்டிப் பிடித்தான். தன் மனதினுள் சேகரமாயிருந்த அத்தனை சோகங்களையும் தவிப்புகளையும் அவளிடம் கொட்டினான். ஏதோ உந்தப்பட்ட சக்தியினால், தன்னுள்ளிலிருந்து வெளியேறிச் செல்லும் ஒன்றை காண சக்தியில்லாமல் முழுவதுமாக அவளிடம் ஒப்படைத்துவிட்டு அழுதான். ஆதுரமாக அவள் அத்தனையும் வாங்கிக்கொண்டாள். பின்பு உதட்டில் முத்தம் கொடுத்தாள். மிக மெலிதான முத்தம். நெடுநேரம் கட்டிக்கொண்டார்கள். அவனுடைய முதுகை தடவிக் கொடுத்தாள். ஒரளவு நினைவு தெளிந்தபின் கிளம்பினான்.

வாசலில் நினறு செருப்பு மாட்டும்பொழுது ராணி, ‘சந்திரா, இனிமே இங்க வராத’ என்றாள். 

அவன் எதுவும் சொல்லவில்லை. அவளையும் பாா்க்கவில்லை. படியிறங்கிச் செல்லும்பொழுது லேசானவனாக உணர்ந்தான். 

சீட்டில் இருந்த தண்ணீரை வழித்துவிட்டு வலிக்காத மாதிரி செல்லத் தட்டு தட்டி, பெடலில் இடது காலை வைத்து அழுத்தி ஓடியபடி அழித்தியபின் ஏறிச் சென்றான். சாலையில் மழைநீர் பள்ளமான இடங்களில் சிறு குட்டையாக இருந்தது. பளிச்சென்று இருந்தது சாலை. டீக் கடையில் கூட்டமாக இருந்தது. பக்கத்தில் உளுந்த வடையைச் சுட்டு நிரப்பி வைத்திருந்தார். பசித்தது. வெட்சுமிக்கும் குழந்தைகளுக்கும் சேர்த்து பத்து வடைகளை வாங்கிக் கொண்டான்.  வானத்திலிருந்து நீல ஔி வந்து கொண்டிருந்தது. மாநகராட்சித் தெருவிளக்கு ஒரே நேரத்தில் எறிந்து இரவு வருவதை அறிவித்தது. ஆங்காங்கே கடைகளில் விளக்கைப்போட, சாலையில் சென்ற வாகனங்களில் விளக்கொளி சாலையில் பிரதிபிம்பத்தை ஏற்படுத்திப் பாதையின் கீழுள்ள உலகத்தின் கண்ணாடி எதிரொளியாக மாற்றிய சாலையில் சந்திரன் சென்றான். ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.