மகிழ்ச்சி பிடுங்கப்பட்ட மனத்தைப்போல நூலகத்தின் புத்தக அடுக்குகள் பெரும்பாலும் வெறுமையாகவே காணப்பட்டன. ‘கோவிட் 19’ன் தாக்கத்தால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிப்பதற்குமுன், கால வரையின்றி நூலகமும் மூடப்படுவதாக அறிவித்து இருந்தனர். சிங்கப்பூரில் இதுவரை கேள்விப்பட்டிராத அந்தச் செய்தியால் மக்கள் தள்ளுவண்டிகளில்கூட புத்தகங்களை இழுத்துச்சென்றது ஞாபகத்துக்கு வந்தது. ‘அவ்வளவையும் படித்திருப்பார்களா?’ நூலகம் மூடுவதற்கு முதல் நாள் ‘நெக்ஸ்’ கடைத்தொகுதியின் மேல்தளத்தில், மூன்று மடிப்பில் நின்ற வரிசையில் காத்திருந்து இரண்டு அட்டைகளுக்கு எடுத்த நூல்களில் பாதியைக்கூடப் படிக்காமலேதான் இப்போது திருப்பியிருந்தேன்.

முடக்கநிலை தொடங்கியபின் முழுநேர இல்லத்தரசி என்ற பெயர் எனக்கு முழுமையடைந்ததாய்த் தோன்றியது. “பூரியாம்மா!” என்று ஆர்வமாய்ச் சாப்பிட்டதுபோய், “இந்தப் பூரியவிட்டா வேறெதுவும் செய்யமாட்டீங்களா?” எனப் பிள்ளைகள் குறைபட்டுக்கொண்டனர். தன்மானத்துக்கு ஒரு சோதனைன்னா சும்மா இருப்போமா? ‘யூடியூபை’ அவ்வளவு நேரம் பார்த்துவிட்டு, மசால்வடை செய்து நீட்டி வீட்டிலுள்ளவர்களது வெறுப்பை மூட்டையாகச் சுமந்ததெல்லாம் பெருங்கதை! கையளவு கிடைத்த நேரத்தில் அலைவரிசைகளை மாற்றிக் கொரோனா செய்திகளைப் பார்ப்பதும் வாடிக்கையாயிற்று. ‘டல்கோனா காபி’ புண்ணியத்தில் பிள்ளைகளுக்காக ‘மைலோ’ கலக்கும் வேலை ஒன்று மட்டுமே இல்லாதிருந்தது.
‘இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் வீட்டுக்குள்ளேயே இருக்கணும்கிறது பெரிய காரியமா என்ன?’ என்று எனக்கும் சேர்த்துச் சொல்லிக்கொண்ட நாள்களாகவே அவை இருந்தன. ஒருவழியாகக் கொரோனாவின் பெருக்கம் குறைந்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மகளின் கல்லூரித் திட்டவேலைக்காக, சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகள் தேவைப்படவே நூலகத்திற்கு வரவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. மற்ற மொழிகளைப்போலவே தமிழ்ப் புத்தக அடுக்குகளும் ‘இனிதான் நாங்கள் நிறைவோம்’ என்று சொல்லாமல் சொல்லின.
“எக்ஸ்க்யூஸ் மீ.”
புத்தகங்களைவிட்டுச் சந்தேகத்தோடு பார்வையை நிமிர்த்தினேன். சீன முதியவர் ஒருவர் நான்கடி தூர இடைவெளியில் நின்றிருந்தார். நான் இருந்த இடத்துக்கு இரண்டு அலமாரி தள்ளி ஒரு நூலகப் பணியாளர் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். மறுபக்க மூலையில் ஒரு சீன மூதாட்டி, அவர் அருகில் ஏகப்பட்ட செய்தித்தாள்களை அடுக்கி வைத்துக்கொண்டு அதில் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார். சற்றுமுன் கேட்ட குரல் என்னிடம்தான் வந்திருக்கிறது என்பது எனக்கு உறைத்தது.
அம்முதியவர் ஒரு புத்தகத்தை நீட்டி, “இது யார்?” என ஆங்கிலத்தில் வினவினார். பெரும்பாலும் அரைக்கால் சட்டை, பனியன் எனக் காட்சியளிக்கும் சீன மூத்தோரைப் பார்க்கும் கண்களுக்கு பேண்ட், முழுக்கைச் சட்டை அணிந்து வித்தியாசமாகத் தெரிந்தார். அவர் முகத்தில் காலம் வரைந்த கோடுகள், எப்படியும் நூறு வயதை நோக்கிச் சென்றுகொண்டிருப்பார் என்று காட்டிக்கொடுத்தன. இந்த வயதிலும் நூலகத்தை நாடி வந்திருக்கும் அவரைப் பார்ப்பதற்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. கூடவே, இவ்வளவு நாள்கள் இவர் வீட்டுக்குள் அடைபட்டுத்தான் இருந்திருப்பார் என்ற நினைவு தலையெடுத்தது. ‘அவர் கேட்பதை விட்டுவிட்டு இதென்ன நினைப்பு?’ என்று மனத்தை அதட்டிவிட்டு அவரைப் பார்த்தேன். ஒரு சிறுவனைப்போலக் கண்களில் ஆர்வம் ஒளிர்விட, மூக்குக் கண்ணாடியை நெற்றிக்கு மேலேற்றிவிட்டு என்னைப் பார்த்தார். பிறகுதான் அவர் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தேன்.
‘ஒரு சீனரது கைகளில் தமிழ்ப் புத்தகம்!’ எம்பிய வியப்பை அவசரமாய் உள்ளிழுத்துக்கொண்டேன். நூலின் முகப்பில் மஞ்சள் வண்ண அட்டையில் போர்க்களத்தில் குதிரையின் மீதிருக்கும் வீரன், எதிரி ஒருவனை நோக்கி வாளை ஓங்கும் ஓவியமும் ‘மருது பாண்டியர்’ என வீங்கிய எழுத்துகளிலும் இருந்தது. மருது சகோதரர்கள், தேசத்து விடுதலைக்காக உயிர்விட்ட தீரர்கள் என்று எப்போதோ படித்திருந்தது அப்போது எனக்கு கைகொடுத்தது. இந்தப் புத்தகம் இவரை எப்படி ஈர்த்திருக்கும் என்ற ஆச்சரியமும் அடங்காமலே “இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த வீரன்” என்றேன்.
“அப்படியா…!” என்றவர் சற்றுத்தள்ளி முன்பு தான் அமர்ந்திருந்த இருக்கையை அடைந்தார். நான்கு மொழிப் புத்தகங்களும் அவர் எதிரிலிருந்த மேசையில் பரப்பி இருந்ததை அப்போதுதான் கவனித்தேன். புதிய வரவு நூல்களை வைத்திருக்கும் புத்தக அடுக்கு காலியாக இருந்தது. அகண்டிருந்த பார்வையை உள்ளூர்ப் படைப்பாளிகளின் நூல்கள் இருந்த பக்கமாகத் திருப்பினேன்.
நூலகத்திற்கு வந்ததும், புது வரவு நூல்களின் அடுக்கிற்குச் சென்று மொழி பாகுபாடின்றி புத்தகங்களின் அட்டைகளைப் பார்த்து மெய்மறந்து நிற்கும் என் சினேகிதி நினைவுக்கு வந்தார். புதுப் புத்தகங்களின் வாசத்தை நுகர்பவர்களைப் பார்த்தும், ஏன் அனுபவித்தும் இருக்கிறேன். ஒரு கைக்குழந்தையைப்போலப் புத்தகத்தை வருட முடியுமா என என் தோழியைப் பார்த்து வியந்திருக்கிறேன். அப்படிப்பட்டச் சிலரும் இருக்கிறார்கள் என்பது இப்போது உறுதியானது.
அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகும் அந்தத் தமிழ் நூலிலேயே அவரது பார்வை நிலைகுத்தி இருந்தது. அட்டைப் படத்தில் தாக்கப்படும் சிப்பாயின் முகத்தில் தன்னுடைய ‘வாலட்டை’ எடுத்து வைத்தார். பிறகு அவரது மெல்லிய விரல்கள் மருதுபாண்டியரின் முகத்தை ஆதுரத்தோடு வருடின. அவரது நடவடிக்கைகள் எனக்கு வியப்பையே தந்தன. ‘இதென்ன வந்த வேலையை விட்டுவிட்டு…?’ என நினைத்தேன்.
“இன்னும் ஒன்று…” என் பின்னால் அந்தப் பெரியவர் நின்றிருந்தார். அவர் கைகளில் அதே நூல் இருந்தது.
‘அவர் கேட்டதற்குப் பதிலைச் சொல்லிட்டோம். இன்னும் என்னவாக இருக்கும்?’ என் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவதைப்போல “இவர் என்ன செய்தார்?” என கேட்டார். அவரது தெளிவான ஆங்கில உச்சரிப்பு என் மனத்தில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு என்ன சொல்வது என யோசித்தேன். என்னிடமிருந்து பதிலை வாங்காமல் விடமாட்டேன் என்பதைப்போல என்னையே பார்த்துக்கொண்டு நின்றார்.
‘கடவுளே… இதென்ன சோதனை? சைனீஸ், மலாய், ஆங்கிலம்னு அத்தனை புத்தகங்களை எடுத்து வைத்திருக்கும் மனிதர் அவற்றையெல்லாம் ஏன் பார்க்கக் கூடாது?’
அவரது அதீத ஆர்வத்தைக் கண்டு, அவருக்கு விளக்கமளிக்கும் வகையில் உள்ளவர்கள் யாராவது அப்பகுதியில் இருக்கிறார்களா என கண்களை அலையவிட்டேன். பார்வைக்கு எட்டியவரை ஒண்ணு ரெண்டு சீனத் தலைகள் மட்டுமே தென்பட்டன.
‘மதிய உணவை முடித்த பிறகாவது நூலகத்துக்கு வந்திருக்கக் கூடாதா?’ என மனம் சாடியது. அவர் விழிகளில் ஆர்வம் பிரவாகமெடுக்க என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். ‘இப்படியொரு பிரச்சினை எனக்கு வரணுமா என்ன?’ என்று நினைத்தாலும், ஒரு தமிழ்ப் புத்தகத்தை வைத்துக்கொண்டு கேள்வியெழுப்பும் சீனர் ஒருவரைக் கண்டுகொள்ளாமல் விடவும் மனம் வரவில்லை.
‘இன்னும் இதைப்பற்றி ஆழமாகச் சொல்ல வேண்டுமென நினைக்கிறார். ஆங்கிலத்தை உடைத்துப் பேசும் மனிதராக இருந்தால், அம்மொழியை நாமும் கொஞ்சம் சேதப்படுத்தி பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருதுபாண்டியர்கள் கதையைச் சொல்லிவிடலாம். அவரது பேச்சின் தோரணை அதற்கும் இடம் கொடுக்கலையே!’
வேறு வழியின்றி, “இந்தியாவில் வாழ்ந்த மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டனர்” என்றேன்.
இந்தப் பதிலைக் கேட்ட அவரது பார்வை உவப்பானதாகத் தெரியவில்லை. இவ்வளவுதானா என்பது மாதிரி என்னைப் பார்த்தார். அதற்குமேல் ஒன்றுமில்லை என்பதைப்போலப் புத்தகங்கள் பக்கம் என் கவனத்தைத் திருப்பினேன். சில நிமிடங்களுக்குப் பிறகு தான் முன்பு அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பினார்.
நான் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். ‘ப்பா… இனியாவது நம்ம வேலையைப் பார்ப்போம்…’ ஏதோ ஓர் உந்துதலில் இலேசாக கண்களை அவர் இருந்த பக்கமாகத் திருப்பினேன். மீண்டும் அந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
‘எடுக்க வந்த புத்தகங்கள் ஞாபகத்துக்கு வராவிட்டால் பரவாயில்லை, திட்டவேலையை முடிக்க இன்னும் கால அவகாசம் நிறையவே இருக்கிறது. இப்போதைக்குப் படிக்காத புத்தகம் எது கிடைச்சாலும் எடுத்துக்கிட்டு கிளம்பிட வேண்டியதுதான்.’
“ஜப்பானியரை எதிர்த்து இந்த மன்னர் போரிட்டாரா?” என் பின்னாலிருந்த அந்தச் சீனரின் வார்த்தைகள் வாளைப்போலச் சுழன்றபடி வந்தன. இரண்டு முகக் கவசங்களைச் சேர்த்து மாட்டியதைப்போல எனக்கு மூச்சு முட்ட, வேதனையோடு திரும்பினேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“இல்லை” என்றேன். ஜப்பானியர் சீனரைக் கொடுமைப்படுத்திய வரலாறு என் மனத்தில் ஓடியது. அந்நாளில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியால் இப்படி ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது.
என் பதிலில் அவர் திருப்தியுறாவிட்டாலும் பழைய இடத்துக்கே திரும்பிவிட்டார். அவர் சிந்தனை வயப்பட்டிருந்தது அதிகரித்த நெற்றிச் சுருக்கங்களில் தெரிந்தது. மேலும், முகம் சிவந்தும் காணப்பட்டது. ‘இவருக்கோ அல்லது இவரது பிரியமானவருக்கோ ஜப்பானியர்களால் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம், ஆனாலும் இந்த அட்டைப் படத்தோடு ஏன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்?’
“நன்றாகப் பார். இந்த வீரன் ஒரு ஜப்பானிய குப்பையைத்தான் அகற்றுகிறார்.”
வேறு வழியின்றி, போர்க்களத்துக் காட்சி படமாக்கப்பட்டிருந்த அந்த அட்டையை நன்றாக கவனித்தேன். கண்களில் கனலோடு வாளால் எதிரியை ஓங்கும் திடகாத்திரமான மருது பாண்டியரின் முன்னே அடிபணியும் ஆங்கிலேய சிப்பாய். ‘அட… அந்தச் சிப்பாயின் உருவமும், முக அமைப்புக்கூட உற்றுப் பார்க்கையில் ஜப்பானியர்போலத்தான் தெரிகிறது! இவ்வளவு தூரம் இந்த ஓவியத்தை யாரும் கூர்ந்து பார்க்க மாட்டார்கள் என அதை வரைந்த ஓவியர் நினைத்துவிட்டார் போலும். முகம் தெரியாத அந்த ஓவியர் செய்த சிறு பிழை, என் முன்னே கதகளி ஆடும் கொடுமையை என்னவென்று சொல்ல?’
“இந்தக் கொடும்பாவிகளிடம்தான் என் உயிரைப் பறிகொடுத்தேன் என்பது உனக்குத் தெரியுமா?” முன்பு சோகம் படர்ந்திருந்த அவர் முகத்தில் கோபமும், வன்மமும் போட்டி போட்டுக்கொண்டு உணர்ச்சிக் குவியலாய்க் காணப்பட்டது.
அன்புக்குரியவர்களின் இழப்புதான் எவ்வளவு துயரங்களை விட்டுச் செல்கிறது? தோழி சீதாவின் கணவர் துபாயிலிருந்தவர் ‘கோவிட் 19க்குப்’ பலியாகிவிட்டார். “மாளாத் துயரம்தான் அதுக்காக இவ உசுர மாச்சிக்கிட்டா பச்சப் புள்ளைங்களை யாரு காப்பாத்துறது? அழுவுற புள்ளைங்களுக்குப் பாலைக்கூடக் கொடுக்க மாட்டேங்கிறாளே…” சீதாவின் அம்மாவுடைய கதறலை மறக்க முடியவில்லை. வாழ்பவர்களின் புத்தியைப் பேதலிக்கச் செய்யும் வல்லமை மரணத்திற்கு இருக்கிறதே. பதினான்கு ஆண்டுகள் கழித்து, செயற்கைமுறை கருத்தரிப்பு மூலம் பிறந்த இரட்டைப் பிள்ளைகளை அவள் எப்படி மறந்தாள் என்பது புதிர்தான்!
“பூமிக்குப் பாரமான குப்பையை அகற்றும் இம்மன்னர் என் கண்களுக்கு கடவுளாகத் தெரிகிறார். இவரைப்பற்றி மேலும் சொல்” என்று கண்களில் ஆர்வம் பளீரிடக் கேட்டார்.
‘அந்த ஆங்கிலேய சிப்பாயை இம்மனிதர் ஜப்பானியர் என முடிவே கட்டிவிட்டார். அதை மாற்றும் சக்தி நம்மிடம் உள்ளதா?’ அவரது நேர்த்தியான உச்சரிப்பு, ‘சிங்லீஷில்’ காலந்தள்ளும் எனக்குப் பெரும் சங்கடத்தைத் தந்தது.
‘அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரத்தின் விளைநிலமாகவும், இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கிய மருது சகோதர்களைப்பற்றி இவருக்கு எப்படிக் கூறுவேன்? இவர் என்னவோ பிரச்சினையில் இருகிறார். ஏதோ நமக்குத் தெரிந்த விதத்தில் பதில் சொல்லப்போக, ஆங்கிலத்தை இப்படித் துவம்சம் செய்கிறாயே என நம்மிடம் புதுப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டால்…? எதற்கு வம்பு?’ வயதானவர்கள், குழந்தைகளைப்போலச் சட்டென கோபித்துக்கொள்வர் என்ற முன்னனுபவமும் நினைவுக்கு வந்தது. நாவில் சரளமாக வராத ஆங்கிலத்தை அப்போது என்னால் சபிக்கத்தான் முடிந்தது. தான் எதிரில் இருப்பதை உணர்த்துவதைப்போல லேசாகக் கனைத்தார்.
‘நூலகத்துக்கு இவ்வளவு சீக்கிரமாகக் கிளம்பி வந்த அவசியம்தான் என்ன?’ என்ற இம்சிக்கும் மனத்தோடு அவரை நிமிர்ந்து பார்த்தேன். என்னை நோக்கி நிற்கும் மனிதரது கண்களில் ஒருவித வலி இருந்ததையும் உணர முடிந்தது.
நாம் வேறு அவருக்குச் சிரமத்தைக் கொடுக்கணுமா என நினைத்து, “எனக்கு வேறொன்றும் தெரியாது” என்றேன். அதுவரை அவர் முகத்தில் முகிழ்த்திருந்த ஆர்வம் வடிந்து, கண்களில் அடுத்த கணமே வெறுப்பு படர்ந்தது. நான் என்னவோ புறமுதுகு காட்டிவிட்டதைப்போல என்மீது அற்பமான பார்வையை வீசிவிட்டு வேகமாக அகன்றார்.
‘அம்மாடி… ஒருவழியாப் பிரச்சினை விட்டது. இப்போதைக்கு எந்தப் புத்தகத்தையாவது எடுத்துக்கிட்டு இடத்தைக் காலி செய்யவேண்டியதுதான். ஆனாலும் மனசு சொல்றதை இந்தக் கண்ணு கேட்கணுமே!’ அவர் அந்நூலையே சற்றுத் தள்ளிவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் தேடி வந்த புத்தகங்கள் நினைவிலிருந்து முற்றிலுமாக நழுவியிருந்தது. மற்ற புத்தகங்களில் உள்ள எழுத்துகள் எதுவும் என் மனத்திற்குள் செல்லவும் மறுத்தன.
என்னருகில் காலடிச் சத்தம் கேட்டது. “என்னோட மனைவியை அதன்பிறகு நான் பார்க்கவே இல்லை. நிறைமாத கர்ப்பிணியா இருந்தாள்…” சொல்லிவிட்டு அகன்றார். அவர் கண்கள் அந்தச் சிப்பாயைக் கொன்றன.
‘எப்படிப்பட்ட கொடுமை? மனிதனுக்கு வெறி பிடித்தால் இயலாதவர்களிடம் தன் குரூரத்தைக் காட்டி வெற்றி காண்பதாய் நினைக்கிறானே! ஆமாம்… இவர் அந்த வலியிலிருந்து இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் திரும்பவில்லையா?’
நெருங்கிய உறவுக்காரப் பையனின் தந்தை இந்தியாவில் தவறிவிட்டார். அந்தத் தகவலை அவனிடம் தெரியப்படுத்தும் பொறுப்பு எங்களுக்கு வந்தது. வெளிநாட்டு ஊழியர் விடுதியிலிருப்பவனிடம் செய்தியைச் சொல்லணுமே! வீட்டுக்கு ஒரே பிள்ளையான அவன் சிங்கப்பூருக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. நடமாட்டக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு அவ்வப்போது கைத்தொலைபேசியில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம்.
செய்தியைச் சொன்னபிறகுதான் அவனும் அந்நோயால் மருத்துவமனையில் இருப்பது தெரிந்தது. விஷயம் வெளியே தெரிந்தால் பெத்தவங்க தாங்கமாட்டாங்க என்பதற்காகவே யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறான். சிங்கப்பூரிலிருந்து வருவதற்கு இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று மட்டும் அவன் அம்மாவிடம் சொன்னோம்.
“அப்பான்னா அவனுக்கு உசுரு… அவனைத் தனியே விட்டுடாதீங்கம்மா…!”
அந்தத் தாயின் கோரிக்கையை ஏற்க இயலாதநிலை. அதன் பிறகு அவனிடம் போனில் எப்போது பேசினாலும், “ஏன் இங்க இருக்கேன்?” என்று மட்டுமே கேட்பான்.
“நோயினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது, அதிலிருந்து விலகுவதற்குள் இப்படியொரு செய்தியைக் கேட்டதன் பாதிப்பு எல்லாம் சேர்ந்துவிட்டது. விரைவில் சரியாகிவிடுவார்,” என மனநல மருத்துவர் சொன்னார். கணவரைப் பறிகொடுத்ததைவிட மகனால் தாயின் வேதனை பன்மடங்கு கூடியுள்ள கொடுமை!
பாரமான மனத்துடன் அங்கே அமர்ந்திருந்த முதியவரைப் பார்த்தேன். அவர் என்னை நோக்கி வந்தார். வருத்தத்தை மீறி என்ன கேட்கப்போறாரோ என்ற அச்சம் மேலோங்கியது.
“இம்மன்னன் ஜப்பானியரை வீழ்த்திய விபரத்தை சொல். அதைத் தெரிந்துகொள்ள எனக்கு ரொம்பவும் ஆவலாக உள்ளது.”
‘நடக்காத ஒண்ணைக் கேட்டால் நானென்ன செய்வேன்? அந்த அட்டைப்பட ஓவியரை அடிச்சு துவைச்சா என்ன?’
“எனக்கு வேறெதுவும் தெரியாது.”
“இது இந்தியரோட வரலாறு… நீ இதைத் தெரிஞ்சுக்காம இருக்கே…?” என்று அழுத்தமான குற்றச்சாட்டு என் முதுகை ஊடுருவியது. நூலகத்தில் கூட்டம் சற்று அதிகரித்திருந்ததில் பல தலைகள் நான் இருந்த பக்கமாகத் திரும்பின. ‘அப்படியென்ன பாவத்தை செய்துவிட்டேன்? இன்று எனக்கு அந்த ஓவியரால் வந்த சோதனையை என்னவென்று சொல்ல?’
“மன்னிக்கணும்” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு மடித்த பையுடன் நூலகத்தின் வெளிவாயிலைக் குறிவைத்தேன். குறிப்பிட்டளவு மக்கள் மட்டுமே நூலகத்தின் உள்ளே செல்ல அனுமதி என்பதால், வெளியே செல்பவர்களைக் கண்டு வரிசையில் காத்திருப்பவர்களது முகம் மலர்ந்தது. நீண்ட வரிசையில் நின்றவர்களை நூலகப் பணியாளர் உடல் வெப்பத்தைச் சோதித்து ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தார்.
“எக்ஸ்க்யூஸ் மீ” என்று பழக்கப்பட்ட குரல் என் பின்னே ஒலித்தது. குதிரையின் குளம்பொலி என்னைத் துரத்துவதுபோலத் தோன்ற கால்களை எட்டி வைத்தேன்.
மின்தூக்கிக்கு அருகில் வந்தபிறகுதான் பின்தொடர்ந்த காலடிச் சத்தம் நின்றுவிட்டதை உணர்ந்து திரும்பினேன். கைகளில் மருதுபாண்டியர் நூலுடன் வெளியே காத்திருக்கும் தமிழர் ஒருவரிடம் அம்முதியவர் பேசிக்கொண்டிருந்தார். ‘மரணம் வெறும் எண்ணிக்கை என்றளவில் ஆகிவிட்ட இந்த நாள்களின் தாக்கம், எத்தனை வடுக்களை உண்டாக்குமோ?’ என மனம் கனத்தது. ***
சிறப்பானக்கதை! வாழ்த்துகள்
நம் வரலாறு நமக்குத் தெரியுமா? என எண்ணவைத்த கதை. வாழ்த்துகள்.