சுவடுகளற்ற அலைகள்

ஓய்ந்த மழையொன்றில்
துடுப்பின்றி கரை தேடும்
நடுக்கடல் தோணி மிதந்து மாயும்
நனைந்த சால்களென
வீட்டினுள் நான்
காலங்கள் பல கடந்த
தூர்வாராக் கிணற்றின்
கலங்கிய நீரென
பாசிபடர்ந்து பச்சை மணக்கிறது
மந்தகாசமான மதியமொன்றில்
கனவில் நிகழ்ந்ததென
தோற்றப்பிழையாகும்
இன்றைய உன்னுடனான
உரையாடல்
முன்பொருதினம் நம்மில் விழுந்து
இறந்துவிட்ட பொழுதின்
கழுத்தில் யாரின் நகக்கீறலென
ஆராய்ச்சி செய்கிறது
நம்முள் இருக்கும்
அரிதாரமிட்ட நல்லவனின் மூளை.
விட்டுச்சென்ற இடத்தை விட்டு
பாதங்கள் பொத்தலாகும் வரை
நடந்த கதையைச்
சுவடுகளற்ற அலைகளென
நமது மௌனங்கள்
அப்போதும் உரையாடிக்
கொண்டிருக்கும்!
புதைந்த நினைவுகளைத் தோண்டும் புகைப்படங்கள்

மகிழ் நிகழ்வொன்றின்
சிகை இழக்கும் சிறுமழலையின்
படக்குவியலில் திளைத்திருந்த வேளை
ஆண்டுகள் பலதைத் தின்று கொண்டிருந்தது
என் பசித்தே கிடக்கும் மூளை
காட்சிகளினூடே மீண்டும் வாழ்தலைக் காண
புரட்டிடும் மின் படங்களில்
கூடவே பிரதியெடுத்த
வெங்காயத் துயரூறிய பெருநிகழ்வுகளின்
உறைந்த பனியென மனதில்
கடுங்குளிர் பாறையின் அழுத்தமென்றிருக்கும்
கடந்த காலத்தினை மீண்டும் திருத்தி எழுதிட
முற்பட்டுத் தோற்கின்றன
மூளையுண்டாக்கும் கனவுக் கங்குகள்
பழையதைக் கிளறிடும் போதெல்லாம்
புதைந்த நினைவுகளைக்
கீறிடவும் கூடும் அதன் துருப்பேறிய
இரும்பு முனைச் சிதிலங்கள்.
🎞
மழைச்சாரலைச் சுடும் தேநீர்
கூடிக் கவிழ்ந்திடிக்கும் சாம்பல் மேகத்தின்
முன் அந்தியோடு ஒற்றைச்சொல்லில் மொத்த
இருண்மையும் உரைத்தாய்
திட நிலங்கள் திரவமாகி
கரைந்து கொண்டிருக்கும் சடுதியில்
தனித்துப் பறத்தலின் சாத்தியங்களை யோசிக்கலானாய்
மனக்குமுறலினைக் கூர்ந்து கேட்டச்
சாலை மரங்கள் தன்னைச் சிலுப்பி
என்னை மட்டும்
காற்றைக் கொண்டு கட்டியது
பொழிந்த தூறல்கள் கனவுகளின்
பதிவுகளை அழிக்கப்போகையில்
என்னிலும் மழை வலுத்தது
பின் அது
ஊருக்குள் புகுந்த பொழுதில் தான்
நீ என்னை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாய்.
மௌனமாய் பார்த்துக்கொண்டிருந்த தேநீர்
கை நனைந்த கண் மழைச்சாரல்களை
ஊருக்கே அறியாமல்
இன்னும் இன்னும்
தகித்தே வைத்திருக்கிறது.
⛈
ச. மோகனப்பிரியா ஜூலை/ ஆகஸ்ட் 2020