விண்ணில் ஓர் நெடுஞ் சுவர்
‘தாரகையென்ற மணித்திரள் யாவையும் சார்ந்திடப் போ மனமே! சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத் திங்களையுஞ் சமைத்தே…’ – பாரதியார்

முப்பரிமாண வரைபடம் ஒன்றின் உதவியுடன், அண்டவியலாளர்கள் மிகச் சமீபத்தில், வானில் அதி அற்புதமான தென் துருவச் சுவர் (South Pole Wall) ஒன்றைக் கண்டடைந்துள்ளனர். அது 1.4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஓர் ஒளி ஆண்டு என்பது ஏறக்குறைய ஆறு ட்ரில்லியன் மைல்கள் அல்லது ஒன்பது ட்ரில்லியன் கி மீ. இதுவோ 1.4 பில்லியன் ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. மலைப்பாக இருக்கிறதல்லவா?
நூறாயிரம் அண்டங்களைக் கொண்டதாக, மிகப் பிரும்மாண்டமாக, நினைத்துப் பார்க்க இயலாத அளவுகளில் அது தெற்குத் துருவ இழையென நிற்கிறது. பிரகாசமான பால்வீதியின் பின்னே தன் பெரும் பகுதியினை, அரை பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அது மறைத்துள்ளதால் இத்தனை ஆண்டுகள் கண்களில் படவில்லை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இதைப் போன்ற அண்ட அமைப்புகளில் ஆறாவது பெரும் கண்டுபிடிப்பான ஸ்லோயன் பெருஞ் சுவரை (Sloan Great Wall) ஒத்து இதன் அமைப்பு இருக்கிறது.
விண்மீன்கள் சீரற்ற முறையில் அண்டம் முழுதும் சிதறிக் கிடப்பதில்லை என வானியலாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். அவை அண்ட வலையில் ஒன்று சேர்ந்துதான் காணப்படுகின்றன. அந்த வலை ஹைட்ரஜன் வாயுவினால் ஆரத்தில் கோர்க்கப்படும் முத்துக்களைப்போல மிகப் பெரிதான, பெரும்பாலும் வெற்றிடமான வெளியில் தென்படும்.
இந்த விண்மீன்களின் இடையில் காணும் இழைகளை வரைபடத்தில் கொண்டு வருபவர்கள் அண்டவியலாளர்கள் மற்றும் அண்ட வரைபடவியலாளர்கள் ஆவார். அதாவது, இப்போதைய தென் துருவச் சுவர் அண்டத்தின் வரைபடம் டேனியல் பொமராடெ (Daniel Pomarede) மற்றும் அவருடைய குழுவால் ஆதாரங்களின் துணைகொண்டு அமைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாரிஸ்- சக்லெ (Paris- Saclay) பல்கலைக்கழகத்தில் அண்டவியல் ஆய்வாளர் மற்றும் கார்டோகிராஃபர்.
இதற்கு முன்னரும் பிற விண்மீன்களின் கூட்டினை, அதன் அமைப்பின் பிரும்மாண்டத்தை அண்டவியலாளர்கள் ஆய்வு செய்து சொல்லி வந்தார்கள். அவ்வரிசையில் இப்போதைய தென் துருவச் சுவருக்கு முன்னர், புகழ்பெற்ற ஹெர்குலீஸ்- கொரொனா போரிலியாஸ் (Hercules-Corona Borealis Great Wall) சுவர் 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது அல்லது கண்ணுக்குத் தெரியும் உலகைவிடப் பத்து மடங்கு அதிக அளவிலானது எனப்பட்டது.
2014-லில் டேனியல் தன் சகாக்களுடன் சேர்ந்து (ழ)லான்யாகேயா (Laniakea) என்ற மாபெரும் இணைப்பு அண்டத்தினைப் பற்றிச் சொன்னார். சுவையான செய்தி என்பது நம் பால்வீதி அதில் வசிக்கிறது என்பதுதான். (ழ)லான்யாகேயா 520 மில்லியன் ஒளி ஆண்டுகள் பரந்தது – அதன் எடையோ 100 மில்லியன் பில்லியன் சூரியன்கள்!
தங்களுடைய புதிய வரைபடத்திற்கு, இந்தக் குழு புதிதாக அமைக்கப்பட்ட வான் கணக்கெடுப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, வானில் சாதாரணமாகக் கண்களுக்கும், ஏன் தொலைநோக்கிகளுக்கும் எளிதில் புலப்படாத அண்ட மண்டலத்தை எடுத்துக்கொண்டார்கள். இது வானின் தென் பகுதி. பிரகாசமான பால் வீதியானது, தனக்குப் பின்னாலும் சுற்றிலும் உள்ளவற்றையும் மறைத்துவிடுகிறது.
‘செம்பெயர்ப்பு’ (Red shift) என்ற வகைமையைப் பின்பற்றி வான் பொருட்களின் இடைத்தொலைவை அண்டவியலாளர்கள் அளக்கிறார்கள். அதன் அடிப்படை அறிவியல் விதி என்பது, உலகம் விரிவடைகையில் பூமிலிருந்து அந்தப் பொருட்கள் விலகிச்செல்வதற்கும், அதன் தொலைவிற்கும் உள்ள கணக்கீடு ஆகும். மிகத் தொலைதூரத்தில் உள்ள பொருள், மிக வேகமாக பூமியிலிருந்து மறைந்து காணப்படும் என்று வானவியலாளர் எட்வின் ஹபில் (Edwin Hubble) 1929-ல் சொன்னது இன்றுவரை பயன்பாட்டிலுள்ளது.
இதைத் தனது பேட்டியில் சொன்ன டேனியல், அண்டங்களின் தனிப்பட்ட வேகங்களையும் கணக்கில்கொண்டு இன்றைய செயல் முறைகள் அமைந்திருக்கின்றன என்றார். செம்பெயர்ப்பினையும் கணக்கில்கொண்டு, விண்மீன்களின் ஈரப்பு விசையால் இழுபறியில் ஈடுபட்டு அவை அடையும் செல்லியக்க வேகமும் இன்று எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
மறைந்துள்ள எடை எவ்வாறு ஈர்ப்பினால் விண்மீன்களை இயங்கச் செய்கிறது என்பதை இதன் மூலம் அறிவது இதன் மிகச் சிறந்த பயன். இது கரும் பொருள் (Dark Matter) என்பதை விளக்கும். இந்தக் கரும் பொருள் கண்களுக்குப் புலப்படாமல், எந்த ஒளியினையும் வெளிப்படுத்தாமல் ஆனால், ஈர்ப்பின் மூலமாக எதையும் இழுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. இந்த அண்டத்தின் பெரும்பான்மை பொருட்கள் கரும் பொருளின் கொடையே. விண்மீன்களின் அட்டவணையில் தென்படும் தனிப்பட்ட இயக்க நிகழ்வுகளை இதற்கான வழி முறைகள் மூலம் ஆய்ந்து முப்பரிமாண வரைபடம் ஒன்றை இவர்களால் தயாரிக்க முடிந்தது. இந்த முறையினால் விண்மீன்களைச் சுற்றி அவ்வளவு தெளிவற்ற ஏன் பகையார்ந்த (எனக்கூடச் சொல்லலாம்) பொருட்களின் முப்பரிமாண வரைபடத்தைத் தெளிவாகப் பெறமுடிந்தது. 2020, ஜூலை 9ல் வந்த ‘த ஆஸ்ட்ரோ ஃபிசிகல் (The Astro Physical) இதழில் இதைப் பற்றிய மேல் விவரங்களைப் பார்க்கலாம்.
இந்த வரைபடம் அசத்தும் பொருட் குமிழியை வானின் தெற்குப் பகுதியில் காண்பித்தது; அதன் பெரும் பகுதி வடக்கில் சீடெஸ் (Cetus) விண்மீனின் திசையை நோக்கியும் பிடிவாதமான மற்றொரு இறகு ஆபஸ் (Apus) விண்மீனை நோக்கியும் உள்ளதாம்.
நம் உலகம் பெரும் அளவுகளில் எப்படித் தெரிகின்றது என்பதை நமது அண்டவியல் மாதிரிகள் உறுதிப்படுத்த உதவுகின்றன என்று பிரின்ஸ்டன் பல்கலை, ந்யூ ஜெர்சியில் பணியாற்றும் நேடா பாஹ்கால் (Neta Bahcall) என்ற வான் இயற்பியலாளர் சொல்கிறார். “ஆனால், இந்த பிரும்மாண்ட, ஊடுறுக்கும் அமைப்புகள் எப்போது தொடங்கின, எப்போது முடிவுறும் என்பதைச் சொல்வது எளிமையானதல்ல. வெற்றிடத்தையும், இவ்விழைகளின் வலைப் பின்னலையும் பார்க்கையில் எழும் கேள்விகள் பொருண்மை சார்ந்தும் எழலாம்,” என்கிறார் அவர்.
டேனியல் குழுவினர் தங்கள் கட்டுரையில், தாங்கள் முழுமையாக இந்தப் பெரிய தென் துருவச் சுவரை வரைந்துள்ளோம் என்று சொல்லஇயலாது என்றே கூறுகின்றனர். ‘அதன் முழுமையைப் பற்றி எங்களால் அறுதியிட்டுக் கூற முடியாது; அது வழமைக்கும் மாறானதா என்பதையும்; அண்டத்தை மிகப் பெரிய வரைவிற்கு உட்படுத்தாமல் இக்கேள்விக்கு பதில் முழுமையாக இருக்காது.’
‘துளக்க முற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்’ – பாரதி.
https://www.livescience.com by Adam Mann July Issue.
– பானுமதி ந. ***