‘குற்றமும் தண்டனையும்’- நாவலும், ஊரடங்கின் படிப்பினைகளும்

டேவிட் டென்பி

[தமிழாக்கம்: பானுமதி ந. ]

இரக்கமற்ற உள்ளார்ந்த  பயணமும், இறையைத் தீவிரமாக அணுகுவதைச்  சுட்டும் சூழலும் கொண்ட ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கியின் மேற்சொன்ன நாவல் எவ்வாறு இந்தப் பேரிடர் காலத்தில் சுகமற்ற ஒலி அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது என்று கல்லூரி வகுப்பில் சிந்தித்துப் பேசியதை இப்போது பார்க்கப் போகிறோம்.

டேவிட் டென்பி (David Denby) ஜூன், 22, 2020

இந்தப் பேரிடர் காலத்தின் சிக்கலும், சகதியுமான நம்முடைய இந்தச் சூழ்நிலையை, 1866-ஆம் வருடம் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் நாயகன் ரோடியன் ரோமானாவிஸ் ரஸ்கோல்னிகோவ் (Rodion Romanovich Raskolnikov-ரஸ்கோல்னிகாஃப்) காணும் கனவில் நம்மால் உணரமுடிகிறது. ரிசர்ட் பெவியர் (Richard Pevear), லாரிஸ்ஸா வோலோகான்ஸ்கி (Larissa Volokhonsky) கூறியதின் ஒரு பகுதியைப் பார்ப்போம்.

ஆசியாவின் ஆழத்திலிருந்து ஒரு பயங்கரத் தொற்று, இதுவரை கேள்விப்படாதது, அறியாதது, ஐரோப்பாவில் பரவி உலகை அழிவை நோக்கித் துரத்துவதாக அவன் கனவு காண்கிறான். தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் அழிய நேரிடும்; ஒரு சிறு வஸ்து, நுண் கிருமியை ஒத்தது, மதிப்பில்லாதது, அது மனித உடல்களில் குடிபுகுகிறது. இந்த ஆவி உருப்படிகள், தர்க்கமும், ஊக்கமும் கொண்டுள்ளன. அவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் பித்தர்களாகிறார்கள். இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப்போல மனிதர்கள், ஒருபோதும், ஒருபோதும், உண்மையால் அசைக்கப்படாதவர்களாகவும், புத்திசாலிகளாகவும் தங்களைக் கருதியதில்லை. தங்களுடைய தீர்மானங்களும் விஞ்ஞானரீதியான முடிவுகளும் ஒழுக்கக் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் அசைக்க முடியாதவை என்று அவர்கள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. ஒவ்வொரு குடியிருப்பும் நகரமும் தேசமும் தொற்றால் அவதியுற்றுப் பைத்தியமாகும் நிலை. எல்லோரும் பெருங்கவலையில், ஆனால், யாரும் யாரையும் புரிந்துகொள்ளவில்லை. தன்னிடத்தில் மட்டுமே உண்மை உள்ளது என்றும், கைகளை விரக்தியில் விரித்து, அழுது, மார்பில் அறைந்து கொண்டும் பிறரைக் கண்டு தன்னை நொந்து கொண்டும்.. ஹும்.. மனிதர்கள்! எப்படித் தீர்மானிப்பது, எது நல்லது, எது கெட்டது, எவரை அல்லது எப்படி என்று அலைபாய்ந்தார்கள். யாரை நோவது, யாரைச் சாடுவது எனத் தெரியவில்லை.

நாவல் முடிவதற்குச் சில பக்கங்களுக்கு முன்னதாக இடம்பெற்றுள்ள இந்தப் பத்தி சொல்ல வருவதென்ன? அந்தக் கனவு வருவதை நினைத்துப் பாருங்கள். 23 வயதான, அழகான, பார்ப்பதற்கு வசீகரமான, சட்டக் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டு விலகிய, குறுகிய இடத்தில் வசிக்கும், அன்னையும் சகோதரியும் கொடுப்பதைக்கொண்டு, புனித பீட்டர்ஸ்பெர்க்கில் வாழும் ஓர் இளைஞன். நாசகரமான, உபயோகமற்ற சிறு (பேன்) கிருமி போன்ற அந்த அடகுக்கடைக்காரியைப் பணத் தேவைக்காகக் கொல்லத் திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியும் விடுகிறான். கொலைக் களத்திற்கு வந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியையும் கொன்றுவிடுகிறான். ஆனால், அந்தப் பணத்தை ஏனோ ஒரு வெற்று முற்றத்தில் புதைத்துவிடுகிறான்.

அவனுக்கு உண்மையில் பணம்தான் வேண்டுமா? அவனது நோக்கம்  கூலியைக் காட்டிலும் பரீட்சித்துப் பார்ப்பதாக இருக்கலாம். அவன் ‘உலக வரலாற்றில் இடம் பெற்றவர்களைப்’ பற்றிய ‘ஹெஹலி’ன் நூலைப் படித்திருந்தான். பெரிய மனிதர்களான நெப்போலியன் போன்றவர்கள், பதவிப் படிகளில் குற்றத் துணைகொண்டு ஏறியதாக அவன் நம்பினான். அந்தப் பெரும் புகழை அடைந்தவுடன் அவர்கள் மனித குலத்தின் நன்மையாளர்கள் எனக் கொண்டாடப்பட்டு, அவர்களது முந்தைய செயல்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகள் என்று எவருமே சொல்லாததை அவன் நினைத்தான். அவன் அந்த மாதிரியான மனிதனா?

அந்தக் குற்றத்திற்குப் பின்னான நாள்களில் அவனது ஆத்மா கனவுகளிலும் மாய மனத் தோற்றங்களிலும் மகிழ்ச்சியிலும் குற்ற மனப்பான்மையிலும் தள்ளாடுகிறது. அவன் எண்ணப்படி, ஈடற்றதும் நிறைவடைய இயலாக் கருணையும் கொண்ட சோன்யா (Sonya) என்ற 18 வயதான வேசியின் ஆலோசனைப்படித் தன் குற்றத்தை ஒப்புக்கொள்கிறான் – சைபீரியச் சிறைக்கு அனுப்பப்படுகிறான். அருகிலுள்ள கிராமத்தில் அவனுக்காக அவள் காத்திருக்கையில், உடல்நலம் குன்றி அவன் இந்த அவலமான கனவினைக் காண்கிறான்.

இந்தக் கனவு நம்மைச் சீண்டுகிறது: நோயுற்ற, விசித்திரமான நாவலின் கூட்டுத் தொகுப்பா அல்லது நாம் போவது எங்கே என்ற அறியாத எதிர்காலக் கூற்றா? தன் காலத்திலேயே சமூகச் சிதைவுகளைப் பார்த்து அதிர்ந்த அறிஞர் தஸ்தாயெவ்ஸ்கி. நாம் யார் என்றும் யாராகிவிடுவோம் என்ற நம் பயத்தையும் இந்தப் பேரிடர் காலம் நமக்குக் காட்டுவதை ரஸ்கோல்னிகோவின் கனவின் வாயிலாக அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

1961-ல் கொலம்பியா பல்கலையில் நான் மனிதநேய இலக்கியம் பயிலச் சேர்ந்தபோது, ‘குற்றமும் தண்டனையும்’ படித்தேன்; அது புது மாணாக்கர்களுக்கு ஒரு வருடப் பயிற்சியின் ஒரு பகுதி. சிறு வகுப்புகளில், வல்லமையும் அருமையும் வாய்ந்த ஹோமர், வெர்கில்லின் இதிகாசங்கள், கிரேக்கத் துன்பவியல் படைப்புகள், வேதாகம நூல்கள், ஆகஸ்டின், தாந்தே, மான்டேக்யூ, ஷேக்ஸ்பியர் போன்றவர்களின் படைப்புகளைப் படித்த இளையவர்கள் நாங்கள் அப்போது; 1985-ல் ஆஸ்டின் அந்தப் பட்டியலில் இடம் பெற்றார் – சேப்போ, வர்ஜீனியா வுல்ஃப், டோனி மோரிசன் பின்தொடர்ந்தனர். இந்த அனுபவங்களைப் பற்றி நீள் அறிக்கை எழுதி மீண்டும் 1991-ல் நான் இந்தப் படிப்பில் இணைந்தேன். 2019-ல் குளிர் பருவத்தில், முற்றிலும் சுயநலம் சார்ந்த காரணத்தினால், 76 வயதில், மூன்றாம் முறையாக இதில் சேர்ந்து கொண்டேன். உங்கள் எழுபதுகளின் நடுவில் ஒரு சிறு அதிர்வு – ‘ஒய்டிபூஸ் ரேக்ஸ்’ (கிரேக்கத் துன்பவியல் வரலாற்று நாடகம்) போன்றவற்றைப் படிப்பது தரும் அதிர்வு தேவையே. எங்களுக்குப் படிப்பதற்காகப் பணிக்கப்பட்ட பக்கங்களில் இருந்த பெருங்கேட்டையும் தாண்டிய ஓர் அதிபயங்கரத்தை எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கவில்லை.

‘குற்றமும் தண்டனையும்’ பற்றிய எட்டு மணி நேர விவாதத்திற்காக வகுப்பு ஆரம்பிக்கும்போது நான்கு வாரங்களுக்கு வளாகம் மூடப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு பின்னணியுடன், ப்ராக்ஸ் (Bronx), சார்லாட்ஸ்வில் (Charlottesville), சேக்ரமென்டோ (Sacramento), தென் ஃப்ளோரிடா (South Florida), ஷாங்காய் (Shanghai) போன்ற இடங்களிலிருந்து சென்ற இலையுதிர் காலத்தில் ந்யூயார்க் வந்த மாணவர்கள் அவ்வவ்விடங்களுக்குத் திரும்ப நேரிட்டது. பல்கலையின் தெற்கில் சில சுரங்க ரயில் நிலையங்கள் தள்ளியிருந்த ஓர் அடுக்ககத்தில், நானும் என் மனைவியும் தங்கியிருந்த இடத்திலேயே தனித்திருந்து, எந்தக் குறிக்கோளும் அற்று ஏதோ ஒன்று நடப்பதற்காகக் காத்திருந்தோம். குடியிருப்பைச் சுற்றிச் சுற்றிப் பாதம் தேய வெறுமனே நடந்தும் செயல் எதுவும் இல்லாமையால் தூக்கம் கெட்டும் தவித்தேன். இறையை இறைந்து வேண்டும் ஒருவனைப்போல் சமையல் அறையில் இருந்த சிறிய தொலைக்காட்சி பெட்டிமுன் பொழுதைத் தொலைத்தேன். மத நம்பிக்கையாளர்கள் சொல்வது: ‘வழமையான வழக்கங்கள் ஆன்மீக வளர்ச்சிக்குத் தேவை.’ ஏழு மணிக்கு, டிவியைத் தாண்டியுள்ள ஜன்னல் அருகே நின்று மரக் கரண்டியால் பாத்திரத்தில் ஓசை எழுப்பிப் பேரிடர் காலத்தில், முன்களத்தில் நின்று பணியாற்றுவோரைப் பாராட்டுவதில் நகரத்தாருடன் நானும் இணைந்துகொண்டேன். ‘குற்றமும் தண்டனையும்’ தொடங்கும்போது ரஸ்கோல்னிகோவ் தன்னுடைய அறையில் ஒரு மாதம் பதுங்கியிருந்தான். நான் மீண்டும் இந்த நாவலைப் படிக்கத் தொடங்கியபோது ஏறத்தாழ முப்பது நாள்கள் இயல்பு வாழ்விலிருந்து பிரிந்திருந்தேன்.

கல்லூரி வளாகத்தில் நடந்து, படிகளேறி, ஹமில்டன் கருத்தரங்கம் செல்வதற்குப் பதிலாக நான் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் என் வீட்டிலிருந்து வகுப்பில் நிகர் நிகழ்வில் இணைந்து கொண்டேன். வகுப்பு தொடங்குகையில் தோற்காத, ஆனால் கவலையான, பெருமூச்சுக்களில் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம். கொலம்பியாவின் ஆங்கிலத் துறையின் நிரந்தர ஆசிரியர் நிகோலஸ் டேம்ஸ் (Nicholas Dames) தான் எங்கள் ஆசான். நாற்பதுகளின் இறுதியில் இருந்த அவர் கச்சிதமான உடல்வாகும், ஆழ்ந்த கருமையான கண்களும், தாடை ஓரங்களைத் தொடும் கரு மீசையும், தாடியும் கொண்டவர். இருபது ஆண்டுகளாக விட்டுவிட்டு அவர் இலக்கிய மனித நேய வகுப்புகள் எடுத்துவருகிறார். ஒரு ஆசிரியருக்கு உண்டான பயிற்சியுற்ற குரலும் சற்றே உலர்ந்த ஆனால் ஊடுருவும் தொனியும் என்றுமே அலுப்புத் தட்டாத  அபூர்வமான விதத்தில் சொல்லக்கூடிய திறனுமுள்ள சிறந்த பேராசிரியர். வகுப்புத் தொடங்குகையில் ஜூமில் (Zoom) இணைவதில் அவருக்குச் சில சிரமங்கள் இருந்தன. பக்கங்களிலிருந்த ஜன்னல்களின் வழி நுழையும் ஒளியால் அவரது முகத்தில் நிழலாடியது. “நாம் எதற்காக இணைந்தோமோ அந்த அனுபவம் இதில் இல்லை” என்றார் அவர். மாணவர்கள் விடும் மூச்சு, அவர்கள் இருக்கைகளில் அசைவது, கவனம் சிதறுவது, குறிப்பு எடுப்பது எதுவும் தெரிய வாய்ப்பில்லையே! ஆனால், அவர் குரல் இருளைப் பிளந்தது.

ஒவ்வொரு பத்திகளையும் நுணுக்கமாக மாணாக்கர்களைப் படிக்க வைத்து, வகுப்பின்  முடிவில் அவைகளை நாவலின் அமைப்பில் நிக் டேம்ஸ் இணைத்தார். அவர் ஒரு வரலாற்றாசிரியர், மேலும் இலக்கியத்தின் சமூகப் பின்னணியைப் பற்றி விரிவாக அறிந்தவர். தஸ்தாயெவ்ஸ்கி அபாரமாகக் காட்டிய உண்மையும், ஈர்க்கும் தீமையுமான, கனவு நகரான 19-ம் நூற்றாண்டின் பீட்டர்ஸ்பெர்க்கை, நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் சொன்னார். 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கு ஐரோப்பாவின் பெரும் தலைநகர்களை விஞ்சும் வண்ணம் ஒரு நகரை, கட்டடவியலாளர்களையும், பொருட்படுத்த வேண்டாத அடிமைகளையும் கொண்டு பகுத்தறியும் சிறப்போடு அமைப்பதற்குப் பேரரசர் பீட்டர் ஆணையிட்டார். பேராசியர் சொன்னார், ‘இந்தத் திட்டம் சூழலியல் கோணத்தில் ஒரு தோல்வியே. வெள்ள அபாயங்கள் நிலவியதால், கழிவுகளை அகற்றுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டு அவை குடிதண்ணீரில் கலந்தன. இதனால், 1832-ல் காலரா பரவி, தனிமைப்படுத்தப்பட்டும் விலக்கிவைக்கப்பட்டும் சிரமத்திற்கு உள்ளான சாதாரணக் குடிமக்கள் ஒன்று திரண்டு எதிர்த்த போராட்டம் கிளர்ச்சியாக வெடித்தது. 1861-ல் அலெக்ஸான்டர் 2, அடிமைத்தனத்தை ஒழித்தபிறகு, விவசாயிகள் வேலை தேடித் திரளாக வந்தனர்’ என்று டேம்ஸ் சொன்னார். “அது ஒரு சுகாதாரமற்ற இடம்; அத்தனை மக்கள் திரளைத் தாங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதன்று.” ஜெர்மானிய சமூகவியலாளர் ஜியோர்க் ஸிம்மெல் (Georg Simmel) 1903-ல் சொன்ன ஒரு மேற்கோளை அவர் திரையில் காட்டினார்: ‘பெருநகரங்களும், மனநலமும்.’

“உளவியல் அடிப்படையில் பெருநகர் வகைத் தனித்தன்மை என்பது, உள்ளும் புறமும் வேகமாக நடைபெறும் இடையறாத மாறுதல்களால் நரம்புத் தூண்டுதல்களின் தீவிரத் தன்மையை உள்ளடக்கியது…. வேகமாக ஆக்கிரமிக்கும் மாறும் படிவங்கள், ஒரு சிறு பார்வையில் கிரகித்துக்கொள்ளும் கூர்மையான தொடர்ச்சியின்மை, எதிர்பாராமல் முன்னோக்கிப் பாயும் பதிவுகள், முத்திரைகள்.”

“ஸிம்மெல் சொல்லும் இந்த வேரற்றத் தன்மை விட்டுவிலகும் விரக்தியினாலும், கடன்களாலும் ஏற்படுகிறது,” என்று எங்கள் பேராசிரியர் சொன்னார். “அது ஒரு நிலைத்த சித்தபிரமையை ஏற்படுத்துகிறது – தர்க்கமற்ற ஒன்றை நெய்கிறது. கனவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.”

பெரும் அரசக் கட்டடங்களையும், மக்கள் கூடும் பெரும் சதுக்கங்களையும் தஸ்தாயெவ்ஸ்கி கண்டுகொள்ளவில்லை. அவர் வீதி வாழ்வை எழுதுகிறார் – வாசாலகமான குடிகாரர்கள், தொலைந்த பெண்கள், பசியினால் சிறு சில்லறைகளைப் பெறுவதற்குப் பிறரை மகிழ்விக்கும் குழந்தைகள்; அவரது பீட்டர்ஸ்பெர்க், மகிழ்ச்சி தொலைந்த திருவிழா நகர், முதலாளித்துவமோ, கம்யூனிசமோ இல்லாத சமூகம், ஆரம்பித்த இடைநிலையிலேயே சிக்குண்டு நின்றுவிட்ட சமுதாயம், குறைவாக மத்தியநிலை வருமானம் உள்ள மக்கள் என்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாழ்வைத் தக்கவைக்கும் காப்பீடான ‘வேலை’ என்ற ஒன்றைத் தொலைத்ததாகத்  தென்படுகிறது. பேராசியர் சொன்னார்: “மிகச் சிலரைத் தவிர ஒவ்வொரும் வாடகை வீடுகளில் இருக்கிறார்கள்.” “கட்டுப்படியாகாத இருப்பிடங்களைவிட்டு இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.” சமூக நல்லிணக்கங்கள் தேய்கின்றன. சமூகக் கட்டமைப்பு இல்லாமையால், குடும்பங்கள் சிதைகின்றன. அப்படிக் குடும்பங்கள் இருந்தாலும், அவை நுண்ணிய துளைகள்கூடி நைந்து போகும் நிலையில் உள்ளன.”

இந்தப் பின்னணியில் பார்க்கையில் ரஸ்கோல்னிகோவ் அந்த அடகுபிடிக்கும் அம்மாவிடம் கொண்டிருந்த பெருங்கோபம் வேறொரு கோணத்தில் புலனாகிறது. பணம், கௌரவம் போன்றவற்றில் அவனும் இன்னும் சில பாத்திரங்களும் ஈடுபாடு எதுவும் காட்டவில்லை; அரசு அதிகாரிகளுடன் சந்தேகத்திற்குரிய தொடர்பு, அர்த்தமில்லா வேலை கிடைக்கக்கூடிய மெல்லிய வாய்ப்பு, பழைய கடிகாரம் போன்ற சற்று மதிப்புள்ள பொருள்கொண்டவர் என்ற மதிப்பு எதுவும் பொருட்டல்ல. அறுபது வயதான, முதிர்ந்த செம்மறி ஆடு போன்ற கூர்மையான, பகைகாட்டும் வெறுக்கத்தக்க சிறு விழிகள் கொண்ட அலியோனா இவானோனா (Alyona Ivanovnaa) அந்த அடகு பிடிப்பவள், அவளை இவர்கள் தீவிரமாக வெறுக்கிறார்கள். ரஸ்கோல்னிகோவ், அவளை அகற்றும் கடும் சினத்தில் இருக்கிறான்.

தீவிரவாதமும், சீர்திருத்தக் கருத்துகளும் நாற்றென வளரும் தாவர வீடாக தஸ்தாயெவ்ஸ்கி அனுபவித்த நகரம், ரஸ்கோல்னிகோவ் குடியிருந்த நகரமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. அப்பொழுதுதான் அரியணை ஏறிய நிகோலஸ் 1 க்கு எதிராக,  பீட்டர்ஸ்பெர்க்கில் சில அதிகாரிகள் மூவாயிரம் ஆண்களுடன் 1825, டிசம்பரில் புரட்சி நடத்தினார்கள். ஜார் அரசர் பீரங்கிகளைக்கொண்டு புரட்சியை ஒடுக்கினார். 1840 பிற்பகுதியில்,  இருபதுகளிலிருந்த தஸ்தாயெவ்ஸ்கி, பெட்ராஷாவ்ஸ்கி (Petrashevsky) வட்டத்தில் ஓர் அங்கத்தினர். இலக்கியம் படித்த மனிதர்கள் ரஷ்ய சமூகத்தைச் சீரமைப்பதைப் பற்றி அதில் விவாதித்தார்கள். (சிலர் ஜார் அரசைக் கவிழ்ப்பது பற்றியும்.) இவரைக் கைதுசெய்து, தூக்கிலிடுவதுபோல் அச்சமூட்டி, சைபீரியச் சிறைக்கு அனுப்பினார்கள்; புதிய ஏற்பாட்டை அவர் அங்கே ஊன்றிப் படித்தார்.1859-ல் பீட்டர்ஸ்பெர்க் திரும்பி வருகையில், அவர் அன்னை தேசமான ரஷ்யாவை, சனாதன தேவாலயங்களை நம்பினார்; தீவிரவாதத்தையும் முதலாளித்துவம் கலந்த இடைநிலை தாராளமயப் பார்வையையும் வெறுத்தார். இந்தக் கருத்தியல் மாற்றங்கள் அவருக்குப் பெரும்பயன் தந்தன; தீவிரம் மற்றும் அதன் எதிர்வினை மனோபாவங்களை அவரால்  இனங்கண்டு வெற்றிகொள்ள முடிந்தது. நிலைதடுமாறும் ஓர் இளைஞனை ஆக்கிரமிக்கும் கற்பனைகள், அவனை எங்கே இட்டுச் செல்லும்  என்பதை மதம் சார்ந்த ஓர் எழுத்தாளர்போல் அவர் படைத்தார். அவருக்கு நீறு பூத்திருக்கிறது நெருப்பு என்பது நிச்சயமாகத் தெரியும். மார்ச் 1881-ல் இவர் இறந்த ஒரு மாதத்திற்குப்பின், புரட்சியாளர் குழுவைச் சேர்ந்த இருவர், சீர்திருத்தக்காரரான ஜார் இரண்டாம் அலெக்சாண்டரைப் பீட்டர்ஸ்பெர்க்கில் குண்டு வீசிக் கொன்றார்கள். தலைமறைவாக இருந்த லெனின் 36 வருடங்களுக்குப் பிறகு நகரத்திற்குத் திரும்பி போல்ஷெவிஸ் அதிகாரத்தை நிலை நாட்டினார். நடந்து கொண்டிருக்கும் பேரழிவினால் ஆன்மீக ரீதியில் முக்கியமான அலைப்புறும் மாயமென, ஆனால் தோல்வியடைந்த ரஸ்கோல்னிகோவ்!

வருடத் தொடக்கத்தில் கருத்தரங்கு மேஜையைச் சுற்றி அமர்ந்து நாங்கள் சுவைபட விவாதித்தவைகளுக்கு, இந்தத் திரைகள் ஈடில்லை. தாங்கள் இருந்த இடத்தில் பெரும்பாலும் மௌனமாக இருந்தனர் மாணவர்கள். ஆனால் பேராசிரியர் டேம்ஸ் நாவலை விரிவாக்கி, பற்பல முரண்படும் குணங்கள்கொண்ட ரஸ்கோல்னிகோவைப் பற்றி விவரிக்கையில் பெரும் வெட்ட வெளியிலிருந்து வெடித்துவரும் ஒலியைப்போல் ஒரு மாணவன் பேசினார். நான் அவரை அன்டோனியோ (Antonio) என அழைக்கிறேன்.

‘அவன் திமிர் பிடித்தவன்; தான் செய்வது சரி என்று நினைப்பவன்.’ அவர் சொன்னார்: ‘பிறரைக் கட்டுப்படுத்தும் விதிகள் தன்னைப் பிணைக்காது என்று எண்ணியவர்; பெரிய மனிதர் என்ற கருத்துருவே அவ்வளவு ஏற்புடையதா என்ன? நடக்கக்கூடியதா? உலக நன்மைக்காகக் கோடரியால் இரு பெண்களைக் கொன்றுவிட்ட அவதாரமாகத் தன்னைச் சொல்லிக்கொள்வது, அக்கொலையின் சுவடு படியாமல் நடந்துகொள்வது இதெல்லாம் எவ்வகையில் சரி? ரஸ்கோல்னிகோவ் சார்பில் பேசும் நாம் அனைவரும் அந்தக் கேள்வியின் சாயல்கள். அத்தகைய கொடூரச் செயலைத் தர்க்கபூர்வமாக எவராலும் நிறுவ முடியுமா? 20-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் இது ஒரு சவாலான கேள்வி. இந்தக் கேள்வியைப் புறம் தள்ளிப்போனால் நீங்கள் எத்தகைய மனிதராக இருப்பீர்கள்?’

இனிய பிரகாசமான புன்னகை; மெலிந்த உடல்; ஓடுபவர்; பெரிய கண்ணாடி அணிந்திருப்பவர்; ஸேக்ரமென்டோவில் வசிப்பவர். ஜெஸ்யூட் பள்ளியில் நல்ல கல்வி பெற்றவர், 19 வயது அவருக்கு; கவனமும், ஆழ்ந்து படிக்கும் திறனும் உள்ளவர். எழுதிப் படித்ததைப்போல் தோற்றம் தரும் பெரும் வாக்கியங்களில் பேசுபவர். அவர் பேசுவதைக் கேட்கும்போது, கோட்பாட்டு மனம்கொண்ட கொலையாளியின் அடையாளத்தை  ஒரு கணம் நினைக்கிறோம்.

சரியான விஷயங்கள் தவறுவதில் ஏற்படும் கோபமும் இனத்தார்பால் நேசமும் ரஸ்கோல்னிகோவிற்கு அந்தக் கடுகடுப்பான மன நிலையிலும் இருக்கிறது. அவன் குடும்பமும் நட்பும் அவனைக் கொண்டாடுகிறார்கள்; திறமை மிகுந்த சிறு நுட்பங்கள் மூலம் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர் Porfiry, அவனுக்கான நியாயங்களை நம்புகிறார். ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் முக்கியப் பேசுபொருளான, அதிகம் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றிய ரஸ்கோல்னிகோவின் எண்ணங்கள், எங்கள் வகுப்பில் பல மாணவர்களைக் கிளரச் செய்தன; அதிலும், குறிப்பாக ஜூலியா (Julia) என்று நான் சுட்டும் பெண் அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசினார். ரஸ்கோல்னிகோவின் தங்கை துன்யா (Dunya), அபார அழகி, மிகுந்த புத்திசாலி, ஆனால் வறுமையில் இருப்பவள், அதனால், நடுத்தர வயதான, வெறுக்கத்தக்க இருவர்  (இழிவான) பணத்தின்மூலம் அவளை மணக்க நினைப்பது ரஸ்கோல்னிகோவின் அறக் கோபத்திற்குத் தூபம் போடுகிறது. “தன்னை ஒரு வேசியின் நிலைக்கு அவள் தாழ்த்திக்கொண்டுவிட்டாள் என அவன் உறுதியாக நினைக்கிறான். திருமணம் என்பதே ஒருவகை வேசித்தனம், ஒருவகை அடிமை முறை என்ற அவன் எண்ணம் தீவிரமான முற்போக்கான ஒன்று,” என்று ஜூலியா சொன்னார். “இது ஒருவகை கேதரீன் மெக்கின்னா. Catherine Mackinnaon.)” (இவர் அமெரிக்காவின் புரட்சிகரப் பெண்ணியவாதி; வழக்கறிஞர்.)

ஜூலியாவின் குடும்பத்தினர் க்யூபன் கதோலிக்கர்கள். ஆண் என்று பிறந்ததாலேயே  மேம்பட்டவர்கள் என்று தம்மை எண்ணிக்கொள்ளும் பையன்கள் படித்த தெற்கு ஃப்ளோரிடா கல்விச் சாலையில் தன்னைப் பெண்ணியவாதியாக வார்த்தெடுத்தவர். வகுப்பில் ஒரு நொடி தயங்கி, பின்னர் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, சிக்கலான பெண்ணியக் கருத்துக்களையும், சமூக நீதிகளையும் அவர் சொன்னார். அவருக்கு ரஸ்கோல்னிகோவ் ஒரு புதிர். “தத்துவங்களைக் கேடயமாகக்கொண்டு தன்னைக் கொலையிலிருந்து விலக்கி நிறுத்துகிறார். ஆனாலும், பெண்களை, தம் தங்கையை மட்டுமல்ல, அந்தத் தெருவில் இருக்கும் வழியற்ற இளம் பெண்களையும் அவர் பாதுகாக்க நினைக்கிறார். பெண்களுக்கு உதவுவதன்மூலம் அவர்கள்மீது தன் ஆதிக்க சக்தியை நிலைநிறுத்தும் ஆணின் வெற்றியில் அவருக்கு நாட்டமா? ப்ரான்டெஸ்சைப் (Brontes) போல், ரஷ்யாவில் எப்போதும் நிலவும் வன்முறை ஒரு பின்னணியாக, தொடரும் வன்முறையைப் பெண்கள்மேல் செலுத்தும், அவர்களைக் கீழ்ப்படியச் செய்யும் இந்தக் கீழ்நிலை தஸ்தாயெவ்ஸ்கிக்கு தாங்கவொண்ணா கோபத்தைக் கொணர்கிறது. நகைச்சுவையாகச் சொல்வதுபோல் ஆண் பாத்திரங்கள் பெண்களை அடிப்பது தங்களின் உரிமை என்கிறார்கள். ஜூலியா அதை நகலெடுத்து, “அவள் என் சொத்து; நான் மேலும்கூட அவளை அடித்திருக்கலாம்,” என்று வெறுப்புக் குரலில் சொன்னார். நாவலின் போக்கில், மூன்று வேறுபட்ட பெண்கள், வரம்பு மீறிய வசைகளாலும், அவமானப்படுத்தப்படுவதாலும், தங்களுடைய ஆரம்ப நடு வயதிலேயே இறந்து விடுகிறார்கள். இது தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் காணப்படும் ஒரு சிறப்பு அம்சம்.

நாவலின் முக்கியக் கருவான சரிவினைப்பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை: தொடர்பறுந்த பீட்டர்ஸ்பெர்க், சிதையும் சமூக நல்லிணக்கங்கள், குடியும் வன்முறையும்; ஏப்ரல் மாதத்தின் இன்றைய சூழ்நிலையில் எங்களது நகரம் பெரும்பாலும் காலியாக உள்ளது என்று உணர்ந்தாலும், அமெரிக்கத் தெருக்களில், வேலையில்லா மனிதர்கள், வேலைக்குத் திரும்பமுடியும் என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்ட சிலர், அந்த நம்பிக்கையே இல்லாத பலர் ஆகியோர் நிறைந்திருப்பதாக நான் கற்பனைசெய்தேன். பித்து நிறைந்த பெருமைக் கனவுகாணும்  குழப்ப மனநிலையில் ரஸ்கோல்னிகோவ் , பாதிவரையே அதுவரை படித்துவந்த நாவல், இதன் மத்தியில் நாங்கள் இருந்தோம். அடுத்த பாதிக்கு நாங்கள் செல்வோமா? எனக்குப் புதிதான, பெண்ணிய நோக்கில் இந்த நாவலைப் பார்த்த ஜூலியா, மேலும் ஒரு செய்தியைச் சொன்னார்: ஒரு கூரையின்கீழ் முடங்கியிருக்கும் தம்பதியரின் இடையே குடும்ப வன்முறைகள் கூடியிருப்பதை நாளிதழ்கள் பிரசுரித்திருப்பதைப் பற்றிச் சொன்னார். விமர்சகர் ஜாக்குலின் ரோஸ் (Jacqueline Rose) சொல்கிறார், “தாங்கள் சமீபத்தில்பெற்ற விடுதலைக்காகப் பெண்கள் இப்போது தண்டிக்கப்பட்டனர்.”

தற்கால அதிர்வுகளை இந்த நாவலில் ஏற்றிப் படிப்பது, அதைச் சிறு வட்டத்திற்குள் குறுக்கி இறுக்கமாகப் படிப்பதாகும் என நான் அறிவேன். ‘குற்றமும் தண்டனையும்’ பல விஷயங்களைப் பேசுகிறது – குற்ற மனோவியல், குடும்பங்களின் விதி, தற்பெருமையும் சினமும் மிக்க தனி மனிதர்களின் நிலை தடுமாற்றம்; புத்தகத்தின் பாதி வாசிப்பிலேயே அந்த அபாரக் கதைசொல்லி, தன் மிகைப்படுத்தும் முறையால் என் கவலைகளைத் தணித்தார். நம்மை மகிழ்விக்கும் ஆதிக்கமுள்ள வலுவான நகைச்சுவைகொண்ட கலைஞர், விமர்சகர் வி. எஸ். பிரட்செட் (V.S. Prirchett) சொல்வதுபோல், தங்கள் வம்சாவளியையும் தங்கள் பிரச்னைகளையும் ‘வாயினால் பாடும்’ கதை மாந்தர்கள், விஸ்வாசமும் துரோகமும் கருத்தும் வதந்திகளும் உருகும் தனிமையில் நான் பார்த்தேன். நல்லொழுக்கம் உள்ளவர்களும், தீய குணங்கள் நிறைந்தவரும் நடத்தையில் நம்பிக்கை உள்ளவர்களாக, அதேநேரம் ஒருவரைப்பற்றி மற்றவர் பேசுவதை நிறுத்தாதவர்களாக இடம்பெறுகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் கோமாளிகள்கூட நம்மை ஆசுவாசப்படுத்துகிறார்கள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் இரு எல்லைகள்- இரக்கமற்ற உள்முகமும் தீவிரமாக இறைவனை அணுகுவதும் எப்போதையும்விட இப்போது அதிகப் பொருளுள்ளதாகத் தோன்றுகிறது. எத்தனை இலட்சக்கணக்கான மனிதர்கள் இன்று தங்கள் அறைகளில் வெற்றுப் பார்வையுடன் தமக்குத்தாமே முணுமுணுத்துக்கொண்டு, உயிர் வாழ்தலின் அர்த்தத்தைப் பரிசீலித்துக்கொண்டு முடங்கியிருக்கிறார்கள். தீமைகள் சுட்டும் தெளிந்த ஞானத்தையும், உண்மைகளின் அபத்தத் தேவைகளையும் பற்றி அவர் எழுதினார். திடுக்கிடும் முன்மொழிகளோடு தன்னையும், தன் வாசகர்களையும் அவர் அகழ்ந்து ஆராய்ந்தார்; கடவுள் இல்லாத, அழியாத வாழ்வு மனிதர்களை என்ன செய்யும்? பெரிய கேள்விகள் வியக்தமாகலாம் – ஆனால், ஒரு கருத்து, அவரது புனைவில் இடம்பெறுகையில் அதற்கென ஓர் இடம் – எதிர்ப்பதை எதிர்க்கிறது – அல்லது வளர்க்கிறது, மறுதலிக்கிறது 200 பக்கங்களுக்குப் பிறகு. இத்தகைய முரண்பாடுகளை நாம் கதாபாத்திரங்களில் கவனிக்கிறோம். ரஸ்கோல்னிகோவின் மயக்கக் குழப்ப நிலையை அவனது செயல் களமாக்கிவிடுகிறார் இவர்.

மாணவர்கள் தங்கள்  வழமையான வசிப்பிடத்திற்குத் திரும்பிவிட்டார்கள். (நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது.) மூன்று நான்கு படிப்புகள் அவர்களுக்கு இருந்தன – ஊசலாடும் எதிர்காலம் குறித்த கவலைகள்பற்றியோ சொல்லவேண்டாம். அவர்களின் கல்லூரிக் கனவுகள் குழப்பத்தில், நட்புகளில் இடைவெளி; கல்லூரி சார்ந்த மற்ற செயல்பாடுகளும், கல்வித் தொழிற்முறை பயிற்சிகளும் முற்றிலுமாக மறைந்தன. நாங்கள் ஏப்ரலில் சேர்ந்து படிக்கையில் பல்கலையின் ந்யூ யார்க் – ப்ரிஸ்பெடேரியன் (New york – Presbyterian) மருத்துவமனை இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பியிருந்தது. நகரில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மனிதர்கள் இறந்தனர். அதனால், நம் கலாசார இடங்கள் மூடப்பட்டன – தேவாலயங்கள், பள்ளிகள், பல்கலைகள், நூலகங்கள், புத்தகக் கடைகள், ஆய்வுக் கலாசாலைகள், அருங்காட்சியகம்; ஒபரா குழுமங்கள், இசை நிகழ்த்தும் கூடங்கள், திரையரங்கங்கள்; நாடக நடனக் குழுக்கள், கலைக்காட்சிக் கூடங்கள், படப்பிடிப்புத் தளங்கள், உள்ளூர் கலைக் குழுக்கள் (உள்ளூர் மது விடுதிகள்) எது பிழைக்கும், எது அழியும் என்பதை யார் அறிவார்?

தோல்லியுற்ற மனோபாவத்தில் அமைதியிழந்து, மௌனமாக மாணவர்கள்; படித்ததைப்பற்றிய தத்தம் எதிர்வினைகளை வகுப்பின் இடையிடையே அவர்கள் பேராசிரியர் டேம்ஸுக்கு அனுப்பினர். அதைக்கொண்டு அவர்களை அவர் உரையாடலுக்குள் இழுத்தார். அந்தக் கடைசிக் கனவையும், அச்சமூட்டுகிற சமூகச் சிதைவையும் நாங்கள் நெருங்குகையில் இப்படியான பயங்கரமான இந்தப் பார்வைக்கு நாவலில் ஏதேனும் குறி உள்ளதா என்பதைத் தேடினேன்; அதன் நேர்எதிரான, நன்மை நிரம்பிய  உலகின் சாத்தியக்கூறுகளையும், சுழல் முரண்களால் அமைந்த அவருடைய எழுத்து அறிகுறியாய்க் காட்டியதா என்பதையும்; வகுப்பில் தார்மீக மீறல்கள் மற்றும் கருணை, இரக்கம் இவை பற்றிய விஷயங்களைப் பேசலானோம். நமக்கு மற்றவரிடம் உள்ள கடப்பாடு என்ன? துயருற்றவர் அடையும் மீட்சிக்கு மதிப்பிருக்கிறதா? அமெரிக்கர்களுக்கு இந்தக் கடைசிக் கேள்வி வினோதமானது, வெறுப்பூட்டக்கூடியது; ஆனால், இந்த ஏப்ரல் மாத நடுவில் கஷ்டங்கள் எங்கும் நிரம்பியிருந்தன.

அரும்பெரும் உரிமைக்காகச் செய்யப்படும் தவறுகள் ஒருவருக்கு மேன்மைதரும் என்பதில் அன்டோனியோ வியப்படைந்தார். ஆனால் குற்றம் செய்யும்போதே ரஸ்கோல்னிகோவ் குறுகிய காலம் தன் நிலையிழந்து, கிட்டத்தட்டச் சமாதி நிலையில் ஒன்று மாற்றி ஒன்று முட்டாள்தனமாகச் செய்துகொண்டே போகிறான். காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருக்கையில் அந்த அடகுக்கடைகாரியைப் பற்றி யாரோ சொல்வதைக் கேட்கும்போது அவன் பிணம்போல மயங்கிவிழுகிறான் என்பதை அன்டோனியா கவனிக்கவும் செய்கிறார். “அவர் உடலின் இயக்கம் தடுமாறுகிறது; நீங்கள் என்னதான் புத்திசாலித்தனமாகத் தப்பிக்கப் பார்த்தாலும் அந்தச் செயலின் பின்விளைவுகளை நிறுத்த முடிவதில்லை.” கொலைகாரருடன் அன்டோனியோவின் பிணைப்பு அவ்வளவுதான்.

தன் விழைவுகளையும், துக்கங்களையும் உளறும் ரஸ்கோல்னிகோவ்  தன்னை அவ்வாறு செயல்படத் தூண்டியது எது என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. வாசகன் இந்த மர்மத்தை விடுவிக்கட்டும் என்று தஸ்தாயெவ்ஸ்கி விரும்பவில்லை. அந்தக் குற்றத்தை அழுத்தமாக உறுதிசெய்தும், பொருந்தாத சிக்கல்களால் ஊக்கமளிக்கப்பட்டதாகவும் காட்டுகிறார். உள்ளார்ந்த சிக்கல்களுடன் உருவான கதாபாத்திரத்தைப்பற்றி ஒரு தீர்மானமான எண்ணம் எழுவது கடினம். பேராசிரியர் டேம்ஸ் கேட்டார் “அவர் அதிலிருந்து தப்பிக்க வேண்டுமா?” அவருக்குக் கலவையான எதிர்வினைகள் கிடைத்தன. தண்டனையிலிருந்து தப்பிக்கவும் தப்பிக்காமல் இருக்கவும் ரஸ்கோல்னிகோவ் விரும்புகிறான். கந்தகமெனக் காந்தும் அவனது  அக உரையாடல்கள்  மாறிமாறித் தன்னையும் வெறுக்கின்றன, பிறரையும் கடிந்துகொள்கின்றன. தன்னுடைய கேள்விக்குப் பதில்சொல்லும் பேராசிரியர் டேம்ஸ், “தஸ்தாயெவ்ஸ்கி ஓர் அபூர்வமான, பதற்றத்துடன்கூடிய ஆவலை ஏற்படுத்துகிறார், ஆனால், அது உளவியல் சார்ந்தது. அதை அவர் தீர்ப்பாரா?”

எழுத்தாளர் தார்மீக நோக்கிலும் பதற்றத்தைக் கொண்டுவருகிறார். தான் செய்தது முற்றிலும் தவறான ஒன்று என்று அவனால் உணரமுடிகிறதா? நாவலின் மூன்றாம் பகுதியில் மென்மையானவளும், தொடர்ந்து தன் எண்ணத்தைப் பகிர்பவளுமான சோன்யா அவனுக்கு ஒரு வழி காட்டுகிறாள். “அவள் ரஸ்கோல்னிகோவிடம் ஒரு நீதிபதியென வரவில்லை” என்ற பேராசிரியர் தொடர்ந்தார், “தார்மீக ஓங்கு நிலையைச் சுட்டும் தகுதியிலிருந்தும் பேசவில்லை.” அவள் சொல்கிறாள், “நாம் இருவரும் பாவிகள்.” ஆழ்ந்த மத நம்பிக்கையுள்ள பெண், நொறுங்கும் நிலையிலுள்ள தன் குடும்பத்தைக் காப்பாற்றும் தேவைக்காக அவள் தெருவிற்கு வருகிறாள்; அதில் தோல்விதான். ஒன்றுமில்லாததற்காகத் தன் மகிழ்ச்சியை இவள் இழந்துவிட்டாள் என்று ரஸ்கோல்னிகோவ் அவளை இகழ்வதைப் பொறுத்துக்கொள்கிறாள். தன் அவதிகளை அவன் அறிந்திருக்கிறானா என்று அவனை அழுத்தமாகப் பதிலுக்குக் கேட்கிறாள். சினம் மிகுந்த அந்த முந்தைய மாணவன் அவளது கருத்துகளுக்கு மாறுகிறான். துன்பத்தின் தேவையும் அதன் மீட்சிக்காகக் கர்த்தரும் எனக் காட்டுவது, ஒருக்கால், இலக்கியத்தில் அசாதாரணமான, திடமான பால் வேறுபாடற்ற மயக்கும் பொருளாக இருக்கலாம். இது நமக்கு என்னவாகப் பொருள்படுகிறது?

அடுத்த வகுப்பில் நாங்கள் நாவலின் இறுதிப் பகுதியைப் படித்தோம். ரஸ்கோல்னிகோவ் சிறை முகாமில் இருக்கிறான். விலகிய மூன்றாம் மனிதரின் பார்வையில் இதைக் கதையாளர் எழுதியுள்ளார். “முதன் முறையாக ரஸ்கோல்னிகோவின் தலையிலிருந்து நாம் நிலையாக விலகிவந்துள்ளோம்” என்றார் பேராசிரியர். “நாம் உளவியலிலிருந்து பிரிந்துவிட்டோம்; அது ஓர் இழப்பு என்ற உணர்வு எழுகிறது.” ஜூலியாதான் விடுதலையை உணர்ந்ததாகச் சொன்னார், ரஸ்கோல்னிகோவைப்பற்றிக் கதைசொல்லி குறிப்பிட்டதை அவர் எடுத்துரைத்தார். “காரணங்களைக், கருத்துக்களை ஆய்வதைவிட வாழ்வு என்ற ஒன்று இருக்கிறது;” இயங்கியல் என்ற தத்துவக் கோட்பாட்டைச் சொல்கையில் தஸ்தாயெவ்ஸ்கி அந்த முந்தைய மாணவனை அலைக்கழித்த அத்தனைக் கருதுகோள்களையும் குறிக்கிறார். மூளை முழுதும் சிந்தனை நெரிசல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ரஸ்கோல்னிகோவிற்கு மூச்சுக் காற்று தேவை.

இந்த நெருக்கும் நாவலில் காற்று எது? ‘நிச்சயமான வகையில் மதம் சார்ந்த ஆழ்நிலைத் தெளிவை இது சுட்டுகிறது.’ ஜூலியா நம் கவனத்திற்குக் கொண்டுவந்த அந்த வரி, “இயங்கியல் தத்துவத்திற்குப் பதிலாக வாழ்வைப்பற்றிப் பேசுதல்” என்பது இந்த நாவலின் மிக முக்கிய வரி. பேராசிரியர் கேட்டார், “ஆனால், வாழ்வென்பது எது?” ரஸ்கோல்னிகோவ் அந்த வாழ்வை உருவாக்கக் கடுமையாகப் போராடுகிறான்; ஆனால், தன் தனியுணர்வை அழுத்தமாக முன்னிறுத்துவதைவிட்டு விலகி சரணடைகையில் அந்தக் கடக்கும் ஆழம் கைகூடுகிறது. தனி மனித மகிழ்ச்சி, தனி மனித உரிமை, தனி மனித அதிகாரம் ஆகியவற்றை நாவல் கடுமையாகக் கண்டிக்கிறது. வகுப்பு முடிவில் கேமரா, பேராசிரியர் டேம்ஸ்ஸை நோக்கிக் குவிந்து விரிவெடுக்கையில், தம் கருமையான கண்கள்  நேரடியாக உற்றுப்பார்க்க அவர் எனது அலைபேசித் திரையில் உறைந்தார். நம் அனைவருக்கும் காற்று வேண்டும்.

கடைசிக் கனவு, நாவலின் இறுதிப் பகுதியில் பொதிந்திருக்கிறது. அறிவியல் புனைவும் பயங்கரமும் கலந்து படரும் ஒரு கனவு அது. “இங்கேயும் அங்கேயுமாக மக்கள் இணைவார்கள், எதையாவது செய்வதற்கு ஒப்புக்கொள்வார்கள், என்றும் பிரிவதில்லை என்று சத்தியம் செய்வார்கள் – உடனே தாங்கள் சொன்னதிற்கு மாறான ஒன்றைத் தொடங்குவார்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டத்தொடங்குவார்கள், சண்டையிடுவார்கள், கத்தியால் குத்திக்கொள்வார்கள்.” இந்தப் போராட்டத்திற்கு வஞ்சக இறுதிநிலை இருக்கிறது. இந்த நோயிலிருந்து தப்பிப்பிழைத்த வெகுசிலர் “தூய்மையானவர்கள், தெரிவுசெய்யப்பட்டவர்கள், புதிய தலைமுறையையும் புது வாழ்க்கையும் தொடங்க விதிக்கப்பட்டவர்கள்.” நாவலின் முற்பகுதியில் எழுத்தாளர் காட்டும் பீட்டர்ஸ்பெர்க்கைவிட வன்மை மிகுந்த ஒரு சமுதாயத்தை இந்தக் கனவு காட்டுகிறது. ரஸ்கோல்னிகோவின் அதீத மனதை அது படம்பிடிக்கிறது என்பதும் உண்மை: இருவரைக் கொன்ற அவன் பெருங்கூட்டத்தைக் கொல்ல விரும்புகிறான். ஆனால், இது அதன் எதிர்நிலையும்கூட அல்லவா? சிதையும் உலகின்மேல் அவன்கொண்ட எல்லையற்ற இரக்கமும், கருணையும் இவ்வகையில் வெளிப்படுகின்றன அல்லவா? சிக்கலும், முரண்பாடுகளுமாகவே அவன் இறுதிவரை இருக்கிறான்.

“அறியாத, பார்க்காத இந்தத் தொற்று” வரும் கனவினால், இந்த ஏப்ரலில் கலவரப்பட்ட பல வாசகர்களுள் நானும் ஒருவன். ஜூலியா எனக்கு  இமெயிலில், “அந்தக் கனவு ஓர் அறிபுனைவு, ஆனால் அரசியல் அறிபுனைவு; சிலர் தப்பிப் பிழைக்கிறார்கள் என்று அது காட்டுவது ஒரு மேம்பட்ட இனத்தைக் குறிப்பதாகும்; வெள்ளை ஆண்களின் சிறப்புரிமை என்ற புது வகைமையை அது ஏற்படுத்துகிறது. அந்தக் கனவு நம்மிடம் பிரதிபலிக்கிறது; பாதிக்கப்பட்ட மக்கள், பித்து என்று சொல்லத்தக்க வகையில் தங்கள் நம்பிக்கைகளில் விடாப்பிடியாக நிற்பது, அமெரிக்கர்கள் அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு ஒப்பானது” என்று எழுதினார். “மிச்சிகனைச் சேர்ந்த கன்சர்வேடிவ் கட்சியினர், ‘வீடடங்கு உத்தரவிற்கு’ எதிராகத் தலைநகரில் நடத்திய போராட்டங்களின் ஒளிப்படங்கள், எனக்கு தஸ்தாயெவ்ஸ்கி காட்டிய மக்கள் திரளைக் கண்முன் நிறுத்தியது. அவர்களின் முக பாவங்களும் கூச்சல்களும் தங்கள் தார்மீக நம்பிக்கைகள் சரியென்றே எண்ணும் அந்த மனோநிலையைக் காட்டியது.” அன்டோனியோ எழுதினார்; “ எது சரி, எது தவறு என இனம் காண்பதில் மனிதரிடம் வேறுபாடு உள்ளது. எங்கள் விஷயத்தில், கருணையும் காரணமும் தேவையான இந்தச் சூழலில், அதை விடுத்து, நிலையற்ற எதிர்காலம் குறித்த  குழப்பங்களால் அமைதியற்று, பெரும் பாகுபாடுகளுக்குள் சிக்குகிறோம் என்பதை அறிவோம்.” அவரது நம்பிக்கை: “எங்கே தவறினோம் என்பதை அடக்கத்துடன் அறிந்து, சோன்யா குறிப்பிடும் அந்தப் ‘பெருங்கருணை’யின் பாதத்தில் பணிந்து மேம்பட்ட மனிதர்களாவோம். இதை நாம் செய்யமுடிந்தால், வெற்று இருப்பாக இருக்கும் அவலமில்லை.”

தொலைக் கற்றலின்மூலம் நெருக்கமாகப் பயிலும் இனிய வினோத அனுபவத்தை இரு மாதங்களுக்குப்பின் என்னுடன் பயிலும் மாணவர்கள் உணர்ந்தார்கள். ஆனால், பல்வேறு தளங்களில் தெளிந்த புரிதல் ஏற்படுவதில் சிரமங்கள் இருந்தன. வீரத்துடனும் தயாளத்துடனும் செயல்புரிந்த முன்நிலையாளர்கள், இந்தத் தொற்றுத் தொடங்கிய காலகட்டத்தில் ந்யூ யார்க்கிற்கு விரைந்து சென்று உதவிபுரிந்த அயலாளர்கள் ஆகியோரை மட்டும் நான் நினைக்கவில்லை; கலைகளை, நிகழ் நிலையில் எடுத்துச் சென்றவர்கள், நம்பிக்கைக் குழுக்கள் அமைத்தவர்கள் அல்லது இந்தக் கடும் விரக்தியைக் கடந்து செல்வதைப்பற்றிய உபயோகமுள்ள அறிவுரை தந்தவர்கள் ஆகியோரையும் நினைத்தேன். தொற்று ஏற்படும் அபாயம் இருந்தும், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் (George Floyd) கொலையை எதிர்த்து ஊர்வலம்சென்ற நிகழ்ச்சி, ஒற்றுமையைக் காட்டியதை நினைத்தேன். கோடை தொடங்கியதால்,  பணம் சம்பாதிப்பதற்காக, உள்ளூரில், நகர்ப்புற கேளிக்கை விடுதி ஒன்றில், தரை, ஜன்னல்கள், கால்ஃப் வண்டிகள் போன்றவற்றைச் சுத்தம்செய்யும் வேலையை அன்டோனியோ செய்தார். “போராட்டமும் பேரிடரும் நிலவும் இந்தச் சூழலில், எதிர்காலத்தைப் பற்றி நினைப்பது கடினமாக இருக்கிறது” என்றவர், அரசு வேலை கிடைக்கும் சாத்தியங்களும் உள்ளன என்றார். இலாப நோக்கற்ற சட்டக் குழுமம் ஒன்றில் பயிற்சி பெறுவதற்கு ஜூலியா சேர்ந்திருந்தார் – ஒருக்கால், Amnesty International மனித உரிமை வழக்கறிஞராக ஆகும் திட்டமிருக்கலாம்.

ரஸ்கோல்னிகோவின் கனவை ஒத்து, நிர்மூலமாக்கும் கொந்தளிப்பு –  வெறுப்பும் சோர்வும் பயமும் கலந்த அந்த நிலையின் அருகில் வருவதைப்போல, ட்ரம்பின் அமெரிக்கா தோற்றமளிக்கிறது. எங்கும் இருக்கும் இந்த நோய், நம் பிளவுகளையும் சமமற்ற நிலையையும் விளங்கக்காட்டுகிறது.  இறந்த நூற்றாயிரக் கணக்கானவர்கள், இலட்சக்கணக்கில் வேலையிழந்தவர்கள், பலர் பசியுடன்; சில சமயங்களில், இந்த நாடு தன்னை அவிழ்த்துக் காட்டுவதைப்போல் தோன்றுகிறது. ‘இன வேறுபாடு ஒரு கிருமி, அமெரிக்கக் கிருமி’ என்று சிலர் பேசினார்கள். மனிதன் உண்டாக்கிய இந்தக் கசப்புச் சாட்டையை, இயற்கையின் செயல்பாடு என்று தவறாகச் சொன்னாலும் இந்தத் தொற்றானது எவ்வளவு ஆழமாக இந்த நாட்டின் வாழ்வைப் பாதித்திருக்கிறது என்பதையும் படம்பிடித்துக் காட்டுகிறது. அதிபரின் ஒவ்வொரு கூற்றும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. ‘ஆதிக்கத்தின் தேவை’ என்று அவர் பேசுகையில், நம்மீது ஆதிக்கம் கூடாதென்பதில் நாங்கள் உறுதி கொண்டோம். தலைமறைவாக இருந்த அந்தப் பரிதாபத்திற்குரிய கொலையாளியைப்போல நாங்கள் எங்கள் தனித் தன்மையைத் தவறவிடப் போவதில்லை. ஆனால் நாம் ஏற்படுத்திய சிக்கல்களின் பொறுப்பிலிருந்தோ, அந்தச் சிக்கல்களை மாணவர்களுக்குக் கடத்திய செயல்பாட்டிலிருந்தோ, அடுத்த அனைத்துத் தலைமுறைக்கான நம் கடப்பாடுகளிலிருந்தோ நாம் மீள்வது இயல்வதா? ரஸ்கோல்னிகோவின் கனவு வெளிப்படுத்தும் சமூக நீதியற்ற, அந்தக் கடும் கசப்பை மீற நான் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை மீள மீளப் படித்தேன் – பொது நலம் எவ்வாறு சமூகப் பிளவுகள், அநீதிகள் ஆகியவற்றைப் போக்கும் என அறியவும் தீர்மானமும் நம்பிக்கையும் தூண்டப்பட என்ன வேண்டும் என்பதையும் சுட்டும் குறிப்புகள் அதில் இருக்கிறதா எனப் பார்த்தேன். “நகரத்தில் நாள் முழுதும் மணி அடித்துக் கொண்டிருந்தது; ஒவ்வொருவரும் ஆணையிட்டு அழைக்கப்பட்டார்கள்; ஆனால், யார் ஆணையிடுகிறார்கள் என்றும் எதற்காக என்றும் ஒருவருக்கும் தெரியவில்லை.” ***

2 Replies to “‘குற்றமும் தண்டனையும்’- நாவலும், ஊரடங்கின் படிப்பினைகளும்”

  1. குற்றமும் தண்டணை நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள ரஸ்கோஸ்நிகோவின் கனவில் குறிப்பிடப் பட்டுள்ள தொற்றுக்கிருமியை மையமாகக் கொண்டு கொரொனா கால பிரச்சினைகளை விவாதிப்பது சிந்தனைக்கு உரியதுதான். குற்றவாளி ரஸ்கோனிவிகின் மனவுறுத்தலுக்காகக வரும் கனவின் தொற்று நோய்க்கும் கொரொனாவுக்கான சூழ்நிலைகள் வேறு. அக்கொடுங்கனவு ஒருகையில் அவனது குற்றத்திற்கான தண்டணை. ஆனால் கொரொனாவை கட்டுப்படுத்திய அரசுகள் தம்சுயநலத்துக்காக. மக்கள் விரோத நடவடிக்கைககளில் ஈடுபட்டு கொரொனா கொடுமைகளை மக்கள் மீதே சுமத்துவதே பெருந்தண்டணை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.