ஐமிச்சம்

மித்ரா அழகுவேல்

“வந்திருக்கவே கூடாது. இவ்வளவு தூரம்…தனியாக…. என்ன ஒரு குருட்டு தைரியம்? ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருந்தால் என்ன செய்வது? எந்த முகத்தை வைத்துக் கொண்டு வீட்டிற்குப் போவது?” 

எவ்வளவு முயன்றும் அமைதியாக இருக்கவே முடியவில்லை. மனம் ஏதோவொன்றை யோசித்துக் கொண்டே இருந்தது. கடிந்து கொண்டே இருந்தது. கோபமும் இயலாமையும் ஏமாற்றமும் என கலந்து கட்டி மூச்சுப் பாதையை அடைத்துக் கொண்டன. சன்னமாக வாயைத் திறந்து காற்றை உள்ளிழுத்து வெளியே விட்டேன். சுற்றிலும் மிக பரபரப்பாக ரயில் நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. ஏதோ விளையாட்டுப் போட்டிகளுக்காக கேரளா வந்திருந்த கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கூட்டம் ஒன்று ஆரவாரம் செய்து கொண்டிருந்தது. இன்னும் பயம் முழுதாக விலகிய பாடில்லை. பசி வேறு குடலைப் பிரட்டியது. டிக்கெட் வாங்கியது போக மீதம் இருந்த 20 ரூபாயில் 15 ரூபாய்க்கு தேநீர் ஒன்றை வாங்கிக் குடிக்கத் தொடங்கினேன். மகா மட்டம். அப்படியே குப்பைக்கூடையில் போட்டுவிட்டு வந்து பார்த்தபோது, நான் அமர்ந்திருந்த இடத்தில் வேறு யாரோ அமர்ந்திருந்தனர். அழுகையை அடக்கிக் கொண்டு ஓரமாகப் போய் நின்றேன். மீண்டும் மனம் கத்தத் தொடங்கியது.

“கைல காசு கூட இல்லாம எந்த தைரியத்துல ஊர் பேர் தெரியாத இடத்துக்கு கெளம்புன?”

எனக்கென்ன தெரியும் இப்படியெல்லாம் நடக்குமென்று? தெரியும்தான். ஆனால் நமக்கு நடக்காது அல்லது நாம் சமாளித்து விடலாம் என்று ஒரு நம்பிக்கை. சினிமாவில் உதவி இயக்குனராக வேண்டும் என்று முடிவு செய்து வாய்ப்பு தேடத் தொடங்கிய இந்த ஒன்றரை வருடத்தில் எத்தனையோ விதமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம். ஆனால், ஒன்று சொன்னாற்போல எல்லாரும் ஒரே கேள்வியைக் கேட்பார்கள். 

“நெறய பசங்களே தோத்துப் போன எடம். பொம்பள புள்ள சமாளிச்சுருவியா…”

நான் முழுக்க என்னை மட்டுமே நம்பினேன். என்னை மீறி எதுவுமே எனக்கு நடந்து விடாது என்ற நம்பிக்கை இன்றளவும் எனக்கு இருந்தது. முதன்முதலில் சென்னைக்கு வந்து ஒரு பத்திரிக்கையில் வேலை செய்தபோது என்னைத்தவிர அங்கிருந்த அனைவரும் ஆண்கள். இரவு பகலாக வேலை இருக்கும். அத்தனை பேருக்கும் ஒரே கழிவறை தான் இருக்கும். அங்கிருந்த ஒரு வருடமும் யாரிடமும் பணி நிமித்தமாகத் தவிர எதுவும் பேசியது கிடையாது. சென்னையின் பிரமாண்டமும், இந்த நகரத்தைக் குறித்து சினிமாக்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும், பெண்ணுக்கே இருக்கும் இயல்பான உள்ளுணர்வும் சேர்ந்து ஒரு வித இறுக்கத்தைப் புகுத்தியிருந்தன. ஒரு நகரத்தின் இயல்பென்பது அதில் வாழும் மனிதர்களின் இயல்பு தானே. அந்த இயல்பு புரிந்து போன போது நான் இயல்பாகவே சென்னைவாசியாக மாறிப் போயிருந்தேன். இங்கு என்னை மீறி எனக்கு எதுவுமே நடந்து விடாது என்பதை நான் ஆணித்தரமாக நம்பினேன். அந்த நம்பிக்கை தான் இதோ இந்த நடு இரவில் மொழி புரியாத ஒரு மாநிலத்தின் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்க வைத்திருக்கிறது. 

தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டு மாணவர்கள் அனைவரும் தத்தம் பைகளை எடுத்துக் கொண்டு தயாரானார்கள். அதைப் பார்த்து நானும் தயாராகப் போய் இருப்புப் பாதை அருகே நின்று கொண்டேன். கோட்டயம் ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில் இரண்டே நிமிடம்தான் நிற்குமாம்.  இரண்டு நிமிடத்தில் இத்தனை கூட்டத்தின் நடுவே எப்படி  பேட்டி கண்டுபிடித்து ஏறுவது என்பதை நினைக்கும் போது எரிச்சலாக இருந்தது. இதெல்லாம் ஒரு விஷயமா என்று உங்களுக்குத் தோன்றலாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் இப்போதுதான் முதல்முறையாக ரயிலில் பயணம் செய்யப் போகிறேன். ரயில் வந்து நின்றது. பெரும்பான்மையானோர் ஓடும் திசை நோக்கி நானும் ஓடத் தொடங்கினேன். ஆனால், அத்தனையும் முன்பதிவு செய்தோருக்கான பேட்டிகள். அவசரமாக ஓடிக் கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி அவசரமாக, “அன்ரிசர்வ்ட் பெட்டி எங்கருக்கும்?” என்றேன். கடவுள் புண்ணியத்தில் அவர் தமிழ் தெரிந்த மலையாளி. கடைசிக்கு முந்திய பெட்டி என அவசரமாகக் கூறினார். ஓடிச் சென்று கடைசி நொடியில் ஏறிப் பார்த்தபோது, என்னை நினைத்தால் எனக்கே பாவமாக இருந்தது. 

“ஏன் நேரம் இப்படி என்னைத் துரத்துகிறது?”

பெட்டி மக்கள் நெரிசலால் நிரம்பி வழிந்தது. நிற்பதற்கு கூட இடமில்லை. அவ்வளவு பேரும் ஆண்கள். மருந்துக்கு ஒரு பெண் கூட கண்ணில் படவில்லை. அத்தனை ஜோடிக் கண்களும் என்னையே வெறித்துப் பார்த்தன. மணி இப்போது 11.25, சென்னை சென்று சேர 9 மணி ஆகலாம். அதுவரை நின்று கொண்டே போக வேண்டுமா? இவர்களெல்லாம் இறங்குவார்களா? நன்றாக நிற்க இடம் கிடைத்தால் கூட போதுமானது. பாதுகாப்பாக சென்று சேர்ந்து விடுவோமா என ஏகப்பட்ட கேள்விகள் அடுத்தடுத்து தோன்றிக் கொண்டே இருந்தன. எங்கும் சாய்ந்து கூட நிற்க முடியாது. அத்தனை கம்பிகளும் ஆண் கரங்களால் நிறைந்திருந்தன. இந்த இரவு இத்தனை கோரமானதாக இருக்கும் என காலையில் கிளம்பும்போது நினைக்கவே இல்லை. கண்களில் தானாக கண்ணீர் சுரக்கத் தொடங்கியிருந்தது.   ஒவ்வொரு முறையும் இப்படி யாரையேனும் நம்பி ஏமாந்து போவதே வேலையாக வைத்திருக்கிறேன்.

இப்படித்தான் ஒருமுறை முகநூலில், 

”Need fresh/experienced assistant Director. shoot will be started by next week.”

என்றொரு பதிவைப் பார்த்து அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணிற்கு அழைத்துப் பேசினேன். மறுமுனையில் தன்னை இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவன், நன்றாகப் பேசினான். 

சுயவிபரக்குறிப்பையும் கதை ஏதேனும் எழுதியிருந்தால் அதையும் வாட்சப்பில் அனுப்பி வைக்குமாறு கூறினான்.  “I Love Cinema” என தன் கையில் பச்சை குத்தியிருப்பதை வாட்சப் முகப்பு படமாக வைத்திருந்தான். பின்னர் நேரில் சந்திக்க வேண்டும் என்று வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் இருக்கும் காஃபி டே-விற்கு வர சொன்னான். அங்கு சென்றதும் முதலில், உண்மையாகவே அவன் கையில் அப்படி பச்சை குதியிருக்கிறானா என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். கெளதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்ததாகவும், முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க இருப்பதாகவும், பாதி வெளிநாட்டிலும் பாதி இந்தியாவிலும் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறினான்.

“என்னை நோக்கிப் பாயும் தோட்டால மொத சூர்யா தான் நடிக்கிறதா இருந்தது தெரியுமா? அப்புறம் அவருக்கும் டைரக்டருக்கு சண்டை வந்திருச்சு. அதுனாலதான் தனுஷ்கிட்ட போச்சு படம்.” 

“நீங்க அங்க பாதுகாப்பா இருக்கலாம் கவலைப்படாதீங்க. உங்க கூட காஸ்டியூம் டிசைனர் ஒரு பொண்ணு தங்கும். She is from mumbai. produce reference” 

“ஹீரோயின் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் நீங்கதான் பாத்துக்கணும். i am not comfort with girls” என என்னென்னமோ பேசிக் கொண்டே போனான்.

 பின்னர், 

“அஸோஸியேஷன்ல ரெஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா?” என்றான்.

“இல்லையே…” 

“அச்சச்சோ… நாம வெளிநாடெல்லாம் ஷூட் போகணும்னா மெம்பர் ஆகியிருக்கணுமே மா. அதுக்கு 50000 ஆகும்.”

“இப்போதைக்கு மெம்பர் எல்லாம் ஆக முடியாது சார்.” என்றேன் வருத்தம் தோய்ந்த குரலில்.

“Thats okay…Thats okay… எனக்கு உங்க வொர்க் ரொம்ப புடிச்சிருக்கு. நான் ப்ரொட்யூசர் கிட்ட பேசுறேன்.” என்றான்.

பிறகு, ஏராளமான அறிவுரைகள். சினிமா இப்படி இருக்கும், அப்படி இருக்கும், இப்படி பேசுவார்கள், அப்படி பேசுவார்கள் நீ பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாரிடமும் தேவையில்லாமல் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், பயப்படாதே..நான் உனக்கு அண்ணன் மாதிரி. நான் பார்த்துக் கொள்கிறேன். அப்படி இப்படி என. ஆஹா… எத்தனை அற்புதமான இயக்குனரிடம் நாம் பணி புரியப் போகிறோம் என மகிழ்ந்து போனேன்.

மீண்டும் இரவில் அழைத்தவன், “உங்களால எவ்ளோ அமௌன்ட் தர முடியும்? மீதிய ப்ரொடக்சன் சைட்ல பாத்துப்பாங்க.” என்றான். 

அப்போதைக்கு என் கையில் 5000 இருந்தது. இன்றுவரை அவன் என்னை மீண்டும் அழைக்கவில்லை. ஆனால், அவ்வப்போது அதே பச்சை குத்திய கை புகைப்படத்தை வாட்சப் முகப்புப் படமாக வைப்பான். சரி வேறு யாரிடமோ மீட்டர் போடுகிறான் என நினைத்துக் கொள்வேன்.

இந்த இயக்குனரையும் முகநூல் வழியாகத்தான் தெரியவந்தது. மலையாள இயக்குனர். மலையாள திரைக்கதையை தமிழில் மொழிபெயர்க்க ஆள் வேண்டும் என குழுவில் செய்தி வந்திருந்தது. மொழி பெயர்ப்பு தானே என தொடர்பு கொண்டு பேசினேன். 

அதே வடபழனியில், அதே காஃபி டே வை ஒட்டியிருக்கும் சந்துக்குள் இருந்த ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இயக்குநர், அவரின் மனைவி மற்றும் தயாரிப்பாளர் என்று சொல்லப்பட்ட இயக்குனர் மனைவியின் உறவினர் ஒருவர். அனைத்து சந்திப்புகளும் அந்த ஹோட்டல் அறைகளிலேதான் நடந்தன. முதலில் திரைக்கதையில் உதவுமாறும், பின்னர் இதே படத்தில் உதவி இயக்குனர் ஆக பணி புரியலாம் என்றும் கூறினார். அங்கு சென்று வந்த 3 நாட்களும், ஒரு நாளுக்கு ஆயிரம் ருபாய் கொடுத்தனர். சிறிய அளவில் பிரசாத் ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டது. போஸ்டர்களில் உதவி இயக்குனர் என என் பெயரும் இடம் பெற்றதில் சிறிதளவு நம்பிக்கை ஏற்பட்டது. 

பூஜை முடிந்து கேரளா சென்று மீதி திரைக்கதையை மொழிபெயர்க்கும் பணி, வசனம் திருத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபடலாம் என்று சொல்லி அவர்கள் முதலில் சென்று விட, என்னை அடுத்த நாள் கோட்டயம் வரச் சொன்னார்கள். இயக்குனரின் மனைவியும் உடனிருக்கிறார்தானே என்ற நம்பிக்கையில்தான் நானும் கிளம்பிச் சென்றேன். 

ரயில் கோவையைத் தாண்டி இருந்தது. அநேகம்பேர் இறங்கியிருந்தனர். இப்போது கொஞ்சம் சுவாசிக்க காற்று கிடைத்தது. பெட்டி முழுவதும் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். வாழ்வின் முதல்முறையாக ஆணாகப் பிறந்திருக்கலாம் எனத் தோன்றியது. அருகில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் ஓரமாக அமர்ந்து கொண்டேன். அதற்குமேல் வைராக்கியமாக நிற்க முடியவில்லை. விடிந்ததும் சென்னை போய் சேர்ந்து விடலாம். சற்றே பாதுகாப்பான உணர்வு ஏற்பட்டது. அடுத்த நொடியே வேறொரு பிரச்சனை நினைவுக்கு வந்தது.

நண்பர்களிடம், வீட்டில் இருப்பவர்களிடம் என்ன சொல்வது? உண்மையை சொன்னால் உடனே வீட்டிற்கு வர சொல்வார்கள். இனிமேல் சினிமா கினிமா என்று அலைவது வேண்டாம் என சொல்வதற்கும் வாய்ப்புகள் அதிகம். அவர்கள் பக்கம் இருந்து பார்த்தால் அதில் நியாயம் இருக்கவே செய்தது. இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. சென்ற அன்றே திரும்பி வந்திருப்பதற்கு என்ன காரணம் சொல்வது எனத் தெரியவில்லை. ஒருவழியாக, அறை நண்பர்களிடம் ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்து விடலாம். வீட்டில் கேரளாவில்தான் இருக்கிறேன் என்றே சொல்லிக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். எதிர் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தவன் திடீரென எழுந்து வந்து என் அருகில் அமர்ந்தான். மீண்டும் எழுந்து நின்று கொண்டேன். 

மணி மூன்றைத் தொட்டிருந்தது. தூக்கம் கேட்டு கண்கள் கனன்று கொண்டிருந்தன. பேன்ட் பாக்கெட்டில் இருந்த கைபேசி அதிர்ந்தது. 

“If you want money and job call me”

சுரேஷ் அங்கிள் அனுப்பியிருந்தார். அப்படித்தான் அவரை அழைக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். சுரேஷ் அங்கிளை ஒரு வடபழனியில் ஒரு புத்தகக்கடை நடத்திய திரையிடல் நிகழ்வில் சந்தித்தேன். அன்றைய கலந்துரையாடலின்போது நான் நன்றாக பேசியதாகக் கூறி தன்னை தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னைப் பற்றிக் கேட்டபோது நான் உதவி இயக்குனராக முயன்று வருவதாகக் கூறினேன். என் எண்ணை வாங்கிக் கொண்டார். 

பிறகு அவ்வப்போது அழைத்து, “படம் அடுத்தவாரம் ஷூட்டிங் போய் விடும். தயாராக இரு. திருவல்லிக்கேணியில் இருந்து வடபழனி வந்து செல்வது கடினம். இங்கேயே விடுதி பார்த்துக் கொள். நான் ஒரு வாரத்தில் அழைக்கிறேன்” என்றெல்லாம் கூறுவார். அவர் சொல்லியது போல் எதுவுமே நடக்காது. ஆனால், அவரின் அழைப்பு மட்டும் மாதம் தவறாமல் வந்து விடும். ஒன்றிரண்டு முறை நேரிலும் சந்தித்திருக்கிறேன். கமலா தியேட்டர் அருகில் இருக்கும் ஆனந்தபவன் அவருக்கு விருப்பமான உணவகம். அங்கேதான் நேரில் சந்திப்பது. அப்போதும் அச்சுப்பிசகாமல் அதே வார்த்தைகளைக் கூறி வழியனுப்பி வைப்பார்.

பேசும்போதெல்லாம் அவ்வப்போது என் முதல்படம் நன்றாக போனது. தென்னிந்தியா முழுவதும் நல்ல வியாபாரம் என்று சொல்வார். நான் என்ன படம் என்றெல்லாம் கேட்டதில்லை. எப்போதும் யாரிடமும் நான் கேள்விகள் கேட்க மாட்டேன். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்வேன் அவ்வளவுதான். ஆனால் ஒருமுறை அவர் தயாரித்த படத்தின் 250 ஆவது நாள் வாழ்த்து போஸ்டரை வாட்சப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார். படத்தின் பெயர் ” மெத்தை மெட்டுகள்” 

அவரிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு 6 மாதத்திற்கு மேல் ஆகிறது ஆனாலும் தவறாமல் மாதாமாதம் இந்த மெசேஜை அனுப்பிவிடுவார்.

ஒருவழியாக ரயில் சென்ட்ரலில் வந்து நின்றது. என் கால்கள் நகர்த்த முடியாத அளவிற்கு மரத்துப் போயிருந்தன. மெதுவாக நடந்து பேருந்து நிறுத்தம் சென்றடைந்தேன். அப்படி ஒரு வழியை வாழ்வில் நான் அனுபவித்ததே இல்லை. கையில் இருக்கும் 5 ரூபாய்க்கு வொயிட் போர்ட் பேருந்தில்தான் செல்ல முடியும். 

கதவைத் திறந்ததும் அதிர்ச்சி ஆகிப் பின்னர் கட்டிக் கொண்டாள் அறைத்தோழி. எனக்கு அழுகை வெடித்தது.

“என்னடி ஆச்சு ஏதும் பிரச்னையா? ஏன் அழுவுற? என்னாச்சு?”

“ஆமாடி, திடீர்னு டைரக்டருக்கும் ப்ரட்யூசருக்கும் சண்டை வந்து படம் ட்ராப் ஆயிடுச்சு.”

அவள் எதுவும் புரியாமலேயே, “லூசு வுடு பாத்துக்கலாம். அழுவாத…” என என்னை ஆற்றுப்படுத்தத் தொடங்கினாள். ***

One Reply to “ஐமிச்சம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.