எரிநட்சத்திரம்

ஐ. கிருத்திகா

அடர்ந்திருந்த பந்தலில் பசு வெண்ணை உருண்டைகளாய்  மல்லிகை மொக்குகள். செழித்த மொக்குகளைப் பறித்து மாளவில்லை கோதைக்கு.

கொல்லையில் நின்றிருந்த வாழை மரத்தின் பட்டையை உரித்து, காயவைத்து, நீரில் போட்டு கிழித்து, நாரெடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தது பொழுது போகாமல் செய்தது. இப்போது பூ கட்ட உதவிற்று.

” அக்கா எனக்கு பூ கட்ட சொல்லித் தர்றீங்களா………?” 

மோகனாவின்  கண்கள் குவிந்திருந்த பூக்களில் ஊர்ந்தன. வெயில் முற்றத்திலிறங்கி நகர்ந்து, நகர்ந்து கரைந்து போயிருந்தது. இளநீல வானத்தில் அமைதி உறைந்திருந்த வேளையில் கோதை பூ கட்டி முடித்திருந்தாள். 

மோகனாவின் தோல்விக்கு சில பூக்கள் கழுத்து முறிந்து வாடிக் கிடந்தன.  கோதை பூவை அளந்துப் பார்த்தாள்.

” கிட்டதட்ட ரெண்டு முழம் இருக்கு.” 

கீழ்க்குரலில் சொன்னாள்.

” முழம் பூவை கத்தரிச்சுக் கொடு. பிள்ளையார் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன்.” 

அம்மா உடம்போடு ஒட்டிக் கிடந்த புடவையை உதறி சரிசெய்துகொண்டு எண்ணெய், திரி, தீப்பெட்டியோடு கிளம்பிவிட்டாள்.

 ” நீயும் கொஞ்சம் வச்சுக்கோ…..” மோகனாவின் கை  ஆவலுடன் நீண்டது. பூவின் வாசம் கைரேகைகளில்  ஓடிற்று. மயிரிழைகளில்  ஒட்டிக்கொண்டு தலை முழுக்க பரவிற்று.

” நான் வர்றேன்க்கா…….”  

மோகனா துள்ளி எழுந்தோடினாள். கோதை முற்றத்தில் காலை தொங்கவிட்டு இருகைகளையும் ஊன்றி வானத்தை உறுத்தாள். மடியில் கிடந்த சில பூக்கள் நீல புடவைக்கு வானத்து நட்சத்திரங்களாய் மின்னின. 

அதில் ஒன்றெடுத்து தலையில் செருகிக்கொண்டாள். கட்டிய பூவில் மிச்சம் அரை முழம் தரையில் கிடந்தது. 

” சாமி படத்துக்கு சாத்தியிருக்கலாமில்ல……”  திரும்பி வந்த அம்மா கடிந்து கொண்டாள்.  

விளக்கில் எண்ணெய் தீர்ந்து  திரி கருகும் வாசம்.  ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டதும் தீபச்சுடர் பிரகாசித்தது. அம்மா கன்னத்தில் போட்டுக் கொண்டாள். வானத்தில் நட்சத்திரங்கள் கும்மாளமிட்டன. குழந்தை தலையில் வைக்கும்  போ வளைவாய் நிலவு. 

அம்மா தோசைக் கல்லை அடுப்பிலிருந்து இறக்கி அடுப்பு மேடை துடைத்தாள். ஆளுக்கு நாலு தோசை. மத்தியானம் வைத்த பூசணிக்காய் சாம்பார் தொட்டுக்கொள்ள. தோசை பொன்னிறத்தில் மினுமினுக்க வேண்டும் கோதைக்கு. கொஞ்சம் மாறி இருந்தாலும் முகம் சுருக்குவாள். 

அம்மாவுக்கு அப்படியில்லை. ஆறு தோசைகள் சாப்பிடுமிடத்தில் கனமான நாலு தோசைகள் சாப்பிட்டுக் கொள்வாள். எனக்கு அதுதான் பிடிக்கும் என்பாள்.

அடுப்படி விளக்கணைத்து முற்றத்துப் பாயில் உடலை சரித்துக் கொண்டபோது அவ்வளவு சுகமாயிருந்தது. பகலின் வெக்கை தணிந்து போயிருந்தது. காற்று குளிர்ந்து தவழ்ந்தது. தன் ஆயிரம் கைகளால் அது கோதையை துழாவியது.

” இளங்காத்து வீசுது, இசை போல பேசுதே…….” 

கோதை தலையாட்டிப் பாடினாள். அம்மாவுக்குத் தலை வலித்தது. தலைவலி தைலத்தை நெற்றிப்பொட்டில் அழுந்த தேய்த்துக்கொண்டாள். 

” நான் போய் படுத்துக்கிறேன்டி. நீயும் நேரத்தோட வந்து படு….” 

அம்மா  எழுந்து விட்டாள். கோதை இடது கையை தலைக்கு முட்டுக் கொடுத்து ஒருக்களித்துப் படுத்தாள். வலதுகை விரல்கள் தொடையில் தாளம் போட்டன. கண்ணாடி வளையல்கள் சத்தமற்ற மோன நிலையில்  ஆழ்ந்திருந்தன. 

சமைக்கும்போதும், துவைக்கும் போதும் க்ளுங், க்ளுங் சத்தமெழுப்பியபடி குதியாட்டம் போடும் வளையல்களுக்கு இரவின் நிசப்தத்தைக் கலைக்க விருப்பமில்லை போலும். 

கோதை வலது காலை உயரே தூக்கி கொலுசை சத்தப்படுத்தினாள். 

சலங்கையின்  மெல்லொலி எங்கும் பரவியிருந்த அமைதியின் ஊடே, பாறையிடுக்கில் கசியும் நீர் போல ஒழுகிற்று. நிலவின் மெலிதான பொழிவு. அதில் நனைந்து மினுங்கும் கல் சிற்பமாய் அவள் உறைந்து கிடந்தாள்.

” அளவெடுத்து செதுக்குனாப்ல இருப்பா.  ஒரு குறை சொல்றதுக்கில்ல. நாளும்,  நேரமும் கூடி வந்தா எல்லாம் அமோகமா நடக்கும். ” 

அத்தை அடிக்கடி இதைத்தான் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள். 

கோதை தலையணையை இறுக அணைத்துக் கொண்டாள்.  இளமை ஊறிய உடலில் உணர்வுகள்  நுரைத்துப் ததும்பிக் குமிழிகளிட்டன.

” அத்தான் கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடியே வந்துடணும். என் மருமக வந்திட்டா எனக்கு நாலு ஆள் பலம் சேர்ந்துடும்.” 

அத்தை உரிமையோடு கண்டித்து விட்டுப் போனாள். அடுத்து வளைகாப்பு, குழந்தைகாப்பு என்று வரிசையான நிகழ்வுகள். குழந்தைக்கு கோதை சித்தி என்றால் கொள்ளைப் பிரியம்.

” கோதையை யாருக்குத்தான் பிடிக்காது” என்பாள் அத்தை. அம்மாவின் முகம் போகிற போக்கை பார்க்க முடியாது.

நெற்றியில் சிலும்பிய முடியை கோதை ஒதுக்கிவிட்டாள். தினமும் இப்படி முற்றத்தில் கிடப்பது அவளுக்குச் சுகம். பெரும்பாலும் டிரான்சிஸ்டரை அருகில் வைத்துக்கொண்டு இரவின் மடியில் இசையின் தழுவல் கேட்டுக் கொண்டிருப்பாள்.  

எண்பதுகளில் வெளிவந்த இளையராஜா பாடல்களை ஒலிபரப்புவார்கள். கோதையும் கூட சேர்ந்து பாடுவாள். சில சமயம் வெறுமனே வானை வெறித்தபடி கிடப்பாள். 

” எந்திரிச்சு வந்து படுடி……” 

அம்மா குரல் கொடுத்தாள். கடிகார முட்கள் பன்னிரண்டில் இணைந்து கிடந்தன.  எழுவதற்கு விருப்பமில்லையென்றாலும் அம்மாவின் குரலுக்கு பயந்து எழுந்தவள் கைகளை உதறிக் கொண்டாள். சரிந்து விழுந்த முந்தானையை  கொசுவிப் போட்டாள்.  

ஜாக்கெட் கொக்கியில் மாட்டிக் கிடந்த சங்கிலியை விடுவித்து பாயைச் சுருட்டி தூணோரம் நிறுத்தி வைத்தாள். நட்சத்திரங்கள் மினுக்கி, மினுக்கி அவளைப்பற்றி நிலவிடம் ஏதோ ரகசியம் பேசின.   

              அந்த அறை குளுகுளுப்பாக  இருக்கும். மதியநேர உக்கிர கொதிப்புக்கு குளுமை ததும்பி வழியும். வேலை முடிந்ததும் அம்மாவும், மகளும் அறைக்கு ஓடி வந்துவிடுவர்.  கூடவே ரேடியோவும், சில புத்தகங்களும்.

அம்மா கையை தலைக்குக் கொடுத்து சாய்ந்துவிடுவாள். கோதை சுவரில் சாய்ந்து கால்களை நீட்டி வாகாக அமர்ந்து கொண்டு ரேடியோவைத் திருகுவாள்.   

புத்தகங்களில் சில பக்கங்கள் படித்து விட்டு மறுபடியும் ரேடியோவைக் குடைவாள். அம்மா தவறாது அவளை ராசிபலன் படிக்க சொல்லுவாள். குறிப்பாக தனுசு ராசிக்குப் படி என்பாள்.

” நீயே படிச்சிக்க. என்னை தொணதொணக்காத……”  கோதையின்  முகம் சுருங்கும். அதை மறைக்க ரேடியோவில் வரும் பாட்டை சத்தமாக சேர்ந்து பாடுவாள். அம்மா தூங்குவது போல் கண்களை மூடிக் கொள்வாள். 

ஜன்னலோரம் இருந்த வேப்பமரம் காற்றோடு சில பூக்களையும் வலிந்து உள்ளே அனுப்பிற்று.

பங்குனி மாத வேப்பம்பூக்கள் பூத்துக் குலுங்கின. கிளைகள் தோறும் அடை, அடையாய் பூக்கள். இலைகளைக் காட்டிலும் பூக்கள் அதிகமிருப்பதாக கோதைக்குப்பட்டது. 

” பயஞ்சு பவுன் இருக்கும்லண்ணி…..”  

அத்தையின் கண்கள் பூக்களில் ஊர்ந்தன. அம்மாவின் தலை அசைந்தது. 

” இருபதுன்னா கூட  ஓகே தான். எங்க அண்ணி செஞ்சுடுவாங்கன்னு சொல்லி  வச்சிருக்கேன். பார்ப்போம்…..இந்த வைகாசி எப்படியும் தகைஞ்சிடும். ” 

அத்தை குழம்பில் கிடந்த மாங்காய் துண்டுகளை அரித்து போட்டுக்கொண்டாள். மதிய சாப்பாடு எப்போதும் அறைக்குள் தான். 

” மாங்காய் களி, களியா இருக்கு. கொல்லையில காய்ச்சிதாண்ணி…..?” 

” ஆமா….. எப்பவும் நாலு காய் காய்க்கும். இந்த தடவை பொழிஞ்சு தள்ளியிருக்கு. போகும்போது பறிச்சிட்டுப் போ….”

கோதை அவர்கள் பேச்சில்  சுவாரசியமில்லாதது போல் எங்கோ பார்த்தபடி சாப்பிட்டாள். சாப்பிட்டானதும் பாத்திரங்களை அப்புறப்படுத்தி இடம் துடைத்து அப்படியே படுத்துக்கொண்டனர்.

 “பையனுக்கு கவர்மெண்ட் உத்தியோகம். வடநாட்டுப் பக்கம் வேலை. இரண்டு நாள் பிரயாணம் பண்ணிப் போகணும். ஊரு பேரு தொண்டைக்குள்ள நிக்குது. சட்டுன்னு வரமாட்டேங்குது.” 

” அது கெடக்கு….. குடும்பமெல்லாம் எப்படி….. மாப்பிள்ளைக்கு என்ன வயசு?” 

” அட என்னண்ணி, விசாரிக்காம உங்க காதுக்கு விசயத்தை கொண்டு வருவேனா……. அதெல்லாம் தங்கமாட்டம் குடும்பம். அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். ரெண்டு தங்கச்சிங்க கல்யாணமாகிப் போயிடுச்சிங்க. வயசும் ஒண்ணும் தாண்டிப்போயிடலை. எல்லாம் கல்யாணம் கட்டுற வயசுதான்.” 

அத்தை அழுத்தந்திருத்தமாக சொல்லிக்கொண்டிருந்தாள். கோதைக்கு வயிறு குழைந்தது. இடுப்பில் படர்ந்து கிடந்த சேலை காற்றில் சிலும்பி விரல்கள் தடவும் ஸ்பரிசத்தைத் தந்தது. 

கோதை தலையணையை கட்டிப்பிடித்து உறங்குவது போல் கண்களை வலிந்து மூடிக்கொண்டாள். அத்தை ஏதேதோ பேசியபடியே இருந்தாள். அம்மாவின் இதழ்கள் புன்னகையைப் பொருத்திக் கொண்டன. மறுநாள் அத்தை ஊருக்குக் கிளம்பியபோது மாவத்தல், பருப்புப்பொடி, புளித்தொக்கு  எல்லாம் அம்மா பாந்தமாய் கட்டிக் கொடுத்தனுப்பினாள்.  

மோகனாவுக்கு கோடை மழை போல திடீர் வரன் அமைந்து விட்டது. கல்லூரிப் படிப்பு முடித்த உடனேயே பெண் பார்த்து நிச்சயித்து விட்டுப் போய்விட்டார்கள். கோதையின் சிவப்புக் கல் நெக்லஸ் மோகனாவுக்கு இரவல் போயிற்று. 

 ” மோகனாவுக்கு சிவப்புக் கல் நெக்லஸ் பாந்தமா இருந்துச்சு. அவளுக்கும் அந்த மாதிரி ஒண்ணு செய்யணும்னு அவங்கப்பா சொல்லிக்கிட்டு இருக்காங்க. ” மோகனாவின் அம்மா கடையின் விபரம் கேட்டுக் கொண்டாள். 

” ரொம்ப தேங்க்ஸ்க்கா……”  

நெக்லஸைத் திருப்பிக் கொடுக்க வந்த மோகனாவின் பவுடர் அப்பிய முகத்தில் கூடுதலாக வெட்கம் அப்பிக் கிடந்தது கோதையின் கண்களை உறுத்தியது. அன்று முற்றத்தில் அமாவாசை இரவு படர்ந்து கிடந்தது. 

அம்மாவும்,  கோதையும் பேசிக்கொள்ளவில்லை. நிலவு, நட்சத்திரங்களற்ற வானம் இருண்ட குகையின் வாய்  போல காட்சியளித்தது.கோதைக்கு  வானத்தைப் பார்க்க பயமாக இருந்தது. பார்வையைத் தழைத்துக்கொண்டாள். அம்மா அத்தையை அலைபேசியில் அழைத்தாள்.

” மாசம் ரெண்டாச்சு. பொண்ணு பார்க்க எப்ப வர்றாங்களாம்…….?”

அம்மா இயல்பாகக் கேட்பது போல கேட்டாள். 

” மாப்பிள்ளை கிராமத்து பொண்ணு வேணாங்கிறாராம். டவுன் நாகரீகம் தெரிஞ்ச பொண்ணா இருந்தா தோதுப்படுமாம். அதனாலென்ன குடியா முழுகிப் போச்சு.  முன் வழுக்கை விழுந்த முப்பத்தெட்டு  வயசுப் பயலுக்கே இப்படி ஒரு ஏத்தம்னா  நம்ம பிள்ளை இருக்க அழகுக்கு ராஜகுமாரனாட்டம்  மாப்பிள்ளை கிடைப்பான். நீங்க எதையும் நினைச்சு மனசை குழப்பிக்காதீங்க…..” 

அம்மா போனை வைத்து விட்டாள். வானத்தின் கருமை அவள் முகத்தில் படர்ந்திருந்தது. கோதை தலை நிமிராது கால் நகத்தை சுரண்டிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் கண்ணாடிக் குவளை சிலுங் சத்தத்தோடு உடையும் பொழுது உள்ளிருந்து வழியும் திரவம் பாதரச எரிச்சலை உண்டு பண்ணுவதை அவள் அனுபவித்தாள்.

அம்மா படுக்கப் போய் விட்டாள். கோதை மல்லாந்து படுத்து வானத்தை வெறித்தாள். தாழப் பறந்த மினுக்கட்டாம் பூச்சியொன்று வானத்தின் இருளில் ஒற்றை வெளிச்சப் புள்ளியாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கோதை ஐந்தரை அடி மினுக்கட்டாம்பூச்சியாய் தரையில் ஒளிர்ந்து கிடந்தாள். ஒளிரும் செந்தழல்கள் மேனி யெங்கும் ஊர்ந்தன. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை திகுதிகுத்த தழல்கள் நெருப்புக் கோளமாய் அவளை தகதகக்கச் செய்திருந்தன. கோதை தலையணையில்  முகத்தை அழுந்த புதைத்துக்கொண்டாள்.

மோகனா திருமணமாகி சென்னைக்குக் கிளம்பி விட்டாள்.  

” என்னை ஞாபகம் வச்சுக்குங்கக்கா….”

தழுதழுத்தவளின் கழுத்தில் மஞ்சள் சரடு மினுமினுத்தது. கோதையின் பார்வை அவள் கழுத்தில் படிந்ததை அம்மா கவனித்துவிட்டாள்.

” புளி சோட்டான், சோட்டானா விழுந்து கிடக்கு. வாடி, போய் பொறுக்கிட்டு வந்துடுவோம்…….” 

அவசரப்படுத்தினாள்.

                  மழையின் நீர்க்கால்கள் பூமியை குத்திப் பிளக்க முயன்றன. வண்டி வண்டியாய் மேகங்கள் வானில் ஊர்ந்ததை கோதை அதிசயம் போல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 ” ரொம்ப வருஷம் கழிச்சு மழை அடிச்சு பெய்யுது.” 

அம்மா உப்புமா கொழுக்கட்டை  ஐந்தை தட்டில் வைத்து அவள் பக்கம் நகர்த்தினாள். ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டையில் தேங்காயின் அரைவேக்காட்டு வாசனை. சிவப்பு மிளகாய் விதைகள் நறுக், நறுக்கென்று கடிபட்டன. 

முற்றத்தில் கொட்டிய மழை முற்றத்து விளிம்பை ஈரமாக்கியிருந்தது. கோதை நகர்ந்து அமர்ந்து கொண்டாள். அம்மா சிம்னி விளக்கை சரி செய்தாள்.

” கரண்ட் எப்ப போகும்னு தெரியாது. இருட்டுல தட்டுத் தடுமாற யாரால இருக்கு…..” சொல்லி முடிக்கும் போதே விளக்க ணைந்தது.

” சொன்னது மாதிரியே ஆகிப்போச்சு.” 

அம்மா சிம்னி விளக்கை உயிர்ப்பித்துவிட்டு செல்போனை எடுத்துக்கொண்டு அறைக்குப் போனாள். அத்தையைக் கூப்பிடுவாள் என்பது தெரிந்ததுதான். அம்மாவின் பேச்சு மெல்லிதாக கேட்டது. கோதைக்கு  அதில் ஆர்வமில்லை. 

அவள் வானிலிருந்து சரக்கொன்றை பூக்களாய் உதிரும் மழைத்துளிகளை பார்த்தவாறிருந்தாள். அம்மா பேசிக்கொண்டேயிருந்தாள். மழை விடுவதற்கான அறிகுறி தெரியவில்லை. ***

2 Replies to “எரிநட்சத்திரம்”

  1. கோதையின் மன உனர்வுகள் நன்கு படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற முதிர்கன்னிகளைப் பற்றிய சிறுகதைகள் ஒரு வண்டி அளவுக்கு எழுதபப்ட்டு விட்டன.. பாவம் கோதை காத்திருக்கிறாள். கண்ணன் வரட்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.