இரா. கவியரசு கவிதைகள்

முடிவின்மை

கடல் முழுதும் குடித்த பின்பும்
அலைகிறது பறவை
கருவாடு ஒன்றிற்காக
கொத்திக் கிழிக்கிறது
காய்ந்த உதிரத்தை
அப்போது
கடலில்லாத இடத்தில்
பெரிதாக விரிகிறது நிலம்
கடலை நிரப்புவேனெனத் துப்புகிறது
வருவதெல்லாம் காற்று மட்டுமே
முன்பு விழுங்கிய கடலனைத்தும்
ஆவியாகிச் செல்கிறது மேலே
இறகுகள் உதிர உதிர
பறந்து செல்கிறது வானத்தில்
மேகத்திடம்
கெஞ்சிக் கேட்கிறது மழையை
முதல் துளியை ஏந்தியபடி
மண்ணில் இறங்கும் போது
உடைந்த அலகில்
தொட்டுப் பார்க்கிறது
ஆர்ப்பரிக்கும் புதிய கடலை

அழியாத மலர்

என்னுள் எழுந்த மலரைப் பறித்து
காற்றில் வீசியெறிந்தேன்
அகலாத நறுமணத்தைக் கழுவினேன்
தண்ணீருக்குத் தாவியது மணம்
தொடுகின்ற விரல்கள் தோறும்
மலர்கின்ற மலரதனை
இதழ்களாகப் பிய்க்க முடியவில்லை
முதலில் நீ பறித்த போதே
இறந்திருக்குமே மலர்
இப்போது
எங்கள் விரல்களில்
மணப்பது எது
மாயவித்தை நிகழ்த்துகிறாய் என்றார்கள்
மலர் நகரும் தோறும்
கன்னங்களை உரசியது பிடிக்கவில்லை
மோதல் வெடித்து கசக்குகையில்
சிரித்துக் கொண்டிருந்தது
இதழ்களை வெட்டி எரித்து விட்டோம்
இனி உனக்கு வடிவமில்லை
பறக்கும் மலர்களைப்
புதைப்பதே மகிழ்ச்சி என்றனர்
அப்போது
அவர்களின் மூச்செல்லாம் மலர்கள்
தத்தளிக்கும் நுரையீரலில்
அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தது
விரல்களில் மலர்ந்த முதல் மலர்
இனி தோண்டும் போதெல்லாம்
பூமியின் ஆழத்திலிருந்து வரப்போவது
அது மட்டுமே


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.