ஆசையின் சுவை

வீட்டில் பிள்ளைகளின் எண்ணிக்கை பெருகிவிட்டமையால் சிவநேசனை அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் விடுதியில் தங்கவைக்க ஏற்பாடு செய்தார் தந்தை. இது தாய்க்கு வருத்தமாக இருந்தாலும் ‘சிவநேசனுக்குச் சோத்துப் பிரச்னை தீர்ந்துவிடும்’ என்று நினைத்து, தன் மனத்தைத் தேற்றிக் கொண்டார். 

சிவநேசன் விடுதியில் தங்கி, விளையாடி, படித்து முன்னேறாமல் விடுதியில் சமைத்து, உண்டு, பருத்து வந்தான். அந்தக் அறக்கட்டளையின் சமையல் பொறுப்பில் உள்ளவர்களைப் பொருத்தவரை சிவநேசன் ‘சமையல் எடுபிடி’தான். இந்த ஓர் அடையாளமே சிவநேசனுக்குச் சமையல் அறையிலேயே 24மணிநேரத்தையும் கழிக்க அனுமதி தந்தது. தான் ‘எடுபிடி’ என்பதற்காக அவன் எல்லா வேலைகளிலும் ஈடுபடமாட்டான். பாத்திரங்களைக் கழுவுவது மட்டுமே அவனுடைய தலையாயபணி.

தன்னுடைய பத்து வயதுவரை உணவுக்குத் திண்டாடிய சிவநேசனுக்கு ‘நினைத்ததை எல்லாம் சமைத்து உண்ணலாம்’ என்ற வாய்ப்பினை இந்தச் சமையலறைதான் அவனுக்கு வழங்கியது. ஒருவகையில் அவனே இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டான்.

அதற்காகவே அவன் வகுத்துக் கொண்ட உத்தி ஒன்று உண்டு. ‘வழக்கமாக அனைவரும் சாப்பிடும் நேரத்தில் தான் சாப்பிடக் கூடாது’ என்பதே அது! விடியல்பொழுதில் தான் விரும்பியதை உண்ணும் பழக்கத்தைக் கொண்டுவந்தான். ஊர் அடங்கிய பின்னர் சமைப்பதும் ஊர் விழிப்பதற்கு முன் சாப்பிடுவதும் அவனுடைய  வழக்கமாகிவிட்டது.

மூன்றுவேளைகளும் சமைத்த பாத்திரங்கள் கழுவல் தொட்டியில் இடப்பட்டிருக்கும். அவற்றைக் கழுவும் பொறுப்ப அவனுடையது. அவன்  காலைப் பாத்திரங்களை மதியமும் மதியப் பாத்திரங்களை மாலையிலும் இரவுப் பாத்திரங்களை அன்று இரவும் கழுவ வேண்டும். இதற்கிடையில் காலையும் மாலையும் சேர்ந்துவிடும் காபி, டீ பாத்திரங்களையும் அவ்வப்போது கழுவ வேண்டும்தான்.

ஆனால், சிவநேசன் அப்படிக் கழுவ மாட்டான். மூன்றுவேளை பாத்திரங்களையும் இரவு பத்து மணிக்கு மேல்தான் கழுவத் தொடங்குவான். மதியப்பொழுதில் காபி, டீ பாத்திரங்களை மட்டும் கழுவுவான். அவை  மாலைப்பொழுதில் காபி, டீ தயாரிக்கத் தேவைப்படும் என்பதால், அவற்றைக் கழுவ வேண்டிய கட்டாயத்தில் அவன் இருந்தான்.

மாலைப்பொழுதில் காபி, டீ பாத்திரங்கள் கழுவல்தொட்டியில் விழும் பாத்திரங்களைக் கழுவமாட்டான். அவை காலைப் பொழுதில் மீண்டும் தேவை என்பதால், இரவில் முதல்வேளையாக அவற்றைக் கழுவி, உரிய இடத்தில் அடுக்கிவிடுவான்.

சமையல்பொறுப்பாளர்கள் இரவு ஒன்பது மணிக்குள் அனைவரும் உண்டு சென்ற பின்னர், மீதமிருக்கும் உணவுகளை எடுத்துத் தம்முடைய சில தூக்குவாளிகளில் அடைத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவர். அவர்கள் வெளியேறிய பின்னரே சிவநேசன் தன்னுடைய வேலைகளைச் சுறுசுறுப்பாகத் தொடங்குவான்.

சிவநேசன் காபி, டீ பருகுவதில்லை. இரவு ஒன்பதரை மணிக்கு மேல் இஞ்சி டீயைத் தானே உருவாக்கிப் பருகுவான். அது பசியைத் தூண்டிவிடும் என்பதற்காகவே அதைப் பருகுவான்.

காலையில் பெரும்பாலும் அவன் உணவு உண்பதில்லை. அந்த நேரத்தில் அவன் ஆழ்ந்த தூக்கத்தில் அல்லவா இருப்பான்?. அவன் விழிக்கும்போது மதிய உணவு தயார்நிலையில் இருக்கும். மூன்று கையளவு மட்டுமே அதை உண்பான். இரவில் உண்ணமாட்டான்.

வாரத்தில் ஒரு மதியப் பொழுதில் தன் அம்மாவுக்குக் ‘இன்லேண்ட்டு லெட்டரில்’ கடிதம் எழுதுவான். கடந்த ஏழு நாட்களாக அவனே சமைத்துச் சாப்பிட்ட உணவு வகைகளைப் பட்டியலிடுவான். அது பெருமைக்காக அல்ல. தன் அம்மாவின் மகிழ்ச்சிக்காக. தன் பிள்ளை நன்றாகச் சாப்பிடுவதையே ஒவ்வொரு தாயும் விரும்பவார்.

இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாய்க்கும் பொருந்தும். தாய் நாய் தன் குட்டிகள் உண்பதையே பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும். எந்தத் தாய் நாயும் தன் குட்டிகளிடமிருந்து எதையும் பறித்து உண்ணாது. தன் குட்டிகள் உண்ட பின்னர் தனக்கு ஏதும் இல்லையென்றாலும் அது கவலைப்படாது. அவன் தன் தாயின் மனத்தினைக் குளிர வைப்பதற்காகவே கடிதம் எழுதினான்.

அவனுக்கு மாதம் ஒருமுறை தாயிடமிருந்து ஒரு ‘போஸ்ட் கார்டு’ வரும். நல்லா இருக்கியாடா?

நல்லா சாப்புடுட்டா?

உடம்பைப் பார்த்துக்கோ?

நேரம் கிடைக்கும்போது அம்மா வாறேன். நீயும் வந்து போடா

பெரும்பாலும் இத்தகைய விஷயங்களே அடுத்தடுத்த வரிகளில் அந்த  ‘போஸ்ட் கார்டி’ல் எழுதப்பட்டிருக்கும்.

ஆனால், தாய் ஒருநாளும் இங்கு வந்து அவனைப் பார்த்ததில்லை. இவனும் ஒருநாளும் அங்குச் சென்று தன் குடும்ப உறுப்பினர்களைப் பார்த்ததில்லை. ஆனாலும், ‘இன்லேண்ட்டு லெட்டரா’லும் ‘போஸ்ட் கார்டா’லும்’ அவர்களின் உறவு அறுபடாமல் பாதுகாக்கப்பட்டது. 

இரவு ஒன்பதரை மணிக்குமேல் இஞ்சி டீயைப் பருகிவிட்டு, தனக்குரிய உணவினைச் சமைக்கத் தொடங்குவான். ஒரு பக்கம் சமைத்துக்கொண்டே, மறு பக்கம் கழுவல்தொட்டியில் உள்ள அனைத்துப் பாத்திரங்களையும் வேக வேகமாகக் கழுவுவான்.

அந்த விடுதியில் மொத்தம் 60 பேர் மூன்றுவேளையும் உண்பதால், அதற்கு ஏற்ப பாத்திரங்கள் குவிந்திருக்கும். அத்தனையையும் மிகவும் நேர்த்தியாகக் கழுவி, அவற்றுக்குரிய இடத்தில் அடுக்கிக்கொண்டே இருப்பான்.

ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும், ‘இன்று இரவு என்ன சமைக்க வேண்டும்’ என்பதற்கான ‘மெனு’ அவன் கனவில் வந்துவிடும். அதையே அன்றைய இரவில் சமைக்கத் தொடங்குவான். பெரும்பாலு அந்த ‘மெனு’வில் பிரியாணி வகைகளே வரும்.

இன்றைய அதிகாலைக் கனவில் அவனுக்குக் காளான் பிரியாணி உள்ளிட்ட ‘மெனு’ வந்தது. அதனால் இன்று இரவு அவன் காளான் பிரியாணியைச் சமைக்கத் தொடங்கினான்.

சமையற்கூடத்தின் உட்பகுதியில் இருந்த மிகப் பெரிய குளிர்ப் பதனப் பெட்டியில் எப்போதுமே பால், தயிர், வெண்ணெய் உள்பட எல்லா வகையான பொருட்களும் நிறைந்திருக்கும். அதற்கு எதிர்ப்புறத்தில் எல்லா வகையான காய்கறிகளும் மொத்த விலைக்கு வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கும். அதனால், அவனால் தான் சமைக்கும் உணவினை எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் சமைத்து உண்ண முடிந்தது.

நான்கு பாத்திரங்களைக் கழுவினான். எழுந்துவந்து, சீரகசம்பா அரிசியைச் சிறிதளவு எடுத்து ஊறவைத்தான். மூன்று உருளைக் கிழங்கினை வட்ட வட்டமாகச் சீவி, காயவைத்தான். மீண்டும் சென்று நான்கு பாத்திரங்களைக் கழுவினான்.

எழுந்துவந்து, தேங்காயை உடைத்து அரைமூடியை மட்டும் திருவி, அதிலிருந்து பால் எடுத்தான். மீண்டும் சென்று நான்கு பாத்திரங்களைக் கழுவினான்.

எழுந்துவந்து குளிர்ப்பதனப் பெட்டியில் இருந்து காளான் பாக்கெட்டைப் பிரித்து அதைச் சுத்தம் செய்தான்.

இப்படியே இரவு இரண்டு மணிவரை பாத்திரங்களைக் கழுவுவதும் காளான் பிரியாணியைச் சமைப்பதுமாக இருந்தான். டார்ச்சினை எடுத்துச் சென்று, தோட்டத்திலிருந்து தலைவாழை இலைகள் இரண்டினை அறுத்து, எடுத்துக்கொண்டு வந்தான். அவற்றைக் கழுவினான்.

உருளைக் கிழங்கினைப் பொரித்து ‘சிப்ஸ்’ தயாரித்தான். எல்லாம் கொதிக்க கொதிக்கத் தயார்நிலையில் இருந்தன. சமைத்தவற்றைப் பாத்திரங்களோடு அப்படியே எடுத்துக்கொண்டு, சமையற்கூடத்தின் மேல் இருக்கும் மொட்டை மாடிக்குக் கொண்டு சென்றான்.

அப்போது அதிகாலை நான்குமணி. அரைநிலா மங்கி ஒளிர்ந்து கொண்டிருந்தது. சிமெண்ட்டால் கட்டப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டிக்கு அருகில் ஒரு வாழை இலையை விரித்தான். சமைத்த அனைத்தையும் அதில் தனித்தனியாகக் கொட்டினான்.

தயிர்ப்பச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸ், காளான் பிரியாணி ஆகியன அந்த இலையில் குவிந்திருந்தன. மற்றொரு வாழை இலையினால், இந்த உணவு இலையை மூடினான். வெற்றுப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, கீழே வந்தான். அவற்றையும் கழுவினான். உரிய இடத்தில் வைத்தான்.

சமையற் கூடத்தைக் கூட்டினான். அவன் உடல் முழுவதும் வியர்த்து வழிந்தது. கழுவல் தொட்டிக்குள் இறங்கிக் குளிக்கத் தொடங்கினான். பின்னர் கழுவல் இடத்தைச் சுத்தம் செய்தான்.

அவன் அப்பா மட்டும் இவனைப் பார்ப்பதற்காக ஆண்டுக்கு ஒருமுறை வருவார். ‘நான்தான் உன்னைப் பெற்றேன்’ என்பதை உறுதிப்படுத்திவிட்டுச் செல்வார். அவர் சென்ற பின்னர் ஒரு வாரத்துக்குள் இவனின் பிறந்தநாள் வந்துவிடும்.

தனக்கு இன்னும் இரண்டு தம்பிகளும் தங்கைகளும் பிறந்த செய்தியை தன் தந்தையின் வருகைகளின் போதுதான் இவன் தெரிந்து கொண்டான். தன்னுடைய அக்காக்களில் இருவரும் அண்ணன்களில் இருவரும் வெவ்வேறு விடுதிகளில் தங்கி, உண்டு வருவதையும் தன் தந்தையின் சொற்களின் வழியாகவே அறிந்துகொண்டான்.

தன் குடும்பத்திலிருந்து ஒருவர் விடுத்திக்குச் சென்றதும் அந்த இடத்தை நிரப்ப, ஒரு புதிய உறவு தன் குடும்பத்தில் பிறந்துவிடுவதும் அவனுக்குப் புதுமையானவே புரியாத புதிராகவே இருந்தது. வீட்டில் உணவுக்குப் பஞ்சம். ஆனால், குழந்தைப் பிறப்புக்குப் பஞ்சமே இல்லை.

‘பாப்கார்ன் மிஷினி’ல் பொரிபடும் சோளங்கள் மேல்நோக்கிப் பொங்கி பொங்கி வரும். மேலும் மேலும் செல்ல இடமில்லாததால் ‘மிஷினி’லிருந்து துள்ளி, தரையில் விழுந்து சிதறும். அது விழுந்தவுடன் அதற்குப் பின்னாலேயே பொரிந்து வந்த அடுத்த அடுத்த சோளங்கள் மேல்நோக்கிப் பொங்கி நிற்கும். பின்னர் அவையும் ‘மிஷினி’லிருந்து துள்ளி, தரையில் விழும்.

சிவநேஷனுக்குப் பொதுவாகவே நெருக்குத் தீனிகள் பிடிக்காது. குறிப்பாக,  ‘பாப்கார்னை’ப் பிடிக்கவே பிடிக்காது. ‘பாப்கார்ன் மிஷினை’யும் பிடிக்காது. அவன் விரும்புவதெல்லாம் விருந்துணவுகள் மட்டுமே. வாழை இலைபோட்டு, அதில் சுட சுட உணவுகளைக் குவித்து உண்ணப் பிடிக்கும். உண்டு முடித்த பின்னர், உணவுகளின் வெப்பத்தால் பொசுங்கி வட்ட வட்டமாகக் கறுத்துவிட்ட வாழையினைப் பார்க்கப் பிடிக்கும்.      

‘எல்லாப் பணிகளும் முடிந்துவிட்டனவா?’ என்று சுற்றிப் பார்த்தான். ஆம்! எல்லாம் சரியாகவே முடிந்திருந்தன. ஒரு செம்பில் குடிதண்ணீரை எடுத்துக் கொண்டு, விளக்குகளை அணைத்தான். மகிழ்ச்சியோடு மொட்டை மாடிக்குச் சென்றான்.

மூடியிருந்த இலையைத் திறந்தான். படையலைச் சுற்றிலும் நீரைத் தெளிப்பது போலத் தெளித்தான். வானத்தைப் பார்த்தான்.

உரத்த குரலில், “வானத்தில் பசியோடு அலைந்துகொண்டிருக்கும் அனைவருக்காகவும் இந்த உணவினை நான் சமைத்திருக்கிறேன். வாருங்கள். நாம் சேர்ந்து உண்போம்” என்றான்.

எல்லோரும் வந்து தன்னோடு அமர்ந்து உண்பதாக நினைத்துக்கொண்டு, உணவினை அள்ளி அள்ளி உண்ணத் தொடங்கினான். ஒருமணி நேரம் ரசித்து ரசித்து உண்டான். இலையை மூடிவிட்டுத் தண்ணீரைப் பருகினான். உடனே, அவனுக்கு ‘ஏப்பம்’ வந்தது.

இலையையும் தண்ணீர்ச்செம்பினையும் எடுத்துக்கொண்டு, கீழே வந்தான். செம்மை வைத்தான். இலையைக் குப்பையில் எறிந்தான். மீண்டும் மொட்டை மாடிக்குச் சென்று, தண்ணீர்த் தெட்டியின் மீதேறி, அதன் மூடியாக இருந்த சிமெண்ட் சிலாப்புகளின் மீது படுத்துக்கொண்டான்.

ஒருமுறை அவன் அப்பா கேட்டார்.

“ஏண்டா நீ வீட்டுக்கே வரமாட்ற?” என்று.

“வீட்டுலதான் இடமில்லையே!” என்றான் தன் அப்பாவின் முகத்தைப் பார்க்காமல். அதன் பின்னர் அவர் அந்தக் கேள்வியை இவனிடம் கேட்பதே இல்லை.

ஒருமுறை சமையற்பொறுப்பாளர்களுள் ஒருவர் இவனின் அம்மாவிடமிருந்து வந்த ‘போஸ்ட் கார்டி’னைத் தொடர்ந்து மூன்று மாதங்களாகப் படித்துவிட்டு, “டேய்! நீ வீட்டுக்குப் போயி அவங்களைப் பார்த்துட்டு வர்றதுதானே? ஒவ்வொரு முறையும் அவங்க உன்னை வரச் சொல்லித்தானே லெட்டர் போடுறாங்க?” என்று கேட்டார்.

இவன் சிரித்துக்கொண்டே, “சார், எங்க வீட்டுல இடமில்லையின்ணுதான், நான் சாப்பிடுறதுக்கு உணவு இல்லையின்ணுதான் என்னை வெளியேத்திட்டாங்க. அப்போ, எங்க வீட்டுச் சன்னல் வழியாகக்கூட வெளியே வந்துடுற அளவுக்குத்தான் என்னோட உடம்பு இருந்தது. உடம்புன்னா வெறும் எலும்புதான். ரெண்டு கை எலும்பு, ரெண்டு கால் எலும்பு. சின்னத் தேங்காய் மாதிரி தலை. அவ்வளவுதான் நான். அவங்க நினைச்சிருந்தா, என்னை சன்னல் வழியாகக்கூட என்னை வீசி தெருவில எறிஞ்சிருக்கலாம்தான். ஆனால், வீட்டுவாசல் வழியாத்தான் என்னைக் கூட்டிக்கிட்டு, வந்து இங்க சேர்த்துவிட்டாங்க. இப்ப பாருங்க என்னை, நான் பிரியாணி ‘தேக்க்ஷா’ மாதிரியில்ல இருக்கேன். என்னால எப்படி எங்க வீட்டுக்குள்ள போக முடியும். நான் வீட்டுவாசல்ல நின்னா, வீட்டுக்குள்ள இருக்குறவுங்கல்லாம் வெளியே வந்துதானே என்னைப் பார்க்கணும்?” என்று கேட்டான்.

அவர் அமைதியாக இருந்தார். இவனே தொடர்ந்து பேசினான், “சார், நான் இந்த உடம்பை வச்சுக்கிட்டு, எங்க வீட்டுக்குப் போனா, எனக்குப் பிறகு பிறந்த ரெண்டு தம்பிகளும் தங்கைகளும் என்னைப் பார்த்து என்ன நினைப்பாங்க? ‘இவன்தான் நம்ம வீட்டுல இருந்த அம்புட்டு அரிசியையும் தின்ணுட்டு இப்படிக் கொழுத்துட்டான் போல. அதனாலத்தான் நாம் இப்ப சாப்பாட்டுக்குத் திண்டாடுறோம்’ணு நினைக்க மாட்டாங்களா?” என்று கேட்டான்.

அவரால் இதற்குப் பதில் கூற முடியவில்லை. அதன் பிறகு அவரும் இவனிடம், ‘நீ ஏன் உங்க வீட்டுக்குப் போய், குடும்பத்தாரைப் பார்க்குறதே இல்ல?’ என்று கேட்பதே இல்லை.  

அவன் வானத்தைப் பார்த்தான். சிலாப்புகளின் குளிரை அவன் முதுகுப் பரப்பு உணரத் தொடங்கியது. அவனுக்குச் சுகமாக இருந்தது. அப்போது விடியற்காலை ஐந்தரை மணி.

பறவைகள் கத்திக்கொண்டே தம் கூடுகளிலிருந்து புறப்பட்டன. விடிவெள்ளி தெரிந்தது. குளிர்காற்று மெல்ல சுழன்று கொண்டிருந்தது. மெல்ல விழிகளை மூடினான். ‘இன்றைய இரவு என்ன சமைக்க வேண்டும்’ என்பதற்கான ‘மெனு’ அவன் கனவில் வந்தது.

– – –

11 Replies to “ஆசையின் சுவை”

    1. வணக்கம். தங்களின் பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் மூன்றுமணிநேரம் உழைத்து எழுதிய கதை இது. என் உழைப்பின் ஊதியமாகத் தங்களின் பின்னூட்டத்தைக் கருதுகிறேன். மிக்க நன்றி தோழியே! – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை. 9894541523.

  1. தான் உண்ணும் உணவை தானே சமைத்து ருசித்து உண்பது என்பதே அனைவர்க்கும் கிட்டாத ஒன்று. உண்ணும் நேரமும் வித்தியாசமான ஒன்று. யதார்த்தத்தை புரிந்து கொண்டு குடும்பத்தாரை காணாமலும் வாழ்வது தவ வாழ்க்கைதான். அன்ன லட்சுமியை பூஜித்ததால் உணவுப் பிரச்னை இன்றி அமைதியான வாழ்க்கை அமைந்தது. சிறப்பான பதிவு. நன்றி

  2. வணக்கம். “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்” … என மகாகவி பாரதி முழங்கிய வரிகளே எனக்கு இந்தக் கதைக்கு அடிப்படையாக அமைந்தன. உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படைத் தேவைகளான இவை மூன்றுமே மறுக்கப்பட்டவர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். ஒரு கை உணவில் சுவையை எதிர்பார்ப்பவர்கள் அந்த அளவு உணவுக்காகப் பசியோடு காத்திருப்பவர்களையும் நினைக்க வேண்டும். பசிக்கு முன்னர் சுவை ஒரு பொருட்டே அல்ல. பசிக்கு முன்னர் எதுவும் பொருட்டல்ல. பசித்திருப்பவருக்கே பசியின் வலிமை தெரியும். இந்தக் கதையை அவர்களுக்காகவே அர்ப்பணிக்கிறேன். நன்றி. – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

  3. ஆசையின் சுவையை வாசித்து அதிலிருந்து என்னால் பல மணி நேரம் மீள இயலவில்லை. தன் குடும்பத்துடன் வாழ இயலாத காரணத்தை கூறும் வரிகள் மனதை நெகிழச் செய்தது. தந்தையிடம் கூறும் வார்த்தை வழி மனவலியை உணர முடிகிறது. கதைக்குள் நானும் பயணிப்பது போல் உணர்ந்தேன். அதற்குக் காரணம் தங்களின் எழுத்து நடையாகும்.

  4. தோழி! வணக்கம். பொதுவாகவே ஏதோ ஒரு காரணத்திற்காகத் தன் குடும்பத்திலிருந்து விலக்கப்படும் ஒருவரின் மனம் இறுதிவரையில் அவரின் குடும்பத்துடன் ஒட்டுவதே இல்லை. புறக்கணிப்பின் வலி அத்தகையது. இந்த உலகில் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு காரணத்திற்காக யாராலோ புறக்கணிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அந்தப் புறக்கணிக்கணிப்பே அவர்களை ஆழக்காலூன்றி வாழத் தூண்டுகிறது. அவர்கள் இறுதிவரையில் தன்னளவில் தனியாகவே இருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே ‘கூட்டத்தோடு இருக்கும் தனிமரங்களே!’ நன்றி. – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன்.

  5. அருமையான கதை. நல்ல சாப்பாடு சாப்பிட நினைப்பவன் கடுமையான உழைக்கிறான். தானே சமைத்து அதை பிரம்ம முகூர்த்தத்தில் தேவர்களுக்குப் படைத்துவிட்டு உண்கிறான். இது அவனைப் பொருத்தவரை உணவு உண்ணுதல் அல்ல; யாகம் செய்தல். அவன் உண்ணுதலையே தவமாக நினைக்கிறான்.

  6. வணக்கம்.
    ஆத்மார்த்தமாகச் செய்யப்படும் அனைத்துமே யாகம்தான். அதை நோக்கிய பயணம் ஒருவகையில் தவம்தான். உணவுகுறித்த சிவநேஷனின் ஏக்கத்தையும் இந்தவகையில் புரிந்து கொள்வதே சிறப்பு. தாங்கள் சரியாகப் புரிந்துகொண்டமைக்கு நன்றி.
    – எழுத்தாளர் முனைவர். சரவணன், மதுரை.

  7. நண்பர் அற்ற வாழ்க்கை சோகமான கதை. அதிகாலை 4 மணிக்கு அவர் வெளியே போய் தெருவில் படுத்து தூங்கும் நண்பர்களுக்கு உணவு கொடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன்.

  8. என் கதைக்குப் பின்னூட்டம் நல்கியமைக்கு நன்றி. அவனுக்கு எதிரி பசிதான். அவனுக்கு நண்பர் அந்தப் பசியைத் தணிக்கும் பெருஞ்சோறு. பசிக்கும் சோற்றுக்குமான போராட்டத்தில் அவன் பகல்முழுக்கப் பசியின் பக்கமும் இரவு முழுக்கச் சோற்றின் பக்கமும் நின்று போராடுகிறான். எல்லோருக்கும் ஒரு போராட்டம் இருக்கும். அவனுக்கு அந்தப்போராட்டம் இந்த வகையில் அமைந்துவிட்டது. தோற்பதும் வெல்வதும் அவனே. நன்றி. – எழுத்தாளர் ப. சரவணன், மதுரை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.