இந்த சினிமா ஏன் என்னைப் பாடாய்ப்படுத்துகிறது? ஐந்தாறு வயது சிறு பையனாக இருந்த போது அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு செட்டிபுதூர் தங்கம் டூரிங் டாக்கீசில் பார்த்த ‘பால நாகம்மா’ விலிருந்து நேற்றுப்பார்த்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ வரை’ எல்லாப்படங்களும் புதிய அனுவங்களைத் தந்து ஒரு வகையான மன நிறைவைத் தந்திருக்கின்றன. சந்தோஷத்தையும், சங்கடத்தையும் கொடுத்திருக்கின்றன. மொழி பேதமே இல்லாமல் சினிமாப்பார் என்று காளியாத்தா மலையாள தேசத்திற்கும், கன்னட தேசத்திற்கும் என்னைத் துரத்தியிருக்கிறாள். அப்பன் ஆத்தா உதவியால் கல்வி பெற்றதனால் ஆங்கிலமும் தெரிய வந்து அதன் மூலம் உலகப் படங்களும் கைக்குள் வந்தன. இயேசுவே உங்கள் நாமம் ஜபிக்கிறேன். அல்லாவே! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்…நீங்கள் அருள் பாலிக்கும் நாடுகளிலிருந்து வரும் படங்களையும் எனக்குப் பார்க்கக் கொடுத்தீர்கள். என்ன மாதிரியான வாழ்க்கை… என்ன மாதிரியான மனக்கிலேசங்கள்.. எத்தனை வகையான மனிதர்கள்… சூழ்நிலைகள்… எல்லாவற்றையும் பார்க்கக் கொடுத்து அவற்றைத் தாண்டிப்போய் மேலும் சில பார்க்க இன்னும் எங்களுக்கு ஜீவன் கொடுத்திருக்கிறீர்கள் நன்றி..ஆண்டவரே!
இப்போது தியேட்டருக்குப் போகும் வாய்ப்பைப் பறித்துக் கொண்டீர்கள் ஆண்டவரே! ஆனால் அதற்கு முன்னமேயே தொலைக்காட்சி மூலமாகவும், இணையம் மூலமாகவும் ஏற்கனவே பார்த்ததை விட பல மடங்கு படங்கள், பல மொழிப்படங்கள் பார்ப்பதற்கு வாய்ப்புக் கொடுத்துத் விட்டீர். உமது கருணைக்கு நன்றி ஆண்டவரே! உமது கருணையை நன்கு பயன்படுத்திக் கொண்டு எம் மனிதர் சினிமாவையே பல வடிவங்களில் கொண்டு வந்து விட்டார். முழுநீளப்படங்கள், குறும்படங்கள், வலைத்தொடர்கள், ஆவணப்படங்கள் என்று எத்தனை மொழிகளில் எத்தனை படங்கள்… மருந்தே இல்லாத ஒரு நோயை எங்களுக்குக் கொடுத்து, கால, தேச, வர்த்தமான பேதமில்லாமல் ஒட்டு மொத்த மானுடத்தையும் குத்த வச்சு உட்கார வைத்து விட்டீர். ஒரு பக்கம் மனசாட்சியின் உறுத்தல்..இன்னொரு பக்கம் எதிர்காலம் பற்றிய அச்சம்..இவற்றுக்கிடையில் காலத்தை எப்படிக் கழிப்பது? மறுபடியும் அலைபேசியும், தொலைக்காட்சியும், இணையமும் தான். வேறு வழியில்லை…. எம்மை ரட்சிப்பீர்களாக! துன்புறும் மானுடம் எம்மை மன்னிப்பதாக!
இந்த மானுடம் தானே எங்கள் வாழ்க்கையை உருவாக்கியது? அவர்கள் காட்டிய வாழ்க்கையிலிருந்து முடிந்த வரை விலகாமலிருந்தோம். நாங்கள் பேசும் மொழி, எங்களுக்குச் சொன்ன சாதி, நாங்கள் கும்பிடும் சாமி, எங்களுடையது என்று சொல்லப்பட்ட இனம் எல்லாவற்றிலிருந்தும் நாங்கள் மாற்றிச் சிந்திக்கவில்லை. பால் வேறுபாடு கூட அவர்கள் சொன்னவரையில் சரியாகவே இருந்தது..ஆனாலும் மனதுக்குள் ஓர் வெறுமை எப்போதும் இருந்தது. எங்கள் முன்னோர்களுக்கும் இருந்தது என்று சொன்னார்கள். இல்லாவிட்டால் ‘இஹ சம்சாரே…பஹுதூஸ்தாரே…க்ரிபயா அபாரே..பாஹீ முராரே..’ (இந்த ஜீவிய சாகரத்தில் நீந்திப் போராடுவது இம்சையாக இருக்கிறது…உனது அளவற்ற கருணையால் என்னை ரட்சிப்பாய் கிருஷ்ண பரமாத்மாவே) என்று பாடியிருப்பார்களா? போராட்டம் என்பதில் இந்த மன வெறுமையையும் சேர்த்துக் கொண்டிருந்தார்களோ?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான போராட்டம். மலையாள தேசத்தில் இடுக்கி மாவட்டத்தில் ஆச்சாரமான கிறித்தவ சமுதாயத்தில் ஒரு பையன். ரப்பர், குறுமிளகு என்று வசதியான குடும்பம். ஸ்லீவாச்சன் என்று பெயர் ஸ்லீவாச்சன் என்ற சொல் ஸ்லீவா என்னும் சொல்லிலிருந்து வருகிறது மார்த்தோமா ஸ்லீவா என்னும் சிரிய மொழிச்சொல் புனித தாமஸ் அவர்களின் திருச்சிலுவை என்று பொருள் படும். சிரியன் கிறித்தவ சமுதாயத்தில் பேச்சு வழக்கில் எல்லா ஆண்களின் பெயருக்குப் பின்னாலும் அச்சன் என்னும் பெயரைச் சேர்த்துக் கொள்வார்கள். நாம் முருகப்பன், காளியப்பன், மருதப்பன் என்று வைத்துக் கொள்கிறோமில்லையா அதைப் போல. ஸ்லீவாச்சன். ஸ்லீவாச்சனுக்கு 35 வயசாகியும் கல்யாணம் ஆகவில்லை. நாலு சகோதரிகளையும் கட்டிக்கொடுத்து செட்டில் செய்வதற்குள் வயசு போய்விட்டது. அப்பாவும் தவறி விட்டார். அம்மாவுடனும், சகோதரிகளுடனுமே இது வரை காலத்தைக் கழித்துவிட்டதால் ‘அந்த’ மாதிரியான எண்ணங்களே மனதில் வரவில்லை. நன்றாகத் தண்ணி போடுவான். வசதியுள்ள குடும்பத்துப் பையன் கொஞ்சம் வெகுளி என்றாலே அங்கே அள்ளக்கைகளாக வருவதற்கு நிறைய பேர் இருப்பார்கள். இருந்தார்கள். ஸ்லீவாச்சன் செலவில் அவர்களுக்கு அவ்வப்போது தண்ணி பார்டி உண்டு. ஸ்லீவாச்சனுக்கு அவர்கள் அந்தஸ்துக்குத் தகுந்த மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்து முடித்தார்கள். ரின்ஸி என்று பெயர். பெண் பெங்களூரில் படித்தவளாக இருந்தாலும் ஸ்லீவாச்சன் குடும்பத்துக்கு ஏத்த பெண் தான். எல்லாப் பெண்களையும் போல அவளுக்கும் எதிர்பார்ப்புக்கள் இருந்தன. ஆனால் அவை ஒன்றும் நிறைவேறுகிற வழியைக் காணோம். ராத்திரியானால் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி தப்பித்துக் கொண்டு போய் விடுகிறான். அள்ளக்கைகள் ஸ்லீவாச்சனை உசுப்பி விட்டார்கள். ‘தன்னை நன்றாகத் திருப்திப் படுத்துகிற கணவனை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்’. இதை ஸ்லீவாச்சன் செயல்படுத்த முயற்சித்த போது நிலைமை விபரீதமாகப் போய்விட்டது. ரின்சியை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். மனைவி என்றாலும் கற்பழிப்பு ஒரு குற்றம். ரின்சிக்குப் போதும் என்றாகி விட்டது. கடைசியில் ஸ்லீவாச்சனைப் புரிந்து கொண்டாள்.

அன்பர்களே! கதை இரண்டாம் பட்சம் தான். அதை எங்கு எப்படி படமாக்கியிருக்கிறார்கள் என்பது தான் விஷயம். நீங்கள் இடுக்கி மாவட்டத்திற்குப் போய் அங்குள்ள சிரியன் கிறித்தவ சமுதாயத்துக்குள் ஒன்று கலக்க விரும்பினால் ‘கெட்டியோளானு எண்டே மாலாக்கா’ (என் மனைவி-என் தேவதை) என்ற படத்தைப் பாருங்கள். ஸ்லீவாச்சன் வெறுமையை வெற்றி கொண்ட கதை தெரியும். இந்த மலையாளத் திரைப்படம். 2019-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. ஸ்லீவாச்சன் வெறுமையை வெற்றி கொண்ட போது எல்லோருக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது. ’.அவனுக்குள் ஒரு சந்தோஷம் தெரிகிறது. இதைப் பார்த்ததே எனக்குப் போதும். நான் நிம்மதியாகச் சாவேன்’ என்று ஸ்லீவாச்சனின் அம்மா சொன்னார்.
ஆனால் ஆச்சலுக்கும், ஆத்யாவுக்கும் இந்த வெறுமை தாங்கிக் கொள்ளக்கூடியதாக இல்லை; இவர்களைப் பற்றிய ஒரு கன்னட-ஆங்கில-இந்தி வலைத்தொடர் தான் ’வேற ஒரு காதல் கதை’ (The‘other’ love story) இந்த இரண்டு பெண்கள் வாழ்க்கையிலும் வெளியே இருந்து பார்க்கிறபோது எல்லாம் இருக்கிற மாதிரித் தெரிகிறது. ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை. வெறுமை…..…பெங்களூரில் ஒரே ஏரியாவில் வசிக்கும் இந்தக் கல்லூரி செல்லும் பெண்களில் ஆத்யா கன்னடப் பெண். ஆசிரியையான அம்மா, அலுவலகம் போகும் அப்பா, இவள் அவ்வளவு தான்.. தனிமை… தனிமை. .ஆச்சல் பெங்களூரில் வசிக்கும் வடநாட்டுப் பெண். கூட்டுக்குடும்பம்..,இருந்தாலும் வெறுமை…,வெறுமை… 12 பாகங்கள் கொண்ட இந்த வலைத்தொடர் 1998-99 வாக்கில் நடை பெறுவதாக அமைக்கப் பட்டு 2016-ல் வெளியானது. 1998-ம் ஆண்டு அலைபேசி, இணையம் எல்லாம் அவ்வளவாக பிரபலமாகாத காலம். ஆத்யாவுக்கும், ஆச்சலுக்கும், இடையே உருவாகும் நட்பு தீவிரமாகிறது பாலினம் தாண்டி வேறு எல்லைக்குச் செல்கிறது (ஆண்டவரே! நாங்கள் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு இந்த ஒரு பால் உறவு பற்றியெல்லாம் அதிகமாகத் தெரியாது. இது சரியா தவறா சட்ட பூர்வமாக ஏற்றுக்கொள்ளக் கூடியதா இல்லையா என்று கேட்டால் எங்களுக்கு பதில் சொல்லத் தெரியாது. இதுவரை இருந்த மாதிரி நாங்கள் கண்டும் காணாமலும் இருந்து கொள்வோம்).ஆனால் இந்த வலைத்தொடரை உருவாக்கிய ரூபா ராவ் அப்படி இல்லை; தாராளவாத காலத்துப் பெண். அவர் இந்த உறவை நியாயப் படுத்துகிறார். ‘இது அடிப்படையில் இரண்டு ஆத்மாக்களின் சங்கமம். அந்த சங்கமம் நடக்கிறபோது தான் தாங்கள் ஒரே பாலினத்தைச் சார்ந்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. அப்போது பாலினம் என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகிப் போகிறது.’ என்று சொல்கிறார்.

இந்த ரூபா ராவ் கோயமுத்தூர் பாஷையில் சொல்வதானால் கொஞ்சம் லொள்ளுப்புடிச்ச பொம்பளை. ஆனால் லொள்ளுப்புடிச்சவர்களிடம் தான் படைப்பாற்றல் இருக்கிறது. ரூபா ராவ் ‘கண்டுமூட்டே’ (பொதி) என்கிற முழு நீளக் கன்னடத் திரைப்படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார். அதுவும் ஒரு வித்தியாசமான படம் தான். தமிழில் வெளியான ‘ஆட்டோகிராஃப்’, ’96’ மாதிரியான படம். ஒரே வித்தியாசம் இதில் தனது பள்ளிக்காலக் காதல் நினைவுகளை வெளிப்படுத்துவது ஒரு பெண். 16 வயது மீரா. நன்றாகப் படிக்கக் கூடிய. பன்முகத்திறமை கொண்ட, இந்தப் பெண். பெற்றோருக்கு ஒரே பெண். தனிமை..வெறுமை.. தன் வகுப்பில் (பத்தாங்கிளாஸ்) படிக்கும் பையன் மீது விருப்பம். தனது காதல் அனுபவங்களை 360 டிகிரி கோணத்தில் வெளிப்படுத்துகிறார். அதாவது அப்படி ரூபா ராவ் காண்பிக்கிறார். நெருக்கமான முத்தக் காட்சிகள் கொஞ்சம் அதிக டோசுடனேயே இருக்கின்றன. படிப்பில் சொதப்புபவனாக, கெட்ட பழக்கங்கள் உடையவனாக இருந்தாலும் தன் மனதுக்குப் பிடித்தவனாக இருக்கிற அந்தப் பையன் துரதிர்ஷ்டவசமாக செத்துப் போகிறான். மீரா படித்து முடித்து வேலைக்குப் போன பின்னாலும் அவளால் அவனை மறக்க முடியவில்லை. இது சாதாரண தமிழ்ப்படம் போலத்தான் இருக்கிறது. மீராவாக நடிக்கும் பெண் தேஜு பெலவாடி தனக்கு ஏற்படும் தனிமை, வெறுமை பிறகு தனது வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் நேரம் என்பவற்றை நாம் உணரும்படி செய்திருக்கிறார்.இயக்குநர் ரூபா. தேஜூ பெலவாடி ஒரு கலைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண். தாத்தா கர்நாடகத்தின் புகழ் பெற்ற மேக்கப் மேன் நாணி. பாட்டி குணச்சித்திர நடிகை பார்கவி. அப்பா நாடக மற்றும் திரைப்படக்கலைஞர் பிரகாஷ் பெலவாடி. இன்னொரு சொந்தக்காரப் பெண் சம்யுக்தா ஹொரநாடு சில தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்கள் இதில் கவனிக்க வேண்டிய இடங்கள்- படத்தின் ஆரம்பத்தில் தனது நினைவுகளின் தாக்கத்தில் அல்லாடும் மீராவும் அதற்குப் பின்னணியாக இருக்கும் மலைப் பிரதேசக் காட்சிகளும் பின்னணியில் கவித்துவமான வசனங்களும்;;’தான். மீரா தன் காதலைப் பற்றிச் சொல்லுகிறாள். இவை என் கண்ணுக்குள் சாசுவதமாக நிழலாடும் நினைவுகள்… இந்த நினைவுகளால் நான் பொம்மையானேன்.. என் கண்ணில் தெரியும் அவன் தோற்றம் எது? பிரம்மையா? கனவா? நம்பிக்கையா? எதுவாகவும் இருக்கட்டும். அவன் என்னுடையவன் என்று நான் நினைக்கும்போதே அவனது மௌனம் எனது தலைக்குள் ஆயிரமாயிரம் சொற்களைக் குவிக்கிறது. கனவு தோன்றும் பொது தான் அச்சமும் பிறக்கிறது. காதல் பிறக்கும்போது தான் தனிமையும் பிறக்கிறது. ஜனனத்தின் விளிம்பில் தான் மரணமும் நிகழ்கிறது. பொதி சுமக்கும்போது தான் மனசு நிர்வாணமாகிறது’ இந்த வசனங்களும், அது சார்ந்த பின்னணி இசையும் கௌரியோடு நம்மைப் பேசத்தூண்டுகினறன; இது மாதிரியான அசாதாரணமான காட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால் தமிழ் ரசிகர்கள் இதைச் சாதாரணப் படம் என்று ஒதுக்கி விடுவார்கள். பெண்களுக்கும் ‘ஆட்டோகிராஃப்’ உண்டு என்பதை ஆணாதிக்கத் தமிழ் மனம் ஏற்றுக்கொள்ளுமோ என்னமோ? ஆணாதிக்கத்திற்கு மொழி ஏது?
ஆனால் ரூபா ராவின் அருமை கொரோனாக் காலத்தில் வெளியான ஒரு குறும்படத்தில் தான் தெரிகிறது. ‘அமைதி கொண்ட பாதை’ (Silent Passage) என்னும் ஒரு 12 நிமிட குறும்படம். காதலித்த பெண்ணை விட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்கிறான். அந்தப் பெண்ணும் சில மாதங்களிலேயே அவனை விட்டுப் பிரிந்து விடுகிறாள். தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவன் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் பெங்களூரில் இருக்கும் தனது பழைய காதலியைக் கூப்பிடுகிறான். வீடியோ அழைப்பு. இருவருக்கும் பேசிக்கொண்டிருக்கும்போதே தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டியதாகிறது.
இது முற்றிலுமாக ஒரு கொரோனா காலப்படம். திரையில் தோன்றும் பிம்பங்கள், பின்னணிக்குரல்கள், இசை, உரையாடல்,படத்தொகுப்பு, இடையிடை மௌனம் எல்லாமே கொரோனாவின் தாக்கம் கொண்டிருக்கின்றன. புதைத்து விட்ட காதல் என்னும் கொரோனாவைத் தோண்டி விளையாடிக் கொண்டிருக்கும் இருவரும் திடீரென்று தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் கவசங்களை அணிந்து கொள்கிறார்கள். இல்லை. அந்தப் பெண் அணிந்து கொள்கிறாள். பார்க்கும் நமக்கும் கூட ஒரு நிம்மதி கவிந்து கொள்கிறது. இரண்டு மூன்று மணி நேரத் திரைப்படம் கொடுக்க முடியாத அனுபவத்தை இந்த சில நிமிஷ நேரப் படம் கொடுத்து விடுகிறது. ரூபா ஒன்றும் முட்டாள் இல்லை.
கொரோனா காலப்படம் என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கும் தமிழ்க்குறும்படமான ‘கார்த்திக் டயல் செய்த எண்’ ணில் கொரொனாவும் இல்லை. படமும் இல்லை. சிலம்பரசன், திரிஷா, கௌதம் வாசுதேவ்மேனன், ஏ.ஆர்.ரகுமான் என்ற பின்னால் எப்போதும் ஒளி வட்டங்களைக் கொண்டிருப்பவர்கள் அல்லது ஒளி வட்டம் சூட்டப்பட்டவர்கள் தான் படம் முழுவதும் தெரிகிறார்கள். இதில் துணை ரெஃபரன்சாக மணிரத்னம் வேறு. சிலம்பரசனின் தோற்றத்திலும், பேச்சிலும் அவரது காமம் (libido) மட்டுமே தெரிகிறது. பத்து வருடத்திற்குப் பிறகு நடக்கும் அவர்களது தொடர்பில் காலத்தின் சிராய்ப்புகள் ஒன்று கூட இல்லை, ரகுமான் ‘பாம்பே’ படத்திற்கு இசை அமைப்பது மாதிரியே இதற்கும் இசை அமைத்திருக்கிறார். முழு நீளப்படமாக இருந்தாலும், குறும்படமாக இருந்தாலும் இனிமேல் புதிய பின்னணிகளிலிருந்து வருகிற இளைஞர்களுக்கு வழி விட்டு இவர்கள் எல்லோரும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவுக்கு அழகர்சாமியின் குதிரை, சுப்பிரமணியபுரம், காக்கா முட்டை மேற்குத்தொடர்ச்சி மலை என்று படம் கொடுத்தவர்கள் எல்லாம் ஒளி வட்டங்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்.
கர்நாடகத்திலும் அப்படி வந்திருக்கிறார்கள். டி.எஸ்.நாகாபரணா, டி.என்.சீதாராம். சேஷாத்ரி, ஈரேகௌடா, மன்சோரே, ரூபா ராவ், என்று எல்லோரும் அப்படி வந்தவர்கள் தான். கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் மனிதனுக்கென்று பிரச்சினைகள் பல விதமாக முளைக்கின்றன. அவற்றிற்கு கலைரூபம் கொடுப்பது மனதுக்குப் பிடித்தமானதாகவும், சவாலானதாகவும் இருக்கிறது. ஏற்றுக்கொள்ளப்பட்ட வெகுசன ரசனை, வணிக எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் படம் எடுக்கும் திரைப்பட கர்த்தாக்கள் எல்லா மொழியிலும் மிக குறைவாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் சமீபமாக சேர்ந்திருப்பவர் மன்சோரே (மஞ்சுநாத சோமகேஷவ ரெட்டி) கோலார் பக்கமுள்ள வெங்கடாபுரா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். கர்நாடக சித்திரகலா பரிஷத்தில் படித்ததினாலோ என்னவோ அவரால் ஒரு நல்ல ரசனையை உருவாக்க முடிந்திருக்கிறது.

அவர் உருவாக்கிய படம் ‘நாத்திச்சராமி’ (திருமணச்சத்தியம்) மன்சாரோவுக்கு பெண்மை என்பது பிரமிப்பானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இது வரை மிக குறைவாகவே விளங்கிக் கொள்ளப்பட்டதாக இருக்கிறது. அதிலும் சினிமாவில் அது எதிர்மறையாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. பல பெண்கள் கொண்ட குடும்பத்தில் பிறந்த மன்சோரே பெண்மையைப் புரிந்து கொள்ளும் ஒரு நீண்ட தேடலில் இருக்கிறார்.
வெறுமை என்று வரும்போது அது பெண்களையே அதிகம் பாதிக்கிறது. தனது பாசத்திற்கும், பிரியத்திற்குமுரியவர்களை இழக்க நேரிடுகிறபோது ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆண்களுக்குப்போல வெறுமையைப் போக்க தாற்காலிகமான வழிகள் ஏதும் அவர்களுக்கு இல்லாததும் ஒரு காரணம். அதிலும் திருமணமாகி செட்டில் ஆன உடனே கணவனை இழக்கும் பெண்ணுக்கு வாழ்க்கை சூனியம் ஆவதில் ஆச்சரியமில்லை. எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைத்திருந்தது. இருவருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம். வீடு, வாகனம் என்று எல்லாமே ஹை-டெக் தான். கணவனை இழந்த கௌரி தனது தாராளவாத உலகைத் தாண்டி வெளியே வரும்போது பழைய இந்தியா அப்படியே இருக்கிறது. பஸ் ஸ்டாப்பில் மோசமான கமெண்டுகள்.. அலுவலகத்தில் வலை வீச்சுக்கள். இவற்றையெல்லாம் விட கௌரிக்கு இருக்கும் இன்னொரு முக்கியமான பிரச்சினை உளவியல் ரீதியானது. ஓர் ஆணுடன் கொள்ளும் உறவு விசுவாச அடிப்படையில் உணர்வு ரீதியானதா, உடல் ரீதியானதா? ஒன்றைத் தக்க வைத்துக்கொண்டு இன்னொன்றில் ஈடுபட முடியாதா? கௌரியின் பிரச்சினையைப் புரிந்து கொண்ட அலுவலக சகாவான பெண் கௌரிக்கு சொல்லும் ஆலோசனையும் நடைமுறையில் சாத்தியமில்லை. (அப்படிப்பட்ட ஒருவனுக்கு போன் செய்து வரச்சொல்லி பிறகு திருப்பி அனுப்பி விடுகிறாள்) ஆன்லைன் மூலம் கிடைக்கும் மின்னணு உபகரணங்களும் போதுமானதாக இல்லை. தனது மனைவியுடன் சுமுகமான உறவில்லாத ஒருவனுடன் ஏற்பட்ட நட்பும் அவனது உடல் ரீதியான உதவியும் பிரச்சினைக்கு விடை தராமல் மேலும் குழப்பத்தைத் தருகின்றன/ திருமணச்சத்தியம் மீறப்படக்கூடாது என்ற ஒரு கருத்தும் இருக்கிறது என்று மன்சோரே சொல்ல ஆசைப்பட்டாரோ என்னமோ? அந்த ஆண் தன் மனைவியைத் தேடி ஓடிப் போய்விடுகிறான்.
இந்தக் கதையை எழுதியவர் சந்தியா ராணி என்னும் ஒரு பெண் கதாசிரியர்.இதில் கௌரி தான் குவிமையம். கௌரியாக நடித்திருப்பவர் ஷ்ருதி ஹரிஹரன். தமிழ்ப்பெண்,. மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இவரது தேர்விலிருந்து, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், உடை வடிவமைப்பாளர் என்று எல்லாத் தேர்வுகளையும் கவனமாகச் செய்திருப்பதால் படம் கலைத்தன்மையை அடைந்திருக்கிறது. கௌரியின் பெருமூச்சுக்கள் நம்மைக் கடந்து செல்லும்போதெல்லாம் இந்தப் பெருமூச்சுக்களில் ஒரு பகுதியையாவது நாம் எப்போதாவது உணர்ந்திருப்போமா என்று தோன்றியது. இதில் நியாய அநியாயம் பார்த்துத் தான் வரலாறு தன்னைக் கடந்து வந்திருக்கிறது. சமூகம் மட்டுமே கட்டமைத்து வைத்திருக்கும் நியாய அநியாயங்களில் தனி மனித உரிமை சில ஓட்டைகளைப் போடுகிறது. கண்ணுக்குத் தெரியாததாக இருந்தாலும் ஓட்டை ஓட்டை தானே!
இசை அமைப்பாளரும் ஒரு தமிழ்ப்பெண் தான். ‘அருவி’ படத்திற்கு இசை அமைத்த பிந்து மாலினி நாராயணசாமியை இந்தப் படத்தின் இயக்குநர் மன்சோரே தேடிப் பிடித்து இசையமைக்கச் செய்திருக்கிறார். கௌரி தன் வெறுமையைக் கடக்க முடிந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் பிந்து மாலினிக்கு வெறுமை ஒரு பிரச்சினை இல்லை. கர்நாடக சங்கீதத்திலும். இந்துஸ்தானி சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்ற அவருக்கு எல்லாமே இசை மயம் தான். இசையால் எந்தப் பிரச்சினையையும் கடந்து செல்லமுடியும் என்பது அவரது நம்பிக்கை. மொழியில்லாத இசை, மொழியைக் கடந்த இசை என்பதை கௌரியின் பிரச்சினையோடு பொருத்திப் பார்த்திருக்கிறார். அவரது சோதனையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனோடு ஒன்றிக்கொள்ளவும் முடிகிறது. பிந்து மாலினி தமிழ்ச்சூழலுக்கும், இந்தியச்சூழலுக்கும் ஒரு அபூர்வ நிகழ்வு. காரணம் இங்கே கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம், மெல்லிசை, நாட்டார் இசை என்பனவெல்லாம் தனித்தனித் தீவுகளாக இருக்கின்றன. சினிமாவில் இவையெல்லாம் சேர்ந்து வருகின்றன என்றாலும் அந்தந்த இசையைத் தருகின்றவர்களுடைய நோக்கம் ஒருமுகப் பட்டதாக இல்லை. சபை ரசிகர்களுக்காகவும், திரை ரசிகர்களுக்காகவும் பாடுபவர்களும், இசைப்பவர்களும் நிறைந்த இந்த சமூகத்தில் இசையைத் தனது தேடலின் ஒரு பகுதியாக வைத்துக்கொண்டு நாடு, நகரமெங்கும் அதைத் தேடி அலையும் பிந்துமாலினியைப் போன்றவர்கள் இருப்பது அபூர்வமில்லையா? ஒரு முடிவுறாத தேடலின் தொடர்ச்சி தானே இசை? ஒரு மனிதப் பிரச்சினை சிக்கலுறும்போது அதை வெளிப்படுத்துவதற்கு உகந்த வடிவம் இசை தான். கைலாசம் பாலச்சந்தரின் ‘அரங்கேற்றம்’ படத்தில் வரும் புரோகிதர் தனக்கு மனச்சிக்கல் வரும்போதெல்லாம் தனது மகளை ஸ்லோகம் சொல்லச் சொல்லுவார். அது என்ன சுலோகம்?
‘நாத்திச்சராமி’ படத்தில் வரும் பாடல்களில் பிந்து மாலினி பாடிய ‘மனவே மாயாவி மனவே’ என்னும் பாடலும், ‘தேஹவு நீயே..’ என்னும் பாடலும் தன்னளவில் சிறப்பானவை என்றாலும் படத்தில் வரும் கௌரியின் மனநிலையையோ அல்லது பிந்து மாலினியின் இசை மூலமான தேடலையோ முழுமையாக வெளிப்படுத்துவன என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த கணத்தில் அவை பொருந்திப்போயிருக்கின்றன.. சாதாரணத்திரைப்படத்தில் நீற்றொழுக்குப் போன்ற அப்படிப்பட்ட குரல்களைக் கேட்க முடியாது. வெறும் ஒன்றிரண்டு இசைக்கருவிகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன’ இசைக்கருவிகள் அதிகமாக ஆக அவை எந்த அளவுக்கு இனிமை சேர்த்தனவோ அந்த அளவுக்கு நாராசத்தையும் சேர்த்திருக்கின்றன.
இது கொரோனாக்காலம். அகண்ட திரையில் இருந்து துரத்தப்பட்டு ஜனங்கள் வீட்டுத்திரையில் (ஓடிடி) ஒன்றிப் போயிருக்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறையவில்லை. இன்னும் அதிகமாகியிருக்கின்றன. கௌரிகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருப்பார்கள். கௌரிகளின் வேதனைகளை நமக்குப் புரிய வைக்க பிந்து மாலினிகளும் தோன்றிக் கொண்டேயிருப்பார்கள்.
(இந்தப்படங்கள் எல்லாமே இணையத் தளத்தில், ஓ.டி.டி. பிளாட்பார்ம்களில் கிடைக்கின்றன)