விடியல்

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை தம்பி. ஒரே ஊர்க்காரரா போயிட்டீங்க. கல்யாணம்னா சும்மா இல்லை. பொண்டாட்டி, புள்ளைன்னு சேரும். எல்லாத்துக்கும் செய்யணும். நல்லது கெட்டது பாக்கணும். எல்லாத்துக்கும் காசு கப்பி இருந்தாத்தான் ஆகும். ஊருக்குள்ள நீதென் படிச்சவன். இல்லைங்கலை. ஆனா, ஏட்டுப் படிப்பு சோறா போடுது? சொத்து சொகம் இல்லாத இடத்துல என் பொண்ணுதென் கஷ்டப்படுவா. நீங்க வேற இடம் பாத்துக்குங்க தம்பி. ஒரே ஊர்க்காரங்க நாம. நாளையும்பின்ன ஒருத்தர் மொகத்துல ஒருத்தர் முழிச்சிக்கணும்ல?” என்றார் மஞ்சுவின் அப்பா, தனசேகர்.

“உங்க பொண்ணுக்கு அதெல்லாம் கஷ்டமான்னு தெரியலை.. ஆனா, உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு புரியிது..  நான் வரேன்” என்று சொல்லிவிட்டு  எழுந்து வீட்டு வாசல் கடந்து செல்லும் ராஜாவை புவனா செய்வதறியாது பார்த்து நின்றாள்.

விடியல் கிராமம் தமிழகத்தின் எந்த ஒரு கிராம இலக்கணத்திலிருந்தும் வேறு பட்டது அல்ல. சுமாராக ஒரு ஐந்நூறு குடும்பங்கள். அதாவது, எந்த ஒரு போக்கையும் சுமார் இரு நூற்றி ஐம்பது குடும்பங்களின் ஆதரவுடன் நியாயப்படுத்திவிட முடியும். விவசாயம் தான் அடிப்படைத் தொழில். ஒரே ஒரு பள்ளிக்கூடம். அதன் நோக்கம், டவுனில் உள்ள சினிமா கொட்டகையில் என்ன படம் ஓடுகிறது என்று செய்தித்தாள் வாசித்துத் தெரிந்துகொள்ள முடிகிற அளவுக்கு கற்பித்தல். அவ்வளவு தான். கிராமத்திற்கு வீதி விளக்குகள் அரசால் கொடையாக அளிக்க முடிவதற்கு இன்னும் காலம் இருந்தது. சிம்னி விளக்குகளே குடில்களை வெளிச்சமூட்டின. இப்படியான கிராமத்தில் டிப்ளமோ வரை படித்திருந்த ராஜா ஒரு கலகக் காரனாய்த்தானே இருந்திருக்க முடியும்?

மறு நாள், கிராமத்தின் விளிம்பில் ஒதுக்குப்புறமாக இருந்த,  கோவிலின் பின் புறம் ராஜாவும், புவனாவும் தனிமையில் சந்தித்தபோது,

“என்ன இருந்தாலும் அப்பாட்ட நீ அப்படி பேசியிருக்கக்கூடாது. நாளைக்கு நீ ஒரு பொண்ணை பெத்தாலும் அப்படித்தான் யோசிப்ப. அப்படித்தான் யோசிக்கணும்.” என்றாள் புவனா.

“இப்ப என்னை என்ன பண்ணச் சொல்ற? மழையை நாந்தான் வரவேணான்னு சொன்னேனாக்கும்?  நெல்லு தர்ற நெலம் பொலந்துக்கிச்சு. வச்சிருக்கேன். ஆறு ஏக்கரு. எதுக்காவுது? நான் என்ன சொம்பையா? ஆனா, சூழ்நிலை ஒத்துழைக்கணும்ல? என் கெட்ட நேரம், மழை ஏமாத்துற நேரமாப்பாத்து உங்கப்பா உனக்கு மாப்பிள்ளை பாக்க கிளம்புறாரு” என்றான் ராஜா கையாலாகாதவனாய்.

புவனா ஏதும் பேசவில்லை. இருவருமே எதுவும் பேசத்தோன்றாமல் அமைதியாக இருக்க, இறுதியாக மெளனம் கலைத்தாள் புவனா.

“ஒண்ணு சொல்லவா?”

“என்ன?”

“நாம வீட்டை விட்டு ஓடிப்போயிரலாம்”

“க்கும்..எங்கிட்டு போறது? ஓடிட்டா ஆச்சா? சொத்துபத்தெல்லாம் இங்கிட்டு இந்த கிராமத்துல தானே இருக்கு”

“நான் பணம் கொண்டு வரேன் ராஜா”

“அது எனக்குத்தான் அவமானம். பத்து பைசா வேணாம். ஆனா, இப்படித்தான் நாம இணைய முடியும்னா, வேற வழியில்லை. நாளைக்கு விடிஞ்சதும் நம்ம ஊர்லேர்ந்து டவுனுக்கு போற மோத பஸ்ல கிளம்பிடுவோம். டவுன் போய் சேர்ந்துட்டா அங்கிருந்து வெளி ஊருக்கு போயிரலாம்” என்றான் ராஜா.

புவனா ராஜாவைக் காதலுடன் பார்க்க, ராஜா, புவனாவை அக்கறையுடன் பார்த்தான்.

************************************

உறக்கம் பிடிக்காமல், புரண்டு புரண்டு கோரைப்பாயில் படுத்திருந்தான் ராஜா. வெளியே, தவளைகள் இனப்பெருக்கத்திற்கு தத்தம் துணைகளை உறக்க அழைத்துக்கொண்டிருந்தன. கும்மிருட்டு. நிலா வெளிச்சம் கூட இல்லை.

மஞ்சப்பையில் ஒரு வேட்டி, ஒரு சட்டை எடுத்துவைத்துக்கொண்டதையும், கைவசம் இருந்த ஆயிரம் ரூபாயைப் பத்திரப்படுத்திக்கொண்டதையும் இன்னொருமுறை ஊர்ஜிதம் செய்துகொண்டான். டவுனுக்குப் போய்விட்டால் அங்கிருந்து வேறொரு ஊருக்கு சென்று எங்கேனும் யாருடையே நிலத்திலேனும் கூலி வேலைக்கு சேர்ந்துவிடவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான். இரவில் வயலில் பன்றிகள் வரும். ஆடு, மாடுகள் வயலை மேய்ந்துவிடலாம். அதையெல்லாம் தடுக்கும் விதமாய், வயலுக்கு அருகிலேயே குடிசை போட்டுவிட முதலாளியின் அனுமதி கேட்டுக்கொள்ளலாம். புவனா வீட்டைப் பார்த்துக்கொள்ள வயல் வேலையில் இருந்தபடியே அடுத்தகட்டம் குறித்து யோசிக்க முடியும் என்பது ராஜாவின் திட்டமாக இருந்தது.

வெகு நேரம் விழித்திருந்தவன் அதிகாலை இரண்டு மணி சுமாருக்கு தன்னையும் அறியாமல் உறங்கிப்போனான். திடுமென விழிப்பு வந்தபோது, ‘காலம் கடந்துவிட்டதோ,  விடிந்துவிட்டதோ’ என்ற பதற்றம் வந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது வெளியே இன்னமும் இருளாகவே தான் இருந்தது. நல்ல வேளையாக இன்னும் விடியவில்லை என்று எண்ணிக்கொண்டான். விடியற்காலை ஐந்தரை மணிக்கு டவுனுக்குச் செல்லும் பேருந்து கோவிலருகே வந்துவிடும். அதில் ஏறிக்கொள்ள புவனாவை வரச்சொல்லியிருந்தான். ஆதலால் அவளுக்கு முன்பே அங்கே சென்றுவிடும் எண்ணத்தில் காலைக்கடன்களை முடித்துவிட்டு மஞ்சப்பையையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு கோயிலுக்கு சென்றபோது அங்கே பேருந்து வந்த தடயம் இல்லாததை அவதானித்துவிட்டு நிம்மதி அடைந்தான்.

புவனா வர காத்திருந்தான். நேரம் செல்லச்செல்ல, புவனாவும் வரவில்லை. பேருந்தும் வரவில்லை. மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தபோது மணி ஐந்தரை எனக்காட்டியது. ஆனால், இரவு இன்னமும் கன்னி கழியாத பெண்ணாகவே இருந்தது. விடியல் சமீபத்தில் இல்லை என்பதான தோற்றம் தந்தது.

ஐந்தரை மணி சுமாருக்கான விடியல் வெளிச்சமாக அந்தப்பொழுது இல்லாமல், சற்றும் பொருத்தமில்லாத இருள் அங்கே இருந்தது.  விடிந்தது தெரியாமல் இரவானது உறங்கிவிட்டது போலிருந்தது.  ஒருவேளை கைக்கடிகாரம் ஓடவில்லையோ என்றெண்ணி மணிக்கட்டை உலுக்கினான். பழுதானதற்கான எந்த விதமான அறிகுறியும் காட்டாமல், அந்தக் கடிகாரத்தின் முட்கள் தொடர்ந்து எவ்வித சுண்க்கமுமின்றி நகர்ந்துகொண்டிருந்தது.

வெகு நேரம் காத்திருந்தும் பேருந்து வரவில்லை. கைக்கடிகாரத்தின் சின்ன முள் ஆறில் வந்து தேங்கியபோதும் பேருந்து வருவதற்கான எவ்வித சமிஞையும் இல்லாமல் இருப்பதை உணர்ந்த, குழப்பம் உந்த ஓட்டமும் நடையுமாய் பேருந்து நிறுத்தும் திடலுக்கு விரைந்தான் ராஜா. பேருந்தின் இறுதி நிறுத்தம் அந்த கிராமம் தான்.ஆதலால்  நாளின் கடைசி ஓட்டத்தை மேற்கொள்ளும் ஓட்டுனர் வீரையன் கிராமத்தின் விளிம்பில் உள்ள திடலில் நிறுத்திவிட்டு, இரவை பேருந்துக்குள்ளேயே தூங்கிக் கழித்துவிட்டு, அதிகாலையில் குளத்தில் குளித்துவிட்டு, குளத்தையொட்டிய பிள்ளையார் கோயிலில் திரு நீற்றை அள்ளி நெற்றியில் பூசிவிட்டு வண்டியை கிளப்புவது வழமை. முதல் நிறுத்தமே கிராமத்தின் பேருந்து நிலையம் தான்.

ராஜா ஓடோடிச் சென்று பார்த்தபோது, அந்தப் பேருந்து திடலில் தான் நின்றிருந்தது. ராஜா பேருந்தை அண்டி உள்ளே ஏறியபோது அங்கே, இரு புற இருக்கைவரிசைகளுக்கு இடையே துணி விரித்து ஓட்டுனர் வீரையன் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, உலுக்கி எழுப்ப,

“ஆங்க்.. யார்ரா? ராஜாவா?” என்றார்.

“ஆமான்னே.. நேரமாச்சுன்னே..வண்டி கிளப்பலையா?”

“வண்டியா? இன்னும் விடியவே இல்லையேப்பா.. இருட்டாத்தானே கிடக்கு..” என்றவர் கைக்காடிகாரத்தைப் பார்த்துவிட்டு லேசாக வியர்த்தார்.

பிறகு அவசர அவசரமாக எழுந்து, வேப்ப மரத்திலிருந்து, கிளையொன்றை மடித்துப் பிடுங்கி பல் துளக்கிவிட்டு, குளத்தில் குளியலை முடித்து வண்டிக்கு வந்தபோது, வண்டியின் டயர் பஞ்சராகியிருந்தது.  உடனிருந்த ராஜாவை உதவிக்கு அழைக்க வேறு வழியின்றி ராஜா உதவ வேண்டியதாகிப்போனதில், பேருந்துக்கு ஸ்டெப்னி என்னவோ கிடைத்தது தான். ஆனால்,  நேரம் காலை ஏழைத் தாண்டி விட்டிருந்தது.

புவனா வந்திருக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துவிட்டு, ராஜா மஞ்சப்பையுடன் ஊருக்குள் நடக்க கிராமத்தின் வீடுகளின் வாசல்களில் கிராமத்து மக்கள் கூடி நின்று வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராஜா மெல்ல புவனாவின் வீட்டைக் கடந்து செல்கையில் ஓரக்கண்ணால் நோட்டம் பார்க்க, புவனா அவளது வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டியைப் பார்த்தபடி நின்றிருப்பது தெரிந்தது. அப்போதுதான் உறக்கம் கலைந்து எழுந்தவளாய்,  செப்பனிடாத முகத்துடன், கலைந்த கூந்தலுடன் புவனா தொலைக்காட்சிப்பெட்டியைப் பார்த்துக்கொண்டிருக்க,

‘சற்று முன் கிடைத்த தகவல். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விடியல் கிராமத்தில் விடியவே இல்லை என்று தகவல் வந்திருக்கிறது. விடியல் கிராமத்தில் மட்டும் தான் விடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விடியல் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் விடிந்துவிட்ட நிலையில் விடியல் கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்க வேண்டிய பேருந்து புறப்படாததால், விவசாய சந்தைக்கு வந்திருக்க வேண்டிய காய்கறிகள், நெல் முதலான பொருட்கள் வராததால் விவசாயப் பொருட்கள் பதுக்கப்படுகின்றனவா என்றொரு கேள்வியும் எழுந்திருக்கிறது. …………’ அரசு தொலைக்காட்சிப்பெட்டியில் செய்தித்தொகுப்பாளினி செய்தி வாசித்துக்கொண்டிருந்தாள். தொடர்ந்து ஒரு சிறிய காணொளி காட்டப்பட்டது.

“என் பேரு செல்வாங்க. விடியல் எங்க பக்கத்தூரு தான். பக்கத்துல இருக்கிற கெமிக்கல் ஃபாக்டரில தான் வேலை பாக்குறேன். தினமும் பைக்குல தான் வேலைக்கு போவேன். அப்படி போறப்போ, இன்னிக்கு விடியல் கிராமம் மட்டும் அலம்பி விட்டா மாதிரி தெரிஞ்சிச்சுங்க. என்னமோ ஏதோன்னு வண்டியை ஓரங்கட்டிட்டு மெதுவா விடியல் கிராமத்துக்குள்ளே அடியெடுத்து வைக்கிறேன், பூரா இருட்டா கிடக்குங்க. கிராமத்திலிருந்து திரும்பி எங்க ஊரப்பாத்தா எங்க ஊரே தெரியலீங்க. இருட்டுக்குள்ள முங்கினாப்புல இருந்துச்சுங்க. பொறவு, மறுக்கா வண்டிக்கு வந்து பாக்குறேன், விடியல் கிராமம் மட்டும் அலம்பி விட்டா மாதிரி தெரிஞ்சிச்சுங்க. இதுமாதிரி எப்பயுமே பாத்தது இல்லைங்க.. மெயின் ரோட்டுல போர எல்லா பஸ்ஸு, லாரி டிரைவருங்களும், வெளியிலிருந்து விடியல் கிராமத்தைப் பாத்தா அலம்பி விட்டா மாதிரி இருக்குன்னு தாங்க சொன்னாங்க. பேய் பிசாசான்னு தெரியலீங்கோவ்’ என்று சொல்லிக்கொண்டிருந்தான் பக்கத்து ஊரைச்சேர்ந்த செல்வா என்பவர்.

வீட்டினுள் நுழைந்து மஞ்சப்பையைக் குடிசையின் கூரையில் செருகிவிட்டு சப்பனிக்காலிட்டு அமர்ந்தான் ராஜா.

‘…ஏட்டுப் படிப்பு சோறா போடுது? சொத்து சொகம் இல்லாத இடத்துல என் பொண்ணுதென் கஷ்டப்படுவா……’ என்ற புவனா அப்பாவின் வார்த்தைகள்  நெருடுவதாய் உணர்ந்தான் ராஜா.  பின் எழுந்து குடிசை வாசலை அண்டினான். அவன் கண் முன்னே ஆறு ஏக்கர் விவசாய நிலம் மல்லாந்து கிடந்தது. வரட்சியிலும், வெடிப்பிலும் தன் உடல் சோர்வைக் காட்டியது.

கிராமமே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. விடியல் கிராமத்தில் இனி விடியாது என்று தோன்றி மக்கள் பரபரப்பானார்கள். கோயில்களில் சிலர் சாமியாடினார்கள். கோயில் பூசாரி, தெய்வக்குத்தம் நடந்துவிட்டதாய் ஆரூடம் சொல்லி பரிகாரமாக கிடாய் விருந்து வைக்கச்சொல்லி பணித்தார். கிராமம் அவசரமாகக் கூடி கிடாய் விருந்துக்கு பரபரப்புடன் தயாரானது.  கிராமத்திலிருந்த ஒரே ஒரு பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பள்ளிக்கூடத்திலிருந்த வாத்தியச்சி தாயம்மா டவுனுக்குப் போய்விட்டிருந்தாள்.

கிராமத்திற்கு நாட்டின் பரபரப்பான செய்தி நிறுவனங்களிலிருந்து  நிருபர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்தார்கள். ஆளுக்கொரு கிராமத்து மனிதரை அண்டி பேட்டி எடுத்து ஒளிபரப்பினார்கள். விடியல் கிராமத்து இளைஞர் ஒருவரை ஒரு செய்தி நிறுவனம் அண்டியது.

“இந்த கிராமம் இன்னிக்கு விடியலை. நாளைக்கு விடியுமான்னும் தெரியலை.  இந்த சூழல்ல நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?” என்றாள் ஒரு செய்தி நிறுவனத்திலிருந்து பேட்டி காண வந்த பெண் தொகுப்பாளினி அந்த கிராமத்து இளைஞரிடம் மைக்கை நீட்டியபடி.

************************************

“நான் நல்லா தூங்கிட்டு இருந்தேனுங்க. அப்போ வானத்துலேர்ந்து ஏதோ கல்லு மாதிரி ஒண்ணு தொப்புன்னு விழுந்தா மாதிரி ஒரு சத்தம் கேட்டு எழுந்தேனுங்க. ஜன்னல் வழியா பாத்தப்போ அப்படி ஏதும் கண்ணுக்கு தெரியலீங்க. இதையுங்கூட இப்ப சொல்லலாமா கூடாதான்னு எனக்குத் தெரியலைங்க. சொல்லாமலேயே போய், அதால கிராமத்துக்கு ஏதாச்சும் வந்துடுமோன்னு பயமா இருந்துச்சு. அதான் சொல்றேன்” என்றார்..

அதைத் தொலைக்காட்சி வழியே கேட்டுக்கொண்டிருந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்  நீலனின் கண்கள் இடமும் வலமுமாக துரிதமாக அசைந்தன. பின் அலைபேசியின் ஒரு எண்ணைத் தெரிவு செய்து,

“ஐ திங்க் ஐ நவ் ஹாவ் சம் ஐடியா ஆஃப் வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர். ஷெட்யூல் எ மீட்டிங்” என்றார்.

ஒரு பெரிய சந்திப்பு அறையில், கோட்-சூட் அணிந்த இருபது முப்பது பேர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த நீலன் எழுந்து நின்று சற்றே கணைத்த குரலில் பேசலானார்.

“எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாத சூழ் நிலையிலும், என் அழைப்பை ஏத்துக்கிட்டு இந்த இக்கட்டான சூழல்ல வந்து சேர்ந்த உங்க எல்லாருக்கும் என் நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன். உங்க எல்லாருக்குமே தெரியும். பூமியோட வெப்ப நிலை கிரீன் ஹவுஸ் கேஸஸால நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது. இதை நாம உடனே கட்டுப்படுத்தலைன்னா, துருவங்கள்ல உள்ள பணிக்கட்டிகள் உருகி, பூமிப்பந்தோட மொத்த நீரளவு அதிகமாகி, கடலோரம் அமைந்த நிலப்பரப்புகள் தண்ணீரில் மூழ்கிட வாய்ப்பிருக்கு. அப்படி நடந்தா முதல்ல மூழ்குறது  நம்ம தமிழகமாகத்தான் இருக்கும். இதைத்தடுக்கணும்னா, இந்த வெப்பத்தைக் குறைக்கணும். அதுக்கு பூமியைச் சுத்தியிருக்கிற வளி மண்டலத்துல, மேகங்களுக்கு மேல இருக்கிற ஸ்ட்ராடோஸ்பியர்ல  கால்ஷியம் கார்பனேட்டை பரவ செய்யிறது நம்மகிட்ட இருக்கிற பிரதான தீர்வுகள்ல ஒண்ணு. இப்படி செய்யிறதுனால இந்த கால்ஷியம் கார்பனேட், பூமி மேல படுகிற சூரியனோட வெப்பத்தை பூமிக்குள் ஊடுறுவ விடாம, மறுபடி விண்வெளிக்கே திருப்பி விட்டுடும். இதனால, பூமியோட வெப்ப நிலை கட்டுக்குள் இருக்கும். இதற்காக வளி மண்டலத்துல அரசாங்கம் கொட்ட இருந்த கால்ஷியம் கார்பனேட்டை வளி மண்டலத்துக்கு எடுத்துக்கிட்டு போகிற கான்ட்ராக்டை கொஞ்ச நாள் முன்ன நம்ம கம்பெனி எடுத்திருந்தது. அதன்படி போன வாரம் ஒரு பெரிய பலூன் மூலமா எடுத்துட்டுப் போய் வளி மண்டலத்துல கொட்டினோம். அது உங்க எல்லாருக்கும் நினைவிருக்கலாம். ஆனால், இப்போ தமிழகத்துல விடியல்ன்னு ஒரு கிராமத்துல விடியலே இல்லைன்னு இன்னிக்கு செய்தி வந்திருக்கு”

“மிஸ்டர் நீலன், நாம கொட்டினது மும்பைக்கு மேல. அதுக்கும் தமிழகத்துல ஒரு கிராமத்துல விடியல் இல்லைங்குறதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கு.  அந்த இடத்துல தான் விண்வெளியிலிருந்து ஒரு கல் விழுந்திருக்குன்னு அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தர் நீயூஸ்ல சொன்னாரு.  ஸ்ட்ராடோஸ்பியர்ல  நாம கொட்டின கால்ஷியம் கார்பனேட் லீக் ஆகுறதா தகவல் வந்திருக்கு. யாரால் எப்படின்னு அரசாங்கம் கேள்வி கேட்டு கொடையுறாங்க.  நாம நம்ம வேலையைச் சரியான செய்யலைன்னு நிரூபனமானா, நம்ம கம்பெனி லைசன்சே கூட கான்சல் ஆகலாம். இப்போ அரசாங்கத்துக்கு நாம சரியான காரணத்தைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். என் தியரி இதுதான். அந்த விண்வெளிக்கல் தான் அந்த கால்ஷியம் கார்பனேட் லீக்குக்கு காரணம்”

“எப்படி சொல்றீங்க மிஸ்டர் நீலன்?”

“வளிமண்டலத்துல லீக்கான கால்ஷியம் கார்பனேட்டை இந்தக் கல் ஏதோ ஒரு வகையில ஈர்க்கிறதால தான் அந்தக் குறிப்பிட்ட கிராமத்தைச் சுத்தி லீக் ஆன கால்ஷியம் கார்பனேட் ஒரு குடை மாதிரி பரவி இருக்குது. அது அப்படி பரவி இருக்கிறதால, சூரியனிலிருந்து வர்ற ஒளியை, அந்த கால்ஷியம் கார்பனேட் துகள்கள் கிரமத்துக்குள்ல புக விடாம, திருப்பி செலுத்துது. இதனாலதான் வெளியிலிருந்து பார்க்கிறப்போ, இப்படியாக பிரதிபலிக்கிற ஒளியால தான் அந்த கிராமம் பார்வைக்கு அலம்பி விட்டா மாதிரி தெரியிது. ஆனா கிராமத்துக்கு உள்ளிருந்து பாக்குறப்போ எல்லாமே இருளா தெரியிது”

“அதை எப்படி ஷூரா சொல்றீங்க? ஒரு கல். அதைச்சுத்தி ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருளுக்கான ஈர்ப்பு விசை? எப்படி?”

“ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட  க்ராஸ்டார்ஃப் பயிர் வட்டத்துக்கு (Grasdorf Crop Circle) கீழே தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் நமக்கு கிடைச்சிருக்கு. இது நடந்தது 1992ல. இந்த உலோகங்கள் அந்த பயிர் வட்டத்துக்கே காரணமா இருக்கலாம்ன்னு நம்மள்ல பலர் இன்னிக்கும் சந்தேகிக்கிறோம். வேற விதமா அந்த பயிர் வட்டங்கள் உருவாகியிருக்கலாம்ன்னு இந்த 28 வருஷத்துல ஏதாச்சும் தெரிய வந்திருக்கா?”

“இல்லை”

“அதே அடிப்படையில தான் இதையும் நான் சொல்றேன். ஒரு விண்வெளிக்கல். அது கால்ஷியம் கார்பனேட்டை ஈர்க்குது. கால்ஷியம் கார்பனெட்டை ஏன் ஈர்க்கணும்? கால்ஷியம் மனித உடலில் உள்ள எலும்புகளை உருவாக்குது. கால்ஷியம் கார்பனேட், ஒளி ஊடுறுவலை தடுக்குது. நீங்க பூமியிலிருந்து வேறொரு கிரகத்துக்கு போறீங்க. அந்த கிரகத்துல இருக்கிற உயிரினங்கள் உங்களை கவனிக்கக்கூடாதுன்னு நீங்க நினைச்சா என்ன செய்வீங்க?”

“ஒளிஞ்சிக்க முயற்சி பண்ணுவேன்.  நான் யார் கண்ணிலும் படாத மாதிரி பாத்துக்குவேன். அல்லது, அந்த கிரகத்து உயிர்கள் எப்படி இருக்கோ அந்தத் தோற்றத்துக்கு என்னை நானே மாத்திக்க முடியுமான்னு பார்ப்பேன்”

“எக்ஸாக்ட்லி.  மனித எலும்புகளுக்கு வளையும் தன்மை இருந்தா என்னாகும்? மனிதனால எந்த உருவத்தையும் எடுக்க முடியும் தானே? இதற்கு என்ன அர்த்தம்? ஏலியன் உண்மைன்னா, அந்தக் கல் உண்மைன்னா, அப்போ ஒரு ஏலியன் நமக்கு நடுவுல ஒரு மனித ரூபத்துல கூட இருக்கலாம். இல்லையா? அப்படி செயற்கை மனித உருவங்கள் உருவாக்கப்படுதுன்னா, அப்போ உருவாக்குறது யார்? வேற்று கிரகத்துலிருந்து பூமிக்கு வந்தது யார்? அவங்களோட நோக்கம் என்ன? அந்தக் கல் அந்த ராத்திரியில அந்த கிராமத்துல விழுந்ததுக்கு பின்னால தான் விடியல் கிராமத்துல, விடியல் இல்லாம போயிருக்கு.  அப்படீன்னா என்ன அர்த்தம்? சூரிய ஒளியால அந்த கிராமத்தை எந்தத் திசையிலிருந்தும் ஊடுறுவ முடியலை. இது நடக்க என்ன சாத்தியம் இருக்கு? அந்தக் கல் கால்ஷியம் கார்பனேட்டை ஈர்த்து ஒரு கிராமத்தைச் சுத்தி குடை போல நிறுத்தி வைத்தால் ஒழிய வேறு சாத்தியம் இல்லை. ஒரு கல்லால கால்ஷியம் கார்பனேட்டை ஒரு குறிப்பிட்ட இடத்துல குடை போல நிறுத்தி வைக்க முடியும்னா, அப்போ அதால செயற்கையா ஒரு மனித எலும்பை ஏன் உருவாக்க முடியாது?  அந்தக் கல் எப்படி கால்ஷியம் கார்பனேட்டை ஈர்த்து ஒரு குடை போல நிறுத்தி வைக்குதுன்னு தெரிஞ்சிட்டா, நம்மால மனித உடலை எப்படி வேணா வளைக்க முடியும்.. அந்தத் தொழில் நுட்பம் நம்மை ஏலியன் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துறதா இருக்கும்’ என்றார் நீலன்.

“எல்லாம் சரி. அந்த நியூஸை நானும் பார்த்தேன். அப்படி ஒரு சக்தி வாய்ந்த கல் தான், அந்தச் செய்தியில குறிப்பிட்ட கல்ன்னு எப்படி சொல்றீங்க?” என்று எதிர்கேள்வி வந்தது.

“எப்படின்னா, வேற எப்படியும் ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் விடியல் இல்லைங்குறதை நிரூபிக்க முடியாது, சீனி” என்றார் நீலன்.

“பிரபஞ்சத்துல கற்பனைக்கெட்டாத அளவுக்கு சக்தி வாய்ந்த தனிமங்கள் இருக்கு. நம்மகிட்ட இருக்கிற பீரியாடிக் டேபிள் ஒரு சப்செட் மட்டும் தான். இந்த சப்செட்டை வச்சி பிரபஞ்சமே இவ்வளவு தான்னு முடிவுக்கு வர்றது மாதிரி ஒரு மடத்தனம் இருக்க முடியாது. அதன் படி, பாத்தா இப்ப நமக்கு கிடைச்சிருக்கிறது ஒரு வினோதமா கல். நம்ம பீரியாடிக் டேபிளுக்கு ஒரு புது வரவுன்னு தன் சொல்லணும்”

அந்த அறையில் அதன் பிறகு ஒரு மயான அமைதி நிலவியது.

“ஐ டேக் இட் அஸ் ஏ எஸ்” என்றார் நீலன்.

“சரி நீலன். அந்தக் கல்லை எங்கன்னு தேடுறது?” என்றார் ஒருவர் கூட்டத்திலிருந்து.

“அந்த கிராமத்தை அளவிடுங்க. அந்தக் கல் எப்படியும் அந்த கிராமத்தோடு மத்தியில தான் இருக்கணும்” என்றார் நீலன்.

************************************

ஆடைகளிலேயே மிகவும் உயர் தர ஆடைகளை அணிந்து நுனி நா ஆங்கிலம் பேசிக்கொண்டு ஒரு கூட்டம் இன்னோவா காரில் வந்து ராஜாவின் குடிசைக்குள் நுழைவதை ஊரே வினோதமாகப் பார்த்தது.

“சார் ,எங்க முப்பாட்டனார் இங்க இருந்தவர் தான். பொழைப்புக்கு பர்மா போயி அங்கயே செட்டில் ஆயிட்டாரு, நாங்கள்லாம், மலேசியாவில வளர்ந்தோம். இப்ப எங்க முப்பாட்டனார் வாழ்ந்த இந்த கிராமத்துல அவர் நினைவா ஒரு இடம் வேணும்னு நினைக்கிறோம். உங்க இடம் எங்களுக்கு பிடிச்சிருக்கு. அதனால நீங்க இந்த இடத்தை விட்டு போயிடணும்னு இல்லை. நிலத்தை எங்களுக்கு வித்துடுங்க. எங்களுக்கு அதுல ஒரு இடத்துல ஒரு சின்ன வீடு. மத்த இடத்துல நீங்க விவசாயம் பண்ணலாம். ” வந்தவர் பேசிக்கொண்டிருக்க கேட்டுக்கொண்டிருந்த ராஜா,

“எவ்ளோ தருவீங்க?” என்றான்.

“உங்க விலை என்னன்னு சொல்லுங்க?”

“ஐம்பது லட்சம்”

“ஐம்பதா? இது கிராமம். அது நியாபகமிருக்கா உங்களுக்கு? ஐம்பதாயிரம் கூட போகாத ஏக்கருக்கு ஐம்பது லட்சமா?”

“இதான் விலை. வேணாம்னா நீங்க கிளம்பலாம்” என்றான் ராஜா.

வந்தவர், “ஓரு நிமிஷம்” என்றுவிட்டு, எழுந்து குடிசையை விட்டு வெளியே வந்தபடி, பாக்கேட்டில் கைவிட்டு அலைபேசியை பிதுக்கி எடுத்து, நீலனை அழைத்து,

“ஐம்பது லட்சம் கேக்கறான்.”

“நமக்கு அந்தக் கல் வேணும். கிடைச்சிட்டா அது ஒரு மில்லியன் டாலர் ப்ராஜக்ட். அதுக்கு முன்ன, ஐம்பது லட்சமெல்லாம் ஒண்ணுமே இல்லை. எவ்ளோ சீக்கிரம் முடியுமே அவ்ளோ சீக்கிரம் டீலை முடிச்சிடுங்க. நம்ம கம்பெனி மட்டும் தான் இந்த ஏரியாவில ஆராய்ச்சி பண்ணுதுன்னு இல்லை. ஏகப்பட்ட நிறுவனங்கள் இருக்கு.” என்றார் நீலன்.

அலைபேசியை அணைத்துவிட்டு திரும்பி குடிசைக்குள் நுழைந்தவர்,

“சரி ராஜா. எங்க முப்பாட்டனார் வாழ்ந்த இடம். அதுக்கு முன்னாடி இந்தப் பணம் ஒண்ணுமே இல்லை. எங்களுக்கு ஓகே. எப்போ பத்திரப்பதிவு வச்சிக்கலாம்” என்றார்.

ராஜா முகம் மலர்ந்தான்.

அன்றே பணம் பேசியதில், ஐம்பது லட்சம் பணம் கைமாறி, பத்திரக் கைமாற்றும் நடந்தது.

அன்று மாலை, இன்னமும் விடிந்திடாத அந்த கிராமத்தில், புவனாவின் வீட்டில்,

“சார், இப்ப என் கிட்ட ஐம்பது லட்சம் இருக்கு. உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக்கொடுங்கன்னு கேட்க எனக்கு இப்போ தகுதி இருக்குன்னு நம்பறேன்” என்றான் ராஜா.

சற்று யோசித்த தனசேகர், பின்,

“அதெப்படி தம்பி? நேத்துவரை ஒண்ணுமே இல்லாம இருந்தீங்க. இப்ப ஐம்பது லட்சம்?” என்றார்.

“நல்ல விலை வந்தது. என் நிலத்தை வித்துட்டேன் சார்”

“நல்ல விலையா? ஐம்பது லட்சமா? கிராமத்து நிலத்துக்கா?” என்றார் தனசேகர் நம்பமாட்டாமல்.

“ஆமா. சார். இது திருட்டுப்பணம் இல்லை. நேர்மையான வழியில வந்த பணம் தான். இந்தாங்க. நீங்களே பாருங்க” என்றுவிட்டு பத்திரப்பதிவுக்கான காகிதங்களை நீட்டினான் ராஜா. காகிதங்களை விலாவாரியாகப் பார்த்துவிட்டு இமைக்கா விழிகளுடன் தனசேகர் ராஜாவையே பார்த்தார்.

“சரிப்பா. நீ ஜெயிச்சிட்ட.. என் பொண்ணை உனக்குக் கட்டிக்கொடுக்க சம்மதிக்கிறேன்” என்றார்.

************************************

அந்தக் கிராமத்தில் அன்றிரவு பலத்த மழை பெய்தது. அதுகாறும் பொய்த்த மழை, பொய்த்ததுக்கெல்லாம் நியாயம் செய்கிறார்ப்போல் கொட்டித்தள்ளியது. அந்த இரவின் மழை ராஜாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மறு நாள் விடியல் கிராமம் விடியலைக் கண்டது.  கிராம மக்கள் தாங்கள் அய்யனாருக்கு தந்த பலியால் தான் அய்யனார் உச்சி குளிர்ந்து, விடியலை வழங்கிவிட்டாரென புளகாங்கிதமடைந்தனர். கிராமத்தின் பூசாரி கடவுளாகப் பார்க்கப்பட்டார். அவருக்கே கோழி அடித்து குழம்பு வைத்து படையல் தரப்பட்டது. படையலில் மதுவும் இடம்பெற்றது.

தொலைவில், இன்னோவா கார்கள் இரண்டு நின்றுகொண்டிருந்தது. அதனுள், குளிரூட்டப்பட்ட அதனுள், இருவர் அமர்ந்திருந்தார்கள்.  நீலன் மற்றும் சீனிவாசன்.

“சார். ஏதோ விண்வெளிக்கல் அது இதுன்னு சொன்னீங்க. இன்னிக்கு விடியல் கிராமத்துல விடிஞ்சிடிச்சே. அப்போ அந்தக் கல் இல்லைன்னு தானே அர்த்தம்?” என்று கேள்வி எழுப்பினார் சீனி

“அப்படிச் சொல்ல முடியாது, சீனு. விடியல் கிராமத்துல விடியல் வந்ததுக்கு காரணம் இருக்கு. கால்ஷியம் கார்பனேட் மழை நீர்ல கரைகிற தனிமம் தான். மழையில இருக்கிற அசிடிட்டி கால்ஷியம் கார்பனேட்டோட ரியாக்ட் ஆகி தாவரங்களுக்கு உணவாக உரமாகியிருக்கலாம்.” என்றார் நீலன்.

“அப்போ இப்போ கல்லை எப்படி கண்டுபிடிக்கிறது?”

“முடியும். மறுபடி கால்ஷியம் கார்பனேட்டைத் தூவினா அதை, அந்தக் கல் இந்த கிராமத்தைச் சுத்தி ஒரு குடை போல விரிக்கும். அதோட மத்தியை கண்டுபிடிச்சா கல் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சிடலாம்”

“அப்புறம் என்ன நீலன்? அதை உடனே செய்யலாமே”

“சீனு, செய்யலாம் தான். ஆனால், அவ்ளோ கால்ஷியம் கார்பனேட்டுக்கு இப்போ எங்க போறது? அதுமட்டுமில்லாம, இப்ப இந்த கிராமத்துல திடீர்னு மூட்டை மூட்டையா கால்ஷியம் கார்பனேட்டை இறக்கினாவோ அல்லது ஒரு கல்லுக்குன்னு நாம தோண்ட ஆரம்பிச்சாவோ, இந்த மக்கள் என்னமோ ஏதோன்னு பதறிடுவாங்க. அது நம்ம உள் நோக்கத்தை வெளி உலகுக்கு, குறிப்பா நம்ம எதிரி நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்தா மாதிரி ஆகலாம். அது வேணாம்”

“இருந்தாலும், அரசாங்கத்துக்கு நாம ஏதாச்சும் சொல்லத்தானே வேணும்?” என்றார் சீனி.

“அரசாங்கம். எஸ். இந்தக் கல் மட்டும் கிடைச்சிட்டா, அப்புறம் அரசாங்கமே நாம தான், சீனி” என்றார் நீலன்.

நீலன் காரின் ஜன்னல் கண்ணாடி வழியே கிராமத்தின் எழிலையும், அதன் மக்களையும் பார்த்துவிட்டு நீண்ட பெருமூச்சுவிட்டார்.

“அங்க பாருங்க. எவ்ளோ குதூகலம்? எத்தனை சந்தோஷம். பிரபஞ்சத்துல உயிர் வாழ்க்கைங்குறது ஒன்றிலிருந்து மற்றொன்றா மாறிக்கிட்டே தான் எல்லாக்காலமும் இருந்திருக்கு. முதல்ல ஒரு செல். அப்புறம் மல்டி செல். அப்புறம் ஒரு பாக்டீரியா. பிறகு ஒரு மீன். அப்புறம் ஒரு  நிலவாழ் உயிரினம். அப்புறம் பரிணாம வளர்ச்சின்னு இங்க வந்து நிக்கிறோம். நாம பூமியில தான் தோன்றினோமான்னு கூடத் தெரியலை. வேற ஒரு கிரகத்தில தோன்றி ஒரு விண்கல் மூலமாகக் கூட இங்க வந்திருக்கலாம். அல்லது யாராச்சும் ஓரிடத்திலிருந்து பிடுங்கி இன்னொரு இடத்துல நடுறாமாதிரி நம்மலை இந்த கிரகத்துல நட்டிருக்கலாம். இதுவும் கூட இறுதின்னு இல்லை. பூமி என்னைக்கோ நிச்சயம் அழியத்தான் போகுது. அதுக்குள்ள நாம வேற ஒரு கிரகம் போகத்தான் போறோம். அந்த கிரகத்தோட இயல்புக்கேற்ப நம்ம உருவம் மாறி வேறொரு உயிரிணமாவும் ஆவோம். அதன் பிறகு இன்னொரு உயிரினம். அதற்கப்பால் வேற ஒண்ணு. ஒற்றை செல்லா இருந்தப்போ அன்பு இருந்துச்சா? காதல் இருந்துச்சா? மனிதனா ஆனதுக்கப்புறம் இது இரண்டும் நமக்கு கிடைச்சிருக்கு. எதிர்காலத்துல, குடியேறும் கிரகத்துக்கு ஏற்ப நம்ம உருவம் மாறிக்கிட்டே இருக்கும்போது, இந்த அன்பையும், காதலையும் கூட சட்டையை கழற்றிப்போடுறாமாதிரி நாம கழற்றிப்போட நேரலாம். இந்தப் பின்னணியில, இந்த கணத்துல, இந்த எளிமையான வாழ்க்கை, இதுல இருக்கிற காதல், மண் வாசம் இதெல்லாம் திரும்பிக் கிடைக்குமா? பிரபஞ்சம் பிக் பாங்ல தோன்றினதா சொல்றாங்க. எனக்கு என்ன தோணுதுன்னா, பிரபஞ்சம் தோன்றின கணத்துல இருந்து, எல்லாம் சுருங்கி இறுதியில சூன்யமாகுற கணம் வரை ஒரு கோடு போட்டா, அதுல இதோ இப்ப நாம பார்க்கிற இந்த மாதிரியான கணங்கள் தான் அதி அற்புதமான கணங்களா, உயிர்களின் உச்சமான சாத்தியங்களைக் கொண்ட கணங்களா இருக்கும்ன்னு தோணுது.”

“நான் முதல் முதல்ல இந்த நிறுவனத்துல சயின்டிஸ்டா சேர்ந்ததுக்கு ரொம்ப பெருமைப்பட்டேன். இந்த மூளை வீக்கத்துக்காக எதையெல்லாம் இழந்திருக்கேன்னு இந்த ஜனங்களைப் பார்க்கிறப்போ தோணுது. இதுக்கெல்லாம் எவ்ளோ கோடி கொடுத்தாலும் தகும். இப்படி ஒரு காட்சியை இதுக்கப்புறம் நாம பார்ப்போமான்னு தெரியலை. இப்பவே பாத்துக்கலாம் சீனீ” என்றார் நீலன்.

தொலைவில், அங்கே புவனாவும், ராஜாவும் வயல்வெளியில் ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டிருக்க, வயல் வெளியில் உழவர்கள் வயல் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, கிராமத்து சிறுமிகள் பாண்டி ஆடிக்கொண்டிருக்க, வயோதிகர்கள் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை மடித்துக் கடித்து துப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையே, பிரகாசமான சூரியன் பளீரென மின்னிக்கொண்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.