சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)

This entry is part 5 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

அமில மழைப் பிரச்சினையை மேலும் ஆராய்ந்ததில்,  உருளைக்கிழங்கு, திராட்சை, சோளம் மற்றும் புகையிலை போன்ற பயிர்களால், அமில மழையை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அமில மழையால், மிகவும் பாதிக்கப்பட்டது என்னவோ, மீன்கள். மழை நீரில் அமிலம் கூடக்கூட, என்னாகிறது? எப்படி இது மீன்களைப் பாதிக்கிறது?

  1. அமில மழை நீர், ஏரி நீருடன் கலக்கிறது. ஏரி நீர், வழக்கத்திற்கு அதிகமாக அமிலத் தன்மையைப் பெறுகிறது
  2. மீனின் செவுளிற்கு (gills) ஒரு முக்கிய வேலை, மீனின் ரத்தத்தில் உள்ள சோடியத்தைக் கட்டுப்படுத்துவது. இதற்காக, இயற்கை, சில சவ்வுகளை (membrane), மீன்களுக்கு வழங்கியுள்ளது 
  3. இந்தச் சவ்வுகள், மீன் ரத்தத்திலிருந்து, நீருக்குச் சோடியம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்துகிறது 
  4. ஏரி நீரில் அமிலத் தன்மை அதிகமாக, இந்தச் சவ்வுகள் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட சவ்வுகள், தங்கள் செயல்திறனை இழக்கின்றன
  5. அளவுக்கு அதிகமாக, மீனின் உடலிலிருந்து, ஏரி நீருக்கு, சோடியம் வெளியேறுகிறது
  6. சோடியம் குறைந்த நிலையில், மீன்கள் இறக்கின்றன. மனித உடலில் சோடியம் குறைந்தால், அதன் விளைவுகளை நாம் அறிவோம். பல முதியவர்களின் பெரும் தொல்லை, சோடியம் அளவு தேவையைவிடக் குறைகின்றபோது ஏற்படும் மயக்கம் மற்றும் தள்ளாட்டம். உடனே கவனிக்காவிட்டால், உயிருக்கு அபாயம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பல மில்லியன் வருடங்களாக இந்த ஏரி மீன்கள், ஒரு பெரிய உணவுச் சங்கிலியின் அங்கம். அந்த உணவுச் சங்கிலி உடைவதால், மீனை நம்பிய உயிரினங்கள், மற்றும் மீன் நம்பிய உயிரினங்கள், இரண்டுமே பாதிக்கப்படுகின்றன. இது, எளிதில் சரி செய்வது இயலாத செயல். 

அமிலத்தன்மை கூடிய ஏரியில், ஏன் காரத்தைத் தூவிச் சரிகட்டக் கூடாது? இது ஒன்றும் மனிதச் சோதனைச் சாலை அன்று. இந்த அமிலத்தன்மை மனிதனால், ஒரே நாளில் உருவாக்கப்பட்டதும் அன்று. உயிரினங்கள், மீண்டும் பழையபடி ஏரிகளில் வாழ, அந்த உணவுச் சங்கிலி உருவாக்கப்பட வேண்டும். அது நம்மால் இயலாத காரியம். அது இயற்கையின் டிபார்ட்மெண்ட்! நாம் அவசரமாகத் தலையிட்டதற்காக, இயற்கை ஒன்றும் உடனே சரி செய்யப் போவதுமில்லை. 

இன்னொரு மண் சார்ந்த சோதனை, வித்தியாசமான உண்மை ஒன்றை வெளிக் கொண்டு வந்தது. இந்தச் சோதனையில், விஞ்ஞானிகள், காட்டின் தரையில் ஆறு அடி தோண்டி, அதிலிருந்து வெளிவரும் மழை நீரை, இரு வாரத்திற்கு ஒரு முறை என்று இரண்டு ஆண்டுகள் ஆராய்ந்தார்கள். மழையில் உள்ள அமிலத் தன்மை என்னவோ குறைந்ததைக் கவனித்தார்கள். அட, நல்ல விஷயத்தைக் காடுகள் செய்கின்றதே என்று முதலில் தோன்றும். ஆனால், இன்னும் சற்று ஆராய்ந்ததில், மண்ணின் கால்சியம், பொட்டாசியம், மற்றும் மெக்னீஷியம், இதனால் பலியானது. இதை வேறு விதமாகச் சொலவதானால், மண்ணின் வளம் குறைவதோடு, இந்த மண் அருகில் உள்ள ஏரியில் கலக்கையில், அதில் உயிர்வாழும் மீன்களின் கதி என்னவாகும் என்று முன்னர் பார்த்தோம்.

உடனே, ஒரு ரசாயன மாற்றத்தை, ஏன் இயற்கையில் நாம் உருவாக்கி, காடுகளைப் பழுது பார்க்கக்கூடாது என்ற வாதம் எழலாம். கணினி மாதிரியுறுக்கள் (computer models) கொண்டு, சில உண்மைகள் தெரிய வந்தன. 

  1. இந்தக் காடுகளின் மண்ணின் மூலம், அருகில் உள்ள பாறைகள் ஆகும். இந்தப் பாறைகள், காரம் (alkaline rock content) நிறைந்தவை
  2. இந்தப் பாறைகளின் தாக்கம், காடுகளின் மண்ணில் குறைய (அதாவது வளம் குன்றி, காடுகள் இறக்க), இயற்கையில் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம் என்று இந்த மாதிரியுறுக்களின் மூலம், கணிக்க முடியும் 
  3. அமில மழை என்பது, இதை இன்னும் சில நூறு ஆண்டுகளில் நிகழ்த்திவிடும். இத்தனைக்கும், இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான நாடுகளைப்போல, வட அமெரிக்காவில் காடுகளை அழிப்பது என்பது அந்த அளவிற்கு மனிதத் தேவையில்லை 

Merchants Of Doubt Acid Rain Diagram, PNG, 1359x689px, Merchants Of Doubt, Acid, Acid Rain, Area, Coal Download Free

இவ்வாறு விஞ்ஞானம், இந்தப் பிரச்னையை ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைப்தோடு நிற்காமல், பூனைக்கு மணி கட்டவும் வழி சென்னது. முதலில், அனல் மின் நிலையங்கள் உமிழும் நச்சுப் புகையின் அளவைக் குறைக்க வேண்டும். எப்படிக் குறைப்பது? கரியை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களுக்கு, மூன்று வழிகள் உள்ளன:

  1. முதல் வழி, பயன்படுத்தப்படும் கரியில் கந்தகம் (sulfur) குறைவான கரியைப் பயன்படுத்துவது. இந்த வழியில், இரண்டு அணுகுமுறைகள் உள்ளன. முதல் அணுகுமுறை, கந்தகம் கலந்த கரியைத் துறந்து, கந்தகம் குறைந்த கரியைப் பயன்படுத்துதல். இரண்டாவது அணுகுமுறை, அருகில் கந்தகம் குறைவான கரி கிடைக்காத பட்சத்தில், கரிக் கலவை ஒன்றைப் பயன்படுத்துதல். அதாவது, 50 முதல் 70 சதவீதம் வரை கந்தகம் குறைந்த கரியுடன், 50 முதல் 30 சதவீதம் கந்தகம் கலந்த கரியின் கலவையைக் கொண்டு அனல் மின் நிலையம் இயங்க வேண்டும்
  2. இரண்டாவது வழி, கந்தகம் நிறைந்த கரியை நீரால் அலசி, பொடிசெய்து, அதை மையநீக்கி (centrifuge) மூலம் அதிலுள்ள இரும்பு பைரைட்டுகளை (iron pyrites) நீக்கி, கரியை உலர வைத்துப் பிறகு பயன்படுத்தினால், கந்தகத்தின் அளவு குறையும்
  3. மூன்றாவது வழி, கரி எரிந்தபின் வெளியாகும் புகையைச் சரிகட்டுவது. வெளியாகும் புகையை, சுண்ணாம்பு நீரில் பாய்ச்சி, பிறகு வெளியேற்றினால் கந்தகத்தின் பங்கு குறைந்துவிடும்

மேலே சொன்ன முறைகளில் மூன்றாம் வழிக்கு, இரண்டாம் வழியைவிடச் செலவு அதிகமாகும். இரண்டாம் வழிக்கு முதல் வழியைவிட அதிகச் செலவாகும். தமிழ்நாட்டில் இயங்கும் நெய்வேலி சுரங்கத்தின் கரி மிகவும் குறைந்த அளவு கந்தகம் உள்ள கரி என்றாலும், இது ஓர் அரக்கு வகைக் கரி என்பதால், அதில் உள்ள கார்பன் குறைவு. இதனால், உயர்தர கரியை (bituminous) விட, அதிக அளவு பயன்படுத்துதல் வேண்டும். இதனால், சாம்பல் அதிகம் கையாளப்பட வேண்டும்.

ஆக, விஞ்ஞானம் இப்படி ஆராய்ச்சி செய்து, அழகாக எல்லா விஷயங்களையும் வெளியிட்டாலும், வியாபாரங்கள், அரசாங்கங்கள், இதை எப்படித் திரித்து நடைமுறையாக்கியது என்பதை அடுத்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம். 40 வருடங்கள் இந்த விஞ்ஞானத் திரித்தல், வட அமெரிக்காவில் நடந்து முடிந்துவிட்டது. வியாபரங்கள், அரசாங்கங்கள் முழுவதும் வெற்றி என்று பறை சாற்றுகையில், சில விஞ்ஞானிகள், 2010 –க்குப்பின், அதே மழை, அதே மண்ணை மீண்டும் ஆராய முற்பட்டார்கள். என்னதான் மனிதன் பொய் சொன்னாலும் இயற்கையும், விஞ்ஞானமும் பொய்யாவதில்லை.

எந்த தளங்களில் அமில மழையினால் தாக்கம் உண்டு என்று 1970 –களில் நிரூபித்தார்களோ, அதே தளங்களுக்குச் சென்று மண், அதே வெற்றியைப் பறை சாற்றுகிறதா என்பதை ஆராய்வதே கிரெகரி லாரன்ஸ் (Gregory Lawrence) என்ற விஞ்ஞானியின் குறிக்கோள்.  

கிரெகரியின் ஆராய்ச்சியில், வட கிழக்கு அமெரிக்காவில் உள்ள காடுகளின் மண்ணில், கால்ஷியத்தின் அளவு எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே இருந்தது. ஆனால், மண்ணில் அலுமினியத்தின் அளவு, நியு யார்க் மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களில், 1970 -கள் அளவிலிருந்து குறைந்திருப்பதைக் கண்டார். வட கிழக்கு மாநிலங்களின் மண், மனித நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது, ஆனால் நியு யார்க் மாநிலம் வேறு கதையைச் சொல்கிறது என்ற குழப்பநிலை உருவானது. இந்தச் சுற்றுப்புறச் சூழல் விஷயத்தில், இரண்டு வகை முடிவுகளுக்கு வரலாம். முதல் முடிவு, அமில மழை குறைந்ததால், நியு யார்க் மாநில மண்ணில் அலுமினியத்தின் அளவு குறைந்துள்ளது – அடுத்த வாரத்திலிருந்து சுபிட்சம் – அரசாங்க, வியாபார வெற்றி என்று எளிதில் சொல்லிவிடலாம். ஆனால், சற்று ஆழமாக ஆராய்ந்தால், காடுகளின் மேற்பரப்பு மண்ணில் பெருவாரியாகக் கலப்பது, காடுகளின் அழுகிய தாவரங்கள். இந்தத் தாவரங்களின் கலவையில், அதிகம் உலோகங்கள் இருப்பதில்லை. அதனால், மண்ணின் உலோகத் தன்மை குறைகிறது. இதை வேறு விதமாகச் சொன்னால், மேல்வாரியான மண்ணின் கலவையின் நிலையை, மண்ணைவிட, அதிகமாகத் தாவரங்கள் கட்டுப்படுத்துகின்றன. 

இந்தக் காடுகளில், கால்ஷியம் இன்னும் குறைந்திருப்பதற்குக் காரணம், கால்ஷியத்தைக் கட்டுப்படுத்தும் பாறைகளால் மிக மெதுவாகவே மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது. நிலவியல் (geology) விஷயங்கள், பல நூறு/ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும் விஷயம். அது ஒன்றும் ஷங்கர் சினிமாவில் நடப்பதுபோல மூன்று மணி நேரத்தில் மாறும் விஷயமன்று. ஆனால், ஷங்கர் சினிமா வேகத்தில், அனல் மின் நிலயங்கள் மற்றும் கார்களின் உமிழ் புகை, காடுகளில் மண்ணின் கால்ஷியத்தைக் குறைத்துவிட்டன. இதிலிருந்து மீளப் பல நூறு ஆண்டுகள் பிடிக்கும். 

இன்னொரு முக்கிய விஷயம், 40 வருடங்களுக்கு முன் இருந்த இதே காடுகளுக்கு, இன்றைய நிலையைவிட, அமில மழையைத் தாங்கும் சக்தி அதிகமாக இருந்தது. மழையைத் தாங்கும் சக்தி என்றால் என்ன? பெய்யும் மழையை, எந்த அளவு உள்வாங்கிக் கொள்ளமுடியும் என்பதன் அளவு இது. இந்த அளவு, குறையக் குறைய, காட்டு வெள்ளங்கள் அதிகரிக்கின்றன. இந்தப் பிரச்சினையின் முக்கியமான இன்னொரு அம்சமான நைட்ரஜன் ஆக்ஸைடு இன்னும் குறைந்த பாடில்லை. அனல் மின் நிலையங்களின் முக்கியக் குறிக்கோள், கந்தகத்தின் அளவைக் குறைப்பது. என்னதான் கார்களின் இயக்கத்திறன் அதிகரித்தாலும், கார்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இன்றும் பனிப்புகை (smog) அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

மேலும், அமெரிக்க வடகிழக்குப் பகுதியில், 1970 –களில் கந்தக அளவு, வரலாற்றிலேயே அதிகமாக இருந்தது. இந்த அளவைவிட, இன்று சைனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக இருப்பது, இன்றைய சோகக் கதை. இந்த இரு நாடுகளின் அனல் மின் நிலயங்கள் மற்றும் தொழிலகங்கள் கட்டுப்பாடின்றி கந்தக ஆக்ஸைடை உமிழ்கின்றன. இது ஒரு ராட்சச உலகப் பிரச்சினையாக மாறி வருகிறது.இந்த அமில மழைப் பிரச்சினையில் மேற்கத்திய அரசாங்கங்கள், வியாபாரங்கள் எப்படி விஞ்ஞானத்தைத் திரித்துக் கையாண்டன என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்)

***

Series Navigation<< சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினைசக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3) >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.