பைய மலரும் பூ…
அரங்கன், திருமால் அறிதுயில் கொள்பவர்.அதாவது, துயில்வதைப் போன்ற தோற்றம், ஆனால்,தூங்குவதில்லை.தாமரைக் கண்கள் என்று சொல்லும் போதே தாமரை மலர் போன்ற கண்களென்றும், தாம் அரைக் கண்கள் என்றும் பொருள் சொல்வார்கள்.’பைய’ என்பது துயில்வது போல் துயிலாமை என்ற பொருளில் வந்துள்ளது.
ஜெய்ஷங்கர் வெங்கட்ராமன்
சுடோகுயி
மாபெரும் கனவுப் பாய்ச்சல். அறிவியல் சிறுகதைகளுக்கு சில சட்டங்கள் உண்டு, அறிவியலின் ஒரு பகுதியை எடுத்து கொண்டு அடிப்படை அறிவியல் விதிகளில் இருந்து மாறாமல் எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் விண் கோள்களுக்கு இடையே நடக்கும் போர்கள், இணையொத்த அண்டங்கள், கருத்துப்பாங்கன்ன தொழில்நுட்பம், காலப் பயணம், அதிபுத்திசாலி ரோபோட்கள் என்று அறிவியலின் துணை வகைகளில் நின்று கதையை சொல்லி விடும். ஆனால் சுடோகுயி சற்று தலைகீழாக இலக்கியத்தின் படிமத்தில் நின்று அறிவியலின் அடிப்படை சூத்திரத்தில் இருந்து மாறாமல் உயிர் வேதியல், வேதியல், குவாண்டம் கணினி, உயர் கணிதம், மனோத்தத்துவம், நரம்பியல், உயிரியல் என்று பலவகையான உள்மடிப்புகளுடன் செவ்வாய் கிரகத்தில் நடக்கும் மனிதர்களின் அடிப்படை உரிமைப் போராட்டம். ஒட்டு மொத்த ரோமே ஒரு கணித/வார்த்தை விளையாட்டுக்கான அனுமதிக்காக போராடுகிறார்கள். விளையாட்டின் இறுதியில் சங்கேத குறியீடுகளாக இருந்த வரிகளில் இருந்து கதைகள் கிடைக்கிறது. அந்த கதைகளின் உணர்வுகளில் இருந்து அவர்களுக்கு கிடைக்கப்பெறுவது மூலையில் இயங்கும் பார்ஸிபஸ்கள், நியூமரோ மோட்டஸ் சரியாக இயங்க பார்ஸிபஸ்கள் அவசியம். ஆம் பார்சிபஸ்கள் மூலையில் உருவாகும் ஒரு வித வேதியல் மாற்றம், அதை தூண்டுவது கலை இலக்கியம் போன்ற அனுபவங்கள் என்ற கருத்து மிகவும் ஆழமானது . வேற்று கிரகத்தில் குடியேறினாலும் மனிதர்கள் தங்களின் தொன்மத்தின் எச்சத்தில் இருந்து மாறாமல் (பொருட் கடத்தல், புத்தகத் தடை, நீயோக்கள் ) இருப்பது சந்தோசமாக இருக்கிறது, கதையில் ரோபோட்டுகள் சண்டையிடாமல் இருப்பது கூடுதல் ஆறுதல். கதையின் இறுதியில் வரும் ஒரு அறிக்கை ஆராய்ச்சியின் முடிவாக , ரோம் நகரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக அமைச்சர் சமர்பிக்கிறார், அறிக்கையில் வரும் இந்த வரி மிகவும் முக்கியமாக படுகிறது.
“மனித மனத்தின் பாய்ச்சல் ஒருபோதும் உறைந்து நின்று விடுவதில்லை. அது கற்பனையில் இயங்கும் ஆலாபனையை தொடர்ந்து கனவு கண்டபடியே இருக்கிறது” – இதை வாசிக்கும் போது ஸ்டீபன் ஹாக்கிங், வாக்னரின் ஓப்ரா இசை நாடகம் தனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறியது ஞாபத்துக்கு வருகிறது, அதுவே தன்னை ‘Motor Neurone’ வியாதியில் இருந்து மீட்டதாக குறிப்பிட்டார். இலக்கிய கதைகள் வாசகனிடம் வாழ்வியல் படிமங்களை, அனுபவத்தை மட்டுமே முன் வைக்கிறது, அறிவியல் புனைகதைகள் சில முடிவுகளை முன்வைக்கிறது, அப்படி வைக்கலாமா என்றால் அதற்கு என்னிடம் சரியான பதில் இல்லை. அறிவியல் என்று வரும் போது இதில் விதிவிலக்கு இருக்கிறது என்றே எடுத்துக்கொள்கிறேன். கதையின் அறிக்கையில் குறிப்பாக இப்படி வருகிறது “குழந்தைகளுக்கு நாம் அளிக்க வேண்டிய ஆகப்பெரிய கல்வி என்பது அவர்களுக்கு கற்பனை செய்யும் பழக்கத்தை புகட்டுவதுதான்”. எனக்கு ஜெமோவின் பேச்சை ஞாபகப்படுத்தியது, சில வருடங்களுக்கு முன்பு ஒரு கல்லூரியில் ஆற்றிய உரையில் இப்படி கூறியிருப்பார். ‘உலகமே இரண்டாக பிரிந்து இருக்கிறது வெள்ளை இனம், மஞ்சள் இனம் ‘. அவர் குறிப்பிடுவது ஐரோப்பியர்களையும், ஆசியர்களையும் (அதில் சீனா, சிங்கப்பூர், கொரியா, தைவான்) மட்டுமே மஞ்சள் இனம் என வகைப்படுத்தினார். மஞ்சள் இன நாடுகள் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாத காரணமாக, கற்பனையை தூண்டும் புத்தக வாசிப்பு மிகக் குறைவு என்றும் அதற்காக அரசாங்கமே தொடர்ந்து வாசிப்பை ஆதரிப்பதாகவும் வாசிப்பு சார்ந்து கருத்தரங்குகள் என்று பல வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்கிறார்கள் என்று கூறினார். அதன் விளைவாக சீனாவில் இருந்து வரும் அறிவியல் புனைக்கதைகள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக ‘liu cixin’ அறிவியல் புனைக் கதைகள் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்படுகிறது. சுடோகுயி சிறந்த வாசிப்பனுபவம், வேணுவிற்கு அன்பும், பாராட்டுகளும். ஐன்ஸ்டீன் சொல்லுவதை போல ‘if you can’t explain it to a 5 year old you don’t understand it yourself’, வேணு எனக்கு அறிவியல் வாத்தியாராக வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
விவேக் சுப்ரமணியன்

ஒரு kaleidoscope க்குள் அடைக்கப்பட்டிருக்கும் வண்ணங்களின் எண்ணற்ற பிம்ப பிரதி பிம்ப உருவங்களை உருவாக்குவது கை அசைவு. அதன் அர்த்தங்களை உருவாக்குவது அந்த கணத்தின் எண்ணங்கள். ஏதோ ஒன்றால் நாம் தடங்கலாகி தேங்க அதை மீண்டும் ஓட வைக்கும் சிறிய உதவி எங்கிருந்தும் வரலாம். ஆனால் அப்படி வரும் போது அது வரை முறுக்கிக்கொண்டு முரண்டு பிடிக்கும் மனம், சட்டென்று குழந்தையென்று மாறி கைக்கொடுக்கும். இந்த பெயரிலி தொடர்பை அறிவியலால் அணுகலாம், தத்துவத்தால் விசாரிக்கலாம், கலையால் கரையலாம் அல்லது அதை கவனிக்காமல் சமூக வலைத்தளக்களத்தில் அட்டைக்கத்தி போரிடலாம்.
சுடோகுயி – அறிவியல் புனைவு சட்டகத்தில் இலக்கியத்தின் அவசியத்தை சமகால நிகழ்வுகளின் தளத்தில் இருந்து எழுந்து சொல்கிறது. பூமி தவிர்த்து வேறு கிரகத்தில் வாழ்க்கை கொண்டாலும், தொழில்நுட்பம், உணவு, கேளிக்கையில் தன்னிறைவு கொண்டாலும் அந்த வாழக்கை மட்டுமே மனிதனின் முழுமை பசியை ஆற்றுவதில்லை. வாசிப்பு, இசை, இயற்கையோடு இயைதல் என்று கற்பனையின் முடிவிலியில், மெய்நிகர் மாய வாழ்க்கை அளிக்கும் சில மணித்துளிகளே நமக்கு முழுமையை காட்டுபவை. நகைமுரணாய், அதில் உள்ளே செல்ல செல்ல.. வந்த தூரத்தை விட போகும் தூரத்தை எண்ணியே பல நேரம் நாம் வருந்தக்கூடும். முடியாத திசையில் பயணித்து கொண்டிருப்பதே நம்மால் இயல்வது.
பிரபஞ்சத்தின் அகண்ட விரிவு நம் கற்பனையின் விரிவு என்ற வரி – வெள்ளத்தனைய மலர் நீட்டம் குறளை ஞாபகப்படுத்தியது. குறிப்பாக நம் உடலில் இருக்கும் பாக்டீரியாவிற்கு நாம் பிரபஞ்சம் என்ற வரி மிக சிறப்பு. அத்தகைய கற்பனையை வளர்க்க வேண்டிய தேவையை, வளர்க்க உதவும் கருவிகளை, கச்சா பொருட்களை சுட்டி காண்பிக்கிறது இக்கதை. அதே போல், சுடோகு infinity உருவாக்குபவர் சுமந்தன் என்றும், மூளையின் மூளையை கண்டுபிடிக்கும் மூலக்கூறு உயிரியல் துறையின் நிபுணராக சுமந்தன் என்பவர் வருவதும் – அழகான தொடர்புறுத்தல். நியூமோரோமோட்ஸ் தனக்கு தேவையான பார்ஸிபஸ் ஆணையிட்டு தேர்ந்து எடுக்கும் என்பது அறிந்த அறியாத உண்மை. ஆனால் எந்த உணவை நாம் எடுக்கிறோம் என்பதே நம்முடைய வாழ்வை தீர்மானிக்கிறது. அன்றாடத்தினதேவைகளை பூர்த்தி
செய்யும் கல்வியும் தொழிலும் இறுதியில் எந்திரத்திற்கும் கீழான ஒன்றாக தான் மாற்றும்.வேலை மட்டுமே தன் வாழ்வின் பிரதானமாய் கொண்டு, தரமான பொழுதுபோக்கு இல்லாத பலர் தங்கள் ஒய்வு நாட்களை மிகுந்த சிரமத்துடன்கடத்துவதை சாதாரணமாக காணலாம். அவர்களுக்கு அந்த வயதிற்கு மேல் ஒன்றின் மேல் ஆர்வம் ஏற்படுவது, ஏற்படுத்துவது சற்றே சிரமான விஷயம். அதுவும் Whatsapp, facebook என்று தாண்டி வர ஏழுக்கடல் வேறு. சிலர் அதையும் தாண்டி வருவார்கள். அங்கே அவர்கள் தங்கள் வாழ்வின் வேறொரு பரிணாமத்தை கண்டு ரசிப்பார்கள். தவறவிட்ட நாட்களுக்காக வருந்துவார்கள். அதிலேயே லயித்து நிறைவெய்தல் என்பது ஒரு தவம். அது ஒரு வரம்.
பின்குறிப்பு: The Lady with the Dog கதையும் இதன் வழியாக வாசித்தாயிற்று. மிக்க நன்றி
பிரசாத்

2113- ல் Republic of Mars (ரோம்) ல் நடக்கும் அருமையான, விறுவிறுப்பு அறிவியல் புனைகதை. கதைநெடுகிலும் நல்லத் தமிழாக்க வார்த்தைகளை வாசிக்க சந்தோசமாக இருக்கிறது.
பிரபஞ்ச விளக்கம் மிக அருமை, இந்த மனித உடலில் இருக்கும் நுண்ணுயிருக்கான பிரபஞ்சம், அதற்குஎவ்வளவு பிரமாண்டாக இருக்குமென கற்பனை செய்துப் பார்க்கவே பிரமிப்பா இருக்கு.
சுடோகு விலிருந்து சுடக்கோயி (சுடோகு இன்பினிட்டி) மாற்றம், இந்த விளையாட்டுச் சிறப்பம்ச விவரணைகள்அபாரம். சுடக்கோயி செஸ் விளையாட்டை பெரிய விளையாட்டு மைதானத்தில் ரோபோக்களால்நடத்தப்படுவதென்பது அருமையான கற்பனை. சமகால பிரச்சினையான மொபைல் விளையாட்டு அடிமை, ஐபில்விளையாட்டு அரசியல், வைரஸ் தாக்குதல், வீட்டடைப்பு யென பலகாரணிகளால் ஒரு நாட்டின் பொருளாதாரச்சீரழிவென கதை நகர்ந்து செல்வதை நம்மால் நன்றாக உள்வாங்க முடிகிறது. ஆனால், 2113 லிலும் இதேபிரச்சினைகள்தானா என ஆச்சரியமா இருக்கு 🙂
ரோமில் இலக்கியம் என்பது அரிய விஷயமா, எங்கும் இலக்கிய வாசிப்பு நிகழாமல், இலக்கிய புத்தகங்களேகாண்பது அரிது அல்லது வாசிப்பவர்கள் அரசாங்கத்தால் கைது செய்யப்படுவார்கள் என்ற நிலை வேதனைக்குரியது. நாட்டு மக்கள் எந்த மூளை உழைப்பும் இல்லாமல், மேனுவல் மூலமாக எல்லாவேலைகளையும் செய்யப் பழக்கப்பட்டிருப்பது கொடுமை. எனது முகநூல் நண்பர் ப்ரொபைல் படத்திற்க்குகிடைக்கும் லைக்ஸ், கமெண்ட்ஸில் 10 சதவிகிதம் கூட தன் கதைகளுக்கு கிடைப்பதில்லை என வருத்தப்பட்டுபதிவிட்டு இருந்தார். இலக்கிய வாசிப்பு, கொண்டாட்ட நிலை இங்கேயும் இந்த நிலைதானே!
இலக்கிய வாசிப்பின் முக்கியத்துவத்தை கதைசொல்லி பெரும் ஆராய்ச்சியின் முடிவாக பிரதமருக்கு, அமைச்சர்களுக்கு எடுத்துரைத்து, நாட்டை, நாட்டின் இளைஞர்களை மீட்டெடுக்க எடுத்து சொல்வது அருமை.
புத்தகங்கள் மீதான தடை நீங்கி, பிரதமருக்கு அவரிடமிருந்த வெண்ணிற இரவுகள் பிரதியை இனி ஒழித்துவைக்க அவசியமில்லை என முடிவது சிறப்பு.
விறுவிறுப்பு பஞ்சமில்லா அறிவியல் புனைக் கதை, சூப்பர் வேணு!!
முத்து காளிமுத்து
நாய்ப் பொழப்பு
சக்திவேல், கதை நன்றாக வந்துள்ளது. விறுவிறுப்பு குறையாமல் போகிறது. எனக்குத் தெரிந்த சில ஓட்டுநர்களை ஞாபகப்படுத்தியது இந்தக் கதை. நாராயணனன் என்று ஒரு ஓட்டுநர் சிறுவயதில் எங்கள் வண்டியை சேலத்திலிருந்து கோட்டயம் வரை இரவு உறக்கம் இல்லாமல் ஓட்டிச் செல்வார். எழுத படிக்கக் தெரியாது, ஆனால் எந்த இடத்துக்கும் ஒருமுறை சென்று விட்டால் பின் வழியை மறக்கமாட்டார். இந்தக் கதையில் வரும் குருசாமி போல் முன்னால் உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டு வருவது என் வேலை. பழைய நினைவுகளை மலர வைத்து விட்டீர்கள் கதை முடிவில் அவர்கள் பத்திரமாக பழநி போய்ச் சேர வேண்டுமே, விஜய்க்கு உறக்கம் கிடைக்க வேண்டுமே என்று மனம் பதைப்பதை, இது கதை தான் என்று உணர்ந்த போதும் தவிர்க்க முடியவில்லை. வாழ்த்துக்கள்!
சிஜோ அட்லாண்டா
கதையின் முதல் மற்றும் நிறைவு வரிகளை, “சாமியே…ய், சரணம் ஐயப்பா!” என்று அமைத்தது மிகச் சிறப்பு!
இந்த வரிகளுக்கிடையில், எதார்த்தமான நடையில், எவ்வளவு நாசூக்காக வண்டி ஓட்டுநர்களின் சிரமத்தை விவரித்திருக்கிறீர்கள்!
நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் ஊர் மானாமதுரையிலிருந்து குருசாமிகள், மார்கழி மாதத்தில் விரதம் இருந்து மகரதீபம் காண இருமுடி கட்டி் குழுவாகக் கூண்டு உந்துகளில் சபரிமலைக்குக் கிளம்புவார்கள். வீரமணி அவர்களின் “பள்ளிக்கட்டு சபரிமலைக்குக் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” பாடல் ஒலிபெருக்கிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். பம்பை நதியில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டி இருக்கும், பல மைல்கள் வெறுங்காலுடன் நடக்க வேண்டி இருக்கும் பக்தர்களை நினைத்துக் கவலைப்படுவேன்.
இக்கதையைப் படிக்கும் வரை இவ்வளவு வருடங்களாகச் சபரிமலைக்குப் பக்தர்களைப் பத்திரமாக அழைத்துச் சென்று வரும் ஓட்டுநர்களைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கவே இல்லை.
பிடித்தமான வரிகள்:
“ஒவ்வொரு முறை வண்டியை நிறுத்திக் கிளம்பும்போதும் அவனே எதிர்பார்க்கலானான் அந்த கூட்டுக் குரலை..”“பழகிய வேலையைச் செய்ய கருத்து போதும்”
“.. தனிமையில் பயணம். சாமிகளை இறக்கிவிட்டதால் இப்போது தான் சினிமா பாடல் ஒலிக்கவிட்டபடி தனக்குப் பிடித்த பாடல்களைத் தேடிக்கொண்டிருந்தான், இவ்வளவு தூரம் சினிமா பாடல் கேட்காமல் சவாரி ஒட்டியது இதுவே தனக்கு முதல்முறை என்பதாலோ என்னவோ சற்று அயர்ச்சி தெரிந்ததாய் தோன்றினாலும்..”
“நாங்கல்லா மலை ஏறியறங்குன அசதில இருக்கோம், வண்டி ஏறுனதும் தூங்கிருவோம். ஒங்குளுக்குப் பழனிக்கு போற வழி தெரியுந்தான”.
“நாய்ப் பொழப்பு” என்ற தலைப்பு நச்சென்று பொருந்துகிறது.
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!
ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா
அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா?
ஆழமான, அறிவு பூர்வக் கட்டுரை. வேதாந்திகள் (இன்றைய நிலையில்) இந்த நூல்களைப் பற்றியும், கைவல்ய நவனீதம் பற்றியும் மேம்போக்காத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சொன்ன பல வழிகளில் இத்தகைய நூட்களின் மீது நாட்டத்தை ஏற்படுத்தலாம். எனக்கொன்று தோன்றுகிறது.-அத்வைதமும், ந்யூக்ளியர் பிசிக்ஸும், பார்டிகள் பிஸிகஸ்ஸும், ஃபீல்ட் தியரியும் வேதாந்தக் கோர்ஸுகளிலும், இடம் பெறச் செய்யலாம். நூலைப் பார்தே தேர்வினை எழுதலாம். இது முதல் அறிமுகமாக இருக்கட்டுமே. கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஒன்றெனில் ஒன்றே யாம்’ என்ற கட்டுரையை எழுதி. சொல்வனத்திற்கு அனுப்பினேன்.அது வெளியாகவில்லை. எனினும் நீங்கள் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்தால் உங்களிடம் பகிர்கிறேன். அதன் போதாமைகளைச் சொன்னால் உதவியாக இருக்கும்.
நன்றி
பானு நட்ராஜ்
”…அதன் ஆசிரியர் நிஸ்சலதாஸ் (1791-1863)’
”…நிஸ்சலதாஸர், 16ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் பகுதியில் வாழ்ந்த துறவி.”
”நிஸ்சலதாசர் 1791ல், தற்சமயம் ஹரியானா மாநிலத்திலுள்ள தனானா என்னும் கிராமத்தில் பிறந்திருக்கலாமென்று தெரிகிறது”
”சுருங்கச் சொன்னால், நிஸ்சலதாஸர் காசியை வந்தடைந்த சமயத்தில் பண்டிதர்களும் பாமரர்களும் தோளோடு தோள் உரசிக் கொண்டிருந்த நகரமாயிருந்தது. 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பண்டிதர்கள் மராட்டிய ராஜபுத்திர சபைகளால் ஈர்க்கப்பட்டதால் காசியின் கெளரவம் சிறிதளவு மங்கியது.”குழப்புகிறார் ஆசிரியர். 16ம் நூற்றாண்டில் பிறந்தவர் எப்படி 1863 ல் இறக்கிறார்? 18ம் நூற்றாண்டு காசிக்கும் இவருக்கும் எப்படி காலப்பொருத்தம்? அனக்ரானிசமோ?
”200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாது தயாளின் சீடர் சுந்தரதாஸ் ஒரு சிறந்த உதாரணம் ஆவார்; இவர் காசியில் பல வருடங்கள் கல்வி பயின்றவர். அஸ்ஸிகாட் மடத்திலேயே தங்கியவர். சொந்த மாநிலமான ராஜஸ்தானிற்குத் திரும்பியபின் இவரெழுதிய ஹிந்தி நூல்களனைத்தும் ”.
வெள்ளையர்கள் வந்தது 1600. 200 ஆண்டுகளுக்கு முன்பென்றால், 1400. அப்போது இந்தி என்ற மொழியே இல்லை.
முதலில் தமிழறிஞர்கள் என்போர் யார்? பண்டைத்தமிழ் நூல்களை கண்டுபிடிப்பது, அவற்றிற்கு விளக்கம் அளிப்பது அவற்றின் பெருமைகளை எடுத்தியம்புவது; மற்றும் தமிழ்மொழியின் நுணுக்கங்களை ஆராய்ந்து சொல்வது – இவற்றை தம் கைம்மாறு கருதா கடப்பாடாக சிரமேற்கொண்டு வாணாள் முழுவதும் செய்து கொண்டிருப்பவர்களே தமிழறிஞர்கள். பிற மொழி நூல்களை மொழிபெயர்ப்பவர்கள் இருமொழிகளில் பாண்டித்தியம் உள்ளவர்கள் மட்டுமே. அதை எவரும் செய்யலாம்.
விசார சாகரம் போன்ற a highly technical and intricate நூல். அது முழுக்கமுழுக்க மதம் சம்பந்தமானது. இதை மொழிபெயர்ப்பவர் அத்வைத வேதாந்தத்தை ஏற்றுக்கொண்டு, அம்மதக்கருத்துக்கள் தமிழர்களுக்கும் போய்ச்சேர வேண்டுமென அவாக்கொண்டோர். ஏன் தமிழறிஞர்களுக்கு இந்த அவா வேண்டும்? தமிழறிஞர்கள் எல்லாருமே இந்துக்கள் அல்ல.
பொதுவாக, சமஸ்கிருத, ஹிந்தியில் எழுதப்பட்ட இந்து மத நூல்களை மொழிபெயர்த்தோர் அம்மத அறிஞர்கள். தமிழ்நாட்டில் அதைச் செய்தோர் தமிழ்ப்பிராமணர்கள் மட்டுமே. இக்காலத்தில் பிறர் செய்யலாம். தமிழ்ப்பிராமணர்கள் திராவிட மாயையில் ஊறிக்கிடந்தார்களா? இல்லை. பின் உண்மை என்னவாக இருக்கும்? ஏற்கனவே சொன்னது போல, இது a highly technical and intricate நூல். வேதப்பண்டிதர்களும், அவர்களைப்போல நாட்டம் உடையவர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டும். பாமர மக்கள் இதையேன் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள்? துளசிதாஸ் இராமாயணம், கம்பராமாயணம் பாமரரிடையே ஊடுறுவக்காரணம், அது கதை. அவை வேதங்களின் உட்பொருளை விளக்கும் வியாக்கியானம் இல்லை. பாமர மக்களுக்கும் விசார சாகரத்துக்கும் தொடர்பு வராது. பண்டிதர்களிடையே பரவவில்லையே என்று கவலைப்பட்டால் அது சரி.
ஆவடி ரமேஷ்
வயாகரா
நாஞ்சிலின் சொல்லாய்வு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே செல்கிறது என்பதைக் காட்டுகிறதுஇக்கட்டுரை. புத்தகம் வாங்குதலில் தொடங்குகிறார். பின்னர் vat என்பதைப் பற்றிச் சொல்லி, வயா என்பதற்கு மசக்கை எனக் கம்பன் கையாண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறார். வயா என்பது தமிழ்ச்சொல்தானே என ஆய்வு நடத்தி, கி.ராவிற்கு எந்த விருதும் வழங்காமைக்குத் தம் ஆற்றாமையையும் பதிவு செய்திருக்கிறார். பன்முகத்தன்மையுடன் விளங்கும் அருமையான கட்டுரை
வளவ. துரையன்
ஒவ்வொரு முறையும் இவர் கட்டுரைகளை படிக்கும் தோறும் இவர் சொற்பொழிவுகளைக் கேட்கும் தோறும் இவரோடு உரையாடும் தோறும் எமக்குத் தோன்றும் வியப்பும் மகிழ்ச்சியும் அளவிடமுடியாத ஒன்று சமீப காலங்களில் தமிழை ஆழ்ந்து ஆய்ந்து வியந்து ஓதி உணர்ந்தது போலே உரைக்கின்ற ஆசிரியர் எழுத்தாளர் இவர் அன்றி யாரே உளர்! வாழ்க அவர் புகழ் வளர்க அவர் தமிழ்த்தொண்டு நீள்க அவர்ஆயுள்.
அமர நாதன்
…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி
மிகச் சிறப்பான ஒரு அறிமுகம் கொடுத்திருக்கிறீர்கள். என்னைப் போல் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி அறியாதவர்களுக்கு அவரது வாழ்க்கையையும், ஆளுமையையும் பற்றிய ஒரு கோட்டுச் சித்திரமாகக் கட்டுரை அமைந்துள்ளது. நீண்ட கட்டுரை, என்றாலும் சரளமான மொழிநடை, அளவான தேவைக்கு அதிகமான சிடுக்குத்தன்மை இல்லாத வாக்கியங்களால் ஆன கட்டுரை என்பதால் வாசிப்பது எளிமையாகவும் சுவாரசியமாகவும் உள்ளது. அருமை!
சிஜோ அட்லாண்டா
எளிமையான எழுதிய விதம் தான் வாசிக்க வைத்தது..ஒரு அருமையான ஆத்மாவை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது….நன்றி
ஸ்ரீனிவாசன்
நல்லதொரு அறிமுகமாக இருந்து. இவளவு எழுத நீங்கள் அவரைப்பற்றி நிறைய படித்திருக்க வேண்டும்.
ஸ்ரீராம்.
மிகவும் ஆழ்ந்து ஆர்வத்துடன் வாசித்தேன் ஏகாந்தன் அண்ணா, அது நீங்கள் எழுதிய விதம் தான் காரணமாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன், வாசிக்க வாசிக்க எனக்கு ஆச்சரியம், இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் கரு மற்றும் இதில் நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு சில விஷயங்களும் நான் சொல்லியிருக்கிறேன், ஆச்சரியமாக இருந்தது,
இவரைப் பற்றி எங்கோ பெயர் மட்டும் கேட்டிருந்தாலும் இன்று உங்கள் பதிவின் மூலம் தான் இத்தனை விரிவாக அறிகிறேன்,
நல்ல பதிவு
கீதா