மாயக் கண்ணாடி

                                                           1

தே வழியில் முன்பும் வந்திருக்கிறார் தணிகாசலம். ஐம்பது வருடங்களுக்கு முன். அப்போது வார் வைத்த டவுசர் போட்டிருந்தார். இருபுறமும் புட்டப் பகுதி இற்று படுக்கை வசமாகக் கிழிசல்கள் கொண்ட வழக்கமான காக்கி டவுசர் இல்லை – வெளியில் போகும்போது மட்டும் அம்மா அணிவிக்கும் ஊதா நிற டவுசர், அந்துருண்டை மணமும், காலங்காலமாய்ப் பெட்டிக்குள் கிடந்ததால் ஒருவிதப் புழுக்கை நெடியும் கலந்து வீசுவது. தணிகாசலத்துக்கு மிகவும் பிடித்த வாசனை.

பேருந்துக்காகக் காத்திருக்கும்போது, ’எலே, போஸ்ட்டாபீசு’ என்று சதா கேலி செய்யும் பள்ளித் தோழர்களில் ஒருவனாவது இப்போது வரக்கூடாதா, கிழியாத டவுசரைப் பார்த்து வியக்கக்கூடாதா என்று ஏங்கியது மனம். ஆனால், விடுமுறை நாளில் விடியற்காலை எழுந்து பேருந்து நிறுத்தத்துக்கு வர அவர்களுக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது…

அம்மாவுமே தாலிச் சரட்டோடு, புதுக்கருக்கு மங்காத கவரிங் சங்கிலி ஒன்றும் அணிந்திருந்தாள். மங்கிப் பழுப்புத் தட்டிய வெண்ணிறத்தில் நீலநிற வட்டங்கள் பதிந்த நைலக்ஸ் புடவை, அம்மா முகத்தில் நிரம்பியிருந்த இருட்டின் காரணமாகவோ என்னவோ, பளீரென்ற வெண்மையுடன் பொலிந்தது. டவுசரின் அதே மணம் அம்மாவின் புடவையிலும் வீசியது.

ஆனால், அரை நூற்றாண்டு கடந்தும் அந்த நாளும், அந்தப் பயணமும் தணிகாசலத்தின் நினைவில் அழுத்தமாக இருப்பதற்கு,  ஊதா டவுசரோ, அம்மாவின் புடவையோ, அந்த அதிகாலையில் மனம் முழுக்க மண்டியிருந்த இனம்புரியாத ஏக்கமோ காரணம் அல்ல; பெற்றவர்கள் நிரந்தரமாகப்  பிரிவதற்குமுன் அம்மாவுடன் வந்த பயணம் அது என்பதுதான்.

அம்மா ஓயாமல் விசித்துக்கொண்டு வந்தது நினைவிருக்கிறது. மகனை அவ்வப்போது அணைத்துக்கொண்டாள். அவளுடைய உடம்பு தொடர்ந்து நடுங்கியதும், தாக்கப்பட்டதுபோல அவ்வப்போது விதிர்த்ததும் மறக்கவில்லை. அம்மாவின் அப்போதைய முகம் மிகப் பசுமையாக மனத்தில் பதிந்திருக்கிறது. சற்றே சதுரமான முகம். அகலமான மூக்கு. அப்பாவைப்போல அட்டைக் கறுப்பு இல்லை – கறுப்பை விட்டுக் கொஞ்சமே கொஞ்சம் தள்ளிநிற்கும் நிறம் – ’புதுநிறம்’ என்று சொல்லிக் கொள்வாள்.

இருவருமே வேலை பார்த்தும், அம்மாவின் கழுத்தில் மஞ்சள் சரடும் காதிலும் மூக்கிலும் கவரிங் நகைகளும் இருந்தது அந்த வயதில் வித்தியாசமாகத் தெரியவில்லை. பள்ளிப் படிப்பில் படியேறிச் சென்ற நாள்களில் என்றோ எப்போதோ மங்கலாகப் புரிய ஆரம்பித்தது.  புகை மது சூது என்று ஒன்றுவிடாமல் பழகியிருந்தவர்  அப்பா.  இதைவிட மோசமும் தீவிரமுமான பழக்கங்களுடன் சுமுகமாக வாழ்க்கை நடத்திய தம்பதியர் எத்தனை பேரை இவரே பார்த்திருக்கிறார்…

இருவருக்குமிடையில் பிணக்கு உருவாக இன்ன காரணம்தான் இருந்திருக்கக்கூடும் என்பதைத் தணிகாசலம் உணர ஆரம்பித்த நாள்களில், அம்மாவுக்கும் இவருக்கும் நடுவில் கனத்த திரையாக மௌனம் கவிந்திருந்தது.  அப்பாவின் மறுமணமும் இவர் வாலிபத்தின் முதற்படியில் இருந்ததும் அம்மாவின் சகஜமான பேச்சை முழுக்கவே ஓய வைத்திருக்கலாம். தனக்குள் புடம் போட்டுப்போட்டு இறுக்கிய தனிமையின் நிசப்தத்தை நிரந்தரமாகப் பூண அவள் முடிவெடுத்திருக்கலாம். அல்லது, தாய் மகன் இருவருக்குமே தெரிந்த ரகசியத்தை விண்டு பேசும் அவசியம் இருவருக்குமே இல்லாமல் போயிருக்கலாம்.

ஆனால், சேர்ந்திருந்த காலத்திலும் பெற்றவர்கள் நேரடியாகச் சண்டை போட்டுத் தணிகாசலம் பார்த்ததில்லை. பிரியமாகப் பேசியும் பார்த்ததில்லை. வெளியுலகத்துக்குத் தெரியாத தங்கள் பிரத்தியேக உலகத்தில் வன்மத்தையும் குரோதத்தையும் வளர்த்து வந்திருக்கிறார்கள் போல என்று இப்போது தோன்றுகிறது.

சமாதானம் செய்துவைத்துப் பிரயோசனமில்லை என்று அம்மன் தீர்மானித்திருக்கலாம் – அதை சூட்சுமமாக அம்மாவிடம் தெரிவிப்பதற்காக அவளுடைய கனவில் தரிசனம் தந்து இங்கே வரச்சொல்லிக் கட்டளையிட்டிருக்கலாம்.

“அவ கூப்புட்டான்னுதானே அன்னைக்கி வந்தேன். இப்பிடி முடிவு சொல்லுவாண்டு தெரிஞ்சிருந்தா, ஒண்ணு ரெண்டு வருசம் பிந்திக்கூடப் போயிருப்ப னே. என்னமோ, அன்னைக்கி இருந்த வேகத்துக்கு, பொட்ணத்தெப் பிரிச்சோன முடிவெடுத்துட்டென். இப்பொப் படுற கஸ்டத்தெப் பாத்தா, அவ குடுத்தது வரமா சாபமாண்டே புரியலயே…”

– என்று கண்ணீர் மல்க சக ஆசிரியைகளிடம் அம்மா புலம்புவதை ஒருநாள் கேட்டார் தணிகாசலம். அப்போது பத்தாம் வகுப்பை எட்டியிருந்தார்.  

ஆமாம், பிரிந்துவிடலாமா என்று அம்மனிடம் பூக்கட்டிப் போட்டுக் கேட்கத்தான் வந்திருந்தாள் அம்மா. அதற்கு முன்பும் பல தடவை இந்தக் கோயிலுக்கு வந்திருக்கக்கூடும். ஆனால், கடைசியாக வந்தது மட்டும்தான் நினைவிருக்கிறது.

அம்மாவிடம்தான் வளர்ந்தார் என்றாலும், பின்னர் ஒருமுறைகூடக் கோயிலுக்கு வந்த ஞாபகமில்லை. அவள் தனியாக வந்து சென்றதாகவும்தான். சிவப்புப்பூ வழங்கி மணவாழ்வை முறித்தவளை இனி எதற்காகப் பார்ப்பது என்று முடிவெடுத்தாளோ. அம்மா மறைந்ததுக்கு அப்புறமும் இவர் வந்ததில்லை.  மேற்படிக் காரணம்தான் காரணம்.

அம்மாவை நினைக்கும்போதெல்லாம் எந்நேரமும் துயரம்  நிரம்பிய அவளது கண்களும்; அவற்றில் நீர் ஊறும்போதெல்லாம் தன்னிச்சையாகத் துடிக்க ஆரம்பித்துவிடும் கன்னங்களும்; சற்று அழுத்தமாகவே கருமை தெரியும் பூனை மீசையும்; இவர் பணியமர்ந்து, பின்னர் குடும்பஸ்தராக ஆனபிறகும் கடைசிவரை பிடிவாதமாகத் தனியே வசித்து அவள் காலமானதும்; முழுக்க மஞ்சள் அப்பி, ரூபாய் அகலப் பொட்டும் வைத்தும் முகத்தில் சாவுக் களைக்குப் பதிலாகத் துயரமே படிந்திருந்திருந்த காட்சியும்; அது நிஜமா தனக்குள் மட்டும் ஊறும் பிரமையா என்று புரியாமல் தான் தவித்ததும் தணிகாசலத்துக்குள் சலனப்படமாக ஓட ஆரம்பித்து, உள்ளூற ஒரு நடுக்கம் கிளம்பிவிடும்.

”வண்டிய ஓரங்கட்டுங்க தம்பி. ஒண்ணுக்குப் போகணும்.”

நிஜமான காரணம் அது இல்லை என்று பின்னால் உட்கார்ந்திருக்கும் மூவருக்குமே தெரியும். இது வழக்கம்தானே என்பதுபோல, அனங்காமல்  இருந்தார்கள்.

கார் நின்றதும் வேகமாக இறங்கிப் போனார். ஓரிரு நிமிடங்கள் கழித்து, ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார். நெஞ்சில் புகை மண்டியதும், படபடப்பு சற்றுக் குறைந்த மாதிரி இருந்தது. இதுவும்கூட பிரமைதானோ? என்று அனிச்சையாகத் தனக்குள் கேட்டுக்கொண்டே அடுத்த கொத்தை உறிஞ்சினார்.

பேருந்துகள் அடிக்கடி உள்ள மார்க்கம். இருந்தும் காரில் வந்திருக்கிறார்கள். வயதும் நேரச் சிக்கனமும் சொகுசும் மட்டும் இல்லை – குடும்பத்தின் பொருளியல் வளர்ச்சியும் காரணம். இன்னொன்று, பின்னிருக்கையில் வயோதிகத்தால் சாத்வீகம் அடைந்துவிட்ட மனைவிக்கும், மருமகளுக்கும் இடையில் அமர்ந்துள்ள  மூத்த மகன். தகப்பனாரை நிரந்தரமாகத் தன்னுடன் கூட்டிச்செல்ல வந்திருக்கிறான்.  செல்லமாக வளர்ந்தவன் – பேருந்துப் பிரயாணம் பிடிக்காது.

கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு ஊர் திரும்பிய அன்று காலையிலேயே அவன் அலுவலகம் போகவேண்டும் – அதிகப்படி அலுப்பு உடம்பில் சேர்ந்துவிடக் கூடாதே.  தவிர, இந்தத் தலைமுறையின் மனோபாவம் அப்படி – தானாகப் பணம் சேர்கிறதா, சேமிப்பைவிடச் செலவில் ஆர்வம் அதிகமாக உள்ள தலைமுறை.

அம்மா எவ்வளவு ஒழுங்காகவும், கட்டுப்பாட்டுடனும் வளர்த்தாள். பைசாக் கணக்குப் பார்ப்பதில் கெட்டிக்காரி. ஒரு காசுகூட விரயமாகக்கூடாது என்பதில் கறாராக இருப்பாள். தெய்வங்களுக்கும் அதே விதிதான். பிரார்த்தனையை நிறைவேற்றினால்தான் நேர்த்தியைச் செலுத்துவாள் – அதுவரை, பழுப்புநிற நாற்பது பக்க நோட்டில் உள்ள பட்டியலுக்குள் கிடந்து தவமிருக்க வேண்டியதுதான் அந்தக் கடவுள்.

அதே நடைமுறையை அப்பாவிடமும் கொண்டு செலுத்த முயன்றது அவர்கள் பிரிந்ததற்கான உபரிக் காரணமோ என்று பலமுறை தோன்றியிருக்கிறது. கையில் சிகரெட் புகையாத, சீட்டுகளைப் பிடிக்காத அப்பாவின் பிம்பம் எதுவுமே தணிகாசலம் ஞாபகத்தில் இல்லை.  ஆனால், அது மட்டுமோ, அல்லது தாமே யூகித்தறிந்த சுண் ணாம்புக்காரத் தெருத் தொடர்போ, அப்பா அங்கேயே போய் நிரந்தரமாக ராத்தங்க ஆரம்பித்ததோகூடக் காரணமாய் இருக்கலாம் – என்னவாய்த்தான் இருக்கட்டுமே, அதை ஆராய்வதற்குத் தாம் யார் என்று தம்மை அடக்கிக்கொள்வார்.  அப்பா – அம்மாவேதான் என்றாலும், அது வேறு இணை;  தனக்கேயுரிய ரகசியங்களும் மர்மங்களும் அந்தரங்கப் பூசல்களும் கொண்டது அல்லவா. 

அதெல்லாம், மிகப் பழைய கதை. ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி, அரை நூற்றாண்டுக்கு முந்தையது. தணிகாசலம் நல்ல விதமாகப் பணிஓய்வு பெற்றவர். ‘நல்ல விதமாக’ என்பதை  அழுத்திச் சொல்லவேண்டும். இவர்கள் துறையில், ஓய்வு பெறும் நாளன்று மதியம் மூன்று மணிக்கு, தலைமையக ஃபேக்ஸ் வந்து தற்காலிக இடைநீக்கம் பெற்றவர்கள் அநேகர். ஓய்வுக்கால நிவாரணங்கள் பெரும்பாலும் ஓய்வூதியரின் மரணத்துக்குப் பிற்பாடு வாரிசுகளிடம் வந்துசேரும் – அரசாங்கக் கருணைக்கு விளிம்பும் கிடையாது, எல்லையும் கிடையாது அல்லவா. சூறைவிடும் அளவுக்குத் தாராளமானது அல்ல ஓய்வூதியம்; என்றாலும் அது தவறாமல் கிடைப்பது முக்கியம் இல்லையா. பணப்பை நிரம்புவதைவிட மனம் நிரம்புவதுதானே முக்கியம்?

ஆக, வரம்போலக் கிடைத்த புது வாழ்வைத் தொடங்குவதற்குமுன், அம்மனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுவதுதான் முறை என்று ஏனோ தோன்றிவிட்டது; பிரிவதற்கான அனுமதியை அம்மாவுக்கு வழங்கிய அதே கரங்கள்தாம் இத்தனை காலம் நீடித்த, நிம்மதியான மண வாழ்க்கையைத் தனக்கு அருளியது என்று திடீரென்று ஒரு கணத்தில் தோன்றியதுதான் காரணம்.

துரையிலிருந்து வத்தலக்குண்டு வழியாகப் பெரியகுளம் செல்லும் மார்க்கம். கண்மாய்க் கரையில், அந்த அத்துவானத்தின் வெறுமைக்கும் கருவேல மரங்கள் மண்டிய வறட்சிக்கும் பொருத்தமில்லாத பெரிய அளவுக் கோயில். முன்பக்கமும்  பின்பக்கமும்  சமமான விஸ்தீரணம் கொண்ட கற்சுவர். வளாகத்தின் மையப் புள்ளியாகத் தலைவிரித்து நிற்கும் அரச மரத்தினடியில் வீற்றிருக்கிறாள் அம்மன்.  சற்றுப் பெரிய அளவிலான மாடப்பிறை போன்ற ஒற்றைக் கூட்டினுள் எரியும் அகலுக்கு ஒரு தனி சந்நிதி.

கடுமையான மழைப்பொழிவின் காரணமாக கண்மாயிலும் அதிலிருந்து கிளை பிரியும் கால்வாய்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்துப் புரண்டோடி, நிலமெங்கும் நீர் பொங்கிப் பிரவகித்த நாள்களிலும், அம்மன் இருக்கும் திக்கில் ஒரு சொட்டுகூட வழிந்தது கிடையாது என்பார்கள். சூறாவளி நாளிலும் தூங்கா விளக்கு அணைந்தது கிடையாது. 

கோவில் வளாகம் கொஞ்சமும் மாறவில்லை.  பூமி தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை கடந்து சென்ற சகல கணங்களையும் தன்னுள் சேகரித்து வைத்திருக்கிற நிறைவும் மர்மமும் கொண்டிருந்தது. சகலமும் அறிந்தும் எதையும் வெளிவிடாத அழுத்தமும் பூண்டிருந்தது.

பிரதான வாசல் கடந்து நுழைந்த மாத்திரத்தில், உடம்பிலிருந்து விடுவித்துக் கொண்டது மனம்.  கால்கள் பிரகாரத்துக்குள் மெல்ல நடக்கும்போதே, அதற்கு நிகரான வேகத்தில் மனம் பின்னோக்கித் தத்தியது.

போன தடவை அம்மாவுடன் வந்தபோது நடந்ததெல்லாம் வரிசையாய் ஞாபகத்தில் மலர ஆரம்பித்தன. அறுபதைக் கடந்துவிட்ட  தணிகாசலம், அவசர அவசரமாகச் சிறுவனானான். உடல் தளர்ந்து நடக்க, மனம் பால்யத்தின் துறுதுறுப்புக்குள் பாய்ந்து குறுகுறுத்தது…

வாசலில் இருந்த தொட்டியில் எட்டிப் பார்த்தான் அன்று. நிர்மலமான தண்ணீர் பளிங்குபோல இருந்தது. இவன் முகத்தைத் துல்லியமாகக் காட்டியது. உள்ளே பிரகாரச்சுவர் முழுவதும் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு பழமைகளில் கண்ணாடிகள். நேர்ச்சை பூர்த்தியானவர்கள் கொண்டுவந்து மாட்டியவை. இவனுடைய உயரத்துக்கு எட்டியவற்றில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டே அம்மாவுடன் நடந்தான்…

ஆஹா, அம்மன் சந்நிதியின் பின்பக்கம், மேற்குச் சுவரில் பதித்த கண்ணாடி நினைவு வந்துவிட்டது. உண்மையில், கண்ணாடி இல்லை. எவ்வளவோ காலத்துக்கு முன்னால் பளபளவென மெருகேற்றப்பட்ட பளிங்குக் கல். கண்ணாடியைவிடத் துலக்கமாகக் காட்டுவது. அன்று தொடர்ந்து பார்த்தபோது,  நீர்ப் பரப்பில்போல, மெல்லிய வளையங்கள் எழுந்தன அதில். அந்த வயதின் பிரமையாக இருக்கலாம்…

மனைவியையும் மகனையும் முந்திக்கொண்டு வேகமாக நடந்து அதைப் பார்க்கப் போனவர், அதிர்ந்தார். அதே இடத்தில், புதுக்கருக்கு மங்காமல் இருந்த கல் கண்ணாடியில் தெரிந்தது தற்போதைய முகம் அல்ல; அம்மாவின் கைபிடித்து வந்திருந்த எட்டு வயதுச் சிறுவனின் முகம்…  பிடிபட்ட பறவையின் மார்க்கூடுபோல, ஓயாமல் எதுவோ துடிக்க ஆரம்பித்தது நெஞ்சுக்குள்…

ரிசனம் முடித்து வெளியில் வந்தார்கள். மனைவி மறைவிடம் தேடிப் போனாள். மருமகள் அவளுக்குத் துணையாய்ப் போனாள். மறைவிடத்துக்கும் தகப்பனுக்கும் காருக்கும் சம தொலைவில் விழுந்த மானசீகப் புள்ளியில் தனித்து நின்றான் மகன். பாட்டியின் சாயல் அவனுக்கு.  காருக்கருகில் நின்றிருந்த ஓட்டுநரின் கவனம் எங்கோ தொலைவில் புதைந்திருந்தது. சலனமேயற்று, சீருடை அணிந்த சிலைபோலத் தென்பட்டார்.

தணிகாசலம் திகில் அடங்காத மனத்துடன் கோவில் நிலையின் அருகிலிருந்த திண்டில் போய் அமர்ந்தார்.

கையில் புகையும் பீடி, எதிரில் சங்கு நிறத்தில் பழுப்பேறிய திருவோடு, திரிகள் கோத்த சடாமுடி என அமர்ந்திருந்த காவியுடைக்காரர் –  சந்யாசியா, யாசகரா என்று புரியவில்லை – தாமாகப் பேச்சுக் கொடுத்தார். பணிஓய்வு பெற்ற முதியவரை  ‘ தம்பீ’ என்று சரளமாக அழைக்கும் பிராயம் கொண்டவர்.

என்னா தம்பீ, ஆத்தாளெப் பாத்தீகளா? சாதாரண மனுசி இல்லே, மனுச கொலத்தையே பெத்தெடுத்தவ… “உயர்வுபெற உறுதுணையாய், தாழ்வுகளில் ஆறுதலாய் இருந்திடுவாய் தாயே. ஊழியில் நிலைத்தவளே, ஆழியின் நீரூற்றே. பேரண்டம் அழியுமட்டும் குன்றாமல் சுடர் மினுங்கும் திருவிளக்கே…”

– என்று அபசுரமாக ராகம் போட்டவருடன் ஆரம்பித்த சிறு உரையாடலின் கடைசியில் தமது குழப்பத்தைத் தெரிவித்தார் தணிகாசலம்.  பிரமையாய் இருக்குமோ என்றும் கேட்டார். மற்றவர் சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னார்:

ஆச்சரியப்படுறதுக்கு இதிலெ என்னா இருக்கு? அன்னைய பொளுதுக்குத் திரும்பிப் போகுறப்ப,  வச்ச அத்தனையும் வச்ச எடத்துலெ இருக்குறது சகசந்தானெ!

அட, அப்படியானால், அந்தப் பளிங்கின் சேகரத்தில் அம்மாவும்கூட இப்போது உயிரோடும், அன்றைய பிராயத்திலும் இருப்பாளா என்ன! நெஞ்சை அடைத்து உள்ளூர உயர்ந்தது பாசத்தின் நடுக்கமா, இனம்புரியாத அச்சமா என்று புரியவில்லை…

அவர்கள் இருவரும் காரை நோக்கிப் போகிறார்கள். பெரியவரிடம் ஐம்பது ரூபாய்த் தாளைக் கொடுத்துவிட்டு எட்டி நடந்தார். மனம் புதிய கேள்வியைப் பெற்றெடுத்தது:

மணமான புதிதில் அம்மாவும் அப்பாவும் இதே கோவிலுக்கு வந்திருப்பார்கள் தானே? முறிவு பற்றி ஆலோசனை கேட்டு வந்தபோது அம்மாவுக்கு அவளுடைய பழைய முகத்தைக் காட்டவில்லையா கல்கண்ணாடி? ஒருவேளை, காட்டித் தொலைத்ததோ என்னவோ…

வரும்போது இருந்ததைவிட திரும்பிப் போகும்போது மனம் இன்னும் கனத்து இறுகிக் கிடந்தது. இரண்டு மூன்று தடவைகள் வண்டியை ஓரங்கட்டச் சொல்ல வேண்டியதாயிற்று. வண்டி ஓடுவதும் நிற்பதும் சிகரெட் புகைவதும் தீர்வதும் தீராத மர்மமொன்றின் கண்ணுக்குப் புலனாகாத நிலப்பரப்பில் நடப்பதான  பிரமை தட்டியது. இன்றைய எண்ணவோட்டம் முழுவதிலும் பிரமைகள் பதித்திருக்கிறதே என்று ஒரு கணம் ஆச்சரியப்பட்டார். அதைவிட, எதையெடுத்தாலும் காரணம் கற்பிக்கும் வேலையும் நடந்துகொண்டேயிருக்கிறதே…

சாலையில் படர்ந்த வெயிலின்  பரப்பில் கார் ஓடுகிறதா, நீந்திச் செல்கிறதா என்ற குழப்பம் முன்னோக்கிச் செல்ல, நினைவு இலக்கில்லாமல்  பின்னோக்கிச் சென்றது. வருடம் மாதம் தேதி கிழமை என எதுவுமே நினைவில் இல்லாத நாள் எதிலோ சென்று நிலைகுத்தி நின்றது…            

                                                                                                2

ட்டென்று விதிர்த்து விழித்தார். கண் அசந்துவிட்டதுபோல. வண்டியின் முன் மேடையில் பதித்த கடிகாரத்தைப் பார்த்தது நினைவு வந்தது. சே! மூன்று நிமிடம்தான் தூங்கியிருக்கிறார்.

ஓட்டுநரிடம் கையமர்த்தினார். அவர் மர நிழல் தேடி நிப்பாட்டினார். அனிச்சையாக  ஜிப்பாப் பையில் இருக்கும் சிகரெட் பாக்கெட்டை வலது கை தொட்டுப் பார்க்க, இடது கை கதவைத் திறந்தது.

எதிரில் கண்ணுக்கு எட்டியவரை, வெயில் மிதக்கும் கட்டாந்தரை. சிகரெட் புகையை ஆழ்ந்து இழுத்த ஒரு கணத்தில், ஓசைகள் ஏதும் இல்லாத, கண்ணாடிச் சுவருக்கு மறுபுறம் தெரியும் காட்சிபோலத் தென்பட்டது. தற்போதைய காட்சிகூட ஒரு கண்ணாடித் தளத்தில்தான் பதிந்திருக்கிறதோ?  அம்மாவுடன் வந்த பயணமும், இன்று காலையில் நின்றிருந்த கோவில் வளாகமும் ஒரே தொலைவில் ஒரே ஆழத்தில் ஒரே சம தளத்தில் நிகழ்கின்றனவே – இரண்டுக்கும் இடையில் இருந்த வருஷங்களெல்லாம் எங்கே போய் மறைந்தன? தவிர, அந்தக் கண்ணாடி ரசம் பூசியதா, பூசப் படாததா?

இப்போது நின்றிருக்கும் இடமும், இந்த வேளையும்கூட அதே கண்ணாடிப் பரப்புக்குள் போய்த்தானே சேகரமாகும்?  தன் முன்னால் கண்ணுக்குத் தெரியாத ஒரு மகாசலனம் நிகழ்கிற மாதிரியும் அது தன்னையும் இழுத்துச் செல்கிற மாதிரியும் பிரமை தட்டியது. உண்மையில், இரண்டு வருஷங்களுக்குமுன், கண்ணாடிச் சாமியாரைப் பார்த்துப் பேசிவிட்டு வந்ததுக்கப்புறம்தான் இந்தமாதிரி உருவெளித் தோற்றங்கள் அதிகரித்துவிட்டன… ஆனால், அப்படியும் சொல்வதற்கில்லை. கடைசி நாளில் அம்மாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போனபோது என்ன சொன்னாள்…

ப்பாவைப் பிரிந்த பிறகு அம்மாவின் பேச்சு கடுமையாகக் குறைந்து விட்டது. அந்த மனிதர் இவளுடைய குரல் நாண்களைப் பிடுங்கிக்கொண்டு போய்விட்டாரோ என்றுகூட விளையாட்டாக நினைத்திருக்கிறார் தணிகாசலம்.

தரகர் பொன்னுச்சாமி மாமாவிடம் சொல்லி, பெண் பார்க்க ஆரம்பித்த சமயத்தில், எழுகடல் தெருவில் தற்செயலாகச் சந்தித்தபோது வாய்விட்டுப் புலம்பினார்.

என்னாதான் நம்ப குடும்பத்தெப் பத்தி எடுத்துச் சொன்னாலும், மாமியா பேசவே மாட்டேங்குறாளே, ராங்கிக்காரியா இருப்பாளோண்டு நெனச்சுற மாட்டாகளா மாப்ளே?

ஆசிரியையாகப் பணிபுரிந்த காலத்தில், கணீரென்று ஒலித்த குரலுமேகூட, சீக்குப் பிடித்த பூனை மாதிரிப் பலவீனமாய் மாறத் தொடங்கிவிட்டதை இப்போது நினைத்தாலும் மயிர்க் கூச்செரிகிறது… ஆரம்ப நாள்களில் குமுதவல்லி எவ்வளவு புலம்பியிருக்கிறாள்.

என்னாங்க, எங்க வூட்டுப் பளக்கம் ஒருமாரி இருக்கும். இங்கெ உள்ள ருசிக்கி உப்பொறப்பு சரியா இருக்கா இல்லயான்னு ஒரு வார்த்தெ சொன்னாத்தானே தெரியிம்? குனுஞ்ச தலெ நிமுராம அவக் அவக்குன்னு முளுங்கி வச்சாக்க, சாப்பாட்டெத்தாம் புடிக்கலயா, இல்லே நம்மளையே புடிக்கலையான்னு தெரிஞ்சுக்கிர்றது எப்பிடி?

விசித்து அழுதவளைத் தன்னோடு இறுக்கிக்கொண்டார்.

விடு. எனக்கு ஒன்னையும் புடிச்சிருக்கு. ஒன் சமையலையும் புடிச்சிருக்கு. பத்தாதா!

– என்று கண்ணீர் வழிந்த கன்னத்தில் முத்தமிட்டார். உண்மையில், அவள் வலுத்தும் உரத்தும் பேசும்போதைவிட, அழும்போது அவள்மீதான காதலும், வேட்கையும் அதிகரிப்பதை விநோதமாக உணர்ந்தார். எனக்கு மட்டும்தானா, எல்லாருக்குமே இப்படித்தான் இருக்குமா என்று யோசனை வேறு பக்கம் திரும்பிவிட்டது…

ஆனால், குமுதாவின் சிரமம் அதிக நாள் நீடிக்கவில்லை. தனது பூர்விக கிராமத்தில் தனியாகப் போய் வசிக்கவிருப்பதாக ஒருநாள் அறிவித்தாள் அம்மா. அங்கே பூட்டிக்கிடக்கும் வீடு, மாளிகை மாதிரிப் பெரியது. வருடத்தில் ஓரிரு தடவை போய், ஆள் வைத்து ஒட்டடை அடித்துக் கூட்டிப் பெருக்கித் திரும்புவதே பெரிய வைபவம். அம்மாத் தாத்தா அந்தக் கிராமத்தில் கர்ணமாய் இருந்தவர்… அப்போதும் குமுதா அழத்தான் செய்தாள்.

என்னாங்க இது? வந்தவ ராச்சசி. மாமியாளெ வூட்டெவுட்டே தொரத்தீட்டான்னு அக்கம் பக்கத்துலே, சாதி சனத்துலே பேசிக்கிற மாட்டாகளா?

அடப் போத்தா, யாரு என்னா சொன்னா என்ன? நான் இருக்கன்லெ ஒனக்கு?

குறைந்தபட்ச சாமான்களோடு அம்மாவைக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பிய நாளில்தான் முதன்முறையாய் ஓங்கரித்து வாந்தியெடுத்தாள் குமுதா.  கோவிந்தம்மாள் டாக்டர் புன்னகை தவழ அறிவித்தார் – பெரியவன் குமுதா வயிற்றுக்குள் வந்திருந்தான்.

ம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று செய்தி கிடைத்ததும், அவசரமாகக் கிளம்பிப் போனார்கள். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டு ராமலச்சுமியம்மா தகவல் சொன்னார். அவருடைய  மகன்தான்  சிவகங்கை ஆஸ்பத்திரியில் கூட்டிப்போய்ச் சேர்த்திருக்கிறான். பயப்பட ஏதுமில்லை. நெஞ்சுவலி என்று தானாகவே நடந்து வந்து சொன்னாளாம் அம்மா.

வாயுக் குத்தா இருக்கும் தம்பி. இன்னமே என்ன, பதினோரு மணிக் காருக்குத் தானெ போகமுடியும்? இருங்க, ஒரு வா காப்பித்தண்ணி குடிச்சுட்டுப் போங்க. வேனா வெய்யில்லெ வந்துருக்கீக, பிள்ளையையும் தூக்கிக்கிட்டு…

மறுக்க முடியவில்லை. குடிக்கவும் முடியவில்லை. ருசி நன்றாகத்தான் இருந்தது. மனம்தான் ரசிக்க மறுத்தது.

 ஆஸ்பத்திரியில்,  அறைக் கதவைத் தாண்டி அம்மாவின் குரல் கேட்டது. அப்போது தெரியாது, தன் வாழ்வின் இறுதிநாளை, பழைய பொன்னுத்தாயாக இருந்து கழித்துவிட்டுப் புறப்படும்படி அம்மாவின் உள்ளுணர்வு தூண்டியிருக்கக்கூடும் என்று.  

இவர்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது. மூக்கினுள் ஓடிய சிறு குழாய் விலகிவிடாமல், இரண்டு கன்னங்களிலும் ஒட்டிய பிளாஸ்திரி பிடித்து வைத்திருந்தது. கட்டிலின் தலைமாட்டில் நின்ற ஒற்றைக்கால் கம்பியிலிருந்து வௌவால் மாதிரித் தொங்கிய பாட்டிலிலிருந்து இறங்கிய குழாய் இடது மணிக்கட்டின் உட்புறம்  நுழைந்தது. அதன்வழி இறங்கும் திரவத்தை உடனடியாக வெளியேற்றுவதுபோல, புடவைக்குள்ளிருந்து  அதே பருமனில் வெளியேறிய குழாய் கட்டிலின் கீழ்விளிம்பில் தொங்கிய பாலித்தீன் பைக்குள் சேர்ந்தது. எத்தனை வருடம் பாக்கியிருந்தாலும்,  மானசீகக் காட்சியாய்ப் பார்க்கும்போதே சங்கடம் தரும் அந்த மாதிரித் தருணங்கள் இல்லாமல் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று உள்ளூர ஒரு பிரார்த்தனை எழுந்தது தணிகாசலத்துக்கு…

பக்கத்தில் உட்கார்ந்திருந்த லெட்சுமணனிடம் சொன்னாள் அம்மா:

ரெண்டு வீடு, ஏகப்பட்ட சீதனத்தோடெ பொண்ணு வந்துச்சு. ஒரே பொண்ணு. தகப்பன் இல்லாத பொண்ணு. இவன் மாட்டேன்னுப்பிட்டான். இவனெவுட ஒரு இஞ்சு ஒசரமாம். இருக்கட்டுமே, நான் இப்பிடிப் புதூ நெறம். இவுக அப்பா அட்டெக் கறுப்பு. குடுத்தனம் நடத்தி இவனெப் பெத்துப்போடலே?

லெட்சுமணனுக்கும் இவர் வயதுதான். இன்னும் மணமாகவில்லை. என்ன எதிர்வினை செய்வது என்று தெரியாமல் திகைத்தான். சொன்னது போதாது என்றோ என்னவோ, அம்மா அடுத்த வாக்கியத்தையும் உதிர்த்தாள்:

கட்டுனா இவளெத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்லெ நின்னுட்டான்.

பெண் பார்த்து ஏற்பாடு செய்தவளே இவள்தான்; காதல் திருமணம்போல வர்ணிக்கிறாளே என்று தணிகாசலத்துக்குச் சிரிப்பு வந்தது. பெரியவனை இடுப்பில் வைத்துக்கொண்டு நின்ற குமுதவல்லியை அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தார். அவள் கண்கள் இவரைப் பார்த்து ரகசியமாய்ச் சிரித்தன… அன்று இரவு, உறக்கத்திலேயே அம்மா காலமானாள்.              

அது சரி, முணுக் முணுக்கென்று அழுகிறவளாய் இருந்த இந்தக் குமுதா, எதற்கும் அழாதவளாக உருமாறியது எப்போது, அதுவும் எதிரே இருக்கும் கண்ணாடிப் பரப்பில் பதிந்திருக்குமோ, தேடிப்பார்த்தால் கிடைக்குமோ.  மீந்த துண்டைக் காலால் நசுக்கிவிட்டுக் காரில் ஏறும்போது ஒரு சந்தேகம் உதித்தது – நிஜத்தில் நடக்கும் அதே வேகத்தில்தான் கண்ணாடிப் பரப்பிலும்  சகலமும் சென்று பதிகிறதா?    

பின்னிருக்கையில் ஆழ்ந்து உறங்கும் குமுதவல்லியைத்  திரும்பிப் பார்த்தார். தூங்கும் முகத்தில்தான் எவ்வளவு சாந்தம்! முதுமை அவளுக்கு விசேஷமான வசீகரத்தை வழங்கியிருக்கிறது. கல்யாணமான புதிதில் இருந்த, சதா ஆறுதல் வேண்டிய படபடப்பான பெண்மணி இல்லை இவள். சுற்றியுள்ள சகலருக்கும் ஆறுதல் வழங்கும் இடத்துக்கு நகர்ந்துவிட்டவள்.

கனவின் ஆழத்தில் புதைந்து கிடைக்கும் பழைய காட்சியின் புகைப்படமும் சரி, இப்போதைய காட்சியின் தத்ரூபமும் சரி, நிஜமேதானா; இல்லை தனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா என்று குழப்பம் எழுந்தது. யாரிடம் கேட்டுச் சரிபார்த்துக் கொள்வது!

கனவிலிருந்து நனவுக்கும் நனவிலருந்து கனவுக்கும் ஓயாமெ ஆடுற ஊசல்தானப்பா மனுச மனசு. இந்த அல்லாட்டம் நிக்கிறதெத்தான், உசுரு போயிருச்சுன்னு மனுசக் கூட்டம் அர்த்தம் செஞ்சுக்குது. வாஸ்தவத்துலெ, டக்குனு ஒரு ஆளெப் பிடிச்சு, “அட, எங்கப்பா இருக்கெ நீயி, கனவுலயா நெசத்துலயா”ன்னு கேட்டம்னா, தெகச்சுப் போவான். ஆமா, இங்குட்டு ஒரு காலு, அங்குட்டு ஒரு காலுன்னு ஊனித்தானே மனுசகொலம் நிக்கிது…!

என்று கண்ணாடிச் சாமியார் ஒருதடவை சொன்னதும், அப்போது அவருடைய தடித்த கண்ணாடியில் மிளகுப் பருமனில் தெரிந்த விழிகள் இரண்டும் ஒளிர்ந்து உருண்டதும் நினைவு வருகிறது…

ஒரு டீ குடிச்சுக்கிர்றன் சார். கண்ணு அமட்டுது.

வண்டியை நிறுத்தினார் ஓட்டுநர். அட, வாடிப்பட்டி! பின்னிருக்கையில் இருந்த மூவருக்கும், வண்டி நின்றதுகூடத் தெரியாது. அப்படியொரு தூக்கம். வெயில் ஏறிவிட்டது. குளிர்பதனத்தின் சுகத்திலேயே நீடிக்கலாமா, இறங்கி இன்னுமொரு சிகரெட் பிடிக்கலாமா என்று சற்றுக் குழம்பியது மனம். அப்புறம் வெயிலில் இறங்கவேண்டாம் என்று முடிவெடுத்தது.

சாமியார் சொன்னது சரிதான். பழைய நாள் ஒன்றையும், பழைய கனவு ஒன்றையும் நினைத்துப் பார்க்கும்போது இரண்டும் ஒரே மாதிரித்தானே இருக்கின்றன?

மூடிய காரின் முன்கண்ணாடியில் நீண்டிருக்கும் தார்ச் சாலையின் கருமையும், கடந்து செல்லும் வாகனங்களின்  ஒலியும் மந்தமடைந்து, காட்சியின் நிஜத் தன்மை குறைகிற மாதிரி உணர்ந்தார்.

                                                                        3

ணி ஓய்வு பெறுவதற்கு முந்தின நாள் தணிகாசலம்  ஒரு கனவு கண்டார். அதிகாலையில் காணும் கனவுகள் நூறு சதவீதம் பலிக்கும் என்றொரு ஐதீகம் உண்டல்லவா. ஒருவேளை கனவுகளின் மெய்ப்பொருள்தான் பலிக்குமோ என்னவோ. இன்னொன்றும் சொல்லலாம் – எதிரிலிருப்பதை விட்டுவிட்டு, எதிர்காலத்தைக் காட்டியது கண்ணாடி, முதன்முறையாக. அதனால்தான் இன்றுவரை அது துல்லியமாக நினைவில் இருக்கிறதோ என்னவோ!

…அரசுத் துறையில் இவருடன் பணிபுரிந்து, ஐந்து வருடம் முன்பே ஓய்வுபெற்ற சந்தானமும் இவரும் ஒரே நிறுவனத்தில்  அன்றுதான் பணியமர்ந்திருக்கிறார்கள். தனியார் நிறுவனம். அடிக்கடி பயணம் மேற்கொள்ள நேரும். வெளிநாடுகளுக்கும் போகவேண்டும். கடவுச்சீட்டுகளை நிறுவனம் வாங்கி வைத்துக்கொள்ளும். இன்ன வேலை என்று தெரியவில்லை – ஆனால், கடும் நெருக்கடி தரும் வேலை.

மாபெரும் வணிக வளாகத்தின் உட்புறம் இடது பாரிசத்திலுள்ள நீளக் கட்டடத்தின் தரைத்தள ஓரறைக் கடையொன்றில் நிறுவனம் இயங்குகிறது. அவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு இவ்வளவு சிறிய அலுவலகமா என்று யோசிக்க அவகாசமில்லை.  வளாக வாசலில் மழைநீர் தேங்கிச் சேறாக இருப்பதால் பின்வாசல் வழியாகப் போய்வர வேண்டும். கட்டடத்தின் வால் பகுதியில் ஒரு தேநீர்க்கடை இருக்கிறது. சிகரெட்டும் கிடைக்கும். சந்தானம் சொல்கிறார்:

கொளும்புலெ நாம்ப குடிக்கிற சிகரெட் கிடைக்காதய்யா. நான் நாலஞ்சு பாக்கெட்  வாங்கிட்டு வந்துர்றேன்.

நேர் எதிரில் நின்றுகொண்டே கைபேசியில் இதைச் சொல்கிறார். ’இருவரும் வாலிபர்களாக இருந்த நாளில் கைபேசி என்ற சமாசாரமே கிடையாதே’ என்று தூக்கம் கலைந்த பிறகு வியந்தாலும், அப்போது அது இருந்ததும் அதில் அவர் பேசியதும் உண்மையேதான். 

இதற்கிடையில் சந்தானம் காணாமல்போய் அதே இடத்தில் அதே வேளையில் அதே நிலையில் தற்போதைய அரசு அலுவலகத்தின் கடைநிலைப் பணியாளர் நிற்கிறார். உடைத்த பொட்டுக்கடலைபோல அவர் நெற்றியில் ஒட்டியிருக்கும் சந்தனம் மஞ்சள்நிற ரேடியப் புள்ளியாக ஒளிர்கிறது. அவர் சொல்கிறார்:

நீங்க மட்டும்தாண்ணே கொளும்பு போறீங்க.  சந்தானம் அண்ணனெ ஆமதாபாத் போகச் சொல்லீட்டாங்க.

அடடே, தன்னையும் அங்கேயே அனுப்பியிருக்கலாமே. பணியமர்ந்த அன்றே கிடைத்த உயிர்த் தோழனை உடனடியாகப் பிரிவதா. கண்ணீர் முட்டுகிறது. அல்லது, சிகரெட் பாக்கெட்டுகள் எல்லாம் அவரோடு போய்விடுமே என்றுதான் அழுகை வருகிறதோ? என்ற சந்தேகம் தட்டிய மாத்திரத்தில், கண் உடனடியாக வறள்கிறது.

கொழும்பு போகும் மார்க்கம் அத்தனை நேரடியானது அல்ல. திருநெல்வேலி வரை ஜீப்பில் சென்று, அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சரக்கு லாரியில் போக வேண்டுமாம். ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் ஏறி ஜீப்பில் அமர்கிறார் தணிகாசலம். பின்னிருக்கையில் உள்ள  மூவரில் நடுவில் இருப்பவர் சந்தானமேதான்.

கவலைப்படாதீருமய்யா, ப்ளேன் டிக்கட் எடுக்குறதுலெ  ஏதோ சிக்கலாம். கப்பல்லெ கூட்டிக்கிட்டுப் போறாங்ய. 

ஜீப் புறப்படத் தாமதமாகிறது. வளாகச் சுற்றுச் சுவரையொட்டிப் பின்புறம் வருகிறார் தணிகாசலம். அங்கே முன்னமே நின்றிருக்கும் சந்தானம் பாண்ட் பைக்குள்ளிருந்து சிகரெட் பாக்கெட்டுகள் இரண்டை உருவித் தருகிறார். சட்டையை உள்ளடக்கி, தொப் புளுக்குமேல் ஏறிய பாண்ட். புதிய பறவை படத்தில் சிவாஜி கணேசன் அணிந்திருப்பது மாதிரி. அந்தப் படத்தில் சரோஜாதேவியின் தளுக்குதான் என்ன அழகு! ஆளுக்கொரு சிகரெட்  பற்றவைக்கிறார்கள். புகையினூடே சொல்கிறார் சந்தானம்:

இந்த வேலெ மட்டும் கிடைச்சிருக்காட்டி, ஃபில்ட்டர் சிகிரெட்டே குடிச்சிருக்க மாட்டம். சார்மினார்தான் கதி….

என்னவொரு விவேகம்! சந்தானத்தை ஆரத் தழுவுகிறார் தணிகாசலம். இப்பேர்ப்பட்ட நண்பனையா பிரியவிருக்கிறோம். முன்னர் முட்டிய கண்ணீர் இப்போது கன்னத்தில் வழிந்து சந்தானத்தின் தோள்பட்டையை நனைக்கிறது. சந்தானம் செல்லமாகக் கடிந்துகொள்கிறார்:

அட, என்னய்யா இது சின்னப் பிள்ளையாட்டம்…

மறுகணம் மின்னல் வேகத்தில் பறக்கிறது ஜீப். ஓட்டுநரைத் தவிர்த்து அதே நாலு பேர். போகும் வழியெல்லாம் தார்ச் சாலையில் கடிகாரப் படம் வரைந்து வைத்திருக்கிறது. பனிரெண்டைத் தொட்டிருக்கும் மூன்று முட்களும் சக்கரவட்டமாக நகர்வதற்குப் பதிலாக, ஓடும் ஜீப்புக்கு முன்னால் நீண்டுகொண்டே போகின்றன. பக்கவாட்டு எண்களெல்லாம் நிலைத்து நின்றிருக்க, பனிரெண்டு மட்டும் துரத்தும் முட்களின் நுனியில் கனவேகமாகப் பாய்ந்து செல்கிறது.

வண்டியின் வேகத்தையும், வேகமுள் தொட்டு நிற்கும் இடத்தையும், வெளியே அசுர வேகத்தில் எதிர்ப்புறம் விரையும் சாலையோர மரங்களையும் காணும்போது, எது வேண்டுமென்றாலும் நடக்கக்கூடும் என்று தமக்குள் உயரும் பதற்றத்தைச் சமாளிக்கும் விதமாக விதானத்தின் இடதுபுற இறக்கத்தில் உள்ள கைப்பிடியை இறுகப் பற்றுகிறார் தணிகாசலம்.  அட, அது கைப்பிடி அல்ல. கூர் முள். கடிகார முள்ளாகவேகூட இருக்கலாம். அழுத்திப் பிடித்த விரலில் ரத்தம் கசிகிறது.

பின்னாலிருந்து சந்தானத்தின் கை நீண்டு தணிகாசலத்தின் தோள்பட்டையில் ஆதுரமாகத் தட்டுகிறது. ஆறுதலாக ஒரு வாக்கியமும் சொல்கிறார். வேறு மொழி மாதிரி ஒலிக்கிறது. புரியாமல் திரும்பிப் பார்க்கிறார் – அது சிங்களம் என்று விளக்குகிறான் ஓட்டுநன்.

அட என்னய்யா இது – என்று அர்த்தமாம். அவனுடைய கடலைப் பொட்டு மினுங்குகிறது. ஆமாம், அதே கடைநிலைப் பணியாளர். வாலிபனாக.

ராமேஸ்வரம் கடற்கரையில் ஏகப்பட்ட கூட்டம். பெற்றோமாக்ஸ் விளக்குகளும், சீமெண்ணெய் லாந்தர்களும், ஏலக்காரர்களின் காடா விளக்குகளும் அகற்ற முனைந்ததால் மெலிவடைந்த கும்மிருட்டு. அந்த இருட்டிலும், அது இந்தியக் கடற்கரை அல்ல. ஏதோவொரு புராதன அரேபியக் கடற்கரை – இல்லாவிட்டால் காட்சியின் நிறம் இத்தனை பழுப்பாக இருக்குமா,  ஆண் பெண்களின் உடைகளில்தான் இவ்வளவு மாற்றம் இருக்குமா என்று தோன்றுகிறது தணிகாசலத்துக்கு. ஒவ்வொருத்தரும் புடைத்த இரண்டு பலூன்களுக்குள் கால் நுழைத்த மாதிரி உடையணிந்து இருக்கிறார்கள். மேல்சட்டைக்கு மேல் ஒரு அரைக்கைச் சட்டை – பெரும்பாலும் கறுப்பு நிறம். இரட்டைப் பின்னலைத் தலையைச் சுற்றிக் கட்டியிருக்கும் மாதர்களும், தலையில் படிந்த அரைத்தொப்பி அணிந்த ஆடவர்களும்.

அட, காட்சியைத் தமக்குத்தாமே விவரித்துக்கொள்கிற மாதிரி வார்த்தைகள் எப்படி மாறுகின்றன! ஆனால்,  கடலிலிருந்து வரும் உப்புக் காற்றுக்கு இந்த ஊர் அந்த ஊர் என்றோ, இந்த நாள் அந்த நாள் என்றோ பேதம் இருக்குமா என்ன… நிறுவன வாசலில் புறப்பட்ட அதே வேளையில் இங்கே நின்றிருப்பது பற்றி வியப்புத் தெரிவிக்கிறார் இவர்.

வாயு வேகம் மனோ வேகம்ன்னு சொல்லுவாங்களே, அது இதுதான். இருந்துக்கிட்டே இருப்போம், டக்குன்னு இல்லாமெப் போயிருவோம். பாத்தா, வேற எடத்துலெ இருப்போம்.

– என்று சிரிக்கிறார் சந்தானம்.

கிளிஞ்சல் விற்கும் இளம்பெண் நரிக்குறவப் பெண்போல உடுத்தியிருக்கிறாள். முன்னங்கைகளைக் கல்தூணில் ஊன்றி, முழுக்க விலகிய தாவணியைப் பொருட்படுத்தாமல், அலட்சியமாக நிற்கிறாள். கங்குகள்போல ஒளிர்கின்றன கல்லாமைப் பருமனில் திரண்ட முலைகள்.

அண்ணே, வந்த வேலையப் பாக்கலாம்ண்ணே, என்கிறான் பொட்டழகன்.

கப்பல் நிரம்பிருச்சு; ஒங்களெ யானை மேல ஏத்தி அனுப்பப்போறோம், என்கிறார் ஏலக்காரனின் அருகில் நின்றிருக்கும் நிறுவன மேலாளர். யானை உயரம் எழும்பும் அலைகளில் யானை சமாளித்து நீந்தி கொழும்பு சேர்ந்துவிடுமா என்று அச்சம் தட்டுகிறது.

ராமேஸ்வரத்துலெ அலை ஏதுய்யா. அலை மாதிரித் தெரியுறதெல்லாம்  அலையாயிருமா?

– என்று பிடரியில் கைவைத்து அழுத்திச் சொல்கிறார் சந்தானம்.

அகல முதுகுள்ள யானெமேல தம்பியெ ஏத்தி வுடுங்க சார் – என்று சிபாரிசு செய்கிறார். ’அகமதாபாத் போகவேண்டிய ஆள் இப்படி நம்முடனே வந்துகொண்டிருக்கிறாரே, பாவம்,’ என்று கவலைப்படுகிறார் தணிகாசலம்.

அடக் கூகெ, நானும் உன்னோடதான்யா வர்றேன். இன்னமுமா புரியலே  உனக்கு!

என்று கேலிசெய்யும் சந்தானத்தை இரண்டாவது தடவையாக இறுக்கிக் கட்டிக் கொள்கிறார் தணிகாசலம் . இப்பேர்ப்பட்ட உத்தம நண்பனுக்கு ஏதாவது வாங்கித்தர ஆசைப்படுகிறார்.

ஏலக்காரனிடம் பேரம் பேசி ஒரு குர்த்தா வாங்கிப் பரிசளிக்கிறார். சணலால் ஆனது போலவும், கொச்சக் கயிற்றின் தென்னை நார்  இழைகளால் ஆனது போலவும் இருக்கிறது அந்தத் துணி. கீழ் விளிம்பில் தீக்கொழுந்தின் சித்திரம்.

இப்போது சந்தானம் கண் மல்குகிறார். கடலுக்குள் நீளும் மரப் பாலத்தில் இருவரும் நடந்து கப்பலை நோக்கி நடக்கிறார்கள். ஆமாம், கப்பலை நோக்கித்தான். முன்னால் செல்லும் சந்தானத்திடமிருந்து  ஐந்தடி பின்னால் தள்ளித் தொடர்ந்தார் தணிகாசலம்.

எதிர்பாராத ஒரு கணத்தில், காலடிப் பலகை அகன்று, நீருக்குள் வீழ்ந்தார் சந்தானம். மிகவும் இயல்பாக, அந்த இடத்தில் விழுவதற்கென்றே இத்தனை தூரம் வந்தவர் மாதிரி, ஓசையே எழுப்பாமல் விழுந்து மறைந்தார். அவர் புதைந்த இடத்தில், குமிழ்போல நீர் எழுந்து அழிந்தமாதிரித் தென்பட்டது…

விழிப்புத் தட்டியது. உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. உள்ளங்கைகள் இரண்டையும் விரித்துப் பார்த்தார். ஒருபோதும் சிடுக்குப் பிரிக்க முடியாத நூல்கண்டு தன் கை விரல்களில் சிக்கி முடக்கிப் போட்டுவிட்ட மாதிரி பிரமை தட்டியது. நிஜமாகவே இவ்வளவு விஷயங்களும் எண்ணங்களும் கனவுக்குள் இருந்தனவா, அல்லது மீட்டு நினைத்துப் பார்க்கும்போது வந்து சேர்கின்றனவா என்று குழப்பமாக இருந்தது. ஒரு வேளை, அதில் தாம் பார்க்கவும் சேர்க்கவும் நினைக்கும் சகலமும் பிற்பாடு இணைந்து கொள்கின்றனவோ?

மேற்படிக் குழப்பத்தைப் பிற்பாடு தீர்த்துக்கொள்ளலாம்; இப்போதைக்கு,  நாளைய பிரிவுபசார விழாவுக்குச் சந்தானத்தை நேரில் சென்று அழைக்க வேண்டும். போகும்போது காதி பவனில் முழுநீளக் குர்த்தா ஒன்று வாங்கிப் போக வேண்டும். கனவில் வந்த குர்த்தாவின் அதே துணியில், அதே நிறத்தில்  கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால், பலவண்ணக் கனவுகள் வருவதற்கு வாய்ப்பேயில்லை; கறுப்பு – வெள்ளைக் கனவுகள் மட்டுமே சாத்தியம் என்றுகூட யாரோ எப்போதோ சொல்லியிருக்கிறார்களில்லை?

தமக்கு மட்டும் ஏன் வாழ்க்கை இவ்வளவு புதிராகவும் மாயத் தன்மையோடும் இருந்து தொலைக்கிறது? அல்லது எல்லாருக்குமே இப்படித்தானோ? வாழ்க்கை என்பதே புதிரும் மாயமும் நிரம்பியதுதானோ? உள்ளூற இது புரிந்ததால்தான் எல்லாம் சகஜமாக இருக்கும் பாவனையை எல்லாரும் அணிந்து கொண்டிருக்கிறார்களோ?

இப்படியெல்லாம் தோன்றுகிறதே, இந்த விதமாக, எல்லார் சார்பாகவும் யோசிப்பதற்குத் தமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?… லேசாகத் தலைவலிக்கிற மாதிரி இருந்தது. உடனடியாகப் படுக்கையைவிட்டு எழுந்தார்.

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து நேரே காதி பவனுக்குப் போனார். இவர் நினைத்திருந்த நிறத்தில் தங்களிடம் ஆடைகள் கிடையாது என்றார், பொட்டுக் கடலையை ஒட்டியதுபோல ஒளிரும் சந்தனப் பொட்டு வைத்திருந்த கடைச் சிப்பந்தி. ஊதா நிறத்தில் ஒரு ஜிப்பா வாங்கினார். செய்தித்தாளில் சுருட்டிச் சணலால் கட்டிக் கொடுத்தார்கள்.

சந்தானத்தின் தெரு முனையில் எதற்காகவோ பள்ளம் தோண்டிப் போட்டிருந்தது. தெருவுக்குள் நுழைய மறுமுனையை உபயோகிக்கவும், சிரமத்துக்கு வருந்துகிறோம், என்றது மாநகராட்சியின் தற்காலிக அறிவிப்புப் பலகை.

காலூன்றி வண்டியை நிறுத்தி,  பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் தெரியும் தன் முகத்தைப் பார்த்தார். வலிப்புக் காட்டியதுபோல ஒருகணம் கோணியது பிம்பம். சன்னமான பூச்சி ஏதோ குறுக்கே பாய்ந்திருக்க வேண்டும். நின்றது போதுமென்று  கிளம்பினார்.

நீளமாக, ஏகப்பட்ட கோணல்களோடு இருக்கும் அந்தத் தெருவின் மறுமுனையில்தான் சந்தானத்தின் வீடு. வண்டி தெருவுக்குள் நுழையும்போதே சந்தானத்தின் வீட்டு வாசலில் ஷாமியானா அமைப்பதில் இரண்டு பேர் ஈடுபட்டிருப்பதும், தமக்கு முன்னால் போன வண்டியிலிருந்து வெள்ளைநிறப் பிளாஸ்ட்டிக் நாற்காலிகளை இருவர் இறக்குவதும் பார்வையில் பட்டது.

*** *** ***

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

எழுத்தாளர் | கா.ரபீக் ராஜா| சிறுகதை |"பிடிபடா சலனங்கள்" | K. Rafeek Raja| story |" Pidipada Salangal" Solvanam – Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

எழுத்தாளர் | கா.ரபீக் ராஜா| சிறுகதை |"பிடிபடா சலனங்கள்" | K. Rafeek Raja| story |" Pidipada Salangal" எழுத்தாளர் கா.ரபீக் ராஜா – ஆசிரியர் குறிப்பு காரைக்குடியில் 1986ல் பிறந்து காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில்தனது இளங்கலை படிப்பை முடித்த வளர்ந்து வரும் எழுத்தாளர் கா.ரபீக் ராஜா. இவரது எழுத்துக்கள் காமதேனு. சொல்வனம், கீற்று, திண்ணை. வாசகசாலைபோன்ற மின்னிதழ்களில் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் வெளிவருகின்றன. எப்படிப்பட்ட சோகமான சூழல்களையும் எழுத்தில் நகைச்சுவையாகக் கையாள்வது இவரது சிறப்பு. சமீபத்தில் இவர் எழுதிய 'ஒரு எனியவனின் குறிப்புகள்' புத்தகமும், தற்போது "ஏதேனும் வரிசையில் நின்றவனின் கதைகள்" எனும் முதல் சிறுகதைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/03/26/பிடிபடா-சலனங்கள்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi — Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
  1. எழுத்தாளர் | கா.ரபீக் ராஜா| சிறுகதை |"பிடிபடா சலனங்கள்" | K. Rafeek Raja| story |" Pidipada Salangal"
  2. இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள்- 3 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal-3 |
  3. Milagu Novel-Part 42 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 42 | இரா. முருகன் | எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல்
  4. சுஜாதா | சிறுகதை | "இரண்டணா | Suujatha |Story |"IraNdaNaa"
  5. சுஜாதா:சிறுகதை:அரிசி:Suujatha:Story:Arisi

2 Replies to “மாயக் கண்ணாடி”

  1. கதை புதுத் தளங்களில் மாறி மாறிப் பயணிப்பது வாசிக்கக் களைப்பின்றி இருக்கிறது. மேலும் ஒரு பூடகமான இடத்திற்குக் கதை அழைத்துச் செல்லும் உணர்வும் ஏற்படுகிறது. அந்தக் கனவைக் கொண்டு வந்து சேர்த்திருப்பதுதான் மாயா யதார்த்தவாதம்
    நல்ல கதை

  2. மூன்று தலைமுறைகள் முன்னும் பின்னும் வந்தாலும், குழப்பமில்லாத நடை. எங்கோ தொடங்கி, எங்கோ முடியும் வாழ்க்கையின் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. மாயக்கண்ணாடி – கோயிலின் பளிங்குக் கல் மற்றும் இவர் காணும் கனவு! செறிவான கற்பனை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.