பிரபஞ்சம் – பாகம் 2

இக்கட்டுரையின் முதல் பகுதி இங்கே

முதல் பாகத்தைப் பொறுமையோடு படித்த அனைவருக்கும் நன்றி. கார்ல் சேகனின் காஸ்மிக் காலண்டரை  நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முதல் 13 நிமிடங்களில், நம் அண்டத்தில் அணுத்துகள்கள் இணைந்து ஓர் அணு எவ்வாறு கருவானது என்று முதல் பாகத்தில் தெரிந்து கொண்டோம். சரி, இந்த அணு எப்படி இருக்கும்? அது எவ்வாறு உருப்பெறுகிறது என்று தெரிந்துகொள்ள சற்று உள்நோக்கிப் பார்ப்போம்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் ஓர் ஐந்து வகையான அடிப்படை அணுத்துகள்களால் மட்டுமே ஆனது என்றால் நம்பமுடிகிறதா? நம் அறிவியல் இதைத்தான் முன்வைக்கிறது. எப்படி, ‘X’ மற்றும் ‘Y” என்ற இரண்டே இரண்டு குரோமோசோம்கள் இந்த மொத்த மனித சமூகத்துக்கும் பொதுவானதோ, அதேமாதிரிதான் ஐந்தே ஐந்து அடிப்படை அணுத்துகள்கள் இந்தப் பிரபஞ்சத்துக்குப் பொதுவானவை. நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான், ஃபோட்டான் மற்றும் நியூட்ரினோ என்ற இந்த ஐந்து அடிப்படை அணுத்துகள்களே , நம் முன்னோர்கள் வரையறுத்த காற்று, கடல், பூமி, வானம், நெருப்பு எனும் ஐம்பெரும் பூதங்களையும் உருவாக்கிய மூலாதாரம் என்கிறது நம் அறிவியல். அப்படியென்றால், தனித்தனி துகள்களை ஒன்று சேர்த்து உருவம்கொடுக்க வேறு காரணிகள் வேண்டுமல்லவா? நீரையும், மண்ணையும் பிடித்துப் பிசைந்து பாண்டமும், பொம்மையும் செய்வதுபோல இந்த அணுத்துகள்களை இறுக்கிப் பிடித்து, நம்மையும், விலங்குகளையும், உயிரினங்களையும்,  மரங்களையும், செடிகளையும், மகா மலைகளையும் மற்றும் நதிகளையும் ஒன்று சேர்த்து உருவம் கொடுக்கும் அந்தக் காரணிதான் இறைவனாக இருக்குமோ என்று எனக்குள்ளும் ஒரு கேள்வி இருந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த அறிவியல் (சாமியார்) ஒரு புது விளக்கத்தைத் தருகிறது (றார்). இந்த பிரபஞ்சம் ஐந்து அணுத்துகள்கள் மட்டுமின்றி, நான்கு அடிப்படைச் சக்திகளைக் கொண்டுள்ளது  எனவும்; அவை, “புவிஈர்ப்பு சக்தி” , “மின்காந்த சக்தி” , “வலுவான அணு சக்தி” மற்றும் “பலவீனமான அணு சக்தி” என்பன  என்றும் குறிசொல்கிறது. மேலும், இந்தச் சக்திகள் ஒவ்வொன்றும் சற்று மாறுபட்ட தன்மை கொண்டன என்றும் சொல்லப்படுகிறது. சரி, சக்தி என்றால் ஒரு விசை. அந்த விசைக்கு ஒரு சரகம் அல்லது எல்லை இருக்க வேண்டுமல்லவா? அது என்னவென்று விசாரிக்கப்போனால் கிடைத்த விளக்கம் சற்று மிரட்சியளிக்கிறது.

  • புவிஈர்ப்பு சக்தி – இது எல்லை இல்லாதது, இது ஐந்து அணுத்துகள்களையும் கட்டுப்படுத்தும்.
  • மின்காந்த சக்தி – இதுவும் எல்லை இல்லாதது, ஆனால் இது நியூட்ரான் மற்றும்  நியூட்ரினோக்களைக் கட்டுப்படுத்தாது.

வலுவான அணு சக்தியும், பலவீனமான அணு சக்தியும் மிகமிகச் சிறிய (0.01 பிக்கோ  மீட்டர்) எல்லை மட்டுமே கொண்டவை.

இது எப்படிச் சாத்தியம்? எல்லையே இல்லாத ஒரு விசை, எல்லைகள் கொண்ட கிரகங்களை உருவாக்க முடியும், நம்பமுடிகிற மாதிரி இல்லையே! என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஆனால் இப்போதைக்கு இதை நம்புங்கள். வேண்டுமென்றால், புவிஈர்ப்பு சக்தியை சிவன் என்று வைத்துக்கொள்வோம். இவன் எல்லைகளற்றவன், எல்லாவற்றிற்கும் முதல்வன்.  மின்காந்த சக்தியை சிவனின் துணைவி “சக்தி” என்று கொள்வோம். இந்த சக்தி சிவனுக்கு இணை என்றாலும், சற்று குறைவு. வலுவான அணு சக்தி விநாயகன் என்றும் கடைக்குட்டி முருகன்தான் பலவீனமான அணு சக்தி என்றும் வைத்துக்கொள்வோம். ஏனென்றால் முருகனின் எல்லை மிகவும் சிறிது, மேலும் அவரை வணங்குபவர்களும் குறைவு என்பதும் ஒரு காரணம். காலம் காலமாய், புலப்படாத ஒன்றை நம்பிக்கொண்டிருக்கும் நாம், நம்மால் நம்மை சுற்றி இருக்கும் புவிஈர்ப்பு சக்தியை நம்பலாமில்லையா? சரி, இந்த அணு எப்படி இருக்கும்? அது எவ்வாறு உருப்பெறுகிறது என்று இப்போது ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருப்பீர்கள். நாம் மேலே கண்ட ஐந்து அடிப்படை  அணுத்துகள்கள் ஒன்று சேர்ந்து உருவாவதுதான் அணு எனப்படுகிறது. இதை எளிதில் புரிந்துகொள்ள ஒரு முட்டையை அணு என்று வைத்துக்கொண்டால், உள்ளே இருக்கும் மஞ்சள் கருபோல ஒவ்வொரு அணுவும் ஒரு உட்கரு ஒன்றைக் கொண்டிருக்கும். நியூட்ரான், புரோட்டான் இவை இரண்டும் கலந்த இந்த உட்கருவைச் சுற்றி முட்டையின் வெள்ளைக் கருபோல  எலக்ட்ரான்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கும். இவ்வாறு இந்த மூன்று அணுத்துகள்களையும் ஒரு முழு அணுவாகப் பிணைத்து வைத்திருக்கும் சக்திதான்  “வலுவான அணு சக்தி” என்று அழைக்கப்படுகிறது.  இந்தப் பிணைப்பை உடைக்கும்பொழுது வெளிப்படும் வெப்ப சக்தியைத்தான் நாம் அணு மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். இந்தப் பிளவின்போது வெளிப்படும் மற்ற இரண்டு துகள்கள்தாம் ஃபோட்டான் மற்றும் நியூட்ரினோக்கள். ஃபோட்டான் என்பது வேறு ஒன்றுமில்லை, இதுதான் நாம் காணும் ஒளி. நியூட்ரினோக்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மாயாவிகள். இவற்றை நாம் கண்ணால் காணமுடியாது. இவை எந்தப் பொருட்களையும் ஊடுருவி செல்லக்கூடியவை. இவற்றைப் பிடித்து, பிணைத்து வைப்பது முடியாத ஒன்று. துகள்கள் என்றால் அவற்றுக்கு நிறை இருக்கவேண்டும் அல்லவா? அதையும் நாம் அறிவியல் கொண்டு அளந்துவிட்டோம் என்று பெருமை கொண்டே ஆகவேண்டும்.

புரோட்டான்களும், நியூட்ரான்களும் கிட்டத்தட்ட ஒரே நிறையைக் கொண்டுள்ளன. (940 MeV/C2 = 16 பிக்கோ வோல்ட்)

எலக்ட்ரான்கள், புரோட்டான்களின் எடையில் ஏறத்தாழ 2000த்தில் ஒரு பங்கு எடையுள்ளது.

நியூட்ரினோக்கள், எலக்ட்ரான்களின் எடையில் ஏறத்தாழ 5,00,000த்தில் ஒரு பங்கு எடையுள்ளது.

ஃபோட்டான்கள் எடை பூஜ்யம் ஆகும். இவை எடையில்லாதவை. இந்த நிறை என்ன இவ்வளவு சிறியதாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? இனிமேல் அணுவளவு எடை என்று சொல்லும்போது கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள். பார்க்கவே முடியாத ஒன்றை எடை போடுவது சிரமம் இல்லையா? அப்படியென்றால், ஒரு கிராம் இரும்பில் எத்தனை அணுக்கள் இருக்கும் பார்ப்போமா?

10 கிராம் இரும்பில் 107,800,000,000,000,000,000,000 அணுக்கள் மட்டுமே உள்ளன. மலைக்க வைக்கிறதா? உண்மைதான், இந்த பிரபஞ்சத்தில் நாமும்கூட அணுத்துகள்கள்தான். சரி, அணுக்களை புரிந்துகொண்டது போதும். மீண்டும், கார்ல் சேகனின் காஸ்மிக் காலண்டருக்குச் செல்வோம். முதல் 13 நிமிடங்களில் இந்தப் பிரபஞ்சம் இருள் மூடிக்கிடந்தது. இந்த இருள் 200 மில்லியன் ஆண்டுகள் நீடித்தது. அண்ட  நாயகன் புவியீர்ப்பு விசை, இருள் மூடிக்கிடந்த வாயு அணுக் கொத்துகளை இழுத்துப் பிடித்து, சூடேற்றி, உருவம் கொடுத்து முதல் நட்சத்திரத்தைப் படைத்த நேரம் ஜனவரி 10வது நாள். இதுவே ஒளி பிறந்த நாள். நரகாசுரன் என்ற இருள், புவிஈர்ப்பு விசை என்ற சிவனால் வதைக்கப்பட்டு ஒளி உண்டாக்கிய நாள். வாண வேடிக்கைகள்போலத் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட நட்சத்திரங்கள், சிறிய விண்மீன் திரள்களாக ஒன்றிணைந்தன. இது நடந்தது ஜனவரி 13ஆம் தேதி அன்று.

இந்த விண்மீன் திரள்கள் மேலும் ஒன்றிணைந்து, இன்னும் பெரிய திரளாக உருவானது, சுமார் 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காஸ்மிக்  ஆண்டின் மார்ச் 15 அன்று நம்முடைய பால்வீதி மண்டலம்  உருவாக்கப்பட்டது. அதிவேகத்தில் சுற்றும் ஒரு சங்குச் சக்கர வெடி எப்படிக் காட்சியளிக்குமோ அப்படித்தான் இது இருந்தது. இந்தப்  பால்வீதியில் நூற்றுக்கணக்கான பில்லியன் சூரியன்கள் இருந்தன.  இவற்றில் எது நம்முடையது? பொறுத்திருங்கள், நம் சூரியன் இன்னும் பிறக்கவில்லை.

நட்சத்திரங்களின் தொடர் பிறப்புகள் நடக்கும் அதே வேளையில், நட்சத்திரங்களின் இறப்பும் நடந்து கொண்டிருந்தது.  பிறப்பு என்று ஒன்று இருந்தால் மரணம் ஒன்று என்பதும் இருக்குமல்லவா? இங்கு மரணிக்கும் நட்சத்திரங்களின் சாம்பலிலிருந்து வெளிப்படும் ஒளியானது ஆயிரம் சூரிய வெளிச்சதிற்கு இணையாக இருந்தது. நாம், அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்று சொல்கிறோம் அல்லவா? அது மாதிரி. இப்படிப் பிரகாசிக்கும் ஒவ்வொன்றும் ஒரு ராட்சத நட்சத்திரம் என்றும் அதன் பெயர் “சூப்பர்நோவா” என்றும் அழைக்கப்படுகிறது. இது  ஓர் எரியும் மரணம். இங்கே ஒரு விந்தை என்னவென்றால் இந்த நட்சத்திரங்கள் இறந்துவிட்ட இடங்களில் மீண்டும் ஒரு நட்சத்திரக் கூட்டமே பிறக்கின்றது. ஆம் ஒன்றல்ல! இரண்டல்ல!! பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள், கொத்துக் கொத்தாகப் பிறக்கின்றன. இது எப்படி இருக்கும்? எரிந்துபோன சூப்பர்நோவாவின் சாம்பல், ஓர் அணுகுண்டு வெடித்துக் கிளப்பும் நிகழ்வுபோல், வாயு மற்றும் தூசியின் மாபெரும் மேகங்களாக மாறிப் பின் அவை குளிர்ந்து, கருமேகங்கள் போன்று கனமடைந்து,  பின் அவை சுருங்கி, மழைத்துளிகள் போல மாற்றம் அடைந்து, பின் மேலும் மேலும் சுருங்கும்போது அவை மிகவும் சூடாகி, அதனால் அணுக்களின் கருத்துகள்கள் இவற்றில் ஆழமாக ஒன்றிணைய ஆரம்பிக்கின்றன.

இந்த நட்சத்திர மூலப்பொருள் மறுசுழற்சி செய்யப்பட்டு வளப்படுத்தப்படுகிறது, மீண்டும் மீண்டும், அடுத்த தலைமுறை நட்சத்திரங்களின் தோன்றல்களும், மரணங்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆண்டுகள் நீண்டு மில்லியன், பில்லியன் என நகர்ந்துகொண்டே போய்க்கொண்டிருக்கின்றன. இன்னும்கூட நம் சூரியன் பிறக்கவில்லை. நமது சூரியன் பிறக்க இன்னும் எவ்வளவு காலம்தான் ஆகும்?  நீண்ட நெடுநேரம். அப்படியென்றால்? கிட்டத்தட்ட 6 பில்லியன் ஆண்டுகள். ஆமாம்! நம் சூரியனின் பிறந்த நாள், காஸ்மிக் காலண்டரின் ஆகஸ்ட் 31 அன்று. நம் சூரியனின் இன்றைய வயது நான்கரை பில்லியன் ஆண்டுகள். பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள்.

சற்றே நம்மை உற்றுப் பார்த்தால், நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன், நமது தசைகளில் உள்ள கார்பன், நம் எலும்புகளில் உள்ள கால்சியம், நம்முடைய இரத்ததில் இருக்கும் இரும்பு, இவை அனைத்தும் நீண்ட காலமாக மறைந்துபோன நட்சத்திரங்கள்  உமிழந்துபோன எச்சங்களே என்கின்றது அறிவியல். இதை வேறு வடிவில் பார்த்தால், நாம் அனைவரும் நட்சத்திர அணுப் பொருள்களால் ஆனவர்கள் என்பதே உண்மை என்று சொல்லமுடியும். இதற்கான ஆதாரங்களையும் இந்த அறிவியல் திரட்டி வைத்திருக்கிறது.

சூரியன் பிறந்துவிட்டது. அடுத்து என்ன நடக்கப்போகிறது? புதிதாகப் பிறந்த சூரியனைச்  சுற்றி எஞ்சியிருந்த தூசியும், வாயுக்களும் சேர்ந்து ஒரு வட்டப் பாதையில் சுற்றி வர ஆரம்பித்தன. ஏன் இந்த வட்டப்பாதை? ஒரு சூறாவளி சுற்றும்போது அதன் அருகிலுள்ள அனைத்தையும் சேர்த்துச் சுற்றும்போது அது ஒரு வட்டப் பாதையை ஏற்படுத்துகிறது அல்லவா? அது போலத்தான். சூரியனைச் சுற்றி வரும் இந்தத் தூசி, மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டு  வளர்ந்து ஒரு குப்பைக் கோளமாக மாறியது. இந்த குப்பைக் கோளங்கள் இறுகி, குளிர்ந்து பனிப் பாறைகளாக உருமாறிப்பின் துணைக் கோள்களாக வட்டப் பாதையில் வலம் வரத்தொடங்கின.  இதில் ஒன்றுதான் நம் பூமியும். நமது சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களைப் போலவே, பூமியும் தூசியும் வாயுவும் கலந்த ஒரு குப்பைக் கோளம்தான். இவ்வாறு பிறந்த நம் பூமியின் பிறந்த நாள், காஸ்மிக் காலண்டரின்  செப்டெம்பர் 6ம் தேதி அன்று. இது நடந்தது சூரியன் பிறந்த தினத்திலிருந்து கிட்டத்தட்ட 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து.

பூமி கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்துகொண்டே, தன்னையும் சுற்றிக்கொண்டு,  சூரியனையும் சுற்றி வந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ ஒரு பில்லியன் ஆண்டுகள் கழிந்தபோது, பூமி ஒரு பேரிடியை எதிர்கொண்டது. ஆம், சூரியனின் சுற்றுப்பாதையில் வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு பிரமாண்ட விண்கல் பூமியை சற்றே எட்டி உதைத்தது.  இந்த வன்முறையால் நிலைகுலைந்து, சற்றுச் சிதைந்துபோன பூமி, சுதாரித்துக்கொண்டு தான் உடைந்துபோன பாகங்களை (குப்பைத் துகள்களை) மீட்கும் முயற்சியில் இறங்கியது. உடைந்தவை அனைத்தையும்  ஒன்றிணைத்து ஒரு வட்டப் பாதையில் தான் சூரியனைச் சுற்றுவதுபோல் சுற்றி வரச்செய்தது. நாளடைவில் இந்தக் குப்பைக் கோளம் குளிர்ந்து ஒரு பனிப் பாறையாக  உருமாறிப் பின் ஒரு துணைக்கோளாக மாறியது. இதுதான் சந்திரன். இவன் வன்முறையில் பிறந்தவன். சந்திரன் மிகவும் சிறிய கோள். இதனால்தானோ என்னவோ, நாம் இவனை மிகவும் மென்மையானவனாகச் சித்திரிக்கிறோம். சூரியக் குடும்பத்தின் அளவில் ஓர் அங்குலம் தொலைவில் புவியின் ஈர்ப்பு விசையால் மிகவும் நெருக்கமாகச் சுற்றிக்கொண்டிருந்த சந்திரன், இன்றைய பிரகாசத்தைவிட 100 மடங்கு வெளிச்சம் கொண்டிருந்தது, மேலும் இன்றிருக்கும் தொலைவில் பத்தில் ஒரு மடங்கு தொலைவில்தான் இருந்தது, இவ்வளவு நெருக்கமான ஈர்ப்பு அரவணைப்பில் சுற்றிவந்த சந்திரன் ஏன் விலகிப் போனது? ஏன் தன் ஒளியை இழந்தது? ஏன் இந்த மாற்றம்? ஆவலோடு காத்திருங்கள், அத்தனைக்கும் விளக்கம் இருக்கிறது. 

இன்னும் பல காலம் செல்லவேண்டியிருப்பதால் இந்த இரண்டாவது பாகத்தை இத்துடன் நிறைவு செய்துகொள்வோம்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.