சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு

ஒழுகினசேரி எங்கோடியா பிள்ளைக்குச் சுற்றியுள்ள வெள்ளாளக் குடிகளில் நடக்கும் கல்யாணம் என்றால் கோளுதான்.  விடியும் வேளை எழுந்து சுடுகாட்டுத் தோப்பில் ஒதுங்கி,  மயான சுடலைக்குப் பக்கவாட்டுப் படித்துறையில் முங்கி எழுந்து,  இருமுறை நீச்சலடித்து அக்கரையின் பாதிவரை சென்று திரும்பி,  குற்றாலத் துவற்றில் தலை துவத்தி, ஒழுகும் தலை நீருடன் அய்யன் திருநீறை நெற்றியில் பரப்பி, மஞ்சணையால் நடுப்புள்ளியில் பொட்டிட்டு, உடல் முழுக்கத் திருநீர் மணக்க நடந்து,  எங்கோடி கண்ட சாஸ்தாவைத் தனக்கும், தன் மக்களுக்குமாக வணங்கி,  நேராய்க் கிருஷ்ணன் கடையில் நாலு ஆப்பமும், முட்டைக் கறியும்,  கூட இரண்டு ரசவடையுமாய் விழுங்கி,  அடுத்து வீரம்பிள்ளை டீக்கடையில் சூடாய் சீனிக் குறைவாய்த் தேயிலை அருந்தி, வீட்டுக்கு வந்து கால்நீட்டிக் கையில் இருக்கும்  தந்தியைப்  படித்தவுடன் நினைவில் வரும் யார் வீட்டுக் கல்யாணம் என.

ஓட்டை உடைசல் நிறைந்த, சுண்ணாம்புக் காரை பெயர்ந்த வீடு. அடுக்களையில் இருந்து கமலம் கால் கிண்டி கிண்டி வெளியே வந்தாள்.  உள்அரங்கில் இருந்து நீலம் முக்கிய வெள்ளைச் சட்டையையும்,  வேஷ்டியையும்  எங்கோடியாவின் கையில் திணித்துவிட்டு வந்தவழியே அடுக்களைக்குள் சென்றாள். கையில் உடுப்பு வந்ததும், “வயசு ஆயி ஒன்னும் ஓர்மை இல்லை.  இன்னைக்கு யார் வீட்டு விஷேஷம்? அட நம்ம பெரிய வீட்டு சின்னையாப்பிள்ளை மகளின் இரண்டாவது மகனுக்குப் பொன்னுருக்கு,  அவாள் வீடு கடுக்கரைலா.  இப்போ பஸ் ஏறினாலும் போய்ச்சேர முக்கா மணிக்கூறு ஆய்டும். சீக்கிரம் நடப்போம்.” இதெல்லாம் யோசிக்கும்போது சட்டை மாற்றி, வேஷ்டி கட்டிவிட்டார். பின் பூசையறையில் ஆத்தாவையும், அய்யாவையும் கும்பிட்டு அடுத்த சுற்றுத் திருநீறை நெற்றியில் பூசி, போன மாதம் இருக்கன்குடியில் இருந்து கொண்டுவந்த குங்குமத்தை மஞ்சணை பூசிய அதேயிடத்தில் பொட்டிட்டார்.

ஒழுகினசேரி பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் நேரமும் வீணாகாமல் நாடார் கடையில் வெத்திலையும், பாக்குமாய் வாங்கி அசைபோட ஆரம்பிக்க,  சண்டாளன் பேருந்தும் சரியாய் வந்தது,  வாயில் குதப்பிய வெத்திலையை அவசரமாய் துப்பி பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையைத் தேடினார். பின்னால் இருந்து “வோய், எங்கோடி இங்க வாரும்” என்ற குரல் கேட்டதும்,  பழக்கப்பட்ட குரலாய் இருக்கிறதே எனத் திரும்பினார் “அட, சங்கரம்பிள்ளை.  எங்க கடுக்கரையா,  சின்னையா வீட்டுப் பொன்னுருக்கா”,  “ஆமா, விஷேஷ வீட்டுக்குப் போயி உள்ள சக்கரமும் கரைஞ்சுரும்.  உமக்கு அப்படியில்ல,  எல்லாக் கட்டும் தெரிஞ்ச ஆளு. நீரு இல்லாம நாரோயில் வெள்ளாளனுக்குக் கல்யாணம், துஷ்டி வீடு கிடையாது” என்றபடி, எங்கோடியாவின் குணமறிந்து ஜன்னலோர இருக்கையை அவருக்குக் கொடுத்தார்.

புத்தேரி குளக்கரை வந்ததும் அடித்த காற்றில் கண்ணயர,  வண்டி குறத்தியரை கடந்துதான் முழிப்பு வந்தது. வந்ததும் சட்டைப் பாக்கெட்டில் இருந்த திருநீறை எடுத்து மீண்டும் நெற்றியில் பரப்பினார். கடுக்கரை வரவும், பேருந்தில் இருந்து இறங்கிச் சங்கரம்பிள்ளை காசில் டீ குடித்துவிட்டு, இருவரும் பொடிநடையாய் நடந்தனர். வழியில் முத்தாரம்மன் கோயிலில் குங்குமத்தை எடுத்து அதேயிடத்தில் வட்டமான பொட்டிட்டார். வாழைக்குலை கட்டப்பட்ட வீட்டிற்குள் நுழைந்தனர். முன்வழுக்கை வரை சந்தனம் பூசிய சிவந்த உடல்காரர்,  அவர்தான் சின்னையாப்பிள்ளை.  “வாரும், வாரும். எல்லாம் போட்டபடி கிடக்கு,  இன்னும் அரைமணிக்கூறுல நல்லநேரம் வந்திரும்,  எட்டி அண்ணாச்சிக்குக் காப்பி போடு,  காப்பியா?  டீயா? ” என்றார் வழக்கமான சிரிப்புடன் சின்னையா. “இன்னா வாற வழிலதான் டீ குடிச்சோம்,  அதுலாம் வேண்டாம்”,  கூடவே சங்கரம்பிள்ளையும் புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்தார். உயரமான தாடி வைத்த இளைஞன் அலைபேசியில் பேசியபடி அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.  அவனை பார்த்தபடி “இதான பேரன்,  இவனுக்குத்தானே விஷேஷம், தாடிய எடுக்கக் கூடாதா,  இப்போ உள்ள பயக்களுக்கு எல்லாம் ஸ்டைலுதான்” எங்கோடியா கூற, மூவரும் சிரிக்க இளைஞன் அங்கிருந்து நகர்ந்தான்.

முன்னறையில் பெரிய பிள்ளையார் படமும், மூன்றடிக்கு குத்துவிளக்கும், தயாராய்ப் பூவும், பழமும் கீழே இருந்தது.  சின்னையா உள்ளரங்கில் இருந்து இரண்டு  தாம்பூலத்தை விளக்கருகே வைத்தார்.  எல்லாத்தையும் ஒரே பார்வையில் கண்ட எங்கோடியா, “தும்பு இலை, தேங்காய், கொஞ்சம் மஞ்சலு, சந்தனம், குங்குமம் எல்லாம் எங்க” எனக் கேட்க,  சின்னையாவின் மகள் ராஜம் ஓடியோடி கேட்ட எல்லாவற்றையும் கொண்டுவைத்தாள். விளக்கருகே நாழியில் அரிசி நிரப்பி, தும்பிலையை விரித்து, மஞ்சளால் பிள்ளையார் பிடித்து, இலையின் மேலே வெத்திலையை ஒற்றை எண்ணிக்கையில் பரப்பி, செந்துளுவன் சீப்புப் பழத்தை வைத்து, அருகே பாக்கு கொஞ்சமாய்ப் போட்டபடி,  வாயில் தேவாரத்தை முனகியபடியே,  தேங்காயை வெளிநடையில் போய் இரு பக்கமும் ஒரே சீராய்ப் பிளந்து இலையில் வைத்து,  விளக்குக்கு ஏற்கெனவே இட்ட சந்தனத்தில் தன் பங்கிற்கு அவரும் இட்டு, ரோஜாப்பூ ஆரத்தை விளக்கின் மேலிருந்து கீழாய்த் தொங்கவிட்டு இவ்வாறு குனிந்து எழும்ப, முதுகும் ஒரு பக்கமாகப் பிடிக்க, பெருமூச்சு விட்டு கைகளைப் பின்பக்கமாய் இடுப்பை அழுத்திப் பிடித்தபடி நின்றார். அதற்குள் கூட்டம்கூட, சின்னையாப்பிள்ளை வந்தவரைக் கவனிப்பதிலே நேரம் ஆகிவிட்டது. 

எங்கோடியா பிள்ளை சத்தமாக “என்ன ஆசாரி வந்தாச்சா?” என்றார்,  “நா வந்து மணிக்கூறு ஆச்சி அண்ணாச்சி,  நீரு தலையத் தூக்கிப் பாக்கலையே” என்றார் மெலிந்த உடல்காரர். “லேய், தவசி. உமி கொண்டு வந்தியா,  பொன்ன மறக்கமாட்ட,  உருக்கப்பட்டத சமயத்தில மறந்துருவியே?” சிரித்தபடி கூறினார் எங்கோடி.  “உள்ள வேலையும் தொலைக்க முடியுமா. நாலு சக்கரம் வரது இந்த மாறி விஷேஷ வீட்டுலதான்.  பிள்ளைமாரு தாலிக்கு என்ன மெஷின் டிசைன் போட்டாலும், ஆசாரி கைப்பட்ட நேக்கு வருமா? ” பேசிக்கொண்டே தவசி சட்டையைக் கழட்டி, விளக்கின் கீழிருந்த திருநீறை நெற்றியில் பூசிக்கொண்டே, “நமக்க ஐட்டத்த எங்க” எனக்கேட்க, எங்கோடி இரண்டு தாம்பூலத்தைக் கையில் கொடுத்தார்.  ஒன்றில் தவசி கொண்டுவந்த பையில் இருந்த உமியைப் போட்டு நிரப்ப,  இன்னொன்றில் எங்கோடி வெற்றிலையைப் பரப்பி, தேங்காய், பழம் வைத்தார். சாமி கும்பிட்டபின் தவசி திரும்பிப் பார்க்க சின்னையா சரியாய் வந்து நின்னார். “காப்பியா?  டீ குடிக்கீலா” எனவும், “விஷேஷம் முடியட்டும் கேட்டுக்கிடுங்க” என்றார் தவசி, சட்டை பாக்கெட்டில் இருந்த சிறிய காகிதப் பொட்டலத்தைச் சின்னையா கையிடம் கொடுத்து “தாம்பூலத்துல குங்குமச் சிமிழில போட்டுட்டு, மாப்பிளைக்கு உடன்பிறந்தாள் எடுத்துட்டு வரணும் கேட்டிலா” என்றான்.

“எல்லா ஆட்காரும், மாப்பிள்ளைக்கு அக்கா, தங்கச்சிமாரு வந்தாச்சா. மாப்பிளை முன்னாடி வந்து நில்லப்போ” சத்தமாகக் கூறினார் எங்கோடி. தவசி எல்லாரையும் பார்த்தபடி, விளக்கை ஏற்றி,  அதில் இருந்து துளி நெருப்பைக் கொண்டு உமியின்மேல் துண்டுக்கரியைப் போட்டுப் பற்றவைத்தார். சம்மணக்கால் போட்டமர்ந்து குழலால் ஊதிக் கங்கை வரவைத்தார். “குழலை பிடிச்சு ஊதும்” நளியாக எங்கோடியா கூற,  சின்னையா “வோய் கிடையும் சும்மா” என்றார்.  மாப்பிள்ளை உடன்பிறந்தாள் தாம்பூலத்தைக் கொண்டுவைக்க, சிமிழில் இருந்த பொன்னையும் கங்கில் இடுக்கிக் கொண்டுபோட,  ஆச்சிமார் குலவையிடவும் சரியாய் இருந்தது.  கூடவே எங்கோடியாவும் இருந்து தேவையானதை தவசிக்கு எடுத்துக் கொடுத்தார். இடமே புகை சூழ,  சிலர் அறைக்கு வெளியே சென்றனர்.  மாப்பிள்ளையின் பாட்டியும், சின்னையாப்பிள்ளையின் பொண்டாட்டியும் லெட்சுமி “ஒருத்திக்கு குலவை விடத் தெரியா,  பேசுகாலுக பேச்சு” எனக்கூற,  கூட்டத்தில் பெண்ணொருத்தி “அதுக்கும் ஆப் இருக்கு ஆச்சி, போடவா” என்றபடியே அலைபேசியில் எதையோ அழுத்த,  அது குலவையிட்டு கதறியது. “பாத்திலா மைனி விஞ்ஞானத்த,  யாருமோ அது”,  “நம்ம மெட்ராஸ் பேத்திதான்,  கொழுப்ப பாத்திலா” எனக்கூற,  குமரிகள் சிரிக்கும் சத்தம் கேட்டது.

பொன்னும் உருக அடுத்த குலவை, இந்தத் தடவை கூடவே விஞ்ஞானக் குலவையும்.  தவசி தேங்காயை இரண்டாய் உடைத்து அந்த தேங்காய் நீரால் கங்கை அணைத்து,  பொன்னை எடுத்துத் தட்டி அதற்குச் சந்தனமும், குங்குமமும் இட்டு தாம்பூலத்தில் வைக்க,  எங்கோடி “மாப்பிளைக்கு உடன்பிறந்தார் அக்கா, தங்கச்சி தாலிக்கு பணம் வைங்க” என்றார்.  நாலு பொம்பிளைகள் பணம் வைக்க,  மாப்பிள்ளையின் அக்கா அந்தத் தாம்பூலத்தைத் தவசியிடம் கொடுக்க,  உள்ளேயிருந்த ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பந்தி பரிமாறும் அறைக்குச் சென்றனர். 

சின்னையா, தவசியிடம் “தாலிக்கு அஞ்சு பவுனும்,  செய்னுக்கு எட்டு பவுனமா போடு” என்றார்.  “முகூர்த்தம் என்னைக்கு” என தவசி கேட்க, “சித்திரை பன்னிரண்டு,  இன்னும் இருவது நாளு கிடக்கு,  நீ சீக்கிரமா பண்ணு” எனப் பதிலளித்தார் சின்னையா. “சரி, நா இருக்கத எண்ணி, கூட எவ்ளோ ஆகும்னு போன் பண்ணுகேன் அண்ணாச்சி”,  “சரி சாப்டுடு, முத பந்தில உக்காருடே,  இந்தா இத கைல வச்சுக்கோ” ரூபாய்க் கட்டைத் தவசியின் கையில் சின்னையா கொடுத்தார். தவசி அங்கிருந்து நகர,   எங்கோடியா “நமக்கும் ஏதோ பாருங்க” என்றபடி மெதுவான குரலில் கேட்க “நீரு இரியும்,  நேரம்லா கிடக்கு. சரி வா தட்டுக்கு” என்றபடி இருவரும் மேலே போக,  ஏற்கெனவே கொஞ்சம்  குடித்த பிராந்தி பாட்டில் அலமாரின் மேலே இருந்து எடுத்தார் சின்னையா. “வோய், கீழே போய்க் கொஞ்சம் அவியலும், தயிர்பச்சடி கொஞ்சமும் இலைல போட்டுட்டு எடுத்திட்டு வாரும்” என்று எங்கோடியாவிடம் கூற,  அவரும் வேக வேகமாய் போய் எடுத்துக்கொண்டு வந்தார். சின்னையா இரண்டு டம்ளரில் கொஞ்சமாய் ஊற்றி,  “உமக்கு தண்ணீ,  தேவைக்கு ஊத்திக்கிடும்” என லோட்டாவை நீட்டினார்.  எங்கோடியா மீண்டும் “அண்ணாச்சி” என்றபடியே நரைத்த தலையைச் சொறிய, “என்ன அவசரம்,  இரியும்” மீண்டும் அதே தொனியில் கூறினார் சின்னையா.  அடுத்த,  அடுத்த தடவை டம்ளர் நிறைய, அவியலும், மாற்றி மாற்றி தயிர்பச்சடி, இஞ்சி கிச்சடி, வாழைக்காய் துவட்டல்,  நார்த்தங்காய் பச்சடி என தட்டு படியேறியது. 

சின்னையா போதையில் தள்ளாடியபடியே கீழே இறங்க “அண்ணன் வந்தாலே, இவருக்குத் திருவிழாதான். வயசான காலத்துல எதுக்கு” என லெட்சுமி அங்கலாய்க்க, “கிடடி சும்மா” கத்தினார் சின்னையா.  சட்டைப் பாக்கெட்டில் இருந்த இருநூறு ரூபாயை அங்கிருந்த எல்லோரும் பார்க்கும்படி எங்கோடியாவின் கையில் கொடுத்து “முகூர்த்தத்துக்கும் நேரமாவே வந்திரும்” எனச் சொல்ல,  எங்கோடி சரி என்பதுபோல தலையசைக்க,  தூரத்தில் சங்கரம்பிள்ளை பந்தியில் இருந்தபடியே அருகில் இருந்த ஆறுமுகத்திடம் “இதாக்கும் இப்போ வேலை,  காலைல பிச்சைகாரப்பய எம் பைசால டீ வாங்கிக் குடிச்சான். விஷேஷ வீடு, துஷ்டி வீடுன்னு கிடையாது, எல்லாத்துலயும் பைசா வாங்கிருவான்”,  எங்கோடியா பந்தி போட்ட இடத்திற்கு வரவும் சங்கரம்பிள்ளை, “அண்ணாச்சி இங்க வாரும், இடம் கிடக்கு” என எங்கோடியாவை அழைக்க,  ஆறுமுகம் இடம்விட்டு நகர்ந்தான்.

One Reply to “சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு”

  1. பொன்னுருக்கு கதை கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. கதைக்கேத்த படம் அருமை.வெங்கோடி என்ற பெயருக்கேற்ற குணமும் கனப்பொருத்தம் . வைரவனுக்கு வாழ்த்துகள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.