சந்தா

முப்பத்திமூன்றாவது மாடியின் சாளரம் வழியாக மார்க் ஷார்ட்டஸ் வந்திறங்கினான். தனது தோள்பட்டையிலிருந்த வாகனத்தைக் கழற்றி மின்சாரப் பட்டையில் செருகிவிட்டு; தனது மேழுடுப்பையும் தலைக்கவசத்தையும் கழற்றி அங்கி மேசையில் வைத்தான். 

கோப்புகளையும் கணினியையும் பார்த்துக்கொண்டிருந்த சாஹிப் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். முகம் மலர்ந்தது. மலர்ந்ததை உள்ளம் அறிந்தவுடனேயே முகமலர்ச்சி சூம்பி இறுகிய பாவனையை ஏற்றது. மார்க் சாஹிபின் கண்களை சந்திப்பதைத் தவிர்த்து, அலங்கோலமாய் இருந்த முன் அறையை கவனிப்பவனாக தன் பார்வையை அங்குமிங்கும் அலையவிட்டான். அவனது அவதானிப்பை உணர்ந்த சாஹிப், “வா மார்க்” என்றார். “வருகிறேன் ஐயா” என்ற மார்க்கின் இயந்திரத்தனமான பதிலை இருவருமே சட்டை செய்யவில்லை. புதியகாலத்தவர்கள் பழமைவாதிகளை கைகொள்ளும் உக்திகளில் இதுவும் ஒன்று.

சில வினாடிகள் இருவரும் ஏதும் பேசாமல் உக்கிரமாக கடந்தது. இருவருக்கும் அது உறுத்த, அந்த மௌனத்தைக் களையும் கடப்பாடு தனக்குத்தான் உள்ளது என்று நினைத்து இருவரும் ஒரு சேர ஆரம்பித்தனர்.

“அந்த வடிப்பான்..” என்று சாஹிப் ஆரம்பிக்கும்போது, “இன்று காற்று மிகவும் தூய்மையாக உள்ளதல்லவா?” என்று மார்க் முந்திக்கொண்டான். 

“ஆமாம். அந்த தெருவோரமாக உள்ள சுத்தீகரிப்புக் கோபுரத்தை பழுதுநீக்கம் செய்துள்ளார்கள். ஆனால் எனது காற்று வடிப்பான் பழையது ஆகிவிட்டதால் என்னால் தான் அதை உணரமுடியவில்லை.”

தன் மேர்ப்பையிலிருந்து வடிப்பான் ஒன்றை எடுத்து மேசையில் வைத்து,”இம்முறை நான் வாங்கி வந்துள்ளேன். இது புதிய ரகம்.” என்று சொல்லிவிட்டு அந்த வீட்டின் மையக் கணினியில் ஒளிவிட்டுக்கொண்டிருக்கும் அறிவிப்பு சமிங்கையை அவதானித்தான். அதில் அடிப்படை வாழ்வுரிமை சந்தாவைத் தவிர இதர அனைத்து சந்தாவும் காலாவதியாகிவிட்டது என்று சிவப்பு வண்ண சமிங்கையாக சிமிட்டிக் கொண்டிருந்தது. ஏற்கனவே உற்ச்சாகமற்று இருந்த மார்க்கை இது சோர்வில் தள்ளியது. 

“ஹும்ம்…” என்று ஒற்றை மூச்சு சிரிப்பு ஒன்றை நகைத்துவிட்டு, “அதை ஏன் பார்க்கிறாய்?” என்று சொன்னவரை மார்க் திரும்பிப் பார்க்கையில் அவர் தனது பூதக்கண்ணாடி வைத்து அந்த வடிப்பானை உற்றுநோக்கி உருட்டிக்கொண்டிருந்தார்.

“இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை”

….

“அந்த வடிப்பானை முயற்சித்துச் சொன்னீர்களானால் நான் சென்றுவிடுவேன்.”

சாஹிப் ஒரு திருப்புளி போலுள்ள கருவியை முதலில் வலது நாசிக்குள் விட்டு தன் பழைய வடிப்பானைக் கழற்றினார். அது சில கசடுகளுடன் வெளிவந்தது. பின் இடது நாசி. இரண்டு நாசிகளிலும் சொட்டுமருந்து விட்டு சுத்தம் செய்தார். பின்பு அந்த புதிய வடிப்பானை மாட்டிக்கொண்டார். தங்குதடையின்றி உள்சென்ற மூச்சுக்காற்று மகிழ்ச்சியை வரவழைத்தது. 

சாஹிப் மார்க்கைப் பார்த்தார். மார்க் சாஹிபின் கண்களை சந்தித்தான். இருவருக்குமிடையே வெளிச் சொல்லா மெல்லிய உணர்வுவாதம் நடந்தது. முன் செல்லும் உலகத்தின் எவ்வகை வகைமைக்குள்ளும் தான் பொருந்தாமல் பழமைவாதியாக எஞ்சிப்போனதையும்;அதனால் இவ்வுலகிற்க்கு தான் பாரமா அல்லது தனக்கு இவ்வுலகம் பாரமா என்று ஒருசேர உணர்த்துவதையும் தன் அங்கலாய்ப்பான மென்சிரிப்பில் சொன்னார். அதற்க்கு பழைய காலத்தவர்களுக்கு புதியவர்களின் தாளமும் கதியும் உள்வாங்கும் கூறுகள் இல்லை என்பதை தன் உதடுகளை இறுக்கி ஒரு கனமான நிராகரிப்பதாகக் காட்டினான்.

முன்னர் ஒருநாள் நடந்து முடிந்த வாக்குவாதம் இப்படி மௌனவாதமாக மிஞ்சியது; அதன் இழுபறிகளுக்கு நடுவே சில சுமூகமான சொற்களை சொல்லவேண்டுமென மார்க்கின் மனம் எத்தனித்தது. “கவனித்தீர்களா என்று தெரியவில்லை…” என்று தொடங்கும்போதுதான் அவன் உணர்ந்தான் இச்சொற்கள் சுமூகமான சூழலிற்க்கு உகந்தவை அல்ல என்று. உடனே வாக்கியத்தை பாதியிலேயே முறித்து, இருமுவது போல் பாசாங்கு செய்தான். ஆனால் சாஹிபிற்கு அந்த முழு வாக்கியமும் மனம்கொண்டது. அவர் மெலிதாக மேலும் கீழும் தலையசைத்தார். வேறு வழியின்றி வெட்டிய வாக்கியத்தை மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தான். “கவனித்தீர்களா என்று தெரியவில்ல; தங்களது வாழ்வுரிமை சந்தாவைத் தவிர பிற அனைத்து சந்தாக்களும் முடிந்து விட்டது.” 

“ஆமாம்! அனைத்தும் காலாவதியாகிவிட்டது; ஆனால் பார்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ” ஆனால் என்ன ?” என்று குரல் உயர்த்தினான் மார்க்.

நெற்றியையும் புருவங்களையும் சுருக்கி அவனைப் பார்த்து,”ஆனால் பார் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.”

“என்ன மாதிரியான பகடி இது? அதுதான் அனைவருக்கும் வாழ்வுரிமை சந்தா இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதே. உயிர் வாழ்வதிலோ உணவு உண்பதிலோ என்ன பெரிய இம்சை வந்துவிடப் போகிறது?”

“வாழ்வுரிமை…. சந்தா…. இலவசம்….! உங்களால் மட்டும்தான் இம்மூன்று சொற்களையும் ஒரே வாக்கியத்தில் நேர்மறைபோல சொல்ல முடிகிறது. என் நா கூசும்.”

“உங்களுடன் வாக்குவதம் செய்ய என் மனம் ஒப்பவில்லை. வெறும் வாழ்வதையே பெரிய தியாகச்செயல் போலச் சொன்னால் யார் தான் உங்களுடன் பேச. முடியும்.”  என்று இம்முறை பார்வை விலக்காமல் சொன்னான்.

“இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது..இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.. யார் யாருக்கு கொடுப்பது?” என்று பொருமினார்.

“ம்ம்ம்..” என்று இழுத்து, “யார் என்றால்? ஒருங்கிணைந்த பண்ணைதான். ஒருங்கிணைந்தவர்களுக்காக.” என்றான் மார்க்.

“உங்கள் ஒருங்கிணைவும் வேண்டாம்; கூடி அடிக்கும் கோலாட்டமும் வேண்டாம்.”

“இதை மீண்டும் மீண்டும் சொல்லியாகிவிட்டது. அனுசரணை மீறல் வேண்டாம். அனுசரணை தான் ஒருங்கிணைவு பண்ணையை சாத்தியமாகிற்று. நீங்கள் உங்கள் சந்தாவைப் புதுப்பிக்காதது பண்ணையின் குற்றம் அன்று. இது ஒன்றும் கிழக்கு தேசமில்லை; அனுசரணை மீறலுக்கும் சந்தா விரயத்திற்கும்.

“ப்ச்… வாதம் வேண்டாம்” என்று சலித்துக் கொண்டார்.

“வாதம் அனைத்தும் முடக்குவாதாமாக ஆகிப்போனால் என்ன செய்வது?”

சாஹிப், “உங்களுக்கு தெளிவு என்பதே இல்லை. காலம் உணர்த்தும் தெளிவு இல்லை.” என்றார்.

மார்க்கினால் அச்சொற்களை பொறுத்துக்கொள்ள முடியாமல், “தெளிந்து உணரவேண்டிய ரகசியம் என்ற ஒன்று கடந்த காலத்திலிருந்து வந்து சேர்ந்துள்ளது என்று நான் நினைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது நிகழ்காலத்தின் பயன் மதிப்பு என்ன என்று மட்டிலே மட்டும்தான் அதை பொருட்படுத்த வேண்டும்.” என்றான். 

 ஒரு பெருமூச்சுடன் சாஹிப் அமைதியானார். அதை உணர்ந்த மார்க் அவ்வமைதியை பிரதி செய்ய ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து எங்கோ ஆழத்திலிருந்து சாஹிப் தன்போக்கில் பேச ஆரம்பித்தார். “மார்க், நீ வருவதற்கு சற்று நேரம் முன்னர் வரை நான் இந்த முகநூல் கிடங்கை அகழ்ந்துகொண்டு இருந்தேன். இதில் எண்ணற்ற சிந்தனையார்ளின் உதிரிச்சொற்கள் கிடைக்கின்றன. பெருங்கொள்ளை நோய்க்கு முன்பாக காலந்தோறும் அப்படிப்பட்ட ஞானவான்கள் வந்தவண்ணம் இருந்திருக்கிறார்கள். உங்களுடைய தீர்க்கதரிசிகள் பெருங்கொள்ளை நோயில் எப்படியோ தப்பித்து மிஞ்சிய ஏதோ மேட்டுக்குடி நுகர்வாளர்கள். களியாட்டக்காரர்கள். எப்படியோ நுகர்வை சந்தா படுத்தியவர்கள். அல்லது தங்களுக்கு தெரிந்த சந்தாவையே வாழ்வியல் முறைமையாக ஆக்கியவர்கள். அவர்கள் நமக்கு கையளித்துவிட்டுச் சென்ற முறைமைகள் அல்லது அங்கிருந்து திரண்டு உருவாகிய முறைமைகள் எப்படியோ சமத்துவத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் அது மலினமான சமத்துவம். நுகர்வின் சமத்துவம். களியாட்டத்தில் சமத்துவம். செரித்து தீர்க்கும் சமத்துவம்.

போதையின் கிரங்காட்ட உச்சத்தையே இங்கு உன்னதங்களாக பயிற்றுவிக்கப் பட்டுள்ளது. இல்லை இல்லை… இங்கு பெயரளவில் ஏதேனும் உன்னதங்கள் இருந்தால்தானே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.

உன்னத வாழ்வு அமைதியில் உள்ளது ஆரவாரத்தில் இல்லை; மௌனத்தில் உள்ளது இரைச்சலில் இல்லை. இதோ இவ்வுலகம் இரைச்சலால் ஆனது. ஆகையால் அனைத்து உன்னதங்களும் தண்டிக்கப்படுகின்றன.”

மார்க் குறுக்கிட முயன்றான். “பொறு மார்க். என்னை கொஞ்சம் பேசவிடு” என்றார் சாஹிப். வெகுநாட்களாக பேசாதவர் பேசுகிறார் என்பதற்காக, கருத்து ஒப்பவில்லை என்றாலும் அவரை பேசவிட்டான் மார்க்.

“இதோ உண்ணா நோன்பு என்ற கருதுகோளை நேற்றுதான் அகழ்ந்து எடுத்தேன். யோசித்துப்பார் உண்ணாத வாழ்வு! கேள்விப்பட்டது உண்டா? பசி! நீ அதை அறிந்தது உண்டா? இதோ பசியை நாம் நோயின் வகைமையில் பட்டியலிட்டுள்ளோம். நோயின் வகைமையில்.. ஹாஹா….

நீ ஏதாவது கொடுத்தது உண்டா? யாருக்காவது ஏதாவது கொடுத்தது உண்டா? பெற்றமைக்காக அல்ல கொடுத்தமைக்காக நீ எஞ்சுவாய். விரையம் செய்ததற்காக அல்ல கொடுத்தவைக்காக.

சென்ற முறை வந்த போது என்னுடைய பஞ்சப்படி பணம் என்னவாயிற்று என்று கேட்டாய் அல்லவா. கொடுத்துவிட்டேன். கிழக்கிற்கு. கோபம் கொள்ளாதே. நீயும் என் ரகத்தை சேர்ந்தவன் தான். நீ எனக்கு புதிய வடிப்பானை வாங்கி கொடுத்தாயே. அந்த கொடுத்தலில் நீ என்ன பெற்றாய்? உன் நுகர்வின் களியாட்டத்தில் ஒரு பங்கை கத்தரிக்காமல் எனக்கு நீ கொடுத்திருக்க முடியாது. அதை ஏன் செய்தாய்?

இங்கே பொறுப்புத் துறப்பு என்பது முற்றிலும் நிகழ்ந்து விட்டதா என்ன? எனக்கு உன் மீதும் உனக்கு என் மீதும் எது மிஞ்சியிருக்கிறது? உண்மையை சொல்லட்டுமா.. நான் உன் பொறுப்பு வளையத்திற்குள் உள்ளேன். அதற்காக அவமானம் கொள்ளாதே. அப்படிக் கருத நாம் பயிற்றுவிக்கப்பட்டு உள்ளோம். பொறுப்பு என்பது அவமானமாகவும் அதை துறப்பதே விடுதலையாகவும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இல்லை, இல்லவே இல்லை. அதை நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த கருதுகோள் நம்மை எப்படியோ வந்து சேர்ந்துள்ளது. ஆனால் வெறும் சொற்க் குவியலாக மட்டுமே.”

மார்க், “உண்மையிலேயே தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் சொல்கிறீர்களா?” என்றான். என்றவுடனேயே தான் குறுக்கிட்டதை உணர்ந்து, “மன்னிக்கவும்…. தொடருங்கள்….” என்றான் 

அவர் அதை சட்டை செய்துகொள்ளாமல் மேற்கொண்டு பேசிக்கொண்டே சென்றார்.  


“கொள்ளை நோய்க்கு முன்பும் பொறுப்புத் துறப்பு இருந்துள்ளது. ஆனால் அந்தப் பொறுப்புத் துறப்பிற்கு முன் பெரும் செயல்பாடு இருந்திருக்கிறது. மாபெரும் அகச் செயல்பாடுகள். அதை வலுச்சேர்க்கும் புறச் செயல்பாடுகள். அந்த செயல்பாடுகளின் இறுதி வடிவமே பொறுப்புத் துறப்பு. ஆனால் நாம் இன்று செய்து கொண்டிருப்பது வெறும் அந்த இறுதிச் செயலை மட்டுமே.

நமது பொறுப்புத் துறப்பு என்பது களியாட்டத்திற்காக. நாம் கடந்த காலத்தில் இருந்து தெளிந்து உணர வேண்டிய ரகசியம் பல உள்ளது. அகழ்ந்து எடுக்க வேண்டிய பொக்கிஷம் ஏராளம்.

கடந்த காலத்தில் இருந்து நமக்கு கிடைத்த ஒரே களஞ்சியம், இந்த முகநூல் கிடங்கு மட்டும்தான். அதில் சென்ற காலத்து முன்னோர்களின் அன்றாட வாழ்வு பதிவாகியுள்ளது. பெரும்பங்கு அதுதான். அவற்றிலிருந்து பொதுமைப்படுத்தி பார்த்தால் இன்று நாம் வாழக்கூடிய சந்தா வாழ்வை நியாயப்படுத்தும். உண்மைதான். ஆனால் பல ஞான சொற்களும் அதைச் சொல்லிச் சென்ற ஞானவான்களின் எச்சமும் சுவற்றில் பதித்த வைரம் போல் நமக்கு ஆங்காங்கே கிடைக்கிறது.

அன்றும் சந்தா வாழ்வு இருந்திருக்கிறது. ஆனால் அது சிறிய பங்கு மட்டும்தான். இந்த முகநூல் கிடங்கை நாம் அகழ்ந்து பார்த்தால் இன்று நாம் வாழக்கூடிய சந்தா வாழ்வை எல்லா வகையிலும் நியாயப் படுத்துவதாகத் தான் தோன்றும். முகநூல் ஜனநாயக யுகத்தை சேர்ந்தவை. ஆகையால் சாமானியனின் கையில் இருந்தது. உண்மைதான். அப்படி சாமானியர்கள் கையில் இருந்ததினால் அவர்களின் அன்றாட சுவாரசியமற்ற வாழ்வு எண்ணில் அடங்காமல் பதிவாகியுள்ளது. அந்தப் பதிவுகளை பார்க்கையில் அவர்கள் முடிவில்லாமல் தமது வாழ்வை ஒளிபரப்பிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும் இன்றைய நமக்கு ஒரு ஒவ்வாமை வந்தமைகிறது. அப்படி ஒளிபரப்பப்பட்ட அவர்களது வாழ்வில் நாம் ஏற்றத்தாழ்வை பார்க்கிறோம். குழு மனப்பான்மையை பார்க்கிறோம்.

நமக்கு கிட்டும் வரலாறு என்ன? ஜனநாயக யுகத்தின் முடிவில் போர்கள் நிகழ்கிறது. அதைத் தொடர்ந்து பெருங்கொள்ளை நோய்க் காலம். நோய்க் காலத்திலிருந்து தப்பியவர்கள் தங்களுக்கு எஞ்சியதிலிருந்து ஒரு உலகம் சமைக்கிறார்கள். அவர்களே இன்று தீர்க்கதரிசிகள். அந்த தீர்க்கதரிசிகள் ஜனநாயக கருதுகோளை கைவிட்டு சந்தா முறைமையில் தமது வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு பின் வந்தவர்கள் சந்தா கருதுகொளிற்க்கு மேலும் வலு சேர்க்கிறார்கள். விளைவு நாம் அனைவரும் இன்று சந்தாதாரர்கள். குடிமகன்கள் அல்ல.

பொருள் சந்தா சேவை சந்தாவை தாண்டி இப்போது ஜீவித்தல் சந்தா. நீதிமன்றச் சந்தா மருத்துவச் சந்தா கல்விச் சந்தா போக்குவரத்து சுற்றுலா சீதோஷணம் போதை காமம் விளையாட்டு. அடேயப்பா.

காமச் சந்தாவில் மட்டும் எத்தனை வகைமை. எவற்றையெல்லாம் ஜனநாயக யுகத்தில் பிழை என்றோ குற்றம் என்றோ ஒதுக்கி வைத்தோமோ அவற்றை எல்லாம் சந்தா என்கிற பெயரில் அனுமதித்து உள்ளோம். அவற்றை விடுதலை என்று எண்ணிக் கொண்டுள்ளோம்.

நான் அகழ்ந்ததில் அறிந்தது. இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல. ஆனால் இதன் தாத்பரியத்தை உணர்ந்தவர்கள் யார்.

சந்தாவின் விளைவாய் உருவாகிய சமத்துவம் உயிர்ப்புடைய சமத்துவமா? நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். சந்தா வாழ்வியல் முரணற்ற வாழ்க்கையை உருவாக்குகிறது என்கிறீர்கள். முரணற்ற பல தலைமுறைகளை உருவாக்கி விட்டோம். முரணற்ற வாழ்க்கையைப் பற்றி பேசுகிறீர்களே, உண்மையிலேயே முரணை அனுபவித்துள்ளீர்களா? முரண் என்றால் என்ன தெரியுமா? இதோ நமக்கு இருவர் இடையே நடந்து கொண்டிருப்பது முரண். எதிர் எதிர் நிற்கும் விசை.

இந்த முரணை முழுதுற அனுபவி. உன் அகம் அடங்காமல் ஆடட்டும் உயிர் விசை உன்னை கிழித்து எரியூட்டட்டும். முரண் நொதிக்கும் சட்டியில் பல உன்னதங்கள் பிறக்கின்றன. அப்படித்தான் ஒரு சமூகம் முன் நகரும். இது என் அறிவா என்றால், இல்லை! இல்லவே இல்லை என்றுதான் நான் சொல்வேன். ஆனால் என் அறிவாக ஆக்கிக் கொண்டேன். இதோ இதே முகநூல் கிடங்கிலிருந்து தான் இச்சொற்களை அகழ்ந்து எடுத்தேன்.

அண்டை வீட்டானிடம் சண்டை செய்கிறேன் என்று சொன்னாயே, நீதிமன்ற சந்தாவை புதுப்பிக்க சொல்லியும் சொன்னாயே. அண்டை வீட்டானிடம் எனக்கு எந்த பகைமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் எனது பொறுப்பு வளையத்துக்குள் இருக்கிறான். அவனை நான் கடந்த இருபது வருடங்களாக அறிவேன். அவனது சுவாரசியமற்ற நேர்க்கோடான விலங்கு வாழ்க்கையில் முரண் என்ற அற்புதத்தை நான் அவனுக்கு அளிக்கிறேன். என்னுடன் அவன் முரணிட்டதால் அவன் இன்று உயிர்ப்புடன் இருக்கிறான். உங்களது மருத்துவச் சந்தா சாதிக்காததை நான் செய்கிறேன். எனக்கு நீதிமன்ற சந்தாவெல்லாம் வேண்டாம். அங்கு சென்று முறையிட்டு என்னை நிரூபிக்கும் கடப்பாடு எனக்கு இல்லை.

நீங்கள் நாகரீகம் என்று பண்பாடு என்று கருதும் விடயத்தின் மீது எனக்கு ஆழமான அவநம்பிக்கை உள்ளது. இன்று நடைமுறையில் உள்ளது ஒருவித கட்டமைப்பு. யாரோ சிலரால் உருவாக்கி நமக்கு கையளித்து விட்டுச் சென்றது. ஆனால் உண்மையான பண்பாடு என்பது உருவாகுவது; பல்வேறு காரணிகளால். இதை முகநூல் அகழ்வாராய்ச்சியில் நாம் அறியலாம்.

இன்று நாம் பண்பாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் கருத்தாக்கமே பூர்விக காலத்திலும் அதே அர்த்தத்தில் பொருள் படுவதாக இல்லை. இன்றைய சந்தா பண்பாடு ஒரு வகையில் சட்டக கட்டமைப்புதான். நமது தீர்க்கதரிசிகள் எனப்படுபவர்கள் கொள்ளை நோயில் இருந்தும் மாபெரும் அழிவிலிருந்து தப்பித்தும் ஏஞ்சியும் வந்தவர்கள். அவர்கள் கட்டுக்கோப்பான இறுகிய சந்தா கலாச்சாரத்தை உருவாக்கி மாற்றமற்ற விதிகளாக நமக்கு விட்டுச் சென்றார்கள். நாம் இத்தனை நூற்றாண்டுகளில் அதை தொழில்நுட்பமாக தான் வலு சேர்த்தோமே ஒளியே; நாம் எவ்விதத்திலும் அதை கருத்தாக வளர்த்தெடுக்கவில்லை.

பெருங்கொள்ளை நோய்க் காலத்திற்கு முன்பும் பல பண்பாடுகள் தோன்றி அழிந்திருக்கிறது. நமது வேர் ஜனநாயக பண்பாட்டிலிருந்து வந்துள்ளது. அதை நமது தீர்க்கதரிசிகளின் சொற்கள் மூலமாகவே அறியலாம். ஆனால் அவர்கள் ஜனநாயக செயற்பாட்டில் நம்பிக்கையற்று இருந்திருக்கிறார்கள். அவர்களது விலக்கம் நமக்கான ஆணையாக வந்து அமைந்துள்ளது.

அவர்கள் விட்டுச்சென்ற சாசனங்களில் ஜனநாயகத்தின் குறைகளை சுட்டிக்காட்டி அதற்கு மாற்றாக சந்தா முறைமையை அறிமுகப்படுத்தி அதன் செயல்பாடுகளை வகுத்தளித்தார்கள். ஆனால் சிந்தித்துப் பார்க்கையில் சந்தா முறைமையின் பரிணாம வளர்ச்சிக்கு உரிய அத்தனை அம்சங்களையும் வெட்டி வீழ்த்திய பின்னரே நமக்கு வந்து சேர்ந்துள்ளது. இன்று உள்ள சாசனங்களில் ஜனநாயகத்தின் குறிப்புகளை நாம் பார்க்கையில் அது எவ்வகையிலும் ஜனநாயகத்தின் விளக்கமாக இல்லாமல் குறை சுட்டலாக மட்டுமே இருக்கிறது. அதன் உண்மையான விளக்கம் முகநூல் கிடங்கில் நமக்கு கிடைக்கும் துணுக்குகளில் இருந்து நாம் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.


ஆனால் அவ்வகையான ஆராய்ச்சிகள் நமது சந்தா அரசின் அனுகிரகம் இல்லாமல் இருக்கிறது. அரசு செய்ய வேண்டிய ஆராய்ச்சியை என்னைப்போல் தனிமனிதர்கள் செய்வதால் மிகவும் பொருள் செலவு பிடிக்கிறது. ஆகையால் நான் பிற சந்தாக்களை புதுப்பிக்கும் நிலையில் இல்லை.

என்னைப் போல் தனி மனிதர்கள் செய்யும் ஆராய்ச்சி சில எல்லைக்கு உட்பட்டவை. அவைகள் அதற்குண்டான வீரியத்துடன் தொடர முடியாமல் நீர்த்துப்போய் கைவிடப்படுகின்றன.

நமது சாசனத்தில் சொல்வதுபோல் ஜனநாயக அமைப்பு என்பது மக்களுக்கு உரிமை என்ற பெயரில் அதில் சொற்பமான சிலரின் நிரந்தர அதிகாரத்தை உறுதி செய்யும் செயற்பாடாக மட்டுமே இருக்கும் என்று நான் கருதவில்லை. மேலும் அது மக்களை மாவட்டங்களாகவும் மாநிலங்களாகவும் மாதேசியங்களாகவும் வகுத்து ஆளும் சூழ்ச்சிக்கான அமைப்பு என்று நான் நம்பவில்லை. ஏனென்றால் அது பெருங்கொள்ளை நோயின் இறுதிக் காலம் வரை உயிர்ப்புடன் ஆயிரம் ஆண்டுகாலம் இருந்த செயற்பாடு. அது வெறும் சிலரின் அதிகாரத்தின் பொருட்டு நிறுவி நிறுத்திய அமைப்பாக இருக்க வாய்ப்பு இல்லை. இந்த உண்மைக்கான் எண்ணற்ற சான்றுகளை இந்த முகநூல் கிடங்கில் அகழ்ந்து பார்த்தால் தெரியும்.”

சாஹிப் மூச்சுவாங்கிக் கொண்டே முடித்தார், “ஆகவே நமது தீர்க்கதரிசிகள் உண்மையில் மகான்கள் அல்ல. மாறாக கயவர்கள். நம்மை ஜடமாக மாற்றிய கயவர்கள்.”

மார்க், “முடித்து விட்டீர்களா?”

“யாரேனும் தங்கள் அருகில் அமர்ந்து தங்கள் பேச்சை குறிப்பு எடுத்திருந்தால் தெரியும் அதில் தாங்கள் பூர்வீக காலத்திலிருந்து எடுத்து கையாளப்பட்ட கலைச்சொற்கள் எத்தனை என்று. 

சென்ற காலத்து கலைச்சொற்க் குவியலாக மட்டும்தான் தாங்கள் இப்போது எஞ்சியிருகிறீர்கள். நீங்கள் சொல்வதில் சில உண்மைகள் உண்டு ஆனால் அவை அனைத்தையும் விட பாவனைகள் தான் அதிகம் உண்டு.

கடந்தகால அகமுரண்பாடுகளையும் மனச்சிக்கலின் ஊடுபாவுகளையும் நாங்கள் அப்படியே வரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதற்கு. பூர்வீக காலத்தின் கீழ்மைகளையும் மேன்மைகளையும் ஓருசேர கைவிட்டு எங்களுக்கான புதிய உலகை படைத்துக் கொள்கிறோம். ஆகையால் தங்களின் கூற்றுகளை ஒட்டுமொத்தமாக நான் மறுக்கிறேன் நிராகரிக்கிறேன்.

ஆம்! நான்.. இங்கு.. இன்று.. நின்று.. நிராகரிக்கிறேன். இதோ இப்போது இங்கு நின்று… பார்த்துக்கொள்ளுங்கள்…. பூர்வீக காலத்து பிரதிநிதியாக இருக்கும் உங்களை நான் நிராகரிக்கிறேன். இது ஒரு வரலாற்றுத் தருணம். ஆம்… ஆம்…


நீங்கள் சொல்வது அனைத்தும் அந்நியப்பட்டுப் போகும் மனநிலையிலிருந்து பேசும் வியாக்கியானங்கள். வெறும் அகங்கார பிரகடனங்கள். இதன் அடுத்த படிநிலை புரட்சி. எல்லோரையும் பற்றும் புரட்சி. பின்பு போர், நோய் என்று மீண்டும் அதே குழிக்குள் எங்களை தள்ளி விட்டு நீங்கள் அனைவரும் கைவிரித்து விட்டுச்செல்லும் புரட்சி. 

எங்களது அவலம் உங்களது புது புரட்சிக்கான விளைநிலம். மீண்டும் பழைய கதைதான்.

உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் உலகம் கொள்ளை நோயினாலா அழிந்தது? இல்லை! போரினால் அழிந்தது. அந்த அழிவு நீங்கள் உன்னதம் என்று கருதும் ஜனநாயகத்தின் பேரால் நடந்தது. சில மேட்டுக்குடிகள் தங்கள் அதிகாரத்தின் ஆணவத்தால். தேசாபிமானம் தேசபக்தி போன்ற போலி உணர்ச்சிகளினால் மக்களை நாடுகளாக பிளவுபடுத்தி அவர்களை ஓயாது போரில் ஆழ்த்தினார்கள். அந்த மாபெரும் கூட்டு போரே கொள்ளை நோய்க்கான முதற்காரணி. செயற்கையாக உருவாக்கப்பட்ட பரப்பப்பட்டது. கொள்ளை நோயினால் மட்டுமா அழிந்தோம்? இன்று வீரியத்துடன் வீசிக்கொண்டிருக்கும் அனுக்கதிர்களுக்கு உங்கள் பதில் என்ன? 

ஒருசில நிலப்பரப்புக்குள் மட்டும் நம் மனித இனமே சிக்கி, பிற நிலப்பரப்புகளின் பாதிப்பே இல்லாமல் நம்மை நாமே போர்த்திக்கொண்டு ஜீவிக்கும் நிலைக்கு ஏன் வந்தோம். ஜனநாயகம் ஏற்படுத்திய முரண்களால். முரண் ஏற்படுத்திய போர்களால். ஆக முரண்களைப் பற்றி நீட்டி முழக்குகிறீர்; ஜனநாயகத்தின் முரண் பற்றி பேசினிரோ. புரட்சியாளர்கள், அனுசரணை மீறர்கள். அதைப்பற்றி மூச்சு விட மாட்டீர்களே.


ஏற்றத்தாழ்வுகள் பாகுபாடுகள் போர்கள் அம்மம்மா இன்னும் எத்தனை எத்தனை. பெருந்திரள் ஒப்புக்கொண்ட காரணத்தினாலேயே எந்த கீழ்மயும் சட்டமாகும் கேடுகெட்ட நிலை. அதற்கான உங்கள் பதில் என்ன? நீங்கள் சொல்லும் அதே முகநூல் கிடங்கிலிருந்து கிடைக்கப் பெற்றவையே இது எல்லாம். எங்கள் தீர்க்கதரிசிகள் சொன்ன வார்த்தையை முகநூல் ஆராய்ச்சியும் நிறுவுகிறது. 

நான் ரஸ்தாவில் நடக்கும் யானையைப் பற்றி சொல்கிறேன் நீங்கள் அதன் மீது ஊரும் எறும்பைப் பற்றி வியாக்கியானம் உரைக்கிறீர்கள். இங்க பெரும்போக்கு யானை தானே ஒழிய அதன் மீது அமர்ந்திருக்கும் எறும்பு அல்ல. 


எங்கள் சந்தா வாழ்வு அப்படியானது அல்ல. போலி உணர்ச்சிகள் மீது போலி கருத்துக்களின் மீது சவாரி செய்வது அல்ல.


தேசம், தெய்வம், தனியுடமை, பொதுவுடைமை, மனித பிரிவுகள், மொழிகள், பெருந்திரள் அதிகாரம், சிருந்திரலின் விழுமியம் என்ற எந்த கருதுகோளும்  எங்களுக்கு புனிதம் இல்லை. ஏன் பொதுநலம் என்ற ஒன்றைக் கூட நாங்கள் நம்பவில்லை. பொதுநலத்தில் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். புதுப் புது மனிதர்கள் வந்து கொண்டேதான் இருப்பார்கள். வந்தவர்களுக்கு வர போகிறவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பண்பாட்டு பயிற்சி. பயிற்சி அளிக்கப்பட சிலரை நியமிக்க வேண்டும். நியமிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தின் சுவையை அறிந்த உடன் மீண்டும் பழைய கதைதான்.

பொதுநலம், ஜனநாயகம் என்ற பண்பாட்டுப் பயிற்சி என்பது எவ்வளவு மானுட உழைப்பின் வீணடிப்பு.

அறம், பொதுநலம், ஜனநாயகம் போன்ற மனிதனை பயிற்றுவிக்கும் கருத்தாக்கத்தின் செயற்பாட்டின் செல் திசை காலந்தோறும் நமக்கு உகந்ததாக இல்லை. ஆனால் மனிதனுக்கு பயிற்சி அளிக்கப்படாமலேயே புரிந்துகொள்ளும் கருத்து, அவனது சுயம் சார்ந்த நலம். சுயநலம். சுயநலத்தை அவன் என்னாலும் பெனுவான். சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. தன்னால் வரும். வளரும்.

சந்தேகமே வேண்டாம். சுய இச்சையின் சுயநலத்தின் விளைவாக உருவாகியதுதான் இந்த சந்தா முறைமை. 

ஆகையால் மனிதனை சந்தாப்படுத்த வேண்டும். சந்தாதாரராக்க வேண்டும். சந்தாதாரராகிய ஒருவன் தன் இச்சையின் பாற்பட்டுதான் செயல்படுகிறான். இங்கு உருவாகி நிலைகொண்டிருக்கும் ஒருங்கிணைவு பண்ணை தனி ஒருவனுடைய இச்சைக்கு பதில் சொல்வதால் குற்றங்கள் நடவாமல் ஆகிறது. மேலும் அனைவருக்குமான உரிமை எந்த சலசலப்பும் இன்றி நிலைநாட்டப் படுகிறது. உணவு உறைவிடம், மருத்துவம், கல்வி, களிப்பு, காமம், சாகசம் அவ்வளவு ஏன் படைப்பாற்றலுக்கான சூழலைக்கூட சந்தா மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

அனுசரணை மீறினால் மட்டுமே சில குறிப்பிட்ட சந்தா பறிக்கப்படுகிறது. பண்ணையால்.


பூர்வீக காலத்தில் ஜனநாயகம் ஆயிரம் ஆண்டுகாலம் தழைத்தோங்கியது. ஆனால் அது சாதித்தது என்ன? எந்த உரிமையை முழு முற்றாக நிலைநாட்டியது? அது உருவாக்கிய போர்த் துகள்கள் இன்னும் காற்றில் கலந்துள்ளது. அதன் அனுக்கதிர்கள் இன்னும் நம்மை ஆட்டிப்படைக்கிறது.

ஜனநாயகத்தால் அனைவருக்கும் உணவு அளிக்க முடிந்ததா? உண்ணா நோன்பு பற்றி சொன்னீரே. உணவு இல்லாமல் இறந்தவர்கள் எத்தனை என்று சொன்னீரா? ஆம் நாங்கள் பசியினை நோயாக வகைப்படுத்தி உள்ளோம். ஆகையால உணவுச் சந்தா அடிப்படை சந்தாவில் ஒன்று. ஆகையால் அந்நோய் இன்று யாரையும் பீடித்திருக்கவில்லை. சந்தா முறைமை உண்மையிலேயே வேலை செய்கிறது.


ஆயிரமாண்டுகள் நிலைநின்ற ஜனநாயகம் ஆயிரமாண்டுகளாகவே சிறுபான்மையினரின் விழுமியங்கள் பேசி வந்தது. ஏனென்றால் பெரும்பான்மையினர் உள்ளவரை சிறுபான்மையினர் இருப்பர். கொடுப்பவன் இருக்கும்வரை வாங்குபவன் இருப்பதுபோல். 

நீங்கள் கொடுப்பவராக இருந்தால் உங்கள் பார்வையில் அது உன்னதமாக இருக்கலாம். ஆனால் எங்கள் பார்வையில் அது அனுசரணையும் மீறல்தான். ஒரு கொடுப்பவன் இன்னொரு கொடுப்பவனுடன் கூட்டு சேர்வான். கூட்டு சேர்ந்த கொடுக்கும் சமூகம் அதை வாங்கிக் கொள்ளும் சமூகம் ஒன்றை உருவாக்கும். பெரும்போக்கு தனிப்போக்கு ஆகும்.”

சாஹிபின் அசௌகரியமான முகச்சுளிப்பையும் தாண்டி மார்க் சொல்லிக்கொண்டே சென்றான், “ஜனநாயகம் என்பதே திரளுக்குண்டானவை. நாங்கள் எந்தத் திரளயும் ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல. ஜனங்கள் தான் நாயகர்கள் என்கிறீர்களே. உங்கள் திரளில் எத்தனை நாயகர்கள் இருந்தீர்கள்? அல்லது அனைத்து நாயகர்களும் ஒருசேர்ந்து உங்களை ஆளும் அதிகாரத்தை ஒரு சிலரிடம் வார்த்து கொடுத்தீர்களா? உங்கள் ஜனநாயகத்தில் எத்தனை நாயகர்களுக்கு நியாயம் செய்தீர்கள்? ”

மார்க்கின் உக்கிரம் உடல் வியர்வையாக வெளிவந்து கொண்டிருந்தது. அவனது மூச்சு கனத்து வருவது வெளிப்படையாவே தெரிந்தது. அவன் மேலும் தொடர்ந்தான். “ஆனால் எங்கள் சந்தா முறைமையில் எல்லா சந்தாதாரர்களுக்கு அவர்களுக்கு உண்டான நியாயம் செய்துதான் ஆகவேண்டும். ஏனென்றால் நியாயத்திற்காக போராட அவன் ஒன்றும் குடிமகன் அல்ல. அவன் ஒரு சந்தாதாரர். சற்று சிந்தித்துப் பாருங்கள் எவ்வகையில் ஒரு குடிமகன் சந்தாதாரரை விட உயர்ந்தவன்? சொல்லப்போனால் குடிமகனுக்கு கடமைகள் அதிகம். குடும்பம் சார்ந்த குழு சார்ந்த நாடு சார்ந்த கடமை. கடமை உள்ளவனுக்கே உரிமை கொடுக்கப்பட்டது. கடமை செய்ய ஆற்றல் கோருகிறது. ஆற்றல் அற்றவர்கள் குறுக்கு வழி சேருகிறார்கள். குற்றங்கள் பெருகுகிறது. எப்படிப்பார்த்தாலும் உரிமைக்காக ஒரு குடிமகன் தன்னை விஞ்சிய செயல் செய்ய வேண்டியுள்ளது. 


ஆனால் ஒரு சந்தாதாரர் அவனது ஆதார உணர்ச்சிகளின் மேல் அமர்ந்து இருக்கிறான். அவன் செயல் செய்து பெற வேண்டிய அடிப்படை உரிமைகள் என்று பெரும்பாலும் எதுவுமில்லை. அவன் ஒரு நுகர்வாளன். உரிமைகள் அனைத்தும் சந்தா படுத்தப்பட்டுள்ளது. அவன் செய்யும் செயல் கூட சந்தா. கூடுதல் செயல் என்றால் கூடுதல் சந்தா. அனுசரணை மீறல் நடந்தால் அவனது ஆதார சந்தா பறிக்கப்படுகிறது.

ஆகையால் இங்கே குற்றவாளிகள் என்று யாருமில்லை அனுசரணை மீறர்களே உள்ளனர். அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதற்கு பதிலாக உறக்க மேடைக்கு அனுப்பப்படுகிறார்கள்.  

எப்படிப் பார்த்தாலும் குடிமகனை விட சந்தாதாரர்களுக்கு சிறந்த வாழ்வுதான்.”

சாஹிப், “போதும் நிறுத்தடா உன் பிதற்றலை” என்று பொறுமையிழந்து கத்தினார்.

மார்க்கின் தீவிரமான மனஓட்டம் சட்டென்று தடைப்பட்டதால் அவனது உக்கிரம் கண்களில் நீராக ததும்பியது, உதடுகளில் நடுக்கமாக ஆடியது, முதுகில் வியர்வையாக வழிந்தது. அவனது தடையை வலுக்கட்டாயமாக உடைக்கும் பொருட்டு அவனும், “நான் ஏன் நிறுத்தவேண்டும். இது எங்கள் காலம். இதற்கே இப்படி என்றால். நான் மேலும் சொல்லவா?” என்று தாக்குதல் தொனியில் கத்தினான்.” 

உங்கள் ஜனநாயகம் என்பது எண்ணிக்கை நாயகம்தானே. பெருந்திரள் முடிவு செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? குறுங்குழு வாதத்திரிற்கு எதிர்வினை பெருங்குழு வாதமா? சிறிய குற்றங்களைத்  தடுக்க பெருங்குற்றம் நிகழ்த்துவதா? சிறிய சண்டைகளை நிறுத்த பெரும் போர்களை நிகத்துவதா?”

சாஹிப், “எல்லாம் பொய்… பொய்.. தவறான முடிவுகள்..” என்று தடுமாறினார். “மனிதன் அடிப்படையில் முரணானவன். அவன் தன்னை நிரூபிக்கும் பொருட்டு எம்பி குதிப்பவன். செயல் புரிபவன், செயல் வடிவானவன். அவனது முரண்கள் அவனை முன்கொண்டுசெல்லும். அவனது முரண்களை குற்றமாக நீ சாடுகிறாய்.”

“குற்றமேதான். உறக்கமேடைக்கு அவனை இட்டு செல்லும் குற்றம். அப்படி முளைக்கும் முரண்களை நுகர்வின் தொழிற்நுட்பத்தின் மெய்நிகர்-உலகின் கவர்ச்சிகொண்டு தரைதட்டவைக்கும் சூக்குமம் எங்களுக்கு தெரியும். அதை சந்தாப்படுத்தி முறியடிப்போம்.” என்று வாத வெற்றி களிப்புடன் கத்தினான். அவன் கண்கள் நீர்பெருக உணர்வுவேகம் கொண்டு கத்தினான்.

“மாறாத புதிய உலகிற்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்று எண்ணாதே..” என்று சாஹிப் சொல்லிமுடிக்கும் முன்பே மார்க், “வந்து சேரும் உலகம் என்று எதுவுமில்லை. எல்லாம் கடந்து செல்பவைதான். உதறிச்செல்பவைதான்.”

சாஹிப், “ஏன் உளறுகிறாய். இது முட்டாள்தனம்…முட்டாள்தனம்.. மனிதன் முரணானவன். முரணானவன்…”

“அந்த மனிதனை உறக்கமேடை ஏற்றுவேன்.”

“அப்படியானால் என்னை ஏற்று.”

“உன்னையும் ஏற்றுவேன். உறக்கமேடைக்கு இல்லை; தூக்குமேடைக்கு. உன்னை மட்டுமல்ல இந்த உலகத்தார் அனைவரையும். நிகழ்காலத்திற்கு நியாயம் செய்யாதா நீ, கடந்த காலத்தை தூக்கி அலையச் சொல்கிறாயா. கொல்வேன்… கொல்வேன்… எல்லோரையும் கொல்வேன்…” என்று உடைந்து அழ ஆரம்பித்தான். மேஜையின் முன் அமர்ந்து தலைதாழ்த்தி தேம்பி தேம்பி அழுதான்.

சாஹிப் பதற்றத்துடன் எழுந்து அவன் அருகில் வந்து, “அழாதே.. அழாதே… என் செல்லமே.. வேண்டாமடா.. வேண்டாமடா… என்று அவன் தலையை கோதினார். மார்க் மேலும் மேலும் உடைந்து அழுதான். அழுகை உச்சம் தொட்டு கீழிறங்கியது. தேம்பல் விசும்பலாக மாறி சிறிது நேரத்தில் அமைதியானது. மார்க் மேஜைமேல் குனிந்திருக்க சாஹிப் அவன் தலையை கோதியவாறே இருந்தார்.

சாஹிபிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல், “இவ்வுலகமோ சென்ற உலகமோ நமக்கு வேண்டாம். உன் அம்மாவைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆயிற்று. அவள் எங்கே. அவளை அழை. நாம் மூவரும்..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மார்க் ஆங்காரமாக தலையையும் உடலையும் நிமிர்த்தி; ஓங்காரமாக, ” அட சண்டாளா!! உனக்கு இன்னுமா விளங்கவில்லை? பிள்ளை மனைவி உட்பட நீ எந்த சந்தாவையும் புதுப்பிக்கவில்லை” என்றான்.

One Reply to “சந்தா”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.