
சொல்வனம் இதழில் பாவண்ணனின் சிறுகதை “கனவு மலர்ந்தது” படித்தேன். வாசித்து முடித்தவுடன் ஒரு சாதாரண சிறுகதையாகத்தான் தெரிகிறது. நாடகம் என்ற கலையின் வீழ்ச்சியைச் சொல்வதாக இருக்கிறது. நாடகம் என்ற வடிவம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது; நகரங்களில் சபாக்களில் இன்னும் கூட நடத்தப்படுகின்றனவே என்று சொல்லலாம். ஆனால், பாவண்ணன் சொல்ல வருவது சாதாரண கிராமங்களில் நடத்தப்படும் நாடகங்களை என்று நினைத்து மீண்டும் ஒரு முறை கதையை வாசிக்கும்போது நம்மால் கதையின் தாக்கத்தை இன்னும் கூடுதலாக உணர முடியும். கர்நாடகாவின் பிரத்தியேக நடனக் கலையான யக்ஷகானம் என்பது இப்போது அருகி வருவதை சமீபத்திய ஒரு செய்தித் துணுக்கு மூலம் அறிய முடிகிறது.
பதினெட்டு வருடங்கள், இருபது வருடங்கள் இந்தக் கலையில் அனுபவம் உள்ள கலைஞர்கள், தற்போது நகர இளைஞர்களுக்கிடையே இந்தக் கலை மீது ஆரவமில்லையென்றும், வட கன்னட கடற்கரையோர இளைஞர்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும் இணைய வழி வகுப்பெடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள். இதைப் போல்தானே நம் தமிழகத்திலும் நாடகம் என்ற கலை அருகி வருகிறது. ஒரு பத்து இருபது வருடங்கள் முன்பு வரை கூட, கிராமப் புறங்களில் கோயில் திருவிழா என்றாலோ, ஒரு இலக்கிய வட்ட அமைப்புகள் நடத்தும் விழா என்றாலோ, அதில் நிச்சயம் ஒரு நாடகம் இடம் பெறும். அதற்கென கிராமங்களில் நாடகக் குழுவினரே இயங்கி வந்தனர். இப்படி நாடகக் குழுக்களில் இருந்து கலைஞர்கள் தேர்ச்சி பெற்று சினிமாவுக்குப் போனதுண்டு. கிராமங்களில் சினிமா என்பது பிரபலமாகாத போது நாடகம் என்பதே அவர்களுக்குப் பொழுது போக்காக இருந்திருக்கிறது. காலம் போகப் போக, சினிமா என்பதன் பிரம்மாண்டம் அதிகரிக்க அதிகரிக்க இந்த நாடகங்களின் மேல் இருந்த ஈர்ப்பு என்பது குறைய ஆரம்பித்து விட்டது. இது நாடகக் கலையின் சரிவின் தொடக்க காலம். கிராமங்களில் கூட சினிமாப் படல்களுக்கு ஆடுபவரையோ, அல்லது சினிமாப் பாடல்கள் பாடும் குழுவையோ வைத்து நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
“கனவு மலர்ந்தது” என்ற நாடகத்திற்கான தயாரிப்போடு வரும் ஒரு நாடகக் கலைஞரின் கனவுகள் சிதைந்து போவது என்ற அழகான முரண் தொனிக்கும் கதை பாவண்ணனுடையது. சினிமா என்ற பிரம்மாண்டத்தைப் பார்த்து நாடகம் என்பது துச்சமாக மதிக்கப்படுகிறது. ஒரு சினிமாவிற்கு நடிக, நடிகையரைத் தேர்ந்தெடுக்கப்படுவதை விடவும், எந்த விதத்திலும் குறைவில்லாதது ஒரு நாடகத்திற்கான கலஞர்களைத் தேர்ந்தெடுப்பது. வேலாயுத அண்ணனும், சோமுவும், ஒவ்வொரு பாத்திரத்திற்கும் மேலையில் நடிக்க கலைஞர்களை தேர்வு செய்வது, பாடல் எழுத, இசை அமைக்க என்று ஒவ்வொன்றிற்கும் அந்தந்த கலைஞர்களைத் தேடுவது என ஒரு சினிமா தயாரிப்பதற்கான வேலைகளில் சற்றும் குறையாதவை. சாதாரண எடுபிடி வேலை செய்யும் ஒரு சாதாரண வேலையாளை, அவன் பேசும் விதத்தை வைத்து அவனால் செய்ய முடியும் என்பதால் அவனுக்கு ஒரு சிறிய பாத்திரம் அளிக்க முடிவு செய்வது என ஒவ்வொரு திட்டமிடலையும் பாவண்ணன் வர்ணித்துக் காட்டுவது கதைக்கு மெருகூட்டுவது. இவ்வளவு உழைப்பும் ஒரு துளிக்கூட மதிக்கப்படாமல், ஒரே வார்த்தையில் நாடகம் வேண்டாம், ரெக்கார்ட் டான்ஸ்தான் நடத்தப் போறோம் என்ற வார்த்தைகளை எதிர்கொள்ளும்போது, நாடகக் கனவு சரிந்து போவது, ஒரு சோமு, வேலாயுதன் சார்ந்த விஷயமனிறு.இன்று சரிந்து போயிருக்கிற எத்தனையோ கிராமியக் கலைகளின் சரிவையே நம் கண் முன் நிறுத்துகிறது. மயிலாடுதுறைக்கருகே இருக்கும் பொம்மலாட்டக் கலைஞர்களும், புதுக்கோட்டைக்கருகே இருக்கும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களும் என பல கிராமியக் கலைகள் வரவேற்பு இல்லாமல் நசித்துப் போயிருப்பதை நாம் விரிவு படுத்திப் பார்க்கலாம். இந்தல் கலைகள் இப்படி நசித்துப் போனதால், இதை நம்பி வாழும் எத்தனை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் கதையின் வழியே விரிவுபடுத்திய பார்வையாகக் காணலாம்.
இது போன்ற கலைகள் வரவேற்பு இழந்ததானால், இதை நம்பி வாழ்க்கை நடத்த முடியாது என்பதை கதை மறைமுகமாகச் சொல்லுகிறது. சோமு, தன்னுடைய வாழ்க்கைக்காக ரைஸ்மில் வைத்து நடத்துகிறான். வேலாயுதன் அண்ணன் பெங்களூரில் ஒரு வேலையில் இருக்கிறார். கதைக்கு நாயகி தேடும்போது கிடைக்கும், தேவிகா மற்றொரு நாடகக் குழுவில் நிரந்தரக் கலைஞர். ஆனால், நாடகத்திற்கான தேவைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படாததால் அந்தக் குழுவே கலைக்கப்பட்டு விட்டது. அந்த அம்மா,. ஒரு கைக்குழந்தையோடு, குறைந்த பொருளாதார வசதியோடேதான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். இதை பாவண்ணன் நேரடியாக சொல்லவில்லை. அந்த அம்மா ஏதாவது அட்வான்ஸ் கொடுக்கச் சொல்லி கேட்கும்போது அது நமக்குப் புரிந்துவிடுகிறது.
ஒரு கலையை நம்பி மட்டும் வாழ்க்கையை நடத்திவிட முடியாது என்பதே இன்றைய சூழலாக இருக்கிறது. நாடகம் மட்டுமே தொழிலாகக் கொண்ட “மாடப்புறா” நாடகக் குழு கலைக்கப்பட்டு விட்டது. இப்போது நாடகம் நடத்த விரும்பும், வேலாயுதன் அண்ணன் பெங்களூரில் வேலையில் இருப்பவர். சோமு ஒரு ரைஸ் மில் ஓனர். பாட்டெழுதுபவரின் மனைவி ஏதோ ஒரு பால் வாடியில் வேலையில் இருக்கிறார்,( குடும்பம் நடத்த). இப்படி தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு ஏதோ ஒரு வேலையை வைத்துக் கொண்டு, நாடகத்தின் மேல் கொண்ட ஆசையினால் மட்டுமே, அந்தக் கலையை சாக விடக் கூடாது என்ற பிடிமானத்தினால் மட்டுமே, அழைப்பு இருக்கிறதோ இல்லையோ, சித்திரை மாதத்தை மட்டுமே ஞாபகம் வைத்துக் கொண்டு, கையில் தயாராக ஒரு ஸ்கிரிப்ட்டுடன் வரும் வேலாயுதன் அண்ணன் நாடகக் கலையைத் தாங்கிப் பிடிக்க நினைக்கும் பலரின் ஒரு படிமம் எனக் கொண்டால், அந்த நாடகம் வேண்டாம் என்று மறுக்கும் கோவில் தர்மகர்த்தா, சினிமா மோகத்திலும், ஆடம்பரத்திலும் மூழ்கிக் கிடக்கும் நிகழ்கால சமூகத்தின் ஒட்டு மொத்தக் குரலாகவே நம் காதில் ஒலிக்கும்.
இப்படி நாடகக் கலையின் சரிவை பாவண்ணன் மிக எளிய நடையில் கதையாக வடித்திருக்கிறார். அதோடு, பாவண்ணனுடைய சில வரிகள் மனம் நொந்து போயிருக்கும் வாசகனுக்கும் உத்வேகமூட்டும்.
“சினிமாவுல பூந்து ஒரு முட்டு முட்டிருக்கணும்னே,” என்று சோமு சொல்லும்போது, வேலாயுதன் அண்ணன்,” பசுமாடு கன்னுக் குட்டியத்தான் ஈன முடியும்; ஆனக் குட்டிய ஈன முடியுமா? ஒண்ணொண்ணுக்கும் ஒரு கணக்கு இருக்குது.”
”நாடகம்கறது ரெண்டு மூணு பேரு நின்னு ஜெயிக்கற இடம்; சினிமாங்கறது குருஷேத்திரம்; வெறும் அஞ்சு பேரு ஜெயிக்க பதினோரு அக்ரோணி சேனைங்க சாவணும்.”
இந்த வரிகள் நாடகம் விட்டு சினிமா மோகத்தில் இருப்பவர்களுக்குச் சொல்லப்பட்ட வரிகளானாலும், வாழ்க்கையில் கூட அவரவர்க்கு என்ன முடியுமோ, அதை மட்டுமே அவரவர் செய்ய முடியும் என்பதையும் வாசகர் உள்பார்வையாக பார்க்க முடிகிறது.
கதையின் முடிவில், தர்மகர்த்தா திரும்பிச் செல்வதும், சோமு, வேலாயுதன் அண்ணனிடம் நாடகம் வேண்டாம் என்ற விஷயத்தைச் சொல்ல உள்ளே நுழையும்போது, வேலாய்தன் அண்ணன் படியிறங்கினான் என்ற வரிகள் அவருடைய மொத்த நாடகக் கனவுகளும் சரிந்து இறங்குவதை மிக அழகாகக் காட்சிப் படுத்தப்பட்டிருப்பதாகவே இருக்கிறது. பாவண்ணன், நிதர்சன வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எளிய மனிதர்களைப் படைத்துக் காட்டுவதில் வல்லவர். இந்தக் கதையிலும் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
பாவண்ணனின் கதைக்கு ஜெயஸ்ரீயின் விமர்சனம் படித்தேன். முழுக்கப் பாராட்டு விமர்சனமாக உள்ளது. கதை சொல்லவந்ததை நன்கு சொல்லியிருக்கிறது என்பதைவிட கதையில் யதார்த்தமே இல்லை என்பதைக் கூறத்தான் வேண்டும்.
இன்றைக்கு நாடகக் கலை அழிந்து வருகிறது என்பதை நாமறிவோம், அதேபோலத்தான் பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, கரகாட்டம் போன்றவையும்.. எல்லாமே மாறி வரும் சூழலில் நாடகக் காரர்களும் பெரும்பாலும் இன்று மாறித்தான் விட்டார்கள். தெருவில் இப்பொழுது பகல்வேஷக்காரர்களைக் காணவில்லையே. பூம் பூம் மாட்டுக்காரர்கள், குரங்காட்டிகள் எல்லாரும் எங்கே போனார்கள்? எல்லாரும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு வேறு தொழிலுக்குத் தாவி விட்டார்கள்.
எனவே, “சரிதாம்பா’; நம்ம குலத்தொழிலே நம்மைக் கைவிட்டிடுச்சு. இனிமே வேற தொழிலுக்குப் போனாத்தான் பொழைக்க முடியும்” என்று கூறுவது போல முடித்திருந்தால் அதுதான் யதார்த்தம். அது மட்டுமன்று.; நாட்டுப்புறக் கலைகளை அழித்து வரும் இச்சமுதாயத்தின் மீது விழும் சம்மட்டி அடி..