இலக்கியத்தில், தொலைபேசிக்கு ஓர் இரங்கற்பா

புனைவுகளில் வியப்பு நிறைந்ததாகவும், எதிர்பாரா திருப்பங்களைக் காட்சிப்படுத்தவும், மர்மம் கலந்த பரபரப்பிற்காகவும் இடம்பெற்ற தொலைபேசிகளின் மரணம் குறித்த ஒரு விசனம்!

தமிழில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கு ப ராஜகோபாலன் ஒரு சிறுகதை (விடியுமா?) எழுதியுள்ளார். கதை சொல்லியின் அக்கா கணவர் உயிராபத்தில் இருப்பதாக சென்னைப் பொது மருத்துவமனையிலிருந்து வந்த தந்தி, அதை ஒட்டிய மன ஓட்டங்கள், அவர் நன்றாகத்தான் இருப்பார் என்றும், இல்லை பின் ஏனிப்படி தந்தி வருகிறதென்றும் சிந்தனைகள். அக்காவும் அவரும் கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் பயணிக்கும் அந்த இரவு. இருள் தந்த நம்பிக்கையும், ஊசலாட்டமும், ஒளியில் சந்திக்கும் உண்மையும், அதனூடாக எழும் விரக்தியான அமைதியுமாக அந்தக் கதை காலத்தை வென்ற ஒன்று. இப்போது தபால் தந்தி இலாகாவிலிருந்து தந்தி பிரிந்து எங்கோ கரும் துளைக்குள் போய்விட்டது.

இனி சோஃபி ஹேனி (Sophie Haigney) எழுதிய கட்டுரையைப் பார்ப்போம்.

“தொலைபேசி ஒலித்தது; அதுவும் அகாலத்தில்.” 1948-ல் ந்யூ யார்க்கரில், விளாடிமிர் நபோகோவ் (Vladimir Nabokov) எழுதிய ‘Symbols and Signs’ என்ற சிறுகதையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாக்கியங்கள் செயல்பாட்டு ரீதியாக, திறமையான ஒரு கதையைக் காட்டுகிறது. தங்கள் மகனின் உடல் மற்றும் மனநிலையைப் பற்றி வருந்தும் ஒரு முதிய தம்பதியைச் சந்திக்கிறோம். மகனது பிறந்த நாள் என்பதற்காக, அவன் காச நோய்க்கு சிகிச்சைபெறும் மருத்துவமனைக்கு, அவர்கள் அன்று காலையில்  சென்றிருந்தார்கள். அவன் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தான் என்றும் அவனை இப்போது பார்ப்பது அவ்வளவு சரியில்லை என்றும் அவர்கள் சொல்லவே, மௌனமாக வீட்டிற்குத் திரும்பி விட்டார்கள். அவனை நாளை அங்கிருந்து அழைத்து வந்துவிட வேண்டுமென அவர் நினைக்கிறார். அப்போது தொலைபேசி ஒலிக்கிறது. ஒரு சிறு பெண் பேசுகிறாள். அவர் மனைவி ‘தவறான எண்’ என்று சொல்லித் துண்டிக்கிறார்; மீண்டும் மணி ஒலிக்கிறது. அவர் மனைவி பொறுமையாக ‘நீ ‘ஓ’வை அழுத்துகிறாய், பூஜ்யத்திற்குப் பதிலாக’ என்று சொல்கிறார். மகனுக்கு வாங்கியிருந்த பரிசுப் பொருளைப் பார்க்கிறார்கள். மீண்டும் மணி அடிக்கிறது என்று அந்தக் கதை முடிகிறது.

எத்தனையோ காரணங்களுக்காக நான் இந்தக் கதையை நினைவில் வைத்திருந்தாலும், அந்தச் சூழல் நிசப்தத்தில் ஒலிக்கும் தொலைபேசியின் ஓசை என்னை ஈர்க்கிறது. ஒரு தொலைபேசி செய்யும் வித்தைகள்- நாடகத்தனமான திருப்பங்கள், அர்த்தங்களின் உள்ளீடு, அழைப்பை ஏற்றுப் பதிலளிக்கும் முன்னரே  சாவின் நிழலோ என தகிக்கும் மனம் போன்றவையோ? நிலத்தடித் தகவல் வடம் (நம்ம தொலைபேசி தானுங்க) மர்மத்தின் கூறாகவும், சின்னதும் பெரியதுமான நிகழ்வுகளின் ஊற்றாகவும் இருக்கிறது. அது, வெளியுலகின் சத்தங்களை அமானுஷ்யமாக அறைக்குள் கடத்தும் கருவி. புனைவுலகில், அது கொண்டாடப்பட்டும், மெதுவாக மறைந்தும்கொண்டிருக்கும் கருவி. புனைவின் சாத்தியங்கள் நிறைந்தது. அதில் அழைப்பது யாராகவும் இருக்கக்கூடும்!

19-ஆம் நூற்றாண்டில் அது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதை வஞ்சகக் கருவி, அதன் மூலம் விதி அழைக்கிறது என்றே காட்சிப்படுத்தினார்கள். காஃப்காவிற்கு (Franz Kafka) தொலைபேசியிடம் பயமே இருந்தது; முடிக்கப்படாத அவரது இறுதி நாவலான ‘The Castle’ உட்பட இது கொடுங்கனவுகளைச் சொல்வதாகத்தான் அவர் எழுதினார். தனது ‘My Neighbour’ என்ற சிறுகதையில் இளம் வியாபாரி ஒருவர், தனது வர்த்தகப் போட்டியாளர் சுவரின் மூலம் தன் பேச்சுக்களைக் கேட்கிறார் எனப் பயப்படுகிறார். இந்த விரக்தித் தவிப்பிற்கு அவரது தொலைபேசி ஒரு குறியீடு. கதையின்  முடிவில் அவர் சொல்கிறார்: “நான் சில நேரங்களில் ஆடிக்கொண்டும், ஒலி வாங்கும் பகுதியைக் காதில் வைத்துக்கொண்டும், அச்சம் என்னை உந்தித்தள்ள, என் விரல் நுனிகளால் நடந்தும்கூட என் இரகசியங்கள் வெளிப்படாமல் இருப்பதில்லையே!”

தொலைபேசிகளின் மைய குணம என காஃப்கா இதைக் காண்கிறார் – அது ஒருவர் பேசவும், பேச்சைக் கடத்தவும் அனுமதிக்கும் அதே நேரம், ஒருவர் நிலைகுலையவும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளால் அலைக்கழியவும் அனுமதிக்கிறது. அதன் இக்குணம், அமானுஷ்யத்தின் வெளிக்கு அதை நகர்த்துகிறது.

1959ல் வெளிவந்த ‘Memento Mori’ யில், Muriel Spark (ம்யூரியல் ஸ்பார்க்) தொலைபேசி அழைப்பை மையக் கருவெனக்கொண்டு கதை அமைத்தார்.  எங்கிருந்தோ வரும் மர்மம் அவிழாத  தொலைபேசிக் குரல் அதன் பாத்திரங்களிடம், “நினைவு கொள்; நீ இறக்க வேண்டும்,” என்று சொல்கிறது. அது கடவுளோ? ‘In Search of Lost Time’ மூன்றாம் பகுதியில் Marcel Proust (மர்கெல் பூரிஸ்ட்) தொலைபேசி இயக்குபவர்களை, “பார்க்காதவற்றின் அரூபங்கள்”, “துக்கத்தின் வேலைக்காரர்கள்” மற்றும் “புலப்படாத பெண் பாதிரிகளின் நிழல்” (இது எனக்குப் பிடித்த உவமை) என்று சொல்கிறார். (Lolita) லோலிதாவில் ஹம்பெர்ட் (Humbert) சொல்வதாக வருவது: “புரிய இயலா விதத்தில் என் கழிப்பறையும், என் தொலைபேசியும் என் விதி சமைக்கப்படும் இடங்களாக இருக்கின்றன.”

தொலைபேசி என்பது, காஃப்காவும் நபகோவும் காண்பதுபோல ஒரு சகுனமோ, சந்திக்கும் தளமோ இல்லை. அது ஓர் அழுத்தமான சமூக இணைப்பும்கூட. அதன் உள்ளார்ந்த “பொது” தன்மை ஒரு அழைப்பை , அதிசயமான வேடிக்கையாக மாற்றக்கூடியது. ஆனால், அக்கருவியின் நகரமுடியா தன்மையிலும் ஏதோ இருக்கிறது. அசையாமல் ஓர் இடத்தில் இருப்பது, யாரென்று தெரியாத  அனாமதேய அழைப்புகள் ( காலர்-ஐடி காலத்திற்குமுன்), – இவை, எழுத்தாளர்களுக்கு மர்மப் புனைவுகளுக்கான சோதனைக் களங்களை அமைத்துக்கொடுப்பன.

1939-ல் வெளிவந்த ஹென்ரி க்ரீனின் அருமையான நாவல் ‘Party Going’  பெருமளவில் தொலைபேசியை மையமாகக் கொண்டிருக்கிறது. பெரும் செல்வந்தனான, விரும்பத்தகுந்த, புதிரான மேக்ஸ் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள லண்டனிலிருந்து கான்டினென்ட் செல்லும் சில இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் இதில் சொல்லப்படுகின்றன. லண்டனில் ஏற்படும் பனிப்பொழிவின் காரணமாக அவர்களின் புகைவண்டி  தாமதமாகிறது. அவர்கள் ரயில் நிலையம் அருகில் ஒரு விடுதியில் தங்க நேர்கிறது. கதை இந்தப் பயணிகள் ஒவ்வொரு அறைக்குச் செல்வதையும், பேசுவதையும், அந்தப் பேச்சுக்கள் தொலைபேசியின் வாயிலாக அவ்வப்போது வரும் செய்திகளைப் பகிர்வதுமான கட்டுக்கோப்புடன் சீராக வளர்கிறது. அழகான, ஆதிக்கம் செலுத்தும் தன் காதலி அமபெல்லால் தன்னைத் தொடர்புகொள்ள இயலாது என்று மேக்ஸ் நினைக்கிறான்; கிளம்புவதற்கு முன்னர் தான் தொலைபேசியில் அவளுடன் விவாதம் செய்திருக்கிறான். அவன், தன் குழுவிலிருக்கும் இன்னொரு பெண்ணான ஜூலியா ரே-யைக் காதலிக்க நினைக்கிறான். புத்தகம் முழுவதும், தொலைபேசி ஒரு கலைச் சின்னமாக, மாறாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் விவாதங்கள் செய்துகொண்டும், உல்லாசமாகப் பேசிக்கொண்டும் இருக்கும்போது, அவர்கள் எந்த முக்கியமான அழைப்புக்காக காத்திருக்கிறார்களோ, ரயில் எப்போது கிளம்பும் என்ற அந்தத் தகவலைத் தெரிவிக்கக்கூடிய கருவியாக இருக்கிறது.

ஒரே நேரத்தில் அறிந்துகொள்ளவும், அறிந்துகொள்ள முடியாமலும், அணுகக்கூடியதும், அணுக இயலாததுமான ஒரு ரீங்காரத்தைச் சுற்றிக் க்ரீன் தன் கதை மாந்தர்களை நடமாட வைத்துள்ளார்.

தொலைபேசி தரும் அந்த நாடகம் – பொது மற்றும் தனிப்பட்டதன் ஊடாட்ட விளையாட்டு – யார் எடுப்பார்கள்? அவர்கள் என்ன அறியக்கூடும் என்பதே. தெசா ஹேட்லியின் (Tessa Hadley) முதல் நாவலான  ‘Accidents in the Home’- மில் அதன் முதன்மைக் கதாபாத்திரம் க்ளியர் (Clare); அவர்களுடைய குடும்பம் அயர்லாந்தில் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டிலிருந்து, நாணயம் செலுத்தி இயங்கும் தொலைபேசியின் மூலம் தன்னுடைய மிக நெருங்கியத் தோழியின் ஆண் நண்பனும், பின்னர் தன் எதிர்காலக் காதலனாகக் கூடிய டேவிட்டை இவள் அழைக்கிறாள்; ஆடைகள் வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து, தன் குழந்தைகளின் மேலாடைகள் உரச அவள் செய்யும் முதல் அழைப்பு இது; ஆனால், டேவிட் இதை எடுக்கவில்லை – மாறாக இவளது தோழி எடுக்கிறாள். ஒரு நொடி தங்கள் இருவருக்கும் நடக்கக்கூடிய உரையாடலை, குடும்பத்துடன் கொண்டாடும் விடுமுறையை இவளின் அழைப்பு ஆர்ப்பரித்து இடையூறு செய்வதாகக் குற்றச்சாட்டு எழலாம் என நினைக்கிறாள். இத்தகைய அழைப்புகளின் நீள்வரிசையில் ஒன்றென இவளது தோழி நினைக்கலாம்; ஆனால், ஹெலி, இவளது தோழி, டேவிடின் எண்ணை இவளிடம் தந்ததில்லையே? அந்த எண்ணில் ஏன் அழைத்தாள்? இவள் அழைப்பைத் துண்டித்தாலும், இவளது தோழி,  திரும்ப அழைக்கும் வசதியைப் பயன்படுத்தி எண்ணைப் பெற்றுவிடும் சாத்தியங்கள் தன்னை வெளிப்படுத்திவிடும் என்றும் இவள் சிந்திக்கிறாள். அது சர்வதேச அழைப்பு என்று ஹெலிக்குத் தெரிந்தால், அவளைப் பொருத்தவரை இவளது நட்பு முடிவைச் சந்திக்க நேருமே? இவள் அழைப்பைத் துண்டித்து விடுகிறாள் – அந்தத் தொலைபேசியின் தொனியைக் கேட்டுக்கொண்டு அமர்கிறாள் – அதன் வழியே எது நடந்ததோ அதன் அதிர்வுகளைக் கேட்கக்கூடும் என்பதைப்போல.

புனைவுகளில் தொலைபேசியின் ஆதிக்கம் குறைந்தது, நம் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட ஒன்றுதான். ஐம்பது விழுக்காடுகளுக்கு மேற்பட்ட அமெரிக்கக் குடும்பங்களில் தொலைபேசி இணைப்புகள் கிடையாது. 25லிருந்து 34 வயதிற்குபட்ட இளைஞர்களில் இது 75%. பின்னிரவில் அச்சுறுத்தும் விதமாக மற்றைய அறையில் தொலைபேசி ஒலிப்பதில்லை; அது இரவு தாங்கியில் அழைப்பவர் எண் பளிச்சிட ரீங்கரிக்கிறது. புனைவுகளில், மனிதர்களைப் போல, கதாபாத்திரங்களும் நெருங்கக்கூடியவைகளே. அலைபேசிச் செய்திகள் புதுவிதமான, இடைபுகும் தன்மையால், தொடர்பு கொள்வதில் உதவுகின்றன; பார்க்கப் போனால், ‘பார்டிக்குப் போகிறேன்’ என்று சொல்லும் அழைப்புகளுக்கு இன்று தேவையே இல்லை. தெருவிலோ, வீடுகளிலோ, ஒரு நிரந்தரப் பொருத்து இடம் தேவைப்படாத  தன்மையினால் அலைபேசிகள், தொலைபேசிகளைவிட நெருக்கமானவை, அந்தரங்கமானவை. நவீன வாழ்வின் ஒருவிதக் களங்கமாகக் கருதப்பட்டாலும், சமூக வலைத்தளங்களின் இழுபறி உட்பட, குறுஞ் செய்திகளின் உணர்ச்சி நிருபங்கள் என அலைபேசிகளும், நாடகத்தில் பங்கேற்கின்றன. இவைகளுக்குப் புனைவுகளில் நிச்சயமாகச் சிறந்த இடம் கிடைக்கவேண்டும். லாஸ் ஏஞ்செலிஸ் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் (Los Angeles Review of Books) பக்கத்தில் ஸ்டீபன் மார்க்கே (Stephen Marche) எழுதிய அருமையான கட்டுரையில் குறிப்பிடுகிறார்: “எழுத்தாளர்கள் அலைபேசிகளைக் கதையில் கொண்டுவருகையில் அதைச் சூடான உருளைக்கிழங்கு என்றே கையாள்கிறார்கள் – ஒரு சிறுகதையில் இணக்கமான நெருக்கமான வாழ்வைப் பற்றிச் சொல்கையில், திறன் அலைபேசியைப் பற்றிச் சொன்னால், அந்தக் கதையின் கரு, திறன் கைப்பேசி ஆகிவிடுகிறது.

புனைவுகளின் கட்டமைப்பு வழக்கத்திற்கோ, அல்லது அது எவ்வாறு இருந்ததோ அவற்றிற்குச் சவால்விடும் வகையில் அலைபேசிகள் இருப்பது சில அசௌகர்யங்களை ஏற்படுத்தலாம். ஜே.எம் கட்ஸி (J M Coetzee) மற்றும் பால் ஆஸ்டர் (Paul Auster) இருவருக்கும் இடையே ‘ஹியர் அன்ட் நௌ’ என்ற கடிதப் பரிமற்றங்களின் தொகுப்பில் இருவரும் தங்கள் நாவல்களின் உருவாக்கத்தை அலைபேசிகள் எவ்வாறு வழிநடத்தின என்று சொல்கிறார்கள்.

இத்தகையக் கருவிகளைத் தன் படைப்புகளில் தவிர்த்ததைப் பற்றியும் ‘21-ம் நூற்றாண்டின் புனைவெழுத்தாளனான தான் அதன் மின்னணுக் கருவியான திறன் அலைபேசியை, உரையாடும் அதன் வசதியைத் தொடாமல் எழுதி வந்துள்ளேன்’ என்கிறார் கட்ஸி. ஒரு கதையின் திருப்பத்தில் அது கொண்டுவரும் சாத்தியங்களை, ஒரு தகாத உறவைச் சொல்லும் நாவலில் அது, குறிப்பாக நாவலின் போக்கை அது எப்படி மாற்றும் என்றும் அதிசயிக்கிறார். ஐஃபோன் வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் எழுதிய கடிதத்தில் “நேற்றோ, இன்றோ, நாவல் எழுதும் நுணுக்கங்கள், கதை மாந்தர்களுக்குத் தகவல் கிடைக்கச் செய்வதிலோ அல்லது கிடைக்காமல் செய்வதிலோ, ஓர் அறையில் அவர்களைக் குழுமச் செய்வதிலோ அல்லது தனித்தனியே வைப்பதிலோ இருக்கிறது.  ஒவ்வொருவருக்கும், சற்றேறக்குறைய மற்றொருவருடன் மின்னணுச் சாதனத் தொடர்பு  உடனடியாகக் கிட்டுமானால், கருவினை அதைச் சுற்றி அமைப்பதன் பொருள்தான் என்ன?”

‘நல்ல கேள்விதான்; சற்று கிறுக்குத் தனமானது.’ “ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவரையும் தொடர்புகொள்ளும் வசதி இருந்தாலும், அது துண்டுபட்ட, தற்போதைக்கான வழிதான்” என்று ஆஸ்டர் பதில் சொகிறார். இது இன்றைய தகவல் பரிமாற்றத்தை மிகச் சரியாகச் சொல்கிறது; நிலையானது, நுண்ணிய துளைகள் கொண்டது,  குறைந்த திடமற்ற தன்மையினால் உறுதியற்றது. ஆனாலும், கட்ஸியின் கவலைக்கு இடமிருக்கிறது. ஒரு தொலைபேசி உருவாக்கும் முக்கியமான குறுக்கீட்டுத் தடுப்பான்களை அலைபேசியால் நிகழ்த்த முடிவதில்லை. அது புனைவுலகின் மனிதர்களை நம்பத்தகுந்தத் தொலைவில், தகவல் பரிமாற்றம் செய்ய இயலாமல், அதன் பிறகு ஒரு பெரும் வெடிப்பாக இணைக்கிறது. செய்திகளை மறைக்கவும், வெளிப்படுத்தவும் உதவுகிறது. எதிர்பாராத ஒன்று அறையினுள் நுழைய அது அனுமதிக்கிறது.

‘நிலையற்றது’ என்பவை புனைவுகளின் கவர்ச்சி. ஒரு நாவலை ஆர்வமுடன் படிக்கத் தூண்டுவதும் அதே. ‘நிலையற்ற உலகில்’ நம்மை நுழையச்செய்கிறது. என்னவென்று தெரியாவிட்டாலும் ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்ற உணர்வு உண்டாகிறது. நாம் கற்பனை செய்தது, கண்முன்னே விரியக்கூடும் என உறுதி அளிப்பது. நிலையற்ற இவைகளின் உருவாக்கத்தில், எப்போதும் சில நிலைப் பொருட்கள் தேவையாகின்றன – நின்றுவிட்ட கார், அழைப்பு மணி, பிரிக்கப்படாத பார்சல். இவைகளில் தொலைபேசி ஒரு மிகச் சிறந்த இடத்தை வகிக்கிறது. அதன் அந்தி நேரத்தில், நபோகோவைப் போல, அது ஒலிக்கும் சாத்தியங்களை நினைக்கலாம்.

நான் பார்த்த, கேள்விப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில், தொலைபேசி முக்கிய இடம் வகித்திருக்கிறது. சந்திப்போமா, இனி சந்திப்போமா என்ற சோகத் தொனியிலான காதல் பாடல் டெலிஃபோனில்; ஹலோ, மை டியர் ராங்க் நம்பர் என்பதும் அதே வகை; பாலசந்தரின் அழகனில் இரவு முழுதும் காதல் உரையாடல் தொலைபேசி மூலமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பின்னணியோடு; அதில் மிகுந்த சுவாரஸ்யம், அதை ஒட்டுக் கேட்கும் ஒரு கதாபாத்திரம். தொலைபேசி சரியாக இயங்கவில்லை என்று தாரை தப்பட்டையுடன் அதற்கு இறுதி ஊர்வலம் அனேகமாக அனைத்து இந்திய மாநிலங்களிலும் நடந்தது. தொலைபேசியை ஒட்டுக் கேட்டார்கள் என்று பல கட்சித் தலைவர்கள் புகாரளித்துக்கொண்டே இருக்கிறார்கள். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் டவர் இல்லாத சந்தர்ப்பங்களில் தொலைபேசியின் கம்பிகளை உபயோகித்து எவ்வாறு அலைபேசிகளை இயக்கலாம் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.  ரிஸீவரைப் பட்டென்று வைக்கும் வசதி, திறன்பேசியில் இல்லை என்பது என்னைப்போல் கையாலாகாக் கோபம் கொள்வோருக்கு பெரும் இழப்பு.

காலம் செய்த கோலமடி, அறிஞர் செய்த குற்றமடி !

***

சோஃபி ஹேனி (Sophie Haigney) எழுதிய கட்டுரை:

https://www.newyorker.in/books/page-turner/on-elegy-for-thelandline-in

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.