அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா?

நான் சென்னை  செல்லும்போதெல்லாம்  எனது  மச்சினியின்  கணவருடன்  வேதாந்த உரைகளைக் கேட்கச் செல்லும் வழக்கமுண்டு. பரமார்த்தானந்தாஜியின் உரைகள் எங்கள் இருவருக்குமே பிடிக்கும். ஒரு சமயம் நான் முன்னே கேட்டிராத விசார சாகரம் எனும் வேதாந்த நூலின் விளக்க உரையில் ஒரு பகுதியைக் கேட்க நேர்ந்தது. முற்பகுதிகளைக் கேட்டிராததால் முதலில் புரிவது கடினமாக இருந்தாலும் கேட்ட  விளக்கம் கரும்பாக இனித்தது. ஊர் திரும்புமுன் எனது ஆர்வத்தை பார்த்த எனது மச்சினி, அவருடைய முதல் 75 உரைகள் அடங்கிய குறுந்தட்டைக் கொடுத்தனுப்பினார்.

எனது ஆர்வம் இவரது பேச்சுகளைக் கேட்பதோடு நில்லாமல், அவரது சொற்பொழிவுகளில் ஒலி நாடாவிலிருந்து எழுத்து வடிவில்  கணினியில்  பதிவானதை  நகலெடுத்துப் படிக்கும் அளவிற்கு  வளர்ந்திருந்தது. முதல் உரையிலேயே பரமார்த்தானந்தாஜி  இந்த நூல் வேதாந்த நூல்களின் சிகரமாயிருந்தாலும் புரிவது கடினமாயிருப்பதால் இதைக் கேட்க விருப்பமில்லாமல் நின்றுவிட்டாலும்  நான்  கவலைப்படமாட்டேன் என்று  சொல்லியே 
ஆரம்பித்துள்ளார். அத்வைத வேதாந்தத்தில் சிறிதளவு ஆர்வமிருந்ததாலும், முக்கிய அத்வைத வேதாந்த நூல்களைப் பற்றிய கேள்வி ஞானமிருந்ததாலும் இந்த  முக்கியமான நூல் எவ்வாறு  என் கவனத்திலிருந்து தப்பியது என்று என்  மனத்தில் ஓர் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. சமீபத்தில், நான் படித்த ஒரு கட்டுரை  இதற்கான  காரணங்களுக்கு ஒரு  கோடி  காட்டுவதோடல்லாமல் இதைப்  போன்ற  வேதாந்த  நூல்களை மீண்டும்  உயிர்ப்பிப்பதற்குக்   கையாள வேண்டிய சில வழிகளையும் கூறுகிறது.

விசார சாகரம் நூலையோ, அதன் ஆசிரியர் நிஸ்சலதாஸ் (1791-1863) என்பவரையோ,  அத்வைதத்தில்  மிகுந்த  ஈடுபாடு  உள்ளவர்கள்கூடத் தற்போது அறிந்திருப்பதாகத்  தெரியவில்லை. ஆனால் விவேகானந்தர், நிஸ்சலதாஸரின்  விசார சாகரத்தைப்போல்  கடந்த  முன்னூறு  ஆண்டுகளில்  வேறெந்த நூலும் இந்தியாவில் இத்தகைய செல்வாக்குடன் இல்லையென்று கூறியுள்ளார். 300  ஆண்டுகள் கொடிகட்டிப்  பறந்த  ஓர் அத்வைத வேதாந்த நூல், 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேதாந்த வட்டாரங்களிலேயே முக்கியத்துவத்தை இழக்கக் காரணம், நூலா அல்லது அத்வைதத்திலுள்ள  பற்றுக்குறைவா என்பதைப் பிறகு பார்ப்போம்.

நிஸ்சலதாசர்  இந்நூலை  இந்தியில்  எழுதியதற்கு  முதல்  காரணம், அத்வைதத்தின்  அருமையும், அதன் உண்மையும் சாதாரண  ஜனங்களையும் சேர வேண்டும் என்பதேயாகும். மேலும், ஹிந்தி  மொழியில்  தேர்ச்சி  பெற்றவர்கள்  வேதாந்த  சாஸ்திரத்தை  நன்கறிந்தவர்களாக இல்லாததால்  வேதாந்தப்  புத்தகங்கள்  தரமானதாக  இல்லை  எனும்  குறையை  நிவர்த்திப்பதற்காகவும்  எழுதப்பட்ட புத்தகம் இது.

சுமார் 300 பக்கங்களைக் கொண்டது. ஹிந்தியில்  பல பதிப்புகளைக்  கண்ட  இப்புத்தகம்  பல இந்திய  மொழிகளிலும் , ஆங்கிலத்திலும் பலமுறை பல்வேறு ஆசிரியர்களால் மொழி பெயர்க்கப்படும் அளவிற்குப் பிரபலமாயிருந்த  புத்தகம். ஹிந்தியிலிருந்து சம்ஸ்க்ருத மொழியில்  வஸுதேவ  ப்ரமேந்திர சரஸ்வதி என்னும் மஹானால் எழுதப்பட்ட நூலைத்தான் பரமாத்மானந்தாஜி அவரது விளக்கவுரைக்குப் பயன்படுத்துகிறார்  1893ல் சிவராவ் அவர்களால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வேதாந்த சாஸ்திரத்தின் அனைத்துப் பகுதிகளையும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தகுதியுள்ள குருவிடமிருந்து இக்கையேட்டைக் கற்றுணர்பவர்களுக்கு முக்தி  நிச்சயம்  என்கிறார்  நிஸ்சலதாசர்.

இத்தகைய முக்கியம் வாய்ந்த வேதாந்த நூல், 20ம் நூற்றாண்டில் ஆதரவற்றுப் போனதன் காரணமென்ன? கட்டுரையாசிரியர், இதற்கான காரணங்களை ஆராய்வதின்  மூலம் 
இந்நூலைப் பற்றி மட்டுமல்லாது, அத்வைத வேதாந்தத்தின்  தற்கால நிலைமையையும் அறிந்து கொள்ளலாம் என்கிறார்.  இக்கட்டுரை  மூன்று பகுதிகளைக் கொண்டது. 

முதல் பகுதியில், நிஸ்சலதாஸரின் வாழ்க்கை விசார  சாகரத்தின் பின்னணி, இவை  மூலம்  கீழை நாட்டு வல்லுனர்களாலும்  19ம் நூற்றாண்டு சீர்திருத்த வாதிகளாலும்தான்  அத்வைத வேதாந்தம் இந்தியாவில் பரவியது என்ற எண்ணம் தவறானது. அது  பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பிரபலமாயிருந்தது என்பது தெரியவருகிறது. இரண்டாவது பகுதியில், விசார சாகரத்தின்  புறக்கணிப்பிற்கான சில காரணங்களையும் மூன்றாம் பகுதியில் இப்புறக்கணிப்பு  அத்வைத வேதாந்திற்கே பொதுவானதென்றும் அதன் காரணங்களையும் அலசுவதோடு  அதைச்  சரிசெய்ய  சில வழிகளைச்  சொல்கிறார்.


நிஸ்சலதாஸரின்  வாழ்க்கை வரலாறு 

நிஸ்சலதாஸர், 16ம்  நூற்றாண்டில் ராஜஸ்தான் பகுதியில் வாழ்ந்த துறவி. தாது தயாள் என்பவரால் நிறுவப்பட்ட தாது பந்த் மடத்தைச் சார்ந்த சந்நியாசி. காசியில்  பல பண்டிதர்களிடம் கற்றவர். படிப்பு முடிந்தபின்  கிஹதவ்லி என்ற  இடத்தில்  தாது பந்தைச் சார்ந்த ஒரு சிறிய ஆசிரமத்தில் வேதத்தைச் சீடர்களுக்குக்  கற்பிப்பதிலும் வேதாந்த நூல்களை எழுதுவதிலுமே இவரது வாழ்நாள் பெருமளவு கழிந்தது. கடைசி வருடங்களில் மட்டும், அதாவது அவர் இறக்குமுன் சில வருடங்களுக்கு பண்டி  மஹாராஜா  ராம் சிங்கின் அழைப்பையேற்று,  அவரது  சபையை  அலங்கரித்தார்.

நிஸ்சலதாசர் 1791ல், தற்சமயம் ஹரியானா மாநிலத்திலுள்ள தனானா என்னும் கிராமத்தில் பிறந்திருக்கலாமென்று தெரிகிறது.  குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்துவிட்டதால் அவரது தந்தை டில்லியிலுள்ள தாது மடத்தில் சேர்த்துவிட்டதாகத் தெரிகிறது. அம்மடாதிபதி அவருக்குச் சந்நியாசம் கொடுத்து, அவரது புத்தி கூர்மையையறிந்து, 14 வயதில் காசியிலுள்ள அஸ்ஸி காட் என்னும் மடத்தில் மேற்படிப்புக்காக அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.

தாது  பந்த்  நிறுவனர் தாது தயாள் காலத்தில் ராஜஸ்தானை மையமாகக் கொண்டிருந்தாலும் அவரது சிஷ்யர்கள் காலத்தில் அந்த பந்திற்கு வட இந்தியா முழுவதிலும் பல கிளைகள் இருந்தன. நிஸ்சலதாஸரின் பிறப்பிடமாகக் கருதப்படும் பிவானியிலும் அவரை ஏற்றுக்கொண்ட தில்லியிலும் அவர் படிப்பிற்காகச் சென்ற காசியிலும் இதன் கிளைகள் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்தன.

இக்கிளைகளுக்கு வருகை தந்த சாதுக்கள் நிஸ்சலதாஸரின் கொள்கைகளையும், அவரது நூல்களைப் பரப்புவதிலும் முக்கியப் பங்கேற்றனர்.நிஸ்சலதாஸரப் போன்ற  சிறந்த மாணாக்கர்கள் மரபுவழிக்  கல்வியில் சிறந்த தேர்ச்சி பெற காசி ஒரு புகலிடமாக  இருந்தது  என்றே சொல்லலாம். பண்டிதர்களும் மாணவர்களும் கற்பிக்கவும், கற்கவும் சில காலமோ, நிரந்தரமாகவோ வசிப்பதற்கேற்ற நகரமாகக் காசி திகழ்ந்தது.  சமஸ்க்ருதக் கல்விக்கு மையமாக இருந்ததால், சிறந்த கல்விமான்கள் தங்களது பாண்டித்யத்தை மேலும் பரப்புவதற்கு வேண்டிய ஆதரவாளர்களையும் தெய்வ நம்பிக்கை மேலோங்கியவர்களை ஆதரிக்கும் பிரபுக்களையும்  கொண்ட நகரமாக காசி விளங்கியது. சுருங்கச் சொன்னால், நிஸ்சலதாஸர் காசியை வந்தடைந்த சமயத்தில் பண்டிதர்களும் பாமரர்களும்  தோளோடு தோள் உரசிக்  கொண்டிருந்த நகரமாயிருந்தது. 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில்  பண்டிதர்கள்  மராட்டிய ராஜபுத்திர  சபைகளால்  ஈர்க்கப்பட்டதால் காசியின்  கெளரவம்  சிறிதளவு  மங்கியது. 9 (Rosalind O”Hanlon).

நிஸ்சலதாஸர் காசியில் கால  விரயம் செய்யாமல் கல்வியிலேயே  மூழ்கி இருந்தாரென்பது விசார சாகரத்தின்  முடிவுரையில், “சாங்கியம், நியாயம், வியாகரணம் ஆகிய அனைத்தையும் கரைத்துக் குடித்துவிட்டேன்; அத்வைத வேதாந்த நூல்கள் ஒன்றுகூட விடாமல் படித்து முடித்துவிட்டேன், அது மட்டுமல்லாமல் அத்வைதத்திலிருந்து வேறுபட்ட கடினமான சித்தாந்த நூல்களையும் படித்து முடித்துவிட்டேன்,” என்று  கூறுவதிலிருந்தே  தெரிகிறது. நிஸ்சலதாஸர் அத்வைதத்தில்  கரை  கண்டவர்  என்பது  அதிசயமில்லை. அன்று காசி  அத்வைதத்தின்   இருப்பிடமாக  இருந்த  சமயம். துறவிகளும் இல்லறத்திலுள்ள அறிஞர்களும் அத்வைத சித்தாந்தமே மூச்சு என்றிருந்த  சமயம். மேலும்  நியாயம் , சாங்கியம்  போன்றவற்றில் புலமை பெற்றவர்களும், புதிய புதிய  அத்வைத நூல்களைப் பதிப்பித்த காலம் (Minkowski, 2011). இதைச் சொல்வதற்கான  காரணங்கள்  இரண்டு. நிஸ்சலதாஸரின் வேதாந்தம்  புதியதோ, மறக்கப்பட்டதோ,  தெளிவற்றதோ அன்று. அவரது  நோக்கம்  காசியில் சிறந்து விளங்கிய  அத்வைத  வேதாந்தத்தைப் பிற ஊர்களில் சம்ஸ்க்ருத  மொழி தெரியாதவர்களிடையே பரப்ப வேண்டும் என்பதேயாகும். நிஸ்சலதாஸர் அளவிற்குப் பிரபலமடையாவிட்டாலும், இவரைப் போலவே பலர்,  காசியில்  கற்றறிந்த அத்வைத வேதாந்தத்தை ஊர் திரும்பியபின், வெள்ளையர் ஆட்சி வருமுன்னரே மக்களிடையே  பரப்பினர்  என்பது  இரண்டாவது காரணமாகும். 200 ஆண்டுகளுக்கு  முன்  வாழ்ந்த தாது தயாளின்  சீடர் சுந்தரதாஸ் ஒரு சிறந்த உதாரணம் ஆவார்; இவர் காசியில் பல வருடங்கள் கல்வி பயின்றவர். அஸ்ஸிகாட் மடத்திலேயே தங்கியவர். சொந்த மாநிலமான ராஜஸ்தானிற்குத் திரும்பியபின் இவரெழுதிய ஹிந்தி நூல்களனைத்தும்  சம்ஸ்கிருதத்திலும் அத்வைதத்திலும் இவரது புலமையை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன. இவரது முக்கிய நூலான ஞான சமுத்திரம், பக்தி, யோகம் , சாங்கியம்  ஆகிய மூன்று வழிமுறைகளும் முடிவில் ஒருவரைப் பரப்பிரம்மம் எனும் அத்வைத  வேதாந்தத்திற்குள்ளே கொண்டு செல்வதாகும் என்பதே. இந்த நூல் நிஸ்சலதாஸரின் அத்வைத அறிவை செம்மைப்படுத்தியது என்பது மட்டுமல்லாமல்வ் தாது பந்த் 200 வருடங்களாகவே அத்வைத மடமாக இருந்தது என்பதையும் அறிய முடிகிறது.

நிஸ்சலதாஸரின் பிரதான  குரு  காக்காராமா  என்பவர்    காஷ்மீரிலிருந்து காசிக்கு குடிபெயர்ந்தவர்.இல்லற  வாழ்க்கையில்  இருந்தவர். இவரது  புத்திக்கூர்மையை அறிந்த நேபாள மன்னர் இவருக்கு நிலதானம் செய்தார். காஷ்மீர மன்னர் இவருடைய வம்சத்திற்கே கணிசமான உதவித்தொகையை ஒதுக்கினார். எல்லா வித சாத்திரங்களையும் கற்பித்தாலும்,  அத்வைத வேதாந்தத்தைக் கற்பிப்பதில் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டார்  என்பதற்கு 13ம் நூற்றாண்டில் சங்கரானந்தா என்பவரால்  எழுதப்பட்ட ஆத்ம புராணம் என்னும் அத்வைத நூலிற்கு இவரெழுதிய விளக்கவுரையே  சான்று.

நிஸ்சலதாஸர் காசியிலிருந்து பண்டிதர் என்ற பட்டத்துடன்  டெல்லி திரும்பியபின்  அங்கிருந்து  30 மைல்  தூரத்திலுள்ள, தற்போது கிடோலி என்றழைக்கப்படும் கிஹடவ்லி  என்னும் 
கிராமத்தில்,  தாது  பந்தின்  கிளை  ஆசிரமத்தில்  சீடர்களுக்கு  வேதாந்தம் போதிப்பதிலும் வேதாந்த நூல்கள் எழுதுவதிலுமே  இவரது காலம்  செலவழிந்தது.   
இவர் வசித்த  இடம்  ஒரு  சிறிய  குடிசை. இவரது புகழ் பெருக ஆரம்பித்தபின் இவரிடம் கற்கவந்த  சாதுக்களின்  எண்ணிக்கையும் அதிகரித்தது.

விசாரசாகரம் இவ்வூரில்தான் 
முடிக்கப்பட்டதென்பதை  அப்புத்தகத்தின் கடைசிப் பகுதியில் கூறுகிறார். அதிலும்  முக்கியமாக, இப்புத்தகத்தைச்  சமஸ்கிருதத்தில்  எழுதாமல்  ஹிந்தியில் 
எழுதியதற்காக  வெட்கப்படவில்லை என்றும் அவ்வாறு எழுதியதன் காரணம் அவ்வட்டார  மக்களிடம் அவருக்குள்ள பரிவேயாகும்; பரிவுதான்  தருமத்தின் கிரீடம்  என்றும்   எழுதியுள்ளார்.

 விசார சாகரம்  மிகப்  பெரிய நூல். ஆயிரம்  வருட  கால  வேதாந்த  நூல்களின்  சாரமனைத்தும்  பொதிந்துள்ள   நூல். இதற்குமுன்  ஹிந்தியில்  எழுதப்பட்ட  வேதாந்த  நூல்கள்  பல இருந்தாலும்  இத்தனை  விரிவாக  இதர  நூல்கள்  எழுதப்படாததால்  மற்ற  நூல்களைவிட  இந்நூல் மிகச்  சிறந்தது  என்று  நூலின்  ஆரம்பத்திலேயே  ஆசிரியர் கூறுகிறார். விசார சாகரத்தின்  தனித்துவம், மற்ற வேதாந்த நூல்களைப்போல் காவியமாக இல்லாமல் எளிய உரைநடையில் அமைந்திருப்பதுதான்.

மேலும் அத்வைதத்தை நாடுபவர்களின் அறிவுத் தரம் வேறுபடும்  என்பதை மனதிற்கொண்டு மூன்று தர சீடர்களுடன் உரையாடுவதுபோல்  அமைந்துள்ளது. முதல் தர சீடர்  வேதாந்த சாரம், மெய்பொருள்  இவற்றை வெகு விரைவில் அறிந்து முக்தி பெறுகிறார்.  நடுத்தர சீடருக்கு  வேதாந்தக் கருத்துகளை உள்ளீர்ப்பது கடினமாயிருப்பதால் குரு, தியானம் போன்ற வழிகளை முதலில்  போதிக்கின்றார். கடைத்தர சீடர் அறிவுள்ளவராயிருந்தாலும் சந்தேகங்கள் மிகுந்தவராக இருப்பதால் சந்தேகங்களைப் போக்குவதற்காக குரு அவருடன் விரிவான விவாதங்களை நடத்துகிறார். இவ்வாறு பல வகையினருக்கும் உபயோகப்படும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதால், விவேகானந்தர் கூறியதுபோல் 300 வருடங்களுக்கு வேதாந்த உலகில்  இப்புத்தகம் கொடிகட்டிப்  பறந்திருக்கும் என்பதில்  சந்தேகமேயில்லை.

விசார சாகரம், நிஸ்சலதாஸரை அவருடைய சிறிய குடிலிலிருந்து பண்டி  மஹாராஜா  ராம் சிங்கின் அரசவைக்குக் கொண்டுவந்தது. இவரது பரந்த அறிவு வெகு விரைவில் ராஜகுரு ஸ்தானத்தில் இருத்தியது . ராம்  சிங்  சம்ஸ்க்ருதத்தில் ஏற்கெனவே புலமை பெற்றவர். உங்களுடைய புகழ் என்னை எட்டிவிட்டது,  உங்களிடமிருந்து அத்வத வேதாந்தத்தைக் கற்க விரும்புகிறேன் என்று சம்ஸ்க்ருதத்தில் அழகாக எழுதப்பட்ட அழைப்பிதழை ஏற்றே நிஸ்சலதாஸர் மகாராஜாவின் அரசவைக்கு வந்தார். 

ராம் சிங் சம்ஸ்க்ருத மொழியில் வல்லுனராக இருந்ததால்  சம்ஸ்க்ருத விற்பன்னர்களை ஆதரித்தார்.  இவரது காலத்தில் பந்தியில் மட்டும் 40  சம்ஸ்க்ருத பாடசாலைகள் முழு வேகத்தில் இயங்கி வந்ததாகத் தெரிகிறது. பண்டி இவர் காலத்தில் இரண்டாவது காசி  என்றழைக்கப்பட்டது. இவர் மட்டுமல்லாமல்,  ஜெய்சிங் போன்ற இதர ரஜபுத்திர   மன்னர்களும் 17-18 ஆம் நூற்றாண்டுக் காலங்களில் காசி போன்ற இடங்களிருந்து வேதாந்தப் பண்டிதர்களைத் தங்கள் அரசவைக்கு அழைத்துவந்து வேதாந்தத்தை  ஆர்வத்துடன் கற்றதுடன், மக்களிடையேயும் பரப்பினார்கள். இது ஒருசில சமஸ்தானங்களில் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் நடைபெற்றது (Horstman). இதை இங்கு எடுத்துரைக்க வேண்டியதின் அவசியம், முன் கூறியதைப்போல் வேதாந்தத்தை  நம் மக்களிடையே மேலை நாட்டுச் சம்ஸ்க்ருத வல்லுனர்களும் இந்திய சீர்திருத்தவாதிகளும்தான் பரப்பினார்கள்  எனும்  தவறான எண்ணத்தை நீக்க வேண்டித்தான்.

பண்டி மஹாராஜா  நிஸ்சலதாஸரைப் பல முக்கியமான  உபநிடதங்களுக்குச் சம்ஸ்க்ருதத்தில் விளக்கவுரை  எழுதப் பணித்தார். அதிலும்  மேலாக, விசார சாகரத்தின்  தொடர்ச்சியாக விருத்தி  பிரபாகரன் எனும் வேதாந்த அறிவியல் நூலை எழுத வைத்தார்.  இந்நூலும், ஹிந்தியில் உரைநடையாக எழுதப்பட்ட நூல். இது ஆறு வேதாந்த பிரமாணங்களை விரிவாக விளக்கும் புத்தகம். 400 பக்கங்களுக்கும் மேலுள்ள இப்புத்தகத்தை சம்ஸ்க்ருதத்தில் புலமைபெற்ற வேதாந்திகளும் சம்ஸ்க்ருதப்  புத்தகங்கள் மூலம் புலப்படாத விஷயங்களை இப்புத்தகத்தை ரகசியமாகப் படித்து அறிந்து கொண்டதாகத் தெரிகிறது (Salem Ahammad-1874). நிஸ்சலதாஸர் கடைசி  வருடங்களைத்  தனது கிஹதவுலி ஆசிரமத்தில்  எழுதுவதிலும்  சீடர்களுக்கு  போதிப்பதிலுமே  கழித்தார். பண்டி  மஹாராஜா   அவரைத் தொடந்து ஆதரித்ததையும் அவரது இறுதிச் சடங்குச் செலவுகளை ஏற்றுக்கொண்டதையும் ஆயிரக் கணக்கான சீடர்கள் அவரது  இறுதி யாத்திரையில்  கலந்து கொண்டதையும்  அவரது சீடர்களின் கடிதங்கள் தெரியப்படுத்துகின்றன.

விசார சாகரம் புறக்கணிக்கப்பட்டதேன்?

நிஸ்சலதாஸரின் மறைவுக்குபின் விசார சாகரம் பல மொழிகளில் பலமுறை பல நபர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் புகழ் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் பரவியது.  அமெரிக்காவின் தலைசிறந்த தத்துவஞானி சார்ல்ஸ்  சாண்டர்ஸ் பியர்ஸ் 1893ல் எழுதிய ஒரு கட்டுரையில், விசார சாகரத்தின் ஆங்கிலப் பதிப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.  இந்நூலின் ஆதிக்கம் 20ம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது.  ரமண மஹரிஷி  அவருடைய சீடர்களை,  விசார சாகரத்தைப்  படிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்வாராம்.  அதனுடைய தமிழாக்கத்தை அனுசரித்து ஒரு சிறிய புத்தகத்தையும் அவரே எழுதியுள்ளார்.

பரமாச்சார்யாள் என்று அன்போடு அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி,  இப்புத்தகத்தின்மேல் பெருமதிப்பு வைத்திருந்தார். 1964ல் இதனுடைய சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பிற்கு முழு ஆதரவளித்தார். மூர்த்தி என்பவர் நிஸ்சலதாஸரின் இரண்டு நூல்கள்தான் பண்டிதரல்லாத சாதுக்களிடமும் சாதாரண குடும்பத்தினரிடமும் அத்வைத வேதாந்தத்தைப் பிரபலப்படுத்தியது என்கிறார்.  இவ்வாறிருந்தும், கடந்த  50-60 வருடங்களில் பண்டிதர்களும் பாமரர்களும்  இவ்வாசிரியரையும், அத்வைதப்  பொக்கிஷமாகக்  கருதப்பட்ட இரண்டு  புத்தகங்களையும்  மறந்தே போய்விட்டனர்  என்றே தோன்றுகிறது. கட்டுரையாசிரியர்  இதற்கான காரணங்களை   எடுத்துரைக்கிறார். அவை  என்னவென்று பார்ப்போம்.
 
தற்சமயம் எழுதிப் பேசப்படும் ஹிந்தி மொழி  நிஸ்சலதாசரின் காலத்திய ஹிந்தி மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒரு  ஹிந்திப்  பண்டிதர்   விசார சாகர  நூல்  ஹிந்தி  மொழியிலேயே  எழுதப்படவில்லை  என்றாராம். எந்தக் கிளை மொழி விசார சாகரத்தை மக்களிடையே பிரபலமாக்கியதோ, அம்மொழிக்கு நவீன ஹிந்தி சாவுமணி அடித்தபோது, அம்மொழியில் எழுதப்பட்ட விசார சாகரம் போன்ற முக்கியமான புத்தகங்களையும் அடித்துக்கொண்டு போய்விட்டது. எவ்வாறு நிஸ்சலதாசர் சம்ஸ்க்ருத வேதாந்த நூல்களைப் பண்டிதர்கள் மூலமாகக் கற்க வேண்டியிருந்ததோ, அதே  நிலையைத்தான் அவரது புத்தகங்களும் அடைந்தன என்பது வருத்தத்திற்குரியதே.

என்னிடமுள்ள விசார சாகரத்தின் முதல் தமிழாக்கம்  1893ல் எழுதப்பட்டது. இந்த தமிழ் தற்போது எழுதப்படும் தமிழன்று. இதற்குப் பிறகு நவீனத் தமிழில்  இப்புத்தகத்தை மொழிபெயர்த்ததாகத்  தெரியவில்லை.
இதன் காரணம், தற்காலத் தமிழறிஞர்களில்  பெரும்பான்மையோர் திராவிட மாயை என்னும் குட்டையில் அமிழ்ந்து கிடப்பதால், வேதாந்தம் போன்ற அருவியைப் பற்றி அக்கறையோ அறிவோ இல்லாதிருப்பதுதான் என்று  நான் நினைக்கின்றேன். விசார சாகரத்தின் கதி கைவல்ய நவநீதம் போன்ற தமிழ் அத்வைத நூல்களையும் தாக்கியுள்ளது என்பதைச் சமீபத்தில் அறிந்தேன்.

என் வேதாந்த ரசனையை அறிந்த எனது மனைவியின் சகோதரி,  ஓம்காரானந்தாஜி அருளிய நூறுக்கும் மேலான கைவல்ய நவநீத விரிவுரைகள் அடங்கிய குறுந்தட்டுகளை அன்பளித்தார். தாண்டவராய ஸ்வாமிகள் என்பவர் எழுதிய இப்புத்தகத்திற்கு, கோவிலூர் சைவ மடத்தைச் சார்ந்த பொன்னம்பல தேசிகர் என்பவரால்  150 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட புத்தகத்தின்  அடிப்படையில் அமைந்த  விளக்கவுரை. சுவாமிஜியின்  தமிழ்ப்  புலமையும், சம்ஸ்க்ருத  வேதாந்த ஞானமும்தான்    அத்வைத  சிந்தனையுள்ளவர்களிடம்  ஆழ்ந்த  அரிய  அத்வைதக்  கருத்துகள்  பொதிந்த  இந்நூலை  விளக்க்ச் சொல்வதற்கான  துணிவைத்  தந்திருக்கவேண்டும்.

இரண்டு  மொழிகளிலும்  தேர்ச்சி இல்லாமல்  இந்நூலைப்  புரிந்துகொள்வது  மிகக்  கடினம் என்று  அவரே அடிக்கடி  கூறுவார். இருந்தும், இப்புத்தகத்தை  வாங்க  விழைந்து, கோவிலூர்  மடத்திற்கே சென்றேன். ஒரு காலத்தில்  500க்கும்  மேலான  நபர்கள் அத்வைத  வேதாந்தத்தை  விளக்கிச்  சொல்லும்  13  தமிழ்  நூல்களைக்  கற்பதற்காகப்  பல  வருடங்கள்  தங்கியிருந்து  படித்த  மடம்  என்பதைக்  கேட்டு  வியந்துபோனேன். முதல்  மூன்று  வருடங்களில்,  திருவாசகம்  முழுவதையும்  மனப்பாடம் செய்தபிறகே,  மடத்தாசிரியர்கள்  இப்பதின்மூன்று  நூல்களைக்  கற்பிப்பார்கள்  என்பதை  ஸ்வாமிஜி  சொல்லிக் கேட்டிருக்கிறேன். தற்சமயம் இம்மடத்தில், பள்ளிக்கூடம், கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.

காலத்திற்கேற்ற கோலம்  என்று  நினைத்துக்கொண்டு  கைவல்ய  நவநீதம், தமிழ் கீதை, 13  அத்வைத  நூல்களும்  அதன்  உரையும்  அடங்கிய  புத்தகக்  கட்டையும்   வாங்கிக்கொண்டு  காசி  சம்ஸ்க்ருத  மடங்களைப்  போலவே  தமிழ்நாட்டின்  தலைசிறந்த  சைவ  அத்வைத  மடங்களுள்  ஒன்றான  கோவிலூர்  மடத்தின்  நிலைமையைன் எண்ணி வருத்தத்துடன் வெளிநடந்தேன். ஸ்வாமிஜியும் அவரது  குரு  பரமார்த்தானந்தாஜி போன்றவர்களும்  நவீன தொழில்நுட்ப உதவியுடன் அருமையான அத்வைத நூல்களுக்கும் அத்வைத வேதாந்தத்திற்கும் என்னைப் போன்றவர்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தச் செய்யும் முயற்சியைப் பாராட்டாமல் இருக்க இயலாது.  இவ்வளவு விரிவாக இதைப் பற்றி எழுதக்  காரணம் இக்கட்டுரையில் கூறப்பட்ட நிஸ்சலதாஸரின் நிலைமைக்கும் அவர் காலத்திய தமிழ் அத்வைத நூலாசிரியர்களின்  நிலைமைக்குமுள்ள  ஒற்றுமையைக் கோடிகாட்டத்தான். 
 
கட்டுரையாசிரியரின்  இரண்டாவது  காரணம்: அத்வைதிகள்   சம்ஸ்க்ருத  மொழிமேல்  வைத்துள்ள   பெருமதிப்பு . அதனால், அத்வைத வேதாந்தமே சம்ஸ்க்ருத மரபைச் சார்ந்தது என்ற தவறான நினைப்பைத் தங்கள் மனத்தில் ஏற்றிக்கொண்டு  விட்டனர் என்கிறார். நிஸ்சலதாஸரே விசார சாகரத்தின் முடிவில் நான் இந்நூலை ஹிந்தியில் எழுதியதற்காக வெட்கப்படவில்லை என்கிறார்.  எதற்காக வெட்கப்பட வேண்டும்? இவர் மனதிலேயே   நாம் தவறு செய்து விட்டோமோ என்ற ஒரு மனக்கிலேசம் இருந்திருப்பதாகத் தோன்றுகிறது. 

நூலிலேயே, எதிராளி ஒருவர் வேதத்தைத் தவிர பிற மொழிகளில் சொல்லப்பட்ட வேதக்  கூற்றுகள் முக்தியறிவைத் தராது என்கிறார்.  விசார சாகரத்தையும் சங்கரரின் உபநிடத விளக்கவுரைகளையும்  ஹிந்தியில் மொழிபெயர்த்த பண்டிட் பீதாம்பர்   புருஷோத்தம்தாஸ் அவர்களும் இதைப் பற்றி ஒரு நீண்ட விளக்கத்தை வாசகர்களுக்கு அளிக்க வேண்டிய நிர்பந்தத்தில்  இருந்ததாகத் தெரிகிறது  1931ல் வாசுதேவ பிரம்மேந்திர சரஸ்வதியின் சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பை 1964லிலும் 1986லும்   வெளியிட்ட பதிப்பாசிரியர், அவரது முன்னுரையில் அத்வைத நூல்களில் சொல்லப்படும் கருத்துகளுக்கு  அதற்குரிய உபநிடத மேற்கோள்களை ஆதாரமாகக் காட்டவேண்டும். இதை நிஸ்சலதாசர்செய்யவில்லை. சம்ஸ்க்ருத புத்தகத்தில்தான் உள்ளது என்கிறார்.

நிஸ்சலதாசர் நான் உபநிடதத்தில் சொன்னதிலிருந்து சிறிதும் வழுவவில்லை  என்று முன்கூட்டியே சொன்னபின், உபநிடத வாக்கியங்களை எதற்காக மேற்கோள் காட்டவேண்டும்? இச்சான்றுகள் ஒருபுறமிருக்க, சம்ஸ்க்ருத மொழியை ஒரு காரணமாக இக்கட்டுரையாசிரியர் கூறுவதற்கு, இவர்  ஷெல்டன் பொல்லாக் போன்ற அமெரிக்க எழுத்தாளர்கள், பார்ப்பன சமுதாயம் பிற சாதியினரைக் குறிப்பாகத் தலித்துகளை அடக்கியாள்வதற்காகச் சம்ஸ்க்ருத மொழியை ஓர் ஆயுதமாக உபயோகித்தனர் எனும் அவதூறான வாதங்களுக்கு செவிசாய்த்தவரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.  

வாசுதேவ பிரம்மேந்திர சரஸ்வதி அவர்களே சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்ததின் காரணத்தை முடிவில் உரைக்கிறார். ஸம்ஸ்க்ருதத்தைப் புறக்கணித்து பிறமொழி நூல்களில் சொல்லப்படும் சாத்திரங்களைக் கேட்பவர்கள் நரகத்திற்க்ச் செல்வார்கள் என்று கூறப்படுவதாலும்,  எனது மன சுத்தத்திற்காகவும் உயர்ந்த தகுதியை அடைவதற்காகவும் இந்நூலை எழுதினேன் என்கிறார் கட்டுரையாசிரியர். இதனை அத்வைதம் சம்ஸ்க்ருத மரபின் ஆதிக்கத்தில் இருந்தது என்று சொல்வதற்கு மாறாக, பிராம்மண  சமூகத்தின் ஆதிக்கம் ஓங்கியிருந்ததற்கு ஆதாரமாகக் காட்டுவது தவறான முடிவாகத் தெரிகிறது.
 
மூன்றாம்  காரணம்:  நம்  நாட்டு  அறிவுஜீவிகள். மேற்கத்திய நாகரிகத்தையும் கொள்கைகளையும் உள்ளீர்த்துக் கொண்டதுமல்லாமல், அக்கண்ணோட்டத்துடன் இந்தியத் தத்துவ நூலாசிரியர்களின் படைப்பாற்றலைப் பற்றியும்  அவர்களது  சுய கருத்துகளையும் ஒருதலைப்பட்சமாக விமரிசித்து இவர்கள் எழுதிய  கட்டுரைகளின் தாக்கம்  ஒரு காரணம் என்கிறார் கட்டுரையாசிரியர்.

நூற்றாண்டுக் காலங்களாக எழுதப்பட்ட அறிவு பூர்வமான நூல்கள் அனைத்தையுமே இந்தியத் தத்துவத் துறையின் தேக்கம் அல்லது நலிவு என்று ஒட்டுமொத்தமாக இவர்கள் புறக்கணித்துவிட்டனர். அத்வைதமும் இவர்கள் வலையில் சிக்கியது.  சக்ரபோர்த்தி என்பவர், அத்வைத  மரபு 17ம் நூற்றாண்டிலேயே மதுசூதன சரஸ்வதி காலத்துடன் மறைந்துவிட்டது என்று அடித்துச் சொல்கிறார்.  தாஸ் குப்தா என்பவர், 14ம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்த அத்வைத நூல்களெல்லாமே அதற்குமுன் செய்யப்பட்ட நூல்களில் ஏற்கெனவே சொல்லப்பட்ட உரைகளின் சேர்க்கைகள்தான் என்று கூறுகிறார்.

விசார சாகரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான் என்றாலும் உயர்ந்த வேதாந்தக் கருத்துகளின் முடிவுகளைப் பாமர மக்களும் ஏற்றுக்கொள்ளுமாறு   செய்யப்பட்டுள்ள  விளக்கங்களும், ஆயிரக்கணக்கான வருடங்களில் கூறப்பட்ட அனைத்து வேதாந்த கருத்துகளையும் கோர்வையாகச் செய்துள்ள திறனும் புத்தக அமைப்பும்  முக்கியமில்லை என்பதுபோல் இருக்கிறது இவர்கள்  கூற்று. தோபே (2014)  என்பவரும் புதிய  வேதாந்தி என்று  அழைக்கப்படும் ராமதீர்த்தருடைய வேதாந்தத்தையும் அவரது அத்வைத அனுபவத்தையும்  சூஃபி பாடல்கள், பெர்ஷியன், உருது, பஞ்சாபி வேதாந்தப் புத்தகங்களின் கலப்படம் என்கிறார்.

நச்சானே (2000)  என்பவர்  சங்கரருக்குப்  பிறகு  வந்த  அத்வைதம் 
என்னும்  புத்தகத்தில், 11ம்  நூற்றாண்டிற்குப்  பிறகு  வந்த  பிற  மொழி அத்வைத நூல்களெல்லாமே  எளிமையான  அத்வைதத்தை  சுற்றித்  தைக்கப்பட்ட போர்வை  என்கிறார். இவ்விமர்சகர்கள் தங்கள் சொந்த விழுமங்களை வாசகர்கள்  மேல்   திணிப்பதைத் தவிர்த்து இந்நூல்களைச் செய்த அத்வைதிகளின் விழுமங்களை எடுத்துரைத்திருக்க வேண்டும் என்கிறார் கட்டுரையாசிரியர்.
 
நான்காம்  காரணம்: மூன்றாவது  காரணத்தை  சார்ந்ததுதான்.  பழைய மதுவைப்  புதிய  புட்டியில்  அடைத்து  விற்பது  போன்ற  அத்வைத  ஆராய்ச்சிக்  கட்டுரைகள். சங்கரரின் அத்வைதத்தைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வருடந்தோறும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆனால், அவருக்குப்பின் வந்த அத்வைதிகள் இன்னும் இருட்டிலேயே அடைபட்டிருக்கிறார்கள். இவ்வாறிருக்கும்போது, அத்வைதம் சங்கரருக்குப்பின் வளரவில்லை  என்று எவ்வாறு  குறை  கூறமுடியும்?

இதற்கும்  இரண்டு  காரணங்கள்  இருக்கலாம்; ஒன்று, சங்கரரின்  கருத்துக்களிலிருந்து  வேறுபட்டுள்ளது என்னும் எண்ணம், அல்லது  சங்கரர் சொன்னதிற்கப்பால்  அத்வைதத்தில்  தெரிந்துகொள்ள  வேண்டியது  ஒன்றும்  இல்லை  என்னும்  மனப்போக்கு. மேலும், சங்கரரின்  அத்வைதத்தை அனுசரித்துப்  பல புத்தகங்கள்  பல  மொழிகளிலும்  கிடைப்பதால், மூலத்தைப்  படிக்க  வேண்டிய அவசியமில்லாதிருப்பதும் ஒரு  காரணமாயிருக்கலாம். சங்கரருக்குப்பின்  வந்த அத்வைதிகள்  எழுத்துக்கு  விளம்பரம்  இல்லை, விளக்கவுரைகளும்  அதிகமாக  இல்லை, அதனால் வாசகர்களும் இல்லை,  ஆராய்ச்சியும் இல்லை என்பதே உண்மை.

மேலும், ஆன்மிக   ஆராய்ச்சிக்குச்  சம்ஸ்க்ருதப்  புலமையும், பக்தி  மார்க்க  ஆராய்ச்சிக்கு  ஹிந்தியில் புலமையும்  வேண்டும்  என்னும்  தவறான  எண்ணத்தினால்,  ஹிந்தியில்  பல  வேதாந்த  நூல்கள்  எழுதப்பட்டிருந்தாலும் அச்சேறாமலும் ஆராய்ச்சிக்கு  உட்படுத்தப்படாமலும் உள்ளன.

நிவர்த்திக்கான   வழிகள்

இக்கட்டுரை  நிஸ்சலதாஸரையும்  விசார  சாகரத்தையும்  பற்றியது  மட்டுமன்று. கட்டுரையின்  மூலம்  அத்வைதத்திற்கே  ஏற்பட்டுள்ள  பேராபத்தை  ஆசிரியர்  வர்ணித்துள்ளார். இதற்கான  காரணங்களைக்  கூறுவதோடு  நில்லாமல்,  இதற்கான  மறுமலர்ச்சிக்கும்  சில  வழிகளை  முன்வைக்கிறார்.

முதலாவதாக  நாம், அத்வைதம்  11ம் நூற்றாண்டிற்குப் பிறகு 19ம் நூற்றாண்டில்தான் மேற்கத்திய வடமொழி நிபுணர்களால் வெளிக்கொணரப்பட்டது என்னும் தவறான எண்ணத்தை அடியோடு கைவிட வேண்டும். 14ம்  நூற்றாண்டிலிருந்தே, பண்டிதர்களையும்  பாமரர்களையும்  அத்வைத  வேதாந்தம் கவர்ந்திருந்தது, புழக்கத்திலும்  இருந்தது.  இதன் காரணம் பண்டிதர்கள்  மட்டுமல்லாமல், கல்விமான்களும், சாதுக்களும்  அத்வைதத்தை  புத்தகங்கள்  மூலமாகவும் உரைகள்  மூலமாகவும்  மக்களிடையே பரப்பியதேயாகும். சாது ஏக்நாத் (16ம் நூற்றாண்டு) மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தெருவில் போவோர் வருவோர் அனைவருக்குமே வேதாந்த அறிவைப் புகட்டினார். அத்யாத்ம ராமாயணம் (15ம் நூற்றாண்டு) ராம பக்தியையே அத்வைத  பக்தியாக வருணிக்கிறது. 

ரமண மகரிஷியை வெகுவாகக் கவர்ந்த திரிபுர ரஹஸ்யம் என்ற  புத்தகத்தின் ஞான காண்டம்  அத்வைதத்தைச்  சார்ந்தே  இருக்கிறது. ஷீரடி  சாய்பாபா  பக்தர்களிடம் பஞ்சதசி (13ம் நூற்றாண்டு) எனும் அத்வைத  நூலைப்  படித்தறியுமாறு  பரிந்துரைப்பாராம். அத்வைதம் என்றாலே சங்கரர்,  சம்ஸ்க்ருதம்  என்ற   இரண்டே  நினைப்புகளுடன்   ஆராய்ச்சியாளர்கள்  இருப்பதால்,  அதை  மரபு  வழி  அத்வைதம்  என்றும்  சங்கரருக்குப்பின்  சம்ஸ்க்ருதத்திலும்   பிற  மொழிகளிலும்  எழுதப்பட்டுள்ள  அத்வைத  நூல்களையும்  அத்வைதம்  கலந்த  நூல்களையும்  உயர்ந்த  அத்வைதம்  என்று  பாகுபடுத்தினால், முன்  பதிந்த  புத்தகங்கள் புதிய  பதிப்பையும், அச்சேறாமலேயே  அமர்ந்திருக்கும் புத்தகங்கள் வெளிச்சத்தையும் காணும்; அத்வைத வேதாந்தமும் பிற வேதாந்த கருத்துகளும் மக்களிடையே பரந்த  ஆதரவு  பெறும்  என்கிறார் ஆசிரியர்.

ஆதாரம்:  The Greater Advaita Vedanta: The case of Niscaladas By Michael S. Allen.

( Author’s Acknowledgement: This paper is based in part on the first half of my doctoral dissertation,”Ocean of Inquiry:A Neglected Classic of Late Advaita Vedanta” as well as on a paper delivered at the annual South Asia Conference in Madison,Wisconsin 2013)
 

7 Replies to “அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா?”

  1. ஆழமான, அறிவு பூர்வக் கட்டுரை. வேதாந்திகள் (இன்றைய நிலையில்) இந்த நூல்களைப் பற்றியும், கைவல்ய நவனீதம் பற்றியும் மேம்போக்காத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சொன்ன பல வழிகளில் இத்தகைய நூட்களின் மீது நாட்டத்தை ஏற்படுத்தலாம். எனக்கொன்று தோன்றுகிறது.-அத்வைதமும், ந்யூக்ளியர் பிசிக்ஸும், பார்டிகள் பிஸிகஸ்ஸும், ஃபீல்ட் தியரியும் வேதாந்தக் கோர்ஸுகளிலும், இடம் பெறச் செய்யலாம். நூலைப் பார்தே தேர்வினை எழுதலாம். இது முதல் அறிமுகமாக இருக்கட்டுமே. கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஒன்றெனில் ஒன்றே யாம்’ என்ற கட்டுரையை எழுதி. சொல்வனத்திற்கு அனுப்பினேன்.அது வெளியாகவில்லை. எனினும் நீங்கள் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்தால் உங்களிடம் பகிர்கிறேன். அதன் போதாமைகளைச் சொன்னால் உதவியாக இருக்கும்.
    நன்றி

  2. ”…அதன் ஆசிரியர் நிஸ்சலதாஸ் (1791-1863)’
    ”…நிஸ்சலதாஸர், 16ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் பகுதியில் வாழ்ந்த துறவி.”
    ”நிஸ்சலதாசர் 1791ல், தற்சமயம் ஹரியானா மாநிலத்திலுள்ள தனானா என்னும் கிராமத்தில் பிறந்திருக்கலாமென்று தெரிகிறது”
    ”சுருங்கச் சொன்னால், நிஸ்சலதாஸர் காசியை வந்தடைந்த சமயத்தில் பண்டிதர்களும் பாமரர்களும் தோளோடு தோள் உரசிக் கொண்டிருந்த நகரமாயிருந்தது. 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பண்டிதர்கள் மராட்டிய ராஜபுத்திர சபைகளால் ஈர்க்கப்பட்டதால் காசியின் கெளரவம் சிறிதளவு மங்கியது.”

    குழப்புகிறார் ஆசிரியர். 16ம் நூற்றாண்டில் பிறந்தவர் எப்படி 1863 ல் இறக்கிறார்? 18ம் நூற்றாண்டு காசிக்கும் இவருக்கும் எப்படி காலப்பொருத்தம்? அனக்ரானிசமோ?

    ”200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாது தயாளின் சீடர் சுந்தரதாஸ் ஒரு சிறந்த உதாரணம் ஆவார்; இவர் காசியில் பல வருடங்கள் கல்வி பயின்றவர். அஸ்ஸிகாட் மடத்திலேயே தங்கியவர். சொந்த மாநிலமான ராஜஸ்தானிற்குத் திரும்பியபின் இவரெழுதிய ஹிந்தி நூல்களனைத்தும் ”.

    வெள்ளையர்கள் வந்தது 1600. 200 ஆண்டுகளுக்கு முன்பென்றால், 1400. அப்போது இந்தி என்ற மொழியே இல்லை.

  3. //தற்சமயம் எழுதிப் பேசப்படும் ஹிந்தி மொழி நிஸ்சலதாசரின் காலத்திய ஹிந்தி மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.//

    ஏன் விசார சாகரம் பிரபலமாகவில்லை என்பதற்கு இவர் சொல்லும் காரணமிது. நூல் ஆசிரியர் ஹிந்தியில் எழுதினால் பாமர மக்களைப்போய்ச் சேருமென்று எழதினார். அவர் ஆசை நிறைவேறவில்லை. இதே காரணத்தை வைத்தே துளசிதாஸ் ராமாயாணம் எழுதினார். அதாவது ஹிந்தியில். அது காட்டில் நெருப்பு பரவுவது போல வடவிந்தியா முழுவதும் அன்றே பரவத்தொடங்கி, என்றும் பிரபலமாகவே இருக்கிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் துளசிதாஸ் இராமாயணம்தான் வாசிக்கப்படுகிறது அங்கே. எப்படி?

  4. //நவீனத் தமிழில் இப்புத்தகத்தை மொழிபெயர்த்ததாகத் தெரியவில்லை. இதன் காரணம், தற்காலத் தமிழறிஞர்களில் பெரும்பான்மையோர் திராவிட மாயை என்னும் குட்டையில் அமிழ்ந்து கிடப்பதால், வேதாந்தம் போன்ற அருவியைப் பற்றி அக்கறையோ அறிவோ இல்லாதிருப்பதுதான் என்று நான் நினைக்கின்றேன். விசார சாகரத்தின் கதி கைவல்ய நவநீதம் போன்ற தமிழ் அத்வைத நூல்களையும் தாக்கியுள்ளது என்பதைச் சமீபத்தில் அறிந்தேன்.//

    முதலில் தமிழறிஞர்கள் என்போர் யார்? பண்டைத்தமிழ் நூல்களை கண்டுபிடிப்பது, அவற்றிற்கு விளக்கம் அளிப்பது அவற்றின் பெருமைகளை எடுத்தியம்புவது; மற்றும் தமிழ்மொழியின் நுணுக்கங்களை ஆராய்ந்து சொல்வது – இவற்றை தம் கைம்மாறு கருதா கடப்பாடாக சிரமேற்கொண்டு வாணாள் முழுவதும் செய்து கொண்டிருப்பவர்களே தமிழறிஞர்கள். பிற மொழி நூல்களை மொழிபெயர்ப்பவர்கள் இருமொழிகளில் பாண்டித்தியம் உள்ளவர்கள் மட்டுமே. அதை எவரும் செய்யலாம்.

    விசார சாகரம் போன்ற a highly technical and intricate நூல். அது முழுக்கமுழுக்க மதம் சம்பந்தமானது. இதை மொழிபெயர்ப்பவர் அத்வைத வேதாந்தத்தை ஏற்றுக்கொண்டு, அம்மதக்கருத்துக்கள் தமிழர்களுக்கும் போய்ச்சேர வேண்டுமென அவாக்கொண்டோர். ஏன் தமிழறிஞர்களுக்கு இந்த அவா வேண்டும்? தமிழறிஞர்கள் எல்லாருமே இந்துக்கள் அல்ல.

    பொதுவாக, சமஸ்கிருத, ஹிந்தியில் எழுதப்பட்ட இந்து மத நூல்களை மொழிபெயர்த்தோர் அம்மத அறிஞர்கள். தமிழ்நாட்டில் அதைச் செய்தோர் தமிழ்ப்பிராமணர்கள் மட்டுமே. இக்காலத்தில் பிறர் செய்யலாம். தமிழ்ப்பிராமணர்கள் திராவிட மாயையில் ஊறிக்கிடந்தார்களா? இல்லை. பின் உண்மை என்னவாக இருக்கும்? ஏற்கனவே சொன்னது போல, இது a highly technical and intricate நூல். வேத‌ப்பண்டிதர்களும், அவர்களைப்போல நாட்டம் உடையவர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டும். பாமர மக்கள் இதையேன் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள்? துளசிதாஸ் இராமாயணம், கம்பராமாயணம் பாமரரிடையே ஊடுறுவக்காரணம், அது கதை. அவை வேதங்களின் உட்பொருளை விளக்கும் வியாக்கியானம் இல்லை. பாமர மக்களுக்கும் விசார சாகரத்துக்கும் தொடர்பு வராது. பண்டிதர்களிடையே பரவவில்லையே என்று கவலைப்பட்டால் அது சரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.