விபத்து

அது ஏனோ தெரியவில்லை, வெள்ளிக்கிழமை மதியம் என்றாலே மனம் தன் கட்டுப்பாட்டை இழந்து தானாகவே ஒருவித குதூகல நிலைக்குச் சென்று விடுகிறது. வேலை ஓடவில்லை. எதுவாக இருந்தாலும் திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. வாரத்தின் முதல் நான்கு நாட்கள் கணிப்பொறியுடன் போராடிய எனக்கு வெள்ளிக் கிழமை மாலை மட்டும் “இது என்னுடைய நாள்” என்று எண்ணத் தோன்றுகிறது. அதில் யாருக்கு இடம் தர மனம் சம்மதிப்பதில்லை. இங்கு வேலை செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம் இருக்கலாம், ஊருக்குச் செல்வது, நல்ல உணவகம் சென்று சாப்பிடுவது, பப் சென்று குடிப்பது என்று. ஆனால் எனக்கு இருப்பதோ ஒரே திட்டம் தான். அதையே கடந்த ஆறு மாதங்களாகச் செய்து வருகிறேன்.

பைக் ஓட்டுவதென்றால் எனக்கு அத்தனை பிரியம். பள்ளி காலத்திலிருந்தே தொடங்கியது.  அதற்கு அப்பாவும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கலாம். அவர் தன் சுசூகி பைக்கில் ஏறி அமர்ந்தாலே போதும் ஒரு ஹீரோவாகத் தெரிவார். அவரைப் பலமுறை ரசித்திருக்கிறேன். எனக்கு பைக் ஓட்ட கற்றுத் தந்ததும் அவரே. அன்று முதல் பைக் மட்டும் இருந்தால் போதும் எனக்கு. நான், அம்மா, அப்பா, பைக் இதுவே என் உலகமாக இருந்தது. நண்பர்கள் என்று யாரும் இருந்ததில்லை. நான் உண்டு என் பைக் உண்டு என்றிருப்பேன். அம்மா அடிக்கடி சொல்லுவாள் “இவனுக்கு இந்த பைக் ச்சாவி கெடச்சிட்டா போதுமே, சோறு தண்ணி வேணாம்னு சுத்துவான்” என்று. அதற்கு அப்பா 

” ஏன்டி ஆம்பளன்னா பைக்ல கெத்தா வரணும், காலேஜ் படிக்கும்போது உன் பின்னாடி வந்தேனே அது மாதிரி”

“க்கும்……… நல்லா வந்தீக”

“உண்மையச் சொல்லு, அதப் பாத்து தான என்ன லவ் பண்ண?”

“பண்ணிட்டாலும்.அடப் போங்க”

“உன் தங்கச்சிட்ட நீ எனக்கு லவ் லெட்டர் குடுத்து விட்டதெல்லாம் மறந்து போச்சா?”

“பெரிய பைக்கு பொல்லாத பைக்கு”

“அடியே என் பைக்க மட்டும் குறை சொல்லாத. இதுலதான் நாம தென்காசிக்கு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். புடிக்க முடிஞ்சதா உங்க அண்ணனால?”

அம்மா சிரித்துக் கொண்டாள்.

அப்பா அம்பாசமுத்திரம் ஸ்டேட் பேங்க் மேனேஜர். ஒருநாள் வழக்கம்போல் வேலைக்குச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. சேரன்மகாதேவி தாண்டி அவர் வந்த பைக்கும் எதிரே வந்த பஸ்சும் மோதி அவர் இறந்த செய்தி மட்டுமே வந்து சேர்ந்தது. அதன் பின் வாழ்க்கையில் பல மாற்றங்கள். தனிமையில் அம்மா, கல்லூரிப் படிப்பை முடிக்காத நான். அம்மாவிற்கு ஆதரவாக அவ்வப்போது பாளையம்கோட்டை சித்தி மட்டும் வந்து பார்த்துக் கொள்வாள். எங்களுக்கான ஒரே ஆதரவு அவள் மட்டும் தான். அம்மாவுடைய ஒன்றுவிட்ட பெரியம்மா மகள்.

திருநெல்வேலியில் கல்லூரிப் படிப்பை முடித்து, கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலை கிடைக்க சென்னை வந்து சேர்ந்தேன். அம்மாவும் உடன் வந்துவிட்டாள். வந்தவுடன் முதல் வேலையாக வாங்கியது என் நெடுநாள் கனவு பைக்கான பல்சர். அன்று முதல் எங்கு செல்வதென்றாலும் இந்த பைக் தான். பலமுறை சென்னையில் இருந்து திருநெல்வேலி சித்தி வீட்டிற்குப் பைக்கிலேயே சென்றிருக்கிறேன்.  அம்மாவும் சித்தியும் வேண்டாம் என்று தடுத்தால் “ஆம்பளன்னா கெத்தா பைக்ல போகணும்” என்று சொல்லிச் சென்று விடுவேன்.

வீடு, வீட்டை விட்டால் அலுவலகம், இரண்டும் இல்லையென்றால் தனியாக பைக்கில் ஊர் சுற்றுவது. என் பைக்கின் பின் இருக்கையில் ஏறியவர்கள் என்றால் அது அம்மா, அவளைத் தவிர்த்து சித்தி. நான்கு மாதத்திற்கு ஒருமுறை இங்கு வந்துவிடுவாள். எப்போதும் அமைதியாக இருக்கும் வீடு சித்தி வந்துவிட்டால் கலகலப்பாகிவிடும். வாயை மூடாமல் பேசிக் கொண்டிருப்பாள். 

“ஏல உங்க சித்தப்பாக்கு கொஞ்சம் பைக் ஓட்ட சொல்லிக்குடேம்டே? ஆட்டோக்கு காசு குடுத்து முடியல”

“…..”

“எங்க அத்தான் பைக் ஓட்ற அழகு இருக்கே….ஐயோ நானே ஒரு செகண்ட்ல லவ் பண்ணிருப்பேனாக்கும்”

“……”

“அடுத்த தடவ வரும்போது கொஞ்சம் சொல்லிக்குடே, எனக்கும் அவர் பின்னால உக்காந்து பைக்ல போனும்னு ஆசையா இருக்குல்லா”

“காலம் போன காலத்துல உனக்கு இந்த ஆச வேற இருக்காக்கும்?” என்ற அம்மா மேலும் தொடர்ந்தாள்.

“ஏட்டி நானே அவன பைக்கத் தொடாதன்னு சொல்லிட்டு இருக்கேன். இதுல நீ வேற அவன என் கொழுந்தனுக்கு சொல்லிக் குடுக்க சொல்லிட்டிருக்க?”

சித்தி வந்தால் கவலைகளை மறந்து, அம்மா முகம் சிரித்திருப்பாள். அதற்காகவே சித்தி வரும் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன்.  

அவளிடமிருந்தே ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய்பாபாவிற்கு விரதமிருக்கும் பழக்கம் அம்மாவிற்குத் தொற்றிக் கொண்டது. வந்தவள் ஒருமுறை “இங்க ஈஞ்சம்பாக்கத்துல உள்ள சாய்பாபா கோவில் ரொம்ப ஃபேமசாமே, ஒருதடவ எங்களைக் கூட்டிட்டு போயேன்டே” என்று கேட்டாள்.

“நல்ல ஆள்ட்ட கேட்ட போ. கோயிலுக்கு வான்னா எங்கயோ கொல பண்ண கூட்டிட்டு போற மாதிரில்லா மூஞ்ச வச்சிட்டு வருவான். நாமளே ஒரு ஆட்டோவ புடிச்சு போய்ட்டு வந்துருவோம்” என்றாள்.

ஒரு வாரம் இருந்துவிட்டு ஊருக்குப் புறப்பட்டு நின்றவள் “அம்மாவ நல்லாப் பாத்துக்கோடே, நீ பாத்துப்ப தான் இருந்தாலும் சொல்றேன். அவ உனக்காகத்தான் இங்க வந்து கெடக்கா. இந்த ஊர்ல உன்னவிட்டா அவளுக்கு இங்குள்ள கோவில் மட்டும் தான். அப்பப்போ கோயில் கொளத்துக்குக் கூட்டிட்டு போ. வேறென்ன பெருசா கேட்றப்போறா? சரியாடே? அப்பறோம் இந்த பைக்கில கொஞ்சம் மெதுவாத்தான் போயேன்டே. ச்சரியா?” என்று சொல்லிவிட்டு “எக்கா ஊருக்குப் போய் உங்க கொழுந்தன்ட பேசிட்டு சொல்றேன். நாள் தோத பாத்துட்டு இன்னும் ஒரு மாசத்துல சீரடி போயிட்டு வந்துரலாம்” என்று சொல்லிச் சென்றாள்.

சித்தியின் விருப்பப்படியே சீரடிக்கு பிளைட்டில் செல்வதாக முடிவானது. சித்தி, அம்மா, நான். வேறு வழியில்லாமல் நானும் அவர்களுடன் சென்றாக வேண்டியதாகி விட்டது. சென்னையிலிருந்து புனே பின் அங்கிருந்து சீரடி. புனேவிலிருந்து சீரடி செல்லும் சாலை பைக் ஓட்டுவதற்கு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கோவில் அருகிலேயே தங்குவதற்கு விடுதி கிடைத்ததில் அம்மாவுக்கும் சித்திக்கும் மிகுந்த சந்தோசம். ஒரு முறைக்கு இருமுறை ஆரத்தி பார்க்கலாம் என்பதால். காலை ஆறுமணிக்கே எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்குப் புறப்பட்டோம். டிசம்பர் மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல் வருடாவருடம் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வருவதாக வரிசையில் என் பின்னால் நின்றவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்க முடிந்தது. ஹிந்தி பேசத் தெரியாத காரணத்தால் சைகை பாசையில் பேசி சமாளித்துக் கொண்டிருந்தோம். ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் வெகு சிலரே இருந்தனர்.

வரிசையில் நின்று சரியாக ஒன்றரை மணி நேரத்தில் பாபா அருகே சென்று விட்டோம். கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் கூட்டம் தேங்கி விடாதவாறு பார்த்துக் கொண்டனர். அம்மாவையும், சித்தியையும் வெளியே இழுத்து வருவதற்குள் பெரும் போராட்டமாக இருந்தது. வெளியே வந்த அம்மா பாபா அருகில் சென்றவுடன் தானாக ஒருவித அதிர்வு ஏற்பட்டதாகச் சொல்ல, இதற்கு முன் இதே உணர்வு திருப்பதியில் ஏற்பட்டதாக சித்தி சொன்னாள். இருவர் கண்களிலும் கண்ணீர் நிரம்பி இருந்தது. தரிசனகம் செய்து திரும்பியவர்களுக்கு பூந்தி பிரசாதமாக வழங்கப் பட்டது.   சென்னை வந்து சேர்வதற்குள் மீண்டும் அடுத்த முறை எப்போது செல்லலாம் என்பது பற்றி இருவரும் பேசத் தொடங்கி இருந்தனர். 

சிறுசேரியில் தொடங்கி சோழிங்கநல்லூர், பின் அங்கிருந்து வலது பக்கம் திரும்பி கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பிடித்து கோவளம் வழியாக மகாபலிபுரம். வழக்கம் போல் இன்றும் அதே திட்டம் தான். வெள்ளிக் கிழமை மாலை என்பதால் வழக்கத்திற்கு மாறாகக் கிழக்குக் கடற்கரைச் சாலை கொஞ்சம் பரபரப்பாகக் காணப்பட்டது. வேகக் கருவியின் முள் 120க்கும் 130 க்கும் இடையில் குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்ததை என்னால் காண முடிந்தது.

வழியில் ஒரு பைக்கில்  ஓட்டிக் கொண்டிருந்த ஆணைப் பின் இருக்கையில் இருந்த பெண் கட்டிபிடித்தவாரு சென்று கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணின் முகம் என்னை வெகுவாக ஈர்த்தது. ஹெல்மெட் கண்ணாடியைத் தூக்கி ஒருமுறை அவளைப் பார்த்து விட்டு பின் மூடிக் கொண்டேன். மேலும் ஒரு பைக்கில் குடும்பமாக அப்பா, அம்மா முன் ஒன்றும் பின் ஒன்றுமாக இரண்டு குழந்தைகள் பேசிக் கொண்டே சந்தோசமாகச் செல்வதைப் பார்க்க முடிந்தது. வழியில் ஒருவர் லிப்ட் கேட்க அவருடன் சில உரையாடல்கள்.

மாயாஜாலைக் கடந்து கோவளம் தாண்டிச் செல்கையில் எனக்கு முன்பாக நூறு மீட்டர் இடைவெளியில் அதே பைக். என்னைப்போல் அவனும் தனியாக வந்திருந்தான். நான் பலமுறை முந்தி வந்திருக்கிறேன். அவனும் விடாமல் என்னை முத்திச் செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறான். சில நொடிகளில் வேகக்கருவின் முள் நூற்று நாற்பதைத் தொட, அவனைப் பதினைந்தாவது முறை முந்திச் செல்ல முயற்சித்ததாக நினைக்கிறேன். சாலையின் வலது ஓரத்தில் கல் ஒன்று கிடப்பதைக் கண்டு இடது பக்கமாக நான் ஒதுங்க, என்ன நினைத்தானோ தெரியவில்லை அவனும் வலது பக்கம் ஒதுங்கினான். இருவரும் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொண்டு, உரசிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்தோம். அவன் இடது பக்கமாகத் தூக்கி எறியப்பட்டான். நான் வலது பக்கம். வேறொன்றும் நினைவிலில்லை. 

தூக்கி எறியப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு நொடிகள், வழியில் கண்ட அந்த அழகிய பெண்ணின் முகம், நான்கு பேர் கொண்ட குடும்பம், லிப்ட் கேட்ட அண்ணன், என் பைக், அம்மா, சித்தி என்று ஒவ்வொருவராக நினைவில் வந்து சென்றார்கள். எதற்கும் அஞ்சாமல் முறுக்கிக் கொண்டு திரியும் எனக்கு உயிர் பயத்தைக் காட்டியதாக இருந்தது அந்த இரண்டு நொடி. 

ஒரு நிமிடம் ஒரே இருள்.

சுயநினைவு திரும்ப ஒரு நிமிடம் பிடித்திருந்தது. அணிந்திருந்த ஜீன்ஸ் முட்டியில் கிழிந்து ரத்தம் எட்டிப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. தன்னிச்சையாக எழ முடியவில்லை. இருந்தும் முயன்று கொண்டிருந்தேன். வலது கால் பைக் பம்பருக்கடியில் மாட்டி இருந்தது. எதிரே வந்த கார் நொடிப்பொழுதில் என் வலது கால் மேல் ஏறிச் சென்றதாக ஞாபகம். சற்று நேரத்தில் ஓடிவந்த அவன் என்னைக் கை பிடித்துத் தூக்கினான். என் வலது கால் மீது அவன் பைக் கிடந்தது. அதைத் தூக்கிக் கொண்டிருந்தான். அது மட்டும் இல்லையென்றால் வந்த கார் என் கால் மீது ஏறி வலது கால் முறிந்து போயிருக்கும். நல்லவேளையாக அவனுக்கு பலத்த அடி ஒன்றும் இல்லை. சிராய்ப்புகள் மட்டும் தான்.

நல்லதோ கெட்டதோ அம்மாவிடம் சொல்லி விடுவது வழக்கம். இதுவரை எதையும் மறைத்ததில்லை. ஆனால் இம்முறை வேண்டாம் என்று முடிவு செய்தேன். அவளைச் சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். நேராக அலுவலகம் சென்று முகம்,கை, கால்களைக் கழுவிவிட்டு, கிரிக்கெட் விளையாட பைக்கில் வைத்திருந்த ஜெர்சியை எடுத்து அணிந்து கொண்டேன். ஒரு முறைக்குப் பல முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு கீழே விழுந்ததற்கான எந்தத் தடயமும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். 

வீட்டிற்கு வந்து எப்போதும் போல் பைக்கை நிறுத்திவிட்டு, கதவைத் தட்ட, அம்மா வந்து திறந்தாள். கீழே விழுந்தது அம்மாவுக்குத் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். சிரித்துக் கொண்டே “என்னம்மா இன்னைக்கு சாப்பாடு வச்சிருக்க?” என்று கேட்க, பதில் ஏதும் சொல்லாமல் அடுக்களையை நோக்கிச் சென்றாள். பின்தொடர்ந்து போய் அவளுக்கு அருகில் சென்று மீண்டும் “என்னம்மா சாப்பாடு?” என்று அவள் முகம் பார்த்துக் கேட்டேன். பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்தாள்.

அவள் முகம் எப்போதும் போல் இல்லை என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. முகம் வாடி இருந்தது. ஒன்றும் புரியவில்லை. நாம் சொல்வதற்குள் அவளுக்குத் தெரிந்து விட்டதா? வாய்ப்பில்லையே என்று எண்ணிக் கொண்டேன்.  என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

சற்று இடைவெளி விட்டு, நான் சொல்ல வந்ததைச் சிறிது நேரம் கழித்து சொல்லலாம் என்று எண்ணி அம்மாவிடம் “என்னம்மா ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டது தான் தாமதம் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று ஊற்றத் தொடங்கியது. ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தவள் சிறுது நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு “இன்னைக்குச் சாயந்திரம் நடக்கக் கூடாத ஒன்று நடந்துட்டுப்பா” என்றாள். எனக்கோ உள்ளுக்குள் பயம். ஆனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு நம்பிக்கை. “என்னம்மா ஆச்சு” என்று கேட்ட என்னைக் கை பிடித்து பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றவள் “இங்க பாரு” என்றாள்.

கடந்த வாரம் சீரடியில் இருந்து வாங்கி வந்திருந்த சாய்பாபா சிலை கீழே விழுந்து அதன் வலது கால் உடைந்திருந்தது. தன்னிச்சையாகச் சென்ற என் வலது கை என் வலது காலைத் தடவிக் கொண்டிருந்தது.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.