வயாகரா

சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி விடுமுறை நாளொன்றில் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தேன். பல காலமாக நமக்குப் படிக்காத நாளெல்லாம் பிறவா நாளென்று ஆகிவிட்டது. அண்மையில் கோவை மாநகரில் 88 வயதான மூத்த படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், பறவைகள் ஆய்வாளர் பேராசிரியர் க. ரத்தினம் அவர்களின் பாராட்டு விழாவுக்குப் போயிருந்தேன். பாரம்பரியம் மிக்க அரசு கலைக் கல்லூரியில் நடந்தது. பாராட்ட வந்த தமிழ்ப் பேராசிரியர் நெடுக உரைத்தார். பொங்கலை ஒட்டி, சென்னையில் நடந்த 43-வது புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தாராம், பெருங்கூட்டமாம், தானொரு புத்தகம் வாங்கினாராம். பீற்றிக் கொண்டிருந்தார். அறுபது ரூபாய் விலையுள்ள எழுபது பக்கப் புத்தகமாக இருக்கலாம். ஆண்டு முழுக்க அதனை வாசிப்பாராக இருக்கும். இல்லாதப்பட்டவர்கள் வேறென்ன செய்வார்கள் பாவம்!

ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில், பணியில் சேரும் காலத்து ஊதியம் மாதம் அறுபத்தைந்தாயிரம் பணம். இருபதாண்டுகள் பணி முடித்தவர்கள் ஊதியம் மாதம் இரண்டு இலட்சம் வரை. ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்குவார்களா?

ஆனால் அவர்கள் செய்யும் வேலையை, தனியார் கல்லூரிகளில் மாதம் பதினைந்தாயிரம் ஊதியம் பெற்றுக்கொண்டு செய்யும் இளைஞர்கள் புத்தகம் வாங்குகிறார்கள். ஒருக்கால் ஐம்பது இலட்சம், அறுபது இலட்சம் இலஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்கும் பேராசிரியர்களுக்கு எதுவும் வாசிக்க வேண்டாம் என்று விதி இருக்கலாம்!

நான் வாசித்துக் கொண்டிருந்தபோது, முதல் வகுப்பில் வாசிக்கும் என் பெரிய பேரன் ஓடிவந்தான், “தாத்தா VAT என்றால் என்ன மீனிங்?” என்றான். உண்மையில் VAT  எனும் ஆங்கிலச் சொல்லின் பொருளை, அவன் உசாவியபோது நான் அறிந்திருக்கவில்லை. பழைய தமிழ் – இந்தி – தெலுங்கு சினிமாக்களில், கதாநாயகனின் தங்கை என்ற பாவப்பட்ட பெண்ணைக் கற்பழிக்கப் புகுமுன், வில்லன் நடிகர் பருகும் மதுபானமாக VAT-69  என்று அட்டை ஒட்டப்பட்ட மதுக்குப்பி ஒன்றைக் காட்டுவார்கள். குப்பியே பார்க்க அழகாக இருக்கும். எனினும் பல நாடுகளிலும் பல்வகை மதுபானங்கள் பருகிய பயிற்சியுள்ள எனக்கு, மது பருக ஆரம்பித்த கடந்த நாற்பத்தெட்டு ஆண்டுப் பயணத்தில் VAT-69 பருக வாய்த்ததில்லை. தீர்மானமாக, கற்பழிப்பதற்கான தூண்டுதல் வந்துவிடும் என்ற அச்சத்தினால் அன்று. மேலும் நமக்கு Pick-Up சென்று தேய்ந்து இற்று யாண்டு பலவாகின.

பேரனுக்காக அகராதியில் தேடப்போனேன். என்னிடம் Chambers Dictionary இருக்கிறது. 1984 பக்கங்கள். அதன் 1843-வது பக்கத்தில் VAT எனும் சொல் noun என்றும், a large vessel என்றும் பொருள் தரப்பட்டிருந்தது. vessel என்றால் மரக்கலம், கப்பல் என்றும் பொருள் கொள்ள வாய்ப்புண்டு என்பதால் Used for fermentation, dyeing, tanning என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

சென்னைப் பல்கலைக்கழகம் 1963-ல் தொகுத்து வெளியிட்ட  ஆங்கிலம் – தமிழ் சொற்களஞ்சியம் ஒன்றுண்டு எம்மிடம். தொகுப்பாசிரியர்கள் பேராசிரியர்கள் அ. சிதம்பரநாதன் செட்டியார், க. அப்பாத்துரைப் பிள்ளை, ந. சஞ்சீவி முதலானோர். 1225 பக்கங்கள். அதன் 1166-ம் பக்கத்தில் VAT எனும் சொல்லுக்கு, கொப்பறை, அண்டா, மரத்தாலான பெருந்தொட்டி எனப் பொருள் காணக்கிடைத்தது. இன்று எவரிடமும் VAT என்றால் என்ன எனக் கேட்டால் Value Added Tax என்கிறார்கள்.

இப்படித்தான் எனது எழுபத்திரண்டாவது வயதில் புதிய சொல் ஒன்று அறிந்து கொண்டேன். சும்மாவா சொன்னான் குறளாசான் கல்வி அதிகாரத்தில், ‘சாம் துணையும் கல்லாதவாறு’ என்று. ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு’ என்று ஔவை?

அவ்விதம் தற்செயலாக வந்து நாம் அடைந்த வேறொரு தமிழ்ச் சொல்லை மறு அறிமுகம் செய்யவே இந்தக் கட்டுரை. வேறொரு கட்டுரைக்காக நோ, நோதல், நோவு, நொம்பலம், நோக்காடு எனப்பட்ட சொற்களின் பயன்பாடுகளைப் பழந்தமிழ் நூல்களில் தேடிக் கொண்டிருந்தேன். நாலடியாரில் சுற்றந்தழால் அதிகாரத்தின் முதல் வெண்பா நோவு பற்றிப் பேசுகிறது. அந்த வெண்பாவின் முதல் இரண்டு அடிகள் ஒரு உவமை உரைக்கின்றன.

“வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகன் கண்டு தாய் மறந்தா அங்கு”

என்பன அவ்விரு வரிகள். எளிய பொருள்: மசக்கையும், கர்ப்ப கால வருத்தமும், ஈன்று புறந்தருதலுக்கான  நோயும், யாவும் தொடை நடுவே குழந்தையைக் கண்டபோது, தாய் மறந்ததுபோல என்பது.

இதில் கவாஅன் எனும் சொல்லின் அளபெடை நீக்கிப் பார்த்தால் கவான், தொடை என்று பொருள். வயா எனும் சொல்லுக்கு மசக்கை நோய் என்று பொருள் எழுதினார்கள். மசக்கை என்று பொருள் தரும் ‘வயா’ எனும் சொல்லை வாழ்நாளில் முதன்முறையாகக் கண்டேன்.

மசக்கை என்று அன்றாட உரையாடலில் பயன்படுத்தும் சொல்லைத்தான் உரையாசிரியர்கள் மயற்கை என்கிறார்கள். இப்படியாக ‘ய’’ எனும் எழுத்துக்கு மாற்றாக, மக்கள் வழக்கில் ‘ச’ எனும் எழுத்தைப் பயன்படுத்தும் சொற்கள் தமிழில் அநேகம். ‘மாலை மயங்கி வருகிறது’ என்பதை ‘மாலை மசங்கி வருது’ என்பர் எம் பக்கம். அதற்கான இலக்கணம் தீர்ச்சையாகவும் இருக்கும். அதை அறிந்திருப்பதற்கான ஊதியப்பணி இல்லை எமக்கு. எடுத்துக்காட்டுக்கு, கயம் எனில் நீர்நிலையின் ஆழமான பகுதி. அபாயகரமான பகுதி, கொடுங்கயம். அதனைக் கசம் என்போம். கயம் எனில் யானை என்றும் பொருளுண்டு. அட்ட திக் கயங்கள் எனில் எண்திசையின் யானைகள். கயந்தலை என்றால் யானைக்குட்டி. கயத்துக்கான வடசொல் கஜம்.

மயங்கினான் என்பதை மசங்கினான் என்போம் நடப்புத் தமிழில். தன்வயம் என்பதைத் தன்வசம் என்றோம். கலயம் என்பதைக் கலசம் என்றோம். குயவன் என்பவரைக் குசவன் என்றோம். களைப்பைச் சொல்ல அசதி என்றோம் நாம். ‘ஊழிக்காலம்’’ எனும் தலைப்பில் தமிழ்க்கவி எழுதிய போருக்குப் பிந்திய ஈழத்தமிழ் நாவலில், அசதியைக் குறிக்க அயதி எனும் சொல் ஆளப்பட்டிருக்கிறது. முயலை முசல் என்பாருண்டு. தசரதனைத் தயரதன் என்றும் தசமுகனைத் தயமுகன் என்றும் ஆண்டார் கம்பர். சொல்லிச் செல்லலாம் நெடுக. எனவே மசக்கை என்பதன் மூலச்சொல் மயற்கை என்றறிய மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசு என்பதன் மூலச்சொல்லும் தேயுதான். தேயு எனில் ஒளி. தேசம் என்றால் தேயம். பாரதி, பாஞ்சாலி சபதத்தில், ‘தேயம் வைத்திழந்தான்’’ என்பார்.

நாலடியாரைப் போல கம்பரும் வயா எனும் சொல் ஆள்கிறார், கர்ப்ப கால வருத்தம் எனும் பொருளில். பாலகாண்டம், திரு அவதாரப் படலம், பாடல் எண் 279. தயரதன் தேவியர் மூவரும் மயற்கை நோய் அடைந்த செய்தி பேசும் பாடல்.

“தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ,
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தலால்,
பொருஅரு திருமுகம் அன்றி, பொற்பு நீடு
உருவமும், மதியமோடு ஒப்பத் தோன்றினாள்”

– என்பது முழுப்பாடல்.

தயரதன் தேவியர் மூவரும், சில நாள்கள் சென்றபின்பு, மயற்கை காலத்தில் பொருந்தும் ஆசையும் வருத்தமும் அடைந்தனர். ஒப்பற்ற அவர்களது முகங்கள் மட்டுமல்லாமல், அழகிய ஏனைய உறுப்புகளும் சந்திரனைப் போன்று வெளிறித் தோன்றின என்பது பாடலின் பொருள்.

வயா எனும் சொல்லைக் காலம்போன காலத்தில் அறிமுகம் ஆன உடன்தானே, வயாகரா என்றொரு சொல் தோன்றிற்று மனத்தில். அஃதோர் மாத்திரை என்றும், எதற்கானது என்றும் அறியாத ஆடவர் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள். அதற்கான விளம்பரங்கள் ஸ்வச் பாரதத்தின் நகராட்சி மூத்திரப்புரைகளில் தொடங்கி, அனைத்துக் கட்சியினரின் தொலைக்காட்சி சானல்களிலும், அச்சு ஊடகங்களிலும் காணக் கிடைக்கும். வயாகரா மசக்கை நோய் ஏற்படுத்தித்தரும் மாத்திரை என்பதால் அப்பெயர் சூட்டப்பட்டிருக்கக்கூடும்.

எனில் வயா எனும் சொல், வட சொல்லாக இருக்குமோ, நாலடியாரும் கம்பரும் பயன்படுத்தி இருப்பார்களோ என்று தோன்றியது. வடசொல் என்பது சமற்கிருதத்தை மட்டுமே குறிப்பதன்று என்கிறார்கள் மொழியறிஞர்கள். மூல மொழிகளான பாலி அல்லது பிராகிருதமாகக்கூட இருக்கலாம். மேலும் வயாகரா எனும் சொல் நயாகரா எனும் சொல்லை ஒத்து ஒலிப்பதால், நயாகரா எம்மொழிச் சொல் என்றறிய ஆர்வம் ஏற்பட்டது. எவரிடம் சென்று ஐயம் தெளிவது?

எந்தச் சொல்லானாலும் அது தமிழ்ச் சொல்லா, அயற்சொல்லா என்றறிய எனக்கு ஆதார நூல் ‘அயற்சொல் அகராதி’. அதனுள் தேடியபோது வயா எனும் சொல் வரிசைப்படுத்தப் பட்டிருக்கவில்லை. ஆனார் மர்ரே S. ராஜம் அவர்களின் ‘வைணவச் சொல்லகராதி’, ‘வ்யா’ எனும் சொல்லைப் பதிவிட்டுள்ளது. ‘வ்யா’ என்றால் பெருமோகம் என்று பொருள். ‘வ்யா முக்தன்’’ எனில் மிக்க மோகம் கொண்டவன். ஆக வயாகராவின் உற்பத்தித் தலம் நமக்கு அர்த்தமாகிறது.

பேரகராதி வயா எனும் சொல்லுக்கு எட்டுப் பொருள் தரும்.

அவா, Great Desire வேட்கைப் பெருக்கம்  (திவாகர நிகண்டு)

வயா நடுக்கம்

கர்ப்ப காலத்து  மயற்கை நோய்  (சூடாமணி  நிகண்டு)

கர்ப்பம், Foetus, கரு (பிங்கல நிகண்டு)

கருப்பை, Womb

பிரசவ கால வலி

வருத்தம், Pain,  நோவு (பிங்கல நிகண்டு)

நோய், Disease,  பிணி (அகராதி நிகண்டு)

எனவே நாலடியாரும் கம்பரும் தவிர்த்தும் ஆயிரமாண்டுகள் முந்தைய நிகண்டுகள் வயா எனும் சொல்லை, மசக்கை நோயைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளன என்று அறிய முடிகிறது.

வயா நடுக்கம் எனும் சொல்லைத் தேடிப் பார்த்தால்,  Morning Sickness and Morbid longings of a pregnant woman என்றும் பொருள் தருகிறார்கள். நாஞ்சில் நாட்டில் மசக்கையைக் குறிக்கச் சாக்கோட்டி எனும் சொல் பயன்பாட்டில் உண்டு. சாக்கோட்டிக்காரி என்பார்கள்.

ஐங்குறுநூறு எனும் எட்டுத்தொகை நூலின் முதல் நூறாகிய மருதத்திணை பாடிய புலவர் ஓரம்போகியார், தோழி கூற்றாகக் கூறும் பாடல் ஒன்றுண்டு.

“நீர்உறை கோழி நீலச்சேவல்
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத்து அன்று நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே”

– என்பது முழுப்பாடல்.

நீரில் வாழும் நீலச் சேவல் கோழியை, கூரிய நகங்களை உடைய பெட்டைக்கோழி விரும்பும் ஊரைச் சேர்ந்தவனே! நின் பரந்த மார்பு, மசக்கை நோய்க்குப் புளியங்காய் போல விரும்பத் தகுந்ததாக அன்று இருந்தது. இன்று இல்லை! இது பாடலின் பொருள். இங்கு நாம் கூற விரும்பும் செய்தி, மசக்கை நோய்க்குப் புளியங்காய் விரும்பத் தகுந்ததாக இருந்தது எனும் கருத்து. புளியங்காய் பதினோராம் நூற்றாண்டில்தான் இந்தியாவுக்கு வந்தது எனக் கூறும் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் உண்டு ஈண்டு. அவர்கள் அறிஞர் எனவும் அறியப்படுவார்.

இங்கு வயா எனும் சொல், விருப்பம் எனும் பொருளிலும், மயற்கை நோய் எனும் பொருளிலும், மசக்கை நோய் எனும் பொருளிலும் இருமுறை ஆளப்பெற்றுள்ளது.

வயா எனும் சொல்லை விருப்பம், To desire, எனும் பொருளில் மலைபடுகடாம் பயன்படுத்துகிறது. ‘ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்’ எனும் கம்பன் தொடரினை, ‘ஆடவர் பெண்மையை வயாவும் தோளினாய்’ என்று பாடபேதம் செய்யலாம் என்று தோன்றுகிறது. வயாப்பண்டம் என்றொரு சொல் புழக்கத்தில் இருந்திருக்கிறது. கருக்கொண்ட மகளிர் விரும்பும் தின்பண்டம் என்று யாழ் அகராதி பொருள் தருகிறது. சரி! கல்யாணப் பண்டம் என்றால் என்ன? 98 வயதான, எந்தப் பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம் தராத, இந்திய அரசாங்கம் ஒரு பத்மஸ்ரீகூட வழங்காத, ஞானபீடத்தின் அருட்பார்வை படாத, மூத்த தமிழ் எழுத்தாளர் கி.ரா.வைக் கேளுங்கள்!

வயாவுயின் எனும் சொல்லுக்கு, To yearn, to give birth, கரு ஈனுதல், to be relieved of pain, வருத்தம் தீர்தல் எனும் பொருள்களும் தரப்பட்டுள்ளன.

வயான் எனில் வயவன் எனும் பறவை, அது காரிப்புள் என்றும் அழைக்கப்படும் என்று இயம்புகிறது பிங்கல நிகண்டு. காரிப்புள் என்றால் king crow என்கிறது பேரகராதி. வயானம் எனும் சொல்லுக்கு, வெறுமனே பறவை என்று மாத்திரம் பொருள் சொல்கிறது சூடாமணி நிகண்டு.

மசானம் எனும் சொல் சமற்கிருதம் என்பார் பேராசிரியர் அருளி. மய்யானம், மயானம், சுடுகாடு, தீயிட்டு உடலைக் கருக்கும் புறக்காடு என்பன தமிழ்ச் சொற்கள். ஸ்மசான் என்பர் இந்தியில். மசானமே நமக்கு மயானம் ஆயிற்று. ஆனால் சுடுகாடு எனப் பொருள் தரும் வயானம் என்றொரு சொல்லும் காணக் கிடைக்கிறது பேரகராதியில்.

சுடுதல், அடுதல் போன்று வயக்குதல் என்றுமொரு சொல்லுண்டு. அன்றாடப் பேச்சில் வசக்குதல் என்பார் நாஞ்சில் நாட்டார். பிற பிரதேசங்களில் வதக்குதல் என்பர். காளையங்கன்றை வண்டி இழுக்க, கலப்பை வலிக்கப் பழக்குதலை ‘காளையங்கன்னை வசக்கணும்’’ என்பார். வயணம் என்பது கன்னட மொழிச் சொல். வயணம் என்றால் விதம், நிலைமை, விவரம், உணவு வளம், நல்லமைப்பு, நேர்த்தி, ஏற்றது, காரணம் என நமக்குப் பல பொருள்கள். ‘நல்ல வயணமா சாப்பிட்டேன்’ என்பார் தஞ்சாவூர் வட்டார வழக்கில்.

வயத்தம்பம் என்றொரு சொல் கிடைக்கிறது. யவ்வனத்தை அதாவது வாலிபத்தை, இளமையை நிலை மாறாமல் நிறுத்தும் வித்தை என்று பொருள். Art of arresting the influence of advancing age in a person என்கிறார்கள் ஆங்கிலத்தில். வயத்தம் என்றால் வசந்தம் என்கிறது இலக்கண அகராதி. எனில் வயந்த மன்னன் என்றால் அவன் மன்மதன் ஆகிறான். வயந்த காலம் எனும் சொல்லோ, வசந்த ருதுவை, வசந்த காலத்தை, Spring-ஐக் குறிக்கிறது.

வயப்புலி என்றால் சிங்கம் என்கிறது திவாகர நிகண்டு. ‘வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே!’ என்பது பாடல்வரி மேற்கோள். ‘நாயர் பிடித்த புலிவால்’ என்பது வேறு. வயப்போத்து என்றால் சிங்கம் என்கிறது பிங்கல நிகண்டு. வயம் எனும் சொல்லுக்கு வசம் என்று பொருள். State of subjucation. “ஏய், மத்தவ இப்பம் புள்ளிக்காரன் கைவசம்லா இருக்கா’’ என்பார்கள். ஒருவன் முறையில்லாமல் ஒரு பெண்ணைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான் என்பதைக் குறிக்கச் சொல்லப்படுவது அது.

தன்வயமாதல் என்றால் தன்வசமாதல். கைவசம் என்பதைக் கைவயம் எனப் பயில்கிறார்களா எங்காவது?

வயம் என்றால் வலி. அதாவது திறல், ஆற்றல், வீரம், திறன் என்றும் பொருள் தருகிறது நாம தீப நிகண்டு. பிதாமகர் கி.ரா. என்னைப்பற்றி எழுதியதோர் குறிப்பில், “நல்ல வசமான கை” என்பார். அதாவது வசம், வயம் என்றால் ஆற்றல், Power, might.

வயம் என்றால் வேட்கை என்பது மற்றொரு பொருள். எனவே வயம் என்றாலும் வயா, Desire. மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் நூலில், 383-வது பாடலில், ‘வயந்தலை கூர்ந்து’ என்கிறார். வயம் தலை கூர்ந்து என்றால் வேட்கை மிகுந்து என்று பொருள் சொல்கிறார்கள்.

வயம் என்றால் பறவை, நீர், முயல் என்று பிங்கல நிகண்டும், குதிரை என்று யாழ்  அகராதியும், ஆடு என்று அகராதி நிகண்டும், கிராம்பு என்று சங்க அகராதியும் பொருளுரைக்கின்றன. சம்பந்தம், இரும்பு என்றும் பொருள்கள் உள. வயம் எனும் சொல்லை மூலம் எனும் பொருளில் பரிபாடல் பயன்படுத்துகிறது என்மனார் புலவ.

வயமா எனில் புலி என்கிறது பிங்கல நிகண்டு. ஐங்குறுநூறின் பாலைத்திணை பாடிய ஓதலாந்தையார்,

“ஞெலிகழை முழங்கு அழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ்சுரம் செலவு அயர்ந்தனையே”

என்கிறார். பாடல் வரிகளுக்கு உரை எழுதியவர்கள் வயமா என்றால் புலி என்றனர். “கடற்கரைத் தலைவனே! மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசித் தீ எழ, அதன் ஒளியும் வெப்பமும் கண்டு அஞ்சும் புலிகளைக் கொண்ட கொடுங்காட்டு வழியில் நீ தலைவியைப் பிரிந்து செல்ல முயல்கிறாய்” என்பது பொருள்.

வயமா எனில் யானை என்றும் பொருள். மா எனில் விலங்கு. கையை உடைய மா, விலங்கு, எனவே கைம்மா என்றான் புறநானூற்றுப் புலவன் வீரைவெளியனார், யானையை. கம்பராமாயணம் சுந்தர காண்டம், ஊர் தேடு படலத்தின் பாடல்:

“தேனும் சாந்தமும் மான் மதச் செறி நறும் சேறும்
வான நாண்மலர் கற்பக மலர்களும் வயமாத்
தான வாரியின் நீரொடும் படுத்தலின் தழீஇய
மீனும் தானுமோர் வெறிமணம் கமழுமால் வேலை”

என்று விரிகிறது. சீதையைத் தேடப்புகுந்த அனுமன் இலங்கை மாநகரின் வளம் பேசும் பாடல் அது.

பொருள் எழுதத்தான் வேண்டும்! தேன், சந்தனம், கஸ்தூரி, சேர்ந்த நறுமணக் குழம்பும், வானில் என்றும் மலர்ந்து மணம் வீசும் கற்பக மலர்களும், வலிமை மிகுந்த யானைகளின் மதநீருடன் கலந்து கடலில் கலப்பதனால், கடல்வாழ் மீன்களும் ஒப்பற்ற நறுமணம் வீசுகின்றன. இது பாடலின் பொருள்.

ஈண்டு நாம் வந்து சேரும் இடம், வயமா எனில் யானை என்பது. அதிலும் குறிப்பாக, எனக்குத் தோன்றுகிறது, ஆண் யானை என்று. ஏனெனில் ஆண் யானைகளுக்கு மட்டுமே மதம் பிடித்து, மதநீர் பொழியும். எனில், வயமா எனில் களிறு எனக் கொள்ளலாமா? எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூறு, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முதற்பிரிவு – களிற்று யானை நிரை. இரண்டாம் பிரிவு – மணி மிடைப் பவளம். மூன்றாம் பிரிவு – நித்திலக்கோவை. வெண்முரசு எனும் பொதுத் தலைப்பில், ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரத நாவல்கள் வரிசையில் ஒன்றின் தலைப்பும் களிற்றுயானை நிரை. ஆவேசமாகத் தமிழ் பேசுவோருக்கு இந்தத் தலைப்பு அர்த்தமாகாது.

எனவே வயமா என்றால் ஆண் யானை என்று கொள்ளலாமா என்பதற்கு ஐம்பது லட்சம் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் சம்மதம் கோருகிறோம் நாம்.

ஆனால் வயமா என்றால் குதிரை என்கிறது ஐங்குறுநூறு. பேயனார் பாடிய முல்லைத்திணைப் பாடல்:

“முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடு
பணைநிலை முணைஇய வயமாப் புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே”

– என்பன நான்கு வரிப் பாடலின் முதன் மூன்று வரிகள்.

பரல் கற்கள் நிறைந்த மேட்டு நிலம் தகரும்படியாக உருளும் வன்மைகொண்ட சக்கரங்களை உடைய தேரானது, வலிமைமிக்க குதிரைகள் பூட்டப்பெற்று புறப்படத் தயாராக உள்ளது என்பது பாடல் வரிகளின் பொருள். இங்கு பாடலில் குறிக்கப்பெற்றுள்ள வயமா எனும் சொல் தரும் பொருள் குதிரை என்பது.

வயமான் என்றால் சிங்கம் என்கிறது பதிற்றுப்பத்து.

பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்துப் பாடிய அரிசில்கிழார் பாடல் வரி,

“இரும்புலி கொன்று, பெருங் களிறு அடூஉம்
அரும்பொறி வயமான் அனைய”

– என்று சேர மன்னனைப் பாடுகிறது. வலிய புலியினைக் கொன்று, பெரும் களிறு வெல்லும் அரிய ஆற்றலைக் கொண்ட சிங்கம் போன்றவனே என்பது பொருள். ஆகவே இங்கு வயமான் என்றால் சிங்கம்.

என்றாலும், புறநானூற்றில் மருதன் இளநாகனார் பாடல், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் பாடும்போது, வயமான் எனில் ஆண்புலி என்கிறது.

“அணங்குடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்துத்
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு”

– என்பன 17 வரிப் பாடலின் முதன் நான்கு அடிகள்.

அச்சம் தரும் பெரிய மலைக் குகையில் இருப்பதை வெறுத்து, கிளர்ந்து நிமிர்ந்த வலிமையுடைய ஆண்புலி, ஊன் விரும்பும் உள்ளம் தூண்ட, அதற்குரிய தீனியைத் தேடித் தான் விரும்பிய திசையில் செல்ல எழுந்ததைப் போல – என்பது பாடல் வரிகளின் பொருள். எனவே இங்கு வயமான் எனும் சொல்லுக்கு ஆண்புலி எனப் பொருள் தரப்பட்டுள்ளது.

வயவரி என்றாலும் புலி என்ற பொருளைத் தருகின்றது திவாகர நிகண்டு. வயமீன் என்றால் ரோகிணி எனும் நாள்மீன் என்பார்கள். வயவன் எனும் சொல்லுக்கு வீரன் என்று பொருள். ‘வயவர் வேந்தே!’ என்றுரைக்கும் பதிற்றுப்பத்து. வயவு என்றால் வலிமை என்றும் பொருள். வயவு என்றால் மசக்கை என்றும் பொருள்.

“வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
பகைவர் உண்ணா அருமண்ணினையே”

என்று குறுங்கோழிக்கிழார், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடுகிறார்.

‘மசக்கை நோய்ப்பட்ட பெண்கள் உன் மண்ணை விரும்பி உண்பார்கள் மன்னனே! அஃதல்லாது பகைவர் வெற்றி கொள்ளாத மண்ணை உடையவன் நீ!’ என்பது பொருள். ‘பகைவர் உண்ணா அருமண்ணினையே’ என்றால் பகைவர் அபகரிக்காத, ஆக்கிரமிக்காத, கைப்பற்றாத அரிய நிலம் உன்னது என்று பொருள்படும். இங்கு மண்ணைக் கவ்வுவது என்றால் மாறுபட்ட பொருள் தந்துவிடும்.

வயவு என்ற சொல்லுக்குப் பேரகராதி Desire, Love, Affection, விருப்பம் என்று பொருள் தருகிறது. ‘வயவேற நனி புணர்மார்’ என்கிறார் நல்லந்துவனார், பரிபாடலில், வையையைப் பாடும்போது. காதல் வேட்கை மிகும்போது இறுகப் புணரும் பொருட்டு என்று பொருள் உரைக்கிறார்கள். ஆக, வயவு ஏற என்றால் காம வேட்கை மிகும்போது என்று பொருளாகும்.

மசக்கை நோயை, வயவு நோய் என்று குறிக்கிறது கலித்தொகை. எனவே, வயா, வயம், வயவு எனும் சொற்கள் வேட்கையையும் மசக்கை நோயையும் குறித்தன என்பதனை அறிகிறோம்.

வயனம் என்றும் ஒரு சொல் காணக் கிடைக்கிறது. வசனம் என்பது பொருள். எங்கள் பக்கம், என்ன வாசிக்கிறாய் என்று கேட்பதற்குப் பதிலாக, “என்ன வாயனை?” என்பார்கள். வாசக சாலையை, வாயன சாலை என்பார்கள் மலையாளத்தில். திருவனந்தபுரம், பேட்டை எனும் பகுதியில் வசிக்கும் மூத்த தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவன், முன்பு குடியிருந்த தெருவின் பெயர், ‘வாயன சாலை கிருஷ்ண பிள்ளை தெரு’’ என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

வயனம் என்றால் வேதம் என்று ஒரு பொருள். பழமொழி என்று இன்னொரு பொருள். ஊர்ப்பக்கம் இன்றும் சொல்கிறார்கள் – “யேய்! அவகிட்ட வாய் குடுத்திராத… நல்ல வசனமாகப் பொழிஞ்சு தள்ளீருவா!” என்று. இங்கு வசனம் – வயனம் – பழமொழி.

திருவாசகத்தில் திருச்சாழல் பகுதியில் மாணிக்கவாசகர் பாடுகிறார்,

“அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச் செய்தான் காணேடி
நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ”

– என்று.

‘பிரம்மனை, மன்மதனை, யமனை, சந்திரனைப் பழிச்சொற்கள் மாயா வண்ணம் ஊறுகள் செய்தான், கண்கள் மூன்றுடைய சிவன். அவனே இவ்விதம் தண்டித்தால், வானவர்க்கு என்றுமே வெற்றியன்றோ!’ இது பொருள்.

எழுதுவோருக்கும், தட்டச்சு செய்வோருக்கும் எத்தனை எளிதான சொல் வயா! ஆசையை, விருப்பத்தை, வேட்கையைக் குறிக்க ‘அவா’ என்று எழுதுவதைப்போல, மசக்கை, மயற்கை, சாக்கோட்டி என்று எழுதுவதற்கு மாற்றாக வயா, வயம், வயவு என்று எழுதலாம்.

எதற்கு இத்தனை சீண்ட்றம் பிடித்த வேலை, மசக்கை என்றொரு சொல் போதாதா என்பீர்கள்! எதற்கு இத்தனை சினிமாக் கதாநாயகர்கள் ஆடிப்பாடி, சண்டை போட்டு, காதல் செய்து துன்பப்பட வேண்டும்? ரஜினிகாந்த் ஒருத்தர் போதாதா?

7 Replies to “வயாகரா”

  1. கொரோனா தரும் வயாவிற்கு நல் மருந்து நாஞ்சில் நாடனின் கட்டுரை. சிரித்து மாளவில்லை. அதே நேரத்தில் அவரின் வயங்கு சொல்லாராய்ச்சியும் கல்வியும் மெய்வருத்தமும் வியக்க வைக்கின்றன. வாழ்க எம்மான்!

  2. ஒவ்வொரு முறையும் இவர் கட்டுரைகளை படிக்கும் தோறும் இவர் சொற்பொழிவுகளைக் கேட்கும் தோறும் இவரோடு உரையாடும் தோறும் எமக்குத் தோன்றும் வியப்பும் மகிழ்ச்சியும் அளவிடமுடியாத ஒன்று சமீப காலங்களில் தமிழை ஆழ்ந்து ஆய்ந்து வியந்து ஓதி உணர்ந்தது போலே உரைக்கின்ற ஆசிரியர் எழுத்தாளர் இவர் அன்றி யாரே உளர்! வாழ்க அவர் புகழ் வளர்க அவர் தமிழ்த்தொண்டு நீள்க அவர்ஆயுள் .அமர நாதன்

  3. நாஞ்சிலின் சொல்லாய்வு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே செல்கிறது என்பதைக் காட்டுகிறதுஇக்கட்டுரை. புத்தகம் வாங்குதலில் தொடங்குகிறார். பின்னர் vat என்பதைப் பற்றிச் சொல்லி, வயா என்பதற்கு மசக்கை எனக் கம்பன் கையாண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறார். வயா என்பது தமிழ்ச்சொல்தானே என ஆய்வு நடத்தி, கி.ராவிற்கு எந்த விருதும் வழங்காமைக்குத் தம் ஆற்றாமையையும் பதிவு செய்திருக்கிறார். பன்முகத்தன்மையுடன் விளங்கும் அருமையான கட்டுரை

  4. நானும் ஓர் தமிழாசிரியன்தான். ஆனாலும் அய்யா மானமிகு நா நா அவர்கள் தமிழாசிரியர்களைப் பற்றிய சீற்றம் தவறானது அல்ல. நாலுவரி பிழையில்லாமல் எழுதத் தெரியாதவரெல்லாம் முனைவர் பட்டம் பெறுவதை வைத்தே ,அவரின் தமிழறிவை புரிந்துக் கொள்ள முடியாதா . பள்ளி கல்லூரிப் பாட புத்தகங்களில் படித்திராத, வேறு அய்ம்பது திருக்குறளேனும் எத்தனைப் பேருக்குத் தெரியும். “நான் கண்டத் தறுதலைத் தமிழாசிரியர்”எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுங்கள் அய்யா .நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.