மற்றவர்கள் வாழ்வுகள்- 2

ரிச்சர்ட் ரூஸ்ஸோ

[தமிழாக்கம்: மைத்ரேயன் ]

நாம் கதை சொல்கிறோம், ஏனெனில் நமக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். அப்படி ஆகத்தான் வேண்டும் என்று உணர்வதற்கு மூல உந்துதல் நம் திறமை, அல்லது அறிவுச் சேமிப்பு, அல்லது ஆய்வுகள் மூலமோ, நம் சொந்த அனுபவங்கள் மூலமோ கிடைக்கிற நம்பகத்தன்மை ஆகிய எதிலிருந்தும் கிட்டுவதன்று. அது ஒரு மர்மம். நமக்கு என்ன தெரியாதென்றால், நம்மை எது விளிக்கிறது என்பதுதான். நான் ‘எல்ஸ்வேர்’ புத்தகத்தை எழுதத் துவங்கியபோது, எல்லாம் மூடுமந்திரமாகத் தெரிந்தது, குறிப்பாக அந்தப் புத்தகத்தின் வினோதமான அவசரப்படுத்தல். நான் வேறொரு நாவலில் ஆழமாகப் புதைந்திருந்தேன், கோலாகலமாக எல்லாம் போய்க்கொண்டிருந்தது, அப்போது ‘எல்ஸ்வேரின்’ ஈர்ப்பு விசையை முதல் தடவையாக உணர்ந்தேன், அப்போது நான் அதைச் சட்டை செய்யாமல் இருக்கவே பெரிதும் விரும்பினேன். எழுதிக் கொண்டிருக்கிற ஒரு புத்தகம் எனக்கு அத்தனை சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கையில் , அதை விட்டுவிட்டு, நிச்சயம் மனத்துன்பத்தையே கொணரும் என்று சுட்டிக் கொண்டிருக்கிற ஒரு புத்தகத்தை ஏன் எழுத ஆரம்பிக்க வேண்டும்? அந்தக் கதையில் தவிர்க்க முடியாததாகத் தெரிந்தது, எனக்கும் என் அம்மாவுக்கும் இடையில் ஏதோ இன்னும் தீர்மானத்துக்கு வராததாக இருப்பதாகக் கோடி காட்டியது, ஆனால் அதெப்படி இருக்க முடியும்? அவருடைய வாழ்க்கை இடர் கடினமான ஒன்று, அவர் இறுதி ஓய்வைப் பெற்றுவிட்டார். அதை ஏன் கிளற வேண்டும்? அந்தப் புத்தகம் அவரும் நானும் எப்படி மாறுபட்ட குணங்களைக் கொண்டவர்களாக இருந்தோம், அது எப்படி எங்களிடையே பல பத்தாண்டுகளுக்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத பிடிவாதத்தால் இழுபறியான நிலை நிலவியதைப் பற்றியதாக இருக்கும் என்று ஊகித்தேன். நான் மட்டும் பெரிய, மேலும் சிறிய விஷயங்களில் அவருடைய கட்சியை ஆதரித்திருந்தால், அவர் நிலைப்பாடு சரியில்லை என்று நான் நினைக்கும்போதும் அவர் சரியான நிலைதான் வைத்திருக்கிறார் என்று ஆமோதித்திருந்தால், தன்னை வேட்டையாடி நசுக்கிய கடும் உளைச்சல்கள் பலவற்றிலிருந்து தான் ஆசுவாசம் பெற்றிருக்க முடிந்திருக்கும் என்று அவர் நினைத்தார். என்னால் ஏன் பாவனைகூடச் செய்ய முடியவில்லை? அதென்ன, அவர் என்ன பெரிதாகக் கேட்டு விட்டார் என்னிடம்? நாங்கள் ஏன் தீர்வு காணமுடியாதபடிக்கு பல நேரமும் எதிரும் புதிருமாய் நின்றோம்? நாங்கள் இருவரும் பரஸ்பரம் அன்பு பாராட்டினோம் என்பது அவருக்குத் தெரியும். அவர் வேறு எது இல்லை என்று நினைத்தார்? ஆனால் நடந்தது என்ன: என் அம்மாவும் நானும் எவ்வளவு வேறுபட்டவர்கள் என்று காட்டுவதற்குப் பதிலாக, எல்ஸ்வேர் புத்தகம் அச்சுறுத்தும் வகையில் நாங்கள் இருவரும் எத்தனை தூரம் ஒன்றுபோலவே இருந்தோம் என்பதையே சித்திரிப்பதாக அமைந்தது. நான் தவிர்க்க முடியாது என்று காட்டி என்னை இழுத்துப்போன அந்தச் சக்தி வீச்சு, நான் என்ன புரிந்து கொண்டிருந்தேன் என்பதைப் பற்றியதாகவே இல்லை, மாறாக நான் பிடிவாதமாக எதைத் தெரிந்துகொள்ள மறுத்தேனோ அதைப் பற்றியதாகவே இருந்திருக்கிறது. இதுதான் அந்தத் தீர்வு பெறப்படாத விவகாரம் என்று நான் உணர்ந்தாலும், என்னால் தெளிவாகச் சொல்லிவிட முடிந்திராத ஒன்று. இறுதியில், தவிர்க்க முடியாதது என்று ஓர் எழுத்தாளர் உணர்வது ஓர் அற நிர்பந்தமாக இருக்கிறது, இதைச் செய், அதைச் செய்யாதே என்று நம்மைப் பிடரியில் குத்திச் செலுத்துகிறது, அதை நாம் அசட்டை செய்யும்போது, நம்முடைய மையச் செயல்திட்டம் பழுதாகிவிடுகிறது. நமக்கேகூட நம்மால் விளக்கிவிட முடியாதிருப்பது என்பது, அதன் சக்தியைக் குறைப்பதில்லை.

கற்பனைக்குப் பிரதானத் தடை, சேகரிக்கப்பட்ட அறிவின் போதாமையோ, வாழ்ந்த அனுபவமோ இல்லை. அதிக நேரமும், நம்மைப்பற்றி நாம் எண்ணியிருப்பனதான் தடைகள், அவற்றை மீறிச் செல்ல நமக்குத் தேவை இருக்கிறது. கதை சொல்வதற்கு நான் காலம் தாழ்த்தித்தான் வந்தேன், பல எழுத்தாளர்கள், ஓவியர்கள், இசைக் கலைஞர்கள், மேலும் இதர கலைஞர்களைப் போலவே, நானும் எழுதுவதில் நல்ல நிலையை அடைவதற்கு வெகுகாலம் முன்னரே அந்தக் கலையைப் பயிலும் வழிமுறையால் ஏற்கெனவே வசீகரிக்கப்பட்டிருந்தேன். கல்லூரியில் இங்கிலிஷை என் பிரதானப் பாடமாக எடுத்துக் கொண்டிருந்தபோதே நான் ஏன் புத்தகம் படிப்பதை அத்தனை விரும்பினேன் என்பதை அறியத் தொடங்கி இருந்தேன். ஆனால் கதைகள் எழுதுவது என்பது அதையும்விட மேலும் ஊட்டம் தருவதாக இருந்தது என்பது இறுதியில் புரிந்தது. நான் எப்படிப்பட்டவன் என்று அறிந்திருந்தேனோ, அந்த நபரைவிட மேலானவனாக ஆகவேண்டும் என்பது எப்போதுமே என் குறிக்கோளாக இருந்தது, இங்கேயோ அந்த இலக்கை நிஜமாகவே அடைய உதவும் ஒரு வழி எனக்குத் திறந்திருந்தது. எழுத்தாளனாக ஆகத் தீர்மானிப்பதில் என்றோ ஒருநாள் நான் ஒரு திறமைசாலி என்பதைக் காட்டுவேன் என்ற சாத்தியப்பாடு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அந்தச் செயல் அதனளவிலேயே ஒரு வெகுமதியாக இருந்தது. நான் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டவனாக இனி எனக்குத் தோன்றாது. ஆமாம், நான் நானேதான், என்று யோசித்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் கொஞ்ச காலத்துக்கு, நான் நீங்களாகவும் இருக்க முடியும்.

இந்த வருடத் துவக்கத்தில், ஒரு புத்தக வியாபாரியான என் மூத்த மகள் எமிலியிடம், படைப்புக் கற்பனையும், அதன் அற வேகமும் என்பதைப் பற்றி நான் ஒரு புத்தகம் எழுத உத்தேசித்தேன் என்று சொன்னபோது, அவள் கொஞ்சம் கூசினாள், பிறகு என்னிடம் சுவாரசியமான ஒரு மாற்று யோசனையை முன்வைத்தாள். ஒரு நினைவுக் குறிப்பு நூலை எழுதுவதற்காக எழுதிக் கொண்டிருந்த நாவலை ஒத்தி வைத்துவிடச் செய்த அந்த மர்மமான சக்தி மறுபடியும் தோன்றி முன்னைவிடவும் சந்தேகாஸ்பதமாகத் தெரியும் ஒரு புத்தகத்தை எழுத உந்திற்று என்றால் என்ன ஆகும்? ஒருவேளை அமெரிக்காவில் ஒரு கருப்பினத்து ஆணாக இருப்பது எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய நாவல் ஒன்றை எழுதவேண்டும் என்று வலுக்கட்டாயப்படுத்தும் உந்துதல் எழுந்தால் நான் என்ன செய்வேன்? ஓ, இதெல்லாம் நடக்குமா என்கிறீர்களா? ஒரு வெள்ளையின எழுத்தாளரை இப்படி எழுதத் தூண்டும் ஓர் உந்துதல் எங்கேயிருந்து திடீரென்று எழும் என்று கேட்கிறீர்களா? அது ஒரு நியாயமான கேள்விதான் – ஆனால் பாருங்கள், அதுவும் நேர்கிறது.

ஜான் ஹாவர்ட் க்ரிஃபின் என்பாரைச் சற்றுக் கவனியுங்கள், 1950களில் இவர் தன் தோலைக் கருப்பாக்கிக் கொண்டார், அவருடைய வார்த்தைகளில், “நீக்ரோவாக” தீர்மானித்தாராம்.  ஜிம் க்ரோ நிலவிய அமெரிக்கத் தென்பகுதிகளில் தான் பயணித்தபோது கிட்டிய அனுபவங்களை அவர் ஒரு புத்தகமாக எழுதினார், “ப்ளாக் லைக் மீ” என்ற அந்த நூல் ஏராளமாக விற்பனை ஆனது. அத்தனை விற்பனை எல்லாம் ஆனாலும், அந்தப் புத்தகத்தின் எழுத்திலோ, பிரசுரிப்பிலோ சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கும் நோக்கம் ஏதும் தென்படவில்லை. (க்ரிஃபினுமாகட்டும் அவரது பிரசுரகருமாகட்டும் இருவரும் ஆய்வாளர்கள் படிக்கக்கூடிய வகையிலான ஒரு புத்தகத்தை, குறைந்த பிரதிகளே அச்சிடத் தேவையான ஒரு நூலுக்குத்தான் திட்டமிட்டிருந்தனர்.)  அந்த எழுத்தாளருக்கு, தெற்குப் பகுதிகளில் பயணம் செய்யும் ஒரு கருப்பின ஆணுக்கு எப்படி இருக்கும் என்பதை, தன் அனுபவமாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்திருக்கிறது போலத்தெரிகிறது. எவ்வளவு நல்ல எண்ணத்தோடு செய்திருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட அனுபவத்தைப் பற்றி எழுதுவதற்கு அவர் தவறான நபர் என்று வாதிட இடமுண்டு. ஆனால், அந்த வரலாற்றுப் பின்னணியை மனதில்கொண்டு பார்த்தால், இந்தத் தவறான மனிதர் அந்தக் கதையைச் சொல்லப் பொருத்தமானவர் என்றும் வாதிடமுடியும். என்ன இருந்தாலும், கறுப்பின எழுத்தாளர்கள் இனவெறுப்பின் அமில அரிப்புப் பற்றிப் பல பத்தாண்டுகளாக எழுதிக்கொண்டுதான் இருந்தனர், ஆனால் வெள்ளை இன வாசகர்கள் அவற்றுக்குச் செவி மடுக்கவில்லை, கடைசியில் அவர்களில் இருந்து “ஒரு நம்மவரே” எடுத்துச் சொன்னதுதான் பலித்தது. க்ரிஃபின் என்ன செய்யவில்லை என்பது, அவர் என்ன செய்தாரென்பதைப் போலவே சுவாரசியமானது. அவரே ஒரு கதாசிரியர் என்றபோதும், அவர் ஒரு புனைவு நூல் எழுதவில்லை.  மாறாக ‘ப்ளாக் லைக் மீ” புத்தகம் ஒரு கலப்புப் புத்தகம், “அ-புனைவு நாவல்.” (ட்ரூமன்) கபோடீ மற்றும் மெய்லருக்கு முன்னோடி.  தன் அனுபவங்களைப் புனைவாக எழுதாமல் இருக்க க்ரிஃபின் முடிவெடுத்தது, கருப்பின ஆணாக அவர் நடத்தப்பட்ட அனுபவத்தை வைத்துக்கொண்டு அவர் பிறக்கையில் கருப்பின ஆணாகப் பிறந்து, வாழ்நாள் பூராவும் அதேபோல வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்வு எப்படி இருக்கும் என்று தான் கற்பனை செய்ய முடியும் என்று அவர் நம்பவில்லை என்பதைக் காட்டுகிறது. “ப்ளாக் லைக் மீ” புத்தகத்தின் பிரசுரத்துக்குப் பிறகு அவர் மார்டின் லூதர் கிங், டிக் க்ரெகரி, மற்றும் குடியுரிமை இயக்கத்தின் இதர முக்கிய உறுப்பினர்களோடு நட்பை உருவாக்கிக் கொண்டார்.  ஆனால் காலப்போக்கில், க்ரிஃபின் தன்னுடைய பிரபலமான புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்கு மேன்மேலும் அதிகச் சங்கடப்பட்டார். தன்னைவிட மேலும் அசலான குரல்கள் அங்கு இருந்தன, தன்னைவிட அவர்களுக்கே ஒலிபெருக்கியின் முன் இடம் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

ஆனால் இதெல்லாம், ஓர் அசாதாரணமான சோதனையை மேற்கொள்ளத்தான் என,  க்ரிஃபின் உணர்ந்திருக்கக்கூடிய ஓர் அறவுணர்வின் வற்புறுத்தலைச் சிறிதும் மறுதலிக்கவில்லை. இது உடனே புலப்படும் ஒரு கேள்வியை எழுப்புகிறது – ஒரு செயல்திட்டம் தன்னிடம் அதைச் செய்தாக வேண்டுமென்ற அறவுணர்வாலான அழுத்தத்தைக் கொணரும்போது, அந்தத் திட்டம் பிறருக்கு அறவுணர்வின் அழுத்தத்தால் செய்யப்பட்டதாகத் தெரியாமல், சீலமற்ற சந்தர்ப்பச் சுரண்டலாகத் தெரியவரும் என்றுமிருந்தால், ஓர் எழுத்தாளர் அந்த அழுத்தத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அது அந்தக் கேள்வி. ஏனெனில் நாம் படைப்பூக்கத்தின் கற்பனைத் திறனை ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்தாலும், அதில் உள்ள ஆபத்துகளை அசட்டை செய்பவர் ஒரு முட்டாளாகவே இருப்பார். என் மகள் எனக்கு ஒன்றை நினைவூட்டினார், யாராலும் அனைத்தையும் சரியாகப் பிடித்துவிட இயலாது, ஒரு கருப்பின ஆணாக அமெரிக்காவில் இருப்பது எப்படி உணர்கிறது என்பது பற்றிய நாவலை நான் முடித்து அனுப்பும்போது, அந்தப் பிரதியைப் படிக்கப்போவது அநேகமாக வெள்ளையர்களாகத்தான் இருப்பார்கள். புத்தகப் பிரசுரத் தொழிலில் சற்றேறக் குறைய 80 சதவீதத்தினர் வெள்ளையர்தான். என் பதிப்பாசிரியர் அநேகமாக வெள்ளையராகவே இருப்பார், என் நாவலை புத்தகக் கடைகளிடம் விற்பனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு விளம்பரம் செய்யும் விற்பனைப் பிரதிநிதிகள் வெள்ளையராகவே இருப்பார்கள். இதனாலெல்லாம் என்ன என்றால், என் புத்தகத்தில் நான் தவிர்க்க வேண்டிய பிழைகள் என்று நினைப்பது எதுவும் கண்டு பிடிக்கப்பட்டு, புத்தகம் அச்சுக்குப் போகுமுன் நிவர்த்தி செய்யப்படுவது என்பது நடக்கச் சிறிதும் வாய்ப்பில்லை. பொதுமக்கள் முன்னே நான் சென்று, வாசகர்களுக்கு என் விரிந்த, நம்பிக்கை நிறைந்த சிரிப்பை வீசும்போது (ஆல் ஜொல்ஸன் பிரும்மாண்டமான திரையில் த ஜாஸ் ஸிங்கர் படத்தைப் பார்த்து, ‘தத்ரூபமாகப் பிடித்திருக்கிறார்கள்!’ என்று நினைப்பதை நாம் கற்பனை செய்து கொள்ளலாம்) யாரும் அந்தச் சிரிப்புக்குச் சாதகமாக மறுவினை செய்யமாட்டார்கள். விஷயம் நன்கு தெரிந்த மனிதர்கள், நான் எழுதியது சிறிதும் பொருத்தமற்ற சித்திரிப்பு என்று என்னிடம் சொன்னால் நான் என்ன செய்வேன்? என்னால் ஆன மட்டும் சிறப்பாக முயன்றபின் இப்படிக் கேட்க நேர்ந்தால் அதனால் நான் புண்படுவேனா? வெட்கப்படுவேனா? (அட பரிதாபமே, என்ன நினைத்து இதை எழுதத் துணிந்தேன்?) ஆழமாகக் குறைபாடு உள்ள புத்தகத்தைக்கூட எழுதுவது எத்தனை கடினமான செயல் என்று புரிந்து கொள்பவர்கள் அநேகமாக இல்லவே இல்லை என்பதைப் பார்த்து எனக்கு வெறுப்பு எழுமா? ஆனால், இறுதியில் இது எதுவும் எனக்கு நேர்ந்த சங்கடமான நிலை பற்றியதே அன்று. நான் விளைத்த பொல்லாங்குக்கு மாறாக, மேம்பட்ட நன்மை பெறத்தக்கவர்களாக இருந்த மக்களைப் பற்றியது.

முன்பு நன்கு விற்பனை ஆன நாவல்களை எழுதியவன் என்ற காரணத்தால், என் பிரசுரகர்த்தர் எனக்குப் பெருந்தொகை ஒன்றைக் கொடுத்து இந்த நாவலை எழுதச் சொல்லி இருந்தார், இதுவோ என்னுடைய சிறப்பான முயற்சிகளுக்குப் பிறகும் பிழைகள் பல கொண்டதாக இருந்திருந்தால் என்ன செய்வது? இதே கருப்பொருளைக் கொண்டு, தான் எழுதிய நாவல் ஒன்றை விற்க முயன்று கொண்டிருக்கும் ஒரு கருப்பின எழுத்தாளருக்குக் கிட்டியிருக்க வேண்டிய வாய்ப்பு, எனக்குக் கொடுக்கப்பட்டதால், குறைந்து போய்விடாதா? மற்றவரின் குரல் இப்படி மௌனமாக்கப்பட்டதில் நானும் உடந்தையாக ஆனது பற்றி நான் எப்படி உணர்வேன்? (உயர்வாக அன்று.)  இது ஏற்கெனவே அடிக்கடி நடப்பதில்லையா? (ஆமாம், அதைப் பற்றி எனக்கு ஐயம் ஏதும் இல்லை.) முன்னெப்போதும் இல்லாத விதத்தில், இன்று எழுத்தாளர்களின் வரிசை பலவகைப்பட்டதாகக் கலந்துகட்டி இருக்கிறதே, புதுக்குரல்கள் மேன்மேலும் வெற்றிபெற்று வருகின்றனவே என்று நாம் நிச்சயம் வாதிடலாம், இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால், பிரசுரிக்கும் தொழில்துறையே பலவிதமாகக் கலவையாக ஆகாத வரையில், நாம் எல்லோருக்கும் சமவாய்ப்புக் கிட்டுகிறது என்று மெத்தனமாக இருக்க முடியுமா? (முடியாது.) குறைவாக வெளிப்பாடு கிட்டிய பல சமூகங்கள் அவற்றைப் பற்றிய தவறான சித்திரிப்பால் நஷ்டமடைந்திருக்கின்றன என்பதைப் பற்றி நான் யோசிக்க முயன்றேனா, (ஆல் ஜோல்ஸன் அப்படி முயன்றாரா?) (ஐயோ, இல்லை.)

என் மாதிரி எழுத்தாளர்கள், (வயதில் மூத்தவர்களும், வெள்ளையினத்தவரும், ஆண்களுமானவர்கள்) இலக்கியக் கற்பனை எங்களது வியாபாரப் பொருள் என்று கற்பிக்கப்பட்டவர்கள், அதை ஆதரிக்கத் தாவி முன்வரும்போது, அது இப்போது எழுதவரும் எழுத்தாளர்களுக்கு, அதுவும் யதார்த்தம் முழுதும் மாறிவிட்டிருக்கிற பிரசுரச் சூழலில் நுழைவோருக்கு எப்படி ஒலிக்கும் என்பதைச் சரிவரப் புரிந்துகொள்வதில்லை. நான் நுழைந்தபோது, புத்தகங்களை முன்வைக்கப் பல பிரசுரகர்கள் இருந்தார்கள், அந்தப் போட்டி எழுத்தாளர்களுக்குப் பெரிய தொகைகளை விலையாகக் கொணர்ந்தது. அன்று, பெரும் தொழில் நுட்பம் அச்சுப் புத்தகங்களைத் தாழ்வாக ஆக்கிக் கொண்டிருக்கவில்லை, மேலும் இன்றைப்போல அன்று கணினிகள் மூலம் புத்தகங்களைத் திருடுவது உருவாகி இருக்கவில்லை. வலையுலகு க்ளிக் செய்யத் தூண்டில் இரைகளைக் கொடுத்து, மக்களின் கவனத்தைத் தொடர்ந்து களவாடி இருக்கவில்லை. செய்தித்தாள்கள் இன்னும் ஆரோக்கியமாக இருந்ததால், புத்தக மதிப்புரைப் பக்கங்கள் கொண்டிருந்தன. தீவிரமான, முக்கியமான புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்கள் தாம் பெரும் செல்வத்தை அவற்றின் மூலம் பெறமாட்டோம் என்று தெரிந்து கொண்டிருந்தாலும், அவர்களுக்குத் தொடர்ந்து தொழில் வாழ்க்கை என்று ஒன்று இருந்தது, அதேபோல நீண்ட கட்டுரைகளை எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தொழில் வாழ்க்கை கிட்டியது. இளம் எழுத்தாளர்கள்கூடப் புத்தக விளம்பரப் பயணத்தில் அனுப்பப்பட்டார்கள், அந்த வகைச் சுற்றுப் பயணங்களால் பிரசுரகர்த்தர்களுக்கு வியாபாரம் பெரும் அளவில் நடக்கவில்லை என்றாலும், பிரசுரகர்த்தர்கள் நீண்டநாள்க் கணக்குப் போடத்தக்கவர்களாக இருந்தனர். புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் வளர வாய்ப்பளிப்பது அவர்களுடைய எதிர்காலத்துக்கு அவசியமாக இருந்தது. சில பிரசுரங்கள்தான் தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்பதனப் பெட்டிகள், கார்களை எல்லாம் விற்றுக்கொண்டிருந்த பலதுறைப் பெரும் நிறுவனங்களின் வசம் இருந்தன. (அதனால் அவை மற்ற பொருட்களில் கிட்டும் அளவு லாபம் புத்தகங்களிலும் கிட்டவேண்டும் என்று எதிர்பார்த்தன.)

இதை எல்லாம் கருதினால், இன்று நுழையும் எழுத்தாளர்கள் தாம் விருந்துக்குத் தாமதமாக வந்துவிட்டோம், முன்னதாக வந்தவர்கள் வைக்கப்பட்டிருந்தவற்றை எல்லாம் மேய்ந்துவிட்டார்கள், எல்லா ஷாம்பெய்ன் மதுவையும் குடித்துத் தீர்த்துவிட்டார்கள், பிறகு மிக சௌகரியமான நாற்காலிகளைப் பிடித்துக்கொண்டு, அங்கிருந்து படைப்பூக்கமுள்ள கற்பனை, அதை எல்லா எழுத்தாளர்களும் பயன்படுத்துவதைத் தடை செய்யக்கூடாது என்று ஏதோ கதையடிப்பதை நிறுத்துவதில்லை என்று கருதினால் அது பிழையாக இராது. அவர்களுக்கு நம்முடைய நிஜமான நோக்கம் நாம் ஏற்கெனவே சேகரித்துக்கொண்ட சிறப்பு வசதிகளைத் தக்கவைத்துக் கொள்வதுதான், அதை நாம் நமக்குச் சேரவேண்டிய உரிமையாகக் கருதுகிறோம் என்றுதான் தோன்றும். நம்மை வெளியே அழைத்துச் சவால்விட்டு, விவாதத்தை யார் உடைமையாளர் என்பதன் பால் திருப்புவதையும், சில கதைகள் மட்டுமல்ல, என்ன கருப்பொருட்களைக் கொண்டு அக்கதைகள் பின்னப்படுகின்றனவோ அவையுமே “ எங்களைப் போன்ற மனிதர்களுடையவை,” ‘உங்களைப் போன்றவர்களுடையதல்ல,” என்று சொல்வதையும் தவிர வேறென்ன வழி அவர்களுக்கு இருக்கிறது? சரிதான், அது எனக்குப் புரிகிறது, நான் அந்த முயற்சிக்குப் பரிவுணர்வுதான் கொண்டிருக்கிறேன், ஆனால் வேறொன்றையும் சுட்ட விரும்புகிறேன். இந்த விதமான சர்ச்சை  உடைமையுரிமையைப் பற்றி ஆனால் அது கலையிலிருந்து வியாபாரத்துக்கு உரையாடலை நகர்த்திவிடுகிறது. அவை இரண்டும் எந்நேரமும் எதிரெதிராகவே இருக்கின்றன. உண்மையில் பணம் அங்கே நுழையும் வரையில் நாம் இப்படி எல்லாம் ஆத்திரம் கொள்வதில்லை. ஆமாம், பண்பாட்டைக் கவர்தல் என்பது முக்கியமான விஷயம்தான், ஆனால் பத்தாயிரம் டாலர் முன்தொகை பெறும் புத்தகங்கள், முதல் பதிப்பில் எட்டாயிரம் பிரதிகள் அச்சிடப்படும் புத்தகங்கள் இந்த வகை சீற்றத்தைக் கொணர்வதில்லை, அவை மிக மோசமான எழுத்தாக இருந்தால்கூட கவனத்தில் வருவதில்லை. ’அமெரிக்கன் டர்ட்’ என்ற புத்தகம், ஒரு வெள்ளை அமெரிக்கப் பெண் எழுதியது. போதைமருந்துக் கடத்தல் கும்பல் (கார்டெல்) ஒன்றிடமிருந்து தப்பித்து ஓட முயலும் ஒரு மெக்ஸிக புத்தக வியாபாரியின் கதை.  அந்த நாவலின் இலக்கிய மதிப்புகள் பற்றிச் சூடான விவாதம் நடந்தது, புத்தகப் பிரசுரத் தொழிலுக்கு அவசியமானதுதான். ஆனால் அது எழக் காரணம், அந்தப் புத்தகத்துக்குக்காக எழுத்தாளருக்குக் கொடுக்கப்பட்ட ஏழு இலக்க முன் தொகையும், அதை விற்க நடந்த ஆரவாரமான விளம்பரங்களும்தான் இப்படி ஒரு படை திரண்டு அணிவகுத்துக் கருத்துப் போர் நடக்கவும், தூற்றல்கள் பரிமாறப்படுவதற்கும் காரணம்.

என் கருத்தில், இந்தக் களேபரத்தில் நாம் இழந்தது என்ன என்றால், இலக்கியக் கற்பனையின் போதாமைகளைப் பட்டியலிட நாம் செலவழித்த அத்தனை நேரமும்தான். அதெல்லாம் அக்கற்பனையின் சாதனைகளைக் கொண்டாடச் செலவிடப்பட்டிருக்க வேண்டியவை. புத்தகங்கள் குறைபாடுகளுள்ளவை ஏனெனில் அவற்றின் படைப்பாளர்கள் குறைபாடுள்ளவர்கள். ஆமாம், எழுத்தாளர்கள் மர்மமானவற்றால் வசீகரிக்கப்பட்டு, அதைப் புரிந்துகொள்ளும் உந்துதலால் இயக்கப்படுகிறார்கள் என்றாலும், அவர்களே பணத்தாலும், புகழாலும்கூட உந்தப்படுகிறார்கள். அரைவேக்காட்டுப் படைப்புகள் அநேக நேரம், மிகக் கவனமாக நுணுகிச் செய்யப்படும் கலைப்படைப்பைவிட அதிகமான சன்மானம் பெறுகின்றன, ஆணவத்திற்கு அடக்கத்தைவிட அதிகம் மரியாதை கிட்டுகிறது, கச்சிதத்தைவிட வேகத்துக்கே மதிப்பு கிட்டுகிறது. நாம் என்னதான் முழு முயற்சி எடுத்து நம்மைவிட மிகவும் வேறுபட்ட மனிதர்கள் எப்படி உணர்ந்து செயல்படுகிறார்கள் என்பதைக் கற்பனை செய்ய முயல்கிறோம் என்றாலும், நாம் வெல்லும் தருணங்களைவிடத் தோற்கும் முறைகள்தான் அதிகம் என்பது உண்மையாக இருக்கலாம். அப்படியானால், எது முக்கியமாகிறது? நம்முடைய அநேகத் தோல்விகளா, அல்லது எப்போதோ ஒருமுறை நமக்கெதிரான அத்தனையையும் தாண்டி, நாம் எப்படியோ மிகச் சரியாக ஒன்றைப் படைக்கிறோமே அதுவா? ஏனெனில், நாம் வெல்லும்போது அந்த விளைவுகள் உன்னதமாகவே அமையும். அப்போது அடையாள அரசியல் உதிர்ந்துபோகும். ’த க்ரேட் பிலீவர்ஸ்’, ரெபெக்கா மக்காயின் நாவலை எடுத்துக்கொள்வோம். எய்ட்ஸ் நோய்க்குப் பலியான ஒரு தலைமுறை தற்பால் விழைவு கொண்ட ஆண்களின் கதை, ஒரு மறுபால் விழைவு கொண்ட பெண்ணாலா எழுதப்பட்டிருக்க வேண்டும்? அவருக்கு என்ன துணிச்சல்? ஆனால் ஆழ்ந்து நோக்கினால், அந்த நாவலைப் படிப்பவரில் யார் இந்தக் கேள்வியைக் கேட்கப்போகிறார்? (நல்லெண்ண எச்சரிக்கை: அப்படிக் கேட்கத் தோன்றினால் என் அருகில் அதை எழுப்பாதீர்கள்.) கற்பனையின் வெற்றியைப் பறைசாற்றும் புத்தகங்களை உயர்த்திப்பிடித்து, இங்கே இருக்கிறதே இது, நாம் தேடுவது இதைத்தான் என்று சொல்லத்தானே விரும்புவோம் நாம்? இளம் எழுத்தாளர்களுக்கு எதைக் கற்பது அவசியம்? கற்பனைக்கு நிறையப் போதாமைகள் உண்டு என்பதையா? அல்லது அதைக் கவனத்தோடும், துணிச்சலோடும் பயன்படுத்துவது நம்மை மேலான படைப்பாளிகளாக்கும் (ஆமாம், மேலான மனிதர்களாகவும் ஆக்கும்) என்பதையா? நான் ஒரு கதையை எழுதுவதிலிருந்து அகல்வது யாரோ அது தடைசெய்யப்பட்ட கரு என்பதாலா, அல்லது என் முதல் படிவத்திலிருந்து இந்தக் குறிப்பிட்ட படைப்புக்கு நான் தகுந்தவன் அல்லன் என்று நான் உணர்வதாலா, எதனால் இருக்க வேண்டும்? ஒரு பால்மாறிப் பாத்திரத்தை என் கதையில் வரும் நாளில் என்றோ நான் இடுவதற்கான உரிமையை நான் காத்து வைக்கக்கூடாது என்று கருத ஒரு காரணமும் இல்லை. ஆனால் அப்படிச் செய்வதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கான அறப் பொறுப்பை ஏற்க நான் தயாராக இருக்க வேண்டும். என் நோக்கங்களை நான் தீரப் பரிசீலிக்கவேண்டும், ஏனெனில் கலையை உருவாக்குவதோடு (அதைச் செய்வேன் என்பது நம்பிக்கை), நான் பணமும் சம்பாதிப்பேன். (இதுவும் நம்பிக்கைதான்.) நான் எழுதிக்கொண்டு வரும் புத்தகம் தவறான பாதையில் செல்கிறது என்பது தெளிவானால், அந்தப் புரிதல் வரும்போது நான் பல வருடங்கள் அந்தப் புத்தகத்தில் செலவழித்திருந்தேன் என்றாலும்கூட, அதைக் கைவிட நான் தயாராக இருக்க வேண்டும். என் நண்பர் ஜென்னிக்கும், இதர பால்மாறி மனிதர்களுக்கும் அந்த மட்டிலும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனக்கு இது தெரியும், நான் எப்படி ஒரு கன்னிமாடத் துறவிப் பெண்ணாக இருக்க முடியாதோ அதே போல ஒரு கருப்பின ஆணாகவும் இருப்பது சாத்தியம் இல்லை. ஆனால் கற்பனையை ஏன் கட்டுப்படுத்தவேண்டும், அதுதானே நம்மைத் தாண்டி வர நமக்கு உதவுகிறது? கலைஞர்கள் உண்மையிலேயே தங்கள் கோடுகளுக்குள்ளேதான் பயணிக்க வேண்டுமா? வாழ்ந்த அனுபவம் ஒன்றுதான் அசலான படைப்புக்கு ஒரே வழி, அது ஒன்றுதான் உடைமை உரிமை தரும் என்று வாதிடுபவர்கள் படைப்பாளியின் ஆணவத்துக்கும், சந்தர்ப்பச் சுரண்டலுக்கும் தேவையான திருத்தங்களைக் கொணரலாம். ஆனால், அந்த விதமான புத்திமதி தப்பாமல் கோழைத்தனத்தைத்தான் விளைக்கும், உயர்ந்த கலை என்பது எப்போதும் தைரியத்தைத்தான் கோருகிறது.  நாம் ஒன்றை ஒத்துக்கொள்ளலாம். இன்னொருவராக ஆவது சாத்தியம் இல்லை என்பது அது. நாம் யாரானாலும் அதில்தான் நாம் சிக்கியிருக்கிறோம். ஆனால் அதற்கு என்ன பொருள் என்றால், நாம் வேறாக இருப்பதாகக் கற்பனை செய்யும்போது, வாசகராகவும், எழுத்தாளராகவும், நாம் ஒரு மிக முக்கியமான, தீவிரமானதோர் விளையாட்டை ஆடுகிறோம். நாம் வேறாளாக இருக்க முடியாது, ஆனால் அதை நாம் முயலத்தான் வேண்டும்.

முந்தைய பகுதி: மற்றவர்களின் வாழ்வுகள் – சொல்வனம் | இதழ் 226

[இந்தக் கட்டுரையின் இங்கிலிஷ் மூலம் ஹார்பர்ஸ் மாகஸீன் பத்திரிகையின் ஜூன் 2020, இதழில் பிரசுரமாகியது.]

மூலக்கட்டுரையின் தலைப்பு: ‘த லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்’
Series Navigation<< மற்றவர்களின் வாழ்வுகள்

One Reply to “மற்றவர்கள் வாழ்வுகள்- 2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.