பிரிவு

பிரிந்து விட்டோம்
பள்ளத்தாக்கை ஒத்த
வெற்றிடத்தில் ஒரு பறவை
பறந்துகொண்டிருந்தது
வேறு மாதிரியான
நட்பு நீடிக்கிறது
அறிவு பிடிவாதம் சந்தேகம்
போன்ற நண்பர்கள்
இடையில் நடமாடினர்
எங்கேயோ போய்விட்ட
என் அழிவு
என் உடல்மேல் போர்த்தியிருந்தது
என் கால் நகத்தில் கூட
நான் இருக்கக் கூடாது
மறைவதும் தோன்றுவதும்
இயல்பானதன் சுதந்திரம்
தோன்றாத நிஜம் அர்த்தமற்றது
கற்பனையில் நான் பார்த்த
படங்கள் இருந்தது
தொடமுடியாத தூரத்திற்கு முன்
அப்பா

முகத்தைப் பார்த்தேன்
என் கண்களின் வடிவத்தில்
அன்று நான் பார்த்த என் அப்பா தெரிந்தார்
பிறகு தான் தெரிந்தது
இன்னும் சாகாத நான்
அவர் தான் என்று
எல்லோருக்கும் அப்பா எப்படியிருந்தாலும்
அப்பா தான் என்பது
மூதாதையர்களின் எச்சம் மிச்சம் தீராதது
தொடர்ச்சியாக வரும் இவர்கள் யார்
என்றால் அவர்கள் இல்லாமல் வேறு யார்
மனிதர்களுக்குள்ளே மனிதர்கள்
ஓடுவது உறவுகள் என்றால்
படியில் விழும் பந்தை எடுக்கத்
தலைமுறைகள் தேவைப்படுகிறது
ஆண்மையின் கற்பனையில்
நிக்கோட்டின் வாசனையில்
வீட்டினில் நடமாடும் மனிதர்
அம்மாவுக்குச் சொந்தமானவர்
அம்மாவின் சேலை
எனக்கு வேறு அப்பாவுக்கு வேறு