புதியதோர் உலகு

ரட்ஹர் பெர்ஹ்மான்

தமிழாக்கம்: பானுமதி ந.

[டச்சு மூலக் கட்டுரையை இங்கிலிஷில் மொழிபெயர்த்தவர்: எலிஸபெத் மாண்டன்]

துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க நீரோ மன்னர்கள் இருப்பார்களோ மாட்டார்களோ, அதைப் போக்கச் சிந்திக்கும் மனிதர்கள் இருப்பார்கள். இடர்கள், நாம் எண்ணியிராததை, தவிர்க்க முடியாதவை என உணர்த்துகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நம்மை உலுக்கும் பெரும் சமூக இடர்களுக்கு மத்தியில் நாம் இன்று இருக்கிறோம். புதிய தாராளமயமாக்கச் சிந்தனைகள் மூச்சுவிடத் தவித்துக் கொண்டிருக்கின்றன. சில மாதங்களுக்குமுன் நடைமுறைச் சாத்தியங்கள் அற்றவை எனச் சொல்லப்பட்ட ‘பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விகிதம், திண்மையான அரசு’ போன்ற கருத்துகள் துயில் கலைந்து எழுந்து வருகின்றன.

உலகம் முழுதும் அச்சப்படும் கொரோனா தொற்றை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். அது, சுய-நீதிச் சுடரில் மின்னுவதற்கு ஒப்பானது – இது கடவுளின் சாபம் என்று சொல்லும் தீவிர மதவாதிகளைப்போல, சீனர்களால் வந்த தொற்று என்று பரபரப்பாகக் கூவுபவர்களைப்போல, நடக்கும் விஷயங்களை நோக்கிக் குறி சொல்பவர்கள் – அன்பு, சக மனித நேசம், அனைவருக்கும் அனைத்தும் இலவசம் என்று சொல்வதைப்போல இருக்கிறது.

இதுதான், நாம் தெளிவாக வெளிப்படையாகப் பேசும் தருணம் என்று சொல்பவர்களும் உள்ளார்கள். இந்தத் தருணத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும். 2008-ல் லேமேன் பிரதர்ஸ் நிறுவனம் வீழ்ந்தபோது, ஒபாமாவின் தலைமைச் செயலாளர் குறிப்பட்டதுபோல் ‘ஒரு பேரிடரை நாம் வீணாக்க முடியாது.’

முதல் சில வாரங்களில் நான் இதைப் பொருட்படுத்தவில்லை. இடர்கள் கொண்டுவரும் சந்தர்ப்பங்களைப் பற்றி முன்னர் எழுதியவன்தான்; ஆனால், அது இப்போது உள்ளீடற்ற, காயப்படுத்தும் செயல் எனத் தோன்றுகிறது. மேலும் சில நாள்கள் சென்றன. சிறிது சிறிதாக இந்த இடர் பல நாள்கள், மாதங்கள், வருடங்கள், ஏன் அதைவிடவும் அதிகமாகத் தொடரும் என்பது உறைத்தது. இன்று இடரைச் சமாளிக்க எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கைகள், நாளை நிரந்தரமாகும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

இம்முறை நமக்கு என்ன காத்திருக்கிறது என்பதை யாரும் அறியார். எதிர்காலம் இத்தனை நிலையற்றதாக இருப்பதால், இதுதான்  நாம் பேசவேண்டிய தருணம்.

1 அலை திரும்புகிறது

இனி வரும் வருடங்களில் வரலாற்றாளர்கள் பேசக்கூடிய ஒரு தலையங்கத்தைப் பிரிட்டனில் தொடங்கப்பட்ட ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள், 04/04/2020 அன்று எழுதியது. அது உலகின் முதன்மையான வணிக நாளேடு. நாம் உண்மையைச் சொல்வோம் – அது அப்படி ஒன்றும் முற்போக்கு இதழ் அன்று. உலக அரசியல், நிதி முதலியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் செல்வந்தர்களும், பலம் வாய்ந்தவர்களும் படிக்கும் ஏடு. சொகுசுப் படகுகள், கார்கள், ஆடம்பர மாளிகைகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் போன்றவை பற்றி, சிறிதும் கூச்சமின்றி ஒவ்வொரு மாதமும் ‘எப்படிச் செலவு செய்யலாம்?’ என்ற இணை இதழை அது வெளியிடுகிறது. நினைவில் நிற்கக்கூடிய ஏப்ரல் சனிக்கிழமை அன்று இது இவ்வாறு எழுதியது:

“கடந்த நாற்பது ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட கொள்கைகளை மறுபார்வையிட்டுப் புரட்சிகரச் சிந்தனைகளை விவாதிக்க வேண்டும். அரசுகள், பொருளாதாரத்தில் மிக்க செயல்பாட்டுடன் களமிறங்க வேண்டும். பொது சேவைகளை முதலீடு எனவும், அவை கடன் சுமைகளல்ல எனவும் கருதவேண்டும். பாதுகாப்பற்றதாக  உணரப்படும் தொழிலாளச் சந்தைகளின் அச்சத்தைக் குறைக்க நடவடிக்கை வேண்டும். செயல்திட்டத்தில் மறு பங்கீடு மீண்டும் இடம் பெறவேண்டும்; முதியோர், செல்வந்தர்களுக்கான சிறப்புச் சலுகைகள் பற்றியும் கேள்விகள் எழவேண்டும். இதுவரை விசித்திரக் கொள்கைகளாகக் கருதப்பட்ட அடிப்படை வருமானம், சொத்து வரி போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இங்கே என்ன நடக்கிறது? முதலீயத்தின் நீதிபதியான ஓர் இதழ், மறுவிநியோகம், திண்மையான அரசு, அடிப்படை வருமானம் உட்படப் பேசுகிறதே! பல ஆண்டுகளாக முதலீயத்தின் கொள்கைகளான சிறிய அரசாங்கம், குறைந்த வரிகள், குறைந்த சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை உரக்கப்பேசிய இதழ் இது – அல்லது கூரான முனைகளை மழுங்கடித்தது எனச் சொல்லலாம். 1986 முதல் இதில் எழுதும் ஓர் இதழியலாளர் சொல்கிறார்: ‘தடையற்ற பொருளாதாரச் சந்தையை மனிதத்தன்மையுடன் சொல்லிவந்த இதழ், இந்தத் தலையங்கத்தின் மூலம் எங்களைப் புதிய திசையில் செலுத்துகிறது.’

இந்தத் தலையங்கக் கருத்துக்கள் இந்தக் கணத்தில் தோன்றியவையல்ல. அவை வெகுதூர எல்லைகளிலிருந்து பயணித்து மையத்தை அடைந்தவை; கிளர்ச்சியாளர்களின் கூடாரத்திலிருந்து, முதன்மைப் பேச்சுக் காட்சிகளிலிருந்தும் சிறிய வலைப்பூக்களிலிருந்தும் ஃபைனான்சியல் டைம்ஸ்ஸையும் அடைந்தவை.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகம் சந்திக்கும் இந்தப் பேரிடர் காலத்தில் இக்கொள்கைகள் உலகை மாற்றலாம்.

நாம் இங்கே எப்படி வந்து சேர்ந்தோம் என்பதை அறிய வரலாறை சற்று அறியவேண்டும். கற்பனை செய்வது கடினம்தான் – 70 வருடங்களுக்கு முன்னர், தடையற்ற பொருளாதாரச் சந்தையை முன்னிறுத்தியவர்கள் கிளர்ச்சியாளர்கள் எனப்பட்டனர்.

சுவிஸ் கிராமமான மொண்ட் பேலெஹன் (Mont Pelerin) -இல் சிந்தனைக் குழு ஒன்று 1947-ல் கூடியது. புதிய தாராளவாதிகள் என்று தம்மைத்தாமே அறிவித்துக்கொண்ட அந்தக் குழுவில் ஃப்ரீட்ரிஷ் வான் ஹாயெக் என்ற தத்துவவாதியும், மில்டன் ஃப்ரீட்மான் என்ற பொருளாதாரரும் இடம் பெற்றிருந்தனர். அந்த நாள்களில், அதாவது இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னான நாள்களில், பிரிட்டனின் பொருளாதார நிபுணரும், வலிமையான அரசு, அதிக வரி, வலுவான சமூகப் பாதுகாப்பு வலை போன்றவற்றைச் சொன்னவருமான ஜே.எம். கேய்ன்சின் கூற்றுக்களைப் பல அரசியல்வாதிகளும், பொருளாதார நிபுணர்களும் ஆதரித்து ஏற்றுக்கொண்டனர். ஆனால், வலிமையான அரசு, கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும் என்று புதுத் தாராளமயவாதிகள் கலகக் குரல் எழுப்பினர்.

மொண்ட் பேலெஹன் குழும ஆட்களுக்குத் தாங்கள் செல்லவேண்டிய தொலைவு அதிகம் என்பது தெரியும். புதுக் கருத்துகள் உலாவர ஒரு தலைமுறை அல்லது அதற்கு மேலுமாகும். ‘நம்முடைய சிந்தனைகள் செயல் வடிவம் பெறும் சக்தியற்று இருப்பதற்கு இதுவுமொரு காரணம்’ என்று ஹேய்க் சொன்னார். ஃப்ரீட்மான் அதே கருத்தைக் கொண்டிருந்தார். ‘இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் கல்லூரியில் படிக்கும்போது நிலவிய அறிவுச் சூழலிலேயே இன்று நாட்டை ஆள்வோர் இருக்கிறார்கள்,’ பல மனிதர்கள் தங்கள் அடிப்படைக் கருத்துக்களை பதின்ம வயதிலேயே வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற கருத்து அவருக்கு இருந்தது. பழைய சிந்தைகள், அரசியல் உலகில் முதன்மைபெற்று ஓங்குவது இதனால்தான் என்றார் அவர்.

தடையற்ற சந்தைக் கோட்பாடுகளை ஒரு மதபோதகர்போல் அவர் சொல்லி வந்தார். சுயநல முதன்மை என்பது அவரது நம்பிக்கை. எந்தச் சிக்கலாக இருந்தாலும் அவரது தீர்வு எளிமையானது – அரசுகள் வேண்டாம், வணிகங்கள் செழிக்கட்டும்; அல்லது பொது சுகாதாரம் முதல் கல்வி வரை அனைத்துத் துறைகளையும், தேவையெனில் வன்முறையைப் பிரயோகித்து, சந்தைப்படுத்த வேண்டும். இயற்கைப் பேரிடர் சமயங்களில்கூட போட்டிக் குழுமங்கள்தான் தேவையான நிவாரணங்களைச் செய்யவேண்டும். ஃப்ரீட்மான், தான் ஒரு புரட்சியாளரென அறிவார். முதன்மைச் சாலையிலிருந்து வெகுதொலைவில் தானிருப்பதை அவர் உணர்ந்தார். அதுதான் அவரது ஆற்றல். 1969ல் டைம் இதழ் இந்த அமெரிக்கப் பொருளாதாரரைப் பற்றி இவ்வாறு எழுதியது: “பாரீசைச் சேர்ந்த இந்த நவநாகரீக வடிவமைப்பாளரின் ஆடைகளை வாங்குவோர் குறைவு; ஆனால், பலவற்றின் மோஸ்தர்களைப் பாதித்தவர் இவர்.” 

ஃப்ரீட்மான், இடர்களை மையமாக வைத்துச் சிந்தித்தவர். 1962-ல் வெளியான தனது ‘கேபிடலிசம் அன்ட் ஃப்ரீடம்’ என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவர் புகழ்பெற்ற இவ்வாக்கியத்தை எழுதினார்: “நிஜமோ, சிந்திக்கப்பட்டவையோ, இடர்கள்தான் உண்மையான மாறுதலைக் கொண்டுவருகின்றன. ஒரு சிக்கல் நேரும்போது காத்திருக்கும் சிந்தனைகள் செயல்வடிவம் பெறுகின்றன.”

காத்திருக்கும் சிந்தனைகள்: ஓர் இடர் நேர்கையில் ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள தளத்திலிருந்து பதில்கள் கிடைக்கின்றன. முடியாது என்றும், யதார்த்தமில்லை என்றும் சொல்லப்பட்டவை, தவிர்க்க முடியாதவை என்று ஆகின்றன.

மிகச் சரியாக அதுதான் நடந்தது.1970-ல் நாம் சந்தித்தவைகளான – பொருளாதாரச் சுருக்கம், பண வீக்கம், விலைவாசி ஏற்றம், எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் தடையாணைத் துன்பங்களை மாற்ற, புதிய தாராளமயவாதிகள் தங்கள் சிறகுகளில் பறக்கத் தயார் நிலையில் இருந்தார்கள். ‘அவர்கள் இணைந்து உலகக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார்கள்’ என்கிறார் வரலாற்று நிபுணர் ஆங்கஸ் பர்கின். (Angus Burgin.) பழமைவாதிகளான முன்னாள் அமெரிக்க அதிபர் ரேனால்ட் ரீகனும், யு.கே பிரதமர் மார்க்ரெட் தாட்சரும் ஹேய்க் மற்றும் ஃப்ரீட்மானின் புரட்சிக் கருத்துக்களை ஏற்றார்கள். அவர்களது அரசியல் எதிரிகளான பில் க்ளிண்டனும், டோனி ப்ளேரும் இதை ஏற்றனர்.

ஒன்றன்பின் ஒன்றாக அரசு நிறுவனங்கள் உலகெங்கும் தனியார் மயமாக்கப்பட்டன. ஒட்டுறவு ஒடுக்கப்பட்டது. சமூக நல நன்மைகள் குறைக்கப்பட்டன. ரீகன் சொன்னார்: “மிகவும் பயமுறுத்தும் சொற்கள் இவை: ‘நான் அரசாங்கத்திடமிருந்து வருகிறேன், உங்களுக்கு உதவி செய்வதற்காக’.” 1989-ல் கம்யூனிசம் வீழ்ந்த பிறகு சோஷலிச ஜனநாயகவாதிகளும்கூட அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள். 1996-ல் அப்போதைய அதிபர் க்ளிண்டன் மாநில கூட்டு சபையில் உரையாற்றுகையில் ‘பெரும் அரசுகளின் காலம் முடிவுற்றது,’ என்றார்.

புதிய தாராளமயவாதம் சிந்தனைக் குழுவிடமிருந்து இதழியலாளர்களுக்கும், அவர்களிடமிருந்து அரசியல்வாதிகளுக்கும் பரவி தொற்றினைப்போல் மனிதர்களைப் பாதித்தது. தனது மாபெரும் சாதனையாக எதைக் கருதுகிறார் என்று தாட்சரிடம் 2002ஆம் ஆண்டு இரவு விருந்தொன்றில் கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்: ‘டோனி ப்ளேர் மற்றும் உழைப்பாளர் கட்சி; எங்கள் எதிரிகளின் மனமாற்றம் எங்கள் தினவுகளால் ஏற்பட்டது.’


பின்னர் 2008 வந்தது.

15 செப்டம்பர் அன்று, பெரும் பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர், உலகம் சந்தித்த நிதி நெருக்கடி லேமேன் பிரதர்ஸ்ஸால் கட்டவிழ்க்கப்பட்டது. தடையற்ற பொருளாதாரச் சந்தையைக் காப்பாற்ற அரசுகள் களம் இறங்க நேர்ந்தது; புதிய தாராளமயமாக்கத்தின் வீழ்ச்சியின் அறிகுறியைச் சுட்டுவதாகக்  கருதப்பட்டது. ஆனாலும், 2008 என்பது வரலாற்றுத் திருப்பு முனையன்று. ஒவ்வொரு தேசமாக இடதுசாரியினர் தோல்விகளைச் சந்தித்தனர். கல்வி, பொதுச் சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு போன்றவைகளின் நிதிகள் குறுக்கப்பட்டன; இது சமூகத்தில் அதிக ஏற்றத் தாழ்வு நிலவும் நிலையில் நடந்ததும், வால் ஸ்ட்ரீட்டில் உச்சபட்ச வெகுமதிகள் பல மடங்கு உயர்ந்ததையும்  நினைவில் கொள்ளுங்கள்.  இந்த வீழ்ச்சி நடந்த ஓர் ஆண்டில், ஃபைனான்ஸியல் டைம்ஸ் ‘எப்படிச் செலவு செய்யலாம்?’ என்ற ஆடம்பரமான வாழ்க்கை முறைகள் குறித்து ஆன்லைன் இதழைப் பிரசுரித்தது.

1970-ன் இடர்களை எதிர்கொள்ளப் புதிய தாராளமயவாதிகள் பல ஆண்டுகளைச் செலவிட்டுத் தயார் நிலையில் இருந்தார்கள்; அவர்களை அறைகூவியவர்கள் இப்போது கைகளைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அவர்களுக்கு, பெரும்பாலும் எதிர்க்கிறோமெனத் தெரியும்; நிதி குறைப்பிற்கு எதிராக, நிர்வாகத்திற்கு எதிராக; ஆனால், செயல்திட்டம்? எதை வேண்டுகிறார்கள் என்பதில் தெளிவில்லை.

12 வருடங்கள் கழித்து இதோ, இப்போது ஓர் இடர்; அதிக அதிர்ச்சிகரமாக, அதிக பயங்கரமாக, மரணத்தைப்போல் அஞ்சத்தக்கதாக. 1709-ல் குளிர் கால யு. கே. சந்தித்த கடும் பொருளாதார வீழ்ச்சியைப்போல, இப்போதைய நிலை என்று பிரிட்டன் சென்ட்ரல் வங்கி  சொல்கிறது. பொருளாதாரத் தாக்க நிதி கோரி மூன்று வாரங்களில் 17 மில்லியன் அமெரிக்கர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். 2008-ல் ஏற்பட்ட நெருக்கடி சமயத்தில் இதில் பாதியளவே விண்ணப்பங்கள், அதுவும் இரு ஆண்டுகளிலென்றால், பார்த்துக் கொள்ளுங்கள் இந்தத் தொற்று ஏற்படுத்தியுள்ள இடரை.

2008-னின் இடர் போலல்லாமல் இந்தத் தொற்றிற்குச் சரியான காரணமிருக்கிறது. Collateralised Debt Obligations, Credit Default Swaps (இணைக் கடன் பொறுப்பு, இடமாற்றுக் கடன் கருவி) போன்றவை நம் அனைவருக்கும் சரியாகப் புரியாவிட்டாலும், ஒரு கிருமி என்பதென்ன என்று அறிவோம் இல்லையா? தங்கள் கடனாளிகளின் மீது குற்றம் சொன்ன பொறுப்பற்ற வங்கியாளர்களின் கை கழுவல்போல இப்போது முடியாதே!

இன்றைய நிலைக்கும் 2008க்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன? அறிவுபூர்வ தளச் செயல்பாடு. காத்திருக்கும் கருத்துக்கள்; நினைக்க முடியாதவைகள், இடர்களின்போது  தவிர்க்கக் கூடாதவைகளாகும் என  ஃப்ரீட்மான் சொன்னது சரியென்றால், இக்காலத்தில் வரலாற்றில் புதிய திருப்பம் நிகழும்.

2 மூன்று ஆபத்தான ஃப்ரெஞ்ச் பொருளாதாரர்கள்

வலதுசாரி வலைத் தளமொன்று அக்டோபர் 2019ல் ஒரு செய்தியை வெளியிட்டது; ‘இளைஞர்கள் பொருளாதாரத்தையும், முதலீயத்தையும் பற்றிச் சிந்திக்கும் விதத்தின்மேல் தீவிர இடதுசாரியினர் மூவர், தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.’ குறைந்த நிதியுடன் செயல்படும் இவ்வலைப்பூ பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் கில்லாடி; ஆனால், ஃப்ரெஞ்ச் மூவரைப் பற்றிய செய்தி, செய்ய நினைத்ததை திறம்படச் செய்தது.

தாமஸ் பிக்கெட்டி என்ற பெயரை முதன் முதலில் பார்த்த தருணத்தை  நினைவுகூருகிறேன். 2013- இலையுதிர் காலம் – தன்னுடன் பணிபுரிபவர்களைப் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும், படிப்பதற்குச் சுவையாக இருக்கும், ப்ராங்கோ மிலானொவிச் வலைத்தளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். ஆனால், திடீரென அவர் மிக மாறுதலாக இதில் எழுதியிருந்தார்; ஃப்ரெஞ்சில் எழுதப்பட்ட 970 பக்கங்களுள்ள பெரிய நூலைப் போற்றிப் புகழ்ந்திருந்தார். ‘பொருளாதாரச் சிந்தனையில் ஒரு மைல்கல்.’ 

மிலானோவிச் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி ஆய்வதில் ஆர்வம் கொள்ளாத, சில பொருளாதாரர்களைப்போல பல காலமிருந்தவர். அவருடைய சக பணியாளர்கள் இதைத் தொடக்கூட மாட்டார்கள். மறுவிநியோகம் என்பது வலுவான பொருளாதாரத்திற்கு கொடிய நஞ்சு என்று சொன்னவர் 2003-ல் நோபல் பரிசு வென்ற ராபர்ட் லூகாஸ். 

இதற்கிடையில்  பிக்கெட்டி  தன்  அசாதாரணமான வேலையைத்  தொடங்கினார்.  மிக மிக உயர்ந்த  வருமானம்  ஈட்டும்  1% மனிதர்களைப்  பற்றி  ஒரு சிறிய  வரைபடப்  புத்தகத்தை வெளியிட்டார். ஃப்ரெஞ்ச்  மூவரில்  இரண்டாமவரான  எமானுவேல் சைஸுடன் (Emmanuel Saez) இணைந்து, தற்சமயம் அமெரிக்காவில் நிலவும்  ஏற்றத்தாழ்வுகளின் பெரிய இடைவெளி, கர்ஜித்த 20களைப் போலவே இருந்தது என்றார். இந்தக் கல்விப்புலச் செயல்பாடுதான், “நாங்கள் 99%; ஆக்கிரமிப்போம் வால் ஸ்டீரீட்டை” என்ற கோஷத்தின் உந்து சக்தி.

2014-லில் உலகை ஒரு புயலெனப் பிக்கெட்டி ஆக்கிரமித்தார். ‘ராக் ஸ்டார் பொருளாதார நிபுணர்’ என்று கொண்டாடப்பட்டார். அவரது வளர்ச்சி பலருக்கு எரிச்சல் தந்தது; ஃபைனான்ஸியல் டைம்ஸ் அவரை வசைபாடுவதில் முன்னணியில் நின்றது. இதழியலாளர்களிடத்திலும் அரசியல்வாதிகளிடத்திலும் தன் செய்முறைக் குறிப்பான வரிகள் பற்றி எடுத்துச்சொல்ல உலகம் முழுதும் பயணம் செய்தார்.

நம்முடைய மூன்றாவது முக்கிய நபரான இளம் பொருளாதார நிபுணரை நாம் இப்போது பார்ப்போம் – காப்ரியெல் ஜக்மேன்; 2008-ல் லேமேன் பிரதர்ஸ் வீழ்ந்த அதே நாளில் 21 வயதான இந்தப் பொருளியல் மாணவர் ஒரு ஃப்ரெஞ்ச் முகவர் நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்கு இணைந்தார். உலகப் பணச் சந்தை வீழ்ந்து நொறுங்குவதை ஒரு சில மாதங்களிலேயே அருகிருந்து பார்த்தார். உலகின் மாபெரும் பணக்காரர்கள் தங்கள் அபரிமித செல்வத்தைப் பதுக்கும் சொர்க்கபுரியான லக்ஸம்பெர்க், பெர்மூடா போன்ற சிறு நாடுகளுக்கு அனுப்பும் பணத்தின் அளவு அவரை மலைக்கவைத்தது.

ஒரு சில ஆண்டுகளில் உலக வரி நிபுணர்களில் அவர் ஒருவரானார். 2015-ல் வெளியான ‘The Hidden Wealth of Nations’ என்ற நூலில் அவர் சொல்கிறார்: $7.6 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான உலகச் செல்வங்கள் வரி விதிப்பில்லா சொர்க்கபுரியில் பதுக்கப்பட்டுள்ளன. குழாய் வேலை பார்ப்போர், சுத்தம் செய்வோர், செவிலியர்கள், ஓய்வு பெற்றோர் போன்ற பல உழைக்கும் மக்கள் வருமானப் பிரிவினரைவிட அமெரிக்காவின் 400 அபரிமிதப் பணக்காரர்கள் குறைந்த வரிகள் செலுத்தினார்கள் என்று எமானுவேல் சைஸுடன் இணைந்து கணக்கிட்டு அவர் கூறினார்.

மிகக் குறைந்த வார்த்தைகளில் தன் கருத்தினைச் சொன்னவர் இவர். இவரது வழிகாட்டியான பிக்கெட்டி, 1088 பக்கங்களுள்ள ஒரு வியக்கத்தகும் புத்தகத்தை 2020-ல் வெளியிட்டார். ஆனால், மூவரில் கடைசி இருவரின் புத்தகங்களை ஒரே நாளில் படித்துவிட முடியும். கவனமாகத் தலைப்பிடப்பட்ட அந்த புத்தகம் “பெரும் செல்வந்தர்கள் எப்படி வரியைத் தவிர்க்கிறார்கள், அவர்களை வரி செலுத்த வைப்பது எப்படி?” செய்ய வேண்டியவைகளையும், தவிர்க்கக் கூடியவைகளையும் பற்றிய செய்திகளை அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கு உணர்த்தும் குறிப்பேடு.

முக்கிய நடவடிக்கை? பெரும் தனவான்கள் அனைவரின் சொத்துக்கள்மீது ஆண்டுதோறும் அதிகரிக்கும் வரியினை விதிப்பது. நாட்டின் பொருளாதார  வளர்ச்சிக்கு அதிக வரிகள் தடையல்ல. மாறாக, அதிக வரிகள் முதலீயத்தை மேம்படுத்தக்கூடும். (1952-ல் உச்சபட்ச வரி 92% – அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதையும்விட வேகமாக வளர்ந்தது.)

ஐந்து வருடங்களுக்கு முன்னால், இக்கருத்துகள் புரட்சிகரமானவை என்றே எண்ணப்பட்டன. முந்தைய அதிபர் ஒபாமாவின் நிதி ஆலோசகர்கள், “சொத்துவரி ஒரு போதும் செயல்படாது; தங்கள் பட்டயக் கணக்காளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் துணையுடன் செல்வந்தர்கள் தங்கள் பணத்தை மறைப்பதற்கான வழியினை மேற்கொள்வார்கள்.” 2016-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ப(ர்)னி சேன்டியர்ஸ், இந்த மூன்று பொருளாதாரர்கள் வடிவமைத்துத் தருவதாகச் சொன்ன சொத்து வரி மாதிரியை ஏற்கவில்லை.

ஆனால், 2016-ன் கருத்தியல் இப்போதைய நிலைக்குத் தொலைவிலல்லவா உள்ளது? சேன்டியர்ஸின் சாத்வீக எதிரியான ஜோ பைடன், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஹிலாரி க்ளிண்டன் திட்டமிட்ட வரியினைப்போல், இரு மடங்கு வரியினை 2020 தேர்தல் கொள்கையென முன் வைத்தார். இன்றைய கால கட்டத்தில் பெரும்பான்மையான அமெரிக்க வாக்காளர்கள் (குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட) பெரும் செல்வந்தர்களிடம் அதிக வரி வசூல் என்பதை ஏற்கிறார்கள். ஃபைனான்ஸியல் டைம்ஸ்கூட  சொத்து வரி என்பது அப்படியொன்றும் ஒதுக்கப்படவேண்டிய கருத்தன்று என்ற முடிவிற்கு வருகிறது.

3 பொது சமூக நல வாத ஷாம்பெய்னுக்கு அப்பால்

சோஷலிசத்தின் பிரச்சனை என்பது “அது மற்றவர்களின் பணத்தையும் இறுதியில் இழக்கிறீர்கள் என்பதே” என்றார் தாட்சர். ஆம், அவர் இரணத்தைத் தொட்டுவிட்டார். இடதுசாரிகள், வரிகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் பற்றிப் பேச விழைகிறார்கள் -ஆனால், அந்தத் தொகை எங்கிருந்து வரும்? அரசியல் இடைநாழியின் இரு முனைகளிலும் இருக்கும் ஓர் அனுமானம் என்னவென்றால், தீர்க்கதரிசியான தொழில் முனைவோர்கள் – ஜெஃப் பேஸாச், இலோன் மஸ்க் போன்றவர்கள் அதிகமாகச் செல்வம் ஈட்டுபவர்கள் என்பதே. அப்படியெனில், மனசாட்சி ஒரு கேள்வி எழுப்புகிறது – அவர்கள் தங்கள் செல்வத்தைப் பகிரவேண்டாமா?

இதை ஒத்தது உங்கள் புரிதல் என்றால், நான், நம் காலத்தின் முன்நோக்கிய பொருளாதாரச் சிந்தனையாளர்களில் ஒருவரான Mariana Mazzucato வை அறிமுகம் செய்கிறேன். ‘வரிகளைப் பற்றி பேசுதல் மட்டுமே போதுமானதன்று’ எனும், பெரும்பாலும் பெண்கள் நிறைந்திருக்கும், பொருளாதாரக் கூட்டத்தைச் சேர்ந்தவர் இவர். சொத்துக்களை உண்டாக்கும் விதம் பற்றிச் சொல்வதைவிட, சொத்துக்களை மறுவிநியோகம் செய்வதைப் பற்றிப் பேசுவதால்தான், முன்னேற்ற வளர்ச்சித் தரப்பு தங்கள் விவாதங்களில்  தோற்கிறது என்றார் இவர்.

உலகம் முழுதும் அத்யாவசியத் தொழிலாளர்கள் என்று வெளிவந்த சமீப வாரங்களின் அட்டவணையைப் பார்ப்போம். வியப்பு என்னவென்றால் “Hedge Fund Manager, Multinational Tax Consultant” போன்றவை இடம் பெறவில்லை. தெள்ளத் தெளிவாக ஒன்று புலனாகியது – மளிகைக் கடைகளும், பொதுப் போக்குவரத்தும், பொதுச் சுகாதாரமும், கல்வியும்தான் முக்கிய வேலைகள்.

2018-ல் டாஷ் நாட்டுப் பொருளாதாரர்கள் இருவர் ஒரு களஆய்வினைச் செய்தார்கள்; அவர்கள் கண்டடைந்தது: “கால் பங்குப் பணியாளர்கள் தங்கள் வேலை முக்கியமற்ற செயல் என்றார்கள். பொது வெளியைவிட தொழில் உலகில் செய்யப்படும் வேலைகள் ‘நான்கு மடங்கு முக்கியத்துவம் அற்றவை’ என்பதும் சுவையான தகவல்தான். தங்களது பணி ‘எருதின் சாணம்’ என்று தானாகவே வாய்மொழிந்த இவர்களில் பெரும்பாலோர் ‘நிதி மற்றும் சந்தைப்படுத்துதல்’ துறையினைச் சேர்ந்தவர்கள்!”

அப்படியென்றால் செல்வம் எங்குதான் உண்மையில் ஏற்படுகிறது? ஃபைனான்ஸியல் டைம்ஸ் போன்ற ஊடகங்கள், ஃப்ரெய்ட்மென், ஹேய்க் போன்ற பொருளாதார வல்லுநர்கள் அது தொழில் முனைவோரால் உண்டாக்கப்படுகிறது, அரசுகளால் அன்று என்று சொல்கிறார்கள். தொழில்களுக்கான  நல்ல கட்டமைப்பு, வரிச் சலுகைகள் போன்றவை அரசின் செயல்பாடுகள்; தொழிற்சாலைகள், வணிகங்கள் நடைபெற ஓர் உதவுகாரணிதான் அரசு; இதைச் செய்துவிட்டு வழியை விட்டு அரசு விலகிவிட வேண்டும்.

2011-ல், ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர் அரசாங்க ஊழியர்களை ‘வர்த்தகத்தின் எதிரிகள்’ எனக் காழ்ப்புடன் சொல்கையில், Mariana Mazzucato மனதில் ஓர் எண்ணம் வந்தது. அவர் ஆய்வில் இறங்கத் தீர்மானித்தார். இரு வருடங்களுக்குப் பிறகு அவர் எழுதிய ‘தொழில் முனையும் அரசு’ என்ற புத்தகம் பொருளாதாரக் கொள்கைகளின் உலகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

கல்வி, பொதுச் சுகாதாரம், கழிவுகள் அகற்றுவது, தபால் பட்டுவாடா மட்டுமல்ல, வணிகம் செய்யத் தகுந்த கண்டுபிடிப்புகளும் அரசிடமிருந்தே தொடங்குகின்றன என அவர் அந்தப் புத்தகத்தில் எடுத்துரைத்தார். ஐ ஃபோனை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதைத் திறன் கருவியாக (முட்டாள் கருவியாக இல்லாமல்) வடிவமைத்த ஒவ்வொரு தொழில் நுட்ப அலகும் (இணையம், புவிசார் குறியீடு, தொடுதிரை, மின்கலம், வன்பொருள், குரலறிதல்) அரசாங்க சம்பளப் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள் உருவாக்கியவையே.

ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொன்னது மற்ற பெரும் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கும் பொருந்தும். ‘தேடும் இயந்திரம்’ செய்ய கொழுத்த நிதி பெற்றது கூகுள். தெஸ்லா? அமெரிக்க சக்தித் துறை 465 மில்லியன் டாலர்கள் அதற்கு அளிக்கும்வரை முதலீட்டாளர்களை, அது வலை வீசித் தேடி வந்தது. (இலோன் மஸ்க் அரசின் நிதி உதவிகள் பெற்ற பகாசுரன் – பொது மக்களின் வரிப் பணத்திலிருந்து கிட்டத்தட்ட $5 பில்லியன், அவரது சோலார் சிடி, தெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் பெற்றிருக்கின்றன.)

தொழில்நுட்ப ஏடான (Wired) ‘வொயர்ட்’டில் Mazzucato சொல்கிறார்: “பார்க்கப் பார்க்க எனக்குத் தெளிவாயிற்று -அரசு முதலீடுகள்  எல்லாவற்றிலும் இருக்கின்றன.”

இலாபம் ஈட்டாத சில செயல் திட்டங்களிலும் அரசு முதலீடுகள் இருக்கும் என்பது உண்மையே. அதிர்ச்சியாக இருக்கிறதா? முதலீடு என்பதே அதுதானே? தொழில் என்பதில் ஆபத்துக்கள் அடங்கியிருக்கின்றன. தனிப்பட்ட முறையில் துணிகர முதலீட்டாளர்கள் என அறியப்படுபவர்கள், அவ்வளவு துணிச்சலுடன் இல்லை என்று Mazzucato சொல்கிறார். 2003லில் ‘சார்ஸ்’ பரவிய பிறகு, பல தனிப்பட்ட முதலீட்டாளர்கள் கொரோனா தொற்று ஆராய்ச்சியில் முதலீடு செய்யவில்லை. அது இலாபகரமாக இல்லை. ஆனால், பொது நிதி பெற்ற ஆய்வுகள் இதில் தொடர்ந்தன. அமெரிக்க அரசு $700 மில்லியன் இதற்கெனத் தந்துள்ளது.(இந்தத் தொற்றுக்கான வாக்ஸின் வரும்போது நீங்கள் அரசுக்கு நன்றி கூறுங்கள்.)

மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் Mazzucatoவின் கூற்றிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அனேகமாகப் பொது நிதி பெறும் நிறுவனங்களிலிருந்து முக்கிய மருத்துவக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ரோஷி மற்றும் ஃபைசர் போன்ற மருந்து உற்பத்திப் பெருநிறுவனங்கள் பல, காப்புரிமை பெற்று, புது ‘தர அடையாளத்தில்’ (பழைய) வழக்கத்திலுள்ள மருந்துகளை விற்று  கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றன. அதை வைத்து நல்ல ஈவுத் தொகைகளைத் தருகின்றன; தங்கள் பங்குகளை மீள்வாங்குதல் செய்கின்றன. (இதன் மூலம் பங்கின் விலையை ஏற்றும் ஒரு செயலும் சமத்காரமாக நடைபெறுகிறது.) 27 பெரிய மருந்தகக் கம்பெனிகளின் பங்குதாரர்கள் 2000 ஆண்டிலிருந்து நான்கு மடங்கு அதிக ஈவுத் தொகையினைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலை மாறவேண்டும் என்று Mazzucato சொல்கிறார். அரசு ஒரு பெரிய கண்டுபிடிப்பிற்கு மான்யம் வழங்குகையில் தொழிற்சாலைகள் அதை வரவேற்கின்றன. அதுதான் தேவையானதும்கூட. ஆனால், அரசு தான் செய்த முதலீட்டை வட்டியுடன் திரும்பப் பெற வேண்டும். மிகுந்த நிதியுதவி பெறும் நிறுவனங்கள் பெரிய அளவில் வரி ஏய்ப்புச் செய்கின்றன என்பது பித்துப் பிடிக்க வைக்கிறது. ஆப்பிள், கூகுள், ஃபைசர் போன்றவை பல்லாயிரம் கோடிப் பணத்தை ‘வரி சொர்க்க’ நாடுகளில் பதுக்கி வைக்கின்றன.

இவைகள் வரிகளில் தங்கள் சரியான பங்கினைத் தரவேண்டும் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை. Mazzucato சொல்வது: அரசுகள் தங்கள் சாதனைக்கான பெருமைகளைக் கோர வேண்டும். அவருக்கு மிகப் பிடித்த உதாரணம், 1960-களின் விண்வெளிக்கான போட்டி. 1962-ல் அன்றைய அதிபர் கென்னடி சொன்னார்: “இந்தப் பத்தாண்டில் நிலவிற்குப் போவதற்கும், மற்றும் சில செயல்கள் செய்வதற்கும் அவை எளிதானதில்லை, கடினமானவை என்பதே போதுமானது.” 

இன்றைய காலகட்டத்தில் நாம் சந்திக்கும் பெரும் சவால்கள், தொழில் முனையும் அரசின் இணையற்ற ஆற்றல் மிகு கண்டுபிடிப்புகளைக் கோருகிறது. தட்ப வெப்ப மாறுபாடுகள் மனித இனம் இன்று சந்திக்கும் மிகப் பெரும் சிக்கல். சூழல் கேடுகளை எதிர்த்து மாற்றம் கொண்டுவர முன்னெப்போதையும்விட கென்னடியின் பேச்சின் அருமையை உணர்ந்து செயல்பட்டாக வேண்டும். புதுப் பசுமை ஒப்பந்தம் என்ற அமைப்பு தட்ப வெப்ப மாறுதல்களைச் சமாளிப்பதற்காக உலக அளவில் உள்ள ஒரு பெரும் செயல்திட்டம். அதன் அறிவார்ந்த அன்னையென Mazzucato இருக்கிறார். அவருடன் வெனிஸுலா நாட்டினரான Carlota Perez  இணைந்து செயல்புரிகிறார்.

Mazzucatoவின் மற்றொரு நண்பரான அமெரிக்கப் பொருளாதார நிபுணரான ஸ்டெஃபனி கெல்டன் (Stephanie Kelton)  ‘அரசுகள் தங்கள் பெரும் விழைவுகளை செயல்படுத்துவதற்குப் பணத்தை அச்சிடலாம்; நாட்டின் கடன் மற்றும் பற்றாக்குறையைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டாம்’என்கிறார். (அரசுகளை வீட்டிற்கு ஒப்பிட்டு கொள்கைகள் சொல்லும் முந்தைய அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் இவர்களுக்குப் பொருட்டல்ல; வீடுகள் வரி வசூலிக்க முடியாது; தங்கள் கரன்ஸியை அச்சிட முடியாது.)

பொருளாதாரப் புரட்சிச் சிந்தனைகளைத் தான் நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம். 2008-இன் இடர்கள் சிக்கனத்தைப் பற்றிப் பேசின என்றால், கெல்டனைப் போன்றவர்களின் கருத்துகளை (அவர் எழுதிய ஒரு நூல் ‘பற்றாக்குறை எனும் மாயை’ என்று பொருத்தமாகத் தலைப்பிடப்பட்டுள்ளது) ஃபைனான்ஸியல் டைம்ஸ் அவரை  நவீன ஃப்ரீட்மான் என்று கொண்டாடுகிறது. அதே பத்திரிகை ஏப்ரல் முதல் வாரத்தில் அரசு பொதுச் சேவைகளை முதலீடு எனப் பார்க்க வேண்டும்; அவைகளைக் கடனென்றன்று என்று எழுதியபோது அது இவ்விரண்டு பொருளாதாரர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லிவந்த கொள்கையைத்தான் எதிரொலித்தது.

இந்தப் பெண்களைப் பற்றிய ஆவலூட்டும் செய்தி என்பது அவர்கள் பேச்சளவில் நின்றுவிடவில்லை. அவர்களுக்கு முடிவுகள் தேவையாக இருந்தன. தாக்கம் ஏற்படுத்தும்  அரசியல் ஆலோசகராக கெல்டன் இருக்கிறார். பெரெஸ் எண்ணிலடங்கா கம்பெனிகளுக்கும், நிறுவனங்களுக்கும் ஆலோசகர். உலக நிறுவனங்களுடன் வலைத் தொடர்பில் உள்ளவர் Mazzucato. உலகின் பெரும் பணக்காரர்களும், அதிகாரம் உள்ளவர்களும் ஆண்டுக்கொரு முறை கூடும் உலகப் பொருளாதார மன்றத்தில் அவர் நிரந்தர விருந்தாளி; இடாலியைச் சேர்ந்த இவர்,சட்டமன்ற உறுப்பினர் Elizabeth Warren, அமெரிக்க காங்கிரஸ் பெண்மணி Alexandria Ocasia Cortez, ஸ்காட்லாந்துப் பிரதமர் Nicola Sturgen அவர்களின் ஆலோசகரும் ஆவார். விழைவுமிக்க கண்டுபிடிப்புக்களுக்கான ஒரு திட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் சென்ற ஆண்டு ஒட்டெடுப்பில் ஒப்புக்கொண்டது. அதை எழுதியவர் இவரே.

“நம் சிந்தனைகளுக்கு ஒரு தாக்கம் இருக்க வேண்டும்; இல்லையெனில் அது ஷாம்பெய்ன் சோஷலிசமாகிவிடும். நீங்கள் போகிறீர்கள், அப்போதும், இப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்; ஆனால், ஒன்றும் நடப்பதில்லை.”

4 சிந்தனைகள் உலகை எப்படி வெற்றி கொள்கின்றன

உலகை எப்படி மாற்றுவது?

முற்போக்குச் சிந்தனையாளர்களின் குழுவினரிடம் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டால் Joseph Overton பெயரை உடனே சொல்வார்கள். இவர் ஃப்ரீட்மானுடன் ஒத்த கருத்துக் கொண்டவர். புதிய தாராளமயமாக்கச் சிந்தனைக் குழுவில் இடம்பெற்று குறைந்த வட்டி, சிறிய அரசு போன்றவற்றை பிரசாரம் செய்தவர். நினைக்க முடியாமல் இருந்தவைகள், காலப்போக்கில் தவிர்க்க முடியாதவைகளாக உருவெடுக்கும் கேள்வி அவரது ஆர்வத்தைத் தூண்டியது.

அவர் சொன்னார்: ஒரு ஜன்னலை நினையுங்கள்; “அதன் சட்டகத்தில் அடங்கும் சிந்தனைகள் ‘ஒத்துக் கொள்ளப்பட்டவைகள்’ என்றும் ‘பரவலாக அறியப்பட்டவைகள்’ என்றும் எந்தக் காலத்திலும் சொல்லப்படும் சாத்தியங்கள் அதிகம். நீங்கள் ஓர் அரசியல்வாதியாக இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட விரும்பினீர்கள் என்றால் ஜன்னலின் உள்ளேயே இருந்து விடுங்கள். நீங்கள் உலகை மாற்ற விரும்பினால், ஜன்னலை மாற்ற வேண்டும். எவ்வாறு? அதன் வரை எல்லைகளைத் தள்ளுவதன் மூலம். காரணங்களற்று, துன்பம் தாங்கி, யதார்த்தத்திற்குள் நிற்காதவராக.”

சமீப காலங்களில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவரது ஜன்னல் இடம் பெயர்ந்திருக்கிறது. ஓரங்கட்டப்பட்டவைகள் மையத்திற்கு வந்துள்ளன. ஒரு ஃப்ரெஞ்ச் பொருளாதார நிபுணரின் சிறிய வரைபடம் , ‘வால் ஸ்டீர்ட்டை ஆக்ரமிப்போம்.’ என்ற கோஷமாக (நாங்கள் 99%) ஒலித்தது. அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஒரு புரட்சியாளரை முன்னிறுத்திப் ப்(ர்)னி யால், ஜோ போன்றவர்களைத் தன் பக்கம் இழுக்க முடிந்திருக்கிறது.

இந்நாள்களில் அதிக அளவில் இளைய அமெரிக்கர்கள் சோஷலிசத்தை முதலீயத்தைக் காட்டிலும் தங்களுக்குப் பிடித்ததாகக் கருதுகிறார்கள் – ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் இதை நினைத்திருக்க முடியாது. (1980 துவக்கத்தில் புதிய தாராளமயமாக்குதலைத் தலையாயக் கொள்கையாகக் கொண்டிருந்த ரீகனுக்கு இளையவர்கள்தான் அதிக அளவில் வாக்கு போட்டவர்கள்.)

முதல் கட்டத்தில் சேன்டியர்ஸ் தோல்வி அடையவில்லை? யூ. கேயில் சென்ற ஆண்டுத் தேர்தலில் ஜேரெமி கோர்பின்  நாடகத்தனமாகத் தோற்கவில்லையா? உண்மைதான்; ஆனால், தேர்தல் முடிவுகள் மட்டுமே காலத்தின் குறிகளில்லை. கோர்பின் 2017, 2019 தேர்தல்களில் தோற்றிருக்கலாம்; தங்களது தேர்தல் அறிவிக்கையைக் காட்டிலும் உழைப்பாளர் கட்சியின் நிதிக் கொள்கைகளை ஏறக்குறைய ஒத்தே பழமைவாதிகள் வெற்றி பெற்றார்கள். அதைப் போலவே, 2020-ல் பைடனைவிடத் தீவிரமான தட்பவெப்பத் திட்டத்தை முன் வைத்தார் சேன்டர்ஸ். 2016-ல் பின்னவரின் திட்டம் முன்னவரின் திட்டத்தைவிடத் தீவிரமாக இல்லை.

தன்னுடைய மாபெரும் சாதனையாக ‘டோனி ப்ளேரையும், உழைப்பாளர் கட்சியையும்’ குறிப்பிட்ட தாட்சர் நம்மிடம் ஒன்றும் நகையாடவில்லை. (அவரது சுட்டு என்னவெனில்)  1997-ல் அவரது கட்சி, அவரது கருத்துகளே போன்றவற்றைக் கொண்ட எதிரணியால்தான் தோற்கடிக்கப்பட்டது.

உலகை மாற்றுவது என்பது ஒரு நன்றிகெட்ட செயல். உங்களைக் காட்டமாக விமர்சித்தவர்கள், நீங்கள் முன்பு சொன்னது சரிதான் என ஒத்துக்கொள்ளும்போது அது ஒன்றும் வெற்றி என்று மலர்வதில்லை. அரசியலில், கருத்துத் திருட்டுக்களை, சகஜமாக எதிர்பார்க்கலாம். 1970 களிலேயே ஃப்ரீட்மான் இதைத் தெளிவாக உணர்ந்திருந்தார். நான்கு நிலைகளில் தன் கருத்துக்கள் உலகை வெல்லும் என ஓர் இதழியலாளரிடம் அவர் சொன்னார்:

அங்கம் 1: என்னைப் போன்ற கிறுக்கர்கள் தவிர்க்கப்படுவார்கள்.

அங்கம் 2: பழமைவாதிகள், இதில் காணப்படும் உண்மையால் அசௌகரியம் அடைவார்கள்.

அங்கம் 3: மக்கள் சொல்வார்கள்: ‘ஏட்டுச் சுரைக்காய் இது; நடைமுறையில் இயலாதது; ஆனால், மிதமான வழிகளைக் கொண்டு நாம் இத்திசையில் செல்லப் பார்க்கலாம்.

அங்கம் 4: எதிரணியினர் என் கருத்துக்களை அடிப்படையற்ற கேலிச்சித்திரங்களாக்கி, என்னைப் பெயர்த்துவிட்டு அந்தத் தளத்தில் நின்று கொள்வார்கள்.

                        

இருந்தும், கிறுக்கர்களிடமிருந்து சிறப்பான சிந்தனைகள் தொடங்கலாம்; ஆனால், எல்லா கிறுக்கர்களிடமும் சிறந்த சிந்தனை இருக்கும் என்பதில்லை. துணிகரச் சிந்தைகள் சில நேரங்களில் பரவலாக அறியப்படலாம்; தேர்தலில் ஒரு வெற்றி பெறுவதும் நலம். இடதுசாரியினர் தங்கள் தோல்விகளின்போது ஓவர்டன்னின் ஜன்னலைக் கேடயமாக்கிக் கொள்வார்கள்: ‘கருத்துப் போரை நாங்கள் வென்றோம்.’

தன்னைத் தானே புரட்சியாளர் எனப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் பலர் பதவி அடைவதற்கான முழுத் திட்டங்களை வகுப்பதில் தோல்வி அடைகின்றனர். (அப்படித் திட்டம் இருந்தால்) இதைச் சொல்லிவிட்டால் நீங்கள் ‘இனத் துரோகி’ எனப்படுவீர்கள். பழிகளைப் பிறர் மீது சுமத்தும் வரலாறு அவர்களுக்கு உண்டு – ஊடகம், நிர்வாக அமைப்பு, தங்களுக்குள் அவர்கள் சந்தேகிக்கும் நபர்கள் போன்றவை. தங்கள் தோல்விக்கான பொறுப்பை ஏற்க மாட்டார்கள்.

இந்த உலகை மாற்றுவது எவ்வளவு கடினம் என்பதை, இந்த ஊரடங்குக் காலத்தில் நான் வாசித்த ‘டிஃபிகல்ட் வுமன்’ என்ற புத்தகம் மீண்டும் எடுத்துரைத்தது. ஹெல்ன் லூயிஸ் என்ற பிரிட்டிஷ் பெண் இதழியலாளர் எழுதியது. பெருமைமிகு பிரிட்டனின் பெண்ணியத்தின் வரலாறு குறித்துப் பேசுகிறது. மேம்பட்ட சமுதாயம் படைக்க விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய நூல் இது.

கீழ்க்காணும் மூன்று விஷயங்களின் மூலம் ‘கடினம்’ என்பது என்ன என்று அவர் சொல்கிறார்:

உலகை மாற்றுவது சிரமமானது; தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

புரட்சிகள் கடினமானவையே. வளர்ச்சி தொடங்குவது – பிடிவாத குணமுள்ள, ஏற்க முரணான, தங்கள் படகை மோதிக் கவிழ்க்கும் நிலைக்கு அஞ்சாத மனிதர்களால்தான்.

நல்லது செய்வதாலேயே நீங்கள் எல்லா விதத்திலும் சரியானவர் என்று ஆகிவிடமாட்டீர்கள். வரலாற்று நாயகர்கள், பின்னர் அப்படி அழுத்தமாகச் சித்திரிக்கப்பட்ட போதிலும், அப்படியொன்றும் சுத்தமானவர்கள் அல்லர்.

இந்த முரண்களை மறுதளிப்பதால், பல செயல்வீர்ர்கள் குறைந்த திறனுடன் செயலாற்றுகிறார்கள். ‘சிறுகுருவி’ தளத்தைப் பாருங்கள்; மற்றவர்களின் பதிவுகளைப் பற்றிக் கருத்துச் சொல்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. மாறுபட்ட ஒரு கருத்து அல்லது சற்று விசித்திரமாகப் பொருந்தும் ஒரு ட்வீட் போதும் – நேற்றைய கதாநாயகன் நாளை பீடத்திலிருந்து இறக்கப்படுவான்.

எந்த ஓர் இயக்கத்திலும் பொருந்தாத கூட்டும், விட்டுக் கொடுத்தலும் ஏற்படும் தேவைகள் உள்ளன. பிரிட்டனின் வாக்குரிமை இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் -‘அது  பலவகையான கடினப் பெண்களை ஒருங்கிணைத்தது – மீனவ மனைவிகள் முதல் மேனிலை அதிகாரியின் மனைவி வரை, தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் முதல் இந்திய இளவரசி வரை’ – முப்பது வயதிற்கு மேலான, சொத்துள்ள பெண்களுக்கு (1918டின் வெற்றிக் கனியாக) ஓட்டுரிமை பெற்றுத்தரும் வரை இந்தச் சிக்கலான கூட்டு நிலைத்தது. (இது உண்மையே. முதலில், சிறப்புரிமை கொண்ட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இது செய்யத்தக்க புரிந்துணர்வாகி, பின்னர் 1928-ல் அனைத்துப் பெண்களுக்கான வாக்குரிமை என வளர்ச்சியுற்றது.)

இல்லை, அது பெண்ணியலாளர்களை நண்பர்களாக்கவில்லை; எதிர் மாறாகத்தான் நடந்தது; அப்படிப் போராடியவர்கள், தத்தம் ஆளுமைப் பீடிப்பால், வெற்றியைச் சற்றுக் கசப்புடன்தான் நினைவுகூர்ந்தார்கள். வளர்ச்சி சிக்கலானதே!

செயல்பாட்டியம் பற்றி எண்ணும்போது அதில் இடம் பெறவேண்டிய மாறுபாடுகளின் பங்களிப்பை நாம் மறந்து விடுகிறோம். பேச்சு மேடைகளிலும், விருந்தின்போதும் நாம் நமக்குப் பிடித்தமான செயல்பாடுகளைப் பற்றி பேச விருப்பம் கொள்கிறோம். க்ரேடா தூன்பெரியை  ஆரவாரித்துப் பாராட்டும் நாம், “அழிந்து வரும் இயற்கைக்காகப்” போராடும் ‘எக்ஸ்டிங்க்ஷன் ரிபெல்லியன்’ சாலை மறியல் செய்யும்போது ஆத்திரமடைகிறோம். வால் ஸ்டீர்ட்டை ஆக்கிரமிப்போம் என்பவர்களைப் போற்றும் நாம், டாவோஸுக்குச் செல்லும் பரப்புரையாளர்களை வெறுக்கிறோம்.

மாற்றம் இப்படியெல்லாம் செயல்படுவதில்லை. எல்லா மனிதர்களுக்கும் அவரவர்களுக்கான பங்கு இதிலிருக்கிறது; பேராசிரியருக்கும், அரசை எதிர்ப்போருக்கும்; வலைதளச் செயல்பாட்டாளருக்கும், எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்க்கும்; தூண்டுபவர்க்கும், அமைதி விரும்பிக்கும்; பிதற்றொலி வாசகங்கள் எழுதுவோருக்கும், அதைப் பரவலாக்கப் பொதுமக்கள் மொழியில் எடுத்துச் சொல்பவருக்கும்; திரை மறைவில் இயங்குவோருக்கும், காவல் துறையால் இழுத்துச் செல்லப்படும் கிளர்ச்சியாளருக்கும்.

ஒன்று நிச்சயம்; ஓவர்டனின் ஜன்னல் எல்லைகளை விரித்தல் மட்டுமே போதுமானதன்று; ஒரு காலத்தில் தீவிரம் எனக் கருதப்பட்ட சிந்தனைகளை அதிகார மையத்திற்குக் கொண்டு வருவதற்கான அமைப்புகளை நோக்கிச் செல்ல வேண்டும். இது அதற்கான நேரமென நான் நினைக்கிறேன்.

                             

கடந்த நாப்பது வருடங்களாக ஆதிக்கம் செலுத்திய கருத்தியல் இப்போது இறந்து கொண்டிருக்கிறது. அதன் இடத்தை எது நிரப்பும்? யாருக்கும் உறுதியாகத் தெரியாது. இந்த இடர் நம்மை இன்னும் இருளான பாதையில் தள்ளக்கூடும் எனக் கற்பனை செய்வது கடினமன்று. ஆட்சியாளர்கள் இந்தச் சூழலை, தங்கள் அதிகாரத்தை மேம்படுத்தவும், பொது மக்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தவும், இன வெறுப்பினை மேலும் தூண்டவும் பயன்படுத்துவார்கள்.

ஆனால், வேறொன்றும் நடக்கலாம். எண்ணற்ற செயல் வீர்ர்கள், கல்வியாளர்கள், வலைப் பதிவாளர்கள், கிளர்ச்சியாளர்கள் ஆகியோரின் கடின உழைப்பு நம் நன்றிக்கு உரித்தானது; நாம் மாற்று வழியைச் சிந்திக்கலாம். இந்தப் பேரிடர் புது மதிப்பீடுகளின் பாதையில் நம்மைச் செலுத்தலாம்.

புதிய தாராளமயமாக்கம், பல மனிதர்கள் சுயநலவாதிகள் எனச் சொல்வது, அதன் சீர்கெட்ட பிடிவாதத்தைச் சுட்டுவதாகும். மனிதர்களைப் பற்றிய இந்தக் கீழ்மைப் பார்வையிலிருந்து தனியுடைமை, ஏற்றத் தாழ்வுகள், பொதுச் செயல்பாட்டுச் சுருக்கம் போன்றவை ஏற்பட்டன.

மனித இயல்புகளின் மிக உண்மையான, மாறுபட்டத் தோற்றத்தை நாம் காணும் வழி இப்போது ஏற்பட்டுள்ளது; மனிதர்கள் கூட்டுறவிற்கு எனப் பரிணமித்தவர்கள். இந்தப் புரிதலிலிருந்து இப்போது குறிப்பிடப்படுபவை எழும்பிவரும் – நம்பிக்கைக்குரிய அரசு, பொறுப்பான வரி நிர்ணயம், நம் எதிர்காலத்திற்கான ஸ்திரமான முதலீடுகள். இவை அனைத்துமே இந்த நேரத்தில் சரியாகத் தயாரிக்கப்பட வேண்டும் – அப்போதுதான் நாம் சிறு வேகத்தில் வரும் பேரிடரான சூழல் சீர்கேடுகளை வெல்ல முடியும்.

இன்றைய இந்தத் தொற்று நம்மை எங்கே கொண்டு செல்லும் என்பதை யாரறிவார்? ஆனால், சென்ற  காலத்தைவிட இப்போது நாம் தயாராகத்தான் இருக்கிறோம்.

https://thecorrespondent.com/466/the-neoliberal-era-is-ending-what-comes-next/61655148676-a00ee89a An article in Dutch by Rutger Bregman; Tranlated in English by Elizabeth Manton. 

One Reply to “புதியதோர் உலகு”

  1. This article, translated in Tamil by Ms N Banumathy is more inspiring to read in one go. I am sure, many of the readers would have been excited to see tamil vocabularies to certain technical economic terms. Many may reserve their comments on the views expressed by the creator of this article, the translation has made more and more people to read and understand easily. Thanks to Solvanam for publishing such articles. My sincere greetings and wishes to Ms N Banumathy for her splendid translation.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.