
நாற்பது ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. கணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பணிஓய்வு. மகன் அமெரிக்காவில் இருக்கிறான். குடும்பத்துடன் விடுமுறைக்கு வந்திருக்கும் மகள் அடுத்த வாரம் ஆஸ்திரேலியா திரும்புகிறாள். எதிர்பார்க்கவில்லை. பணி ஓய்வு நாளன்று நடந்த விழாவுக்கு நூறு பேருக்கு மேல் வந்து விட்டனர். ஒரு சிலருக்கு மட்டுமே சொன்னது. வங்கி ஊழியர்கள் போக பதினைந்து பேர் இருப்பார்கள் என வங்கியில் கணக்கிட்டிருந்தார்கள். நூறு பேர். மேலாளராகவோ துணை மேலாளராகவோ பணி புரியவில்லை. பணியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து பணி ஓய்வு பெறும் கடைசி நாள் வரை காசாளர் மட்டுமே. ஒவ்வொருவரும் பேசிய போது ஒரு சுவாரசியமான கதையைக் கேட்பது போல இருந்தது. அது தன் கதைதானா என அவ்வப்போது ஐயமும் எழுந்தது.
‘’பத்மா மேடம் இன்று ஓய்வு பெறுகிறார். நான் அவரை விட வயதில் சிறியவன். ஒரு விதத்தில் என்னை அவரது மாணவன் என்று சொல்லலாம். நான் பணி புரிந்த இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் வங்கி துவங்கும் நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பே அலுவலகத்தில் வாயிலில் காத்துக் கொண்டிருப்பார். அலுவலக நேரம் முடிந்த பின்னும் அரைமணி நேரம் அவருடைய அடுத்த நாள் பணிகளை ஒருங்கமைப்பார். காலையில் என்ன மனநிலையோடு பணிக்கு வந்தாரோ அதே மனநிலையோடு வெளியேறிச் செல்வார். அவர் கிளையின் பணியையே எளிதாக்கினார் என்பது மிகையல்ல’’ மேலாளர் பேசினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஒருவர் கிளையில் கணக்கு வைத்திருந்தார். அவரது தாயார் நிகழ்ச்சியில் பேசினார். ‘’பத்மா இல்லாத வங்கியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பத்மா எனக்கு வங்கி ஊழியர் மட்டுமல்ல. என் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான தோழி.’’ ஒரு கணத்தில் அவர் கண்ணீர் சிந்தியது அங்கிருந்த எல்லாரையுமே கலங்கச் செய்து விட்டது.
நிகழ்ச்சி தொடங்கி பத்து நிமிடம் கழித்து தாரிணி வந்திருந்தாள். அவள் உள்நுழையும் போதே இருவரும் பார்த்துக் கொண்டார்கள். தாரிணி நடுவயதில் இருக்கிறாள்.
இவ்வளவு தூரம் வந்திருக்கிறாளா?
இன்னும் ஆறு மாதத்தில் பணி ஓய்வு பெறவுள்ள சக ஊழியரான கமலா பேசினாள்: ‘’கிளையின் ஒவ்வொரு வாடிக்கையாளரின் கணக்கு எண்ணையும் நினைவில் வைத்திருப்பவர் பத்மா. அவர் நிழல் போல நான் கூட இருந்திருக்கிறேன். அவர் யாரைப் பற்றியும் எதிர்மறையாகிப் பேசி நான் கேட்டதேயில்லை’’
வங்கிக்கு அருகே ஒரு மைதானம். அதன் விளிம்பில் ஒரு நாகலிங்க மரம் நின்று கொண்டிருக்கும். தன்னைச் சுற்றி தான் உருவாக்கிய மலர்களை அலங்காரமாய் செய்து கொண்டு மெல்லிய மணம் காற்றில் பரவ விண் நோக்கி மெல்ல அசைந்தவாறு வளரும். பத்மா அதன் நிழலில் நின்று கை கூப்பி வணங்கினாள். சிறு குழந்தையாயிருந்த போது அப்பா மடியில் உட்கார வைத்து கதை சொன்னது.
‘’பத்மாக்கண்ணு! ஆதுரசாலைல அடிப்பட்டு சிகிச்சை எடுத்துக்கற சீடன் குருகிட்ட கேக்கறான். ‘’குருநாதா! எல்லாமே பிரம்மத்தோட ரூபம்னு நீங்க சொன்னீங்க. அப்ப மதம் பிடிச்ச யானையும் பிரம்மம் தானே.’’ குருநாதர், ‘’நான் சொன்னது முழு உண்மை குழந்தை. நீ அதில பாதியை மட்டும் புரிஞ்சுகிட்ட. முழுசா புரிஞ்சுகிட்டிருந்தா ’விலகிப் போ! விலகிப் போ!’ன்னு சொன்ன யானைப் பாகனையும் நீ பிரம்ம சொரூபமா பாத்திருப்ப.’’ அப்பா எத்தனை கதைகள் எனக்கு சொன்னீர்கள். இப்போது நீங்கள் எங்கே? நீங்கள் சொன்ன புத்தர் கதை. ‘’அம்மா! சாவே நிகழாத ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு கொண்டு வா அம்மா. உன் மகனை நான் உயிர்ப்பிக்கிறேன்.’’ ராமர் கதை. ‘’தன்னையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்’’. நீ ராமான்னு அவன் பேரைச் சொன்னா போதும். ’’எங்கேடா இருக்கிறான் ஸ்ரீஹரி?’’ பிரகலாதன் சொல்கிறான். ‘’அப்பா! அவன் எங்கும் இருப்பான். துரும்பிலும் இருப்பான். தூணிலும் இருப்பான்.’’ கீதைல கிருஷ்ணன் சொல்றான்: ‘’சேவா பரம் தர்ம’’. அப்பா நீங்கள் ஒரு குரலாக என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
துணை மேலாளர் கணபதியும் உதவியாளர் சக்திவேலும் வங்கியைத் திறக்க சாவிக்காக மேலாளருக்குக் காத்துக் கொண்டிருந்தனர். பத்மா இருவருக்கும் காலை வணக்கத்தைச் சொன்னாள்.
தெளிவான முகம் கொண்ட அந்த கணத்தில் லேசான பதட்டத்தை வெளிப்படுத்திய நெற்றி வகிடில் பெரிதாய் குங்குமம் இட்டிருந்த ஓர் இளம்பெண் பத்மாவை நோக்கி வந்தாள்.
‘’அம்மா! நமஸ்காரம். என் பேரு தாரிணி. என்னோட ஹஸ்பண்ட் ஒரு கார் மெக்கானிக். ஒரு லோன் விஷயமா மேனேஜரைப் பாக்கணும்.’’
‘’நமஸ்காரம். பேங்க் ஒர்க்கிங் அவர்ஸ் தொடங்கி எல்லாரும் வந்து செட் ஆக அரை மணி நேரம் ஆகும். லோன் விஷயங்களை மேனேஜர் மதியம் மூணு மணிக்கு மேல்தான் பார்ப்பார். நீ ஒரு மூன்றரைக்கா வாயேன்.’’
‘’சரிம்மா’’
அன்று மதியம் மேனேஜர் ஸோனல் ஆஃபிஸ் போய் விட்டார். சக்திவேல் தாரிணி வந்த போது அத்தகவலைச் சொன்னார்.
‘’காலைல ஒரு மேடம் பாத்தனே அவங்க எங்க?’’
‘’அவங்க கேஷ் கவுண்டர்ல இருக்காங்க. அரைமணி நேரத்துல வந்திடுவாங்க’’
தாரிணி காத்திருந்து பத்மாவைப் பார்த்தாள். பத்மா தன் தோள்பையுடன் வெளியே செல்ல வாசலை நோக்கி நகர்ந்தாள்.
‘’வணக்கம் மேடம்’’
‘’ஓ தாரிணி. பேட் லக். இன்னைக்கு மேனேஜர் இல்லை. நாளைக்கு இதே நேரத்துக்கு வா”
‘’சரி மேடம்’’ தாரிணி சோர்ந்து விட்டாள்.
பத்மாவுடன் சேர்ந்து தாரிணியும் நடந்தாள். தாரிணி ஒரு பருத்திப் புடவையை மிக நேர்த்தியாக அணிந்திருந்ததை பத்மா கவனித்தாள். கையில் மருதாணிச் சிவப்பு. புதிய வெள்ளி மெட்டி பளபளத்தது. கழுத்தில் தடிமனான மஞ்சள் சரடை அணிந்திருந்தாள். பத்மா நாகலிங்க மரம் அருகே வந்ததும் செருப்பைக் கழட்டி விட்டு கைகூப்பி சில நிமிடங்கள் வணங்கினாள். தாரிணியும் செருப்பைக் கழட்டி விட்டு பத்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில வினாடிகளுக்குப் பின், அவளும் வணங்கினாள்.
’’டிரான்ஸ்ஃபர் ஆகி இந்த பிராஞ்சுக்கு வந்த போது இப்படித்தான் வந்தேன். முதல் நாள் காலைலயே இந்த மரத்தைப் பார்த்தேன். கீழ நாகலிங்கப் பூக்கள் சிதறிக் கெடக்கு. நான் ஒரு பூவை எடுத்துப் பாக்கறன். சிவலிங்கத்துக்கு குடையா நாகம் இருக்கற மாதிரி பூ. ரொம்ப டிவைன். எவ்வளவு அழகான டிசைன் இல்ல.’’
சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசாமல் நடந்தார்கள்.
‘’இங்க பக்கத்துல ஒரு உடுப்பி ஹோட்டல் இருக்கு. நாம ஒரு கப் காஃபி சாப்பிடுவோமா?’’
ஹோட்டல் உரிமையாளரின் மனைவி கேஷில் அமர்ந்திருந்தார். மீல்ஸ் முடிந்ததன் ஆயாசம் மேஜை நாற்காலிகளிலும் பரவியிருந்தது. டிஃபனுக்கு இன்னும் சிப்பந்திகள் தயாராகியிருக்கவில்லை. அவர்கள் அமர்ந்ததும் உயரத்தில் இருந்த மின்விசிறி சுழலத் துவங்கியது. பத்மா ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி தாரிணி பக்கம் நகர்த்தினாள். வெயிட்டரிடம் ‘’ரெண்டு காஃபி’’ என்றாள்.
‘’அம்மா! உங்க வீடு எங்க இருக்கு? உங்க ஹஸ்பண்ட் என்னவா இருக்கார்? உங்க குழந்தைங்க?’’
‘’என் வீடு மெட்ராஸ்ல. ஹஸ்பண்ட் ஹெட் ஆஃபிஸ்ல ஸ்டெனோவா இருக்கார். ஒரு பையன். ஒரு பொண்ணு. பெரியவ நாலாம் கிளாஸ் படிக்கிறா. சின்னவன் ரெண்டாம் கிளாஸ். கொழந்தைகளை மாமியார் பாத்துப்பாங்க. இங்க லால்கான் தெருவில வீடு எடுத்து தங்கியிருக்கோம். பேங்க் லேடி ஸ்டாஃப் மூணு பேரு.’’
காஃபி வந்தது. கொதிக்கும் பாலில் திக்கான டிக்காஷன்.
‘’அப்புறம் உன்னோட ஸ்டோரியை இல்லன்னா லவ் ஸ்டோரியைச் சொல்லு’’
லவ் என்ற வார்த்தையைக் கேட்டதும் தாரிணியின் முகம் ஒரு கணம் மின்னியது. தலை குனிந்ததையும் தாண்டி அவள் முகம் சிவப்பது தெரிந்தது.
‘’என்னோட குளோஸ் ஃபிரண்டு அபர்ணா. அவ அண்ணனோட ஃபிரண்டு அவர். அவ வீட்டுக்கு வரும் போது பழக்கம்.’’
பத்மா தாரிணியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘’ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கல. நான் அவர் கூட இருந்தாத்தான் அவருக்குப் பாதுகாப்புன்னு எனக்குப் புரிஞ்சது. நாங்க கல்யாணம் செஞ்சுகிட்டோம்.’’
‘’பிரியமா இருக்காரா?’’
தாரிணி பத்மாவைத் திடமாகப் பார்த்தாள்.
‘’அம்மா! அவர் ரொம்பவும் அபூர்வமான மனுஷர்’’
***
‘’மேடம்! நீங்க கன்சிடர் பண்ண சொல்ற எல்லா அப்ளிகேஷனும் ஜெனுயின் தான். ஆனால் ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃப் ரெண்டு பேரும் ஊருக்குப் புதுசு. பேங்க் அக்கவுண்ட் இனிமேத்தான் ஆரம்பிக்கணும். கியாரண்டி கொடுக்கக் கூட உள்ளூர்ல யாரும் இல்ல. ஆடிட்-ல பல கேள்வி கேப்பாங்க. மேனேஜரா எனக்கு பல ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கு. ஐ வில் டிரை மை லெவல் பெஸ்ட்’’
***
‘’இந்த விழாவுக்கு சென்னைக்குத் தெற்கே முன்னூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வருகை தந்துள்ள திருமதி. தாரிணி அவர்களை பேச அழைக்கிறேன்.’’
***
‘’நம்ம வாழ்க்கையில எல்லாருமே ஏதோ ஒரு நாள் இந்த அனுபவத்தைக் கடந்திருப்போம். நாம ஒரு புது ஊருக்கு புது இடத்துக்கு ஒரு காரியமா அல்லது ஒரு எதிர்பார்ப்போட போறோம். அந்த இடம் புதுசா இருக்கு. அந்த இடத்துல இருக்கற ஒவ்வொன்னையுமே மனசு வித்யாசமா பாக்குது. பதட்டமும் லேசான மிரட்சியும் இருக்கு. அப்ப நாம ரொம்ப தாகமா உணர்ரோம். வெயில் நம்மள சுட்டெரிக்குது. நாம மெல்ல நடக்கிறோம். நம்ம வாழ்க்கையோட சாரம் இந்த ஷணத்துல நாம உணர்-ர வெக்கையும் தாகமும் தானாங்கற கேள்வி நம்மள துக்கப்படுத்துது. அப்ப ஒரு பெரிய அரசமரத்தோட நிழலைப் பாக்கறோம். அதுக்கடியில ஒரு தண்ணீர்ப் பந்தல் இருக்கு. ஒரு பானை நிறைய தண்ணீரும் அதோட மூடி மேல ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் இருக்கு. நாம அந்த நிழல்ல நிக்கறோம். ரெண்டு டம்ளர் மூணு டம்ளர் தண்ணீர் குடிக்கறோம். அப்ப தீர்ரது நம்ம தாகம் மட்டும் இல்ல. நம்மோட துக்கமும்தான். அந்த மரத்தை நட்டவருக்கு இந்த நாள்ல இந்த நிமிஷத்துல நாம வரப் போறோம்னு தெரியாது. அன்னைக்கு காலைல அந்த பானையில தண்ணீர் நிரப்பனவருக்கும் நம்மள தெரியாது. எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நடப்பட்ட மரமும் ஒரு டம்ளர் தண்ணீரும் நம்ம துக்கத்தை இல்லாமல் ஆக்கி நம்பிக்கை தருது. அந்த மரத்து நிழலும் ஒரு டம்ளர் தண்ணீரும் போன்றவர் பத்மா மேடம்.’’ தாரிணி ஒரு கணம் நிறுத்தினாள்.
‘’இருபது வருஷத்துக்கு முன்னால என் கணவருக்கு ஒரு லோன் கிடைக்க பத்மா மேடம் முயற்சி எடுத்துக்கிட்டார். இன்னைக்கு நான் நல்லா இருக்கன். ரெண்டு மாசம் முன்னாடி என்னோட பிறந்த நாளைக்கு என் கணவர் ஒரு புது கார் பிரசண்ட் செஞ்சார். அந்த காரை டிரைவ் பண்ணிட்டுத்தான் நான் இங்க வந்திருக்கன்.’’
‘’எனக்கு ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு. ரிடையர் ஆகிற ஒருத்தரை கூட வேலை பாக்கற எல்லாரும் ஒரு கார்ல அழைச்சுட்டுப் போய் அவங்க வீட்டுல விடுவாங்க. இன்னைக்கு பத்மா மேடத்தை அவங்க வீட்டுக்கு என்னோட கார்ல அழைச்சுட்டுப் போக ஆசைப்படறன்.’’
***
எல்லாரும் சென்று விட்டார்கள்.
பேரன் வந்து மடி மீது ஏறி உட்கார்ந்து கொண்டான்.
‘’பாட்டி கதை சொல்லு பாட்டி’’
‘’செல்லத்துக்கு என்ன கதை சொல்ல?’’
‘’கிருஷ்ணர் கதை’’
One Reply to “பிரிவு”