பித்தலாட்டக்காரன்

ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்

மூலக்கதையை ஸ்பானிய மொழியில் எழுதியவர்: Jorge Luis Borges

ஆங்கில மொழிபெயர்ப்பு: ஆண்ட்ரூ ஹர்லி (Andrew Hurley -“The Mountebank”)

தமிழாக்கம்: சிஜோ

1952-ஆம் வருடம் ஜூலை மாதத்தில் ஒரு நாள், துக்க ஆடைகளை அணிந்த அந்த மனிதன் சாக்கோ ஆற்றின் கரையில் உள்ள அந்தச் சிறிய கிராமத்தில் தோன்றினான். அவன் உயரமான மெலிந்த உருவமும், செவ்விந்தியர்களை நினைவூட்டும்  சில அம்சங்களும், மந்த புத்திக்காரனுக்குரிய அல்லது முகமூடி அணிந்தவனைப் போன்ற, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகமும் கொண்டவன். அந்த ஊர்க்காரர்கள் அவனைச் சற்று மரியாதையுடன் நடத்தினார்கள், அது அவன் யார் என்பதனால் அன்று, மாறாக அவன் நடித்துக் கொண்டிருந்த அல்லது இதற்குள் அவனுடையதாகி விட்டிருந்த ஆளுமையின் பிம்பத்தினால். அவன் ஆற்றிற்கு அருகிலிருந்த ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்தான்; சில அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களின் உதவியுடன் ஒரு பலகையை இரு மர அறுப்புச் சட்டகங்களின் மேல் போட்டு, ஒரு கெட்டி அட்டை சவப்பெட்டியைப் பொருத்தினான். அதற்குள் ஒரு பொன்னிறக் கூந்தலையுடைய பெண் பொம்மையை வைத்தான்.  அத்துடன், அவர்கள் உயரமான மெழுகுத் திரி சட்டகங்களில் நான்கு மெழுகுத் திரிகளைக் கொளுத்தி, சுற்றிலும் பூக்களை இட்டு வைத்தனர். ஊர்க்காரர்கள் விரைவில் கூடத் தொடங்கினர். நம்பிக்கையைப் பறிகொடுத்த முதிரிளம் பெண்டிர், வாயடைத்துப்போய் விரிந்த கண்களையுடைய சிறுவர்கள், மரியாதை நிமித்தம் தங்கள் வட்டத் தொப்பிகளைக் கழற்றிய விவசாயக் கூலிகள் – இவர்களனைவரும் சவப்பெட்டியைக் கடந்து செல்கையில் ‘என்னுடைய அனுதாபங்கள், ஜெனரல்’ என்று கூறிச் சென்றனர். துக்கம் அனுஷ்டிக்கும் அந்த மனிதன் சவப்பெட்டியின் தலைப்பக்கம் சோகமாக அமர்ந்திருந்தான், ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப்போலக் கைகளை அவன் வயிற்றின் குறுக்கே கோர்த்திருந்தான்.  தனக்குக் கை கொடுப்பவர்களுக்குத் தனது வலது கையை நீட்டிக் குலுக்கி, துணிவுடனும் விட்டேத்தியாகவும் ‘எல்லாம் விதி’ என்று பதிலளிப்பான். மனித ஆற்றலுக்குட்பட்ட எல்லாமே செய்யப்பட்டன.  ஒரு தகர டப்பாவில் நுழைவுக் கட்டணமாக இரண்டு பெசோ வசூலிக்கப்பட்டது. பலருக்கும் ஒரு முறை பார்ப்பதுடன் மட்டும் திருப்தி அடைய முடியவில்லை.

எப்படிப்பட்ட மனிதனால் இத்தகைய ஒரு போலித்தனம் நிறைந்த இறுதிச் சடங்கென்ற பேரில் ஒரு கேலிக்கூத்தை உருவகித்து, நடிக்க முடியும் – ஒரு வெறியனா? துக்கத்தால் வாடுபவனா? பைத்தியக்காரனா?  ஓர் இழிவான வஞ்சகனா? என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.  மனைவியை இழந்து வாடுபவன்  என்ற துக்ககரமான வேடத்தில் நடிப்பதன் மூலம் இவன் தன்னை பெரோன் என்று நினைத்துக் கொள்கிறானோ? இது ஒரு நம்பமுடியாத கதை, ஆனால் உண்மையில் நடந்தது – அதுவும் ஒருமுறை அன்று, பலமுறை, வெவ்வேறு நடிகர்களுடனும், சில உள்ளூர் மாறுதல்களுடனும். இதில்  நம்பமுடியாத ஒரு கணத்தின் முழுமையான சின்னத்தைக் காணமுடியும். அது ஒரு கனவின் பிரதிபலிப்பு, அல்லது ஹாம்லெட்டில் வரும் நாடகத்துக்குள்ளே ஒரு நாடகம் போன்ற ஒன்று.

அந்தத் துக்கம் அனுஷ்டிக்கும் மனிதன் பெரோனும் அல்லன், பொன்னிறக் கூந்தல் உடைய பொம்மை எவா துவார்த்தேவும் அல்லள், ஆனால் அதே சமயம், பெரோன் பெரோனும் அல்லன், ஏவா ஏவாவும் அல்லள் – இவர்கள் அறியப்படாத அல்லது அநாமதேய ஆட்கள் (அவர்களின் ரகசியப் பெயரோ, உண்மையான முகமோ நமக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை), உழைக்கும் வர்க்கத்தின் வெள்ளந்தித்தனமான அன்பைப் பெறுவதற்காக ஒரு தரம் தாழ்ந்த பழிப்புக்குரிய தொன்மத்தை அரங்கேற்றியவர்கள்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்:

இந்த கதையில் குறிப்பிடப்படும் பெரோன் (ஹுவான் பெரோன் – Juan Peron) அர்ஜெண்டினா நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர். ஏவா துவார்த்தெ தெ பெரோன் அவரது இரண்டாவது மனைவி. பெரோனுடன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, உழைக்கும் மக்களிடையே உயர்ந்த செல்வாக்குடன் இருந்தவர். தனது கணவரின் அரசில் துணை ஜனாதிபதி ஆவதற்காக முயன்று, புற்று நோய் தாக்கியதால் அந்த முயற்சியைக் கைவிட்டு, 1952-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறந்தார். ஏவாவின் உடல் பெரோனின் விருப்பத்தின் பேரில் பதனம் செய்யப்பட்டு, மக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்ததைத் தான் தன் மனைவியின் மரணத்தையும் அரசியல் ஆதாயத்திற்காக உபயோகித்ததாக போர்ஹெஸ் இந்த குறுங்கதை மூலம் பகடி செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.