நாய்ப் பொழப்பு

“சாமியே…ய், சரணம் ஐயப்பா…!” 

வாகனத்தில் இருந்த ஏழு பேரும் ஒருங்கே குரல் எழுப்பியதில் ஓட்டுனர் இருக்கையில் இருந்த விஜயின் காதுகளில் அது சுளீரென்று ஒலித்தது. காலை ஆறு மணிக்கு எழுந்து கிளம்பி உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சிவன் கோவில் வந்து, எட்டு மணிக்கு இந்த சபரிமலை சவாரி எடுத்ததில் இருந்து இருபது முறைக்குமேல் கேட்டிருப்பான் சரண கோஷத்தை. இப்போது அது அவனுக்கு அதிகம் பழக்கப்பட்டிருந்ததால், ஒவ்வொரு முறை வண்டியை நிறுத்திக் கிளம்பும்போதும் அவனே எதிர்பார்க்கலானான் அந்த கூட்டுக் குரலை. 

தற்சமயம் தேனியை அடுத்த வீரபாண்டியில் ஒரு கல்யாண மண்டபத்தில் அமைந்திருந்த தற்காலிக ஐயப்ப அன்னதானக் கூடத்தில் மதிய உணவிற்காக வண்டியை நிறுத்தியிருந்தான். அனைத்து சாமிகளும் மண்டபத்திற்கு அருகில் இருந்த வாய்க்காலில் குளித்து, விரதம் முடித்து வர கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டது. அதற்குள் அவன் சாப்பிட்டு முடித்து, வண்டியை ஒருமுறை சுத்தம் செய்து, இரண்டு முறை தேனீர் குடித்து வந்துவிட்டான். ஒரு வழியாக எல்லோரும் வந்து அமர்ந்து கிளம்பும்போது மணி நான்கை கடந்துவிட்டது. வண்டிக்கு முன்னால் சூடம் ஏற்றி வணங்கிக் கொண்டிருந்த குருசாமி இறுதியாய் வந்து முன்சீட்டில் ஏறி அமர்ந்து போகலாம் என்பதுபோலச் சைகை செய்தார். அதுவரையில் வண்டியை இயக்கத்தில் வைத்திருந்த அவன், அவர் சைகையை கவனித்ததும் க்ளட்சை பூப்போல விட்டு வண்டியை இலகுவாக நகர்த்தினான். ஒருவன் எவ்வளவு நேர்த்தியான ஓட்டுநன் என்பது அவன் முதல் மூன்று கியர்களை கையாளுவதை வைத்து சொல்லிவிடலாம். வண்டி உருமாலோ, குலுங்கலோ துளிகூட இல்லாமல் நகர்ந்த நேர்த்தியில் தெரிந்தது அவனின் திறன். தொண்டையை உறுமிக்கொண்டு குருசாமி கேட்டார், 

“என்ன சாமி ஒரு எட்டு எட்டரைக்கெல்லாம் எருமேலி போயிரலாம்ல?”

“எங்கையும் நிறுத்தாம டிராபிக் இல்லாம இருந்தா போயிரலாம் சாமி.”

“இனி எங்கயும் நிறுத்துறதெல்லாம் இல்ல. எதுனாலும் எருமேலி போயி பாத்துக்கலாம். அப்பதான் ராத்திரியே பம்பைக்குப் போய்ச்சேர முடியும். அப்டித்தான் மணி சாமியோட போறப்பெல்லாம் ரெண்டு மணிக்குள்ள பம்பையில இருப்போம்.”

குருசாமி சொன்ன மணியிடம் இவன் வேலைக்கு சேர்ந்து இரண்டாண்டு நெருங்கிவிட்டது. சேர்ந்ததில் இருந்து இந்த செவரலே தவேரா இவன் பொறுப்பில் தான் இருக்கிறது. எந்த ஊர் சவாரியானாலும், எத்தனை நாள் சவாரி என்றாலும் தவேராவும் இவனும் தான் மணி அண்ணனுக்கு. அவர் இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் ஒருநாள் உள்ளூர் சவாரியோடு சுருக்கிக் கொண்டுள்ளார் தன்னை. குடும்பங்குட்டி என்று பொறுப்புகள் ஏதும் இல்லாத இளைஞன் என்பதாலும், அதிக தொலைதூர சவாரி எடுப்பது என்பது கூடுதல் அனுபவமும் பணமும் தரும் என்பதாலும், இவனுக்கும் இதுவே பிடித்திருந்தது. ஆனால் சபரிமலை சவாரி என்றால் மட்டும் வேறு மாதிரி அணுகுமுறையாய் இருக்கும் வண்டிக்கூடத்தில்.

கார்த்திகை மார்கழி வந்துவிட்டால் வண்டிக்கூடத்தில் உள்ள ஒவ்வொரு அனுபவசாலி ஓட்டுனரும் பத்து சவாரியாவது எடுத்து விடுவார்கள் சபரிமலைக்கு. இந்த இரண்டாண்டில் அவன் எத்தனையோ சவாரி சென்று வந்திருந்தாலும் அவன் நெடுநாளாய் ஏங்கிக்கொண்டிருந்த சபரிமலை சவாரி மட்டும் இன்றுதான் கிடைத்துள்ளது அவனுக்கு. சற்று கடினமான சவாரி என்பதால், புதியதாய் வண்டி எடுக்கும் எந்த ஓட்டுனருக்கும் முதல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு சபரிமலை சவாரி கொடுக்கமாட்டார்கள். உள்ளூர்க் கூடத்தில் மட்டுமல்லாது இந்த சுற்றுவட்டாரத்திலேயே இதுதான் பழக்கமும்கூட. இன்றும் மணி அண்ணனுக்கு அவர் அக்காள் வீட்டு விஷேசம் இல்லாதிருந்தால் நிச்சயம் அவர்தான் போயிருப்பார். அப்படியெல்லாம் அவர் தவேராவை சபரிமலை எடுத்துப் போகும்போது மட்டும் அவரின் இண்டிகா விஸ்டாவை இவனிடம் கொடுத்து உள்ளூர் சவாரிகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு செல்வார். சென்றாண்டு ஒருமுறை அவரால் இதுபோல் போகமுடியாமல் இருந்தபோது அந்த சவாரிக்கு இவனை அனுப்பாமல் குமாரிடம் அந்த சவாரியை மாற்றிக்கொடுத்தார். அந்த வகையில் இப்போது இவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, மணி அண்ணனுக்கு இவன் வண்டியோட்டும் விதம் மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை என்றே நினைத்துக்கொண்டான். அந்த வகையில் இன்று இந்த சவாரி என்பது தனக்கு கிடைத்த பதவி உயர்வாகவே பட்டது இவனுக்கு. அப்போது மீண்டும் குருசாமியின் குரல் இவன் நினைவலையை கலைத்தது.

“சாமி எத்தன தடவ மலைக்கு ஓட்டியிருப்பீங்க”

“இதான் சாமி மொத சவாரி. ஆனா மணியண்ணன் கிட்டதா ரெண்டு வருசமா வண்டி ஓட்டுறன்”, உண்மையை அப்படியே சொன்னான் அவன்.

“ஆமா சொன்னாரு, அவுருக்கு ஏதோ விசேஷம்னாரு. வழில்லாம் தெரியுமா சாமி இல்ல சொல்லனுமா?”

“இல்ல சாமி. நல்ல கேட்டுகிட்டுதா வந்திருக்கேன். தெரியலன்னா கேக்குறேன்”

நான்கு நாட்களாய் தன் சக ஓட்டுனர் எல்லோரிடமும் பல கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றிருந்தான். மணி அண்ணனும் குமாரும் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு விஷயமாய் சொல்லி வைத்திருந்தார்கள். எங்கே பெர்மிட் போடுவது, எங்கே சாப்பிட நிறுத்துவது, குமுளி மலைப்பாதை, குட்டிக்கானம், மண்டகாயம், எளவும்கள் சந்திப்பு, பம்பையில் இறக்கிவிட்டு நிலக்கல் வாகன ஓய்விடம் வருவது, என அனைத்தும் விபரமாக. 

சபரிமலை சவாரி ஏன் அவ்வளவு சீக்கிரம் கொடுக்கமாட்டார்கள் என்பதற்கு முக்கிய காரணம் நெடுந்தூரப் பயணம் என்பதை காட்டிலும், அந்தப் பயணத்தில் சரியான ஓய்வோ சாப்பாடோ கிடைக்காமல் அள்ளப்படுத்தும் நிலக்கல் வாகன ஓய்விடம் மிக முக்கியமானது. மற்ற ஊர்களைப்போல் சென்று இறக்கிவிட்ட இடத்திலேயே வண்டியை நிறுத்தி ஓய்வெடுக்க முடியாது இங்கே. எல்லோரையும் இறக்கிவிட்டு வெறும் வண்டியை எடுத்துக்கொண்டு 20கி.மி தள்ளியிருக்கும் நிலக்கல் வரவேண்டும். முக்கால்மணி நேரத்தில் இருந்து ஒரு மணிநேரம் பிடிக்கும் பயணம் இது. பெரிய மைதானம் போன்ற வாகன ஓய்விடம் என்றாலும் மூலைக்கு ஒன்றென இரண்டு உணவகங்கள் மட்டுமே இருக்கும். அதிலும் வெகு சுமாரான சாப்பாடே கிடைக்கும். சமயத்தில் வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தியிருக்க முடியாமல் அவ்வப்போது நகர்த்திப் போட்டுக்கொண்டே இருக்க நேரும் என்பதால் சரியான தூக்கமும் இல்லாமல் போகலாம். தரிசனம் முடித்து சாமிகள் திரும்ப ஆறு மணிநேரம் முதல் பதினாரு மணிநேரம் வரை ஆகலாம், அது அவரவர் ப்ராப்தத்தை பொறுத்தது. பெரும்பாலும் தரிசனம் முடித்து திரும்பும் சாமிகள் பம்பையில் இருந்து நிலக்கலுக்கு கேரளா நகரப் பேருந்து பிடித்து வந்துவிடுவார்கள் என்பதால் அதுவரை உறக்கம் நிச்சயம். எல்லோரும் சொல்லியதை எல்லாம் ஒன்றாய் கட்டி நினைவில் அசைபோட்டுக்கொண்டே குமுளி மலைப்பாதையை தொட்டு கேரளா சோதனைச்சாவடியை அடைந்திருந்தான்.

சோதனைச்சாவடியில் அனுமதிச்சீட்டை காட்டி ஒப்பம் பெற்றுவிட்டு வண்டியில் வந்தமர்ந்து கிளம்பும்போது சரண கோஷம் கேட்காமல் இருக்கவே பின்னால் திரும்பிப் பார்த்தான். அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அவர்களின் தூக்கம் கலையாமல் சத்தமின்றி வண்டியை எடுத்து வந்துகொண்டிருந்த அடுத்த அரைமணிநேர பயணத்தின் பின் அவனது அலைபேசி ஒலித்ததது. மணி அண்ணன் தான் அழைத்திருந்தார். ஒற்றைக்கையில் அலைபேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டு பேசியபடியே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

“சொல்லுங்கண்ணா இப்ப தான் வண்டிப்பெரியார் தாண்டுறன்”

“எப்டி இருக்கு ரோடெல்லாம்” எதிர்முனையில் மணி அண்ணன்.

“கூட்டம்லா பெருசா இல்லண்ணா. அப்படியே நிதானமா போய்கிட்டு இருக்கன்”

“மழல்லாம் ஒண்ணுல்லயே”

“கொஞ்சம் கருக்கலா தெரியுதுண்ணா. ஆனா இதுவரயில ஒன்னும் இல்ல”

“எப்டியும் பம்பை போக பன்னெண்டு மணியாயிடும். எருமேலியில நிக்கும் போதே சாப்டுடு என்னா”

“சரிண்ணா”

“ஏதாவதுன்னா கூப்பிட்றா. தூங்கிகிட்டு இருப்பேன்லா நெனைக்காத. பார்த்து போய்ட்டுவா சரியா”

“சரிண்ணா”

அழைப்பை துண்டித்துவிட்டு அலைபேசியை முன் கண்ணாடியருகில் விட்டெறிந்தான். உரையாடல் ஒலி கேட்டு கண்விழித்த குருசாமி.

“வேணும்னா வண்டிய நிறுத்திட்டுகூட பேசுப்பா. நா வொன்னும் நெனச்சிக்க மாட்டன்”

“இல்ல சாமி. அப்டிலாம் மலப்பாதைல டக்குன்னு வண்டிய நிறுத்தி நிக்க முடியாதுல்ல. தவர ஃபோன் பேசறதும் வண்டி ஒட்றதும் வேற வேறன்னு நெனைக்கிறவன் சாமி நானு. புத்தி ஃபோன் பேசும், கருத்து வண்டியோட்டும். வண்டி கண்ட்ரோல்ன்றது ஓட்டறவன் கைலயும் கால்லயும் இல்ல சாமி. என்ஜின் நாய்சயும் சரியான கீரையும் கவனிக்குற கருத்துல இருக்கு. அப்டியேதும் தப்பு நடந்துடாது சாமி”, என்று சொல்லி அவரைப் பார்த்து புன்னகைத்தபடி வண்டியை லாவகமாய் திருப்பத்தில் வளைத்துக் கொண்டிருந்தான்.

‘பழகிய வேலையைச் செய்ய கருத்து போதும்’ என்ற அவனது வார்த்தை குருசாமியின் மனதில் பல எண்ணங்களை ஓடவிட்டது. இவன் சொல்வது சரிதான். தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது இல்லையா நாம், அதுபோல் தான் இதுவும். புத்தி செய்தியை கேட்கும், கருத்து கைக்கும் வாய்க்கும் கட்டளையிட்டுக் கொண்டிருக்கும். கருத்தின் கட்டளையை ஏற்று கை தோசையை பிய்த்து சட்னியை தொட்டு சரியாக வாய்க்கு கொண்டு செல்லும். அதிகம் பழக்கப்பட்ட ஒன்று என்பதால் நம் கை அனாயசமாய் சாப்பிடப் பழக்கப்பட்டது போல இவனுக்கு வண்டியோட்டப் பழக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவன் கருத்தான பையன் தான் என எண்ணிக்கொண்டார் குருசாமி.

வண்டி வேகமாக வந்ததா இல்லை காலம் வேகமாக ஓடியதா தெரியவில்லை, குருசாமி நிகழ்வின் நினைவுக்குள் திரும்பும்போது வண்டி கன்னிமலை கடந்து எருமேலி நெருங்கி இருந்தது. குருசாமி சோம்பல் முறித்தபடி அவனைப் பார்த்துச் சொன்னார்,

“சாமி, எந்த பார்க்கிங் ஃபிரியோ அங்க பாத்து நிறுத்திக்கங்க. எங்குளுக்கு வாவர் சாமி சமாதியு சாஸ்தா கோவிலுந் தான். ஒருமணி நேரத்துக்குள்ள வந்துருவோம். நீங்க நிக்குற எடத்துலியே எதாவ்து கடைய பாத்து சாப்ட்ருங்க. எங்க யார்க்கும் நைட்டு சாப்பாடு ஒன்னுமில்ல, வெறும் பாலும் பழமுந்தா. நாங்க வந்து வண்டி ஏர்றப்போ பக்கத்து கடையில எதாவ்து வாங்கி சாப்டு கெளம்பிடலாம். விறுவிறுன்னு பம்பைக்கு ஏறிட்னும்”

“சரிங்க சாமி, பர்கிங்க்கு மட்டும் காசு கொடுத்துருங்க போவும்போது”

“கண்டிப்பா” 

சொல்லிக்கொண்டே வண்டி எருமேலி அடைந்திருந்தது. எல்லோரையும் சாஸ்தா கோவில் வாசலில் இறக்கிவிட்டு அருகில் இருக்கும் வாகன ஓய்விடத்தில் நிறுத்தி சாப்பிட்டும் வந்துவிட்டான். வந்து வண்டிக்கு அருகில் நின்று காகிதக் கோப்பையில் தேனீர் குடித்துக் கொண்டிருந்தபடியே சுற்றி நின்ற வண்டிகளை நோட்டமிட்டான். கேரளா வண்டிகளுக்கு இணையாக பெரும்பாலான தமிழகப் பதிவெண் கொண்ட வண்டிகளையும் காணமுடிந்தது. அதனோடு கூடவே சில ஆந்திரா கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களும் தென்பட்டது. வானம் இருண்டு குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. தூரத்து நிலா ஒளியை குடித்துக் கொண்டிருந்தது சுற்றிலும் இருந்த கடைகளின் மின்விளக்குகளின் வெளிச்சம். தேனீர் குடித்து கோப்பையை தூக்கிப்போடும் நேரத்திற்கும் கோவிலுக்கு போன சாமிகள் திரும்பி வரவும் சரியாக இருந்தது. குருசாமி கொஞ்சம் பின்னால் வந்துகொண்டிருந்தார், முன்னால் வந்த சாமிகளில் ஒருவர்,

“என்ன விஜய் சாமி சாப்டீங்களா. போலாமா?”, என்றார். விஜய் தலையாட்டியபடி பதில் சொல்ல அவரே மேலும் “நல்ல தரிசனம் சாமி. கூட்டமே இல்ல, சட்டுசட்டுனு பாத்துட்டு வந்துட்டோம்” என்று சொல்லியபடி வண்டியில் ஏறினார். 

எல்லோரும் ஏற வண்டி பம்பையை நோக்கி நகர்ந்தது. கரிக்கல்லுமுழியில் இடப்பக்கம் திரும்பி பாம்பை செல்லும் பாதையை அடைந்ததும் அந்த சாலை செங்குத்தாய் ஏறுவது தெரிந்தது. இந்த மேட்டைப் பற்றி குமார் குறிப்பிடும்போது, “ரெண்டாவது கீர்ல வச்சு லேசா அக்ஸிலேட்டர் கொடுத்தா தான் வண்டி உச்சிமேடு வர ஏறும். அதுல்லாம மேட்ட பாத்து பயந்து அக்ஸிலேட்டர அழுத்துன, உச்சிமேடு ஏர்றதுக்குள்ள ரெண்டு மூணு தடவ ஃபர்ஸ்டு கீருக்கு போயிட்டு வர்றமாரி ஆயிரும்.. பாத்துக்க“, என்றும் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவன் சொன்னதையும் இவன் அனுபவத்தையும் ஒருங்கே கருத்தில் இருத்தி இலகுவாக மேடேறிவிட்டான் .மேடேறியதும் பிடித்த வேகம் அடுத்த ஒருமணி நேரத்தில் நிலக்கல் வந்தடைந்து விட்டது. அதுவரையில் தூங்காது விழித்திருந்த குருசாமி,

“திரும்பி நீங்க இங்கதா சாமி வரணும்.. வண்டி நிறுத்த, பாத்துக்கங்க”

விஜய் சாலையில் இருந்து பார்வையை திருப்பி அந்த விஸ்தாரமான மேட்டின்மேல் இருந்த வாகன நிறுத்துமிடத்தை ஒருமுறை பார்த்தான். குருசாமி மேலும் தொடந்தார்,

“உள்ள போனதும் வலதுபக்கந்தா கார் வேன்ல்லா நிறுத்துணும். நேரா உள்ள போயி கடைசி வரிசைல பாத்தீங்கன்னா எறக்கத்துல மஹாலிங்கசாமி கோயில் தெரியும். அத பாத்தமாரி வண்டிய நிறுத்திக்கங்க. நாங்க திரும்பி வந்ததும் வண்டிய கண்டுபுடிக்க தோதா இருக்கும்”

மொத்தமும் உள்வாங்கி புரிந்துகொண்டதாய் தலையாட்டினான் அவன்.

ஒருவழியாய் பம்பையை அடையும்போது மணி பன்னிரண்டை கடந்திருந்தது. அப்போதுதான் லேசான தூறலும் விழ ஆரம்பித்திருந்தது. அது ஒரு முட்டுச் சாலை என்பதை அவன் சக ஓட்டுனர்கள் சொல்ல அறிந்திருந்தான். எல்லா வண்டிகளும்  இறுதிவரை சென்று அரைவட்டம் அடித்துத் திரும்பி வந்த வழியேதான் போக வேண்டும். இவனும் சென்று திரும்பிவந்து வந்தவர்களை இறக்கி விட்டான். எல்லோரும் இறங்க, இவன் வண்டியின் மேல் கட்டியிருந்த இருமுடி கட்டுக்களை பிரித்து இறக்கிக் கொடுக்க உதவினான். அங்கே ஐந்து நிமிடமே வண்டி நிறுத்த அனுமதி என்பதால் அனைத்தையும் அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். அதற்குள் ஒரு கேரள காவலரும் சேர்ந்து விரட்ட, இவனிடம் குருசாமி “பாத்து போங்க சாமி, நாங்க சொன்ன எடத்துல வந்து பாக்குறோம் உங்கள” என்று சொன்னதைக்கூட சரியாய் காதில் வாங்கிக்கொள்ளாமல் கையசைத்துவிட்டு புறப்பட்டான். நிலக்கல் நோக்கி தனிமையில் பயணம். சாமிகளை இறக்கிவிட்டதால் இப்போது தான் சினிமா பாடல் ஒலிக்கவிட்டபடி தனக்குப் பிடித்த பாடல்களை தேடிக்கொண்டிருந்தான், இவ்வளவு தூரம் சினிமா பாடல் கேட்காமல் சவாரி ஒட்டியது இதுவே தனக்கு முதல்முறை என்பதாலோ என்னவோ சற்று அயர்ச்சி தெரிந்ததாய் தோன்றினாலும் அப்போது ஆரம்பித்திருந்த மழை கொஞ்சம் உற்சாகம் ஊட்டியது. ஒரு பதினைந்து நிமிட அசுவாசமான பயணத்தின் பின், முன்னால் சென்ற வாகனங்கள் எல்லாம் வரிசையில் நிற்பதை கண்டான்.

மழையில் ஏதோ இறங்கிக் கொண்டிருந்த ஒரு வேனும் ஏறிக்கொண்டிருந்த ஒரு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகவும், உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும் வண்டிகளை நகர்த்த முடியாத அளவுக்கு சேதம் என்றும், காவலர்கள் கொஞ்சம் வண்டிகளை ஒதுக்கித் தள்ளி, பக்கத்துக்கு ஐந்தைந்து வண்டிகளாய் விடுவதாகவும் எதிரில் வந்த ஒரு தென்காசி வண்டிக்காரர் சொல்லிவிட்டுப் போனார். வண்டியை வரிசையில் நிறுத்திய அந்த நொடிப்பொழுது தான் அயர்ச்சியை அதிகம் உணர்ந்தான். காலையில் கிளம்பியதால் இருந்து ஒரு பொட்டுத் தூக்கம் இல்லை. மலைப் பயணமாதலால் அடிக்கடி க்ளட்ச் மிதித்து இடதுகால் வலி வேறு. வண்டிகளெல்லாம் அடியடியாய் நகர்ந்துக்கொண்டு இருந்தது. சாலைப் பயணமாய் இருந்திருந்தால் அப்படியே வண்டியை ஓரங்கட்டி போட்டுவிட்டு தூங்கிவிடும் அளவிற்கு அயர்ச்சி அவனுக்கு. மலைப்பயணத்தில் அதற்கும் வழியில்லை. வெறுப்பையும் எரிச்சலையும் பாடல்களை மாற்றுவதில் மட்டுமே காட்டிக்கொண்டிருக்க முடிந்தது அவனால். உண்மையில் வாகனத்தை இயக்குவதை விட இப்படி சும்மா நிற்பதே கொடுமையானது. அப்படி இப்படி ஒரு மூன்று மணி நேரம் கடந்து விட்டது அந்த நான்கு கி.மி கடப்பதற்குள். மெல்ல அவன் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வந்திருந்தான். தீயணைப்பு படையினர் துணையுடன் எதிர்ப்பக்கத்தில் இருந்த பேருந்தை இழுத்து ஒரு மேட்டின்மேல் விட்டுவிட்டு, மீட்பு வண்டி திரும்பிக் கொண்டிருந்தது அப்போது. இவன் திசையில் இருக்கும் அடிபட்ட வேனை கட்டி இழுத்துப்போவது உத்தேசமாக இருக்குமென தோன்றியது அவனுக்கு. உண்மையில் சமத்தளத்தை விட மலைப்பாதையில் ஒரு விபத்தை கையாளுதல் என்பது சற்று கடுமையானது தான். அதனாலேயே மலையில் வண்டியோட்டும் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டுமென்றும் தன் குருநாதர் ஒருமுறை சொன்னது நினைவில் வந்தது அவனுக்கு. இவன் வண்டி அடிபட்ட வண்டிக்கு பின்னால் வரவும், மீட்பு வண்டி அதை இழுக்கொண்டு கிளம்பவும் சரியாய் இருந்தது. சாலைகள் மொத்தமும் போக்குவரத்துக்கு ஏதுவாக சீராகி இருந்தது அப்போது. ஆனால் இவனுக்குத்தான் எஞ்சிய எட்டு கி.மியை அந்த வண்டியை பின்தொடர்ந்தபடி கடக்க, மேலும் ஒரு முக்கால் மணி நேரம் ஆனது. ஒரு வழியாய் நிலக்கல் அடைந்து அவர்கள் சொன்ன கோவிலுக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு பார்க்கும்போது மணி ஐந்தை நெருங்கி இருந்தது.

அப்படியே உறங்கி இருக்கலாம் அவன், இருந்தும் அயர்ச்சியை மீறிய பசி இருந்தது அவனுக்கு. கொஞ்சம் பசியாற்றினால் நல்ல தூக்கம் வரும் என்று அருகில் இருந்த தேனீர் கடைக்கு சென்று இரண்டு பழம்பஜ்ஜி எடுத்து தின்றுகொண்டே “சேட்டா ஒரு ச்சாயி” என்றான். அயர்ச்சிதான் என்றாலும் ஓட்டுனர்களுக்கு என்று ஒரு வரம் உண்டு. அவர்களால் மட்டுமே ஓட்டுனர் இருக்கையில் சாய்ந்தபடியே நிம்மதியாய் உறங்கமுடியும், சாய்ந்ததும் தூக்கம் வரும், கொசுக்கடி, காற்றின்மை, எதுவும் கவலைப்படுத்தாது. ஒரு இரண்டு மணிநேரம் தூங்கி முழித்தால் கூட போதும், ஒரு மின்கலம் மின்னூட்டல் அடைந்ததை போன்று அடுத்த ஏழெட்டு மணி நேரத்திற்கு புத்துணர்வாய் வண்டியோட்ட முடியும். இப்படி இடையிடையே சிறு தூக்கம் போட்டு மூன்று நாட்கள் கூட வண்டியோட்ட முடியும். ஒட்டகம் ஒருவாரத்துக்கான தண்ணீரை தன் கழுத்தில் தேக்கி வைத்துக்கொன்வதை போல மூன்று நான்கு நாள் தூக்கத்தை சேர்த்து வைத்து, வீட்டில் வந்து ஒருநாள் முழுக்க கால்நீட்டி தூங்கிக்கொள்ள முடியும். இத்தனையும் அசைபோட்டுக் கொண்டிடுந்த நொடியில் அவன் சொன்ன தேநீரும் வந்து சேர்ந்தது. எப்படியும் போனாவர்கள் இந்நேரம் சாமி தரிசனம் முடித்திருந்தால் கூட, அவர்கள் மலை இறங்கி வந்து, பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு வந்தடையும் நேரத்திற்குள் நாம் ஒரு நல்ல தூக்கம் போட்டு முடித்துவிடலாம் என்றெண்ணிக்கொண்டே தேனீரை முடித்தான். தேநீருக்கான காசை கொடுத்துவிட்டு கடையில் இருந்து கிளம்பும் நொடியில், அவன் தோளில் ஒரு கை பட்டது.

“என்ன விஜய் சாமி தூங்கிகிட்டு இருப்பீங்கன்னு பாத்த அதுக்குள்ள எழுந்து டீ குடிக்க வந்துடீங்க”, வண்டியில் வந்த ஒரு சாமியின் கேள்வி இது.

திரும்பிப் பார்த்தால் எல்லா சாமிகளும் பின்னால் நின்று கொண்டிருந்தார்கள். நடுவில் நின்ற குருசாமி முன்னாள் வந்து, “அப்பறம் என்ன அதா விஜய் சாமியே முழிச்சுட்டாருல்ல, எல்லாரும் போயி வண்டில ஏறுங்க, அப்டியே போயி பழனி முருகனயும் பாத்துட்டு போய்டலாம்”, என்றார். கேட்டதும் அவனுக்கோ விழி பிதுங்கிற்று, பழனிக்கு இங்கிருந்து எட்டு மணி நேரம் ஆகுமே. பதில் ஏதும் எதிர்பார்க்காமல் குருசாமியே தொடர்ந்தார்.

“மொதல்ல ஐயப்ப சாமிய பாத்துட்டு ஊருக்கு போறதா தான் முடிவு. அதான் இங்க இவ்ளோ சீக்கரம் வேல முடிஞ்சிருச்சே, அப்டியே பழனி முருகனயும் பாத்துட்டு இன்ன ராத்ரிக்கே ஊருக்கு போயி அவவன் திங்கக்கிழம காலைல சோலிய பாக்க போயிரலாம்”, என்று சொல்லி, இடைவெளிவிட்டால் சொல்ல வந்ததை மறந்துவிடுவோம் என்றெண்ணி,

“அப்பறம் சாமி, பழனி போற வாடகைல்லாம் நான் மணி சாமிகிட்ட பேசிடுறேன். நாங்கல்லா மலை ஏறியறங்குன அசதில இருக்கோம், வண்டி ஏறுனதும் தூங்கிருவோம். ஒங்குளுக்கு பழனிக்கு போற வழி தெரியுந்தான”

“தெரியு சாமி. வந்த வழியே போயி வத்தலகுண்டு தாண்டி செம்பட்டில எடது பக்கம் திரும்பி ஓட்டாஞ்சத்திரம் புடிச்சா பழனி. போயிரலாம் சாமி”, கொஞ்சமும் சுருதியில்லாமல் சொன்னான் அவன். ஒரு நிமிடம் தயக்கத்தில் நின்றிருந்த அவன் சென்றுகொண்டிருந்த சாமிகளை பார்த்து,

“நீங்க போயி எல்லாத்தையும் வண்டில ஏத்திட்டு இருங்க சாமி. நா இன்னோர் டீ குடிச்சிட்டு வந்துடுறன்”, என்று குருசாமி காதில் விழுமாறு சொன்னான். அவரும் திரும்பி சிரித்து தலையசைத்துவிட்டு சென்றார். போகும்போது கூட போய்க்கொண்டிருந்த சாமியிடம் அவர் சொன்னது இவன் காதில் நன்றாக கேட்டது.

“நால்லாம் ஒருதடவ சரங்கொத்திலேர்ந்து கியூவுல நின்னு பதினெட்டு மணிநேரம் ஆயிருக்கு சாமி பாத்து திரும்ப. இந்த தடவ தான் நம்பியார் மண்டபம் வரைக்கும் எங்கயும் நிக்காம போயி நாலு மணிநேரத்துல சாமி பாத்து திரும்புனது.”

தேனீர்கடையில் தேனீர் வாங்கி குடித்தபடி நினைத்துக் கொண்டான். ‘நாய்ப் பொழப்பு இது’, என்று மணி அண்ணன் அடிக்கடி சலித்துக்கொள்வது ஏனென்று புரிந்தது அவனுக்கு இன்று. நாயும் ஓட்டுனரும் மட்டும் தான் எல்லோரும் தூங்கும் போதும் விழித்திருந்து அவர்களை காக்கும் வேலை செய்வது. தனக்கென சரியான தூக்கமோ, சாப்பாடோ எதிர்ப்பார்க்க முடியாத போதும் விசுவாசமாய் இருப்பது. இவ்வளவு செய்தும் தான் என்ன செய்தோம் என்பதையே அவர்களின் பயனீட்டாளர்கள் உணராமல் இருப்பது. உண்மையில் நாய்ப் பொழப்பு தான் இது. நினைத்துக் கொண்டே நடந்து வண்டியை அடைந்தான். அவன் வண்டியில் ஏறி அமர எல்லோரும் தங்கள் பொருட்களை கட்டிமுடித்து வண்டியில் அமர்திருந்தனர். துளி ஓய்வின்றி இருபத்தி நான்கு மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய கலைப்பைவிட இன்னும் எட்டு மணிநேரம் ஓட்டவேண்டும் என்னும் மலைப்பே பெரிதாய் இருந்தது அவனுக்கு. இடையில் இரண்டு மணிநேரமாவது தூங்கி இருந்தால் இவ்வளவு களைப்பு தெரியாது. இனி நேரமிருந்தால் பழனி சென்றுதான் சற்று கண்ணயர முடியும். சரி இங்கிருந்து முதலில் புறப்படலாம் என்றெண்ணிய படி, “கெளம்பலாமா சாமி” என்று கேட்டபடி சாவி கொடுத்து என்ஜினை முடுக்கினான்.

வெளியில் பார்த்தான். வானம் விடிய ஆரம்பித்திருந்தது, இவன் கண்கள் மட்டும் இருட்டிக்கொண்டு வந்தது.

வண்டி கிளம்பிய வேளையில் மீண்டும் கூட்டாக சரண கோஷம்.

“சாமியே…ய், சரணம் ஐயப்பா!”


5 Replies to “நாய்ப் பொழப்பு”

  1. சக்திவேல், கதை நன்றாக வந்துள்ளது. விறுவிறுப்பு குறையாமல் போகிறது. எனக்குத் தெரிந்த சில ஓட்டுநர்களை ஞாபகப்படுத்தியது இந்தக் கதை. நாராயணனன் என்று ஒரு ஓட்டுநர் சிறுவயதில் எங்கள் வண்டியை சேலத்திலிருந்து கோட்டயம் வரை இரவு உறக்கம் இல்லாமல் ஓட்டிச் செல்வார். எழுத படிக்கக் தெரியாது, ஆனால் எந்த இடத்துக்கும் ஒருமுறை சென்று விட்டால் பின் வழியை மறக்கமாட்டார். இந்தக் கதையில் வரும் குருசாமி போல் முன்னால் உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டு வருவது என் வேலை. பழைய நினைவுகளை மலர வைத்து விட்டீர்கள் கதை முடிவில் அவர்கள் பத்திரமாக பழநி போய்ச் சேர வேண்டுமே, விஜய்க்கு உறக்கம் கிடைக்க வேண்டுமே என்று மனம் பதைப்பதை, இது கதை தான் என்று உணர்ந்த போதும் தவிர்க்க முடியவில்லை. வாழ்த்துக்கள்!

  2. சக்திவேல்,

    கதையின் முதல் மற்றும் நிறைவு வரிகளை, “சாமியே…ய், சரணம் ஐயப்பா!” என்று அமைத்தது மிகச் சிறப்பு!

    இந்த வரிகளுக்கிடையில், எதார்த்தமான நடையில், எவ்வளவு நாசூக்காக வண்டி ஓட்டுநர்களின் சிரமத்தை விவரித்திருக்கிறீர்கள்!

    நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் ஊர் மானாமதுரையிலிருந்து குருசாமிகள், மார்கழி மாதத்தில் விரதம் இருந்து மகரதீபம் காண இருமுடி கட்டி் குழுவாகக் கூண்டு உந்துகளில் சபரிமலைக்குக் கிளம்புவார்கள். வீரமணி அவர்களின் “பள்ளிக்கட்டு சபரிமலைக்குக் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” பாடல் ஒலிபெருக்கிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். பம்பை நதியில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டி இருக்கும், பல மைல்கள் வெறுங்காலுடன் நடக்க வேண்டி இருக்கும் பக்தர்களை நினைத்துக் கவலைப்படுவேன்.

    இக்கதையைப் படிக்கும் வரை இவ்வளவு வருடங்களாகச் சபரிமலைக்குப் பக்தர்களைப் பத்திரமாக அழைத்துச் சென்று வரும் ஓட்டுநர்களைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கவே இல்லை.

    பிடித்தமான வரிகள்:
    “ஒவ்வொரு முறை வண்டியை நிறுத்திக் கிளம்பும்போதும் அவனே எதிர்பார்க்கலானான் அந்த கூட்டுக் குரலை..”

    “பழகிய வேலையைச் செய்ய கருத்து போதும்”

    “.. தனிமையில் பயணம். சாமிகளை இறக்கிவிட்டதால் இப்போது தான் சினிமா பாடல் ஒலிக்கவிட்டபடி தனக்குப் பிடித்த பாடல்களைத் தேடிக்கொண்டிருந்தான், இவ்வளவு தூரம் சினிமா பாடல் கேட்காமல் சவாரி ஒட்டியது இதுவே தனக்கு முதல்முறை என்பதாலோ என்னவோ சற்று அயர்ச்சி தெரிந்ததாய் தோன்றினாலும்..”

    “நாங்கல்லா மலை ஏறியறங்குன அசதில இருக்கோம், வண்டி ஏறுனதும் தூங்கிருவோம். ஒங்குளுக்குப் பழனிக்கு போற வழி தெரியுந்தான”.

    “நாய்ப் பொழப்பு” என்ற தலைப்பு நச்சென்று பொருந்துகிறது.

    தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!

    ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.