சாபம்

வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தபோது வழக்கத்திற்கு மாறான அமைதி. விளக்கு கூட ஏற்றாமல் அடுக்களையில் உட்கார்ந்திருந்தாள் சரசு. சின்னவன் ட்யூசன் போயிருக்க வேண்டும். அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். பெரியவனையும் காணவில்லை. சரசு என்னைப் பார்த்ததும் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள், “இப்பிடி எங்குடும்பத்துல மண்ணள்ளிப் போட்டுட்டாள பாவி…பாவி…எம்புள்ள ஒருநாளும் இப்பிடிப் படுத்ததில்லய…நல்லாருப்பாளா…பாவி…”

“எட்டி, என்னாச்சி? எதுக்கு இப்ப அழுதுட்ருக்க?”

பதில் சொல்லாமல், “நானா வச்சி பாக்கமாட்டேன்னு சொன்னேன்? அவளுக்கு வாய வச்சிட்டு சும்மாக் கெடக்க முடியலன்னா அதுக்கு நா என்ன செய்வேன்? இப்பிடிச் சாபம் விட்டுட்டாள பாவி…கட்டைல போக..” என்று சிணுங்கினாள்.

முந்தைய வாரம், இரவிலேயே முற்றத்தை மெழுகி அரிசி மாவுக் கோலம் போட்டு, அடுப்பு, புதுப்பானைக்கு வெள்ளையும் காவியும் அடித்து அம்மாவும் மகன்களுமாக இரவு முழுதும் உறங்காமல், அதிகாலை ஐந்து மணிக்கு கீறிப்போட்ட பனையோலைகளை வைத்துக் கற்பூரமேற்றி, பானை பொங்குவதற்காக அனைவரும் காத்திருந்த சமயம் தூரத்தில் இடம் வலமாக சரிந்து ஆடியபடி நடந்து வந்தாள் என் அம்மா. பொறுமை, பொறுமை என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். எங்கள் ஒவ்வொரு சந்திப்பும் பயங்கர சண்டையில் போய்தான் முடியும்.

அவள் நெருங்கி வரவும் பொங்கப்பானை பொங்கவும் சரியாக இருந்தது. சரசு குலவையிட்டவாறே பரிதவிப்போடு என் முகத்தைப் பார்த்தாள்.

“பொங்க மயிருல்லா வைக்கா சண்டாளி..நா நடுத்தெருவுல நிக்கேன்..ஒனக்குப் பொங்கல் மயிரு…” என்று கத்தினாள் அம்மா.

“அத்த, எல்லாரும் பாக்காத்த…நல்ல நாளு அதுவுமா….உள்ள வாங்க…” என்று அம்மாவின் கையைப் பிடித்தாள் சரசு.

சட்டென அவளது கையை உதறிவிட்டவாறு, “நீ போட்டி மயிரு..ஒனக்க சிவாரிசு..எம் மகன் மாசாமாசம் ஒழுங்கா பைசா அனுப்பிட்ருந்தான்…நீ எதாஞ் சொல்லி அவன கொழப்பி விட்ருப்பட்டி…நா வேண்டாம் வேண்டான்னு சொல்லியும் கேக்காமல்லா ஒன்ன வந்து கெட்டுனான்…”

“அத்த…பொறவு பேசுவம் அத்த…இரிங்க…பொங்கல் பொங்குக நேரமா சண்ட போடாண்டாம்..அரிசி போடணும்…”

“போடு போடு…எம் மகன மயக்குனது போறாது…அப்பிடியே எனக்கு வாய்க்கரிசியும் போட்டுரு…லேய், ஒம் பொண்டாட்டி சொன்னா ஒனக்கு அம்மக்கி பைசா அனுப்ப முடியாது என்னல? பெத்த வயித்த எரிய விடக்கூடாது பாத்துக்கோ…”

அதுவரை பொறுமையாக இருந்த நான், “எனக்கு அம்மைன்னு ஒருத்தியுங் கெடயாது…நீ மொதல்ல கெளம்பு…பொறவு வேற மாறி ஆயிப்போவும்…” என்று கத்தினேன்.

வெள்ளைச் சேலை முந்தானையை விரித்து அங்குமிங்கும் ஆட்டி, “என்ன அடிப்பேன்னுலா சொல்லுகான்…இப்பிடி பொண்டாட்டிக்க முந்தானயப் பிடிச்சிட்டுக் கெடக்கானே…பாருட்டி…பாரு..ஒனக்குச் சந்தோசமா? எம்புள்ளயத் தூண்டிவிட்டு என்னய அடிக்கல்லா வைக்கா? நீ நாசமாப் போவ…புழுவரிச்சிப் போவ…சண்டாளி…” என்று ஆடினாள் அம்மா. 

எனக்குக் கோவம் தலைக்கேற சட்டென அவளைப் பிடித்துத் தள்ளி விட்டேன். 

“ஓடிரு நாய…இங்க வந்து நாடகம் போட்டுட்டுக் கெடக்கப்புடாது..சோலிய முடிச்சிப் போடுவம் பாத்துக்க…அம்பது வருசமாட்டு ஒம்புத்தி தெரியாமல்லா கெடக்கேன்…அவளுக்குப் பைசா மயிரு…ஒன்ட்ட கடன்லா வாங்கிருக்கேன்…மாசாமாசம் அவளுக்குப் பைசா கேக்கு…சோத்துக்கு வழியில்லாமலா கெடக்க? கூய்வுள்ள, எளயவன் தலைல வெச்சித்தான தாங்குகான்? பொறவு என்ன செலவு மயிரு ஒனக்கு? அடி வாங்கிராம ஓடிரு…அம்மைன்னுலாம் பாக்க மாட்டம் பாத்துக்க…” 

தரையில் விழுந்தவள் தலைமுடியை விரித்துப் போட்டு கெட்ட வார்த்தைகளாக அடுக்கிக் கொண்டிருந்தாள். எழுந்து வந்து கைநிறைய மண்ணையள்ளிப் பொங்கல் பானையினுள் போட்டு, “சவத்துமூளி…நீ நாசமாப் போவ..ஒங் குடும்பம் நெலைக்காது…சீரழிஞ்சிப் போவ…எங் கொள்ளிக்கிப் பிள்ளையில்லாமச் செஞ்சிட்டேல்லா? நீயும் ஒருநாளு இப்பிடி நிப்பட்டி…கஞ்சிக்கி வழியில்லாமக் கெடப்பப் பாரு…பிச்சக்காரப்பயலுக்குப் பொறந்தவுள்ள, மண்ணாப் போ..” என்று சொல்லி கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். சின்னவன் கொஞ்ச தூரம் அம்மாவின் பின்னால் சென்றான். அவள் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டுவிட்டு ஆடி ஆடிச் சென்றாள்.  

“எட்டி, பொலம்பாத, பயக்கள எங்க?” என்று சரசுவிடம் கேட்டேன். 

கையூன்றி எழுந்தவள், “ஸ்கூல் விட்டு வந்தவன் அப்பிடியே கட்டில்ல விழுந்து கெடக்கான்…என்னன்னு கேட்டா ஒண்ணுஞ் சொல்ல மாட்டுக்கான்..” என்று அழுதுகொண்டே படுக்கையறைக்குச் சென்றாள். 

சின்னவன் கட்டிலில் வில் போல வளைந்து கிடந்தான். கால்கள் அடிக்கடி வெட்டி இழுத்தன. கண்கள் மூடாமல் சுவற்றில் நிலை குத்தி நின்றன. எதையோ புலம்பிக் கொண்டே இருந்தான். அவன் அருகே உட்கார்ந்து, “சரவணா…சரவணா..எந்தி மக்ளே…சாப்டுட்டுப் படு, எந்தி..” என்று அவன் கையைப் பிடித்தேன். கை தீங்கங்கு போல சுட்டது. கழுத்திலும் நெற்றியிலும் கை வைத்துப் பார்த்தேன். அனலடிக்க, நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் தொடர்ந்து ஏதோ புலம்பிக்கொண்டே இருந்தான். 

“லேய் சரவணா…எந்தி மக்ளே, ஒண்ணுல்ல எந்தி..” என்று சரசு அவன் தலைமாட்டில் நின்று அவன் முகத்தில் கைவைத்துத் தடவிக் கொண்டிருந்தாள்.

சரவணனிடம் ஒரு மாற்றமும் இல்லை. “எதாம்  பாத்து பயந்திருப்பானோ? கருக்கல்ல பனங்காட்டு வழியா வராதன்னு சொன்னா கேக்கானா?” என்று கவலையாகக் கூறினாள் சரசு. 

“ஆரம்பிச்சிட்டியா? அப்போ வீடு முழுக்க சாமி படம் வச்சிருக்கல்லா, எதுக்கு?” 

“நீங்க சும்மாக் கெடங்கோ..ஒங்கம்ம ஆடுன ஆட்டத்துக்குத்தான் எம்பிள்ளக்கி இப்பிடி ஆய்ட்டு…கருநாக்குக்காரி..பொங்கப்பானைல மண்ணள்ளிப் போட்டுட்டாள, எப்பிடித்தா மனசு வந்தோ?”

“விடுட்டி, சும்மா எதயாம் போட்டுக் கொழப்பாத..பேரசிட்டமால் இருக்குல்லா? கொஞ்சம் சுடுகஞ்சி வெச்சிக் குடு…நல்லா ஒறங்கி முழிச்சா செரியாவும்…”

அவள் சென்று திருநீறு எடுத்து வந்தாள். எதோ மந்திரம் சொல்லி சரவணனுக்குப் பூசி விடப் போனாள். தலையை ஆட்டிக்கொண்டே கட்டிலில் முன்னும் பின்னுமாக அசைந்து மெதுவாக எழுந்து நிற்க முயன்றவன் சட்டெனத் தரையில் விழுந்தான். 

“எம்மா..எம் பிள்ள..” என்று கத்தியவாறு அவன் பக்கத்தில் சரிந்து உட்கார்ந்தாள் சரசு. விழுந்தவன் இன்னும் வில் மாதிரிதான் கிடந்தான். மெதுவாக நடுங்கியபடி எழுந்து நின்றவன் ஏதோ புலம்பிக்கொண்டே வெளியே சென்றான். நாங்கள் பின்னாடியே செல்ல, அடுக்களையில் சென்று ஒரு தட்டத்தை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டான். 

“என்ற ப்ளேட்டானு..என்ற ப்ளேட்டானு..” என்று சத்தமாகக் கத்திக்கொண்டே மீண்டும் படுக்கையறைக்குச் சென்றான். அவனால் நிமிர்ந்து நடக்க முடியவில்லை, உடல் கூன் விழுந்ததுபோல வளைந்திருந்தது. கட்டிலில் கிடந்த அவனது போர்வையை எடுத்து அந்தத் தட்டத்தோடு சேர்த்துச் சுற்றினான். “என்ற பெட்ஷீட்டானு…” என்றவன் அறையின் மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கோரைப்பாயைச் சுருட்டி எடுத்துக்கொண்டு அறைக்கதவின் பின்னால் சென்று ஒளிந்து நின்றான். 

என்ன நடக்கிறது என்பது புரியாமல் நான் முழித்துக்கொண்டிருந்தேன். அழுவதை நிறுத்திய சரசு பேயறைந்தமாதிரி நின்றாள்.

“எப்பா, என்னப்பா இப்பிடில்லாம் செய்யான்?”

“தெரிலட்டி…இரி…பாப்பம்..” என்று சொல்லி அவனருகே சென்று, “மக்ளே..மக்ளே…ஒண்ணுல்ல…அப்பா கூட வா மக்ளே..” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து இழுத்தேன்.

கையைப் பாய், பெட்ஷீட் மற்றும் தட்டத்தோடு சேர்த்து இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு குறுகி நின்றான். 

“எனிக்கி வைய்யா…என்ற ப்ளேட்டானு…எனிக்கி வைய்யா..”

“எப்பா, இது வேற மாதிதான் தெரியி..முத்தாரம்மன் கோயில்ல போயி தண்ணி தெளிச்சிட்டு வந்திருவம்ப்பா.” என்றாள் சரசு. 

“மண்டக்கி வழியில்லாமப் பேசாத பாத்துக்கோ…காலைல டாக்டர்ட்ட காட்டுவோம்…செரி ஆய்ரும்…”

இரவு முழுதும் யாரும் உறங்கவில்லை. 

அடுத்த நாள் டாக்டரிடம் சென்று காட்டும்போதும் சரவணன் பிரம்மை பிடித்தவன் போலத்தான் இருந்தான். அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை. யார் முகத்தையும் பார்க்கவுமில்லை. டாக்டர் பரிசோதித்துவிட்டு, “காச்சலும் இல்லய..ராவு டெம்பரேச்சர் இருந்து, என்னா?” என்றார். 

நான் தலையாட்ட, அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு, “ஒண்ணும் பயப்படாதப்போ, இதெல்லாம் உள்ளதுதான்..செரியாயிரும்…நல்லா தூங்கட்டும்…காச்சலடிச்சா மாத்திரம் டேப்ளட் குடுங்கோ போதும்…” என்று சொல்லி அனுப்பினார்.  

அடுத்த ஆறு நாட்களுக்கு சரவணனுக்கு உணவு இறங்கவில்லை. தூக்கமில்லை. பெரும்பாலும் கதவிடுக்கில் ஒளிந்து நின்றான். இல்லையென்றால் தரையிலோ கட்டிலிலோ வளைந்து கிடந்தான். அவனால் நிமிர்ந்து படுக்கக் கூட முடியவில்லை. முதலில் ஒரு சில வார்த்தைகள் புலம்பியவன் அடுத்தடுத்த நாட்களில் என்னவெல்லாமோ புலம்பினான். ஒருவித தமிழும் மலையாளமும் கலந்த மொழி. உடல் வெப்பநிலையும் கூடிக்குறைந்து கொண்டிருந்தது. பொதுத்தேர்வு வேறு நெருங்கிக்கொண்டிருந்தது. பள்ளியில் இருந்து இரண்டு மூன்று நண்பர்கள் வந்து அவனிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.

தம்பியிடம் பேசியபோது, “எண்ணே, நோய்க்கும் பாக்கணும், பேய்க்கும் பாக்கணும் பாத்துக்கோ..நீ பேசாம சுசீந்திரம் அக்கரைல இருக்க சாமியார்ட்ட கூட்டிட்டுப் போ…அவரு மந்திரிச்சி விட்டா செரியாயிரும்..நம்மூர்ல நெறயவேரு அங்கத்தான போறா….” என்றான்.

“என்னடே, நீயும் ஒம் மைனி மாதி பேசுக?”

“இல்லண்ணே, நீ ஒரு தடவ போய்ப்பாரு..மைனியும் சமானப்படுவால்லா?”

அக்கரைச் சாமியார் சரவணனைத் தன் முன் உட்கார வைத்து கண்ணை மூடி இருந்தார். சற்று நேரம் கழித்துக் கண் திறந்தவர் அவனது தலையில் கைவைத்து அழுத்தி மந்திரங்களைச் சொன்னார். சரவணன் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம்தான்.

“ஒரு தடியங்கா, ரெண்டு பச்ச முட்ட, ரெண்டு எலுமிச்சம்பழம், ஒரு கறுப்புத்துணில கெட்டிக் கொண்டு போயி ஒங்க சுடுகாட்டுல எரிக்கணும், என்னா? ஒங்க சுடுகாடு ஆத்தங்கரைக்கு மேக்க தான இருக்கணும்?” என்று கேட்டார் சாமியார்.

சரசு கண்களை விரித்து, “ஆமா சாமி…பிள்ளக்கி என்னாச்சி சாமி?” என்றாள்.

“இது ஏதோ வல்லியதாக்கும் மக்களே! நீங்க கவலப்படாண்டாம்…நா சொன்னமாதி செஞ்சிட்டு, வீட்டுல வந்து பயல மஞ்சத்தண்ணில குளிப்பாட்டணும்…கெதி ஆயிருவான்..என்ன?”

சாமியார் சொன்ன மாதிரியே செய்தோம். அடுத்தநாள் காலை எழுந்தவன் அவனாகவே குளித்து சாமி கும்பிட்டுப் புத்தகங்களை எடுத்து உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான். அவனுக்கு நடந்த எதுவுமே தெரியவில்லையா, இல்லை தெரிந்தும் இப்படி இருக்கிறானா, இதெல்லாம் வெறும் மனக்குழப்பங்கள் தானா? எல்லாம் சரியாகி விட்டதா, இல்லையா? என்று தெளிவில்லாமல் நாங்கள் இருக்க, “எம்மா..டைம் ஆச்சி…ஸ்கூலுக்குப் போகாண்டாமா? என்னத்தப் பாத்துட்டு நிக்க? காலைல என்னது?” என்று கேட்டான். 

இதே கைகளால் என் உடன்பிறந்த மூன்று தங்கைகளையும் இரண்டு தம்பிகளையும் புதைத்திருக்கிறேன். புதைப்பதென்றால் சடங்கு, ஆச்சாரப்படியெல்லாம் இல்லை. தென்னை மூட்டில் இரண்டு, மாமரத்தடியில் இரண்டு, கடைக்குட்டியை வாழைத் தோப்பில் என நானே குழி தோண்டிப் புதைத்தேன். என் உடன் பிறந்தவர்கள் மொத்தம் பதினான்கு பேர். அதில் பலரின் முகம் கூட என் நினைவில் இல்லை. எல்லாம் ஒன்று, இரண்டு அல்லது கூடிப்போனால் ஐந்து வயதிற்குள் இறந்துபோனவர்கள். புதைத்து முடித்து ஆற்றில் நன்றாக முங்கிக் குளித்து மாடன் கோவிலில் சென்று சாமிகொண்டாடிப் பெரியப்பாவிடம் திருநீறு பூசிவிட்டு வருவேன். அந்தக் கால நோய்களும் வசதிகளும் அப்படித்தான் இருந்தன.

அப்பா எங்கள் ஊரின் பஞ்சாயத்துத் தலைவர். அவர் பேச்சு தான் அங்கே நியாயம், தீர்ப்பு எல்லாம். அப்பா நடந்து செல்ல, நான் அவர் பின் செல்ல, ஊரே அவரைப் பார்த்து வணங்கி நிற்கும். ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் இருப்பேன் என்று நினைத்திருந்த எனக்கு இப்போது அந்த ஊரில் கால்வைக்கக் கூட தோன்றுவதில்லை. 

இத்தனைக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட அப்பாவும் அம்மாவும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டதையோ, சிரித்துப் பேசியதையோ, சேர்ந்து வெளியே சென்றதையோ நான் பார்த்ததேயில்லை. அப்பா வீட்டில் இருக்கும்போதெல்லாம் அம்மா என்னிடமோ தம்பியிடமோ எரிந்து விழுந்து கொண்டேயிருப்பார். தன் பிறந்த வீட்டுச் செழிப்பைப் பற்றியும் ஊரில் எங்களை விட வசதியாக இருந்தவர்களைப் பற்றியும் சொல்லிப் பாத்திரங்களைப் போட்டு உடைப்பாள். போகப்போக அப்பா பெரும்பாலும் வீட்டில் இருப்பதைத் தவிர்க்க ஆரம்பித்தார்.

அப்பாவிடம் எப்போதும் யாராவது ஏதாவது உதவி கேட்டு வந்துகொண்டே இருப்பார்கள். வருபவர்கள் வீட்டு வாசலிலேயே தான் நிற்பார்கள். அப்பா எவ்வளவு வலியுறுத்தி அழைத்தாலும் அவர்கள் எங்கள் வீட்டினுள் வருவதில்லை. அப்பா இல்லாவிட்டால் அம்மா அவர்களிடம் என்ன ஏதுவென கேட்டுக்கொண்டிருப்பாள். அச்சமயங்களில் மட்டும் அவர்கள் ஏதோ உரிமையுடன் வீட்டினுள் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். 

சில நாட்கள் அப்படி வருபவர்களிடம், அப்பாவிடம் சொல்லி உதவிகள் செய்வதாகச் சொல்லி பணம் கேட்டு வாங்கினாள் அம்மா. அப்பாவிற்குத் தெரிய வர, முதலில் இல்லை என நாடகமாடியவள் போகப்போக தைரியமாக அப்பாவை எதிர்த்துப் பேச ஆரம்பித்தாள். அப்பா பொதுவாகவே எதற்கும் அதிர்ந்துகூட பேசாதவர்தான். ஆனாலும், அம்மா கத்தும்போது அப்பா ஏன் ஒருமுறை கூட திரும்பிக் கத்தவில்லை என்பது இன்னும் எனக்குப் புரியவில்லை. அப்படி என்ன அவர்களுக்குள்? 

ஒருநாள் அப்பாவிடம் கத்திக்கொண்டே கையிலிருந்த சொம்புத்தண்ணீரை அவர் மூஞ்சியில் விட்டெறிந்துவிட்டாள் அம்மா. “ஊர்ல இல்லாத பெரிய மனுசன்…இருக்கீரே நீரும்…பொண்டாட்டி கேக்கத வாங்கித் தர வக்கில்ல..பெரிய அரிச்சந்திரன் பரம்பர..நேர்ம, மண்ணாங்கட்டின்னு…பொழைக்கத் தெரியாத்த மனுசனுக்கு வெள்ளையுஞ் சொள்ளையும் ஒரு கேடு…நீரெல்லாம் ஊர்த்தலைவரு வேற…த்தூ…” என்று கத்தினாள்.

எனக்கு வந்த கோபத்தில், “எம்மா? ஒழுங்கா மரியாதயாப் பேசு பாத்துக்கோ…” என்றேன். 

“பல்ல அடிச்சிக் கலத்திருவம் தாயளி..வெசத்த வச்சிக் கொன்னுப் போடுவேன்..செறுக்கிவிள்ள…மரியாதயாப் பேசணுமாம..”    

“எம்மா..அப்பா ஒண்ணுஞ் சொல்ல மாட்டுக்கான்னு நீ தலக்கி மேல ஏறாத பாத்துக்கோ..பொறவு நல்லாருக்காது..”

“என்னல செய்வ? அடிச்சிருவியோ? ஒரு ஆம்பளக்கிப் பொறந்தப் பயன்னா அடில பாப்பம்..” என்று பாய்ந்து வந்து என் முடியைப் பிடித்து ஆட்டி என்னைச் சுவற்றில் தள்ளிவிட்டாள். 

அப்பா வந்து குறுக்கே நிற்க, “தள்ளிப் போயிரும்..ஒம்ம வண்டவாளத்த வெளியச் சொன்னன்னா நாறிரும்…அவனுக்க வாயி மயிர நாம் பாக்கட்டும்…தொட்டிப்பய..அம்மயல்லா எதுத்துப் பேசுகான்…” என்று கத்திக் கொண்டு அடுப்பங்கரைக்குள் சென்று ஒரு சட்டாப்பையை அடுப்பில் வைத்து எடுத்து வந்தாள்.

“நீ போ மக்கா…லேய், சொல்லுகம்லா போ மக்கா..” என்று அப்பா என்னை வெளியே அனுப்பப் பார்க்க, நான் திமிராக அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். தம்பியும் தங்கைகளும் அழுதுகொண்டே சுவற்றோடு சுவராக ஒட்டி நின்றனர்.

சூடான சட்டாப்பையோடு வந்தவள் குறுக்கே வந்த அப்பாவைச் சட்டையைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டாள். என் கழுத்தைப் பிடித்து வளைத்திழுத்து என் முதுகிலும் தொடையிலும் சூடு போட்டாள். நான் பல்லைக் கடித்து நின்றேன்.

அடுத்த நாள் அதிகாலை அப்பா எழுந்திருக்கவில்லை. மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என ஊரெல்லாம் பேசிக்கொண்டார்கள். என் அம்மா ஒரு துளி கூட அழாமல் இருந்ததைப் பார்த்து எனக்குள் வந்த மூர்க்கத்தில் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்தேன். 

“சாமிட்டி எங்கப்பா…அவர நீதான் வெசம் வெச்சிக் கொன்னுருப்ப…ஒனக்குச் சொகம் மயித்துக்கு அந்த நல்ல மனுசனக் கொன்னு போட்டியட்டி..எம் முன்னால நிக்காத பாத்துக்கோ, அடிச்சு மண்டைய ஒடச்சுப் போடுவேன்…” என்று நான் கத்த பெரியப்பா என்னைப் பிடித்துச் சமாதானப்படுத்தினார். 

அம்மா நான் பேசியதைக் கண்டுகொள்ளாத மாதிரி நின்றாள். அவள் முகத்தில் ஒரு புன்னகை தெரிந்தமாதிரி இருந்தது. வந்த கோவத்தில் ஓடிச்சென்று அவள் தலைமுடியைப் பிடித்திழுத்து மாறி மாறி அறைந்தேன். அவளது மூக்குடைந்து இரத்தம் ஒழுக, தங்கைகள் அழுதுகொண்டே வந்து என் கையைப் பிடித்துத் தடுக்க, பெரியப்பா என்னை வெளியே இழுத்துச் சென்றார். அம்மாவுடன் நான் பேசுவது முழுவதுமாக நின்றுபோனது.

அப்பா போனபிறகான நாட்களில் அம்மாவின் நடவடிக்கைகளும், என் காதில் விழுந்த விசயங்களும் அவள் மீதான எனது கோவத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றன. அப்பாவின் பாரம்பரிய சிறுதுண்டு நிலங்களை யார் யாருக்கோ எழுதி வைத்தாள். வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் காணாமல் போக ஆரம்பித்தன. பதிலாக, அவளது கழுத்திலும் காதிலும் நகைகள் ஜொலித்தன. விதவிதமாக புதுப்புடவைகளை வாங்கிக் குவித்தாள். தங்கைகளையும் அளவுகடந்த செல்லம் கொடுத்துச் சீராட்டினாள். அவர்கள் கேட்ட எல்லாம் கிடைத்தன. வாரந்தோறும் டவுனுக்கு அழைத்துச்சென்று ஹோட்டலில் சாப்பிடுவதும், திரைப்படம் பார்ப்பதுமாக ஆடம்பரத்திற்குள் அவர்களை இழுத்துச் சென்றாள்.

எனக்கும் தம்பிக்கும் கெட்டவார்த்தைகள் மட்டுமே கிடைத்தன. எல்லாவற்றையும் விற்று, இறுதியில் அப்பாவின் கணக்கெழுதும் மேசையைக் கூட அவள் விட்டுவைக்கவில்லை. குடியிருந்த வீடு மட்டுமே மிச்சம்.

பெரிய தங்கை வயதிற்கு வந்துவிட்டிருந்தாள். அவளுக்குச் சடங்கு செய்வதற்காக கள்ளச்சாக்கு கடத்தியும், பலசரக்குச் சந்தையில் லோடு ஏற்றியும் கொஞ்சம் காசு சேர்த்து வைத்தேன். ஒரு சோடி தங்க வளையல் மட்டுமே தேறியது. தங்கையின் சடங்கின்போது பெரியப்பா குடும்பம் ஒதுங்கியிருக்க, எவன் எவனெல்லாமோ வந்து முன்னால் நின்று நாட்டாமை பேசினான். அம்மா அவர்களை விழுந்து விழுந்து கவனித்தாள்.

அன்றிரவு, புறவாசலில் சிறுநீர் கழிக்கச் சென்றபோது நான் பார்த்த விசயம் எந்தவொரு மகனும் பார்க்கக்கூடாதது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு, தங்கைக்கு நான் போட்ட தங்க வளையல்களையும் கொடுத்து அனுப்பினாள் அம்மா. அவளை அங்கேயே கொன்றுபோடலாம் எனத் தோன்றியது. ஒரு நொடி தம்பி, தங்கைகள் முகங்கள் என் முன் வந்ததால் பிழைத்தாள்.

நான் நிற்பதைப் பார்த்தும் அலட்டிக்கொள்ளாமல் காறித்துப்பியவாறு திரும்பி வந்தாள் அம்மா.

“இங்கப்பாரு…நீ செய்யது செரியில்ல பாத்துக்கோ..வீட்ல கொமருக இருக்கு…அப்பாக்கப் பேரக் கெடுத்துறாத…” என்று கத்தினேன்.

நாக்கைத் துறுத்திக்கொண்டு, என் கழுத்தைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்று வீட்டை விட்டு வெளியே தள்ளி, “செறுக்கிவுள்ள…ஓடிரு நாய…என்னல்லா கேள்வி கேக்கான்? சோத்துக்கு இந்தத் தெசப்பக்கம் வந்துறாத பாத்துக்க..போய்ப் பிச்சையெடுல, பிச்சையெடு…அப்பாக்கப் பேரக் கெடுக்கப்படாதாம்லா..ஒங்கப்பனே ஒரு வெறும்பய, வாய்ச்சவடால் அடிச்சிட்டுத் திரிஞ்சான்…நீ என்னல பெரிய மயிரா?..ஓடிரு…” என்று கதவைச் சாத்தினாள்.

அன்று கிளம்பியவன்தான். இன்று வரை அந்த ஊர் எனக்கு அந்நியம்தான்.

சரவணன் பதினொன்றாம் வகுப்பில் இருந்த சமயம். அதே மாதிரி பொங்கல் முடிந்து ஒரு வாரம் கழிந்து ஒரு நாள். வீட்டில் நுழைந்தவன் நேராகப் படுக்கையறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான். வில்லாக வளைந்துகிடந்தான். மலையாளத்தில் புலம்பியும், கதவிடுக்கில் ஒளிந்துகொண்டும், சாப்பிடாமல், தூங்காமல் ஒரு தனி உலகில் இருந்தான்.

“எப்பா, எனக்கு இது செரியாப் படல பாத்துக்கோங்க..நீங்க என்ன வேண்ணா நெனச்சிக்கோங்க..இது ஒங்கம்மைக்க வேல தான்…அவ என்ன வேண்ணா செய்யக்கூடிய ஆளுதான்..பிள்ளக்கித் தகடு எதாம் வச்சிருப்பா…சொன்னாக் கேளுங்கப்பா…” என்றாள் சரசு.

நான் குழப்பத்தில் நின்றேன். முந்தைய வருட சண்டையோடு அம்மாவிற்குக் காசு அனுப்புவதும் தம்பி வீட்டிற்குச் செல்வதும் நின்று போனது. அவள் முகத்திலேயே முழிக்க வேண்டாம் என்றுதான். தம்பி அவ்வப்போது வந்து போய் இருந்தான்.

“எப்பா, பைசா போனா போட்டும்…ஒங்கம்மக்கி என்ன வேணுமோ அனுப்பிருங்கோ..அவ சாபம் நமக்கு வேண்டாம்ப்பா…பிள்ளக்கி ரெண்டாவது தடவ அதே மாதி வந்துட்ட..நா என்ன செய்வேன்?” என்று அழுதாள்.

இந்த முறையும் எந்த மருத்துவமும் கைகொடுக்கவில்லை. அதே சுசீந்திரம் அக்கரைச் சாமியாரிடம் சென்று மந்திரிக்க அவரும் அதே பரிகாரத்தைச் சொன்னார். இந்த முறை கூடுதலாக ஒரு சேவலையும் அறுத்துப் போடச் சொன்னார். 

சென்ற முறை நடந்ததைப் போல, அடுத்த நாளே சரவணன் சரியாகிவிட்டான்.

….

பதினான்கு பேரில் இப்போது இருப்பது ஆறு பேர் மட்டுமே. தூரத்தில் இருந்தாலும் தம்பி, தங்கைகளை வளர்த்து திருமணம் செய்து வைத்து இன்று எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். சுற்றிசுற்றி ஒவ்வொருவர் கூடவும் தங்கியிருந்த அம்மாவால் அவர்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் வர, கடைசியில் தம்பி முன்வந்து அவளைத் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்வதாக முடிவு செய்தான். அதற்காக அவன் இழந்தது ஏராளம். 

எனக்குதான் வெறுப்பெல்லாம். தங்கைகளுக்கும் தம்பிக்கும் அம்மா என்றால் இஷ்டந்தான். ஒருவேளை வெறுப்புகூட இருக்கலாம். நானறிந்த அம்மாவை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை இல்லையா. 

அம்மாவைப் பற்றிய என் புரிதல்கள் எதையுமே நான் தம்பியிடமோ தங்கைகளிடமோ சொல்லியதில்லை. அவர்கள் பாசமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

….

இடையிடையே அம்மாவிடமிருந்து கடிதங்கள் வரும். பெரும்பாலும் வசைகள், சாபங்கள். இறுதியில் காசிற்கான யாசகம். எனக்குச் தோன்றுவதுண்டு. பணத்தை வைத்து இந்த வயதில் இவள் என்னதான் செய்யப் போகிறாள்? கடிதங்களைப் படித்துவிட்டு நான் தூக்கிப்போட, சரவணன் எடுத்து அவற்றை வாசித்துக்கொண்டிருப்பான். அவனுக்கு ஏனோ ஆச்சியின்மீது ஒரு பாசம். சில முறை பதில் கடிதங்கள் கூட போட்டிருப்பான் போல.

பன்னிரண்டாம் வகுப்பில் பொங்கல் முடிந்த நாளிலிருந்தே நாங்கள் அந்த மாற்றத்தை எதிர்பார்க்க ஆரம்பித்தோம். சரவணனுக்கும்கூட தனக்கு என்ன நிகழ்கிறது என்பது குறித்து ஆர்வம் இருந்திருக்கலாம். அதே மாதிரித்தான் எல்லாம் நடந்தது. சுசீந்திரம் அக்கரைச் சாமியார் வேறு ஊரைக் காலிசெய்துவிட்டுப் போய் விட்டார். 

இரண்டாம் நாளிலேயே சரசு என்னிடம் வந்து, “எப்பா…போதும்…இதுக்கும் மேல நம்ம ஒண்ணுஞ் செய்யாட்டா பய வாழ்க்கல்லா போயிரும்..நீங்க போயி அத்தயக் கூட்டிட்டு வாங்க…நம்ம வெச்சிப் பாப்பம்…போய்ட்டுப் போட்டும்ப்பா…வயசான காலத்துல இவ்ளோ வஞ்சத்த வெச்சிட்டுக் கெடைல விழுந்துராம…பொறவு நம்ம வம்சம் தளைக்காதுப்பா…” என்று சொன்னாள்.

நிறைய யோசித்துப் பார்த்தேன். முழு வாழ்க்கையும் ஒருமுறை கண்முன் வந்து போனது. தம்பியிடம் ஃபோனில் அழைத்து விசயத்தை எடுத்துச் சொன்னேன். அடுத்த நாள் காலை தம்பி அம்மாவை அழைத்து வந்தான். என் முகத்தைப் பார்க்காமல் சரவணனின் அறைக்குச் சென்றவள், “மக்களே….என்ன மக்களே ஆச்சி எம் பிள்ளக்கி? பாசக்கார பேரம்லா டே நீ…என்ன மக்களே ஆச்சி…” என்று அழுதாள் அம்மா. சரவணனிடம் எந்த வித்தியாசமும் இல்லை.

அம்மா வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அவளது வழக்கமான அதிகாரத் தொனி லேசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. சரசுவின் முகம் அடிக்கடி கருத்துப்போக, சலித்துக்கொண்டே எல்லாவற்றையும் செய்தாள். சரவணன் அப்படியேதான் இருந்தான். இந்த முறை வடசேரி பெரியதெரு லெப்பையின் வீட்டிற்குக் கூட்டிப் போகுமாறு என் நெருங்கிய நண்பன் சொல்லியிருந்தான். அதற்கான ஏற்பாடுகளையும் அவனே செய்தான்.

லெப்பை வீட்டில் பயங்கரக் கூட்டம். ஒரு கோழிமுட்டை, ஒரு ஊதுபத்திப் பாக்கெட், ஒரு கறுப்புக் கயிறு சகிதம் எல்லாரும் காத்திருந்தனர். நாங்கள் சென்றதுமே உள்ளே வரச் சொன்னார்கள்.

சரவணனை மட்டும் உட்கார வைத்து எங்களைப் பக்கத்து அறையில் காத்திருக்கச் சொன்னார் லெப்பை. உள்ளே அவர் சத்தமாக ஓதுவதும், சரவணன் மலையாளத்தில் பேசுவதும் கேட்டது. கடந்த இரண்டு முறையும் சாமியாரிடம் எதுவும் வாயைத் திறக்காதவன் இங்கே என்னெவெல்லாமோ கத்திக்கொண்டிருந்தான். 

அரை மணி நேரம் கழித்து எங்களை உள்ளே வரச்சொன்னார் லெப்பை. 

“ஒங்க வீட்டச் சுத்தி கொத்த வேலக்கிப் போற பயலுவோ நெறைய உண்டுமோ?” என்று கேட்டார்.  

நான் தலையாட்ட, “கேரளாவுக்குத் தங்கி வேலக்கிம் போவானுவோ இல்லயா?” என்றார்.

“ஆமா அண்ணாச்சி“ என்றேன்.

“அதாக்கும் சங்கதி…மூணு வருசம் முன்னாடி ஒங்கப் பயலுக்கக் கூட்டாளி ஒருத்தன் சூசைட் பண்ணானோ?” என்று சரசுவின் முகத்தைப் பார்த்தார் லெப்பை.

அவள் அதிர்ச்சி அடைந்தவளாக, “ஆமா..ஆமா..நம்ம சம்முவம்…நம்ம வீட்லயே தான கெடப்பான்…அருமாந்த பிள்ளல்லா…பால்டாயில் அடிச்சிட்டான்…” என்றாள்.

லெப்பை தீர்க்கமாகத் தலையை ஆட்டி, “அவனாக்கும் நம்ம விருந்தாளி…ஒங்க மவன விட மனசில்லாம வந்து வந்து வெளயாடிட்டுப் போறான்..அவனுக்க மலயாளத்தக் கேட்டுருப்பியல்லா?” என்றார். 

நானும் சரசுவும் தலையாட்டி ஆச்சரியத்தில் உறைந்து நின்றோம்.

“செரி…இதோட போச்சி…இனி ஒங்க மவனுக்கு ஏறுதிச தான்…டாப்பா வருவாம் போதுமா?” என்று சிரித்தார் லெப்பை. எல்லாவற்றையும் கேட்டு சரவணனும் சிரித்துக்கொண்டிருந்தான்.

“அண்ணாச்சி…அடுத்த வருசம்…” என்று இழுத்தாள் சரசு. 

“நாஞ் சொல்லியாச்சுல்லா…போங்கோ…இன்ஷா அல்லா..எந்திரி டே…பரிட்சைக்குப் படிக்காண்டாமா? ஓடு ஓடு…” என்று சரவணன் தோளில் தட்டினார். அவனும் எதுவும் நடக்காதது போல இயல்பாக எழுந்து நின்றான்.

திரும்பி வரும்போது சரசு கேட்டாள், “எப்பா…அவசரப்பட்டு ஒங்கம்மய வரச் சொல்லிட்டமோ?” 

….

– சுஷில் குமார்  (07-07-2020)

One Reply to “சாபம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.