இன்பா – கவிதைகள்

பிளிறும் மௌனம்

கனத்த மௌனத்துடன்
இறப்புக்காகக் காத்திருந்தது உடல்
கருப்பையிலிருந்து குடல்வரை பரவ
இன்னும் ஓரிரு மாதமேயென
மீட்பனும் காப்பனும் கைவிட்டனர்
செத்தப் பிறகு யார் தூக்கிப் போடுவா
சீக்குப்பிடித்தக் கோழியாய்
ஒடுங்கிக் கிடக்கிறாள்
தொண்டைக்குழியில் அடைத்த சளி
மூச்சுக்காற்றுக்கு வழிவிட மறுக்க
வேர் நா குரல்வளையோடு ஒட்டிக்கொண்டது
உரிமையுள்ளவங்க பாலூத்துங்க
உயிர் அடங்கிடுமென்ற விளிக்குரல்
அவளுக்கும் கேட்கிறது
மௌனக்குரல் பிளிறுகிறது
என்ன சொல்ல நினைத்திருப்பாள்
கடைசியாக
இரண்டு சொட்டுக் கண்ணீர் மட்டுமே
தத்தளித்து விழுந்தோடுகிறது
அவள் கன்னங்களைத் தழுவியபடி
அடங்குகிறது உயிர் மௌனமாய்

அந்த ஒற்றைச் சிறகு மட்டும் போதும்

நினைவுகள் ஒட்டடையாய்த்
தள்ளாடுகின்றன
செம்பட்டை முடியில் வீசிய
செம்பருத்தி வாசம்…
உள்ளங்கையைச் சிவக்கவைத்து
வெட்கப்படும் மருதாணிப் புள்ளிகள்…
பாத்திரங்களோடுப் பேசிப் பழகித்
தேய்ந்துபோன கைகள்…
பெருவெளியெங்கும் தேடியலைந்து
கேட்டதை வாங்கித் தருவாள்…
கரண்டிகளுக்குக் கதை சொல்லியபடியே
பிடித்ததைச் சமைத்துத் தருவாள்…
இப்பொழுது
உறங்காத வீட்டுக்குள்
நிறைந்திருக்கிறாள் அம்மா
வீடும் முற்றமும்
முனங்குகின்றன…
கொல்லைப்புறக் கொய்யா இலைகள்
காய்ந்துபோய்க் காற்றில் ஊஞ்சலாடுகின்றன…

அவள் கட்டிய சேலைகள்
மடித்து கிடக்கின்றன…
அணிந்திருந்த நகைகள்
கழுத்தின்றி அனாதையாய்க் கிடக்கின்றன…
மௌனமாய்த் தூங்குகின்றது
கட்டில் மட்டும் தனிமையில்…
வாசலில் கோலம் போட வருவாளென
தினமும் எறும்புகள்
வந்து வந்து ஏமாந்துபோகின்றன…
அவள் கூட்டிப் பெருக்கிய தரைகளில்
கவிதை வரிகள் நெளிந்து கிடக்கின்றன…
என்னைக் கண்டவுடன் புகைப்படத்திலிருந்து
வளையாத கண்ணாடியை வளைத்துக்கொண்டு
இரு கைகளை நீட்டி
அணைத்துகொள்கிறாள்…
மூச்சுக்காற்று இளகுகிறது
எங்கள் இருவருக்குமிடையில்…
பூட்டிய வீட்டிலிருந்து
ஒரு புறா மட்டும் பறந்து செல்கின்றது…
அதன் ஒற்றைச் சிறகு மட்டும் தனியே
பிரிந்து மேல்நோக்கி
பறந்து கொண்டே இருக்கின்றது
என் முத்தத்தைச் சுமந்தபடி!

இழைந்தோடும் ஈரமுள்

கூர்ந்து பார்க்கிறேன்.
ஒளிரும் வைரங்கள்
சிதறும் விளக்குகள்
செதுக்கிய தரைகள்
மெல்லிய ஓசையுடன்
நினைவுகள் அசைபோடுகின்றன
ஆற்று நீரில் குளித்துவிட்டுக்
கரையேறிய நீர்நாய்
அருகிலிருந்த மஞ்சள் ஆரஞ்சு செடியில்
மோதிவிட்டுச் செல்கிறது
தூங்கிவிட்ட குழந்தையின்
கைநழுவி விழும் பொம்மையைப் போல்
குட்டி ஆரஞ்சு காம்பிலிருந்து நழுவி விழுகிறது
மலாக்கா படகு ஒன்று வருகிறது
வந்தவர்களை ஏற்றிச் செல்கிறது
உயிர்த்தந்திகள் அதிர்ந்தன
பளபளப்பான கால்கள் கறுத்துப் போயின
எல்லை விறகுகள் கருகியதால்
உள்ளத்தீ கனன்று எரிந்தது
இருபத்தி நான்கு மணி நேரமும்
பகலாய்த் தெரிந்தது
உட்கார்ந்து சாப்பிட இடமில்லை
நேரமின்றி பரபரப்புடன்
ஓடிக்கொண்டே நகர்ந்தன பாதங்கள்
வைரங்கள் படிமமானது
நட்சத்திரங்கள் கண்சிமிட்ட
குழந்தைகள் கொடியாட்டி சிரிக்கின்றன
கால்கள் பளபளப்பானது
இன்று
ஓய்ந்துபோன நீர்க்குமிழிகள்
நதியைத் தேடி ஓடுகின்றன
காலப்பறவை கையில்
வெற்றுக் காகிதத்தைக் கொடுத்துவிட்டுப்
பறந்துச் செல்கின்றது.
வரலாற்றின் ஏடுகளை ஈரமாக்கியபடி
அதற்குள் இழைந்தோடும்
ஈரமுள் எழுத முனைகிறது
புழுதிப் புதையல் உள்ளே இழுக்குமுன்
எழுதிவிடவேண்டும்
என் வாழ்க்கைக் கதையை!

கோப்பையுடன் ஒரு குரங்கு

அமைதியாய் அமர்ந்திருந்தேன்
குட்டிப்பூனைகள் பின்னால்
சுற்றிச்சுற்றி வந்தன
பிரியங்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டன
குறுக்கே ஓடியது பெருச்சாளி
குரங்கு ஒரு கோப்பையுடன்
வந்தமர்ந்து கொண்டது மனதுக்குள்
நெஞ்சாங்குழியில் அகழ்வாராய்ச்சி
செய்து முடித்தபின் வீதிதேவதை
அன்பைப் பருகச் சொன்னபோது
தவித்துப்போனதென் ப்ரியவெளி
சன்னல் கதவுகள் அடித்து அடித்து திறக்கின்றன
திரைச்சீலைகள் வளைந்து நெளிகின்றன
ஒற்றைவரிப் புன்னகையோடு
வெள்ளைப் புறாக்கள் முடங்கி கிடக்கின்றன
கவிதை எழுதுவதோடு
காபி குடிப்பதையும் நீதான் துவக்கிவைத்தாய்
சலங்கை கட்டி ஆடமுடியாமல்
கொந்தளிப்புகளுக்கிடையே
கானகத்து முயல் தேவதை
தூங்குகிறது தனிமையில்
பெருமரங்களின் ரீங்காரம்
காற்றைக் கழுவிச்செல்கிறது.


One Reply to “இன்பா – கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.