- 20xx- கதைகள்: முன்னுரை
- இருவேறு உலகங்கள்
- 2084: 1984+100
- 2015: சட்டமும் நியாயமும்
- 2010- மீண்டும் மால்தஸ்
- 2019- ஒரேயொரு டாலர்
- 2016 – எண்கள்
- பிரகாசமான எதிர்காலம்
- நிஜமான வேலை
- அவர் வழியே ஒரு தினுசு
- என்ன பொருத்தம்!
- மிகப்பெரிய அதிசயம்
- அன்புள்ள அன்னைக்கு
- வேலைக்கு ஆள் தேவை
- கோழிக் குஞ்சுகள்
- விலைக்குமேல் விலை
- எதிர்வளர்ச்சி
2020-20-29

வீட்டில் இருந்து கார் நிறுத்துமிடத்தை இணைத்த கதவு வழியாக முதலில் கேரனும் அவள் அம்மாவும் வந்தார்கள். சலசலப்பில் எலியட் தூக்கம் கலைந்தால், அம்மாவுடன் நானும் வருவேன் என்று அழுது அடம்பிடிப்பான் என்பதால் கேரனின் அப்பா (டேவிட்) வீட்டுக்குள்ளே அவனுக்குக் காவலாக இருந்தான். கேரனின் அம்மா கராஜின் கதவைத் திறந்தாள். இருள் இன்னும் அகலவில்லை. இதமான காற்று பின்குளிர் காலத்தின் முடிவை எதிர்நோக்கியது.
“பிரசவப் பைகள்?”
பைகளைத் தோள்களில் மாட்டிக்கொண்டு வெளியே வந்த மில்டன், “நேற்றே இரண்டும் தயார்,” என்றான்.
ஒரு பையில் கேரனின் சாமான்கள், இன்னொன்றில் புதுக் குழந்தைக்குத் தேவையான போர்வை, தலையணை, ஆடை…
“குழந்தைக்கான இருக்கை?”
“எலியட்டுக்கு வாங்கியதைத் தேடியெடுத்து ஊர்தியில் பொருத்தியாகிவிட்டது.”
“கிளம்ப வேண்டியதுதான். குட் லக்!”
“தாங்க்ஸ், மாம்!”
மில்டன் பைகளை உயரமான ஊர்தியின் பின்பக்கம் வைத்தான். வலப்பக்கக் கதவைத் திறந்து கேரனைத் தாங்கிப்பிடித்து உட்காரச்செய்து, இருக்கையின் பெல்ட்டை முழுக்க இழுத்து வயிற்றை அழுத்தாமல் பொறுத்தினான். கதவைச் சாத்திவிட்டு இடப்பக்கம் வந்தான்.
இரண்டாவது கர்ப்பமும் பிரசவமும் முதலாவதைவிடச் சுலபமாக இருக்கும் என்று உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுபவர்கள் கேரனிடம் பல தடவை சொல்லியிருந்தார்கள். முதல் கட்டத்துக்கு அவர்கள் அனுபவ அறிவு சரி. காலை மயக்கம் இல்லை, பீட்ஸாவுக்கும், சப்பாத்தி குருமாவுக்கும் வயிறு எதிர்ப்புக் காட்டவில்லை. அதனால் அதிகரித்த முப்பது பவுன்ட். அடுத்த ஆறு மாதங்களில் அதைக் குறைப்பது சாதனையாக இருக்கப்போகிறது. முதல் பிரசவத்தின் வலி, மருத்துவர் குறித்த நாளுக்கு மூன்று வாரம் முன்பே வந்தது. பத்து மணி நேரப் பிரயத்தனத்தின் முடிவில் இடுக்கி போட்டு இழுக்க நேர்ந்ததே தவிர, எலியட் இயற்கை வழியில் வெளியே வந்தான். தசைகளும் எலும்புகளும் ஏற்கெனவே ஒருமுறை விரிந்து சுருங்கியிருப்பதால் இரண்டாவது குழந்தை அதிகம் சிரமம் தராமல் இரண்டு மணியில் இறங்கிவிடும் என்று டாக்டர் மீரா கொடுத்த நம்பிக்கை பொய்யாகிவிட்டது. இந்தப் பெண்ணுக்கு நாற்பத்தியிரண்டு வாரங்கள் ஆகியும் வெளி உலகைப் பார்க்கும் ஆசையில்லை. மீரா பொறுமை இழந்து அவள் ஜனனத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டாள். சனிக்கிழமை, பிப்ரவரி 29. அந்தத் தேதியில் பிறக்கும் அதிருஷ்டம் ஆயிரத்தி ஐநூறு குழந்தைகளில் ஒன்றுக்குத்தான்.
இது ஒரு வித்தியாசமான கடிதம். முன்காலம் போல ஓலையிலோ, துணியிலோ இல்லை காகிதத்திலோ எழுதப்படவில்லை. கடந்த கால் நூற்றாண்டின் மின்னஞ்சலும் இல்லை. ஒருவர் எண்ணங்களை இன்னொருவருக்குத் தெரிவிக்க வரி வடிவம் அவசியம் இல்லைதான். அதிலும் நான் உனக்குள் ஒண்டிக்கொண்டு இருக்கும்போது உயிர்நிலைத் திரவங்களில் எழும் அதிர்வுகளேகூட எண்ணங்களை அனுப்பப் போதும்.
எனக்கு நீ பெயர் சூட்டிவிட்டாய், அறிமுகம்கூட தேவையில்லை. அப்பா மில்டன், அண்ணன் எலியட். அவர்கள் வழியில் எனக்கும் புலவர் பெயரைத் தேடினாய். பெண் கவிஞர்கள் அதிகம் பேர் இல்லை என்பதால் தேடல் சுலபமாக முடிந்துவிட்டது. (எமிலி) டிக்கின்ஸன், (எமிலி) ப்ரான்ட்டே – இருவரையும் நினைவுக்குக் கொண்டுவரும் எமிலியை அப்பா தேர்ந்தெடுத்தார். ஆனால் எமிலி என்கிற பெயரில் எத்தனையோ பேர் என்பதால் உனக்குப் பிடித்தமாக இல்லை. மாயா (ஆஞ்சலு) சில்வியா (ப்ளாத்) டோரதி (பார்க்கர்) என்று அலசி, கடைசியில் லுயிஸா மேரி (அல்காட்). உன் மாமியாருக்கு அவள் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்கிற குறை. அடிமைகள் விடுதலைக்கும் பெண்கள் சுதந்திரத்திற்கும் தன்னை ஈடுபடுத்திய அல்காட்டின் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஐம்பத்தியாறு வயது வாழ்ந்திருக்கிறாள். அந்தக் காலத்துக்கு அது குறைவு இல்லை. என் காலத்தில்…
காருக்குத்தான் கிளம்ப மனமில்லை.
கிர் கிர் கிர்.
அரை நிமிட இடைவெளிக்குப்பின் மில்டன் மறுபடி சாவியைத் திருப்பினான்.
அதே உயிரற்ற சத்தம்.
“நான் நேற்று வேலைக்குப் போய் வந்தபோது ஒழுங்காகக் கிளம்பியது. இன்றைக்குப் பார்த்து…” என்று கேரன் பக்கம் திரும்பிச் சொன்னான்.
“நம்மிடம்தான் லிதியம் பாட்டரி இருக்கிறதே. அதை வைத்து உடனே கிளப்பிவிடலாம்.”
‘சின்னத் தடங்கல் மனதின் சமன நிலையைப் பாதிக்க விடக்கூடாது’ என அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
கேரனின் தாய் ஜன்னல் அருகில் வந்து,
“பாட்டரியின் சாரம் இறங்கிவிட்ட மாதிரி தெரிகிறது.”
“நீ ஒரு கைகொடுத்தால்…”
“இப்போது கிளம்பி நடு வழியில் நின்று போனால்… என் காரில் புது பாட்டரி. நான் உங்களை அழைத்துப்போய் விட்டுவிட்டு வருகிறேன். குழந்தை பிறந்து நீங்கள் சுதாரித்துக்கொண்டதும் நாங்கள் வந்து பார்க்கிறோம்.”
இத்தனை தீர்க்கமாக எனக்கு யோசனை செய்யத் தெரியுமா என்று நீ ஆச்சரியப்படலாம். என் ஆரம்பம் ஒரு கணத்தில் நிகழ்ந்தது. அதை விவரிக்க எத்தனை கலை அறிவியல் நூல்கள்! அதுபோல இந்த ஒரு கணத்தில், எனக்குத் தோன்றிய சிந்தனைகளை ஒரேயடியாகக் கொட்டியிருக்கிறேன். அவற்றைப் கேட்டுப் புரிந்துகொள்ள உனக்கு விவேகம் இருக்கிறது.
உன்னிடம் இருந்து என்னை மருத்துவர் பிரித்து உனக்குக் காட்டப்போவதை நீ மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறாய் என்று தெரியும். குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்த என்னைப் படம்பிடித்து, அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புவது அப்பாவின் முதல் கடமை. அதற்கு இக்காலத்தில் புகைப்படக் கலைஞர் அவசியம் இல்லை. தன்னுடைய சக்திவாய்ந்த ஐ-ஃபோனில் அவர் அதைச் செய்துவிடலாம். இதுவரை உன் முழுக் கவனமும் எலியட்மேல். தனக்குத்தான் நீ சொந்தம் என நினைத்திருப்பான். இனிமேல் நீ எனக்குப் பால் கொடுத்து சீராட்டுவதைப் பார்த்து தனக்கு ஒரு போட்டி என முதலில் என்னை அவனுக்குப் பிடிக்காது. ஆனால், போகப்போக தங்கை என்கிற பாசம் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நம் பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுப்பது இல்லை. இருந்தாலும் உன்னைவிடச் சிறந்த தாயோ, அப்பாவைவிட உயரிய தந்தையோ எனக்குக் கிடைக்க மாட்டார்கள். எலியட் சில வாரங்கள் முந்திப் பிறந்ததால் நீ வேலையில் இருந்து விலகி, அவன் ஐந்து வயது நிரம்பும்வரை வீட்டிலேயே தங்கி, அவனுக்கு நோய் வராமல் பார்த்துக்கொண்டு, அவனை வளர்த்து இருக்கிறாய். அவன் தன்னம்பிக்கையுடன் கின்டர்கார்டன் போகத் தொடங்கியதும் நீ வேலைக்குத் திரும்புவதாக திட்டம். அதை இன்னும் சில ஆண்டுகள் தள்ளிப்போட நான் வந்துவிட்டேன். மன்னித்துவிடு! அப்பாவுக்கு கதிரியக்க மருத்துவர் என கனமான பொறுப்புகள். ஆனாலும், உன்னுடனும் எலியட்டுடனும் நேரம் செலவழிக்கிறார். தன் குடும்பத்துடன் உன் குடும்பத்துடன் தொடர்புவைத்து இருக்கிறார்.
நீங்கள் இருவரும் கலைத்துப்போட்டு ஆடிய க்ரோமோஸோம் சீட்டுகளில் எனக்குக் கொடுக்கப்பட்ட நாற்பத்தியாறும் இதுவரை யாரும் காணாத புதிய வரிசை. சீட்டுகளின் வரிசையில் எதிர்பாராத அதிசயம் நிகழ்வது உண்டு. சிந்தனை செய்யும் சிசு அப்படியொரு அற்புதம்.
மருந்தகம் போக அரை மணி. இருள் விலகி வெளிச்சம் பரவியது.
“செல்ஸி பிறந்த சமயம் என் தீஸிஸை எழுத வீட்டிலே தங்கியிருந்தேன். அப்போது கேரன் கின்டர்கார்டன் வகுப்பில். பிற்பகல் இரண்டு மணிக்கு வலியெடுத்ததும் டேவிடை அழைத்தேன். வேலையில் இருந்து உடனே வந்து ட்யுக் மருந்தகத்தின் பிரசவப் பகுதிக்கு அழைத்துப் போனான். மாலை ஏழு மணிக்கு மேல் செல்ஸி பிறந்தாள். கேரன் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்து, டேவிட் திரும்பிப் போகும்வரை (நண்பன்) சூரன் வீட்டில் இருந்தாள்.”
“லுயிஸா! உன் சித்தியைப்போல நீயும் சமத்தாகத் தொந்தரவு தராமல் வெளியே வந்துவிட வேண்டும், சரியா?” என்று கேரன் வயிற்றில் கைவைத்துச் சொன்னாள்.
மகளிர் மையத்துக்கு பைரன் வழி சொல்ல அதன் முன்வளைவில் கார் நின்றது.
அவர்கள் இறங்கியதும் கேரனின் தாய் வாழ்த்துச் சொல்லி ஊர்தியை நகர்த்தினாள். மில்டன் இரண்டு பைகளைத் தூக்கிக்கொண்டு கேரனை மெல்ல நடத்தி உள்ளே அழைத்துப்போனான். அந்த வளாகத்தில் மருத்துவன் என்ற தகுதியில் பலமுறை நுழைந்து இருக்கிறான். இப்போது நோயாளியின் துணைவன். வரவேற்பு மங்கை அவர்களைப் பார்த்ததுமே பணிப்பெண்ணுக்குத் தகவல் அனுப்பினாள்.
காலத்தின் மாயத் திரையை விலக்கி எனக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் என்று பார்ப்பதற்குமுன் உன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்போம். நீ உருவான சமயம், ரேகனின் இரண்டாவது மாபெரும் வெற்றி. முதல் வெற்றியின்போது திருமணம் செய்துகொண்ட தாத்தாவும் பாட்டியும் ஒரு காலத்தில் சிகரெட் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற ட்யுரம் நகரத்தின் தென்புறத்தில் புதுவீடு வாங்கிக் குடிபுகுந்தார்கள். பெட்ரோலியத்தின் விலை சரிந்து வீட்டுக் கடனின் வட்டி குறைந்து புது வாழ்வின் சின்னமாக உன்னைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.
தாத்தா பாட்டி இருவருக்கும் படிப்புக்கு ஏற்ற வேலை. குடும்பத்தின் வருமானம் நாட்டு மக்களின் மேல் பத்து சதவீதத்தில். பொருளாதார வளர்ச்சியில் அவர்களுக்கான பங்கு அதுவாகவே அவர்களை வந்துசேர்ந்தது. நீ ஆசைப்பட்டு வாங்க முடியாமல் போனது எதுவும் இருந்தது இல்லை. உலகமயமாதல் தீவிரம் அடைய, சைனாவில் இருந்து உனக்கு தொழிற்சாலைப் பொருட்கள், பங்களாதேஷ், வியட்நாம் இங்கிருந்தெல்லாம் ஆடைகள், நீச்சல் உடைகள், ஓடுவதற்கான காலணிகள், இந்தியாவில் இருந்து மருந்துகள். கடன் சுமை இல்லாமல் கல்லூரிப் படிப்பு. அங்கே அப்பா மில்டனின் சந்திப்பு. அப்பாவின் மருத்துவப் பயிற்சி முடிந்ததும் சர்ச்சில் திருமணம்.
உன் வாழ்க்கை ‘கேம் ஆஃப் லைஃப்’ போன்ற ஆட்டம். அதில் எந்தவிதமான அதிர்ச்சி தரும் சம்பவமும் நிகழவில்லை. சோவியத் யூனியனின் சிதைவு, 9-11, ஆஃப்கானிஸ்தான் ஈராக் போர்கள் உனக்கு நெருக்கமானவர்கள் யாரையும் பாதிக்கவில்லை.
பிரசவ அறை. மருத்துவ அங்கியில் கேரன் படுக்கையில் சாய்ந்திருந்தாள். மில்டனுக்குப் பழக்கப்பட்ட நீலநிற மருத்துவ ஆடை. அவள் வலக்கையில் தன் கையைப் பிணைத்திருந்தான். கேரனின் இடது மணிக்கட்டில் சிரைக்குழாய் ஊசி குத்தியிருக்க, ஃபீடஸ் மானிடரில் ஆரோக்கியமான எண்கள் பளிச்சிட… 130, 129…
ஐந்து அடியும் நூறு பவுண்டுகளும் எந்த நிலைமையையும் சமாளிக்கும் திறமையும் தன்னம்பிக்கையும் முகத்தில் பிரகாசிக்க மீரா வந்தாள்.
“எப்படி இருக்கிறாய்? கேரன்!”
“க்ரேட் டாக்டர்! ஒருவழியாக லுயிஸாவுக்கு வெளியேவர மனம்வந்து இருக்கிறது.”
பேசிக்கொண்டே மீரா போர்வையை மெல்ல உயர்த்தினாள்.
“அவளைக் கொஞ்சம் அவசரப்படுத்துவோம்.”
பிரசவத்தைத் துரிதப்படுத்தும் மருந்தை சிரை வழியாகச் செலுத்த ஏற்பாடு செய்தாள்.
நீ ஆரம்பப் பள்ளியில் காலடி வைத்தபோது, காற்றில் கார்பன் டைஆக்ஸைட் அதிகம் ஆவதால் பூமியின் தட்பவெப்பம் பாதிக்கப்படும் என்கிற முக்கியமான எச்சரிக்கை ஊடகச் செய்திகளின் பின்குறிப்பு. செய்தியாளர்கள், ‘அமெரிக்க வாழ்க்கையின் சௌகரியங்களில் கொஞ்சத்தைக் குறைத்துக்கொண்டால் போதும், நமக்கு ஆபத்து இல்லை’ என்று பாமர மக்களைச் சமாதானப்படுத்தினார்கள். கொஞ்சம், ரொம்பக் கொஞ்சம். அதாவது, காகிதம் மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி, பெட்ரோலியம் மின்சாரம் இரண்டிலும் இயங்கும் ஊர்திகள், ஒளிர் இழை விளக்குகளுக்குப் பதில் குட்டி குழல் விளக்குகள், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சாதனங்கள். அவ்வழியில் சேமித்த சக்தி தகவல் தொழில் வளர்ச்சியின் பூதாகாரப் பசியைக் கிளப்பிவிட்டதுதான் மிச்சம்.
ஏழு வயதில் நடந்தது உனக்கு மறந்துபோய் இருக்கும். சூரனும் நீயும் காரில் பயணித்தபோது, ட்யுரம் ராலே நகரங்களை இணைக்கும் புதிய நெடுஞ்சாலைக்காக மரங்கள் எரிக்கப்பட்டன. அதைப் பார்த்து, ‘இப்படிப் பசுமையான மரங்களை எரித்து வீணடித்தால் சிறுவர்களாகிய நாங்கள் பெரியவர்கள் ஆகும்போது காற்றில் ஆக்ஸிஜன் குறைந்துவிடுமே’ என்று பயப்பட்டாய். ஆனால், ஒன்பது ஆண்டுகள் யூ.எஸ். கல்வி கொடுத்த குறுகிய நோக்கினால், பதினாறு வயதில் புத்தம் புதிய கார் வாங்கி விருப்பம்போல ஓட்டி பெட்ரோலியத்தை எரித்தாய். என் காலத்தில் ஆக்ஸிஜனும் கார்பன் டைஆக்ஸைடும் எந்த விகிதத்தில் இருக்கும்?
சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையில் நோய் தணிக்கும் முறைகளின் வெற்றியைப் புள்ளிவிவரக் கணக்கில் அளப்பது உன் அம்மாவின் தொழில். நுனித்தோல் அகற்றுவது எய்ட்ஸ் நோய் பரவுவதைக் குறைக்கும் என்ற ஒரு சின்ன விஷயத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதுதான். உடனே அதை அறிவிக்க டோக்யோ என்ன, ஃப்ளாரன்ஸ் என்ன என்று ஆண்டுக்கு இருமுறை பறந்தாள். போய்வர விமானப் பயணம், அறிவியல் மாநாடுகளுக்காகப் பார்வையாளர்கள் தங்கும் கோபுரக் கட்டடங்கள், கூட்டங்கள் நடத்த அரங்குகள், சாப்பாட்டு விடுதிகள். எல்லாவற்றுக்கும் குறைந்துகொண்டே இருக்கும் எரிபொருட்களை வாரியிறைப்பதால் யாருக்கு என்ன லாபம் என்று நினைத்துப் பார்த்தாளா? உன் பேத்தி பேரன்களின் நன்மைக்கு உன் பயணங்ளைத் தியாகம் செய் என்று அவளுக்கு யாரும் சொல்லவில்லையா? அவளைப் போன்றவர்களின் ஊதாரித்தனத்தினால் நான் அரை வயிற்றுக்கு தினம் பதினாறு மணி வேர்வை சிந்த வேண்டிவரும்.
அப்பாவின் அம்மா? முதல் பையனுக்குப் பிறகு மூன்று பெண்கள், இரண்டு பையன்கள். சுதந்திர யூ.எஸ்.ஸில் கர்ப்பத்தைத் தடுக்க எத்தனை வழிகள்! அப்பா பிறந்ததும் ஏன் அவற்றைப் பின்பற்றவில்லை? குழந்தைகளைப் பெற்றுத்தள்ளும் சுதந்திரம் அவளுக்கு. என் காலத்தில் ஐந்து பெண்களில் ஒருத்திக்குத்தான் குழந்தை பெறும் உரிமை என்ற லாட்டரிக் கணக்கு.
மானிடரில் சிசுவின் இதயத்துடிப்பு திடீரெனக் குறைந்ததை மீரா கவனித்தாள். சுவர்க் கடிகாரத்தின் வினாடி முள் இரண்டு முறை சுற்றியது. எண்களில் மாற்றம் இல்லை.
லுயிஸா அவளாகவே வருவதற்குக் காத்திருக்க முடியாது. உதவி மருத்துவருக்கு ஆணையிட்டாள்.
“சி-செக்ஷனுக்கு உடனே ஏற்பாடு செய்!”
அடுத்த சில நிமிடங்கள் நொடிகளாக ஓடின.
நம் உயிரணுக்களைப்போல நாம் பிறக்கும் ஆண்டும் நம் வசம் இல்லை. உலகப் போர்களின்போது, அவற்றைத் தொடர்ந்த பஞ்ச காலங்களில், அவற்றுக்கு நடுவில் உலகை வருத்திய பொருளாதாரத் தாழ்வின்போது பிறந்த குழந்தைகளிடம், ‘இப்போது நீ பிறக்க விரும்புகிறாயா?’ என்று யாரும் கேட்கவில்லை.
நேற்றுவரை கரோலைனா மாநிலத்தின் நீலவானத்தை எப்போது பார்க்கப் போகிறோம் என்று நாள்களை எண்ணினேன். ஆனால், இன்று… கொரோனா வைரஸ் உலகத்தைச் சுற்றிவளைக்கத் தொடங்கிய சமயத்தில், உலக வளங்கள் கிட்டத்தட்ட வறண்டுவிட்ட நிலையில், பூமியின் தட்பவெப்பம் தீவிர ஏற்ற இறக்கங்களை எதிர்நோக்கும்போது நான் பிறக்க இருக்கிறேன்.
நீ வாழ்ந்ததைவிட என் வாழ்வு சிறப்பாக அமையும் என்பது, மூன்று நான்கு தலைமுறைகளாக நடந்தது மேலும் தொடரும் என்பதால் வந்த நம்பிக்கை. நீ வளர்ந்த வீட்டைவிட இப்போதைய உன் இல்லம் இரண்டு மடங்கு. எனக்கெனத் தனி அறைகள். தரைத்தளம் முழுக்க விளையாட்டுச் சாமான்கள். வீட்டுக்குப் பின்னால் நீச்சல் குளம். அவற்றை அனுபவிக்கத்தான் எனக்கு மனம் இல்லை. வன்முறையைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து புது வாழ்வு தேடும் அகதிகள், ஐந்து காலன் தண்ணீரைச் சுமந்து ஐந்து மைல்கள் நடக்கும் சிறுமிகள், பசியில் வாடும் பிஞ்சு முகங்கள் – இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது, புறநகர இல்லமும் அதன் சக்தி விரயமும் அர்த்தம் இழக்கின்றன.
என் ஜனனம் மனித குலத்தின் சோதனைகளுக்கு ஒரு சின்ன முன்னுரையாக அமைவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மனிதனின் கர்வத்துக்கு இயற்கை தண்டனை தரும்போது அதை வேடிக்கை பார்க்கவோ, அதற்குப் பலியாகவோ எனக்கு ஆசை இல்லை.
இயற்கை வளத்தில் என் பங்கை எலியட்டுக்குத் தருகிறேன். அவன் வளர்ந்து உங்கள் குலத்தைத் தொடர வைக்கட்டும்! இப்போது உங்கள் (நம் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை) இல்லத்தில் எங்கு பார்த்தாலும் சாமான்கள், சாப்பாட்டுப் பொருட்கள். அவனுக்கு என் தியாகம் பெரிதாகப்படாது. எதிர்காலத்தில் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும்போது அவன் எனக்கு நன்றி சொல்லலாம்.
விடைபெறுவதற்கு முன்…
என்னைக் கேட்காமல் ஏன் இந்த உலகத்தில் என்னைக் கொண்டுவந்தாய் என்று நான் குறை சொல்லமாட்டேன். நம்பிக்கைகள் நிறைந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட நீ செய்த தீர்மானம். என் முடிவு? மெல்ல வெளிச்சம் பரவுவது என் கிட்டப் பார்வைக்குத் தெரிகிறது. என் கோட்டைச் சுவரில் ஒரு பிளவு. அதன் வழியே களங்கமான காற்று நுழையப்போகிறது. அது என் நுரையீரலை எட்டுவதற்கு முன்பே…
மீராவின் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த மண்ணில் விழுந்து இருக்கின்றன. பல ஒருசில வாரங்களுக்கு முன்பே. ஆனாலும் பிளாஸ்டிக் பெட்டகத்தில் பாதுகாக்கவேண்டிய அவசியம் நேரிட்டது இல்லை. ஒரு பெண்ணுக்கு மட்டும் ஆடிசம். அது மீராவின் தவறு இல்லை. அதனால் மீராவிடம் சிகிச்சைபெற அவள் செயலருக்கு ஏராளமான அழைப்புகள்.
கேரனின் அடிவயிற்றில் ஒரு கீறல்.
அவள் பிரசவத்துக்கு நாள் குறித்தபோது பிப்ரவரியில் 28 நாட்கள் என்ற நினைப்பில் மீரா மாதத்தின் கடைசி நாள் என்றாள். செயலர் லீப் ஆண்டு என்பதை மறக்காமல் பிப்ரவரி 29ஆம் தேதியை கேரனுக்கு ஒதுக்கியிருந்தாள். மீரா செயலரிடம் பிப்ரவரி 28 என்று தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்க வேண்டுமோ? அப்போது அந்த எண்ணம் ஏன் வரவேண்டும்?
கருப்பையில் ஒரு திறப்பு. பிரசவ மருத்துவரின் கெட்ட கனவு. மீராவுக்கு முதல் அனுபவம். நிசப்தமான, இதயம் துடிக்காத உடல்.
எரியத் தொடங்குமுன்பே உடைந்துவிட்ட விளக்கு, எழுதி வைப்பதற்குள் மறந்துபோன கவிதை, வர்ணம் உலர்வதற்குள் கலைந்த ஓவியம்.
மீரா அதன் பெற்றோர்களுக்கு அதைக் காட்டவேண்டும்.
மில்டனுக்கு மீராவின் முகத் தோற்றமே தகவல் சொன்னது. ‘கதிரியக்கமும் வேதியியல் மருந்துகளும் நோயாளிக்கு இனி உதவாது, வலியை மந்திக்கவைக்கும் மருந்துதான் விமோசனம்’ என்று அந்த தூரதிருஷ்டசாலியின் உறவினர்களிடம் சொல்வதற்கு அவன் போட்டுக்கொள்ளும் முகத்திரை.
“நேற்றே இந்த பிரசவத்துக்கு நான் ஏற்பாடு செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!”
பெற்றெடுக்காத மகளின் மூச்சு அடங்கிய சிசுவுக்கு.