1.

நான் கோவிலுக்குச் சென்றடைந்தபோது அவ்வளவாக வெயில் இல்லை. கோவிலின் பின்பக்க நுழைவாயில் வழியே உள் நுழைந்து பிரகாரத்தை அடைந்தேன். பிரகாரத்தில் சூடு இன்னும் தணியவில்லை. மதில் சுவர்களின் நிழல் ஒரு சாய்வாகப் பிரகாரத்தில் விழுந்து கிடக்க அதன் மீதேறி நடந்து சென்றேன். பின் நுழைவாயில் வழியே சென்றால் மண்டபத்தை எளிதாக அடைந்துவிடலாம். நான் எதிர்ப்பார்த்தது போலக் கோவிலில் வேறு யாரும் இல்லை. பெரும்பாலும் திருவிழா, பண்டிகையைத் தவிரக் கோவிலுக்கு அவ்வளவாக யாரும் வருவதில்லை என்பதால் அமைதியாகவே இருக்கும். போன வருடக் கல்லூரி தேர்வின்போது தான் மண்டபத்தின் ஞாபகம் வந்து, தினமும் மாலை நேரம் இங்கு வந்து படித்தேன். மாலை நேரமானால், அனைவர் வீட்டிலும் தொலைக்காட்சி ஒரு கடமையென முடுக்கப்பட்டு நள்ளிரவில்தான் அணைப்பார்கள். வீட்டில் படிப்பதற்கான மன நிலையை எளிதில் இழந்துவிடுவேன். தாத்தா இருக்கும் வரை மாலை நேரங்களில் கோவிலுக்கு வந்து இந்த மண்டபத்தில்தான் அமர்ந்து இருப்பார். நான் சாப்பிட வருமாறு அவரைக் கூப்பிட இங்கு வரும்தோறும் தாத்தா மண்டபத்தில் ஒரு தூணில் சாய்ந்து எதோ நினைவுகளில் மூழ்கி இருப்பார். என்னையும் அவருடனே சிறிது நேரம் அங்கே அமர்ந்திருக்கச் சொல்லி மண்டபத்தின் தூண்களில் இருக்கும் கதைகளைக் கூறுவார். மண்டபத்தின் உள் சென்ற காற்று சுழன்று, அம்மாவின் கரம் போலத் தலையைத் தடவிச் செல்லும்.
நான் மண்டபத்திற்குச் செல்லும் முன் சோமேஸ்வரர் சன்னதிக்குச் சென்றேன். லக்ஷ்மி குருக்கள் இன்னும் சிறிது நேரத்தில் மூலவர் சன்னதியில் ஆராதனை முடித்து இங்கு வந்துவிடுவார். உள் அறைக் கதவு திறந்திருக்க, அகல் விளக்கில் தொக்கி நின்ற ஒரு துளி நெருப்பில், வெளிச்சம் எங்கும் வியாபித்திருந்தது. சோமேஸ்வரர் ஒரு மர்மமான புன்னகையில் அருள்பாலித்திருந்தார். நான் சிறிது நேரம் கண் மூடி நின்றுவிட்டு, மண்டபம் நோக்கிச் சென்றேன். மண்டபத்தின் படி ஏறுகையில் புறா ஒன்று படப்படத்து மண்டபத்திலிருந்து வெளியே பறந்து சென்றது. நான் ஒரு தூணின் அருகில் அமர்ந்துகொண்டு கையிலிருந்த புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டேன். எங்கும் அமைதி நிறைந்து, மண்டபமே அதில் மிதந்துகொண்டிருப்பது போல இருந்தது. என் எதிரில் இருந்த தூணில் நரசிம்மர் இரண்யனை தன் தொடையில் வைத்து வயிற்றைப் பிளந்துகொண்டிருந்தார். மண்டபத்தின் உள்ளிருந்து வௌவால்களின் வீச்சம் வந்தது. திரும்பி அங்கு மண்டபத்தின் உள்ளிருந்த துர்க்கையம்மன் சிலையைப் பார்த்தேன். கருமையாக்கப்பட்டு இன்னெதென்று தெரியாத உருவத்தில் இருக்க, அதனைச் சுற்றிலும் அலங்காரங்கள் போல நிறைய எண்கள் எழுதப்பட்டிருந்தது. மெல்ல அடித்த காற்றில் என் புத்தகத்திலிருந்த தாள்கள் படபடக்க, நான் புத்தகங்களின் பக்கங்களைத் திருப்பி படிக்க ஆயுத்தமானேன்.
சிறிது நேரம் கழித்து ஏதோ பேச்சு சத்தம் கேட்கத் திரும்பி கீழே பிரகாரத்தைப் பார்த்தேன். லக்ஷ்மி குருக்கள் பித்தளை குடத்தை ஒரு கையில் தூக்கிக்கொண்டு யாரிடமோ அங்கு இருக்கும் மற்றொரு குடத்தையும் எடுத்து வருமாறு கூறிக்கொண்டே வந்தார். நிமிர்ந்து என்னைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டு,
“என்ன பரிச்சையா? , எனக் கேட்டார்.
நான், “ஆமாம்” என்று அவரை பார்த்துப் புன்னகைத்தேன்.
அவர் தலையை அசைத்துக்கொண்டே தண்ணீர்க் குடத்துடன் என்னைக் கடந்து சென்றார். குடம் அவரின் கால்களில் பட்டு, தண்ணீர் தளும்பி தரையில் விரிந்துகொண்டே சென்றது. சற்று நேரத்தில் வேறு யாரோ என்னைக் கடந்து போவது போல இருக்க, நிமிர்ந்து பார்த்தேன். மற்றொரு குடத்துடன் சோமு சென்றுகொண்டிருந்தான். குடத்திலிருந்து தண்ணீர் சிறிதும் சிந்தாமல் ஒரு லாவகத்துடன் எடுத்துச் சென்றுகொண்டிருந்தான். அவன் என்னைப் பார்க்கவில்லை போலும். பார்த்திருந்தால் பேசாமல் செல்லமாட்டான். நான் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
சிறு வயதிலிருந்தே சோமுவை எனக்குத் தெரியும். ரெங்கசாமி தாத்தா அவனை அழைத்துக்கொண்டு அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். மன நலிவு (down syndrome) நோயில் பாதிக்கப்பட்டிருந்த அவனுக்குப் பாடங்கள் சொல்லித்தரும்படி அம்மாவைக் கேட்டுக்கொண்டதால் அவன் என்னுடன் சேர்ந்து வீட்டில் சில காலம் படித்துக்கொண்டிருந்தான். அம்மா எனக்கு வீட்டுப்பாடம் சொல்லித்தரும்போது அவனுக்கும் சொல்லித் தருவாள். அம்மா அவனிடம் அதிக அக்கறை செலுத்துவது எனக்குக் கொஞ்சம் கூட அப்போது பிடிக்காது. வீட்டில் வைக்கப்படும் தேர்வில் எல்லாம் எனக்கு முன்பே முடித்து, அம்மாவிடம் “குட்” என்று எழுதி வாங்கி வீட்டுக்குச் சென்று விடுவான். அவன் ஒருமுறை கூட புத்தகத்தைத் திறந்து படித்ததைப் பார்த்ததே இல்லாததால், எப்படி எழுதுகிறான் என்று மர்மமாகவே இருந்தது. பின்பு ஒரு முறை அம்மா இல்லாத தருணத்தில் அவனிடமிருந்த நோட்டைப் பிடுங்கிப் பார்த்ததில், அவன் அனைத்து கேள்விகளுக்கும் வெறும் முட்டை முட்டையாக எழுதி வைத்திருந்தான். அன்றிலிருந்து அவனை அம்மாவுக்குத் தெரியாமல் கேலி செய்துகொண்டும், அவன் பெயரை “முட்டை” என்று மாற்றி அழைத்தும், அவன் பிரச்சனை இன்னதென்று தெரியாமல் அவனிடம் கடுமையாக நடந்துகொண்டேன். ஆனால், நான் அவனைக் கேலி செய்யும் போதெல்லாம் அவன் முகம் சிரித்துக்கொண்டே இருப்பது போல இருக்கும். அது இன்னும் என்னை ஆத்திரப்படுத்தியது. ஒரு நாள் அம்மா இதனைக் கவனித்து, “அவன் உடம்பு சரியில்லாத பையன். அவனிடம் இப்படித்தான் நடந்து கொள்வாயா?” என்று கூறி பளார் என்று அரை விட்டாள். அன்று முழுவதும் நான் அழுதுகொண்டே தூங்கிவிட்டேன். பின்பு, அவனுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போக அவன் வீட்டுக்கு வருவது முற்றிலும் நின்றுபோனது, எனக்குள் ஒரு தாழ்வுணர்ச்சியை உருவாக்கியது. ஒருமுறை ரெங்கசாமி தாத்தாவிடம் சோமுவைப் பற்றிக் கேட்டபோது அவன் வேறு ஒரு பள்ளியில் தங்கிப் படிப்பதாகக் கூறினார். சில காலங்களில் மீண்டும் உடம்பு சரியில்லாமல் போகப் படிப்பை நிறுத்திவிட்டார்கள். பின்பு, நான் வெளியூருக்குச் சென்று படிக்கச் செல்ல அவனைப் பற்றிய செய்திகள் எல்லாம் குறைந்து போய்விட்டது. வெகு நாட்கள் கழித்து கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த பொழுது, அவனைக் கோவிலில் ஒரு முறை பார்த்தேன். பின்பு அவனைப் பற்றி அம்மாவிடம் விசாரித்ததில், அவன் வீட்டுக்குள் இருந்தால் மூர்க்கமாக நடந்துகொள்கிறான் என்று கோவிலில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்கள் என்று கூறினாள்.
நான் சுதாரித்து மீண்டும் புத்தகத்திற்குள் நுழைந்தேன். எழுத்துக்கள் சற்று மங்கலாகத் தெரிந்த பொழுதுதான் கவனித்தேன் வெகு நேரமாகி விட்டிருந்தது. தூரத்தில் மணியோசை கேட்க, நான் எழுந்து நடந்துகொண்டே, மனதுக்குள் படித்ததையெல்லாம் ஒரு முறை ஒட்டிப் பார்த்தேன். மண்டபத்தினுள் சுழலும் மெல்லிய காற்று மனதில் இருந்த அயர்ச்சியைப் போக்கியது. இன்னும் சிறிது நேரம் படித்தால் அத்துணையும் படித்துவிடலாம். பின்பு நாளையிலிருந்து குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தால் தேர்வுக்கு முதல் நாள் ஒரு முறை குறிப்புகளைப் பார்த்துவிட்டுச் சென்றால் போதும் என்று மனதுக்குள் ஒரு கணக்குப் போட்டு வைத்துக்கொண்டேன். மீண்டும் அமர்ந்து படிக்க ஆரம்பித்த தருணம், சட்டெனத் தலைக்கு மேல் இருந்த குழல் விளக்கு உயிர் பெற்று “ர்ர்” என ஒலி எழுப்பியது. நான் நிமிர்ந்து விளக்கைப் பார்த்தேன். அதில் “சிவசங்கரன் பிள்ளை. அடகு கடை” என்று எழுதியிருந்தது. மண்டபத்தின் உள் இருந்த தூண்களின் நிழல்கள் எல்லாம் ஏதோ ஒரு கோணத்தில் சாய்ந்து, அங்கு இருந்த ஒரு அழகியலைக் கெடுத்துவிட்டதாகவே தோன்றியது. நான் மீண்டும் படிக்கத் தொடர்ந்தேன். சிறிது நேரத்தில் சிறு பூச்சிகள் என் புத்தகத்தின் மீது விழ, நான் அதனைத் தட்டிவிட்டு மீண்டும் மேலே பார்த்தேன். சிறு, விளக்கு பூச்சிகள் ஒளியை விழுங்கிக்கொண்டிருந்தன. விளக்கின் “ர்ர்” ஒலி சற்று அதிகமாக இருப்பதாக, நான் எழுந்து வேறு தூணுக்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டேன்.
சிறிது நேரம் கழித்துப் படித்ததை மனதுக்குள் செலுத்தி நிமிர்ந்து அமர்ந்தபோது தான், சோமு என் அருகில் நின்று கொண்டிருப்பதைக் கவனித்தேன். நான் திடுக்கிட்டு அவனை உற்றுப் பார்க்க, அவன் சிரித்துக்கொண்டே எனக்கு முன்னால் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்துகொண்டான். அவன் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை மண்டபத்தின் வெளியே பிரகாரத்தில் தொங்கவிட்டுக்கொண்டும் ஒரு நொடிப் பொழுதில் அமர்ந்துகொண்டது வியப்பாகவே இருந்தது. அவன் அடிக்கடி இங்கு வருவான் போல என்று நினைக்கத் தோன்றியது. நான் இருக்கால்களையும் மடக்கிச் சாப்பிடுவதுபோல அமர்ந்திருந்தது ஏனோ சட்டென அசௌகரியமாகத் தோன்றியது.
சோமு, “நல்லாயிக்கியா?” என்றான்.
நான் “நலலாயிருக்கிறேன். நீ? “ எனக் கேட்டேன்.
“எப்போ ந்த?” எனக் கேட்டான். அவன் பேச்சு அவ்வளவு தெளிவாக இல்லையென்றாலும் புரிந்துகொள்ள முடிந்தது.
”போன வாரம்” , என்றேன்
“பயிச்சையா ?”, என்று கேட்டு, நான் ஆமாம் என்று சொல்வதற்குள் அவன் “ஆமாம்” என்பது போலத் தலையை ஆட்டினான்.
சோமு, அவன் வயதிற்கு ஏற்ப வளரவில்லை. பத்து வருடங்கள் பின் தங்கியிருப்பது போலவே அவன் உடல் மொழிகள் இருந்தன. கால் சட்டை அணிந்து, ஒரு முதிர்ந்த சிறுவனைப் போலவே இருந்தான். உடம்பு பெருத்து, கைகளும் விரல்களும் தடிமனாக இருந்தன. நான் சிறு வயதில் பார்த்த அந்த குழந்தையான முகம் இல்லாமல், தாடைகள் சற்று முன்னகர்ந்து இருந்தது. கண்கள் சுருக்கி, பற்கள் தெரிய எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது போலவே இருந்தான்.
நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கையிலிருந்த கை கடிகாரத்தைச் சரி செய்துகொண்டிருந்தான்.
என்னிடம் காட்டி, “அம்மா கொடுத்துச்சு”, என்றான்
“நல்லாருக்கு”, என்றேன்.
“ஊருக்கு எப்ப?” என்று பின் பக்கம் கை காட்டி கேட்டான் .
“அடுத்த மாதம்” என்றேன்.
“தெப்பத்துக்கு வருவியா ?”, எனக் கேட்டான்.
அப்போதுதான் எனக்கு, அடுத்த மாதம் பொற்றாமரைக் குளத் தெப்பத் திருவிழா வருவது ஞாபகம் வந்தது. வருடாவருடம் கோவிலுக்கு வெளியே இருக்கும் பொற்றாமரைக் குளத்தில் தெப்பம் விடுவார்கள். மூலவர் அதில் மூன்று முறை சுற்றி பவனி வருவார். மிக விமரிசையாக நடக்கும் இத்திருவிழாவில், பக்கத்தில் இருக்கும் அனைத்து கிராமத்திலிருந்தும் வருவார்கள். ஊரே ஒரு வாரத்திற்கு முன்பே தயாராகிக் களைக்கட்டும்.
நான்,” ம்..வருவேன்”, என்றேன்.
அவன் மீண்டும் கைக்கடிகாரத்தைத் திருப்பி மணி பார்ப்பது போல வைத்துக் கொண்டான்.
நன்றாக இருட்டிவிட்டிருந்தது. அப்பா இன்னும் சிறிது நேரத்தில் என்னைத் தேடி கோவிலுக்கு வந்தாலும் வந்துவிடுவார் என்று நினைத்துக்கொண்டேன். அவன் ஏனோ ஒரு தயக்கத்துடன் அமர்ந்திருக்க, நான் காசு எதாவது கேட்பானோ? என்று நினைத்தேன்.
அவன் சட்டென என்னிடம், “இங்கிலிஷ் சொல்லிக்கொடு” எனக் கேட்டான்.
நான் சற்று தடுமாறி அவன் சொல்வதை மீண்டும் நினைவுபடுத்தி, “என்ன?” என திருப்பி கேட்டேன். பின்பு ஏன் அவ்வாறு கேட்டோம் என நினைத்துக்கொண்டேன்.
அவன் மீண்டும், “இங்கிலீஷ். பேசணும்”. என்று ஒவ்வொரு வார்த்தையாகக் கேட்டான். அப்படி அவன் கேட்டபொழுது, அத்தனை பற்களும் தெரியச் சிரிப்பும், கூச்சமும், வெட்கமும் தெரிந்தது.
நான் சிரித்துக்கொண்டே, மெதுவாக “சரி” என்றேன்.
அவன் ஒன்றும் பேசவில்லை. வெளியே பிரகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் சிரிப்பு இன்னும் இருந்தது.
சிறிது நேரம் கழித்து, “அது இங்கலிஷ்ல தான் பேசும்” என்றான்.
நான் “யாரு?” என்றேன்.
அவன், “இளவரசி” என்றான். அவன் அந்த பெயரை எந்த தடங்களும் இல்லாமல் சரியாய் சொன்னது ஆச்சிரியமாக இருந்தது. நான் “யார் அது?” என்பது போல அவனைப் பார்க்க.
அவன், “அடுத்த வாரம் அம்மாவும் நானும் மாமா வீட்டுக்கு போறோம்.”, என்றான்.
நான் புரிந்துகொண்டு “ஒ!” எனக் கூறி அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவன் மீண்டும் வெட்கப்பட்டுச் சிரித்தான். அவன் முகத்திலிருந்து அந்த வெட்கம் மட்டும் போகவேயில்லை.
நான் அவனே பேசட்டும் என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் எதோ ஒரு கற்பனையில் ஆழ்ந்திருந்தான். அப்போது அங்கு இருந்த அமைதி எனக்குப் பிடித்திருந்தது.
“நாளைக்கு வரட்டுமா?”. என்று கேட்டான்.
” சரி. நாளைக்கு வா. சொல்லித்தருகிறேன்” , என்று கூறினேன். ஆனால், என்ன, எப்படி என்று எனக்கே சரியாக அப்போது தெரியவில்லை. அவனுக்கு நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று மட்டும் உந்துதல் இருந்தது.
அவன், “நான் போறேன். அம்மா தேடும்.” என்று கூறிக் கொண்டே எழுந்து கொண்டான்.
என் பதிலுக்குக் காத்திராமல் மண்டபத்திலிருந்து பிரகாரத்தில் குதித்துச் சென்றான். நான் மீண்டும் புத்தகத்தைப் பிரித்து வைத்தேன். ஆனால் என் எண்ணமெல்லாம் சோமு சொல்லிச் சென்றதையே அசைபோட்டுக்கொண்டிருந்தது. அப்பெண்ணின் பெயரைச் சொல்லும்போது அவன் வெட்கப்பட்டுச் சிரித்தது வந்து சென்றது. சட்டெனச் சோமு சொல்லிச் சென்ற தெப்பத்திருவிழா ஞாபகத்துக்கு வர, இந்த வருடம் கண்டிப்பாக எப்படியும் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். சிறுவயதிலிருந்து ஒரு முறை கூட தெப்பத்திருவிழாவைத் தவறவிட்டதே இல்லை. போன வருடம் கல்லூரி தேர்வு சற்று தள்ளிப் போனதால் வர முடியாமல் போய்விட்டது. அம்மா, சிறு வயதில் தாமரைக்கொய்தாள் கதையைச் சொன்னதிலிருந்து இக்குளத்தின் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். பலமுறை அம்மாவிடம் சொல்ல சொல்லிக்கேட்டுருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு வரும்போது மூலவர் சன்னிதியைச் சுற்றி இருக்கும் சுவர்களில் வரைந்திருக்கும் தாமரைக்கொய்தாளின் கதையைச் சொல்லுவாள், “அழகான பெண்ணொருத்தி, பொற்றாமரைக் குளத்தில் இருக்கும் தாமரைப் பூக்கள் சிவபெருமானின் பூசைக்காக மட்டுமே என்பது தெரியாமல், ஒரு தாமரையைப் பறித்து தன் கூந்தலில் வைத்துக்கொண்டால். இதனால் சிவபெருமான் சினம் கொண்டு அவளைக் குளத்துக்குள் தள்ளி அவள் இனி குளத்துக்குள் தான் வாழவேண்டும் என்று சபாம்விட்டு மறைந்துவிட்டார். பின்பு அப்பெண் கடும் தவம் செய்யச் சிவபெருமான் மனமிறங்கி அவளுக்குக் காட்சியளித்து, அவளை ஒரு அழகிய ஆண்மகன் வந்து மீட்டெடுப்பான் என்று வரம் கொடுத்தார். ஆனால் இதுவரை எந்த ஆண்மகனும் வரவில்லை. அதனால் ஒவ்வொருவருடமும் தெப்பத்திருவிழாவில், மூலவர் குளத்தில் பவனி வந்து அந்த பெண், தாமரைக்கொய்தாளுக்கு காட்சி தருகிறார் ” என்று அந்த கதையை அம்மா சொல்லும்போது “இன்னும் அந்த பெண் குளத்திலேயே இருக்கிறாளா ?” என்று கேட்பேன். அம்மாவும் “ஆமாம், உனக்காகத்தான் காத்திருக்கிறாள்”, என்று சொல்லிச் சிரிப்பாள். நான் அப்போது ஒரு குதிரையில் வந்து இறங்குவது போலக் கற்பனை செய்துகொண்டு வெட்கப்படுவேன். அம்மா இன்றும் என்னை அதனைச் சொல்லிக் கேலி செய்வாள். ஒரு ஓவியத்தில் சிவபெருமான் தாமரைக் கொய்தாளுக்குக் காட்சி தருவது போலவும் தாமரைக்கொய்தாள் இருகரம் கூப்பி இறைவனிடம் வேண்டுவது போலவும் இருக்கும் அந்த ஓவியம் ஏனோ ஞாபகத்துக்கு வந்து சென்றது. அக்கதை உண்மையாக இருந்தால் இன்றுடன் எத்தனை வருடங்கள் அந்த பெண் அக்குளத்திலேயே இருக்கிறாள் என்று நினைக்கும்பொழுது ஏதோ ஒன்று சங்கடப்படுத்தியது. ஒவ்வொரு வருடமும் சிவபெருமான் மறக்காமல் வந்து காட்சிதருகிறார். இத்தனை வருடத்தில் ஒரு ஆண்மகனுக்கும் தாமரைக் கொய்தாளைக் காப்பாற்றத் தோன்றவில்லையா ? ஏன் அந்த பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனை என்று நினைத்துக்கொண்டேன். வெகுநேரம் எண்ணங்கள் வேறு எங்கோ அலைந்துகொண்டிருந்தது. எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டேன்.
2.
மறுநாள், சீக்கிரமே கோவிலுக்குச் செல்ல கிளம்பினேன். சோமுவுக்கு என்ன சொல்லித் தரலாம் என்பதை ஒரு மாதிரி மனதுக்குள் தொகுத்துவைத்துக்கொண்டேன். அவனுக்குத் தேவை அந்த பெண்ணிடம் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசி அவளைக் கவர வேண்டும். அவ்வளவுதான். சிறு சிறு வார்த்தைகளும், அவளைப் பற்றிய ஒரு சில ஆங்கில சொற்றொடர்களும் போதுமானதாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். போகும் வழியில், சட்டெனப் பொற்றாமரை குளம் ஞாபகத்துக்கு வந்தது. இந்நேரம் குளத்தில் தண்ணீர் விட ஆரம்பித்து இருப்பார்கள். பார்க்கவேண்டும் என்று தோன்ற வழக்கமாகச் செல்லும் பின் வாசலைத் தவிர்த்து கோவிலின் முன் வாசலை நோக்கி நடந்தேன். தூரத்திலேயே ஜெனரேடர் சத்தம் இதயத் துடிப்பு போலக் கேட்க ஆரம்பித்துவிட்டது. குளத்தை நெருங்க நெருங்கப் பச்சை நிறத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும் காட்சி என் மனதில் தோன்றி வயிற்றை எதோ செய்தது. என் கால்கள் அனிச்சையாக வேகம் எடுப்பதை உணர்ந்தேன். குளத்தைச் சுற்றிலும் ஒரு சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, ஒரு சிறுவன் மதில் சுவரிலிருந்து தாவி குளத்தில் குதிக்க, தண்ணீர் வெளியே தெறித்து மடிந்தது . நான் குளத்தின் வாயிலை அடைந்தேன். குளம், சிறு கால்பந்தாட்ட மைதானம் ஒன்று அலை அலையாகத் தளும்பிக்கொண்டிருப்பது போலக் காட்சியளித்தது. நான் மேலும் முன்னேறி படிக்கு அருகில் நின்று பார்த்தேன். எங்கும் பரவியிருந்த அந்த பச்சை நிறம் மனதைக் குழையச் செய்தது. சுவரிலிருந்து குதித்த ஒரு சிறுவன் பச்சை திரவத்திற்குள் உள் சென்று, சிறிது நேரம் கழித்து வெளியே வந்தது ஒரு மாயை உலகத்திற்குச் சென்று விடுபட்டு வந்தது போல இருந்தது. குளத்தின் அடியில் நிறைந்திருக்கும் பச்சை நிறத்தில் தாமரைக்கொய்தாள் இருப்பாளோ என்று நினைத்துக்கொண்டேன். ஏனோ, அம்மாவின் பச்சை நிற பட்டுப்புடவை ஞாபகத்துக்கு வந்து சென்றது. அம்மா அதை எப்போது உடுத்தினாலும் அவளிடம் அதீதமான கனிவு வந்துவிடும். அவளின் காலை இறுகப் பற்றிக்கொண்டு அந்த பச்சையில் மூழ்கிவிடுவேன். அப்படி இந்த குளத்தில் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் அந்த வெம்மையான பச்சை நிறத்தைத் தொட்டுத் திரும்பவேண்டும். என் உடல் அதிர்ந்துகொண்டிருக்க, எதோ ஒன்று என்னை உந்தி தள்ளியது. ஓடிச் சென்று குதித்து விட என் மனம் படபடத்து, என் உள்ளங் கால் நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, எத்தனிக்க முற்படும் அந்த ஒரு நொடியில் யாரோ என் தோள்மேல் இடிக்க, ஒட்டுமொத்தமாக எதோ ஒரு விசையுடன் நான் அறுபட்டு மயிர் கூச்சலில் மீண்டு வந்தேன். என்னை இடித்து விட்டு ஓடிச்சென்ற சிறுவன் படியிலிருந்து குளத்திற்குள் குதித்து மறைந்தான். நான் சுதாரித்து, கையில் வைத்திருந்த புத்தகம் கீழே விழுந்திருக்க, அதனைப் பொறுக்கி எடுத்து கையில் வைத்துக்கொண்டேன். கோவிலுக்குச் செல்ல திரும்பும்போது தான் சோமுவைக் கவனித்தேன். அவன், தூரத்தில் குளத்தின் ஒரு மூலையிலிருந்த திட்டில் அமர்ந்து குளத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் சற்று நேரம் நின்றுவிட்டு கோவிலுக்குச் சென்றேன்.
மாலை வெயிலில் மண்டபத்துத் தூண்களின் நிழல்கள் உருப்பெற்று, நீண்டு ஒரு கோணத்தில் விழுந்து கிடந்தன. நான் உள் சென்று வெயில் விழாத ஒரு தூணின் அருகில் அமர்ந்துகொண்டேன். சோமு வருவதற்குள் நான் படிக்கவேண்டிய பாடங்களைப் படித்து முடித்துவிட்டால் அவனுடன் கொஞ்ச நேரம் செலவழிக்கலாம் என்று மனதுக்குள் திட்டம் போட்டுக் கொண்டு, நான் கொண்டு வந்திருந்த புத்தகத்தைப் பிரித்து படிக்கலானேன். நான் புத்தகத்தை விட்டு நிமிரும் நேரம் தோறும் வெயில் மண்டபத்தை விட்டு விலகிச் சென்றுகொண்டேயிருந்தது. தூண்களின் நிழல்கள் நிமிர்ந்து தூண்களுக்குள் மறைந்துகொண்டிருந்தது. வெகு நேரத்திற்குப் பிறகு, சட்டெனக் கேட்ட மணியோசையில் நான் படிப்பதிலிருந்து வெளிவந்தேன். நான் நினைத்ததை விடச் சீக்கிரமே என் பாடங்களை முடித்திருந்தேன். தண்ணீர் குடிக்கவேண்டும் போல இருக்க, புத்தகத்தைத் திருப்பி அங்கேயே வைத்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றேன்.
திரும்பி வரும்போது சோமு எனக்காகக் காத்திருந்தான். நான் அவனைப் பார்த்துப் புன்னகை செய்ய
அவன், “தண்ணி குடிக்க போனியா?”, எனக் கேட்டான்.
நான், “ஆமாம்” என்றேன்.
“நீ வரல்லன்னு நினைச்சேன். அப்புறம் புக்” என்று சிரித்துக்கொண்டே புத்தகத்தை நோக்கி கை காட்டினான்.
நான் சிரித்துக்கொண்டே என் புத்தகங்களை எடுத்துக்கொண்டு, நேற்று நாங்கள் இருவரும் உட்கார்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்துகொண்டோம்.
நான், “குளத்துக்குப் போயிருந்தேன். நிறையத் தண்ணி” என்றேன்.
“இன்னும் இரண்டு நாள்ல படியெல்லாம் மூடிடும்”, என்றான். அவன் கைகள்தான் அதிகம் பேசின.
“நீ அங்க குளிப்பியா?”
அவன் இல்லை என்பது போலத் தலையாட்டிவிட்டு. “அம்மா திட்டும்” என்றான்.
“சரி, படிக்கலாமா?”, எனக் கேட்டேன்.
அவன் சரி என்பது போலத் தலையாட்டிக்கொண்டு நிமிர்ந்து சற்று முன்னகர்ந்து அமர்ந்துகொண்டான்.
நான், “இங்கலிஷ்ல நிறைய இருக்கு. அதுல கொஞ்சம் தான் உனக்கு சொல்லித்தரப்போறேன்.”
நான் அவ்வாறு சொன்னவுடன் அவன் முகத்தில் சட்டென ஏமாற்றம் தெரிந்தது. நான் சுதாரித்து அவனுக்குப் புரியும்படி சொல்ல யோசித்தேன்.
பின்பு நான், “இங்கிலீஷ் இந்த கோவில் மாதிரி ரொம்ப பெருசு. நிறைய சாமிகள் இருக்கிறத போல அதுல நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா, நம்ம மூலவர் மாதிரி இருக்கிற முக்கியமான விசயத்த மட்டும் தான் சொல்லித்தரப்போறேன்.”
அவன் புரிந்துகொண்டவனாய், “மூலவர் ரொம்ப சக்தி வாய்ந்தவர். அவர கும்பிட்டா எல்லா சாமியையும் கும்பிட்ட மாதிரி”, என்றான்.
நான், ஆமாம் என்பதுபோல தலையை ஆட்டினேன். வேறு எதையும் சொல்லி அவனைக் குழப்ப விரும்பவில்லை.
“சரி இங்கலிஷ்ல இந்த இரண்டும் ரொம்ப முக்கியம். “ஐ” அப்புறம் “யூ”. “ஐ என்றால் நான், யூ என்றால் நீ” என்றேன்.
அவன் கவனமாக என்னை உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.
நான், “நீ சொல்லு. ஐ என்றால் நான், யூ என்றால் நீ” என்று அவனை நோக்கி கை நீட்டிக் காண்பித்தேன்.
அவன் நான் சொன்னதுபோலவே திருப்பி கை அசைவுடன் சொன்னான்.
நான், கரெக்ட். என சொன்னது அவனுக்கு உற்சாகமாக இருந்தது.
பின்பு நான், “’ஹொவ் ஆர் யூ’ என்றால் ‘எப்படி இருக்கிறாய் ?’ என்று அர்த்தம்” என்றேன்.
அவனுக்கு இது கொஞ்சம் பழக்கமான வார்த்தைகள் போல மிக எளிதாகத் திருப்பி சொன்னான்.
“சரி, ஒரு சில முக்கியமான வார்த்தைகளெல்லாம் பார்ப்போம்”
சரி என்பது போலத் தலையை ஆட்டினான்.
“’பியூட்டிஃபுல்’ என்றால் அழகு. ‘யூ ஆர் பியூட்டிஃபுல்’ என்றால் ‘நீ அழகாயிருக்கிறாய்’ என்று அர்த்தம்”, என்றேன்.
அவன், “‘யூ ஆர் பியூட்டிஃபுல், நீ அழகாயிருக்கிறாய்’” என்று சொல்லிவிட்டு வாய் பொத்தி சிறு குழந்தைபோல சிரித்தான்.
நான் மீண்டும், “’யூ ஆர் பியூட்டிஃபுல்’. ‘நீ அழகாயிருக்கிறாய்’”. என்றேன்
அவன், “சாமி பியூட்டிஃபுல்”, என்றான்.
நான் ஆமாம் என்று தலையை ஆட்டினேன்
“அம்மா பியூட்டிஃபுல். மீனாட்சியம்மன் பியூட்டிஃபுல்” என்றான்.
அவன் சிறிது நேரம் ஒன்றுமே சொல்லாமல் யோசிப்பதுபோல இருந்துவிட்டு, “இளவரசி பியூட்டிஃபுல்” என்றான்.
நான் அவன் சொன்னதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை என் முகம் காட்டிவிட அவன் சிரிப்பதை நிறுத்தினான். நான் சுதாரித்து அவனிடம் சரி என்பது போலத் தலையை ஆட்டினேன்.
அவன் சட்டென எழுந்து என்னையும் எழுந்து வருமாறு கூறினான். நான் ஒன்றும் புரியாமல் எழுந்து நிற்க, அவன் மண்டபத்தின் உள் சென்று ஒரு தூணில் அருகில் நின்று என்னை கை காட்டி அழைத்தான். நான் அவன் அருகில் செல்ல, அவன் தூணிலிருந்த ஒரு சிற்பத்தை நோக்கி கை நீட்டிப் பார்க்கச் சொன்னான். நான் என்ன என்பது போல உற்று நோக்க, அதில் ஒரு அழகிய பெண் இடது கையில் தாமரையை ஏந்தியும் , வலது கையை தாடையில் வைத்தவாறும் நடந்து செல்வது போல இருந்தது. அது தாமரைக்கொய்தாள். மிக மிக நுட்பமாகச் செதுக்கியிருந்த அதில், அவள் கணுக்கால் மேல் இருக்கும் சேலையின் ஓரமும், காலில் அணிந்திருந்த சலங்கையும் தெரிய நிறைய வேலைப்பாடுடன் மிக அழகாக இருந்தது. நான் என்னையும் அறியாமல் “பியூட்டிஃபுல்” என்றேன்.
சோமு, “ஆமாம். பியூட்டிஃபுல்” என்றான்.
இவ்வளவு நாட்களில் இது போன்ற ஒன்று இந்த மண்டபத்தில் இருப்பதே எனக்குத் தெரியவில்லை.
நானும், சோமுவும் வெகு நேரம் அந்த சிலையைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
நான் சுதாரித்து, “சரி வா நாம் போய் படிப்போம்” என்று சொல்லிக்கொண்டே நாங்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்றேன்.
சோமுவும் என் பின்னால் வந்து அமர்ந்துகொண்டான்.
நான் தொடர்ந்து அவனிடம் “யூ ஆர் பியூட்டிஃபுல். சொல்லு” என்றேன்.
அவன் “யூ ஆர் பியூட்டிஃபுல்”, என்றான்.
“சரி அடுத்தது. ‘லைக்’ என்றால் ‘பிடிக்கும்’” என்றேன்.
“லைக்” என்று ஒரு தடவை சொல்லிப் பார்த்தான்
“ஐ லைக் டெம்பில்’ அப்பிடின்னா, ‘எனக்கு கோவில் பிடிக்கும்’ என்று அர்த்தம் என்றேன்.
“எனக்கும்”என்று அவன் சொன்ன பொழுது ஒரு குழந்தைத்தனம் இருந்தது.
“ ‘ஐ லைக் யுவர் டிரஸ்’ அப்பிடின்னா, ‘உன்னுடைய டிரஸ் எனக்கு பிடித்திருக்கிறது’ என்று அர்த்தம். என்றேன்.
‘ஐ லைக் யுவர் டிரஸ்’, என்று சொல்லிப்பர்த்தான்.
“’ ஐ லைக் யுவர் டிரஸ்’. ‘யூ ஆர் பியூட்டிஃபுல்’ இதைச் சேர்த்து சொல்லு”, என்றேன்.
அவனும் தடுமாறாமல் சேர்த்துச் சொல்லிவிட்டு, எதோ கற்பனை செய்தவனாகச் சிரித்தான்.
“சரி.‘லவ்’ என்றால் ‘அன்பாக இருப்பது’ என்று அர்த்தம்”, என்றேன்.
அவன் முகம் மேலும் பிரகாசமாக மாறியது. அவன் சிரித்துக்கொண்டே கீழே குனிந்து அவன் கட்டை விரலை நிரடிகொண்டிருந்தான்.
“‘ஐ லவ் யூ’ என்றால் ‘நான் உன்மீது அன்பாக இருக்கிறேன்’ என்று அர்த்தம்”, என்றேன்.
அவன் சற்று குழம்பியவனாக என்னைப் பார்த்து, “ஆனா..அது வேற மாதிரி சொல்வாங்களே” என்றான்.
நான் சிரித்துக்கொண்டே, “அது சினிமாவுல சொல்வாங்க”, என்றேன்.
அவனும் சிரித்தான்.
நான், “’ஐ லவ் அம்மா’ என்றால் ‘அம்மா மீது நான் அன்பாக இருக்கிறேன்’ என்று அர்த்தம்”, என்றேன்.
அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. அவன் முகம் சட்டென மாறியது.
“நீ யாருகிட்ட எல்லாம் அன்பா இருக்கிறியோ, அவங்க எல்லாருகிட்டேயும் இப்படிச் சொல்லலாம்”, என்றேன்.
“அம்மா எனக்குப் பிடிக்கும். ஐ லைக் அம்மா”, என்றான்.
“ ‘லைக்’ வேற.‘லவ்’ வேற”, என்றேன்.
அவன் எப்படி என்பது போல என்னைப் பார்க்க. “நீ ஒரு நாய் பொம்மை மேல் காட்டுறது ‘லைக்’. உண்மையான நாய் மேல காட்டுறது ‘லவ்’” . என்றேன்.
சிறிது நேரம் யோசித்துவிட்டுப் புரிந்துகொண்டவனாக, “கோமதி மாடு செத்துபோச்சி. தாத்தா அழுதாரு”. என்றான்.
“ஆமா, அது தான் லவ்”, என்றேன். “இப்ப எல்லாத்தையும் சேர்த்துப் பார்ப்போம். ‘ஹொவ் ஆர் யூ ? ஐ லைக் யுவர் டிரஸ். யூ ஆர் பியூட்டிஃபுல். ஐ லவ் யூ”, என்று சொன்னேன்.
அவனுக்கு அத்தனையும் சேர்த்துச் சொல்வது மலைப்பாகிவிட்டது. இருந்தாலும் தடுமாறிச் சொல்லிவிட்டான்.
நான், “அவ்வளவுதான். இது போதும். ரெண்டு நாளைக்கு நாம தொடர்ந்து இதைப் பேசி பழகி விட்டால் , நீ அவங்க வீட்டுக்குப் போகும்போது, உன் இளவரசிக்கிட்ட இத பேசலாம்” என்றேன்.
அவன் சரி என்பது போலத் தலையை ஆட்டினான்.
நேரம் ஆனதே தெரியவில்லை. இருட்டத் தொடங்கியிருந்தது. நான் என் புத்தகங்களைச் சரி செய்துகொண்டு புறப்பட ஆயுத்தமானேன்.
சோமு எதோ ஒரு ஆழ்ந்த யோசனையிலிருந்தான். நான் அவனைச் சற்று உலுக்கி “என்னாச்சு?” என்றேன்.
அவன் சற்று தயங்கி, “பயமாயிருக்கு”, என்று சிரித்தான்.
நான் சிரித்துக்கொண்டே “உனக்கு இளவரசியை பிடிக்கும்ல”, என்றேன்.
அவன் ஆமாம் என்பது போலத் தலையை ஆட்டி, “ ஐ லவ் இளவரசி” என்றான்.
நான் பலமாகச் சிரித்தேன். மண்டபத்திலிருந்து வேறு யாரோ என்னுடன் சேர்ந்து சிரிப்பதுபோல இருந்தது.
“சரி. வீட்டுக்கு போ. நாளைக்கு வா. படிக்கலாம்”. என்றேன்.
சோமு எழுந்து கிளம்பிச் சென்றான்.
நான் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவனுக்குச் சொல்லிக்கொடுத்து அவன் சந்தோசமாக இருப்பது மனதுக்கு நிறைவை அளித்தாலும், ஏதோ ஒன்று என்னைச் சங்கடப்படுத்தியது.
நானும் எழுந்து செல்ல முற்படும் பொது அனிச்சையாய் தாமரைக்கொய்தாள் இருக்கும் அந்த தூணைத் திரும்பிப் பார்த்தேன்.
3.
மறுநாள் சோமு வந்து அதே சொற்றொடர்களை என்னுடன் பேசி பழகிக்கொண்டான். முன்பைவிட, இப்போது அதிக தன்னம்பிக்கையில் பேசியது போலத் தோன்றியது. அவன் ஒவ்வொரு முறையும் “பியூட்டிஃபுல்”, என்று சொல்லும்போது எனக்கு தாமரைக்கொய்தாள் சிலை ஞாபகத்திற்கு வந்து சென்றது.
அடுத்த இரண்டு நாட்களுக்குச் சோமு வரவில்லை. நான் அவனுக்காக வெகு நேரம் காத்திருந்து கிளம்பும்போது லக்ஷ்மி குருக்கள் ஞாபகத்துக்கு வர அவரை பார்த்து விசாரித்தேன். அவர் சோமுவுக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவனுடைய மன நலிவு நோய் வேறு பல பிரச்சனைகளைக் கொடுப்பதால் அடிக்கடி இவ்வாறு அவனுக்கு நடக்கும் என்று கூறினார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு சோமு வந்தான். மிகவும் மெலிந்துபோய், சோர்வாக இருந்தான். நான் அவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, “என்னாச்சி?” எனக்கேட்டேன்.
அவன், “ ஒண்ணுமில்லை, உடம்பு சரியில்லை” என்றான்.
“நீ வீட்டுக்கு போ. ரெஸ்ட் எடு”, என்றேன்.
“இல்லை, இப்ப சரியாகிட்டேன்”, என்றான்.
சோமு மறுநாள் மாமா வீட்டுக்குச் செல்வதாகவும், என்னை அதற்கும் மறுநாள் வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டுச் சென்றான். நான் சிறிது நேரம் படித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். முன் பக்க வாசல் வழியே வெளியே சென்றபோது எதிரில் இருந்த குளத்துக்குச் சென்று எட்டிப் பார்த்தேன். குளம் அமைதியாக இருந்தது. வீடு நோக்கி நடந்தேன்.
4.
எங்கும் இருள் நிறைந்திருக்க, நான் படிகளில் இறங்கி குளத்துக்குள் அமிழ்ந்து, சென்றுகொண்டே இருக்கிறேன். படிகள் மேலும் மேலும் நான் கால் வைக்கும் தருணம் தோறும் விரிந்துகொண்டேயிருக்கிறது. ஒளியற்ற குளத்தின் அடியில், கருமையற்று அடர்ந்த பச்சை நிறம் எங்கும் பரவியிருக்கிறது. தாமரையின் தண்டுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, எங்கும் பாசியின் மணம் நிறைந்திருந்திருக்கிறது. நான் மேலும் உள் செல்கையில் குளத்தின் அடியில் அந்த மண்டபம் தென்பட்டது. எனக்கு அந்த மண்டபத்தை வேறு எங்கோ பார்த்ததுபோல இருக்க, சட்டென யாரோ ஒரு அழகிய பெண், வேறு யாரோ ஒருவரின் கையுடன் கைகோர்த்து, அந்த மண்டபத்தின் தூண்களில் ஒன்றில் மறைகிறாள். நான் என் முழு பலம் கொண்டு அவளை கூப்பிட ஏனோ என் குரல் கரைந்துபோகிறது. சட்டென யாரோ என் தோளைத் தொட்டு உலுக்க, நான் விதிர்த்து கண் முழித்துப் பார்த்தேன். அம்மா என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்மா, “என்னடா, எதாவது கனவு கண்டியா?”, என்றாள்.
நான், “தாமரை…”, என்றேன். என் வாய் குளறி சொற்கள் உடைந்தது.
“என்ன?, என்றால்.
நான் சுதாரித்து கண்ணைக் கசக்கிவிட்டு எழுந்து அமர்ந்தேன்.
“போய் முகத்தை கழுவிட்டு வா. காபி போட்டு வைக்கிறேன்”, என்று சொல்லிக்கொண்டே அம்மா அடுப்பங்கரைக்குச் சென்றாள்.
நான் என்ன நடந்தது என்று நினைத்துப் பார்க்க முயன்றேன். சரியாக நினைவில் இல்லை. ஆனால், தாமரைக்கொய்தாள் கனவில் வந்துசென்றாள் என்று மட்டும் உணர்விருந்தது. அவள், கையை பிடித்துக்கொண்டு எங்கோ சென்றதுபோல நினைவு.
எழுந்து தோட்டத்திற்குச் சென்று முகம் கழுவினேன். அம்மா வந்து காபி கொடுத்தாள். வாங்கிக்கொண்டு அருகிலிருந்த துணி துவைக்கும் கல் ஒன்றில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தேன். அம்மா நான் கல்லூரிக்குச் செல்வது பற்றி எதோ என்னிடம் கூறிக்கொண்டிருந்தாள். என் கவனம் எல்லாம் அந்த கனவைப் பற்றியே இருந்தது. சட்டென, வாசல் கதவு சுவரில் மோதும் சத்தம் கேட்க, நானும் அம்மாவும் வாசல் பக்கம் எட்டிப் பார்த்தோம். அப்பா அவசரமாக தன் காலணியைக் கழட்டி வீசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார். அம்மா பதட்டமாகி அப்பாவைப் பார்த்து “என்னங்க, என்ன ஆச்சி? எனக் கேட்டாள்.
அப்பா, ”சோமுவை நேற்றிலிருந்து காணோமா. எல்லோரும் தேடுறாங்க. குளத்தில எதாவது விழுந்துட்டானான்னு சில பேர் பார்த்துகிட்டு இருக்காங்க. அதான் உங்கிட்ட சொல்லலாம்னு ஓடிவந்தேன்.”, என்றார்.
நான், “அப்பா, அவன் அவங்க மாமா வீட்டுக்கு போயிருக்கான்.”, என்றேன்
“ஆமா, நேத்தி இரவே அவங்க வந்துட்டாங்க. அவன் குளத்துக்கிட்ட கொஞ்சம் நேரம் உக்கார்ந்துட்டு வரேன்னு சொல்லியிருக்கிறான். அப்புறம் ரொம்ப நேரமா வீட்டுக்கே வரவேயில்லைன்னு எல்லோரும் தேட ஆரம்பிச்சிருக்காங்க”, என்றார்.
என்னால் அங்கு ஒரு நொடி கூட நிற்க முடியாமல், சட்டையைப் போட்டுக்கொண்டு குளத்தை நோக்கி ஓடினேன். குளத்தைச் சுற்றி நிறையக் கூட்டம் கூடிவிட்டது. நான் குளத்தின் வாசலை அடைந்து முன்னால் சென்ற போது சோமுவின் அம்மா அழுதுகொண்டிருந்தாள். அவளை என்னால் பார்க்க முடியவில்லை. குளத்தை எட்டிப் பார்த்தேன். சிலர் குளத்தில் குதித்துத் தேடிக்கொண்டிருந்தனர். என்னால் அங்கு நிற்கமுடியாமல் அருகிலிருந்த சுவரில் சாய்ந்து கொண்டேன். வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தி வருவது போல இருக்க, அங்கேயே குடித்த காபியை வெளியே எடுத்தேன். யாரோ வந்து என்னைத் தாங்கிப் பிடித்தார்கள். சிறிது நேரத்தில் சிறு சலசலப்பு ஏற்பட, நான் மெதுவாக எட்டி குளத்தைப் பார்த்தேன். சோமுவின் கால்களையும், கைகளையும் இருவர் பிடித்துத் தூக்க, குளத்தின் அடியிலிருந்து சோமு மெல்ல மிதந்து வெளியே வந்தான். சோமுவின் அம்மா அலறி முன்னேற இருவர் அவரை பிடித்துக்கொண்டனர். சோமுவின் முகம் தண்ணீரில் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. சோமுவின் உடலை மேலும் இருவர் பிடித்துத் தூக்கக் குளத்தின் அடியிலிருந்த அந்த கரும் பச்சை நிறம் தெரிந்தது. அதைப் பார்த்த தருணம் ,என் கனவு அனைத்தும் நினைவுக்கு வந்தது. தாமரைக்கொய்தாள் ஒரு கையில் தாமரையும், மறு கையில் யாருடனோ கைகோர்த்திருந்த அந்த கையும், விரல்களும் எங்கோ பார்த்தது நினைவுக்கு வரத் திடுக்கிட்டு, மயங்கிச் சரிந்தேன்.
~oOo~